கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 1,721 
 
 

(1963ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-10 | அத்தியாயம் 11-20 | அத்தியாயம் 21-30

அத்தியாயம்-11

சற்று தயங்கிவிட்டு ஃபிரான்சிஸ் எனக்குத் தன் நடத்தைபற்றிச் சந்தேகம் இருக்கக்கூடாதே என்கிற நினைப்பில் சொன்னார்: “எப்படிங்க நாமா போய்க் கேட்கிறது? கொடுத்தால் வாங்கிக்கிறது வேறு விஷயம்! கொடு என்று கேட்பதுதான் தப்பு. நமக்கும் ராஜகோபாலன் கதி அது என்னவோ ஆகிவிட்ட தானால் என்ன பண்ணுவது என்று பயமாகவும் இருந்தது. அந்தத் தடவை நான் திரும்பி வந்த சமயம் நமது போலீஸ் ஸ்டேஷனே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அதிலிருந்து தான் தியாகராஜத் திப்பிலியார் கேசு உண்மை யிலேயே ஆரம்பமாகிறது என்று சொல்லவேண்டும்.” 

“அதாவது போலீஸ்காரர்கள் அதை ஒரு கேஸாக நடத்தத் தொடங்கினார்கள் என்றும், திப்பிலியார் சுடப்பட்டு இறந்தது, சம்பந்தம் சிறைப்பட்டது, ராஜவேலும் வரதராஜனும் உயிர் துறந்தது எல்லாமே அதிலிருந்து தான் தொடங்குகிறது. இல்லையா? அந்தச் சம்பவம் நடந்தபோதே கொஞ்சம் அறை குறையாக என் காதிலும் விழுந்த நினைவிருக்கிறது. இருந்தாலும் இப்போது நீங்களும் ஒருதரம் சொல்லுங்கள்” என்றேன் நான். 

“பெரியதுரை சின்னதுரை, நாலு இன்ஸ்பெக்டர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள், நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேரும்போது. ஆனால் போலீஸ் ஸ்டேஷன் இருந்த மேலவீதிக்கு நான் திரும்புவதற்கு முன்னரே இன்ஸ்பெக்டர் பஞ்சநதம் தெற்குவீதி செட்டியார் சத்திரத்திற்கு எதிரிலேயே என் சைக்கிளை நிறுத்தச் சொல்லி என் மடியிலிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டுவிட்டான். ‘நான் போய்விட்டுப் பத்து நிமிஷத்துக்கெல்லாம் ஸ்டேஷனுக்கு வரேன்’ என்று கிளம்பியவன் ‘அந்தத் தியாகராஜத் திப்பிலியாருக்கு ஒரு பிள்ளைதானே?’ என்று கேட்டான். ‘ஒரே பிள்ளைதான். கான்வெண்டு ஸ்கூலிலே படித்துக் கொண்டிருக்கிறான்’ என்றேன். ‘வயது பதினைந்துக் குள்தான் இருக்கும்’ என்றான் பஞ்சநாதம். ‘தெரியாது’ என்றேன். ஸ்கூலில் படிக்கிறான் என்றால் அவ்வளவு தானெடா இருக்கும்?’ என்றான் பஞ்சநதம். அடா புடா என்று, பணத்தையும் பிடுங்கிக் கொண்டு அவன் என்னைப் பேசியது எனக்கு ஆத்திரமாக இருந்தது. ஆனால் ஆத்திரத்தை எப்படிக் காட்டுவது. ‘நீ போய் சுதேசி ஹோட்டலிலே காபி சாப்பிட்டுவிட்டு, நான் வந்தபிறகு ஸ்டேஷனுக்கு வா. நான் வருவதற்கு முன் திரும்பிவிடாதே!’ என்று எச்சரித்துவிட்டு இன்ஸ்பெக்டர் பஞ்சநதம் மோட்டார் பைக்கில் டப்டப்பென்று சப்திக்க தெற்குவீதியோடு போய் விட்டான். சுதேசி ஓட்டலில் போய்க் காபி சாப்பிட்டுவிட்டு அரைமணி கழித்துத்தான், அதுவும் பஞ்சநதம் அதே சைக்களில் டப்டப்பென்று உள்ளே போன பிறகுதான் எழுந்து நான் ரிப்போர்ட் செய்யப் போனேன்.” 

சற்றுத் தயங்கினார் இன்ஸ்பெக்டர் ஃப்ரான்சிஸ். “அங்கே ஒரே அமளிதுமளியாக இருந்தது. ஒரு கோணிப் பையில் ஒரு சிறு பையனுடைய தலைமட்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருந்தது. மேலே சொல்லும்” என்று ஃப்ரான்ஸிஸ்ஸைத் தூண்டினேன். 

“ஆமாம். பஞ்சநதம் நான் உள்ளே வந்ததும், யாரோ மந்திரவாதி மாதிரி, அந்த ரத்தக்கறை படிந்து இருந்த தலையைச் சற்றும் அசங்கியம் இன்றிக் கையில் எடுத்து எனக்குக் காட்டினான். சுருள் சுருளாகக் கிராப்பு. பையனுக்கு வயது பதினாலுதான் இருக்கும். ‘நீ தியாகராஜத் திப்பிலியாருடைய மகனை, நாக ராஜுவைப் பார்த்திருக்கிறாயில்லையா ஃபிரான்சிஸ்? அவன் தலைதானே இது?’ என்று கேட்டான். தயங்காமல் ‘ஆமாம்’ என்று பதில் அளித்துவிட்டேன் நான். நான் அந்தப் பையனைப் பார்த்ததேயில்லை. ஆனால் பஞ்சநதம் அந்த மாதிரிக் காரணம் இல்லாமல் கேட்கமாட்டார் என்று எண்ணினேன். அது திப்பிலியார் மகன்தான். அவன் தலையைச் சீவி அப்படிக் கோணிப் பையில் போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வரதராஜனும் ராஜவேலும் அனுப்பப் போகிறார்கள், அதற்காக ஆக வேண்டிய காரியங்களை யெல்லாம் பார்ப்பதற்காக இன்ஸ்பெக்டர் பஞ்சநதத்துக்கு ஆயிரக்கணக்கில் ஸம்திங் தந்திருக்கிறார்கள் திப்பிலியாரின் எதிரிகள் என்பதெல்லாம் எனக்குப் பின்னர்தான் தெரிந்தது. எதிரிகள் பணம் தரவேதான் திப்பிலியாரும் எனக்குப் பணம் தந்திருப்பார் என்று கெட்டிக்காரத் தனமாக யூகித்துக்கொண்டு கொடுத்ததைக் கேட்பவர் மாதிரி அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார். இரு தரப்பினருடைய பணமும் அவரிடம் போய்ச் சேர்ந்துவிட்டது. நான்தான் மத்தியில் ஏமாந்து நின்றேன்….’ 

“அந்தத் திப்பிலியாருடைய மகனுடைய தலைதானே?” என்றேன் நான். 

உடனடியாக ஃபிரான்சிஸ் பதில் தரவில்லை. சற்று நேரம் கழித்துச் சொன்னார். 

அத்தியாயம்-12 

“இன்ஸ்பெக்டர் பஞ்சநதத்தைப் பற்றி உங்களுக்குச் சரிவரத் தெரியாது என்று நினைக்கிறேன்” என்றார் ஃபிரான்சிஸ். “இல்லாவிட்டால் இப்படிக் கேட்க மாட்டீங்க. பஞ்சநதத்துக்கு உண்மையாக ஏதோ விஷயம் தெரியவேதான் அதைப்பற்றிப் பகிரங்க மாகப் பேசினார். தெரிந்தேதான் சொன்னார். நானும் அது நாகராஜாவின் தலைதான் என்று பெரியதுரை சின்ன துரை எல்லோருக்கும் எதிரிலே சத்தியம் செய்திட்டேன். உடனேயே மூணு ஜீப் வண்டிகளிலே துப்பாக்கி, துரைகள் சகிதம் போலீஸ் திப்பிலி புரத்துக்குக் கிளம்பிவிட்டது. நாங்க போய்ச் சேர்ந்த சமயம் அஸ்தமிக்கிற சமயம். திப்பிலியார் ஊரிலே தான் இருந்தார். பெரிய துரை மட்டும் தான் முதல் ஜீப்பில் அவர் வீட்டுமுன் போய் இறங்கினார். நானும் உடன் போனேன் அவருக்கு உதவ. மற்ற ஜீப்களும் மற்றப் போலீஸ் காரங்களும் கண் மறை வாக நின்று கொண்டிருந்தனர். திப்பிலியாருடைய மகனுடைய தலை, கோணிப் பையில் போட்டுக் கட்டி எங்கள் ஜீப்பில் கண் மறைவாக இருந்தது. பெரிய துரை பொதுவாகத் திப்பிலியாரை யோக ஷேமம் விசாரித்தார். பின்னர் திப்பிலியாருடைய மகனைப் பற்றி விசாரித்தவுடனேயே, தியாகராஜ திப்பிலியார் குலுங்கக் குலுங்க அழ ஆரம்பித்தார். ‘அநியாயமாக வைசூரி போட்டு அவன் இன்று காலையிலே தான் இறந்தானுங்க பதினைந்து வயசுப் புள்ளைங்க நல்லாப் படிச்சிட்டிருந்தான். இப்பத்தான் நெருப்புப் போட்டுப்புட்டு வந்தோமுங்க’ என்று திப்பிலியார் அழ அழ, சம்பந்தம்தான் தகவலைச் சொன்னான். ‘பெரியம்மை போட்டியா இறந்தான்?’ என்று கேட்டுக் கொண்டே பெரிய துரை இதற்குள் அங்குவந்து சேர்ந்துவிட்ட பஞ்சநதத்தைக் கூப்பிட்டு அந்தக் கோணிப் பையை எடுத்து வரச் சொன்னார். திடுதிப் பென்று பையன் தலையைக் கண்டால் திப்பிலியார் என்ன செய்வாரோ, என்ன சொல்வாரோ என்று எனக்குப் பயமாக இருந்தது. ஆனால் அந்தத் தலையைக் கண்டதும் திப்பிலியார் அழுகையை நிறுத்தி விட்டு இது என்னாங்க யாரையோ கொன்னு தலையை வெட்டி என்ன விளையாட்டுங்க இது?’ என்றார். ‘இது உங்க பிள்ளை நாகராஜாவின் தலைதானே!’ என்று கேட்டார் சின்னதுரை. ‘என் பிள்ளை தலையை வெட்ட யார் துணிவான்? என் நாகராஜா பெரியம்மை போட்டிப் பத்து நாளாகப் படுத்திருந்துவிட்டு இன்று காலையில் இறந்துவிட்டான். மாலையில் இரண்டு மணிக்குத் தான் சுடலையில் கொளுத்திவிட்டு வரோம். இதெல்லாம் விளையாடற விஷயமல்லீங்க. போங்கய்யா’ என்றார் திப்பிலியார். இரவு நாங்கள் அங்கேதான் காம்ப். எல்லோரும் ஒரு மூச்சாக அன்று எரிக்கப்பட்ட நாகராஜா தலையுடன் எரிக்கப்பட்டான் என்றுதான் சொன்னார்கள். நாங்கள் ரகசியத்தில் விசாரித்தோம் பகிரங்கமாக விசாரித்தோம் வேறு பேச்சே யாரிடமிருந்தும் வரவில்லை. மறுநாள் காலையில் பாலூற்றப் போனவர்களுடன் இரண்டு துரைகளும் இன்ஸ்பெக்டர்களும் போனார்கள். தலையும் எலும்புகளும் சுடப்பட்டு இருக்கத்தான் இருந்தன. பஞ்சநதம் தான் என்ன சொல்வது என்றறியாமல் திணறினார். பெரிய துரையும் சின்னதுரையும் அவரும் கூடிக் கூடிப் பேசினார்கள். பின்னர் தலையைப் பழையபடி கோணிப் பையில் போட்டுக் கட்டிக்கொண்டு ஜீப் ஊர்வலம் நகரத்தை நோக்கிக் கிளம்பியது. ரிகார்டில் அது தியாகராஜ திப்பிலியாருடைய மகன் நாக ராஜாவின் தலைதான் என்பதை மறுத்து மறுநாள் அது யாரோ தெரியாதவருடைய தலை என்று எழுதிவிட்டு, அதற்கான முண்டம் எங்காவது கிடைக்கிறதா என்று போலீஸ் இலாகா மூலம் தேடினோம், தேடினோம். எதுவும் தகவலே கிடைக்கவில்லை. என்ன நடந்தது என்று பின்னர்தான் நாங்கள் ஊகிக்க முடிந்தது.” 

“என்ன நடந்தது? பின்னர் ஊகித்ததை இப்பவே சொல்லி விடுங்கள் எனக்கு” என்றேன். 

“சம்பந்தத்துக்குப் பூரா விவரமும் தெரியும். அவன் சொல்லட்டும்” என்றார் ஃபிரான்சிஸ். 

“நானா?” என்று தயங்கிய சம்பந்தம் “சொல்லுகிறேன்” என்று சொன்னான். 

“தியாகராஜத் திப்பிலியாருடைய வண்டி ஜோரான டயர் போட்ட ரெட்டை மாட்டுவண்டி பன்னிரண்டு மைல் தூரத் திலுள்ள ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கிளம்பிய போதே அவருடைய எதிரிகள் அவரைத் தீர்த்துக் கட்டிவிடுவது என்று தீர்மானித்துவிட்டார்கள். தியாகராஜ திப்பிலியார் பட்டணம் போயிருந்தார் காரிலே அது யாருக்குந் தெரியாது பரமரகசியம். வண்டி அவரை அழைத்து வரத்தான் போகிறது என்று ராஜ வேலுவும் வரதராஜனும் தீர்மானித்துக் கொண்டு முப்பது ஆட்களுடன் இலுப்பத் தோப்பிலே வண்டியை மறித்துத் திப்பிலியாரைத் தீர்த்துவிடுவது என்று காத்திருந்தனர். இருட்டுற சமயத்திலே வண்டி இலுப்பத் தோப்பை அடைந்தது. அதில் யார் இருந்தது என்று கவனியாமலே அதைக் கத்தி வேல் கோடாலி முதலிய ஆயுதங்களுடன் ராஜவேலுவினுடைய ஆட்கள் சூழ்ந்து கொண்டுவிட்டனர். வண்டியிலே தியாகராஜ திப்பிலியாருடைய பதினைந்து வயதுமகன்தான் இருந்தான். வண்டிக்காரன் முதல் அடியிலேயே செத்தேன் பிழைத்தேன் என்று ஓடிவிட்டான். பையன் அடிபட்டு மூர்ச்சையாகி விழும்வரையில் யாரும் கவனிக்க வில்லை. அதற்குள் அடிமேல் அடிவிழுந்து நூற்றெட்டுக் காயங் களுடன் அவன் செத்துப் போய்விட்டான். அப்போது ராஜ வேலுவுக்கு ஒரு யுக்தி தோன்றிற்று. தலையை மட்டும் வெட்டி எடுத்துப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிவிடுவது, முண்டத்தை வண்டியிலே போட்டு மாடுகளை ஓட்டிவிட்டால், அவை தாமாகவே திப்பிலியாபுரம் போய்ச் சேர்ந்துவிடும் என்று யோசித்து அதன் படியே செய்தார்கள். நல்ல வேலையாகத் தியாகராஜத் திப்பிலியார் அந்த மாட்டு வண்டியைத் தாண்டிக் காரில் வந்தார். விஷயம் அறிந்துகொண்டு பதறாமல் ஏற்பாடுகள் செய்தார். வைசூரி போட்டியதாகப் பையன்பற்றி ஒரு பத்து நாட்களுக்கு முன் டவுனில் எழுதிவைத்த ஒரு ரிப்போர்ட் நினைவுக்கு வரவே, அதையே உண்மையாக்கிவிட்டார் திப்பிலியார். பொய்யும் மெய்யும் நாமாக உண்டாக்குவது தானே!” 

“பேஷ்! வழக்கத்துக்கு விரோதமாக இலக்கண சுத்தமாக வேறு பேசிவிட்டாயே சம்பந்தம்” என்றேன் நான். 

“கோர்ட்டிலே நம்ம சம்பந்தம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் எங்க வக்கீல் திணறியதை நீங்க பார்த்திருக்கணுமே” என்றார் ஃபிரான்சிஸ். “இப்பத்தான் பாருங் களேன். கச்சிதமாகக் கதையை முடித்துவிட்டான். அங்கு சுடு காட்டில் எரிந்த தலை யாருடையது! எப்படிக் கிடைத்தது திப்பிலி யாருக்கு என்று சொன்னானா பாருங்கள்.’ 

“அது எப்படிக் கிடைத்ததோ? எனக்கு எப்படிங்க தெரியும்? திப்பிலியாரு மகா சூரருங்க” என்றான் சம்பந்தம். 

“இரவோடு இரவாக அந்த வரதராஜனின் பதினைந்து வயது மகனுடைய தலையை வெட்டிக் கொணர்ந்தது சம்பந்தமேதான்” என்றார் இன்ஸ்பெக்டர். 

“அந்த வரதராஜனுக்கு ஒரு பிள்ளை இருக்கு என்கிற சமாசாரமே இப்ப நீங்க சொல்லத்தானுங்க எனக்கே தெரியும்” என்றான் சம்பந்தம். 

“அந்த முண்டம் என்ன ஆச்சுது? அந்த முண்டத்தையும் இந்தத் தலையையும் வைத்து வரதராஜனைத் தேடிப் போனார்களோ போலீஸ்காரர்கள் பெரிய துரையும் சின்ன துரையும்?” என்று கேட்டேன் நான். 

“அப்படித்தான் நடந்திருக்கவேண்டும். ஆனால் பஞ்சநதம் விழிப்பான ஆசாமி. இப்படிப் போலீஸ் காரங்களும் துரைகளும் அவுங்களைத் தேடிக்கிட்டுப் போறது கௌரதைக் குறைவு என்று, வரதராஜன், தியாகராஜ திப்பிலியார் இரண்டு பேரையுமே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொணர்ந்து தனித்தனியாகவும் சேர்த்து வைத்தும் விசாரிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் அதிலும் பலன் ஒன்றும் காணவில்லை.”

“பலனில்லாமே என்னங்க? அவுங்க ரெண்டு பேருமே போலீஸ் காவலிலே இருக்கச்சே ராஜவேலுவை யாரோ துப்பாக்கியால் கொன்னுப்புட்டாங்க என்றான் சம்பந்தம். 

“யாரோ என்ன?” என்றார் ஃபிரான்சிஸ். 

“ருஜு இல்லை என்று கோர்டே சொல்லி விட்டதே!” என்றான் சம்பந்தம். 

“அது சரி. ஆனாலும் சம்பந்தம் துப்பாக்கியை எடுத்து ராஜவேலுவைச் சுடுவதை நேரில் பார்த்து விட்டு வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டவங்க நாலுபேர் உண்டு….” என்றார் ஃபிரான்சிஸ். 

“நாலுபேர் ஏதுங்க? அந்த ரிடையர்டு போஸ்டு மாஸ்டர் ஐயா ஒத்தர்தான்…. அவரை நானே பாத்துக் கேட்டேன். ‘நீ என்னைப் பாத்தயா’ன்னு. ‘யாரு? உன்னையா? உன்னை நான் பார்த்ததேயில்லையே!’ என்றார் அவரு.” 

“நாலுபேரையுமே பார்த்திருப்பான் சம்பந்தம்” என்றார் ஃபிரான்சிஸ். 

“அவுங்க எதையோ பார்த்ததாக சற்று முன் சொன்னீங்க. இப்போ அதை அப்படியே மாத்தீட்டிகளே! என்றான் சம்பந்தம்.” 

“அது போகட்டும். ராஜவேலு இறந்ததைப் பற்றி வரதராஜனையோ, திப்பிலியாரையோ சந்தேகிக்க முடியாமல் இறந்தது என்பது போலீஸ்காரர் மேல் பிசகு தான். எதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகிறார்கள் என்பது இன்னமும் போலீஸ்காரர்களுக்கு விளங்காத ரகசியமாக இருந்தது. விஷயத்தைப் புரிந்து கொள்ள வெகுவாக முயற்சி செய்து பார்த்தோம். பயத்தாலும் நயத்தாலும் வரதராஜனையும் திப்பிலியாரையும் விரட்டிப் பார்த்தோம். ஒன்றும் விஷயம் வெளிவரவில்லை. இருவருமே எதிலோ கூட்டாளிகளாக இருந்து பின்னர் அதிலே ஏதோ தகராறு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மட்டுமே எங்களால் ஊஹிக்க முடிந்தது. மற்ற படி அவர்கள் மேல் எவ்வித சந்தேகமும் உள்ளதாக ருஜுபிக்கப் பட வில்லை என்று விட்டுவிட வேண்டியதாக இருந்தது. விட்டு விட்டோம்….’ 

“இடையில் தலையில்லாத முண்டம் எதுவும் கிடைக்க வில்லையோ!” என்று கெட்டேன். 

“போலீஸ்காரங்களுடைய நினைப்பிலே தவிர வேறு உண்மையில் அப்படி ஒன்றுமே இருந்திருக்க முடியாதுங்களே!” என்றான் சம்பந்தம். 

“சற்று முன் பேசியதை நீயே அழித்துவிடப் பார்க்கறயே!” என்றேன். 

“பணம் கொடுத்தால் இதைவிடப் பெரிய விஷயங்களையும் கூட அழித்துவிட முடியும்ங்க.” 

““வரதராஜன் பிள்ளை அவனுக்கும் வயது பதினாலு பதினைந்துதான் இருக்கும் காணாமல் போய்விட்டான். குறிப் பிட்ட சம்பவத்துக்கு மறு நாளிலிருந்தே காணாது போய்விட்டான் என்பது எனக்கும் போலீஸ் இலாகாவில் மற்றவருக்கும் ஒரு அநாமதேயக் கடிதம் மூலம் தான் தெரிய வந்தது” என்றார் ஃபிரான்சிஸ். 

“அந்த அநாமதேயக் கடிதத்தை எழுதி வாங்கித் தபாலில் நான் சேர்க்கப்பட்டபாடு….” என்று சொல்ல ஆரம்பித்த சம்பந்தம் சட்டென்று பல்லைக் கடித்துக் கொண்டு, அசட்டுத்தனமாக ஏதோ சொல்லிவிட்டோமே என்று மௌனமானான். 

அத்தியாயம்-13 

பழிக்குப்பழி வாங்கிவிட்டார் திப்பிலியார். தன் மகனைக் கொன்று தலையைக் கொய்து போலீஸுக்கு அனுப்பியவனின் பிள்ளையைக் கொன்று பழியைத் தீர்த்துக் கொண்டார் என்பது அந்த அநாமதேயக் கடிதம் மூலமே போலீஸுக்குத் தெரிய வந்தது. தியாகராஜத் திப்பிலியாருக்குச் செயல் மட்டும் திருப்தி தரவில்லை. அச்செயலால் தனக்குக் கிடைக்க வேண்டிய புகழும் கிடைத்துவிட வேண்டும் என்கிற ஆசையிருந்தது. அவரேதான் அந்த அநாமதேயக் கடிதத்தை எழுதச் சொல்லி அனுப்பி வைத்திருக் கிறார் என்பதைக் கண்டு கொள்ள எங்களுக்கு அதிக நேரமாகவில்லை. யார் எழுதியது எப்படி வந்தது என்பதையும் கண்டு கொண்டோம். அந்த அருணாசல அய்யனை விசாரிக்கப் போலீஸ் கிளம்பிய போது அவன் ஊரை விட்டே போய்விட்டான் என்றும், எங்கிருக்கிறான் என்பது தெரியவில்லை என்றும் தகவல் கிடைத்தது. எட்டு நாட்களுக்குப் பிறகு அவன் உடல் காளிகோயில் குட்டையிலே அழுகி மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது. ராஜவேலுவை அதுபற்றிச் சந்தேகிக்க இடம் இருந்தது என்பதும், மேலும் தியாகராஜ திப்பிலியார்தான் இந்தக் கொலைக்கும் காரணகர்த்தா என்று போலீஸுக்கு அறிவிக்க எவ்வளவோ முயன்றும் எங்களால் அவரை அதில் சம்பந்தப்படுத்த முடிய வில்லை” என்றார் ஃபிரான்சிஸ். 

“சம்பந்தமிருந்தால் சம்பந்தப்படுத்தியிருக்க முடியும். சம்பந்தம் இல்லையே” என்றான் சம்பந்தம். 

“யார் செய்த கொலை அது? இப்பத்தான் சொல்லேன்” என்றார் இன்ஸ்பெக்டர். 

“ராஜவேலுவேதான் திப்பிலியார் மேல் சந்தேகம் வரட்டும் என்பதற்காக….” 

“தன் சிறு மகனையே கொன்றிருப்பான் என்கிறாயா!” 

“அந்தப் பையன் தினமும் காளி கோயிலில் இரண்டு சகாக்களுடன் போய் நீந்தி விளையாடிக் குளித்துவிட்டு வருவான்…. ” என்று தொடங்கிய சம்பந்தத்தை மேலே சொல்ல வொட்டாமல் மறித்தார் ஃபிரான்ஸிஸ். 

“அந்தப் பையனுடைய பழக்க வழக்கங்களை நீயே கவனித்து….” 

“பாத்தீங்களா? பாத்தீங்களா? என்னையே மடக்கரீங்களே! எனக்கும் அந்த ராஜவேலுவுக்கும்….” 

“எத்தனை நாளா விரோதம், ஏன் விரோதம் என்றெல்லாம் எனக்கும் தெரியாது” என்றார் ஃபிரான்ஸிஸ். 

“முழுக் கதையும் அந்தப் பாடாவதி அய்யருக்குத் தான் தெரியும். அவர் வாயை இருபதினாயிரம் ரூபாய் மூடிடிச்சு” என்றான் சம்பந்தம். 

“இருபதினாயிரம் தானா? அறுபது ஆயிரம் என்று நான் கேள்விப்பட்டேன்.” 

“திப்பிலியார் தரப்பு வரவு இருபதினாயிரம். எதிரிங்க எத்தனை யார் யாருக்குத் தந்தாங்களோ எனக்குத் தெரியாது. அவங்க துரைமகனுக்குங் கூடத் தந்தாங்கன்னு கேள்வி. திப்பிலியார் துரைக்கோ துரைமகனுக்கோ எதுவும் தரமாட்டேன்னுட்டாங்க. திப்பிலியார் நல்ல தேசபக்தருங்க” என்றான் சம்பந்தம். 

“பேஷ்! தேசபக்திக்கு நல்ல உதாரணம் தான்” என்றேன், “ஆனால் கதை தேங்கிவிட்டதே. மேலே சொல்லுங்க” என்று அவர்களைத் தூண்டிவிட்டேன். 

“மேலே சொல்லுவதைவிட பின் நோக்கிச் சென்று எந்தக் காரணத்தினால் எது நடந்தது என்று கண்டுபிடிக்கத்தான் போலீஸ் காரர்கள் வெகுவாகப் பாடுபட்டனர். நடக்கவில்லை” என்றார் ஃபிரான்சிஸ். 

“எப்படி அய்யா நடக்கும்? ஏதோ ஓரளவு சம்பந்தப் பட்டிருந்த எனக்கு எது காரணமாக எது நடந்தது என்று தெரியாதே எல்லாம் நடந்த பிறகு வந்தவங்களுக்கு என்ன தெரியும்?” என்றான் சம்பந்தம். 

இந்தப் புதிரை விடுவிக்க எனக்கு ஒரே ஒருவழி தான் தோன்றியது. “முதலில் சம்பந்தம் தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லட்டும். பிறகு நீங்கள் தெரிந்து கொண்டது, ருஜுப் பித்தது, ருஜுபிக்க முயன்றது, ருஜுப்பிக்க முடியாமலே அனு மானித்தது எல்லாவற்றையும் சொல்லுங்கள் இன்ஸ்பெக்டர் ஸார்” என்றேன் நான். 

“தெரிந்தது எல்லாவற்றையும் சொல்லு என்று நம்ப நண்பர் சம்பந்தத்துக்கிட்டே சொல்றேனே சொல்லி விடுவானா முழுவதும்?” என்றார் ஃபிரான்சிஸ். 

“அதுவும் ஆயிரக் கணக்கில் பணம் வாங்கியும் திருப்தி காணாத போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு….?” என்று நான் சொல்ல நினைத்ததை சம்பந்தமே சொல்லிவிட்டான். 

அத்தியாயம்-14 

இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸிஸ்ஸின் முகம் இருண்டது என்று கவனித்தேன். அவருக்குப் பிரமாதமாகக் கோபம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று எனக்குப் பயம்தான். அதை எப்படியாவது போகட்டும் என்று எனது இலக்கியாசிரியத் தனத்தை மறந்து விட்டு நான் எதிலும் படாதவனாக எழுந்து போய் விடலாம்தான். அந்தத் தைரியத்தில்தான் நான் அவர்கள் இருவரையுமே தூண்டிவிட்டுக் கொண்டிருந் தேன் என்று சொல்ல வேண்டும். லாபமோ நஷ்டமோ அவர்களுக்குத்தான். இருவரும் பழைய கேஸ்களில் சம்பந்தப்பட்டவர்கள் நான் மூன்றாவது ஆசாமி. தாமரையிலையில் தண்ணீர் போல இருந்துவிடலாம். 

ஃபிரான்ஸிஸ் அந்தச் சமயத்துக்குத் தன் கோபத்தை அடக்கிக் கொண்டார். தடித்த உதடுகளில் ஒரு புன்முறுவலைப் பரவ விட்டபடியே சொன்னார்: “நமது நண்பர் சம்பந்தம் சொல்வது சரிதான். கொலை காரனானாலும், கொள்ளைக்காரனானாலும் அவன் ஒரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன். தனது சகாக்களில் யாரையும் காட்டித்தர மாட்டான். சம்பந்தம் தானாக இதுவரை யார் எந்தக் காரியத்துக்குப் பொறுப்பு என்று வாய்திறந்து சொன்னதில்லையே! தனக்குத் தானே தீர்மானித்துக் கொள்ள முயன்றதுங் கூட இல்லையே!” 

“யார் எதற்குப் பொறுப்பு என்று எனக்கு எப்படிங்க தெரியும்? நான் உங்களையெல்லாம் போலப் படிச்சிக் கிட்டவனா? எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒண்ணுதான்….” 

“என்ன?” 

“என்னிடம் ஒரு காரியத்தை ஒப்படைச் சாங்கன்னா அதை நான் செய்து முடிப்பேன் என்று எதிர்பார்த்திருப்பாங்க. அதை நான் செய்து முடிக்காவிட்டால் அதனால் விளையும் விளைவு களுக்கு நான் பொறுப்பு. செய்து முடித்தாலோ…..” என்று தயங்கினான் சம்பந்தம். 

“முடித்தால்….” என்று தூண்டினேன் நான். 

“திப்பிலியார் போன்றவங்களுக்கு மேலே எதுவும் செய்ய வசதியாக இருக்கும்” என்று கேலி செய்கிற குரலில் சொன்னார் ஃபிரான்ஸிஸ். 

“திப்பிலியார் மட்டுமல்ல. நம்மை நம்பியிருப்பவர்கள் யாருடைய நம்பிக்கையும் வீணாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம்தான் முக்கியமாகத் தோன்றும். அதிலே சௌகரியமும் உண்டு; லாபமும் உண்டு. முக்கியமாகக் கூட உழைப்பவங்களுடைய கேலிக்கோ, ஏளனத்துக்கோ உள்ளாகா திருக்க வேணுமே என்கிற பரபரப்பும் உண்டு” என்றான் சம்பந்தம். 

“நன்றாகவே சொல்லிவிட்டாய்” என்று பாராட்டினேன் நான். 

ஃபிரான்ஸிஸின் கிண்டலுக்கு மாறாக என் பாராட்டு அமைந்திருந்தது கண்டு சம்பந்தம் என்னை நன்றியுடனே பார்த்தார். “பணம் வாங்குகிற போலீஸ்காரனைவிடக் கொலை 

காரனும் கொள்ளைக்காரனும் மேலானவன்தான்” என்று நைஸாகச் சொல்லிவைத்தேன் நான். அப்பட்டமாக அப்படிச் சொல்லி யிருக்கக் கூடாதுதான் நான். ஃபிரான்ஸிஸ்சுக்குக் கோபம் வந்தால் அது நியாயமானதுதான். ஆனால் இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸிஸ் மகா யோக்கியர் போல வாக்கியத்துக்கொரு முறை சம்பந்தத்தைக் கிண்டல் செய்கிற மாதிரி பேசியது எனக்கும் பிடிக்கவில்லை. 

“அது உண்மைதான்” என்றார் ஃபிரான்ஸிஸ். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பிரிட்டிஷ் சர்க்காரின் தூண்களில் ஒன்றாக எங்கள் சிறுநகரில் பணியாற்றிய போலீஸ்காரனுக்கும் தன்மான உணர்ச்சி இருக்கும் என்பது நான் எதிர்பாராத ஒரு விஷயம்தான். ‘பிரணதார்த்தி இருந்தாரே அவர் ஒரு முப்பத்தி நாலு வருஷ சர்விஸைப் போலீஸிலே செய்துவிட்டு நல்ல பெயருடன்தான் ரிடையர் ஆனார். அவர் விலகும்போது பார்ட்டி எல்லாம் வைத்துத் தடபுடல் பண்ணி, அவர் எப்படிப்பட்ட ஆபீஸர் என்றுதானே அரைமணிநேரம் பேசினேன் நான். ஆனால் அவரையும் விட மோசமான கொலைகாரனை என்னுடைய இருபத்தியெட்டு வருஷ சர்விஸிலே நான் இன்னமும் பார்த்த தில்லை. எதற்கும் அஞ்சாத புரட்டர் அவர்; ஏமாற்று வித்தையிலே கைகாரர். இரண்டு தரப்பிலும் பணம் வாங்கிவிடுவார்; இரு வருக்கும் சலுகை காட்டாமல் தன் ட்யூடியைச் செய்துவிட்டு இலாகாவில் நல்ல பெயரும் வாங்கி விடுவார்.” 

கடைசியில் ஃபிரான்ஸிஸ் சொன்னதைச் செய்பவராக இருந்தால் அந்தப் பாடாவதி அய்யர் மேல் தவறு என்ன என்று எனக்குப் புரியவில்லை. ஏதோ போலீஸ் ஹாஸ்யம் இது என்று எண்ணி “ஹா! ஹா!” என்று இரண்டு தரம் சிரித்துவிட்டு, கதையை விசாரிப்பதில் கவனம் செலுத்தினேன். 

“திருவாலூர்க் கமலம் என்று சொன்னாயே அவளுக்கும் இந்தத் திப்பிலியார் விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்? நீ முதல் தடவையாகத் திப்பிலியாரை எப்படிச் சந்தித்தாய்? அவரிடம் உனக்கு அவர் சொல்லை மீறாத பக்தி எப்படி ஏற்பட்டது என்றெல்லாம் விவரமாகவே சொல்லேன். எனக்கும் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு ஒன்றும் வேலையில்லை. அவசரமாக ஒரு கதை எழுதியாக வேண்டும் – அதற்கு உன் விஷயம் பயன்படுமா பார்க்கிறேன்” என்றேன். 

அத்தியாயம்-15 

“ஹி! ஹி! நான் எப்பவுமே யாருக்கும் உதவி செய்யத் தயாராகத்தான் இருந்து வந்திருக்கேன். என் கதை உங்களுக்கு உபயோகப்பட்டால் எனக்கு மிகவும் திருப்திதாங்க. உதவா விட்டாலும் இரண்டு மணி நேரம் போது போக்கவாவது நான் உபயோகப் பட்டால் அதுவும் சிறு உபயோகம் தானே. எல்லாம் விவரமாகச் சொல்லிடறேன்” என்று தொடங்கிய சம்பந்தம் இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸிஸைப் பார்த்த படியே சற்றுத் தயங்கினான். 

“இப்பொழுது நீ சொல்வது எதையும் அவர் எந்த விதத்திலும் உபயோகப்படுத்த மாட்டார். அதற்கு நான் உத்தரவாதம்” என்றேன். 

“நிச்சயமாக உபயோகப்படுத்த மாட்டேன். எனக்குப் பல விஷயங்கள் தெளிவானால் தேவலைதான்” என்றார் இன்ஸ்பெக்டர். 

“என்னை நீங்க முழுசா நம்பலாம். இந்தப் போலீஸ் காரங்களைத்தான் நம்பப்படாது. அது என் அனுபவம்” என்றான் சம்பந்தம். 

“அதை அவரேதான் ஏத்துக்கிட்டாரே. நீ சொல்லு. ஒருதரம் உன்னை விசாரித்து ருஜு இல்லை என்று விட்டுவிட்டார்கள். மறுபடியும் பிடித்து….” 

“அதிலே சம்பந்தப்பட்டவங்க யார் இருக்கிறானுவ, மறுபடியும் எதையாவது கிளற? எல்லாரும் தீர்ந்து விட்டானுவ” என்றான் சம்பந்தம். பிறகு தொடர்ந்தான். 

“விஜயபுரம் நாகப்பட்டினம் ரோட்டிலே நானும் ராஜவேலுவும் பக்கத்துப் பக்கத்து வீட்டிலே இருந்தோமுங்க. நான் சொல்றது நாற்பது வருசத்துச் செய்தீங்க. அந்தத் திருவாலூர்க் கமலம் பிறந்து வளர்ந்து பெரிசானது எல்லாமே எனக்குத் தெரியுமுங்க….” 

“அது யாரது திருவாலூர்க் கமலம்?” என்று தன் ஆவலை அடக்கமாட்டாமலே கேட்டார் இன்ஸ்பெக்டர். 

“தானே தெரியுமுங்க” என்றான் சம்பந்தம் அலக்ஷியமாக. “வார் டயத்திலே திருவாலூர் பஜாருக்குக்கூட புதுச்சேரிச் சரக்குகள் சப்ளை செய்கிற சாக்கிலே தியாகராஜத் திப்பிலியார் வருவாருங்க. அப்படி வந்து போற ஒரு சமயத்திலே அவருக்கு என்னாலே ஒரு உதவிசெய்ய முடிஞ்சிச்சு.’ 

“என்ன உதவியது?” என்றேன். 

“சொல்லணுமின்னா சொல்றேனுங்க. கையிலே சரக்கோட மது மட்டுமில்லே, தங்கம், கடிகாரங்கள் எல்லாமும் இருந்தன தியாகராஜ திப்பிலியார் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கிட்ட மாட்டிக் கினு அவஸ்தைப் பட இருந்தாரு. அந்தச் சமயத்திலே நாஜூக்கா அவருடைய கைப்பெட்டிகள் இரண்டையும் நான் அப்புறப் படுத்திப்பிட்டேன். தப்பிச்சுக்கிட்டாரு. இல்லாட்டி அந்தச் சமயம் கைவிலங்கு கால்விலங்கோடே அவரு மாமனார் வீடு போயிருப்பாரு. அந்த நன்றி விசுவாசம் தான் அவருக்கு என்கிட்டே…” 

“அவருக்கு நீ உதவினது சரிதான். அதுக்காக அவர் உன் கிட்டே நம்பிக்கையோ விசுவாசமோ வைத்திருந்ததுதான் பெரிய விசேஷமாக எனக்குப்படுகிறது. அவர் பிற்காலத்தில் உன்னைத் தனது வலது கையாக…” 

“வலது… கையோ இடது கையோ என்னால் அவருக்கு இன்னொரு விசுவாசமும் ஏற்பட்டது. தன் பெட்டிகளை எடுத்துப் போக என் வீட்டுக்கு வண்டி கொண்டு வந்தவரு கண்ணிலே பக்கத்து வீட்டு ராஜவேலுவின், நான் சொன்ன திருவாலூர்க் கமலம் பட்டுவிட்டாள். 

“பெண்ணால் ஏற்படுகிற பாசம் பெரிய பாசம் தான்” என்றேன் நான். 

“திருவாலூர்க் கமலம் எப்படியிருப்பான்னு அய்யா கிட்ட இப்பத்தான் சொன்னேன். லட்டுன்னா லட்டு மாதிரிதான் இருப்பாள். அதுவும் அப்போ தியாகராஜத் திப்பிலியாரு அவளை முதல் தடவையாகப் பார்க்கறப்போ அவளுக்குப் பதினாறு இருக்கும். மேஜராகி இரண்டு வருசம் ஆயிருக்குமுங்க. அடாடா! போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயா அவளைப் பாத்திருக்காரு….” 

“யாரை? திருவாரூர்க் கமலத்தையா? எனக்குத் தெரிய வில்லையே!” என்றார் ஃபிரான்ஸிஸ். 

“ஆமாம், அந்தப் பய நாகராஜனுடைய அம்மா அவங்க தான்.” 

“அடெடே! அந்தப் பொம்பளையா? முப்பது வயசிலேயே தலை நரைத்து, கண் பஞ்சடைந்து, கிழமாகி விட்ட அந்தப் பெண் பிள்ளையா? நீ சொன்ன மட்டும்….” 

“அதெல்லாம் ஒரு நாலைந்து வருஷங்களிலே விளைந்த வினைங்க. புருசனுக்கும் அவளுக்கும் விரோதம் மூண்டபின், பிள்ளையே பணயமாகிப் பிணமாகிற நிலையிலே, அந்த அம்மாளுக்கு நாலு வருஷத்திலே நாற்பது வருஷம் வயதான மாதிரி ஆயிப்பிடுச்சு….” 

“எனக்கே அந்த நாலு வருஷத்திலே நாற்பது வயது ஆன மாதிரியாயிருந்தது” என்று ஏற்றுக் கொண்டார் ஃபிரான்ஸிஸ். 

அத்தியாயம்-16 

சம்பந்தம் தன் கதையைத் தொடர்ந்தான்: “என் வீட்டுக்குத் தன் சாமன்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு போக வந்த திப்பிலியார் எனக்கு இரண்டு நூறு ரூபாய் நோட்டை எடுத்துத் தந்தாரு. அதோடு ஒரு புதுச்சேரிக் கைக் கடிகாரத்தையும் பத்து முழம் பட்டுப் பீஸ் ஒன்றையும் இனாமாகத் தந்தாரு. அவர் வெளியே கிளம்பிய நேரத்துக்கு அந்தப் பாவி மக அவள் வீட்டு வாசலிலே நின்னுக்கிட்டிருந்தாள்.” 

“அதிலேருந்துதான் உன் கதை தொடங்குதுன்னு தோணுது. சொல்லு.” என்றேன். 

“காதல், கீதல் என்றெல்லாம் சினிமாவிலே பாத்த தெல்லாம், இப்பப் பாக்கிறதெல்லாம் மெய்யாகத் தான் இருக்க வேணுமுங்கிற எண்ணம் எனக்கு அப்பத்தான் ஏற்பட்டது. திப்பிலியார் போலீஸ் காரனைப் பார்த்துவிட்ட பிரமிப்புடன் நின்றுவிட்டார்- நின்னுக்கிட்டே இருந்தார். எனக்குக் கவலையாப் போயிடுச்சு எங்கேயாவது யாராவது போலீஸ் காரன் பார்த்துவிடப் போறானென்று. அதுவும் கள்ளக் கடத்தல் சாமான் என் வீட்டிலிருந்து வெளியாகிறதே. அவரை உசுப்பி எழுப்பிக் கிளப்பி விட அரைமணி நேரம் பிடிச்சிது எனக்கு. அப்படியும் அவர் அன்று சாயங்காலமே வந்துட்டார்.” 

சம்பந்தத்துக்குக் கதை சரிவரச் சொல்ல வராது என்று நான் நினைத்தது பிசகு என்று எண்ணினேன். சுவாரசியம் தட்டக்கூடிய இடங்களிளெல்லாம் நிறுத்தி நிறுத்தி “உம்; மேலே என்ன நடந்தது?” என்று நாங்கள் கேக்கிற வண்ணமாகத்தான் அவன் கதையை நடத்தினான். “சாயங்காலம் வந்தவர் பக்கத்து வீட்டு லட்டைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டாராக்கும்?” என்றேன். 

“விசாரித்ததுடன் நிறுத்தவில்லை. அவளை எப்படி யாவது கடத்திக் கொண்டுபோய்க் கண்ணாலங் கட்டி விடவேண்டும் என்று அவசரப்பட்டார். திப்பிலியாரை நீங்க பார்த்திருக் கீங்களோ என்னவோ, இன்ஸ்பெக்டர் ஐயா பார்த்திருக்கிறார்.” 

“பார்த்திருக்கிறேன். நல்ல சிவப்பாக கட்டுமஸ்தான உடலுடன் பார்க்க ஆணழகனாகத்தான் இருப்பார். நடுத்தர வயதில் எனக்குத் தெரிந்த போதே இப்படின்னா, நீ சொல்ற டயத்திலே வாலிப முடுக்கிலே ஜோராகத்தான் இருந்திருப்பார்” என்றார் ஃபிரான்ஸிஸ். 

“அவருக்கு ஒரு கல்யாணம் ஆகியிருந்தது. பெண்டாட்டியைப் பிடிக்கவில்லை என்று அவள் ஊரிலேயே ஒதுக்கி வைத்திருந் தார். ஆகவே பிரும்மச்சாரி என்றுதான் மொத்தத்தில் சொல்ல வேண்டும். இந்த மாதிரிப் பொண்ணு கண்களில் படவேண்டும்னு தான் காத்திருந்தேன் என்றார். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். போலீஸ், கடத்தல், கள்ளக் கடத்தல் மாதிரியில்லை. அதுவும் அந்தப் பொண்ணுடைய தகப்பன் திருவாலூரிலேயே பெரிய ரௌடி என்று பெயர் பெற்றவன் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். கடைசியாக நான் சொன்ன விஷயம்தான் அவருக்கு மிகவும் சுவாரசியமான விஷயமாகப்பட்டது. அவன் எனக்கு உதவட்டும் நான் அவனுக்கு உதவுகிறேன் என்று சொல்லி ராஜவேலுவை அழைத்து வரச் சொல்லி என்னையே அனுப்பி விட்டு என் வீட்டிலேயே ஒரு கிழிந்த பாயைப் போட்டுக்கிட்டு உட்கார்ந்துவிட்டார். வேறு வழியில்லாமல் நானே போய் ராஜவேலுவை அழைத்து வந்தேன். அதுக்கப்புறம் அவங்களுக் கிடையே நடந்த பேச்செல்லாம் எனக்குப் பூராவும் தெரியாது. ஒரு இருபது நாளுக்குள்ளே ராஜவேலுவும் அவன் மகளும் அந்த லட்டு திருவாலூர்க் கமலமும் திப்பிலியாபுரத்திலே குடியேறி விட்டாங்க. ஏதோ ஒரு கோயில்லே சாமிக்கு முன்னாடிக் கண்ணாலங்கூட, மேளங் கொட்டி, அய்யர் மந்திரம் சொல்ல, கமலத்துக்குத் திப்பிலியார் தாலி கூடக் கட்டினார் என்றுதான் கேள்வி. நான் அதெல்லாம் நடந்தபோது விஜயபுரத்திலேதான் இருந்தேன். திப்பிலியாரை நான் மறுபடியும் நாலைந்து வருஷங் களுக்குப் பின்புதான் சந்தித்தேன். முன்னைக்கிப் போது அவர் பெரும் பணக்காரராகி யிருந்தார். அந்தச் சமயத்திலேதான் அவர் பட்டணத்துக்குப் போய் சினிமா சுந்தரி, மந்திரி குமாரியின் காரை விலைக்கு வாங்கி வந்தது. ராஜவேலுவின் உதவியுடன் அவர் பணக்காரரான கதையைப் பலர் பலவிதமாகச் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேனுங்க. கள்ள நோட் அடிச்சார் என்று பலர் சொன்னாங்க. புதுச்சேரி சரக்கு பிரமாத லாபம் தந்தது என்றாங்க. புதையல் கிடைத்தது என்றாங்க. பின்னால்தான் எனக்கு உண்மை தெரிய வந்தது.” 

“என்ன உண்மை அது?” காபியைச் சாப்பிடுங்க சம்பந்தம். சொல்றேன்” என்றான் 

அத்தியாயம்-17 

மூன்றாவது காப்பியும் வந்துவிட்டது. அதை நாங்கள் மூவரும் சிறிது சிறிதாக ருசி பார்த்துக் கொண்டேயிருக்கையில் சம்பந்தம் உண்மையைச் சொன்னான். 

“ராஜவேலுவும் தியாகராஜ திப்பிலியாரும் மிகவும் சௌஜன்யமாக நண்பர்களாக ஒரு பத்து வருஷங்கள் இருந்தார்கள். அந்தப் பத்து வருஷங்களில்தான் திப்பிலியாருக்கு ஏராளமான பணம் சேர்ந்தது. புதையல், கள்ள நோட்டு, கள்ள வியாபாரம் என்று என்ன காரணம் சொல்லியும் மாளாத பணம் அவருக்குச் சேர்ந்தது. அந்தப் பணத்தில் ராஜ வேலுவுக்கும் கொஞ்சம் பங்குண்டு. திப்பிலியார் எப்பவுமே காரணமானவர் தான் எல்லாம் சரியாக இருந்தவரையில்-அதற்குப் பிறகும் கூடச் சிலகாலம் அவர் தன்னை அண்டி வந்தவர்கள் எல்லோருக்குமே நிறைய நிறையக் கடன் கொடுத்தார். திருவாலூரில் இருந்த என்னை ராஜவேலுவும் திப்பிலியாரும் கூட்டுச் சேர்ந்த ஐந்தாவது வருஷம், திப்பிலி யாருக்கு திருவாலூர்க் கமலத்துக்கும் திருமணமாகி ஆறு வருஷம் கழித்து, திப்பிலி யாருடைய ஒரே மகனான நாகராஜா திருஅவதாரம் செய்து நாலு வருஷங்கள் ஆனபிறகு என்னை அழைத்து வந்தார்கள். அதற்கு முந்தி நடந்த விஷயங்கள் பற்றி நேரடியாக எனக்கு ஒன்றும் தெரியாது. திப்பிலியார் கொள்ளைப் பணக்காரரானது நான் அவருடன் வந்து சேருமுன்தான். கசாமுசா என்று திப்பிலியாரின் ஆட்களாகிய எங்களிடையே திப்பிலியாருக்குப் பணம் கிடைத்தது பற்றிப் பலவிதமாகப் பேச்சு உண்டு. பின்னர். இன்னும் ஐந்தாறு, ஏன் ஏழு வருஷங்களுக்குப் பிறகு ராஜவேலுவும் திப்பிலியாரும் சண்டையடித்துக் கொண்டு வெட்டுப்பழி குத்துப்பழியாக நின்ற போதுதான் விஷயம் எனக்குத் தெரிய வந்தது. திப்பிலியாரே சொன்னார். அவர் சுபாவம் அது மனம் விட்டு என்னிடம் சொன்னார். ராஜவேலுவின் ஸ்தானத்துக்கு, தன்னுடைய முதல் கூட்டாளியாக என்னை ஏற்றிவைத்துவிட்டு, எனக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும், அப்போதுதான் நான் அவரிடம் அந்தரங்கமாக இருப்பேன் என்று எண்ணி ஒளிவு மறை வில்லாமல் சொன்னார். நாடகம் போடுகிற மாதிரி அவர் என்னை ஒருநாள் இரவு, ரைஸ்மில் எல்லாம் அடைத்த பிறகு, தனியாக ரைஸ்மில் கட்டிடத்தைத் திறந்து, அழைத்துப்போய் இடம், பொருள் ஏவல் சொல்லுவார்களே அதையெல்லாம் விவரித்துச் சொன்னார்.” 

கதை சொல்வதில் சூடு பிறக்கப் பிறக்க சம்பந்தம் இலக்கண சுத்தமாகவே பேசத் தொடங்கி விட்டான் என்று ஆச்சரியத்துடன் கவனித்தேன். அவன் வேண்டுமென்றே படிக்காதவன் மாதிரிக் கொச்சை மொழி பேசி மனத்தில் உள்ளதை மறைக்க முயன்றிருக் கிறான் என்றும், கதை சூடு ஏறவே சுபாவமாக உள்ள ஒரு படிப்புத் தரம் வெளி வருகிறது என்றும் எண்ணினேன். அல்லது இலக்கணம் படிக்காத சில மேதைகள் சொல்வது போலக் கதையின் தரம் உயர உயர இலக்கணம் எல்லாம் சாதாரணமாகப் படிந்து விடும் என்பதுதான் உண்மையோ? இதைப்பற்றி அதிகம் சிந்திக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால் கதையில் மிகவும் சுவாரசியமான கட்டத்தை எட்டிக் கொண்டிருந்தான் சம்பந்தம் என்பது அவனுடைய பாணியிலேயே தெரிந்தது. மிகவும் கவனமாகக் கவனமாகக் கேட்டேன் படிப்பு, இலக்கணச் சுத்தம், இலக்கணச் சுத்தமின்மை இலக்கணச் சுத்தமின்மை என்பதெல்லாம் கதா சுவாரசியத்துக்கு முன் எம்மாத்திரம்? 

அத்தியாயம்-18 

“ராஜவேலுவுடன் அவன் கட்சியிலே சேர்ந்து கொண்டு திப்பிலியாரைக் கைவிட்டு விட்டுப் போயிருக்க வேண்டியவன்தான் நான். என்னை அங்கு திப்பிலியாரிடம் கொணர்ந்து சேர்த்ததே அவன்தான். ராஜவேலு ஏதோ காரணமாக சண்டை நடந்த போது என்ன காரணம் அது என்று எனக்கே தெரியாது திப்பிலியாருடன் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்த போது என்னையும் அவன் கூப்பிட்டிருந் தானானால் நான் உடனேயே மறு பேச்சுப் பேசாமல் சென்றிருப்பேன். திப்பிலியாரிடம் எனக்குப் பாசமோ ஆசையோ விழவில்லை. அவர் வீட்டு வேலையாளாக மட்டுமே அது வரையில் நான் இருந்து வந்தேன். அவசியம் நேர்ந்தால் சில சமயம் புதுச்சேரியிலிருந்து வந்திருந்த சாமான்களை எடுத்துப் பாதாள அறையில் சேமித்து வைப்பதற்கும், பாதாள அறையிலிருந்து எடுத்து வெளியே அனுப்புவதற்கும் என்னைப் பல ஆட்களில் ஒருவனாகச் சேர்த்துக் கொள்வார்கள். நான் எப்பவுமே காரணம் இருந்தாலொழிய, அதிகமாகப் பேசமாட்டேன். ஆகவே வீட்டு வேலைகளைக் கவனிப்பதற்கு நான் தான் சரியான ஆசாமி என்று நம்பி வீட்டுப் பொறுப்பை என்னிடம் தந்திருந்தார் திப்பிலியார்.’ 

“ராஜவேலு பிரிந்து போய் சுமார் பத்து நாட்கள் கழித்து என்னையும் தன்னுடன் வரச்சொல்லி அழைத்து ஒரு நண்பனை அனுப்பியிருந்தான். ஆனால் அதற்குள் திருவாலூர்க் கமலம் என்னைப் பலமுறைகள் “போய்விடாதே! போய்விடாதே!” என்று வேண்டிக் கொண்டாள். “அப்பன்தான் கோவித்துக் கொண்டு போயிடுச்சு. அதன் முரட்டுச் சுபாவம் எனக்குத் தெரியும். நான் போக முடியாது. கண்ணாலங்கட்டிய புருஷன் கிட்ட இருந்துதானாகணும். நான் போக முடியாது. சின்ன வயசிலே எனக்குப் பக்கத்து வீட்டுக்காரனாக இருந்து பழக்கமாகிய நீயாவது இங்கிரு. எனக்கு மனசுக்குத் தெம்பாக இருக்கும்” என்றாள் கமலம். நான் வர இயலாது என்று ராஜவேலுக்கும் பதில் அனுப்பிவிட்டேன். அப்போது எனக்குத் தெரியாது திப்பிலியாரும் ராஜவேலுவும் போட்டுக் கொண்ட சண்டை கொலை வரையில் போய் முடியும் என்று. எனக்கும் தெரியாது அப்பாவி, அந்தக் கமலத்துக்கும் தெரியாது.” 

“அந்தச் சமயத்திலேதான் தியாகராஜத் திப்பிலியார் பட்டணத்துக்குப் போய் அந்த மந்திரிகுமாரியின் பாக்கார்டு காரை வாங்கி வந்தார். நான் தான் அந்தப் பேரம் முடியற வரைக்கும் அவருடன் இருந்தேன். நான் அவருடன் போனதுக்குக் காரணம் அவருக்கு வேண்டியவன் என்பதல்ல அந்தரங்கமானவன் என்பதல்ல. எனக்குக் கார் ஓட்டத் தெரியும் என்பது தான். காரை வாங்கிக் கொண்டு, எனக்கு லைசன்ஸும் வாங்கிக் கொண்டு ஊர் திரும்பும் போதுதான் என்னிடம் தன் மனதைத் திறந்து காட்டினார் திப்பிலியார். “கமலம் உன்னைப்பத்தி மிகவும் நல்ல அபிப்பிராயம் சொல்லுது’ என்று ஆரம்பித்தார். எனக்கு அதுவே திருப்தியாக இருந்தது. திப்பிலியார் எத்தனையோ தப்புக்கள், பாபங்கள் செய்தவர்தான் என்றாலும், அவர் விரும்பிக் கண்ணாலங் கட்டிக்கிட்ட அந்தக் கமலத்திடம் உசிராகத்தான் இருந்தார். கமலத்துக்காக அவள் தகப்பன் ராஜவேலுவை மீண்டும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருந்தார். ராஜவேலு தான் திரும்பத் தயாராக இல்லை; யுத்தம் செய்யவே தயாராகிக் கொண்டிருந்தான்.” 

அத்தியாயம்-19 

“இது வரையில் திப்பிலியார் சொல்லி வந்தது எனக்குச் சரியாகப்பட்டது. பிறகு அவர் ‘அந்த ராஜவேலு என்னைத் தீர்த்துவிடவே தீர்த்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு சபதம் செய்திருக் கிறானாம். அவனைச் சுற்றியுள்ள ஆட்களில் ஒருவன் எனக்கு நம்பகமானவன் இருக்கிறான்’ என்று சொன்ன போது ஏதேது இதன் விளைவுகள் எப்படிப் பயங்கரமாகப் போகின்றனவோ என்று எனக்குப் பயமாகத்தான் இருந்தது; குலை நடுக்கமே எடுத்து விட்டது.” 

“அதெல்லாம் காரணமாகத்தான் நமக்கு உபயோகப் படட்டும் என்று இந்தக் காரை வாங்கினேன். இதில் ஒரு மூலையில் ஒரு ரகசிய அறை செய்து வைத்து அதில் இரண்டு சிறு கைத்துப்பாக்கிகள், பிச்சுவா இவற்றை ஒளித்துவை. எந்தச் சமயம் எது தேவைப் படுமோ, யார் சொல்ல முடியும்? அப்படி ஏதாவது எனக்கு நேர்ந்துவிட்டால், பையன் நாகுவையும், அவன் அம்மா கமலத்தையும் நீ தான் ராஜவேலு விடம் அவர்கள் அகப்பட்டுக்கொண்டு விடாதபடி பாதுகாக்க வேண்டும். கமலத்துக்கு அவன் அப்பன் போக்கு கட்டோடு பிடிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் துணையில்லாது அகப்பட்டுக் கொண்டால் அவன் என்ன செய்வானோ? அந்தப் பிள்ளையை நன்றாகப் படிக்க வைத்து ஏதாவது நல்லதோர் வேலையில் சேர்த்துவிட வேண்டும்….. இதற்கெல்லாம் நான் உன்னைத்தான் நம்பியிருக்கேன் சம்பந்தம்” என்றார் திப்பிலியார். 

“சரி என்பதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்?” 

“நாளைக்கோ மறு நாளோ மாயவரம் போய் வக்கீல் ஐயாவைப் பார்த்து என் சொத்து சுதந்தரத்துக் கெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு வந்து விடுவேன்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது எனக்கே அவர் நிலைமையை எண்ணி அழுகை வந்து விடும் போல இருந்தது. “அதுக்கெல்லாம் அவசியம் இருக்காதுங்க, நாம்ப ஜாக்கிரதையாக இருந்தாக்க நம்மகிட்ட எந்தப் பய வந்துவிட முடியும்ங்க? ராஜ வேலுதான் ஆகட்டும். அவனுடைய பாட்டன்தான் ஆகட்டும். கிட்ட அண்டிவிட முடியுங்களா?” என்றேன். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நான் ஒன்றுமே பேசாமல் இருந்துவிட்டு இப்படி முடிவாகத் தீர்மானமாகப் பேசியது அவருக்கு ஆறுதல் அளித்தது போலும். அந்தப் பேச்சை அதோடு விட்டுவிட்டார். வழி நெடுகப் பேசாமலேதான் வந்தார். 

“அவர் அதிகம் பேசாமலும், வேண்டிய அளவு பேசிவிட்டு நிறுத்தியதும் எனக்குத் திருப்தியாகத் தான் இருந்தது. அன்று மாலையே அவர் எனக்குத் தந்த வாக்குறுதியையும் நிலைநிறுத்தி விட்டார். அதாவது அந்த வியாபாரம் எப்படிப்பட்டது என்பதையும் எனக்குக் காட்டிச் சொல்லிவிட்டார். சொல்கிறேன் என்று சொன்னதோடு விட்டிருந்தாரானால் நான் போய் அவரைக் கேட்கவேண்டும் என்றுகூட எண்ணி யிருக்க மாட்டேன். ஆனால் அன்று சாயங்காலமே ரைஸ்மில் கதவையெல்லாம் அடைத்துப் பூட்டியான பிறகு, ‘மில் சாவியை எடுத்துக்கொண்டு என்னுடன் வா’ என்று கூப்பிட்டார். வெளிக்கேட்டையும், கார் கதவுகள் இரண்டையும் திறந்து கொண்டு உள்ளே போனோம். இருட்டி இரண்டு நாழிகை நேரம் ஆகிவிட்டது. மின்சார விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தும் எனக்குப் பயமாகத்தான் இருந்தது. பெரிய இடத்துப் பொல்லாப்பு வரும், வந்துவிட்டது என்கிற பயம் என்னைப் பாதித்தது. இதிலெல்லாம் நாம் மாட்டிக் கொள்வானேன் அங்கிருந்து ஓடிப் பதுங்கி திருவாலூர் போய் விட்டால் என்ன என்றுதான் எனக்குத் தோன்றியது.” 

“ஆனால் அன்று காரை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியதுமே கமலம் என்னைவந்து பார்த்து ‘உன்னை என் அண்ணன் மாதிரி கருதியிருக்கேன். ஆபத்து சமயத்தில் என்னை நீதான் காப்பாற்ற வேண்டும்’ என்று கெஞ்சினாள். திப்பிலியார் சொல்லித்தான், என்னைத் தங்கள் கட்சியில் இருத்திக்கொள்ளத்தான் வந்தாளோ என்று ஒரு சந்தேகம் எனக்கிருக்கத்தான் இருந்தது. அப்படியே யிருந்தால்தான் என்ன தப்பு என்றும் உடனேயே தோன்றிற்று. எது எப்படியானாலும் கமலத்துக்காகவேனும் திப்பிலியாருடன் இருந்து அந்தக் கட்சியிலே நம்மாலானதைச் செய்வது என்கிற தீர்மானத்துடன்தான் நான் அன்று திப்பிலியாருடன் அவருடைய ரைஸ் மில்லுக்குப் போனேன்.” 

“அந்தத் திப்பிலியாபுரத்து ரைஸ் மில்லை அய்யா பார்த்திருக்கமாட்டீங்க! போலீஸ் இன்ஸ்பெக்டருக்குத் தெரியும். அது இருக்கிற இடத்தையும் தோற்றத்தையும் நான் சொல்வதை விட ஐயா சொல்றது சரியாக இருக்கும். சொல்லுங்க இன்ஸ்பெக்டர் ஐயா” என்றான் சம்பந்தம். 

அத்தியாயம்-20 

இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸிஸ் சொன்னார்: “என்னையும் உன் கதையிலே ஏண்டா இப்படி இழுக்கறே?” என்று கேட்டார். 

“மீளமுடியாது மாட்டிக்கிட்டுத்தானே இருக்கீங்க? நான் இழுக்கறதுக்கு என்ன வந்தது? சொல்லுங்க. பேசிப்பேசி எனக்கு மட்டும்தான் வாய் வலிக்கணு முங்களா?” என்றான் சம்பந்தம். 

“பொல்லாத பயலடா நீ!” என்று ஃபிரான்ஸிஸ் திப்பிலியாபுரத்து ரைஸ்மில் பற்றியும், திப்பிலியா புரத்தைப் பற்றியுமே சொல்லத் தொடங்கினார்: “திப்பிலியாபுரம் கொள்ளிடத்தின் தென்கரையிலே இருக்கிற ஒரு கிராமம். ஒரு காலத்திலே அக்கிர ஹாரமும் சிவன் கோயிலுமா நாநூறு வீடுகள் இருந்திருக்கும். இப்போது வீடுகளில் பெரும் பகுதியும் கிலமாகிவிட்டன. கோயில் ஜீரணமேயாகி விட்டது. கோயிலை நம்பி அந்தச் சிவனுக்கும் பூஜை செய்துகொண்டிருந்த ஒரு பார்ப்பான் வீட்டைத் தவிர அந்தக் கிராமத்திலே வேறு பார்ப்பான் வீடே கிடையாது. கொடிக்காலில் வெற்றிலை பயிர் இடுகிற துலுக்கர்கள் குடும்பங்கள் இருபதுக்கும் அதிகமாக, ஒரு காலத்தில் சேணியர் தெருவாக இருந்த தெருவைத் துலுக்கத் தெருவாக்கி அதிலே குடியேறி இருந்தனர். அவர்களைத் தவிர ஹரிஜனக் குடியானவர்கள் சேரி தனியாக இருந்தது. மற்றபடி குடியானவர்கள் தெருவிலே ஒரு ஏழெட்டு வீடுகள்தான் இருந்தன. அவற்றிலே நான் போய்ப் பார்த்தபோது பெரிய வீடு என்று சொல்லக்கூடியது தியாகராஜத் திப்பிலியார் வீடுதான். மற்ற வீடுகள் எல்லாம் இடிந்தும் விழுந்துகொண்டும் இருந்தன. இவர் வீடு மட்டும் புதுக் கருக்குடன், புது வர்ணம் வைத்து செமண்டு வைத்துக் கட்டி வர்ணம் தீட்டப்பட்டு, முன் பகுதியில் ஒரு அகன்ற மொட்டை மாடியும் அப்பால் தளமிட்டும் இருந்தது. வீட்டு வாசலிலே கொட்டகை போட்டு இரண்டு இரட்டை மாட்டு வண்டிகள் நின்றன. கார் வாங்கிய பிறகு ரோடிலேயே காருக்கும் தென்னை ஓலை மேய்ந்து விஸ்தாரமாகக் கொட்டகை போட்டு ஷெட் ஒன்று கட்டியிருந்தார் திப்பிலியார்.” 

“ரைஸ்மில்லைப்பற்றிச் சம்பந்தம் சொல்லச் சொன்னால் நீங்கள் திப்பிலியார் வீட்டையும் கிராமத்தையும் பற்றிச் சொல்ல ஆரம்பித்துவிட்டேளே இன்ஸ்பெக்டர்?” என்றேன். 

“சொல்லட்டும் சொல்லட்டும். அதுவும் என் கதைக்கு ரொம்பவும் அவசியம்தான். உடனடியாக இல்லாவிட்டாலும் பின்னர் பிரயோசனப்படும்” என்றான் சம்பந்தம். 

“தன் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த இரண்டு மூன்று வீடுகளை மலிவாகவே வாங்கிப் புதுப்பித்துக் கட்டிவிட்டிருந் தார் திப்பிலியார். அவற்றிலே அவர் களஞ்சியங்கள், இரும்புப் பெட்டிகள், ஒரு கொல்லுப்பட்டறை எல்லாம் இருந்தன. திப்பிலியார் ஏதாவது ஒரு நிலத்தையோ, வீட்டையோ விரும்பி விலைக்குக் கேட்டுவிட்டார் என்றால், சொந்தக்காரன் அவர் கேட்ட விலைக்கு விற்றுவிட்டு நகர்ந்துவிடுவான். அதுதான் சௌகரியம். அவர் விலைவாசி விஷயங்களில் சற்றுத் தாராள மாகவே நடந்து கொள்வார். உரிய விலைக்கு நூறு இருநூறு சில சமயம் ஐநூறுக்கும் அதிகமாகவே தருவார். கேட்டவுடன் மறுத்துச் சொல்லாதிருக்க வேண்டும். அவ்வளவுதான்.” 

“இந்தச் சௌகரிய மெல்லாம் யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்டவை. ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே திப்பிலியாருக்கு ஒரு ரைஸ்மில் இருந்தது. அதைப் பிதுரார்ஜித மானது என்றும் சொல்லலாம் பிதுரார்ஜிதமல்லாதது என்றும் சொல்லலாம். எப்படி என்று சொல்கிறேன். நான் தவறாகச் சொன்னால் சம்பந்தம் திருத்தட்டும்.” 

“திப்பிலியாருடைய தாயார் பெயர் அன்னம்மா. அவள் ஏதோ ஒரு காலத்தில் அடுத்த கிராமத்துப் பேர்வழி ஒருவனைக் கல்யாணம் செய்துகொண்டதுண்டு. ஆனால் அந்தப் புருஷன் அவளுக்கீடு சொல்லமாட்டாமல் 1912, 1913 வாக்கிலே அதாவது முதல் உலக மகா யுத்தத்துக்கு இரண்டொரு ஆண்டுகளுக்கு முந்தியே அக்கரைச் சீமைக்கு ஓடிவிட்டான். அவன் என்ன வானான் என்று நாளிதுவரையில் யாருக்கும் தெரியாது. அவனுக்கும் திப்பிலியார் கதைக்கும் சம்பந்தம் இல்லை. அன்னம்மா பிழைப்புத் தேடி கிராமத்தை விட்டுக் கிளம்பி சீர்காழி, மாயவரம், கும்ப கோணம் என்று நகரங்களுக்குப் போனாள். போன இடத்திலே ஒரு ரைஸ்மில்லிலே வேலை ஆளாக அமர்ந்தாள். கும்ப கோணத்து ரைஸ்மில் ராமுவையர் கிட்ட அவள் இருக்கும் சமயம்தான் தியாகராஜன் பிறந்தது. ராமுவையன் அந்தப் பிள்ளைக்கென்று வயது வந்தவுடன் 1930, 32லே திப்பிலியா புரத்திலே ஒரு சின்ன வீட்டையும் ஒரு ரைஸ்மில்லையும் வைத்துக் கொடுத்தான். அந்த மில் பிதுரார்ஜிதமானது என்றும் சொல்லலாம் என்று நான் சொன்னது இதனால்தான். மில் ராமுவையன்தான் தியாகராஜத் திப்பிலியாரின் தகப்பன் என்பதுபற்றி அன்னம்மாளும் ஒளிவு மறைவு காட்டியதில்லை. ராமுவையனே அதைப் பற்றிப் பெருமைப்பட்டுப் பேசியதுண்டு என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.” 

“அந்த மில் ராமுவையரை நான் போய் ஒரு தரம் அவர் வீட்டில், கும்பகோணத்தில் சந்திக்க நேர்ந்த துண்டு. அதைப் பற்றி என் கதையில் அதன் இடத்தில் சொல்லுகிறேன்” என்று மேலும் என் ஆவலைத் தூண்டிவிட்டான் சம்பந்தம். “ஐயா இப்ப ரைஸ் மில்லைப் பத்திச் சொல்லுவார்.” 

“அந்த ரைஸ் மில்தான் திப்பிலியாரிடம் இருந்தது. சுற்றுப் பக்கத்துக் கிராமங்களில் நல்ல நெல் விளைச்சல். இருபது மைல் சுற்று வட்டத்துக்கு அந்த நாட்களிலே ஒரு ரைஸ்மில்கூடக் கிடையாது. ஆகவே  ஆரம்பத்திலிருந்தே திப்பிலியாருடைய ரைஸ்மில்லுக்கு நல்ல கிராக்கியிருந்தது. அறவைக் கூலி மூலமாகவே அவர் பணக்காரராகியிருக்கலாம். கையில் கொஞ்சம் பிடிபடவே மேலும் பணக்காரனாவதற்கு ஆசை தட்டியது. படகு வலிப்பவர்கள் சிநேகிதம் ஏற்படவே பணம் பண்ணக் குறுக்கு வழியும் ஒன்று புலப்பட்டது. கடற்கரைக் கிராமம் என்றுதான் திப்பிலியா புரத்தைச் சொல்ல வேண்டும் ஆனால் கடற் கரைக்கும் கிராமத்துக்கும் இடையே சுமார் பதினேழு பதினெட்டு மைல் இருந்தது. ஆனால் கடலில் வந்து கொள்ளிடத்தில் படகு செலுத்திக்கொண்டு வருவது மிகவும் சுலபமான காரியம். அங்கிருந்து புதுச்சேரியும் காரைக்காலும் அரை இரவுக்குள் படகில் அடைந்துவிடக் கூடிய தூரத்தில் தான் இருந்தன.” 

“கையில் பணம் சேரச் சேரத் திப்பிலியாருக்கே புதுச்சேரிச் சரக்கில் மோஹம் விழுந்துவிட்டது. பட்டு, தங்கம் என்பது போன்ற சரக்குகளில் மட்டுமல்ல. ஃபிரான்ஸ் தேசத்து மது வகையறாக்களிலும் அவருக்குச் சபலம் ஏற்பட்டது. படகுக் காரர்கள் துணைகொண்டு கடல் மார்க்கமாகப் புதுச்சேரியிலிருந்து சரக்கு கொண்டு வருவது லாபகரமாக இருந்தது. அதையே வியாபாரமாகச் செய்யலாமே என்று தீர்மானித்துச் செய்தார். நூற்றுக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்த திப்பிலியாருக்கு ஆயிரக் கணக்கில் பணம் வரத் தொடங்கியது இந்தப் புதுச்சேரி சரக்கு மூலமாகத்தான். மிகவும் சாமர்த்தியமாகவே திப்பிலியார் தனது வியாபார சாம்ராஜ்யத்தையும், தளவாடங்களையும் பெருக்கிக்கொண்டார். இதெல்லாம் யுத்தம் தொடங்கு முன்னரே ஓரளவு போலீஸுக்குத் தெரியும். எதுவும் ருஜு செய்யத்தான் முடியவில்லை. பிராணதார்த்தி அய்யர் போன்றவர்கள் நிலைமையைத் தங்களுக்கும் லாபம் தரும் வகையில் பிரயோஜனப் படுத்திக் கொண்டார்கள். என்னால் அதுகூட முடியவில்லை” என்று ஒரு பெருமூச்சு விட்டார் இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸிஸ். 

அவரால் நிலைமையைப் பிரயோசனப் படுத்திக் கொள்ள இயலவில்லை என்பது உண்மையாகவே இருக்கலாம் என்று நான் எண்ணினேன். நம்பத் தயாராகவே இருந்தேன். ஆனால் சம்பந்தத்துக்கு அதை நான் நம்பிவிடப் போகிறேனே என்று பயம் போலும். 

“அய்யா தூத்துக்குடியிலே ஒரு பங்களா பட்டணத்திலே ஒரு பங்களா வாங்கிட்டாரு, சும்மா பெருமூச்சு விடறாரு. ஒரு பங்களாவுக்காவது திப்பிலியார் தந்த பணம் உபயோகப் பட்டிருக்கும்” என்றான் சம்பந்தம். 

இப்படி அவன் நெருப்புடன் விளையாடுகிறானே என்று எனக்கும் பயமாகத்தான் இருந்தது. ஆனால் ஃபிரான்ஸிஸ் வியப்பில் ஆழ்ந்தார். “எப்படியடா உனக்குப் பட்டணத்துப் பங்களா விவரம் தெரிந்தது?” என்று ஆச்சரியத்துடனே கேட்டார். 

சம்பந்தம் பதில் சொல்லவில்லை. பதில் எதுவும் சொல்கிற உத்தேசம் அவனுக்கு இல்லை என்று அறிந்துகொண்டதும் ஃபிரான்ஸிஸ் தான் சொல்லிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து சொன்னார்.

– தொடரும்…

– அவரவர் பாடு (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 1963, குயிலன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *