ஊஞ்சல் விதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 10,581 
 

அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த பாதையில் மைனா அமர்ந்திருப்பதைக் கண்டனர். மாலைநேரத்தில் வீடு திரும்பும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் பனைமரத்திற்குப் பின்னாலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள். வெயில் குறைந்த மாலைநேரத்திலும் ஆட்களின் நடமாட்டம் இருந்தது. மேடான பாதையிலிருந்து பால்காரன் தனது சைக்கிளை உருட்டிக்கொண்டு வருவதையும், அவனைத் தொடர்ந்து இரண்டு பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் பச்சைநிற சைக்கிள்களை ஒன்றன்பின்பாக உருட்டிக்கொண்டு வருவதையும் அவர்கள் பார்த்தார்கள். செம்மணல் ஒற்றையடிப்பாதையில் அவர்கள் இருவரும் சைக்கிள்களுக்கு வழிவிட்டு நின்று கொண்டனர். பார்க்கும் இடம் முழுவதும் மணல் சிவப்பு நிறமாக இருந்தது. அவர்கள் செங்கல்சூளையை நோக்கி சென்றார்கள்.

செல்வி, “இப்படியே நடந்து போயிட்டேயிருந்தா நல்லா இருக்கும்” என்று அவனிடம் சொன்னாள். அவன் சிரித்துக்கொண்டான். அவள் தொடர்ந்து ஏதேனும் அவனுடன் பேசவேண்டுமென்று நினைத்தாள். ஒவ்வொரு தடவையும் தான் பேச்சுக்கொடுக்கும் போதெல்லாம் ஏன் அதைத் தொடர விரும்பாதவனைப்போல அமைதியாக இருக்கிறான். ஏன் தன்னை விரும்பாதவனைப்போல நடந்துகொள்கிறான் என்று புரியாதவளாக இருந்தாள்.

அவர்கள் இருவரும் சூளையின் அருகே சென்றார்கள். புகையின் நாற்றத்தை அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சிவந்த நெருப்புக்கணல் அந்நேரத்தில் பிரகாசமாக இருந்தது. சற்றுத்தள்ளி பிளாஸ்டிக்குடத்தில் தண்ணீர் கொண்டு வந்த வயதான ஆள் அவர்களைப் பார்த்து என்ன வேண்டுமென்றுக் கேட்டார். அவர்கள் ஒன்றும் பேசாமல், அவரைக் கடந்து மேற்கு நோக்கி நடந்தார்கள்.

செல்வம் அடிக்கடி வந்து செல்லும் இடம் தான். இரண்டு தினங்களுக்கு முன்பாகக்கூட இந்த இடத்திற்கு வந்திருந்தான். வழக்கம் போல வங்கிகளில் அடகு வைக்க வேண்டிய தயாரிப்பு நகைகளை கிணற்றின் மேல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டுச் சென்றிருந்தான். அங்கிருக்கும் கிணறும், அதனுள் கிளை விட்டு நிற்கும் ஆலவிருட்சத்தையும் பார்த்துவிட்டுச் செல்வது அவனுக்கு அதிஷ்டமாக இருந்தது. செல்வம் முதன்முதலாக இங்கு வந்த போது கிணற்றுக்குள் இருக்கும் ஆலவிருட்சத்தை அதிசயமாக பார்த்தான். அந்த கிணற்றுக்குள் படிக்கட்டுக்கள் இருந்தன. கிணற்றின் சுவரில் ஒரு ஆலவிருட்சம் முளைத்து கிணற்றின் ஊடாக வளைந்து நின்றிருந்தது. கெட்டியான அதன் வேர்கள் கிணற்றின் சுவரிலிருந்து கிளைவிட்டிருக்கின்றன என்பதை அவனால் நம்பமுடியவில்லை. படிக்கட்டில் இறங்கி கிளையைப் பிடித்துத் தொங்கிப்பார்த்தான். ஊஞ்சல் போல விளையாடிப் பார்த்தான். கிணற்றின் சுவரில் தனது கால்களை மோதி உல்லாசமாக ஆடினான். அவனுக்கு உற்சாகமாக இருந்தது. அந்த உற்சாகத்தோடு தான் கொண்டு வந்த தயாரிப்பு நகைகளையெல்லாம் அந்த மரத்தினடியில் வைத்து மனதார வேண்டிக்கொள்வான். பிறகு எடுத்துக்கொண்டு அடகு வைத்துத் தருவதற்கென செல்வியிடம் தருவான்.

செல்வி வங்கிகளில் போய் அடகு வைக்கும் போது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. யாரும் அவள் தந்த நகையை போலியானது என்று கண்டுப்பிடிக்கமுடியவில்லை. செல்வி அவனிடம் அடகு வைத்தப் பணத்தைக் கொண்டு வந்து தருவாள். செல்விக்கு அவன் பத்து சதவீதம் தொகையை கமிஷனாக தந்து அனுப்புவான். செல்வத்திற்கு கிணற்றிற்கு வந்து சாமி கும்பிடுவதும், ஆலமரத்தில் ஊஞ்சலாடி விட்டுச் செல்வதும் ஏதோ வகையில் சந்தோஷமாகவும், அதிஷ்டமாகவும் இருந்தது. செல்வம் அதற்குப்பிறகு தான் ஒவ்வொரு தடவையும் அடகு வைக்க செல்வியிடம் தயாரிப்பு நகைகளைத் தருவதற்கு முன்பாக இந்த கிணற்றுக்கு வந்து செல்வது என்று முடிவு செய்தான். இப்போதும் அவன் புதிதாக செய்து கொண்டு வந்த மோதிரங்களை வைத்து எடுத்துச் செல்லவே வந்திருந்தான்.

ஆலவிருட்சத்தின் நிழல் கிணற்றின் சுவரின் மேல் விழுந்து கிடந்ததை அவர்களால் பார்க்க முடிந்தது. செல்வம் கிணற்றின் மேட்டில் அமர்ந்து கொண்டான். “காளியம்மா இப்படி உட்காரேன்” என்று அவளைப் பார்த்துச் சொன்னான். அவள், “என்னோட பெயரை காளியம்மான்னே மாத்திட்டீங்களா. காளியம்மாங்கிற பெயர் நல்லா இருக்கா” என்று அவனிடம் கேட்டாள். செல்வம் அமைதியானவனாக இருந்தான். அவளுக்கு இனிமேற்கொண்டு எதுவும் அவன் பேசமாட்டான் என்று தெரிந்துவிட்டது. அவளும் அமைதியாக இருந்தாள். தூரத்தில் சைக்கிளை ஓட்டிக்கொண்டு செல்பவர்களை அவளால் பார்க்க முடிந்தது. செம்மணலாக கிடந்த அந்த பகுதியில் தனித்தனியாக நின்றிருந்த ஒற்றை பனைமரங்களைத் தவிர வேறெந்த மரங்களும் இல்லை. செங்கல்சூளையின் புகை காற்றில் கரைந்து வந்தது.

செல்வம் குனிந்து கிணற்றில் வளர்ந்திருந்த ஆலவிருட்சத்தின் கிளையைப் பார்த்தான். தொங்கி விளையாடவேண்டுமென்று தோன்றியது. ஊஞ்சல் விளையாடுறியா என்று செல்வியைப் பார்த்துக் கேட்டான். அவளுக்கும் தொங்கி விளையாட வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. செல்வியை அவன் கிணற்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை தான் அழைத்து வந்திருக்கிறான். அவளுக்கு ஊஞ்சல் விளையாட வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. செல்வம் படியின் வழியாக கிணற்றுக்குள் இறங்கினான். மரத்தின் கிளையைப் பிடித்துத்தொங்கினான். ஊஞ்சலாடுவதைப் போல ஆடினான். பிறகு படியில் கால் வைத்து இறங்கிக்கொண்டான். அவளையும் தன்னைப் போல ஆடவேண்டுமென்று சொன்னான். அவள் ஒரு தடவை விளையாடிவிட்டு வந்துவிடுவோம் என்று நினைத்தாள். அவள் சேலையைத் தூக்கி சொருகியபடி கிளையைப் பிடித்து கால்களை உந்தினாள். அவளுக்குத்தான் உதவுவதாகச் சொன்னதையும் அவள் மறுத்துவிட்டாள். அவளால் அவனைப் போல ஆடமுடியவில்லை. அவளுக்கு கிளையில் தொங்கி விளையாடுவதற்கு பயமாக இருந்தது. கிளையைப் பிடித்து தொங்கியவள் குனிந்து தண்ணீரைப் பார்த்தாள். கருநிறமாக கிடந்த கிணற்று நீரைப் பார்த்ததும் அவள் பயந்து போனாள். தண்ணீர் சுழலுவதைப் போலவும், தான் தலைகீழாக விழுவதைப் போலவும் உணர்ந்தவள் பயந்து கத்தினாள். ஊஞ்சலாடும் போது கிளை முறிந்து தான் கிணற்றுக்குள் விழுந்துவிடுவோமோ என்று பயந்தாள். பிறகு அவன் அவளது தோள்களைப் பிடித்து கீழே இறக்கினான். செல்வி அதற்குப்பிறகு இங்கு வந்த போது தலைகுனிந்து கிணற்று நீரை பார்க்க மாட்டாள். தன்னை யாராவது தள்ளிவிடுவது போல உணர்ந்தவள் கிணற்றின் மேட்டிலேயே உட்கார்ந்து எழுந்து சென்றுவிட்டாள். இப்போதும் அவள் மேட்டில் உட்கார்ந்தபடி தான் செல்வத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“இங்கிருந்து எங்காவது போயிடலாம் செல்வம். போதும் நாம் விளையாடியது. தினமும் பயந்து பயந்து நான் இருக்கிறேன். எப்போ என்னா ஆகுமுன்னு நெஞ்சு அடிச்சுக்கிருது தெரியுமா. உனக்கு பயங்கிறதே கிடையாதா. நம்மளை போலீஸ் வந்து பிடிச்சிட்டுப்போயிட்டா என்ன செய்யுவே” அவள் அவனைப் பார்த்து கோபமாகக் கேட்டாள். அவன் அமைதியாகத்தான் இருந்தான். தான் கொண்டு வந்த உருப்படிகளை எடுத்து கிணற்றின் மேல் வைத்து மேற்கிலிருந்த சூரியனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டுக்கொண்டான். செல்வி அவன் பொட்டலத்திலிருந்து பிரித்து வைத்திருந்த உருப்படிகளை பார்த்தாள். பத்துகும் மேற்ப்பட்ட மோதிரங்கள். எல்லாம் ஒரே மாதிரியான வடிவங்களைக் கொண்டிருந்தது. அந்த மோதிரங்களுக்கு ஏதோ ரகசியம் ஒளிந்திருந்து மினுமினுப்பது போல இருந்தது. மாலையில் சூரியன் மறையும் நேரம். நகைகளின் மேல் பட்ட ஆரஞ்சு நிற வெளிச்சம் மேற்கொண்டு மோதிரங்களை நிறம் கூட்டிக்காட்டியது. மஞ்சள் நிறமும் அதன் கண்வடிவமும் வேறேதோ புதிய பொருள் போல அவளுக்குத் தெரிந்தது. அவள் ஒரு மோதிரத்தை எடுத்து தனது விரலில் போட்டுப் பார்த்தாள். தாராளமாக போய் வந்தது. ஒவ்வொரு மோதிரத்தையும் தனித்தனியாகப் பார்த்தவள் தனது விரலுக்கு ஏற்றதாக ஒரு மோதிரமும் இல்லையென்று அவளாகச் சொல்லிக் கொண்டாள். அவளுக்கு அந்த மோதிரங்களைப் பார்ப்பதற்கு பயமாக இருந்தது.

செல்வத்தை சந்திப்பதற்கு முன்பாக, செல்வி முதன்முதலாக கானா நகையை எடுத்துக்கொண்டுப் போய் வங்கியில் அடமானம் வைக்கவேண்டுமென்று கேட்டிருக்கிறாள். வங்கியிலிருந்தவர்கள் கவரிங் நகைகளுக்கெல்லாம் பணம் தரமுடியாது. இனிமேல் இதுமாதிரி நகைகளைக்கொண்டு வந்து தந்தால் போலீஸில் சொல்லிவிடுவோம் என்று பயமுறுத்தி அனுப்பிவிட்டார்கள். அதற்குப்பிறகு செல்வம் ஒரு செயினை பாலிஷ் செய்து தந்தனுப்பியிருந்தான். வங்கியிலிருந்தவர்கள் கண்டுபிடித்து கன்னத்தில் அடித்து அவளை திட்டியிருக்கிறார்கள். அங்கிருந்த கூட்டத்திற்கு முன்பாக அவளை நிற்க வைத்து ஊழியர்கள் அத்தனை பேரும் திட்டுவதும் மிரட்டுவதுமாக ஒருமணி நேரத்திற்கும் மேலாக அவளை அவமானப்படுத்தினார்கள். அதெல்லாம் செல்வி அவனுக்காக பொறுத்துக் கொண்டாள்.

“மொத்த அடக்க விலையும் நீ அடகு வைக்க வேண்டிய தொகையும் இந்த சீட்டிலே எழுதியிருக்கிறேன். ஐந்து மோதிரம் ஐந்து மோதிரமா பிரிச்சு தனித்தனியாக இரண்டு இடத்திலே வைச்சுரு. ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ் புக்கெல்லாம் இருக்கில்லே. ஞாபகமா எடுத்துக்கோ. ஒரு இடத்திற்கு காலையிலே முதல் ஆளா போய் நில்லு. இன்னொரு இடத்திற்கு சாப்பாட்டு நேரத்திற்கு ஐந்து நிமிஷம் இருக்கிறப்போ போய் நில்லு. ஜெராக்ஸிலே இருக்கிற பேரும் நீ சொல்லுற பேரும் ஒண்ணா இருக்கனும். பார்த்துக்கோ. இந்த தடவை என்ன பேரு”

“தாமரைச்செல்வி”

“நல்ல பேரு. யார்கிட்டே ஜெராக்ஸ் காப்பியை வாங்கினே”

“ஆளா இல்லை. எப்படியோ வாங்கிட்டேன். செல்ஃபோன் உன்னோடதை சொல்லவா இல்லை டம்மி டம்பரைச் சொல்வா”

“எப்பவும் ஒரு நம்பர் இருக்குமில்லை. அதையே எல்லாத்துக்கும் பயன்படுத்திக்கோ. உண்மையான நம்பரை யாருக்கும் தராதே. சந்தேகம் வந்து ஃபோன் செய்தாங்கன்னா ரிங் போயிட்டே இருக்கும். என்னான்னு கேட்டா என் புருஷன் வேலை செய்யுற இடத்திலே இருப்பாரு. செல்ஃபோன் வேற இடத்திலே இருக்குமுன்னு சமாளிச்சுக்கோ. எனக்கு தொகை சரியா வந்திரனும். அசலைக் காட்டிலும் கடன் தொகை கூடுதலாக இருக்கனும். குறைச்சலாக வாங்கிட்டு வந்திராதே. இவ்வளவு கஷ்டப்படுறது வீணா போயிடும். அப்புறம் இரண்டு உரைக்கு மேலே வைக்கவிடாதே. மூனு உரைக்குத்தான் தாங்கும். ஏதாவது பேசி சமாளிச்சு காரியத்தை முடிக்கப்பாரு” என்று அவளிடம் சொன்னான்.

அவள்,“அதெல்லாம் என்னோட வேலை. எத்தனை தடவை எப்படியெப்படி வேலையை முடிச்சிட்டு வந்துக் கொடுத்திருக்கேன். எங்கயாவது மாட்டியிருக்கேனா” அவள் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்த வழியாக நடக்கத் தொடங்கினாள். கிழக்குப் பக்கமாக அவள் நடந்துபோன பாதையில் செங்கல்சூளையின் புகை அதிகமாக வரத்தொடங்கி இருந்தது. பனைமரங்களை வெட்டி துண்டுத்துண்டாக சூளையில் அடுக்கிக்கொண்டிருந்ததை அவள் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தாள். பனைமரங்கள் பாதி வெட்டியும், வெட்டாமலும் செம்மணல் வழி நெடுக கிடந்ததை அவள் பார்த்தபடி நடந்து சென்றாள்.

செல்வத்தை முதன்முதலாக ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ரயில்வேஸ்டேஷனுக்கு அருகிலிருந்த பிளாட்பாரத்தில் சந்தித்தாள் செல்வி என்கிற காளியம்மா என்கிற பூஞ்செல்வி எனகிற தாமரைசெல்வி. அப்போது அவளுக்குத் திருமணம் முடிந்திருக்கவில்லை. அவளும் அவளது தோழிகளும் செல்வத்திடம் கவரிங் நகைகள் வாங்கினார்கள். செல்வம் பிளாட்பாரத்தில் ஞாயிற்றுக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் கடை விரித்து வியாபாரம் செய்து வந்தான். பழைய கவரிங் உருப்படிகளை வாங்கிக்கொண்டு புதிதாக உருப்படிகளை கிரயம் பேசி விற்று வந்தான். அவனிடம் கம்மல்களும் ஜிமிக்கிகளும் அழகழகாக இருந்தன. செல்விக்கு குட்டிக்குட்டி ஜிமிக்கியை பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது. அவள் அன்று இரண்டு மூன்று உருப்படிகளை வாங்கிக்கொண்டாள். அவளுடன் வந்த அவளது தோழிகள் வழக்கம்போல இரண்டு செயின்களை திருடி ஜாக்கெட்டுக்குள்ளும், இடுப்பு பாவடையிலும் ஒளித்து வைத்துக்கொண்டார்கள். செல்விக்கு அவர்கள் எடுத்துக்கொண்டது தெரியும். அவளும் இப்படியாக ஏதாவது திருடி வைத்துக்கொள்பவள் தான். ஆனால் செல்வத்தின் கடையில் அன்று அவள் எதையும் திருடிக்கொள்ளவில்லை. திருடிக்கொள்வதற்கு மனமில்லை. திருடிக்கொள்வதற்கு நிறைய்ய வாய்ப்புகள் இருந்தது. செல்வம் அடிக்கடி சாலையை பார்த்துக் கொண்டிருந்தான். தன் கடையின் முன்பாக நிற்பவர்களைத் தவிர வேறு சிலரை வியாபாரத்திற்கு அழைத்தான். அவள் தன்னிடமிருந்த பச்சையடித்து, துருப்பிடித்த இரண்டு பழைய செயினை விற்று ஒரு ஜோடி கம்மல்களை ஜிமிக்கியுடன் வாங்கிக் கொண்டாள். செல்வம் லெண்ஸ் வைத்து செயினின் இணைப்புகளையும், குண்டு வளையத்தையும், பார்த்து வாங்கினான். செல்விக்கு ஆச்சரியமாக இருந்தது. தங்கநகையைப் பார்ப்பது போல இப்படி ஆராய்ச்சியெல்லாம் செய்கிறானே என்று நினைத்துக்கொண்டாள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதே பிளாட்பாரத்தில் அவனை சந்தித்தாள். அவன் முன்பை வீட நிறைய்ய சரக்குகளுடன் கடையை விரித்திருந்தான். அவனிடம் அன்று புத்தம் புதிய செயின்கள் இருந்தன. சிறியதாக ஒரு விளம்பரம் கூட எழுதி வைத்திருந்தான். ஒரு வருடம் உத்திரவாதம் என்றும், இடையில் மெருகு குறைந்தாலே, வேறு ஏதேனும் ரிப்பேர் ஏற்பட்டாலே தனது அலைபேசியில் தொடர்பு கொண்டு சரி செய்து கொள்ளலாமென்று எண்ணை எழுதி வைத்திருந்தான்.

செல்வி மட்டும் அன்று கடை வீதிக்கு வந்திருந்தாள். அவளுடன் வேறு யாரும் வந்திருக்கவில்லை. அவள் தன்னிடமிருந்த பழைய செயினை விற்று புதிய செயினை வாங்கிக்கொள்ளலாமா என்று அவனிடம் கேட்டாள். அவன் அவளிடமிருந்த செயினை வாங்கிப்பார்த்தான். தன்னிடமிருந்து காணாமல் போன செயினைத் தான் அவள் கொண்டுவந்திருக்கிறாள் என்று அவன் அடையாளம் கண்டுகொண்டான். அதை அவளிடம் கேட்கவும் செய்தான். அவள் முதலில் அமைதியாக தான் இருந்தாள். பின்பாக தான் ஏன் குற்றத்தை ஒப்புக் கொள்ளவேண்டும். தவறு தனது தோழிகளுடையது தானே. அதற்கு தான் என்ன செய்யமுடியும் என்று அவனிடம், “நான் எதையும் உங்களிடமிருந்து எடுத்துச் செல்லவில்லை. ஒரு வேளை என்னுடன் வந்தவர்கள் யாரேனும் எடுத்துச் சென்றிருக்கலாம். அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்” என்று செயினைத் தந்தாள். செல்வத்திற்கு சிரிப்பு தான் வந்தது. அவன் அவளிடமிருந்த செயினை வாங்கிக் கொண்டு நன்றி என்றான். அவள் ஒன்றும் பேசவில்லை. புதிய செயினை வாங்காமல் விட்டுச்செல்லவும் மனமில்லை. அதனை புரிந்து கொண்டவனாகத் தான் செல்வம் இருந்தான்.

“நான் தினமும் இங்க தான் கடை போடுவேன். வேணுமினா உனக்குப் பிடிச்சச் செயினை வாங்கிக்கோ. நாளைக்கு வந்து பணத்தைத்தாயேன்” என்று சொன்னான். அவளுக்கு கடனுக்கு வாங்கிச் செல்வதில் எவ்விதமான கூச்சமும் இல்லை. சரி என்று வாங்கிக்கொண்டாள். அவளுக்கு அவனை மிகவும் பிடித்துப்போயிருந்தது. தான் தொடர்ந்து சந்தித்து வரவேண்டுமென்று அவள் விரும்பினாள்.

“எப்பவும் இங்கே தான் நீங்க கடை போடுவீங்களா”

“தெற்குவாசல் மார்க்கெட் சர்ச் பக்கத்திலே வெள்ளிக்கிழமை கடை போடுவேன். ஞாயிற்றுக்கிழமை இங்க தான் இருப்பேன். சனிக்கிழமை பெரியார் பஸ்ஸ்டாண்டுக்குப் போயிடுவேன். ஏன் கேட்கிறே”

“கடனைத் திருப்பித்தரணுமில்லை”

“ஃபோனிலே கூப்பிட்டா எங்கே இருக்கேன் தெரிஞ்சுடுமில்லை”

“அதுவும் சரி தான்”

செல்வி அதற்குப்பிறகு அவனை ஃபோனில் கூப்பிடவும் இல்லை. வாங்கியப் பொருளுக்கு காசு தரவும் இல்லை. செல்வம் அவளை ஞாபகத்தில் வைத்திருந்தான். அவளை முதலில் பார்தத போது அவளை வேசி என்று தான் நினைத்தான். அவளது தோற்றமும், அவளது பேச்சும், உடுத்தியிருந்த உடையும் அவனை இப்படியாக நினைக்கச் செய்தது. அவள் என்றாவது தன் முன்பாக வந்து நிற்பாள் என்று நினைத்தான். அவன் நினைத்தது போல திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேகத்திற்காகக் கடை போட்டிருந்த போது அவளை சந்தித்தான். அவளாகத் தான் அவனது கடைக்கு வந்தாள். தான் கடனை தரமுடியவில்லையென்று வருத்தப்பட்டு, வெயிலுக்கு ஒதுங்கியவள் அவன் அமர்ந்திருந்த குடைக்குக் கீழாக அமர்ந்து கொள்வதற்காக அவனது அருகாமைக்கு வந்தாள். தன்னிடமிருந்த பிஞ்சு வெள்ளரிகளை அவனுக்குத் தின்பதற்காக சேலையில் துடைத்துத் தந்தாள். அவனும் வாங்கிக்கொண்டான். “காசு தராதற்காக என் மேல் உனக்கு கோபமா” என்று கேட்டாள். அவன், “இது மாதிரி நூத்துக்கணக்கான பொம்பளைங்க என்னை ஏமாத்திட்டுப் போயிருக்காங்க. நீயாவது ஒரு செயினோட போயிட்டே. ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டிலே ஒருத்தி செயினையும் வாங்கிட்டு அவள் புருஷனோடு ஃபோனிலே பேசனுமின்னு, செல்ஃபோனையும் வாங்கிட்டுப்போனவள் தான் இன்னமும் திரும்பலை” என்று சொன்னதைக் கேட்டு அவள் கவலையானாள்.

“அப்போ இந்த தொழிலிலேயும் பிரச்சனை இருக்குன்னு சொல்லுங்க. வித்தோமா கஞ்சிக் குடிச்சமான்னு இல்லை”

“எவனும் இனி போகிற காலத்திலே நிம்மதியா இருக்க முடியாது” என்று சொல்லி முடித்துவிட்டு நகைகளின் மேல் படிந்திருந்த தூசிகளைத் தட்டிவிட்டான்.

“இந்த நகைகளையெல்லாம் பேங்கிலே அடகு வாங்கினாங்கனா, கொடுக்கிற மகராசனுக்கு காலிலே விழுந்து கும்பிடு போட்டு பணத்தை வாங்கிக்குவேன்” என்று செல்வி அவனிடம் சொன்னாள்.

“ஆமாம், உன்னையத்தான் காணாமின்னு கூப்பிடுறாங்கன்னு நினைச்சிட்டு இருக்கயா. சிக்குனமுன்னா தூக்கி உள்ளாறே உட்கார வைச்சிருவாங்க தெரியுமா”

“எத்தனை பேரு கவரிங் நகையை வச்சிட்டு பணத்தை வாங்கிட்டு வர்றாங்கத் தெரியுமா. பத்து நாள் இருபது நாளுக்குப் பிறகு போய் பணத்தைக் கட்டிட்டு திருப்பிட்டு வந்துடுறாங்க. நாமளும் செஞ்சா என்னான்னு தோனுது”

“சரி போய் செய்யீ. பணத்தை வாங்கி ஏதாவது தொழில் பன்னு. நல்லா இரு”

“ஏதாவது நகை கொடுங்க. உங்க பேரை சொல்லி வைச்சுக்கிறேன்”

செல்வம் புதிதாக வந்திருந்த மாடல் செயினை அவளுக்குத் தந்தான். அப்படியே தங்க செயினின் மாடல் போல இருந்தது. செல்வி தங்கச்செயின் என்று தான் முதலில் நினைத்தாள். தனது ஜாக்கெட்டுக்குள்ளிருந்த பர்ஸை எடுத்து அதிலிருந்த இருபது ரூபாய் தாளை கொடுத்தாள். அவனும் வாங்கிக்கொண்டான். அவள் எழுந்து போகும் போது அவன், “எந்த பேங்கிலே இந்த நகையை வைக்கப்போறே” என்று கேட்டான். “அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு. உங்களுக்கு வேணுமா சொல்லுங்க” என்று சிரித்தபடி கேட்டாள். அவள் கேட்டது உண்மையா, இல்லை தன்னை கேலி செய்கிறாளா என்று புரியாதவனாக இருந்தான் செல்வம்.

அவர்கள் இருவரும் கிணற்றின் மேட்டில் அமைதியாக அமர்ந்திருந்தனர். செல்வி அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்டவளாக அமர்ந்திருந்தாள். இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை. செல்விக்கு பேசவில்லையென்றால் மனதில் இறுக்கம் அதிகமாகி மண்டைவலி ஏற்பட்டுவிடும். அவனோடு தான் பேசாமல் இருக்கவும் முடியாது. செத்துத்தொலையும் வரை ஏதாவது பேசித்தான் ஆகவேண்டும். என்ன பேசுவது, எதைப்பற்றிப்பேசுவது, யாரைப்பற்றி பேசுவது என்று தான் அவளுக்குத் தெரியவில்லை. பேசுவதற்கு நிறைய்ய இருக்கிறது என்பது போல தோன்றினாலும், எதைப்பேசுவது என்று தான் அவளுக்குத் தெரியவில்லை. செல்வத்திடம் திருப்பரங்குண்றத்தில் வைத்து முதன்முதலாக வாங்கிய செயினைத்தான் அவள் அணிந்திருந்தாள். அதை அணிந்து சென்றால் வங்கிகளில் காரியங்கள் சீக்கிரமாகவும், அதே நேரம் தொல்லையில்லாமலும் முடிகின்றது என்று ராசியாக வைத்திருந்தாள். வெள்ளிக்கிழமை தோறும் அவள் வண்டியூர் தெப்பக்குளத்திற்குச் சென்று சாமி கும்பிட்டு வருவாள். அன்று தலைக்கு ஊற்றிக்கொண்டு செயினை புளித்தண்ணியில் ஊற வைத்து அழுக்குப்போக தேய்த்துக்கொள்வாள். பிறகு தலைக்குப் போடும் ஷாம்பை செயினுக்குப்போட்டு நுரை வரும் வரை தேய்த்து வாசமாக அணிந்து கொள்வாள். அந்த செயின் வந்ததிலிருந்து தான் அவளுக்கு அதிஷ்டம் என்று அவளது அம்மாவும் சொன்னாள். அதனை தொடர்ந்து புதுப்பித்தும், பாலிஷ் செய்தும் இப்போது வரை அணிந்திருந்தாள். செல்வி தான் சாகும் சமயத்தில் செயினை கழற்றி வைத்துவிடக்கூடாது என்றும் செல்வத்தின் ஞாபகமாக தன்னிடமிருக்கும் ஒரே பொருள் தான் கழுத்தில் அணிந்திருக்கும் செயின் தான், அந்த செயின் தன்னுடன் மண்ணில் புதைந்துவிடவேண்டும் என்று விரும்பினாள்.

செல்வி இரண்டு பாவடைகளும், இறுக்கமான உள்ளாடையும், அடர்மஞ்சள் நிறத்திலான புடவையும் அணிந்திருந்தாள். தனது மரணத்திற்குப் பின்பாக தன்னை யாரும் நிர்வாணமாகப் பார்த்துவிடக்கூடாது என்ற உணர்வு அவளை கவலைக் கொள்ளச் செய்தது. தற்கொலையை விட மரணத்திற்குப் பிறகு, தனது உடல் நிர்வாணமடையப் போவதையும், அதனை யார் யாரோ பார்க்கப்போகிறார்கள் என்பதையும் நினைத்துப் பார்த்தவள், தற்கொலை செய்து கொள்ளவேண்டாம் என்றுகூட யோசித்தாள். ஆனால் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. செல்வத்தை இனி மேல் தான் நம்பிக்கொண்டிருக்க முடியாது என்று நினைத்தாள். முதலில் அவள் தனது தோழிகள் மூலமாகவும், பிறகு தனது அம்மாவின் மூலமாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதற்கு பேசிப்பார்த்தாள். அவன் சம்மதிக்கவில்லை. அவளுக்கு அதற்குப்பிறகும் பொறுமையில்லை. ஒன்று சாகவேண்டும். இல்லை அவனுடன் சேர்ந்து வாழவேண்டுமென்று விரும்பினாள். சென்ற முறை கிணற்றுமேட்டுக்கு வந்திருந்த போது அவனாக ஏதாவது பேசுவான் என்று காத்திருந்தாள். அவன் தன்னை ஏன் புறக்கணிக்கிறான். நகையை அடகு வைத்துத்தருவதற்கு மட்டும் தன்னை அழைக்கிறான். தான்தானே அவனுக்கு எந்தெந்த இடத்தில் எப்படியெப்படி போய் அடகு வைத்து வாங்கவேண்டுமென்ற ரகசியத்தைச் சொல்லித்தந்தது. பாதி தங்கமும், பாதி செம்பும் கலந்த உருப்படிகளை தயாரிப்பதற்குக்கூட பாலிஷ் போடுபவனைப் பழக்கப்படுத்தித் தந்தது தான் தானே. எல்லாவற்றையும் தன்னிடமிருந்து தெரிந்து கொண்டவன், எதற்காக தன்னை வெறுக்கிறான். இப்படியான தொழிலை செய்பவளும் இப்படியாகத் தான் இருப்பாள் என்று தன்னை வீட நல்ல பெண்ணை அவன் எதிர்பார்க்கிறானா என்று யோசித்து அமைதியாக இருந்தாள்.

செல்வி அதற்குப்பிறகு தான் ஒரு முடிவுக்கு வந்தாள். அவன் சென்ற பிறகு கிணற்றின் கிளைவிட்டிருக்கும் ஆலவிருட்சத்தில் தூக்குமாட்டிக்கொண்டோ, இல்லை கிணற்றில் விழுந்தோ இறந்து போய்விடவேண்டுமெனறு முடிவு செய்திருந்தாள். தான் ஏன் செல்வத்துடன் கூட்டுச்சேர்ந்தோம். ஏன் அவனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போய் சந்தித்தோம். எதற்காக அவனுடன் சேர்ந்து கொண்டு வங்கிகளில் போய் தயாரிப்பு நகைகளை வைத்து ஏமாற்றினோம். ஏமாந்துபோனவர்கள் என்றாவது தன்னை கண்டுப்பிடித்து வரத்தான் செய்வார்கள் என்றும், பிறகு தன்னை போலீஸ்ஸ்டேஷனில் வைத்துவிடுவார்கள் என்பதையும் அவள் நினைக்கும் போது பயந்து போனாள்.

செல்வம் இதற்காகவாவது தன்னை திருமணம் செய்துகொள்வான் என்று நம்பினாள். செல்வம் தன்னை ஏமாற்றுகிறானா என்ற ஐயம் கூட அவளுக்கு உண்டானது. ஒருவேளை மொத்தமாக ஏதாவது உருப்படிகளைத் தயாரித்து பெரும் தொகைக்கு அடகு வைத்துக்கொண்டு எங்காவது போய்விட்டால் தன்னால் என்ன செய்யமுடியும் என்ற சந்தேகத்திற்குப் பிறகு தான் அவள் இறந்து போய்விடுவதன்று முடிவு செய்தாள்.

“நேத்து இங்கே வர்றப்போ நீங்க என்ன நினைச்சீங்க” என்று அவள் கேட்டாள். அவன் இந்த கேள்வியை எதிர்ப்பார்த்துத்தான் இருந்தான். அவள் எப்போதோ இதைக் கேட்டு, தனது பேச்சைத்தொடங்கியிருக்கவேண்டும். ஏன் தாமதமாக கேட்கிறாள் என்று பதில் சொல்லாமல் இருந்தான். அவள் திரும்பவும் கேட்டதும் அவன், “இரண்டு நாளைக்கு முந்தி இங்கே வந்தப்போ இந்த நாயைப் பார்த்தேன். செங்கல் சூளையிலே வேலைப்பார்த்துட்டு இருந்த கிழவனாரைப் பார்த்தேன். ஸ்கூல் பசங்களைப் பார்த்தேன். பால்காரனைப் பார்த்தேன். எல்லாம் அப்படியப்படியே இருக்கிற மாதிரிதான் தோனுது” என்று அவன் பதில் சொன்னான். அவள் இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேகங்கள் வேகவேகமாக நகர்ந்து செல்வது போலிருந்து. மேற்கில் சாயும் சூரியனின் நிறம் மங்கலாகத் தெரியத்தொடங்கியது.

“இல்லை எங்கம்மா சொன்னதைப் பத்தி நான் கேட்கிறேன்”

“அதைத் தான் உங்கம்மாகிட்டேயே சொல்லிட்டேனே. திரும்பவும் ஏன் கேட்குறே”

தூரத்தில் பனைமரங்கள் காற்றிலாடும் ஓசையை கேட்கமுடிந்தது. பனைமரத்தினை இரண்டு தினங்களுக்கு முன்பாக வந்த போது வெட்டிக்கொண்டிருந்தனர். மரத்தை வெட்டும் ஓசையை அந்த வெளி எதிரொலித்தபடி இருப்பது இப்போதும் அவள் தனக்குள் கேட்பது போல் உணர்ந்தாள். மரத்தை வெட்டிய இடத்தைப் பார்த்துக்கொண்டாள். அடித்தூரோடு வெட்டிசாய்த்திருந்தார்கள்.

அவன் அவளது கரங்கள் இரண்டையும் பிடித்துக்கொண்டு பித்தாளை வளையல்களை சுண்டிவிட்டான். செல்வம் இதே போல எத்தனையோ முறை அவளது கரங்களைப் பிடித்திருக்கிறான். தன்னுடைய கரங்களைப் பற்றிக்கொள்வது கூட ஒரு தற்காப்புக்குத்தான் என்பதை அவள் உணர்ந்திருந்தாள். ஏனென்றால் தனது கரங்களை அவன் தொடுகிறான் என்ற கிறக்கத்திலேயே தான் பல காரியங்களை அவனுக்காகச் செய்திருக்கிறோம் என்று நினைக்கும்போது, இப்போது அவன் மேல் கோபமாக வந்தது. அவள் கைகளை உதறிக் கொண்டாள்.

செல்வம் எழுந்து நின்றான். “பத்து நாள் கழிச்சுப் புதிய உருப்படிகள் வருது. போன தடவை தந்துவிட்ட மோதிரம் போல தான். கெட்டி உருப்படிகள். அந்த உருப்படிகள் எடைக்கு எடை வேலை. பாத்துக்கோ. கவனமா நடந்துக்கோ. கூட நானும் வர்றேன். எல்லாத்தையும் உன் பெயரிலேயே வைச்சிக்கிறனாலே நீ என் மேலே சந்தேகப்படுறே. நான் உன்னை மாட்டிவிட்டுட்டுப்போயிடுவேன்னு நீ நினைச்சிட்டே போலிருக்கு. நான் பேசுனதுபடி பத்து பிரசண்ட் கமிஷன் பணம் உனக்குத் தந்துக்கிட்டுத்தான் இருக்கேன். மேற்கொண்டும் தர்றேன். நீ ஏன் கவலைப்படுறே” என்று அவளை சமாதானப்படுத்துவது போல பேசினான்.

செல்வம் பிறகு கிணற்றின் படிகள் வழியாக இறங்கினான். அவனுக்கு ஊஞ்சலாட வேண்டுமென்ற ஆசை அப்போது உண்டானது. சூரியன் மறைவதற்கு இன்னமும் சற்று நேரம் இருந்தது. ஊஞ்சல் விளையாடிவிட்டு வீட்டிற்குப்போகலாமென்று செல்வியிடம் சொன்னான். அவள் கிணற்றின் மேட்டிலிருந்து அவன் சொல்வதைக் கேட்டபடி அமர்ந்திருந்தாள். அவன் பேசியது எங்கோ தொலைவில் நின்று பேசுவது போல அவளுக்குக் கேட்டது. செல்வம் வழக்கம் போல படிகளிலிருந்தபடித்தாவி ஆலவிருட்சத்தின் கிளையைப் பிடித்துக்கொண்டான். படியிலிருந்த தனது கால்களை உந்தினான். அந்தரத்தில் காற்றில் மிதப்பது போல உணர்ந்தவன் கால்களை மெதுவாக அசைத்துக்கொடுத்தான். கிணற்றின் சுவரில் இடது காலை வைத்து வேகமாக உந்தித்தள்ளினான்.

செல்வி அவன் சந்தோசமாக ஊஞ்சல் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கவலை ஏதுமற்ற அவனது முகத்தைப் பார்க்கும் போது அவளுக்கு அவன் மேல் கோபமாக வந்தது. ஊஞ்சல் ஆட்டத்தைப் போல மேலிருந்து கீழாகவும், பிறகு கீழிருந்து மேலாகவுமாக, அவளது சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. ஞாபகங்கள் அசைந்து அசைந்து அவளது மனதிற்குள் ஆடிக்கொண்டிருந்தது. எந்த இடத்திலாவது அறுந்து நின்றுவிடும் என்று சிந்தனையோட்டத்தினைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். ஞாயிற்றுக்கிழமை, பிளாட்பாரம், தெற்குவாசல், திருப்பரங்குன்றம் என்று ஊஞ்சலின் வேகத்திற்கு அவளது மனம் ஆடிக்கொண்டிருந்தது.

செல்வத்தின் நினைவுகளிலிருந்து வெளியேற வேண்டுமென்று நினைத்து கிணற்று மேட்டிலிருந்து எழுந்து கொண்டாள். அவன் கண் முன்பாகவே தான் இறந்து போகவேண்டுமென்று முடிவு செய்தாள். அவள் குனிந்து கிணற்றைப் பார்த்தாள். அவளுக்கு கருநீலநிறத் தண்ணீர் சுழலுவதைப் போலவும் தான் தலைகீழாக விழுவதை போலவும் உணர்ந்தவளுக்கு பயம் தொற்றிக்கொண்டது. கிணற்றுக்குள் விழுந்துவிடவேண்டும் என்று முயன்றவளின் கண் முன்பாக கிளை சிறுக சிறுக முறிந்து, முற்றாக ஒடிந்து ஊஞ்சலாடிக் கொண்டிருந்த செல்வத்தோடு கிணற்றுக்குள் விழுந்தது. செல்வம் அலறிய சப்தம் வெகுதூரத்திலிருந்து கேட்பதுபோல அவளுக்குக் கேட்டது.

– ஜனவரி 30th, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *