கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 9, 2023
பார்வையிட்டோர்: 9,683 
 
 

அத்தியாயம்-9-10 | அத்தியாயம்-11-12 | அத்தியாயம்-13-14

அத்தியாயம்-11

காலியாக இருந்த வஸந்த் விஹார் வீட்டின் நடுவில் நின்று சற்று நிதானமாக யோசித்தான் கணேஷ். முதலில் ஷர்மா, அப்புறம் பாஸ்கர், அப்புறம் அனிதாவா?

இல்லை இல்லை. அனிதா இருக்கிறாள். நிச்சயம் இருக்கிறாள். எங்கே இருக்கிறாள்?. இந்த ஊசலாடும் டெலிபோன் என்ன சொல்கிறது? எங்கே தேடுவது அவளை? அவள் என்னிடம் ஏதோ சொல்லவேண்டும் என்றாளே, என்ன சொல்ல நினைத்தாள்? கணேஷ் நடந்தான்.

கார் கதவு சாத்தப்படும் சப்தம் கேட்டது. அவன் இதயத்துடிப்பு அதிகமாயிற்று. வாசலை நோக்கி நடந்தான்.

‘ஐ ஷுட் ஹேவ் நோன் பெட்டர் வித் எ கர்ல் லைக் யூ…’ என்று மெட்டு உள்ளே வந்தது. உடன் மோனிக்கா கையில் கார் சாவியை உயரப் பிடித்துக்கொண்டு வந்தாள். அவர்கள் மோதிக் கொள்ளவில்லை. ‘கணேஷ்!’ என்றாள் சந்தோஷம் கலந்த ஆச்சரியத்துடன். ‘நான் உன்னைத் தேடிக்கொண்டு அங்கே சென்றேன்.’ 

கணேஷ் சொன்னான்: ‘மோனிக்கா, பாஸ்கர் இறந்துவிட்டான். ‘ 

‘வாட்! என்றாள். மிக உண்மையான அச்சம் கலந்த ‘வாட்’.

‘கொலை செய்யப்பட்டு இறந்திருக்கிறான். அனிதாவைக் காணவில்லை’.

‘இரு இரு. மெல்லச் சொல் கணேஷ். என்ன நடந்தது?’ 

கணேஷ் நடந்ததைச் சொன்னான். ‘பாஸ்கர், பாஸ்கர் என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தேன். பாஸ்கர் நீக்கப்பட்டு விட்டான். அனிதா என்னை உடனே வரும்படி ஃபோன் செய்தாள். சற்றுத் தாமதமாகி விட்டது. வந்து பார்க்கிறேன். காணவில்லை.’ 

மோனிக்கா எதிரில்போய் உட்கார்ந்தாள். அவள் கண்களில் பயம் தெரிந்தது. நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள்.

‘வீடு திறந்திருந்ததா?’ என்று கேட்டாள்.

‘ஆம். ‘ 

‘இரு, மீனாட்சி, மீனாட்சி!” என்று கூப்பிட்டாள். இருவரும் உள் நோக்கிக் காத்திருந்தார்கள். கடிகாரம் இனிமையாக மணியடித்தது. ஒன்பதா? பதில் கிடைக்கவில்லை.

‘மீனாட்சி அவுட்ஹவுஸில் இருப்பாள். இரு. பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று கிளம்பினாள்.

கிளம்பியவள் பாதியில் நின்றுவிட்டாள். ‘நீயும் கூட வா, எனக்கு பயமாக இருக்கிறது’. 

‘ஐம் நாட் இன் எ மூட்டு ஸி எனி மோர் பாடிஸ்.’ 

‘கணேஷ்! அனிதாவுக்கு ஏதாவது ஆகியிருக்கும் என்று நினைக்கிறாயா?’

‘எனக்கு ஒன்றுமே சொல்லத் தெரியவில்லை மோனிக்கா!’ 

‘அப்படிக் கத்தாதே!’ என்றாள். ‘கணேஷ், இந்த நிமிஷத்திலிருந்து நான் உன்னுடன் வந்துவிடுகிறேன். இந்த வீட்டில் நான் இருக்கமாட்டேன். சாப்பாட்டுக்கு இரண்டு ஸ்லைஸ் ப்ரெட் கொடு. தூங்க ஒரு பெட்ஷீட் கொடு, போதும். நான் உன்னுடன் வந்துவிடுகிறேன்.’ 

‘அதைப்பற்றி அப்புறம் யோசிக்கலாம். இப்போது அனிதாவைக் கண்டுபிடிக்க வேண்டும்.’ 

‘இந்த இரவிலா?’

‘ஆம்.’

திடுதிப்பென ஓர் அலறல் கேட்டது. மோனிக்கா கணேஷின் அருகில் வந்து நின்றுகொண்டாள். ‘கணேஷ், என்னை விட்டு விடாதே.’

மீனாட்சி தன் முகத்தைப் புடைவைத் தலைப்பில் துடைத்துக் கொண்டு வந்தாள். அவர்களை அருகருகே பார்த்ததும் தயங்கினாள். 

‘மீனாட்சி, அனிதா எங்கே?’ என்று இருவரும் கேட்டார்கள். 

‘மாடியில் இருக்கிறார்கள்’ என்றாள்.

‘மாடியில் இல்லை.’ 

‘வெளியில் எங்கேயாவது சென்றிருப்பார்கள்’ 

‘இது என்ன பதில் மீனாட்சி? நீ அவள் போவதைப் பார்த்தாயா?’

‘நான் பார்க்கவில்லை மிஸ்ஸி’. 

‘நேற்று அல்லது இன்று காலை வெளியில் செல்லும்போது பார்த்தாயா?’

‘நேற்றுப் பார்த்தேன்.’

‘தனியாகச் சென்றாளா?’ 

‘இல்லை. பாஸ்கர் அய்யாவுடன் சென்றார்கள். இப்போதுகூட பாஸ்கருடன்தான் போயிருக்கவேண்டும்.’ 

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். மோனிக்கா ஆங்கிலத்தில் ‘கணேஷ், நான் அனிதாவை வெறுத்தேன். ஆனால் அவள் இறக்கவேண்டும் என்கிற அளவுக்கு இல்லை’ என்றாள். 

‘அவள் இறக்கவில்லை’ என்றான் கணேஷ் அழுத்தமாக. கொஞ்சம் யோசித்து, ‘இதுவரை…’ என்று சேர்த்துக் கொண்டான்.

‘மீனாட்சி, நீ வாசலில் இரு. ராம் எங்கே?’ 

‘ராம், டீ சாப்பிடப் போயிருப்பான்.’ 

‘நீ வெளியில் இரு.’

‘என்ன, ஏதாவது தப்பாக நிகழ்ந்துவிட்டதா கணேஷ் பாபு?’

‘அப்புறம் சொல்கிறேன். மோனிக்கா, உன் அப்பாவின் அறை யையும் அனிதாவின் அறையையும் மறுபடி பார்க்கவேண்டும். உன் அப்பாவின் அந்தரங்க வாழ்க்கையில் இருக்கிறது சூட்சுமம்.’ 

‘அனிதாவை எப்படிக் கண்டுபிடிப்பது?’ 

‘எனக்குத் தலைகால் புரியவில்லை’. 

‘கணேஷ், பாஸ்கர் இறந்துவிட்டானா? 

‘சத்தியமாக!’ 

‘எப்படி?’ 

‘சொல்கிறேன். முதலில் உன் அப்பாவின் அறையைத் திறக்கிறாயா? வருகிறாயா?’

‘வருகிறேன் வருகிறேன்’ என்று அவனுடன் ஒட்டிக் கொண்டாள். 

கணேஷ் அவள் இதயத் துடிப்பைத் தன் முதுகில் உணர்ந்தான். இருவரும் மாடிப்படி ஏறிச் சென்றார்கள்.

ஷர்மாவின் அறை சென்ற தடவை பார்த்த நிலையிலேயே இருந்தது. அதே மேஜை. அதே காகிதங்கள். அதே புகைப் படங்கள். செய்தித்தாள்கள், தூசி. 

கணேஷ் ஒவ்வொன்றாகப் பார்த்தான். குப்பைக்கூடைக்குள் கசங்கி இருந்த காகிதங்களையெல்லாம் சிரத்தையாகப் பிரித்துப் பார்த்தான். 

‘ஆக்ஷன் சிட்ஸ் ஹுண்டிஸ் டெபாஸிட்ஸ் அண்ட் ஸேவிங்ஸ் ஸ்கீம்’ என்று ஒரு காகிதம் சொன்னது. 

‘கமிஷனர் ஆஃப் இன்காம்டாக்ஸ், சப்ஜெக்ட் இன்கம்டாக்ஸ் ரிடரின் ஃபர் தி ஃபினான்ஷியல் இயர் 69-70… டியர் சார்…

ரவி பேப்பர் போர்ட்ஸ், அவின்யூ ரோட், பெங்களூர் என்கிற கம்பெனியின் கடிதம். தொடர்பில்லாத காகிதத்துண்டுகள். 

கணேஷ் மேஜையின் இழுப்பறைகளை நோண்டினான். அலாரம் கெடிகாரத்தைக் குலுக்கிப் பார்த்தான். கார்பெட்டைத் தூக்கிப் பார்த்தான். நாற்காலிகளை நகர்த்திப் பார்த்தான். சுவரில் படங்களைச் சாய்த்துப் பார்த்தான். 

நடுவில் வந்து நின்றுகொண்டு வெற்றுப் பார்வை பார்த்தான்.

‘என்ன தேடுகிறாய்?’ 

‘எனக்கே தெரியவில்லை’. 

அந்த இன்கம்டாக்ஸ் கடிதத்தைப் பார்த்துக்கொண்டே, ‘உன் அப்பா அத்தனை பணம் எப்படிச் சேர்த்தார் மோனிக்கா?’ என்று கேட்டான்.

‘சம்பாதித்தார்’ என்றாள். 

‘பிரகாசமான பதில்! எப்படிச் சம்பாதித்தார்?’ 

‘பிஸினஸ், எக்ஸ்போர்ட் இம்போர்ட் டெக்ஸ்டைல்ஸ், ரா .. மெட்டீரியல். லெட்டர் ஹெட்கூட இருக்குமே. ‘காண்டி னெண்டல் கார்ப்பரேஷன்’ என்று பெயர். கனாட் ப்ளேஸில் ஆபீஸ் இருக்கிறது’.

‘கள்ளக் கடத்தல் ஏதாவது செய்தாரா?’

‘கிடையாது. எனக்குத் தெரிந்தவரை, ஏன்?’ 

‘விரோதத்துக்கு சாக்கு தேடுகிறேன். அகப்படவில்லை’. 

கணேஷ் சுவாரஸ்யமில்லாமல் மேஜைமேல் இருந்த செய்தித் தாள்களை உதறிப் பார்த்தான். அவற்றைத் தள்ளிக்கொண்டே வந்தான்.

சட்டென்று நின்றான். ஒரு செய்தித்தாள் அவனைக் கவர்ந்தது. அதன் முதல் பக்கத்தில் ஒரு சிறிய நீண்ட சதுர அளவுக்கு ஒரு துண்டு வெட்டி எடுக்கப்பட்டு ஓட்டையாக இருந்தது. முதற் பக்கத்தில் வியட்னாம் போர் பற்றிச் செய்தி ஒன்று பாதியில் வெட்டப்பட்டு இருந்தது. அந்தச் செய்தித்தாளை தேதி பார்த்து மடக்கிப் பைக்குள் போட்டுக்கொண்டான். 

‘பக்கத்து வீட்டில் டைம்ஸ் ஆஃப் இண்டியா வாங்குகிறார்களா?’ 

‘பக்கத்து வீடு அரை ஃபர்லாங்கில் இருக்கிறது’. 

‘சரி, நான் வீட்டுக்குப் போகிறேன்’ என்றான் கணேஷ்

‘நான்?’ 

‘நீயும் வருகிறாயா? 

‘என்னால் இங்கே தனியாகத் தங்க முடியாது. நான் தரையில் படுத்துக்கொள்கிறேன். உன்னுடன் வந்துவிடுகிறேன்.’ 

‘நான்தான் தரையில் படுத்துக்கொள்ள வேண்டிவரும். வீட்டை இப்படியே விட்டுவிட்டுப் போவதா?’ 

‘மீனாட்சி இருக்கிறாள். ராம் இருக்கிறான். மேலும் இந்த வீடு எக்கேடு கெட்டுப் போகட்டும். எனக்கென்ன? இதில் சாவின் நிழல் இருக்கிறது. நான் தங்கமாட்டேன். கணேஷ், அடுத்தது நானா?’ 

‘புரியவில்லை.’ 

‘அப்பா, பாஸ்கர், அனிதா, அப்புறம் நானா?’ 

‘பயப்படாதே! வா’. 

தன் வீட்டுக்கு வந்ததும் மாடிக்குச் சென்று கதவைத் தட்டினான் கணேஷ். மாடியில் வசிக்கிறவர் ராஜகோபால் என்பவர். நல்ல பட்சி. அவர் உண்டு, சுப்ரபாதம் உண்டு, அறுபது மீட்டரில் மெட்ராஸ் வானொலி உண்டு என்று இருப்பவர். 

ராஜகோபால் திறந்தார். பனியன். தோளில் துண்டு. பின்னால் எம்.டி.ராமனாதன் அதல் ரேடியோவில் எம்.டி.ராமனாதன் அதலபாதாளத்தில் பாடிக் கொண்டிருக்கிறார். 

‘கணேசா! என்ன இந்த அர்த்த ராத்தியியிலே? யார் குட்டி?. 

‘என் க்ளையண்ட் சார். ஸாரி சார். நீங்கள் டைம்ஸ்தானே வாங்குகிறீர்கள்?’ 

‘ஆமாம்.’

‘5-ம் தேதி பேப்பர் வேண்டும்’.

‘நேற்று ராத்திரி உங்க ரூமில் அடிதடியாமே?’ என்றார் மோனிக்கா வைப் பார்த்துக்கொண்டு. அவருக்கு மோனிக்காவைப் பிடிக்கவில்லை. அர்த்த ராத்தியில் இப்படி ஒரு பெண், ஆண் பிள்ளை போல் சொக்காய் போட்டுக்கொண்டு… 

‘கட்சிக்காரன் பணம் கொடுக்க மாட்டேன் என்றான் சார். அதான் தகறார். அதற்காகத்தான் இந்த ஸோலோ வேலை வேண்டாம் என்று பார்க்கிறேன். ஒரு கம்பெனிக்கு லீகல் அட்வைஸர் கேட்டிருக்கிறார்கள். அதற்கான விளம்பரம் 5-ம் தேதி பேப்பரில் வந்திருந்ததாம். போட்டுப் பார்க்கலாம் என்று5-ம் தேதி பேப்பர் இருக்கிறதா? ஹிந்துஸ்தான் டைம்ஸ். நான் பேட்ரியட் வாங்குகிறேன்…’ 

‘தரச் சொல்கிறேன். விஜி!’ 

தன் அறைக்கு வந்ததும் மேஜையில் அந்தப் பேப்பரை வைத் தான். அவன் தோளருகே மோனிக்கா எட்டிப் பார்த்துக் கொண் டிருக்க, ஷர்மாவின் அறையிலிருந்து தான் கொண்டுவந்த பக்கத்தின் வெட்டுப்பட்ட பகுதியில் என்ன அச்சாகி இருக்கிறது என்று பார்த்தான். 

வரி விளம்பரம் அது. ரியல் எஸ்டேட் என்கிற தலைப்பின் கீழ் 

நவீன மூன்று பெட்ரூம் பங்களா. ஷாத்ரா. ப்ளிந்த் பரப்பு 2400 சதுர அடி. வெளிப் பரப்பு 4200. சமீப கட்டடம். உடனே தயார். விலைக்கு. காண்டாக்ட் சுந்தர் ஏஜென்ஸிஸ் 440816. 

கணேஷ் டெலிபோனை எடுத்து 440816-ஐக் கூப்பிட்டான். வெகு நேரம் அடித்துக்கொண்டிருந்தது. விரக்தியுடன் வைத்தான். மோனிக்கா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

‘என்ன விளம்பரம் இது?’ 

‘வீட்டு விளம்பரம். ஷாத்ராவில் இருக்கும் வீடு. உன் அப்பாவுக்கு ஷாத்ராவில் ஏதாவது வீடு இருந்ததா?’
‘கிடையாதே?’ 

கணேஷ் சற்று யோசித்தான். உடனே அனிதாவின் வீட்டுக்கு ஃபோன் செய்தான். ம் ம் ம் என்று என்கேஜ்ட் தொனிதான் கேட்டது. டெலிபோன் கீழே ஊசலாடிக்கொண்டிருக்க, அப்படியே அதைத் திருப்பி வைக்காமல் வந்துவிட்டேனே என்று தன்னைச் சபித்துக்கொண்டான். 

‘வீட்டில் ஒருவரும் இல்லையே!’ என்றான் அசந்தர்ப்பமாக. 

‘கணேஷ், அனிதாவுக்காக மிகவும் கவலைப்படுகிறாய் கவலைப்படுகிறாய் நீ’. என்றாள் மோனிக்கா.

‘ஆம், அவளுக்கு என்ன ஆயிற்றோ? ஏன், நீ கவலைப்பட வில்லையா? என்னதான் அவளை நீ வெறுத்தாலும் அடிப்படையில் அவள் நல்லவள்…’ 

‘நான் உனக்காகக் கவலைப்படுகிறேன்.’ 

கணேஷ் மௌனமாக இருந்தான். மேலே என்ன செய்யலாம்? அந்த வரி விளம்பரத்துக்கு என்ன அர்த்தம்? ஷர்மாவின் அறையில் இருந்த செய்தித்தாளில் வெட்டி எடுக்கப்பட்ட விளம்பரம். வீடு விற்கும் விளம்பரம். விசாரிக்கவேண்டும். நாளைக் காலைதான் தெரியும். அந்த ஏஜென்ஸி திறக்க வேண்டும். அதுவரை… ‘

‘வி வெய்ட்’ என்றான் கணேஷ். 

‘எனக்குத் தூக்கம் வருகிறது கணேஷ்.’ 

‘உடை மாற்றிக்கொள்ள வேண்டாமா? சாப்பிட்டாயா?’

‘சாப்பிட்டுவிட்டேன். இப்படியே படுத்துக் கொண்டுவிடுகிறேன். ஒரு தலையணை கொடு. அல்லது கனமான புத்தகம் கூடப் போதும்’. 

‘எல்லாம் சௌகரியமாகத் தருகிறேன். கவலைப்படாதே!’ 

‘கணேஷ், நீ ஒரு ஆதர்ச இளைஞன். இதே சந்தர்ப்பத்தில் ஓர் இளம்பெண் ஓர் ஆண் தனியாக இருந்தால் நிச்சயம் ஆண் சபலப்படுவான். ஏதாவது அசட்டுத்தனமாக முயல்வான்.’

‘மோனிக்கா, இந்தக் குழப்பமான சூழ்நிலையில் உனக்கு இந்த எண்ணங்களா ஏற்படவேண்டும்?’

‘கணேஷ், எனக்குப் பயமாக இருக்கிறது. என் இருதயம் எப்படி அடித்துக்கொள்கிறது பார்.’ 

‘இருதயம் அல்ல, உன் இளமை’. 

‘கணேஷ்!’ என்று மிக அருகில் வந்தாள் மோனிக்கா. அவள் மெலிதான உதடுகள் பிரிந்து அவள் பல் வரிசையின் ஒழுங்கில் ஒரே ஒரு பிசகு இருப்பதைப் பார்த்தான் கணேஷ். பற்கள் ஒளிர்ந்தன. அவள் மூச்சில் பெப்பர்மிண்ட் வாசனை கலந்திருந்தது. 

‘கணேஷ், என்னைக் காப்பாற்று கணேஷ்.’ 

‘எப்படி?’ என்றான். 

அவள் அவன் கையைப் பற்றினான். 

டெலிபோன் மணி அடித்தது. 

மோனிக்காவின் அருகில் அடித்தது. மோனிக்கா சபித்துக் கொண்டு எழுந்தாள். ‘ஹலோ…’ என்றாள். 

‘கணேஷ்! எனக்கு கணேஷ் வேண்டும்’ என்றது குரல். 

‘உனக்கு’ என்று அவனிடம் கொடுத்தாள்.

தெளிவாக வார்த்தைகள் வந்தன. ‘கணேஷ், முட்டாளே, கவனி. பாஸ்கருக்கு என்ன ஆயிற்று தெரியுமா? அது உனக்கும் நேரப் போகிறது. குரங்கு வேலைகளை எல்லாம் நிறுத்திவிட்டு மறுபடி மதராஸுக்குப் போய் விடு.’ 

‘ஹலோ! ஹலோ!’ 

டெலிபோனைத் தட்டினான்.

‘வைத்துவிட்டார்கள்’ என்றான்.

‘யார் அது?’ என்றாள்.

‘யார்?’ என்று திரும்பிக் கேட்டான்.

‘யூ மீன்?’

‘ஸம்படி. என்னை மதராசுக்குச் செல்லுமாறு உபதேசம்’. 

‘எதற்கு?’ 

‘சாகாமல் இருப்பதற்கு.’ 

‘பயறுத்தலா?’

‘ஆம்! இந்த கேஸில் பயமுறுத்தல்கள் சற்று அதிகமாகவே இருக்கின்றன’.

‘கணேஷ், நான் முதலில் எடுத்தேனல்லவா, அந்தக் குரல் நான் எங்கோ கேட்ட குரல் போல இருந்தது எனக்கு’. 

‘எங்கே, எங்கே? ஞாபகப்படுத்திப் பார். உன்னிடம் அவன் என்ன கேட்டான்?’ 

‘கணேஷ், எனக்கு கணேஷ் வேண்டும்!’ என்று.’ 

‘யார் குரல் போல இருந்தது?’ 

‘யோசித்துப் பார்க்கிறேன். ம்…’ 

கணேஷ் காத்திருந்தான். அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் பிரயத்தனத்துடன் யோசிக்க, ‘கோவிந்த்?’ என்று கேட்டுப் பார்த்தான்.

‘எனக்குச் சொல்ல முடியவில்லையே கணேஷ், இரு!’ 

மோனிக்காவை இவ்வளவு நம்புகிறேனே, இவள் சொல்வது எத்தனை பொய்யோ, எத்தனை நிஜமோ! உண்மை தெரியும்வரை எல்லோரையும் சந்தேகி. 

‘குரங்கு வேலை!’ எங்கே பார்த்தோம். அந்த வார்த்தைப் பிரயோகத்தை!

அத்தியாயம்-12

கணேஷ் எழுந்தபோது (7.30) மோனிக்கா இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவள்மேல் ஒரு போர்வையைப் போர்த்திவிட்டு உள்ளே சென்று காபி தயா ரித்தான். அவளைக் கூப்பிட்டுப் பார்த்தான். முனகிக்கொண்டே புரண்டுவிட்டு மறுபடி தூங்கிப் போனாள். மறுபடி போர்த்திவிட்டு, சட்டென்று அனிதாவின் ஞாபகம் வர, டெலிபோன் டைரக்டரியை அவசர அவசர மாகப் புரட்டினான். 

சுநந்தா ரேக்களையும் சுந்தரராஜன்களையும் ன்கு கடந்து சுந்தர் ஏஜன்ஸியில் வந்து அவன் விரல் நின்றது. விலாசத்தைக் குறித்துக் கொண்டான். குளித்தான். பால் கலக்காமல் காபி குடித்தான். இரண்டு மென்மையான ஸ்லைஸின் நடு பாகத்தைக் கடிக்கும்போது அனிதாவின் ஞாபகம் மறுபடி வந்தது. செய்தித்தாளை மேய்ந்தான். வங்காளத்தில் படிப்இன்னும் இரண்டு பேர் கொலை. ‘ஸி யூ லேட்டர்’ என்று ஒரு காகிதத்தில் குறிப்பு எழுதி மோனிக்காவின் அருகில் வைத்து விட்டு வெளியே வந்தான். 

கணேஷின் மெஷின்தனம் ஸ்டியரிங்கைச் செலுத்த, மெலிதான பனிப்படலத்தின் ஊடே தன்னைப் பற்றி நினைத்தான். வயதாகிக்கொண்டிருக்கிறேன். இன்னும் தொழில் சவடால்தனத்திலேயே ஓடிக் கொண்டிருக்கிறது. பம்பாய், டில்லி என்று அலைந்தாகிவிட்டது. ஹரிணி, நீரஜா, அனிதா, மோனிக்கா என்று சம்பவங்களைத் தொடர்ந்தாகிவிட்டது. 

அனிதா! இரண்டே இரண்டு ஸிலபிள்கள். அந்தத் ‘தா’வில் இருந்த வேட்கை, ஏக்கம்! அனிதா… அனி தருவாள், அனி தந்தாள் என்று விதவிதமாக அமைத்துப் பார்த்தான். 

அனிதாவுக்கு ஷர்மாவின் மேல் வெறுப்பு இருந்திருக்கிறது. அந்த வெறுப்பு, தன் அபரிமிதமான செல்வத்தினால் அவளை வாங்கிக் கூட்டில் அடைத்ததற்கு. அவளை வெளியே விடாமல் ஓர் இன்ப சாதனமாகப் பிரயோகித்ததற்கு. அந்த வெறுப்பு எல்லை மீறி, கொலை செய்யும் துணிச்சல்வரை சென்றிருக் குமா? அனிதாவா? ஒரு பெண் – உமர் கய்யாம் படிக்கும், கவிதை வரிகளை அறையில் ஆணியடித்து மாட்டியிருக்கும் ஒரு பெண் அப்படிச் செய்வாளா? பயப்படுகிறாள். சொத்து வேண்டாம் என்கிறாள்.

அனிதா எங்கே? 

தர்யாகஞ்சில் கோல்சா தியேட்டர் அருகே இருந்த சந்தில் இருந்தது அந்த ஏஜென்ஸி. அப்போதுதான் திறந்து ஒரு ஆள் தூசி தட்டிக்கொண்டிருந்தான். சில ஸ்டீல் நாற்காலிகள், ஸ்டீல் அலமாரி, ஒரு அனுமார் படம் (தன் மார்பைக் கிழித்து ராமரைக் காட்டிக்கொண்டிருந்தது), டெலிபோன் . 

‘நான்தான் சுந்தர்’ என்றவருக்கு வழுக்கை ஏற்பட ஆரம்பித் திருந்தது. மீசையில் ஒரே ஒரு நரை மயிர் தென்பட்டது. காதில் மயிர். கண்களில் சந்தேகம். 

‘நமஸ்தே. என் பெயர் கணேஷ். நான் உங்கள் விளம்பரத்தைப் பார்த்தேன். ஷாத்ராவில் இருக்கும் அந்த வீட்டைப் பார்க்க விரும்புகிறேன்’ என்றான் கணேஷ். 

சுந்தர் கணேஷைப் பார்த்த பார்வையில், ‘உன் மூஞ்சியைப் பார்த்தால் வீடு வாங்குகிறவனைப் போல இல்லை’ என்கிற செய்தி தெரிந்தது.

‘ஷாத்ரா வீட்டை விற்றாகிவிட்டதே!’ என்றார். 

‘அப்படியா? எவ்வளவுக்குப் போயிற்று?’ 

‘அதை நான் சொல்லவேண்டியதில்லை.’ 

கணேஷ் சுற்றும் முற்றும் பார்த்தான். ‘மிஸ்டர் சுந்தர், நாம் தனியாகப் பேசலாமா?’ 

சுந்தரின் கண்களில் மேலும் சந்தேகமும் ஜாக்கிரதையும் தென்பட்டன. ‘என்ன பேச வேண்டும்?’ 

‘விஷயம் இதுதான், எனக்கு – என் க்ளையண்டுக்கு… நான் ஒரு லாயர். ஷாத்ராவில் இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் ஒரு பி.வி.ஸி. ஃபேக்டரி இருக்கிறது. அவருக்கு ஷாத்ராவில் ஒரு வீடு மிக அவசியமாகத் தேவையாக இருக்கிறது. நீங்கள் விளம்பரம் கொடுத்த வீடு இன்னும் விலை போகவில்லை என்றால் எழுபத்தைந்து, நூறு வரைக்கும் போவார். உங்களுக்கும் கமிஷன் தருகிறேன்.’ 

கமிஷன் என்ற வார்த்தையில் சுந்தரின் முகம் மலர்ந்தது. ‘உட்காருங்கள். டீ சாப்பிடுகிறீர்களா?’

‘வேண்டாம். அந்த வீடு என்ன ஆயிற்று ?’

‘பார்ட்டி யார்?’ என்றார் சுந்தர்.

‘ஷா. குஜராத்தி’

‘அந்த வீடு விற்றுப்போய் விட்டதே?’

‘பார்ட்டி யார்?’ என்றான் கணேஷ்.

‘ஷர்மா என்று ஒருவர் வாங்கினார் அதை’.  

‘ஆர்.கே.ஷர்மா?’

‘ஆம்.’ 

‘அவரை எனக்குத் தெரியும். அவரே வந்திருந்தாரோ?’ 

‘இல்லை. அவர் செக்ரட்டரிதான் எல்லாவற்றையும் பேசி முடித்தார். பாஸ்கர் என்று பெயர். ஸேல் டீட் எல்லாம் கையெழுத்தாகி விட்டது. அட்வான்ஸ் எல்லாம் வாங்கியாகி விட்டது. வெரிஃபிகேஷனுக்குப் பிறகு இன்னும் சில காகிதங்கள் பாக்கி இருக்கின்றன. தொண்ணூறு பர்ஸெண்ட் பேமெண்ட் ஆகிவிட்டது. பாஸ்கர் இன்று வந்தாலும் வருவார். அவரை நீங்கள் சந்திக்கலாம்’.

‘பாஸ்கர் வரக்கூடிய நிலையில் இல்லை’ என்றான் கணேஷ்.

‘பாஸ்கரையும் தெரியுமா உங்களுக்கு?’ 

‘சுமாராகத் தெரியும். நான் அவர்களுடன் பேசிக்கொள்கிறேன். வீட்டை எப்போது வாங்கினார்கள்?’ 

‘விளம்பரம் வந்த மறுதினமே வந்து பேசி முடித்து விட்டார்கள். அவசர அவசரமாக, கேட்ட விலைக்கு முடித்து விட்டார்கள்.

‘வீடு எங்கே இருக்கிறது?’ 

‘ஷாத்ராவில்.’ 

‘ஷாத்ராவில்தான் இருக்கிறது. இன்னும் நகர்ந்துபோகவில்லை. ஷாத்ராவில் எந்த இடத்தில்?’ 

‘இன்டஸ்ட்ரியல் ஏரியா இருக்கிறதல்லவா, அதைத் தாண்டி மெயின் ரோடில் வடக்கே ஒரு ஃபர்லாங் போனால் தியேட்டர் ஒன்று வரும். அப்ஸராவோ என்னவோ பெயர். அதைக் கடந்த தும் இடதுபுறம் திரும்பி ஒரு மைல் உள்ளே சென்றால் தனியாக ஒரு வீடு அது. ‘யமுனா’ என்று பெயர். பக்கத்தில் எல்லாம் பொட்டல். அந்த ஏரியாவிலேயே இரண்டோ மூன்றோதான் வீடுகள் வந்திருக்கின்றன. டெவலப் ஆகவில்லை இன்னும்.’

‘தாங்க்யூ மிஸ்டர் சுந்தர். நான் அவர்களைப் போய்ப் பார்க்கிறேன்.’ 

கணேஷ் அங்கிருந்தே ஷாத்ராவுக்குப் போக நினைத்தான். செங்கோட்டையைத் தாண்டியதும் மனம் மாறித் திரும்பினான். இன்ஸ்பெக்டர் ராஜேஷைச் சந்திக்கச் சென்றான். அவர் கிடைக்கவில்லை. அவர் சந்திக்கச் சொன்ன மற்றொரு போலீஸ் ஆபீசரைப் போய் பார்த்தான். அவர் இருந்தார். 

‘காலஞ்சென்ற ஆர்.கே.ஷர்மாவின் ரிப்போர்ட் வேண்டும்.’ 

‘நீங்கள் லாயர்?’ 

‘ஆம். அவர் எஸ்டேட் விவரங்களைக் கவனிக்கிறேன். அந்த ரிப்போர்ட்டை நான் பார்க்கவேண்டும்’. 

‘அதை நான் உங்களுக்குக் கொடுப்பது சிரமம்.’

‘ஏன்?’ 

‘என்ன விளையாடுகிறீர்களா? போலீஸ் ரெகார்டுகள் அவ்வளவு சுலபத்தில் கிடைத்து விடுமா?’

‘நான் பார்க்கவேண்டும். அவ்வளவுதான்.’ 

‘நீங்கள் எதற்கும் எங்கள் எஸ்.பி.யிடமிருந்து ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு வந்துவிடுங்களேன்’. 

‘எஸ்.பி.யின் அறை எங்கே இருக்கிறது?’ 

‘திலக் மார்க் போகவேண்டும். அவர் ஆபீஸ் இங்கே இல்லை.’

‘போச்சுடா!’

‘ஸாரி, என்னால் ஒன்றும் செய்ய முடியாது.’

‘இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சொன்னார்…’ 

‘ராஜேஷுக்கு ரூல் தெரியாது…’ 

ஏமாற்றத்துடன் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியில் வந்தபோது ஓர் ஆசாமி அவனருகில் வந்தான்.

‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ 

‘ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டைப் பார்க்கவேண்டும். அவ்வளவுதான். நீங்கள் யார்?’

‘கேஸ் என்ன?’

‘ஷர்மா – ஆர்.கே.ஷர்மா என்று ஒருத்தர். சென்ற 14-ம் தேதி போஸ்ட்மார்ட்டம் நடந்திருக்கிறது’. 

‘தனியாக வாருங்கள் இப்படி. இதற்கெல்லாம் இன்ஸ்பெக்டரைப் போய்க் கேக்கலாமா?’ எவ்வளவு கிளார்க்குகள் இருக்கிறார்கள்!” 

‘லஞ்சம் வாழ்க’ என்று கணேஷ் நினைத்துக்கொண்டான். 

அந்த ரிப்போர்ட் முதலில் அவனுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. அவன் விரும்பிய விஷயங்கள் எதுவும் இல்லை. ஷர்மாவின் உடல் அடையாளங்கள், அவர் இறந்ததற்குக் காரணம் இவை போன்ற விஷயங்கள் லத்தீன் கலந்த வாக்கியங்களில் இருந்தன. 

மெதுவாக அந்த ஃபைலைப் புரட்டினான். ரிப்போர்ட்டின் முன் எவ்வளவோ சர்க்கார் காகிதங்கள், கைப்பட எழுதின வாக்கு மூலங்கள், கையெழுத்துக்கள், சாட்சியங்கள். 

கணேஷ் சற்று நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தான். நெற்றியைச் சுருக்கிக்கொண்டான். பெருமூச்சு விட்டான். புறப்பட்டான்.

‘ஒரு பப்ளிக் கால் ஆபீசுக்கு சென்று மறுபடி இன்ஸ்பெக்டர் ராஜேஷைக் கூப்பிட்டான். இப்போது அகப்பட்டார். 

‘கணேஷ் ஹியர். நான் டில்லியை விட்டு ஷாத்ராவரை செல்ல வேண்டும். மாலை திரும்பிவிடுவேன். உங்களிடம் சொல்லிக்கொள்ள வேண்டும்’.

‘ஷாத்ராவில் என்ன?” 

‘ஒரு ஹன்ச்சின் பேரில் போகிறேன். ஷர்மாவின் கேஸ்தான்’. 

‘ஏதாவது உங்களுக்குத் தெரிந்ததா?’ 

‘இன்னும் குழப்பம்தான். குழப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்று மாலைக்குள் ஒன்றில்லை ஒன்று தெரிந்து விடும்’. 

‘அவ்வளவு நிச்சயமாக நீங்கள் சொல்வதைப் பார்த்தால்…’ 

‘அப்படியில்லை… பட்சி சொல்கிறது. இன்று தீர்ந்துவிடும் என்று. நான் அங்கே போக அனுமதி வேண்டும். பாஸ்கர் கொலையுண்டிருக்கையில் நான் எங்காவது ஓடிப் போய்விடுவேன் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்’. 

‘சரி, போய்ச் சீக்கிரம் வந்து விடுங்கள். பாஸ்கரின் உடல் ஆடாப்ஸிக்குப் போயிருக்கிறது.’

யமுனை நதியைக் கடந்து தார்ச்சாலையில் பறந்தான் கணேஷ். உத்திரப் பிரதேச சர்க்காரின் பஸ்கள் நீலநிற அசுரர்களாக விரைந்து கொண்டிருந்தன. இந்திரா மரத்துக்கு மரம் புன்னகைத்துக் கொண்டிருந்தார். ஜீப்களில் ஜனசங்கத்து மஞ்சள் கொடிகள் ஒட்டு தாகத்தில் துடித்துக்கொண்டிருந்தன. 

ஷாத்ரா டவுனுக்குள் நுழைந்ததும் மஞ்சள் அடித்த சுவர்களின் முக்கோணங்கள் அருகில் பொம்மைத் தலைகள் சிரித்தன. 

அருகிலேயே இழந்த சக்தி வைத்தியர்கள் வாலிபர்களை எழுந்து நிற்குமாறு விளம்பரங்களில் அறைகூவினார்கள். ஒலி பெருக்கி தந்த ‘ஆராதனா’ கணேஷின் கார் வேகத்தினால் டாப்ளர் எஃபெக்டில் சுருதி மாறியது. தலைப்பாகை அணிந்த விவசாயி கள் முட்டாள்தனமாகக் குறுக்கே கடந்தார்கள். முதன்மந்திரி போல் ஒரு மாடு தன் இடத்தை விட்டு நகர மறுத்தது. புழுதிப் படலங்களின் ஊடே எண்ணற்ற சிறுவர்கள் தேர்தல் நோட்டீஸுக்காக ஸ்பீக்கர் கொண்டை வைத்த அம்பாஸடரைத் துரத்தினார்கள்.

கணேஷ் ஒரு எஸ்ஸோ பெட்ரோல் நிலையத்தில் தன் காரை நிறுத்தினான். சற்று நேரம் கழித்துக் காரை எடுத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான். அப்ஸரா தியேட்டர் தெரிந்தது. அதைக் கடந்து இடதுபக்கம் திரும்பினான். மேலும் நடந்தான். கரும்பு வயல்கள் தெரிந்தன. கரும்பு முடிந்ததும் காலி மனைகள் தெரிந்தன. வெள்ளைக்கற்கள், கட்டப்படவேண்டிய வீடுகளுக்கு ஞாபகங்களாக நின்றன. அங்குக்கு 

அந்த ஒரு வீடு சூரிய வெளிச்சத்தில் டிஸ்டெம்பர் பளபளப்பில் மிகத் தடையாக நின்றது. திடீரென்று அலாவுதீன் விளக்கைத் தேய்த்து ஏற்பட்டதுபோல். 

பெரிய வீடுதான். வாயிலில் குட்டையான கம்பி கேட். சப்த மில்லாமல் அதைத் திறந்து நடந்தான். அமைதி என்றால் ட்சிகளின் இப்படியா? மரமில்லாத, குரல் இல்லாத, நிழலில்லாத, பாலைவன அமைதி. மெதுவாக வாயிற்கதவின் முன்னிருந்த கான்க்ரீட் நிழலை நோக்கி நடந்த கணேஷுக்குத் தன் காலணியின் ஒலிகூட உறுத்தியது. எவ்வளவு நடை! 

அந்த நிழலுக்கு வந்தான். வீட்டு வாயிற் கதவு மூடியிருந்தது. பூட்டப்பட்டிருக்கவில்லை. சுவரில் வெண்ணிறத்தில் ஒரு ஸ்விட்ச் இருந்தது. அந்த ஸ்விட்சின் மேல் சிவப்பில் ஒரு சிறிய மணியில் படம் செதுக்கியிருந்தது. கணேஷின் விரல் அந்த ஸ்விட்சை நாட, கடைசி வினாடியில் பின் வாங்கிக்கொண்டான்.  

கணேஷ் வீட்டின் அமைப்பைப் பார்த்தான். கராஜ் பூட்டி யிருந்தது. உள்ளே கார் இருக்கிறதா? தெரிந்த ஜன்னல்கள் எல்லாம் மூடி இருந்தன. கணேஷ் மெதுவாக வீட்டைச் சுற்றி வந்தான். கான்க்ரீட்டின்மேல் நடக்காமல் புல் தரையில் நடந் தான். அவன் விவேகம் அவன் செய்வது தப்பு என்று தெரிவித்தது. 

அவன் ஆர்வம் அவனைச் செலுத்தியது. வீட்டின் மூலையைத் திரும்பும்போது தயங்கினான். எட்டிப் பார்த்தான். சுற்றி வரு வதைத் தொடர்ந்தான். காம்பவுண்ட் சுவர் ஓரமாகப் பூந்தொட்டி கள் இருந்தன. செடிகள் கருகி இருந்தன. குட்டையான நிழல்கள். காற்று அசையவில்லை. 

கணேஷினுள் அமானுஷ்யமான பயம் மெதுவாகப் புறப்பட்டது. எதையோ எதிர்பார்த்தான். எதை? 

வீட்டின் மூன்றாவது பக்கத்தில் ஒரு ஜன்னல் திறந்திருந்தது. கணேஷின் இதயம் ஒரு துடிப்பை விட்டுவிட்டது. யாரோ இருக்கிறார்கள். மெதுவாக எட்டிப் பார்த்தான். மெதுவாக என்றால், அவ்வளவு மெதுவாக… 

உள்ளே ஒரு சமையலறை தெரிந்தது. ஒரு காஸ் அடுப்பு தெரிந்தது. மிகச் சில பாத்திரங்கள் தெரிந்தன. அருகே ஒரு ரெஃப்ரிஜிரேட்டர் தெரிந்தது. அது திறந்திருந்தது. அதில் உள்ளே அடுக்கியிருந்த கொக்கொ-கோலா பாட்டில்களில் ஒன்றை அவள் எடுத்துக்கொண்டிருந்தாள்.

அனிதாதான்! 

கணேஷ் சட்டென்று விலகிக்கொண்டான். திரும்பின அனிதா அவனைப் பார்த்திருக்க முடியாது! 

இங்கேதான் இருக்கிறாள்! உயிருடன் இருக்கிறாள். உயிருடன் இருக்கிறேன். 

கணேஷ் உடனே முன்பக்கம் ஓடிப்போய்க் கதவைத் தட்டி அனுமதி கேட்க நினைத்தான். வேண்டாம். வேண்டாம். சற்று கவனிக்கலாம். 

கணேஷ் சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டு கேட்டான்.

கொக்கொ-கோலா உடைக்கும் சப்தம். கிளாஸில் கொட்டும் சப்தம். 

சற்று நேரம் மெளனம். அடிக்கோடிட்ட மௌனம். அப்புறம் உள்ளேயிருந்து ஆழமான ஆண் குரல் கேட்டது.

‘அனிதா!’ 

மௌனம்.

‘அனிதா!’ 

‘ம்.’ 

‘வா!’ வா என்றால் வெறும் வா இல்லை. வெறி கலந்த வா.

மறுபடி மௌனம். 

‘அனிதா, நான் சொல்வது உனக்குக் கேட்கவில்லை?’ 

‘எங்கே கேட்டிருக்கிறேன் இந்தக் குரலை? எங்கே, எங்கே?’

‘அனிதா!’ 

குரல் அருகில் ஒலித்தது. உள்ளே வந்திருக்கவேண்டும். அந்தக் குரல், ஆம். அதுதான் நேற்று டெலிபோனில் என்னைக் கூப்பிட்ட குரல். பாஸ்கருக்கு நிகழ்ந்தது எனக்கும் நிகழும் என்று எச்சரித்த குரல். அதே குரல்.

எட்டிப் பார்க்கலாமா? 

வேண்டாம். 

‘லீவ் மி அலோன்! ப்ளீஸ்! ப்ளீஸ்! தயவுசெய்து கெஞ்சிக் கேட்கிறேன். விட்டுவிடுங்கள்!’ 

அனிதாவின் வளையல்கள் குலுங்கும் சப்தம் கேட்டது. கணேஷின் ரத்தம் கொதித்தது. யார் அவன்? 

‘ஒரு தடவை அனிதா, ஒரு தடவை!’ 

‘ப்ளீஸ், ப்ளீஸ்!’

கண்ணாடி டம்ளர் விழுந்து நொறுங்கும் சப்தம். 

குரல்கள் அறையை விட்டு வெளியே சென்ற சப்தம் கேட்டது. இனி தாமதிக்கக் கூடாது என்று தீர்மானித்தான் கணேஷ். உடனே வாயிற் பக்கம் சென்று கதவை உடைத்து அவளைக் காப்பாற்ற வேண்டும் என்று கிளம்பியவன் ஜன்னலைக் கடக்கும்போது சற்று எட்டிப் பார்த்தான். 

சமையல் அறை காலியாகத்தான் இருந்தது. ஆனால் அறைக்கு வெளியே ஒரு வார்ட்ரோபில் ஒரு கண்ணாடி தெரிந்தது. அந்தக் கண்ணாடியின் பிம்பத்தில் அடுத்த அறையில் இருந்த அவர்கள் இருவரும் தெரிந்தார்கள். அனிதாவும் அந்தக் குரலுக்கு உரிய மற்றொரு –

அனிதா படுக்கையின் மேல் தலைகுனிந்து உட்கார்ந்து கொண்டிருந்தது தெரிந்தது. அவள் எதிரே நின்றுகொண்டு கைகளைத் தீவிரமாக ஆட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்த அந்த ஆளின் அடையாளம் கணேஷை மிகவும் பிரமிக்க வைத்தது. 

யாவற்றையும் விட்டு விட்டு, அந்த வீட்டைத் துறந்து விட்டு, மிக விரைவாகத் தன் காரை நோக்கி ஓடினான் கணேஷ்.

– தொடரும்…

– அனிதா – இளம் மனைவி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1974, குமுதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *