எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 7, 2023
பார்வையிட்டோர்: 4,412 
 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16 | அத்தியாயம் 17-18

அத்தியாயம்-15

செவ்வாய்க்கிழமை மாலை சிவசிதம்பரம் ஓய்வாக ஹாலில்வந்து உட்காரும் வரை கரிகாலன் சாப்பிடுவதற்காக கீழே இறங்கி வந்த சில நிமிடங்கள் தவிர மீத நேரங்கள் பூராவும் மாடி அறையிலேயே அடைந்து கிடந்தான். இடையிடையே கீழே யார் யாரோ வந்து போகிற சப்தங்களும் கிருஷ்ண குமாரை விசாரிக்கிற ஓசைகளும் கேட்டுக்கொண்டே இருந்தன. கரிகாலன் கீழே இறங்கி வரவே இல்லை. வருகிறவர் போகிறவர்களிடமெல்லாம் கிருஷ்ணகுமாராக நடித்துக் கொண்டிருக்கும் பொறுமை அவனுக்கு இல்லை. அதற்குக் கரிகாலன் தயாரும் இல்லை. கொள்ளையை நிகழ்த்திவிட்டுப் பறந்து போய் விடுகிற தயார் நிலையில்தான் அவன் இருந்தான். மாலைவரை பல்லைக் கடித்துக் கொண்டு அறைக்குள்ளேயே இருந்தவனை சிவசிதம் பரம் இண்டர் காமில் அழைத்தார்… 

“எப்பப்பா வந்தீங்க?” 

“அப்பவே வந்திட்டேன். நேத்து ஏதோ புதுசா பிசினெஸ் ஆரம்பிக்கறதைப் பத்தி சொல்லவந்தியே…” 

“ஆமா.”

“இப்ப வந்து சொல்றீயா; ஃப்ரியா இருக்கேன்?” 

கரிகாலன் அவசரமாக ரிசீவரை வைத்துவிட்டு எழுந்தான். ‘வரேண்டா கிழவா, வரேன்…’என்று முணங்கிய படி கீழே இறங்கிப் போனான். சிவசிதம்பரத்தைப் பார்த்ததும் இரவு சமையல் பண்ணுகிற பெண்மணியுடன் அவர் இருந்த கோலம் நினைப்பில் வந்து நின்றது. கரிகாலன் சோபாவில் போய் உட்கார்ந்தான். 

”உனக்கு நான் என்ன பிசினெஸ் புதுசா ஆரம்பிச்சுத் தரனும்; அதுக்காக இன்வெஸ்ட் பண்றதுக்கு எவ்வளவு பணம் தேவையிருக்கும்… ” சிவசிதம்பரம் மிக்க அன்புடன் கேட்டார். கரிகாலன் உற்சாகத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். 

“டீடெய்லாவே சொல்றேன்ப்பா… அதுக்கு முன்னாடி நம் குடும்பத்தோட மொத்த சொத்து பணம் விவரங்களை யெல்லாம் சொன்னீங்கன்னா தேவலை… இதுவரைக்கு நான் ஏதோ பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளை என்கிறதுக்கு மேல எதையும் நெனைச்சிப் பார்த்தது கிடையாது. இப்பத்தான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் என்கிற நெனைப்பு வந்திருக்கு… சொல்றீங்களா தயவு பண்ணி…” கரிகாலன் கேட்டதொனியின் மென்மையில் சிவசிதம்பரத்தின் மனம் வெகுவாகக் கனிந்துவிட்டது. 

”உனக்கு என்னென்ன விபரம் வேணுமோ, கேட்டுட்டோ வா; அதுக்கு நான் பதில் சொல்லிட்டே வரேன்,” என்றார். 

“நம்மோட இந்த வீட்டின் மதிப்பு இப்ப எவ்வளவுப்பா இருக்கும்?”கரிகாலன் சுற்றி வளைத்து ஆரம்பித்தான். 

“இன்னி தேதிக்கு இருபது லட்ச ரூபாய் பெறும்”.

“நமக்கு வேறு சொத்து என்னென்ன இருக்கு?”

“படப்பையில் ரெண்டு ஏக்கர் தோட்டம் இருக்கறது. தெரியும் உனக்கு.”

“அது தெரியும்! வேற?” 

“வண்டலூர்ல மனை ரெண்டு கிரவுண்டு கெடக்கு” 

“அப்படியா! அது தெரியாது இது வரைக்கும்.”

“சொத்துக்கள் இவ்வளவுதான். ” 

“ஷிப்பிங் ஏஜென்சி பிசினெஸ்ல எவ்வளவு பணம் ரொட்டேட் ஆயிட்டிருக்கு அதைச் சொல்லுங்க.”

“அதுக்கு போன வருஷம் இன்கம்டேக்ஸ் ஆபிஸ்க்கு அனுப்பின ரிட்டர்ன் காப்பியை எடுத்துக் காட்றேன். அதைப் படிச்சிப் பாரு – க்ளியரா தெரியும் உனக்கு… கொஞ்சம் ஷேர்கள் இருக்கு…” 

“இன்கம்டேக்ஸ் ரிட்டர்ன்ல காட்டாத பணம்னு ஏதாவது இருக்குமாப்பா?” தூண்டில் கேள்வியை மிகவும் தந்திரமாகப் போட்டான். 

‘சிவசிதம்பரம் பதில் சொல்வதற்கு வாயைத் திறக்க இருந்தார்.அப்போது டெலிபோன் மணி அடித்தது ரிசீவரை எடுத்தார்… குடும்ப டாக்டர் ரவி பேசினார். 

“யெஸ்- சிவசிதம்பரம்தான் பேசறேன். டாக்டர்…”

என்ற சிவசிதம்பரம் கரிகாலனைப்பார்த்து, 

”நம்ம டாக்டர் பேசறார்”, என்று சொல்லிக் கொண்டார். 

“கிருஷ்ணகுமார் வீடு திரும்பிட்டானாமே கேள்விப்பட்டேன்.” 

“ஆமா டாக்டர். நேத்து மார்னிங் வந்தான்”. 

“ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே?” 

”இதுவரைக்கும் இல்லை!” 

“நல்ல நேரத்துக்கு வந்தான்… நாளைக்குக் காலையில் ஒரு பேஷண்ட்டுக்கு ஆபரேஷன். ஓ பாசிடிவ் ரத்தம் அவரைத் தவிர அவங்க குடும்பத்ல வேற யாருக்கும் இல்லை… வேற எங்கேயும் கெடைக்கவும் இல்லை. அதான் வேற வழியில்லாமே உங்களுக்கு ரிங் பண்ணினேன் கிருஷ்ணகுமார் வந்துட்டான்னு தெரிஞ்சி… கொஞ்சம் அனுப்பி வையுங்க…” 

“நோ ப்ராப்ளம்,இப்பவே அனுப்பி வைக்கிறேன். வேற எதுவும் இல்லையே?” 

“வேற ஒண்ணுமில்லை…” 

சிவசிதம்பரம் ரிசீவரை வைத்தார். 

“குமார், நாம் அப்புறமா பேசிப்போம். நம்ம டாக்டர் ரவி அர்ஜெண்ட்டா உன்னைக் கூப்பிடறார்… போய் ரத்தம் குடுத்திட்டு வந்திரு வேற எங்கேயும் கெடைக் கலையாம்…” 

கரிகாலன் உள்ளுக்குள் அதிகமாகப் பொங்கினான். “வேற எங்கேயும் கெடைக்கலைன்னா நான்தான் அகப்பட்டேனா?” எரிச்சலுடன் கேட்டான்.

“நீ தானே இதை ஒரு சேவையா டாக்டர் ஓ பாசிட்டிவ் ரத்தம் கேட்டிருக்கிற சமயத்லல்லாம் மூணுநாலு தடவை ரத்தம் குடுத்திட்டு வந்திருக்கே”. 

“மூணு நாலு தடவை குடுத்தா லைப் பூராவும் குடுத்திட்டே இருக்கணுமா?” 

“இந்த ஒரு தடவை போய்க்குடுத்திட்டு வந்திரு…”

”நோ… ஐ’ம் நாட் பீலிங் வெல். கண்டபடி ஊர் சுத்திட்டு வந்ததில் பாடி ரொம்ப வீக்கா இருக்கிற மாதிரி எனக்கு. போன் பண்ணி நான் வரமுடியாதுன்னு சொல்லிட்டதா சொல்லிடுங்க…” 

“நீயே சொல்லிடு.” 

”நானா இப்ப வரேன்னு டாக்டர்கிட்டே சொன்னேன்? நீங்கதானே.. நீங்களே போன் பண்ணிச் சொல்லிடுங்க…” 

சிவசிதம்பரத்தின் முகம் சிவந்தது. 

“ஸாரி குமார்; ஐ டோண்ட் லைக் திஸ்” என்றார்.

“ஸாரி ஐ காண்ட் ஹெல்ப்…” 

“என்னமோ நீ வந்ததில் இருந்து கொஞ்சம் என்னவோ போல இருக்கே. எப்படியோ பேசறே.” சிவ சிதம்பரம் இப்படிச் சொன்னதும் கரிகாலன் சட்டென மனம் தணிந்து கொண்டான் – அதீதமாய் நடந்து கொண்டு விட்டோமே என்ற படபடப்பு மனத்துள் எழும்பியது… இதற்குத்தான் செல்வம் இமோஷனல் ஆகாதேயென்று ஆயிரம் முறை சொல்வான்… கரிகாலன் மன்னிப்புக் கேட்கிற மாதிரி பேசினான்… 

“உடனே என்னைத் தப்பா புரிஞ்சுக்கறீங்க! எனக்கு உடம்பு வீக்கா இருக்கற மாதிரி பீல் பண்றேன்ப்பா. அதனாலதான் என்னால இப்ப ப்ளட் கொடுக்க முடியாது”, என்று பவ்யமாகச் சொன்னான். 

“இதை ஒரு முறையோட சொல்லவேண்டாமா நீ?” சிவசிதம்பரம் விடாமல் கேட்டார். 

”நான் தப்பான டோன்ல பேசியிருந்தா மன்னிச்சிடுங்க!” – தலை குனிந்து விட்டான். கரிகாலனுக்கு வெற்றிகரமாக முடியவேண்டும். நாய் வேஷம் போட வந்துவிட்டு குரைக்க முடியாதுயென்றால்? குரைத்துத்தான் தீர வேண்டும். ஆனால் அதற்காக நாய் வேஷத்தைப் போட்டுக் கொண்டு நர்சிங்ஹோம் போய் ரத்தம் கொடுத்து விட்டு வருவதெல்லாம் சரிப்படுமா? அதுவும் இல்லாமல் நாய் வேஷம் போட்டிருக்கும் மனிதனின் ரத்தம் ஓ பாசிட்டிவ் இல்லை! 

“இந்த ஒரே ஒரு தடவை போய் ப்ளட் குடுத்திட்டு வந்திரு…” சிவசிதம்பரம் மீண்டும் சொன்னார். 

“இல்லைப்பா, என்னை வற்புறுத்தாதீங்க… ரொம்ப ‘அனிமிக்’கா இருக்கேன். நான் அனிமிக்கா இருக்கேன்னு தெரிஞ்சா டாக்டரே ப்ளட் வேண்டாம்னு சொல்லிடுவார்…” சில நிமிடங்கள் சிவசிதம்பரம் மௌனமாக இருந்தார். பின் எழுந்து நின்று “டிரைவரை கூப்பிட்டு வண்டியை எடுக்கச் சொல்லு – டாக்டர்கிட்டே நேர்ல போயே சொல்லிட்டு வந்திடறேன்,” என்றார். 

சில நிமிடங்களில் கார் போர்டிகோவில் வந்து நின்றது. சிவசிதம்பரம் போய் அதில் ஏறிக்கொண்டார். என்ன செய்வதென்று தெரியாமல் கரிகாலன் ஹாலிலேயே உட்கார்ந்திருந்தான். நிகழ்ந்து கொண்டிருப்பது சரியாகத் தோன்றவில்லை. அவனுக்கு, பணம் வீட்டில் எங்கே எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது நழுவிப் போய்க் கொண்டே இருக்கிறது. முழுதாக இரண்டு நாட்கள் கடந்திருக்கின்றன. இன்னும் முழுதாக இரண்டு நாட்கள் இங்கே தாக்குப்பிடிப்பதெல்லாம் இயலா த விஷயம். என்ன செய்வதென்று தெரியாமல் கரிகாலன் யோசித்தான். நகைகளை மட்டும் இன்று இரவு அள்ளி எடுத்து ப்ரீப் கேஸில் வைத்துக் கொண்டு காலையில் கிளம்பி விடலாமா வென்று யோசித்தான். மனம் அதற்கும் ஒப்பவில்லை. பணமாகவும் எடுத்துக்கொண்டு போகவே மனசு விரும்பியது. பேராசையும் பட்டது. 

இத்தனை வெற்றிகரமாக நூதன நாடகத்தை மார்னிங் ஸ்டார் துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் போட்டுக் கொடுத்த பிள்ளையார் சுழயுடன் அரங்கேற்றி விட்டு இறுதி லட்சியத்தை நிறைவேற்றாமல் போவதா? கரிகாலனின் அறிவு மறுத்தது. இன்னும் ஒரே ஒரு நாள் பொறுத்திருந்து பார்க்கவே அவனின் மனசு விருப்பப்பட்டது. 

வெகு நேரம் யோசித்துப் பார்த்த பிறகு கரிகாலன் தீர்மானத்திற்கு வந்தான். நாளை புதன்கிழமை ஒரேஒரு நாள் தான் இங்கே தங்கல். நாளை இரவு நகைகளுடன் கிடைக்கின்ற பணத்தை எடுத்துக்கொண்டு வியாழக்கிழமை காலை ஒன்பது மணி அளவில் சிவசிதம்பரம் ஆபீஸ் கிளம்பிப் போனபிறகு, அவரின் மனைவி குளிப்பதற்காகபாத்ரூமில் சுமார் இருபது நிமிடங்களாவது இருப்பாள் அந்த நேரத்தில் ஹோண்டாவில் ஏறிப்புறப்பட்டு விடவேண்டியது தான்… திருப்பித்திருப்பி சிவசிதம்பரத்தின் எதிரில் உட்கார்ந்து சுற்றி வளைத்து வளைத்து பண இருப்பைத் தெரிந்து கொள்வதற்காக வியாபாரம் அது இதுவென்று கதை பேசுவதெல்லாம் சரிப்படாது. 

கரிகாலன் எழுந்து மாடி அறைக்குப் போய்விட்டான். இரவு எட்டு மணி அளவில் சிவசிதம்பரம் திரும்பி வரும் சத்தம் கேட்டது. கரிகாலன் கீழே இறங்கி வரவில்லை. சிவ சிதம்பரமும் அவனைக் கூப்பிடவில்லை. அது கரிகாலனை மிகவும் ஆத்திரமூட்டியது. புறப்பட்டுப் போகும்போது இந்த சிவசிதம்பரத்தை அவனுடைய மனைவியிடம் காட்டிக் கொடுத்துவிட்டுத்தான் போக வேண்டும்… சமையல்கார பெண்மனியுடன் ‘கள்ளத்தொடர்பை வீட்டுக்குள்ளேயே நடத்திக் கொண்டிருக்கும் ரகசியத்தைப் பகிரங்கப்படுத்தி விட்டுத்தான் செல்லவேண்டும். விடக்கூடாது இந்த ஷிப்பிங் ஏஜென்சி காரனை…! அவமானப்படுத்தியே தீரவேண்டும்…’ 

இந்த நினைப்புகளிலேயே மூழ்கிக் கிடந்த கரிகாலனுக்கு விடிய விடிய தூக்கம் வரவில்லை… ஞாபகம் வந்து நடு இரவில் எழுந்து பீரோவில் இருந்த கிருஷ்ண குமாரின் கோனிகா காமராவை எடுத்து ப்ரீப் கேஸில் வைத்துக் கொண்டான். இருக்கட்டுமே…! 

அத்தியாயம்-16

புதன் கிழமை காலை சீக்கிரமே எழுந்து குளித்து விட்டு கரிகாலன் நல்லபிள்ளைபோல் ஹாலில் வந்து உட்கார்ந்தான். சிவசிதம்பரம் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆபீஸ்க்குக் கிளம்புகிற கவனத்திலேயே இருந்தார். கரிகாலனும் கைகளைக் கட்டியபடி செருக்குடன் அமர்ந்திருந்தான். அவராகப் பேசினால் பேசட்டும்; பேசாவிட்டால் போகட்டும். நாளைக்கு இவரின் மானம் போகப்போவது நிச்சயம்… 

போர்டிகோவில் கார்வந்து நின்றது. அதைநோக்கி நடந்த சிவசிதம்பரம் கரிகாலனின் அருகில் வந்தபோது நின்றார். 

“பேப்பர் பாத்தியா?”என்றார். 

“இல்லையே!” 

“நீ திரும்பி வந்து சேர்ந்திட்டதைப் பத்தி விளம்பரம் குடுத்திருக்கேன் – அது இன்னிக்கி பேப்பர்ல வந்திருக்கு.”

கரிகாலனுக்குச் சுருக்கென்றது. எதிரில் கிடந்த பேப்பரை எடுத்து அவசரஅவசரமாகப் பிரித்தான்… 

“லாஸ்ட் பேஜ்ல இருக்கு பார்.” 

கரிகாலன் கடைசிப்பக்கத்தைப் பார்த்தான். ஓர் அபாய விளக்குபோல அந்த விளம்பரம் பிரசுரமாகியிருந்தது. உள்ளுக்குள் தீயெனக் கோபம் மூண்டது. தனது வரவை நான்கு அல்லது ஐந்து தினங்களுக்கு அதிகமாக யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம் என்று வன்மையாகத் தெரிவித்திருந்தும் சிவசிதம்பரம் கொடுத்திருந்த விளம்பரம் ஒரு நச்சுப் பாம்பின் அஞ்சத் தக்க சீற்றம் போலிருந்தது. தன்னுடைய மனோ நிலையைக் காட்டி விடாமல் மிகவும் சிரமப்பட்டு கரிகாலன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான். 

“ஓகே ஈவினிங் பார்ப்போம்.”

“சிவசிதம்பரம் காரை நோக்கிச் சென்றுவிட்டார். பின் போர்டிகோவில் நின்றபடியே கரிகாலனிடம் சொன்னார்: 

“உடம்புக்கு ஒரு மாதிரி இருந்தா டாக்டரிடம் போய் கன்சல்ட் பண்ணிக்க”. 

“பார்க்கலாம்..” 

சிவசிதம்பரம் ஏறிக்கொள்ள கார் கிளம்பிச் சென்றது. கரிகாலன் பல்லைக் கடித்தபடி சோபாவில் சாய்ந்திருந்தான். மடக்கம்மனாட்டி! வீடு வந்து சேர்ந்துட்டான்னு விளம்பரம் கொடுத்திருக்கான். மறுபடியும் நாளைக்கே இன்னொரு விளம்பரம் குடுத்தாகணும் – என் மகன் கிருஷ்ணகுமார் மீண்டும் ஓடிப்போய்விட்டான்னு…! சிவசிதம்பரம்! நீ விளம்பரம் குடுத்தே லோல் படப்போறே… ஈவினிங் பார்ப்போம்னா சொல்லிட்டு போறே… நோ மேன் நோமோர் டாக்ஸ்! இனி ஆக்ஷன் தான்…! நாளை இந்நேரம் பார்… உன் பெண்டாட்டியின் நகைகள் காலி! 

விடுவிடுவென கரிகாலன் மாடிக்குப் போனான். மனத்தால் தயாராகிவிட்டான் – இரவு பூஜை அறையில் இருக்கும் நகைகளையும் வைரங்களையும் அள்ளிக் கொண்டு ஓட… 

எதற்கும் இருக்கட்டும் என பீரோவின் மேல் வைக்கப் பட்டிருந்த சூட்கேஸை கீழே இறக்கி துடைத்து வைத்துக் கொண்டான். மறுபடியும் மாலை சிவசிதம்பரத்துடன் உட்கார்ந்து ஒரே ஒருமுறை கணக்கில் வராத கறுப்புப் பணம் எதுவும் வீட்டில் இருக்கிறதா என்பதைப் பேசிப் பார்த்துவிடலாமென்று நினைத்தான். அப்போதுதான் கரிகாலனின் அறிவில் அந்த மின்னல் மின்னியது. செல்வத்திற்கு சிவசிதம்பரம் மூவாயிரம் ரூபாய் செலவுக்கு வைத்துக் கொள்ள கொண்டுவந்து கொடுத்தார் என்ற செய்தி அவனின் ஞாபகத்தில் திடும் என மிதந்து வந்தது. இந்த மாடி அறைக்கு நேர் கீழே உள்ள அறை ஒன்றில் இருந்துதான் சிவசிதம்பரம் பணம் எடுத்து வந்தார் என்பதை செல்வம் நினைவுபடுத்திச் சொல்லியிருந்ததை மறந்துவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது கரிகாலனுக்கு. மடமடவென்று கீழே இறங்கிவந்தான. இரண்டு நாட்களாக அவனுடைய கவனத்தில் பதியாத அந்த அறையின் பூட்டப்பட்டிருந்த கதவு கண்களை கவர்ந்தது. அருகில் போனான். சிவசிதம்பரத்தின் மனைவி அவளுடைய அறைக்குள் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். கரிகாலன் அறைக்கதவை தள்ளிப் பார்த்தான். கதவு திறந்து கொள்ளவில்லை. இரவு கவனித்துக் கொள்ளலாம். கரிகாலன் விசில் அடித்தவாறு மாடிக்குப் போனான். உணர்வுகள் பரபரக்கத் துவங்கிவிட்டன. ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொண்டு டைப்ரைட்டரின் முன்னால் போய் உட்கார்ந்தான்… உறையை நீக்கிவிட்டு காகிதத்தை செருகினான்… சமையல்கார பெண்மணியுடன் தகாத உறவு வைத்திருக்கும் அப்பாவுடன் ஒரே வீட்டில் வாழ எனக்கு விருப்பம் இல்லை. எனவே மீண்டும் வெளியேறுகிறேன்…என்று டைப் செய்து கிருஷ்ணகுமார் என்ற பெயரை இறுதியாகக் குறிப்பிட்டுக் கொண்டான்.

– தொடரும்…

– எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி (நாவல்), முதற் பதிப்பு: 1998, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *