கலிபோர்னியாவில் இருந்த ராம்குமாருக்கு, அவனுடைய மயிலாப்பூர் வீடு முற்றிலுமாக வழித்து துடைத்து கொள்ளையடிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் துடித்துப்போனான். அடுத்து என்ன செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை.
கம்பெனியின் ஒரு ப்ராஜக்ட் விஷயமாக கலிபோர்னியா வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் இருபதுநாட்கள் இங்கேயே தங்கி இருந்து வேலையை முடிக்கவேண்டும். இவன் அமெரிக்காவில் இருக்கும்போது, பாவம் சுஜாதா தனியாக சென்னையில் குழந்தையுடன் தவிக்க வேண்டாமே என்பதற்காக அவளை ஒருநாள் முன்னதாக ஸ்ரீரங்கம் அனுப்பிவிட்டு, மயிலாப்பூர் அபார்ட்மென்ட்டை நன்றாக இழுத்து பூட்டிவிட்டுத்தான் இவன் வந்தான்.
இப்ப என்னடான்னா இவனுடைய மயிலாப்பூர் அபார்ட்மென்ட்வீடு கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அது செக்யூரிட்டியுடன் அமைந்துள்ள பாதுகாப்பான நான்காவது மாடி குடியிருப்பு. சுஜாதா பதறியபடி தன் அண்ணனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு விரைந்து வந்தாள். வீடு முழுவதும் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியில் இருவரும் உறைந்தனர்.
பெரிய காட்ரேஜ் ஸ்டோர்வெல்லையே தூக்கிச் சென்றுவிட்டனர். அதனுள் இருந்த இருபது லட்சரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், எண்பதாயிரம் பணம், பட்டுப்புடவைகள், இரண்டு வைர மூக்குத்தி, இரண்டுவைரத்தோடுகள் அனைத்தையும் கிளப்பிச் சென்றது மட்டுமல்லாமல், ப்ரிட்ஜ், சோனி டி.வி, வாஷிங்மெஷின், கிரைண்டர் என வீட்டில் இருந்த அனைத்தையும் காலி பண்ணியதுடன், குழந்தையின் ப்ராம், நடைவண்டியையும் எடுத்துச் சென்றதைப் பார்த்ததும் சுஜாதா வாய்விட்டுக் கதறினாள்.
போலீஸ் நாய் வந்தது. டி.வி., உட்பட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வந்தது.
அடுத்த இரண்டு வாரத்தில், தி.நகர் தணிகாசலம் ரோட்டில் குடியிருந்த ஆஷா பட்டேல், பள்ளிக்குச் சென்றிருந்த தன் குழந்தைகளை கூட்டிவர மூன்றரைமணிக்கு பள்ளிக்குச் சென்று காத்திருந்தாள். மூத்தவள் ராஷ்மி மட்டும் அம்மாவைப் பார்த்ததும் யூனிபார்ம், புத்தகப் பையுடன் ஓடிவந்தாள். தம்பி சிராக் பட்டேல் அவளுடன் வரவில்லை.
“எங்கடி சிராக்?”
“எனக்குத் தெரியாதும்மா… லெட்ஸ் வெயிட்.”
பத்து நிமிடங்கள் ஆகியும் குழந்தையைக் காணோம்.
ஆஷா விறுவிறென சிராக் வகுப்பறைக்கு ராஷ்மியுடன் சென்று தேடினாள். அங்கு சிராக்கின் க்ளாஸ் டீச்சர் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
பதட்டத்துடன், “மிஸ் வேர் இஸ் சிராக்?” என்றாள்.
“ஹி அல்ரெடி லெப்ட் தி க்ளாஸ்.”
ஆஷாவுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. நான்கு வயது குழந்தை சிராக். அவனுக்கு என்ன ஆயிற்று?
உடனே பயத்துடன் அவள் கணவர் தீரஜ் பட்டேலை மொபைலில் தொடர்புகொண்டு அழுதபடியே விஷயத்தைச் சொன்னாள். தீரஜ், தான் வேலை பார்க்கும் ஐடி கம்பெனி விஷயமாக அன்றுகாலைதான் நயோடா சென்றிருந்தான்.
“பதட்டப்படாதே ஆஷா, கோ டு ப்ரின்சி அண்ட் டெல் ஹர். டேக் த க்ளாஸ் டீச்சர் வித் யூ.”
பிரின்ஸி தி.நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொடர்புகொண்டு விஷயத்தை சொல்ல, இன்ஸ்பெக்டர் உடனடியாக ஸ்கூலுக்கு வந்து, சிராக்கின் போட்டோவை கேட்டு வாங்கிக்கொண்டார். கம்ப்ளெயின்ட் எழுதி வாங்கிக்கொண்டு, மற்ற போலீஸ் நிலையங்களுடன் தொடர்புகொண்டு, குழந்தையை தேடச்சொன்னார். டி.வியும் மற்ற ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
தீரஜ் பதறியடித்து டெல்லி-சென்னை இரவு ப்ளைட்டில் சென்னை வந்து சேர்ந்தான். குழந்தையை ஒப்படைக்க அவனிடம் ஐம்பது லட்சம் பணம்கேட்டு ஒரேயொரு தடவை போன் வந்தது. அதன்பின், தீரஜ் போலீஸ் மூலமாக முயற்சி செய்வது தெரிந்து போன் செய்வதை நிறுத்தி விட்டனர்.
இதேமாதிரி ஒருமாதத்தில் சென்னையில் மொத்தமாக ஐந்து வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. பள்ளிக்குச்சென்ற இரண்டு குழந்தைகளைக் காணவில்லை.
விஷயம் அசெம்பளிவரை சென்று விவாதிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்துவிட்டது என எதிர்கட்சிகள் கூப்பாடு போட்டன.
பெற்றோர்கள் கதி கலங்கினர். பலர் பள்ளிகளின் மரத்தடியிலேயே தங்கி காத்திருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேசெல்ல அனைவரும் பயந்தனர்.
சென்னை போலீஸ் கமிஷனர், புதிதாக ஐபிஎஸ் எக்ஸாம் தேர்வாகி வந்திருந்த வேல்முருகனைக் கூப்பிட்டு, அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். குற்றவாளிகளை சீக்கிரம் கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
வேல்முருகன் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, முதல் இரண்டுநாட்கள் கேஸ் பைல்களை விலாவாரியாகப் படித்துப் புரிந்துகொண்டார். கமிஷனரிடம் சென்று, இரண்டே இரண்டு பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த உதவியாளர்கள் தனக்கு உடனடியாகத் தேவை என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.
வேல்முருகன் தீவிரமாக தோண்டத் தோண்ட பல உண்மைகள் அவருக்குப் பிடிபட்டது. முதலாவது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையின் பூட்டியிருந்தவீடுகளில் எட்டு கொள்ளைகளும், மூன்று பள்ளிக் குழந்தைகளும் காணாமல்போனது. ஆனால் போலீஸின் கவனத்துக்கு வந்ததோ ஐந்து கொள்ளைகளும், இரண்டு பள்ளிக் குழந்தைகளும்.
கொள்ளையடிக்கப்பட்ட எட்டு வீடுகளில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த மூன்று குடும்பங்கள் தமிழ்நாடு போலீஸின்மீது நம்பிக்கையின்றி சென்னையைக் காலி செய்துகொண்டு அவரவர் சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர் என்பது புரிந்தது.
மூன்று குழந்தைகள் கடத்தல்களில், ஒரு குழந்தையின் அப்பாமட்டும், போலீஸ்மீது நம்பிக்கையின்றி, கடத்தல்காரனின் மிரட்டலுக்கு பயந்து அவனுக்கு ஐம்பது லட்ச ரூபாய் பணம் கொடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டுச் சென்றதையும் கண்டுபிடித்தார்.
வேல்முருகன் அந்த மூன்று குடும்பத் தலைவர்களை கூப்பிட்டுப் பேசியபோது அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். போலீஸ்மீது நம்பிக்கை இல்லாததாலும், தாங்கள் வேற்று மாநிலத்தவர் என்பதாலும் அமைதி காத்ததாக அழுதனர். வேல்முருகன் அவர்களிடம் குற்றம் நடந்ததை எழுதி வாங்கிக்கொண்டு, எப்ஐஆர் போட்டு கேஸை முடுக்கிவிட்டார்.
பணம் கொடுத்து குழந்தையை மீட்டவரிடம், பணத்தை எங்கே, எப்போது, எப்படிக் கொடுத்தீர்கள் எனக்கேட்டு தீர விசாரித்தார். அப்படி அவர் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்தினார்.
பத்தே நாட்களில் அனைத்து உண்மைகளையும் வேல்முருகன் கண்டுபிடித்துவிட்டார். உற்சாகத்துடன் போலீஸ் கமிஷனரிடம் சென்று நடந்ததை விலாவாரியாக விளக்கினார். குற்றவாளிகள் மூவரும் படித்த ஒயிட்காலர் திருடர்கள் என்றும்; கத்தியின்றி ரத்தமின்றி கிட்டதட்ட எட்டுகோடிகள் சேர்த்து விட்டனர் என்றும்; அனைத்துக்கும் அழிக்கமுடியாத சாட்சியங்கள் இருப்பதாகவும்; குற்றவாளிகள் மூன்றுபேரும் பாலவாக்கத்தின் கடற்கரை ரோடில் ஒரேவீட்டில் தங்கியிருப்பதாகவும்; அவர்கள் வீட்டைச்சுற்றி மப்டியில் போலீஸ் போட்டிருப்பதாகவும்; இன்று சண்டே என்பதால் அனைவரும் வீட்டில்தான் இருப்பதாகவும் சொன்னார்.
வேல்முருகன் விளக்கத்தை கேட்டறிந்த கமிஷனர் அவரை தன் சீட்டில் இருந்து எழுந்துவந்து கட்டியணைத்து வாழ்த்துச் சொன்னார்.
“சார் நீங்கதான் என் திறமையை வெளிப்படுத்த, என்னை நம்பி ஒரு சந்தர்ப்பம் கொடுத்தீர்கள்….உங்களுக்குத்தான் இந்தப் பெருமையெல்லாம் சேரும்.”
“சரி நீங்க உடனே பாலவாக்கம் போயி அந்த மூவரையும் கைதுசெய்து அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி இப்போதே ரிமாண்ட் பண்ணுங்க. வருகிற புதன்கிழமை முக்கியமான அனைவரையும் கூப்பிட்டு காலை பத்தரைக்கு இங்கயே ஒரு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க வேல். நான் உடனே சி.எம்.முக்கு இன்பார்ம் பண்ணிவிடுகிறேன்.”
புதன்கிழமை காலை பத்தரை மணி…
போலீஸ்கமிஷனர் அலுவலகம் நிரம்பி வழிந்தது. ப்ரஸ் ரிப்போர்ட்டர்களைத் தவிர, ஏராளமான ஐடி கம்பெனிகளின் பிரதிநிதிகள் அழைக்கப் பட்டிருந்தனர். குற்றம் செய்து பிடிபட்ட மூவரும் போலீஸ் காவலுடன் அணிவகுத்து நின்றனர். போலீஸ் கமிஷனரும், ஹோம் மினிஸ்டரும் மையமாக அமர்ந்திருந்தனர். மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்கள் கண்ணீர்மல்க தழுவினர்.
வேல்முருகன் மைக்கில் பேச ஆரம்பித்ததும் அரங்கம் அமைதியானது.
“இந்தத் தொடர் கொள்ளைகளுக்கும், குழந்தைகளின் கடத்தல்களுக்கும் முழுமுதற் காரணம் அந்த வீட்டில் வசிக்கும் படித்த அறிவுஜீவிகள்தான் என்றால் நம்புவீர்களா? இந்த அறிவுஜீவிகள் வெளியூர் போனால்; ஊரிலிருந்து வந்தால்; பொண்டாட்டியின் பிறந்த நாளுக்கு நகைநட்டு வாங்கினால்; என குடும்ப விஷயங்கள் அனைத்தையும் தங்களின் முகநூலில் பதிவிடுகிறார்கள்.
“அரிப்பெடுத்து அலையும் படித்த முட்டாள்கள்தான் தற்போது தங்கள் முகநூல் தம்பட்டம் மூலமாக மாட்டிக்கொண்டு விழிப்பவர்கள். இவர்கள் முகநூல் பித்தர்கள்…
“இந்த ராம்குமார் காட்டாங்குளத்தூர் போனா என்ன? கலிபோர்னியா போனால் என்ன? எத்தனை நாட்கள் போனால் என்ன? அதை ஏன் முகநூலில் தம்பட்டம் அடிக்க வேண்டும்? இதற்கு லொகேஷன் மேப்பிங் வேறு. இந்த நீரஜ் நாய் பிடிக்கப் போனால் என்ன? அல்லது நயோடா போனால்தான் என்ன? அதற்கு எதுக்கு முகநூல் விளம்பரம்?
“இந்த வேதவல்லி பாட்டி, எட்டுக்கல் வைரபேசரி அவர் அன்புமகன் வாங்கிக் கொடுத்ததை ஏன் முகநூலில் பீற்றிக் கொள்ளவேண்டும்?
“சமூக வலைத்தளங்களில் அரிப்பெடுத்து சொறிந்துகொள்ளும் இம்மாதிரி அறிவுஜீவிகளால்தான் பல திருட்டுக் கும்பல்கள் புதிது புதிதாக தோன்ற ஆரம்பித்துவிட்டன. தன்னைப்பற்றி பீற்றிக்கொண்டு நான் அங்கு போகிறேன், இங்கு போகிறேன்; இதை வாங்கினேன், அதை வாங்கினேன் என்று இவர்கள் பதிவிடுகிறார்கள். இதை எவர் வேண்டுமானாலும் படித்துத் தெரிந்து கொள்ளமுடியும். இவர்களுக்கு எதிராக ஒரு குற்றத்தை மிக எளிதாக அரங்கேற்ற முடியும்.
“மனிதர்களுக்கு தன்னைப் புகைப்படமாக பார்த்துக் கொள்வதில் பெருமைதான்…. முன்பெல்லாம் உறவினர் வீட்டுக் கல்யாண ஆல்பங்களில் நாம் நன்றாக வந்திருக்கிறோமா என்று நம் புகைப்படத்தைப் தேடிப் பார்த்து மகிழ்வோம். இப்போது நாமே நம் போட்டோவை விதவிதமாக எடுத்து, அதை எவ்விதக் கூச்சமோ, வெட்கமோ இல்லாமல் முகநூலில் வெளியிட்டு தம்பட்டம் அடித்துக்கொண்டு, அதற்கு எத்தனை லைக்ஸ் வரும் என்று ஏங்குகிறோம்.
“இந்தச் சுயமோகிகளைப் புகழ்ந்து லைக்ஸ் போட்டு உசுப்பேத்தி உறவினர்களும், நண்பர்களும் ரத்தம் வரும் அளவிற்கு சொறிந்து விடுகிறார்கள். இம்மாதிரி தேவையற்ற சுயதம்பட்டங்கள் உங்களைப்பற்றிய மதிப்பீடுகளைத்தான் வீழ்ச்சியடையச் செய்யும்.
“எனவே முகநூலை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன் படுத்துங்கள். உங்கள் முன் நிறுத்தப் பட்டிருக்கும் இந்த மூன்று குற்றவாளிகளும் உங்களைப்பற்றி முகநூலில் படித்துவிட்டு, ஆற அமர ஆராய்ந்து ஒவ்வொரு கொள்ளையையும், கடத்தல்களையும் அரங்கேற்றினர்.
முகநூல் பீற்றல் அறிவுஜீவிகளினால் ஏற்பட்ட சோகங்கள் இவைகள்…
“கடத்தப்பட்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோர்களிடம் இன்று முறையாக ஒப்படைக்கப் படுவார்கள். கொள்ளையடிக்கப் பட்டவர்கள் கோர்ட் மூலமாக அவர்களுடைய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
வேல்முருகன் தன் உரையை முடித்துக்கொண்டார்.
கடைசியாக வேல்முருகனின் திறமைகளைப் புகழ்ந்து போலீஸ்கமிஷனர் நான்கு வார்த்தைகள் பேச, ஹோம்மினிஸ்டர், “தமிழக போலீஸ் என்றைக்கும் திறமையானவர்கள்தான் என்பதை நிருபீத்து விட்டீர்கள் மிஸ்டர் வேல்முருகன்.” என்றார்.