(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-1-2 | அத்தியாயம்-3-4 | அத்தியாயம்-5-6
அத்தியாயம்-3
லாயர் கணேஷ் கோபத்தில் இருந்தான். அதற்கு இரண்டு மூன்று காரணங்கள்.
அறையைத் துடைத்துப் பெருக்குகிற பெண் வரவில்லை. முல்லாவின் ‘ஹிண்டு லா’வில் தூசி படிந்திருந்தது. பையன் கொண்டுவைத்த டீ வென்னீராக இருந்தது. ஒரு முக்கியமான ப்ரீஃப் எழுதும் உத்தேசத்துடன், அவன் பேனாவை உதறி உதறி உதறியும் எழுதவில்லை. சே! இதையெல்லாம் பார்த்தால் கல்யாணம் செய்துகொண்டுவிடலாம் போலத் தோன்றுகிறது.
‘மோகன்! மோகன் பிசாசே! எங்கே போனாய்?’ என்று கத்தினான்.
கதவு திறந்தது.
‘யூ ஸில்லி ஃபூல்! என்ன இது, டீயா? முஇல்லை, உன் தாத்தா… ஐம் ஸோ ஸாரி!’
வந்தது மோகன் இல்லை. ஒரு பெண்.
‘எக்ஸ்ட்ரீம்லி ஸாரி. நான் என் வேலைக்காரப் பையனை அழைத்திருந்தேன். உட்காருங்கள். உட்காராதீர்கள். தூசி தட்டுகிறேன்.’
‘புதுவிதமாக இருக்கிறது உங்கள் வரவேற்பு’ என்ற அந்தப் பெண்ணுக்கு இருபத்திரண்டு வயது இருக்கலாம். தலையை வெட்டி, செம்பட்டையாக அலையவிட்டிருந்தாள். கழுத்தில் ஒரே ஒரு பிளாஸ்டிக் மாலை அணிந்திருந்தாள். அந்த மாலையில் வட்டம் ஏதோ ஒரு புராதனக் காசுபோல இருந்தது. அவள் முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் பாக்கி இருந்தது. ஆனால் புன்சிரிப்பு இல்லை. கவலை இருந்தது. அந்தப் பெண்ணின் கன்னங்கள் சிவந்திருந்தன. சிவப்புக்குப் காரணம் மேக்கப் இல்லை. குளிர்ந்த வானிலையிலிருந்து உஷ்ணப் பிரதேசத்துக்கு திடீரென்று வந்ததால் ஏற்பட்ட அவசரச் சிவப்பு. அவள் சிரிக்கவில்லை. எனவே அவள் பல் வரிசை பற்றி வர்ணனை கிடைக்கவில்லை. அவள் உதடுகள் மிக மெல்லியதாக இருந்தன. பொதுவாக, எளிதில் உடைந்துவிடக்கூடிய கண்ணாடி சாதனங்களை ஞாபகப்படுத்தினாள். அவள் உயரத்துக்குச் சற்று மெலிய கைகள், அவள் அணிந்திருந்த ஸாரி பகட்டில்லாமல் இருந்தது. ஒல்லி என்று சொல்லமுடியாது. சற்று சதை போடலாம். அவள் கண்கள் பெரிதாக இருந்தன. அவை கணேஷைப் பார்த்தன.
‘என் பெயர் மிஸ் மோனிக்கா ஷர்மா.’
‘ப்ளீஸ்ட் டு மீட் யூ ஷர்மா. நான் கணேஷ்’.
அவள் சுலபமாக அவன் கையைப் பற்றி குலுக்கியதிலிருந்து இது கொஞ்சம் மேற்கத்திய தினுசு என்று தெரிந்துகொண்டான். அதே சமயம் அந்தக் கை சற்றுத் தொய்ந்திருந்ததிலிருந்து இவள் பயந்திருக்கிறாள் என்றும் தெரிந்துகொண்டான்.
அவள் உட்கார்ந்தாள். அவன் உட்கார்ந்தான்.
‘ஐந்து நாட்களுக்கு முன் என் அப்பா இறந்துபோய்விட்டார்’ என்றாள் அவள்.
‘ஓ! அந்த ஷர்மாவா! ஐம் ஸோ ஸாரி. நான் பேப்பரில் படித்தேன். அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அவருடைய வேலைக்காரன் ஒருவனைக் காணவில்லை என்றும் அவன் மேல் சந்தேகம் இருப்பதாகவும்…’
‘ஆம்.’
‘அந்த வேலைக்காரன் அகப்பட்டானா?’
‘இல்லை.’
‘கிடைத்துவிடுவான்’ என்றான் கணேஷ்.
‘நான் அந்த வேலைக்காரனைப் பற்றிப் பேச வரவில்லை’.
‘எனக்குத் தெரியும்’.
‘எனக்கு உங்கள் உதவி தேவையாக இருக்கிறது’.
‘சொல்லுங்கள், செய்கிறேன். பட் ஐ சார்ஜ்.’
‘என் அப்பா…’
‘குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். உங்களை என்னிடம் யார் அனுப்பினார்கள்?’
‘விஜய்குமார்.’
‘ஆர்.என்.வி?’
‘ஆம்.’
‘அவன் அமெரிக்காவில் அல்லவா இருக்கிறான்?’
‘நானும் அங்கேதான் இருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன்.என் அப்பா இறந்த செய்தி கேட்டு நேற்றுத்தான் வந்தேன்!’
‘அப்படியா! இப்போது புரிகிறது’.
‘என்ன?
‘நீங்கள் என் கையைக் குலுக்கியதன் காரணம்.’
‘இந்தியாவில் அது தப்பு. இல்லை?’
‘இல்லை. சொல்லுங்கள்.’
‘என் அப்பா இறந்துபோன சூழ்நிலை உங்களுக்குத் தெரியுமா?’
‘பேப்பரில் மேலாகப் படித்தேன். பேப்பரை நான் நம்புவதில்லை. நீங்கள் சொல்லுங்கள்’.
‘சென்ற 18-ம் தேதி இரவு என் அப்பா அவர் வேலைக்காரன் கோவிந்தை அழைத்துக்கொண்டு தன் காரில் ஹிஸ்ஸார் போயிருக்கிறார். ஹிஸ்ஸாரில் அவர் ஃபாக்டரி ஒன்று இருக்கிறது.
‘அவரிடம் பதினான்காயிரம் ரூபாய் இருந்தது என்று தெரிகிறது. என் அப்பா ஹிஸ்ஸார் போய்ச் சேரவில்லை. 20-ம் தேதி மாலை அவர் உடல் ரிட்ஜ் ரோடு அருகில் ஒரு பார்க்கைத் தாண்டி ஒரு புதரில் கிடக்கிறது. பக்கத்தில் கார் நிற்கிறது. பணம் இல்லை. கோவிந்தைக் காணோம். கோவிந்த் என்பது அந்த வேலைக்காரன் பெயர்… ‘
‘சொல்லுங்கள்’ என்று ஊக்குவித்தான் கணேஷ்.
‘எனக்குக் கேபிள் தாமதமாக வந்தது. என்னிடம் ரெடியாகப் பணம் இல்லை. பணம் சேகரித்து ஏர் இண்டியாவிடம் கெஞ்சி மன்றாடி ஒரு சீட் கிடைத்து பிளேன் பிடித்து வருதற்குள் நான்கு தினங்கள் ஆகிவிட்டன. என் அப்பாவை எரித்துவிட்டார்கள். அவர் முகத்தை நான் பர்க்கவில்லை. இரண்டு வருஷத்துக்கு முன் பார்த்த ஞாபகம்தான் பாக்கி’.
அந்தப் பெண் மிகவும் பிரயத்தனப்பட்டுத் தன் கண்ணீரை நிறுத்த முயன்றாள். அவள் கண்கள் கண்ணாடியாகிப் பிரதிபலித்தன. தன் ஸாரி முனையால் துடைத்துக்கொண்டாள். கைக்குட்டை கொண்டுவர மறந்திருக்கிறாள்.
‘நான் உங்கள் துக்கத்தை உணர்கிறேன். வார்த்தைகள் சொல்லி ஆறுதல் பெறக்கூடிய துக்கமல்ல. தினங்கள், மாதங்கள், வருஷங்கள் ஆகும்… ஷல் ஐ கெட் யூ ஸம் டீ?’ என்றான் கணேஷ்.
‘வேண்டாம்!”
‘கோல்ட் ட்ரிங்க்!’
‘வேண்டாம், மிஸ்டர் தினேஷ்.’
‘கணேஷ்’.
‘என் அம்மா என் இளவயதிலேயே இறந்துவிட்டாள். ஏழு வயதிலிருந்து கான்வெண்ட்களிலும் ஹாஸ்டல்களிலுமே நான் இருந்திருக்கிறேன். என் அப்பா பைசாவைத் துரத்திக் கொண்டிருந்தபோது நான் சிறிய ஹாஸ்டல் அறைகளில், தலையணைகளில் என் அம்மாவை நினைத்து அழுதிருக்கிறேன். எல்லோருக்கும் வீட்டிலிருந்து திண்பண்டங்கள் வரும். பெட்டிகோட், டிராயர் எல்லாம் தைத்து வரும். கடிதங்கள் வரும். எனக்கு செக்ரட்ரியிடமிருந்து பணம் வரும். எப்போதாவது கார் வரும். என் அப்பா ஒரு நிமிஷம் வந்து பார்த்துவிட்டுப் போவார். வெள்ளமாகத் துணிகளும் சாக்லேட்டுகளும் வாரி இறைத்து விட்டு அருகில் உள்ள ஏரோட்ரோமுக்கு ஓடுவார். வீட்டில் அவர் இருந்ததில்லை. வீடு என்று எனக்கு ஒன்றும் இருந்ததில்லை. அப்புறம் வீடு என்று ஏற்பட்டு, அழகாகக் கட்டி, என்னைக் கூட்டிச் சென்று, ‘இது தான் நம் வீடு. நம் நாய். இது நம் சேவகர்கள். இது நம் கார். இது அனிதா’ என்று அறிமுகப்படுத்தினார்.
‘அனிதா?’
‘ஆம். என் அப்பாவின் வெற்றிப் பாதையில் கடைசி மைல் கல் அனிதா. என்னைவிட ஆறு வயது பெரியவள். இளம் மனைவி! அவளை நீங்கள் பார்க்க வேண்டும் நம்புவதற்கு. அவ்வளவு அழகானவள். அவள் எப்படி வந்தாள் என்பது எனக்குத் தெரியாது. ஏன் வந்தாள், ஏன் என் அப்பாவை மணம் செய்து கொள்ளச் சம்மதித்தாள் என்பதும் எனக்குத் தெரியாது. தோட்டத்துக்குப் போய் ஒரு அழகான மலரை விரும்பிப் பறித்துத் தன் கோட் காலரில் பொருத்திக்கொள்வது போல் அவர் அவளை அடைந்தார். எனக்கு என் இளம் வாழ்க்கையில் கிடைத்த ஒரு வீடும் அனிதாவிடம் வீடாகியது. அவள் அழகும் சாமர்த்தியமும் அங்கே பிரதிபலித்தது. இன்றைக்கு சூப் பண்ணவேண்டுமா? அனிதாவைக் கேள். நாய்க்குக் குளிப்பாட்டவேண்டுமா? அனிதா. அவ்வளவு பேரும் அனிதாவின் அடிமைகள்தான். கழுத்தில் ஒரு சிறிய சங்கிலி போட்டுத் தன் படுக்கை அறையில் என் அப்பாவை அவள் கட்டி வைத்திருந்தாள். இந்த வயதில் அப்பாவுக்கு அவ்வளவு மோகம் அவளிடம் இருந்திருக்கிறது!’
‘நீங்கள் அழகாகப் பேசுகிறீர்கள்’.
‘லுக் கணேஷ், இந்த ‘நீங்கள்’ எல்லாம் வேண்டாம். எனக்கு யாராவது நட்பு தருவார்களா என்று அலைகிறேன். நான் உங்களைவிடச் சின்னவள்’.
‘உன்னை விட என்று சொல். லெட்ஸ் பி ஃப்ரெண்ட்ஸ். ‘
‘சம்மதம்’.
‘சம்மதம். மேலே சொல்.’
‘அனிதா என் அப்பாவை உபயோகித்தவிதம் எனக்குப் பிடிக்கவில்லை. அவர்களுடைய இரண்டாவது ஹனிமூன் நாட்களில் நான் ஒரு குறுக்கீடாக இருந்தேன். நானே விலகிக் கொள்ளப் பிரயத்தனம் செய்தேன். அமெரிக்காவில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அப்பா சந்தோஷமாக போயிங்கில் ஃபஸ்ட் கிளாஸ் டிக்கட் வாங்கிக் கொடுத்து என்னை அனுப்பி வைத்தார்… பிறகு அனிதாவுடன் தனியாக இருக்கலாம் அல்லவா? இந்தப் பெண்ணை ‘சினிமாவுக்குப் போ’, ‘ஜிம்கானா கிளப்பில் போய் டென்னிஸ் ஆடு’ என்று துரத்தவேண்டியதில்லை. இரண்டு வருஷம் அன்னிய நாட்டில் இருந்திருக்கிறேன். இரண்டு அல்லது மூன்று கடிதம் வந்திருக்கும். அதில்கூட, ‘சோனி டேப் ரெகார்டர் அனிதாவுக்கு வேண்டுமாம். ஷார்ப் டெலிவிஷன் செட் வேண்டுமாம். மறக்காமல் வாங்கி வா!’ என்பதுதான் விஷயம். எனக்கு எப்போதுமே அப்பா கிடையாது. கடைசியில் அப்பா எப்படிச் செத்துப்போயிருக்கிறார்! இன்று அனிதா ஒரு விதவை. அழுகிறாள். கண்ணீர் நிஜம் போலத்தான் தோன்றுகிறது. அவளை ஒரு சமயம் நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. மறு சமயம் என் அப்பாவின் சொத்தில் பாதிக்குச் சற்றுமேல் அவளுக்குப் போகப்போகிறது என்கிற ஞாபகமும் வருகிறது. அவ்வளவுதான் கதை.’
‘என் உதவி ஏதோ தேவை என்றாயே?’
‘ஆமாம் மறந்துவிட்டேன். நீங்கள் லாயர் இல்லையா?’
‘ஆம்’.
‘என் அப்பா ஒரு உயில் எழுதி வைத்திருக்கிறார். அதன்படி அனிதாவுக்குப் போனது போக எனக்கு வருகிறது. அந்த உயிலை நான் படித்தேன். பாஸ்கர் காட்டினான்.’
‘பாஸ்கர்?’
‘அப்பாவின் காரியதரிசி. நல்லவன்.’
‘ம்’.
‘அந்த உயில் எனக்குத் தலைகால் புரியவில்லை. பெரிய பெரிய நீளமான வாக்கியங்களாக இருந்தது. எனக்கென்னவோ அதில் ஏதோ சிக்கல் இருப்பதாகப் படுகிறது. அந்த உயிலை நீங்கள் பார்க்கவேண்டும். பார்த்து எனக்கு அதில் எவ்வளவு கிடைக்கும்; கிடைப்பது சீக்கிரம் எனக்கு வந்துசேர நான் என்ன செய்ய வேண்டும்; வரி கட்டவேண்டுமா, எந்த ஆபீசில் போய் நிற்க வேண்டும், யாரைப் பார்த்துச் சிரிக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லவேண்டும்’.
கணேஷ் சிரித்தான். ‘நான் எல்லாம் கவனித்துக் கொள்கிறேன். என்னைப் பார்த்துச் சிரித்தால் மட்டும் போதும். சிரி பார்க்கலாம்’.
அவள் மெல்லச் சிரித்தாள். ஒரு கணம் அவர்கள் பார்வைகள் கோத்துக்கொண்டு விலகின. அவள்தான் விலகி விட்டாள்.
‘தட்ஸ் பெட்டர். இனிச் சில கேள்விகள். உன் அப்பா இறந்து போனதற்கு சர்டிபிகேட் இருக்கிறதா?’
‘தெரியாது. பாஸ்கருக்குத் தெரிந்திருக்கும்.’
‘டெத் சர்ட்டிபிகேட் வேண்டும். உனக்கு எத்தனை வயது.’
’21. இதை வேறு நிரூபிக்கவேண்டுமா?’
‘ஆம். நீ ஒரு மைனர் பெண்ணல்ல என்பது தெரியவேண்டும்.’
‘என்னிடம் டிரைவிங் லைசென்ஸ் இருக்கிறது. விஸ்கான்சினில் கார் ஓட்டி இருக்கிறேன்.’
‘உன் எஸ்.எஸ்.எல்.சி சர்ட்டிபிகேட் இருக்கிறதா?’
‘தேடிப் பார்க்கவேண்டும்’.
‘உனக்கு வரும் பணத்தை என்ன செய்வதாக உத்தேசம்?’
‘செலவழிப்பதாக’.
‘அந்த உயிலை நான் பார்க்கவேண்டும்’ என்றான் கணேஷ்.
‘என் வீட்டுக்கு வாயேன். வஸந்த் விஹார். அழகான பெகினீஸ் நாய் இருக்கிறது. பெயர் ஷோபா. அழகான என் சித்தி இருக்கிறாள். பெயர் அனிதா. நீ பார்த்திருக்கக்கூடிய அழகிகளை எல்லாம் சாப்பிடக்கூடிய அழகு’.
‘நீ அந்த அனிதாவை அதிகம் விரும்பவில்லை என்று தெரிகிறது’.
‘வா(ஹ்)ரே வா, மை டியர் ஷெர்லாக் ஹோம்ஸின் மகனே!’
எவ்வளவு துடிப்பான பெண் இவள் என்று எண்ணிக்கொண்டான் கணேஷ். எவ்வளவு சகஜமாகப் பேசுகிறாள்! இந்த வயதில் மனித இயல்பைப் பற்றி ஒரு புலனாய்வு, ஓர் ஆறாவது அறிவு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பெண் முன்னுக்கு வருவாள். தன்னைக் காப்பாற்றிக்கொண்டு விடுவாள்.
‘என்ன பார்க்கிறாய்?’ என்றாள் மோனிக்கா.
‘யூ ஆர் ஓ.கே’ என்றான்.
‘ஏன்?’
‘நீ பிழைத்து விடுவாய். உன்னை ஒருவரும் ஏமாற்ற முடியாது. மேலும் நான் இருக்கிறேன். கவலைப்படாதே’
‘நீ நினைப்பது அதில்லை. இந்தப் பெண் அப்பா இறந்துபோய் ஐந்தாம் நாளில் இப்படி பைசாக் கணக்குக்கு வந்துவிட்டாளே! இவள் எப்படிப்பட்டவளோ!’ என்றுதானே யோசித்தாய் ?’
‘இல்லை, இல்லவே இல்லை.’
‘யோசி. எனக்குக் கவலையில்லை. மறுபடி சொல்கிறேன், எனக்கு அப்பாவே கிடையாது. என்னைப் பெற்ற தாய் எனக்கு ஞாபகத்தில் வெறும் மூன்று எழுத்து. என் அப்பா ஒரு மெஷின். பணம் செய்து குவித்துவிட்டுப் பிறகு காதலில் சரணடைந்து நின்றுபோன மெஷின். அந்த மெஷினுக்காக என்னால் அழ முடியவில்லை. என் கண்ணீர் எல்லாம் பதினைந்து வயதிலேயே தீர்ந்து போய்விட்டது’.
‘கண்ணீர் வேண்டாம். கொக்கொ-கோலா?’
‘வா, எங்கேயாவது போய்ச் சாப்பிடலாம். இந்த அறையில் அச்சாபீஸ் வாசனை அடிக்கிறது.’
‘இரு, என் காரை எடுத்து வருகிறேன்.’
‘உன்னிடம் கார் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள வேண்டாம். வா, நடக்கலாம்.’
கணேஷ் தன் அறையைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான். அவனுக்காகச் சாலையில் காத்திருந்தாள். ‘இன்று கோர்ட்டுக்குப் போக முடியாது. ஒரு அட்ஜர்ன்மெண்ட் வாங்கவேண்டும். சுனில் குமாருக்குப் போன் செய்து விடலாம் ஹோட்டலிலிருந்து…
‘ஸோ கணேஷ், என்னிடம் பணம் கிடையாது இப்போது’
‘என்னிடம் இருக்கிறது’.
‘எனக்காக ஒர் அக்கவுண்ட் என் கணக்கில் செலவழிப்பதெல்லாம் எழுதிக் கொண்டே வா. என் அப்பாவின் பணம் வந்ததும் தீர்த்துவிடுகிறேன்.’
‘சரி.’
‘கமபதனி.’
‘ஸில்லி கர்ல்’
‘ஏன் தள்ளி நடக்கிறாய்? வெட்கமா?’
‘மரியாதை.’
‘மை ஃபுட்!’
‘மோனிக்கா, மற்றவர்களுக்காவது சில நாட்கள் நீ அடக்கமாக இருக்கவேண்டும்.’
‘என் லாயரின் உபதேசப்படி நடக்கிறேன்.’
ஹாலில் கணேஷ் காத்துக்கொண்டிருக்க, மோனிக்கா மாடிப்படிகளை இரண்டு இரண்டாக ஏறி மேலே சென்றாள்.
கணேஷ் தன்னைச் சுற்றிப் பார்த்தான்.
ஹால் முழுவதும் பண வாசனை, ஓவியங்கள், திரைகள், சில்க் எனாமல் மோஸாய்க், ப்ளாஸ்டிக் வெள்ளி வர்ணக் கண்ணாடி, சுவரிலிருந்து சுவர் வரை மென்மையான கார்ப்பெட், வெளியே பச்சைப் புல், தண்ணீர் தெளிக்கும் சக்கரம், சதீஷ் குஜ்ரால், ஏர்கண்டிஷனர், டெலிவிஷன். இன்னும் என்ன பாக்கி?’
‘கணேஷ்!’
மேலேயிருந்து மோனிக்கா குனிந்து கூப்பிட்டாள். கணேஷ் அவளைப் பார்த்தான். கழுத்துத் திறப்பில் அவள் உள்ளுடை தெரிந்தது. ‘மேலே வா’ என்றாள்.
கணேஷ் மெதுவாகப் படி ஏறினான். தன் தலையைச் சரி செய்துகொண்டான்.
‘சீப்பு வேண்டுமா?’ என்றாள். ‘வேண்டாம்’ என்றான்.
அந்த அறைக்குள் நுழைந்தார்கள்.
இவள்தான் அனிதாவா? இவள்தான். இவள்தான். கணேஷ் சற்றுத் தயங்கினான். விசில் அடிக்கும் ஆசையைப் பிரயத்தனப்படுத்தி அடக்கிக் கொண்டான். வாட் எ வுமன்!
அத்தியாயம்-4
அனிதா கடல் நீலத்தில் ஸாரி அணிந்து கொண்டிருந்தாள். நின்று கொண்டிருந்தாள். அந்த அறையில் அவளால் ஒரு தனி வெளிச்சம் இருந்தது. அவள் அணிந்திருந்த ஸாரி தோள்வரை வருவதற்குச் சற்று கஷ்டப்பட்டிருக்கும் குட்டையான ஸாரி. மிக மெலிதாகப் பவுடர் தீற்றி இருந்தாள். உதடுகள், கண்கள், நாசி, காதில் ஜொலித்த ஒற்றைக் கல், கூந்தல் வெள்ளத்தின் நடுவில் பின்னிரவில் ஜொலிக்கும் ஒற்றைக் கழுத்து, வளைவு, மார்பு, இடுப்புச் சரிவு, பாதங்கள், விரல்கள், கைவிரல்கள், கண்ணிமைகள், புருவங்கள்… எங்கேனும் குறை இருக்கிறதா?’
‘அனிதா, இது கணேஷ்.. கணேஷ். இது அனிதா, இது பாஸ்கர்.’
‘ப்ளீஸ்ட் டு மீட் யூ’ என்றான் பாஸ்கர்.
‘இவர் யார்?’ என்றாள் அனிதா.
‘என் லாயர்’ என்றாள் மோனிக்கா. ‘பாஸ்கர், இவரிடம் அப்பாவின் உயிலைக் காட்டு’.
பாஸ்கர் அனிதாவைப் பார்த்தான். அனுமதி கேட்கும் பார்வை.
‘ஜஸ்ட் எ மினிட். அவ்வளவு அவசரம் வேண்டாம். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். என் பெயர் கணேஷ். சொல்லியாகி விட்டது. நான் வந்திருப்பது காலம் சென்ற ஷர்மாவின் உயிலைப் படித்துப்பார்ப்பதற்கு. படித்துப் பார்த்து மிஸ் ஷர்மாவுக்கு அதைப் புரியவைப்பதற்கு’.
‘ஹி இஸ் மை லாயர். பார்த்தால் சற்று மாஸ்ட்ரியோவான்னி போல இல்லை?’
‘மோனி!’ என்றாள் அனிதா.
‘எஸ், மை டியர் கோ-ரெஸ்பாண்டெண்ட்! அதுதானே அந்த வார்த்தை?’
‘மோனி, உன் அப்பா இறந்துபோயிருக்கும் இந்தச் சமயத்தில் நீ இப்படி…’
‘ஐ நெவர் ஹாட் எ ஃபாதர் அனிதா!’
அனிதா மௌனமானாள். அவள் முகத்தில் சோகத்திரை படிந்தது. கணேஷ் பதட்டத்துடன், ‘மோனிக்கா, நான் இவர்களுடன் கொஞ்சம் பேசவேண்டும். தனியாகச் சற்று நேரம். நீ இருந்தால் பேச்சு நடக்காது. ப்ளீஸ்… ‘
‘நான் அரைமணியில் வருகிறேன். அனிதா! காரை எடுத்துக் கொண்டு போகிறேன், என் காரை’ என்றாள் மோனிக்கா.
‘பாஸ்கர், நீயும் வெளியே போ!’ என்றாள் அனிதா.
ஜன்னலில் திரை ஆடியது. கணேஷின் மனம்போல்.
அனிதா உட்கார்ந்தாள். அவனை நேராகப் பார்த்தாள். சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘மோனிக்காவை எவ்வளவு நாட்களாகத் தெரியும், உங்களுக்கு?’
‘சென்ற ஒரு மணி முப்பது நிமிஷங்களாக’.
‘மோனிக்கா என்னை பற்றிச் சொன்னாளா?’
‘நிறைய. அவள் சொன்னதெல்லாம் சரி’.
‘என்ன சொன்னாள்?’
‘அனிதா – அதுதானே உங்கள் பெயர். மிக அழகானவள் என்று.’
‘சட்!’ என்று அவள் அலுத்துக்கொண்டாள். ‘மோனிக்காவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’
‘அவள் ஒரு குழந்தை. இளமையின் கோபம் இலக்கில்லாமல் எங்கும் பரவுகிறது.’
‘அவள் என்னை வெறுக்கிறாள். அவள் அப்பாவின் மரணத்துக்கு நான் எப்படியோ காரணம், எப்படியோ சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறாள்.’
‘அவள் அப்படிச் சொல்லவில்லை’.
‘அவர் சொத்துக்காக வந்தவள் என்று சொல்லியிருப்பாள்.’
‘அப்படியும் சொல்லவில்லை. அந்தப் பெண் தனியான பெண். அவள் தேடுவது பாசத்தை, அது அவளுக்கு இதுவரை கிடைக்கவில்லை.’
‘உண்மை’.
‘அவள் விரும்புவது ஒரு வீடு. வீடு என்றால் பௌதிக அர்த்தத்தில் இல்லை. மாலை திரும்பிச் செல்ல ஒரு இடம். இள வயதின் ஞாபகங்கள் படிந்திருக்கும் ஒரு இடம். அதுவும் அவளுக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை. அதுதான் அவள் கோபத்துக்குக் காரணம். அவள் வெறுப்புக்குக் காரணம், நிலையில்லாத குழந்தைப் பருவத்துச் சம்பவங்கள். உங்களை அவள் வெறுக்கவில்லை’.
‘இல்லை. அவள் என்னை ஒரு காரணத்துக்காக வெறுக்கிறாள். அவள் அப்பாவை அவள் அடையப்போகும் தருணத்தில் நான் வந்துவிட்டேன், அதனால்…’
‘இருக்கலாம்.’
‘உங்கள் வயதென்ன?’
‘முப்பத்திரண்டு’.
‘கல்யாணம்? குழந்தைகள்’.
‘இன்னும் இல்லை இரண்டும்’.
‘ஏன்?’
‘தொழில் ஊன்றவில்லை’.
‘என் வயது எவ்வளவு இருக்கும்?’
‘இருபத்தெட்டு, மோனிக்கா சொன்னாள்.’
‘இருபத்தொன்பது’.
‘அப்படித் தெரியவில்லை’.
‘இருபத்தொன்பது வயதில் நான் கணவனை இழந்தவள். விதவை. எனக்கு என்ன கிடைத்திருக்கிறது? மோனியின் தனிமையைப் பற்றிப் பேசினீர்களே, என் தனிமையைப் பற்றிச் சொல்கிறேன். என்னை அவர் விலைக்கு வாங்கினார். சந்தித்தார். விரும்பினார். அடைந்தார். ஜஸ்ட் லைக் தட் கடையில் போய் டெரிலின் சட்டை வாங்குவதுபோல.’
‘அப்படியா?*
‘நான் சொத்துக்கு ஆசைப்பட்டுக் கல்யாணம் செய்து கொண்டேன் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். இன்று, இப்போது, இந்த நிமிஷம் தஸ்தாவேஜு தயாரித்துக் கொண்டு வாருங்கள். கையெழுத்திடுகிறேன். எல்லாம் மோனிக்காவுக்கே சேரட்டும். இந்த வீடு, பட்டேல் நகர் வீடு, க்ளார்க்ஸ் ஓட்டல், கடைகள், கம்பெனி ஷேர்கள், தங்கம், வைரம் – எல்லாம் சகலமும் அவளுக்கே போகட்டும். இதை அவளிடம் நீங்கள் போய்ச் சொல்லுங்கள். அனிதாவின் ஆழம் அவளுக்குத் தெரியாது’.
‘எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இரண்டு மணி நேரத்தில் ஏகப்பட்ட சம்பவங்கள்!’
‘அவளிடம் இதையும் சொல்லுங்கள். அவள் அப்பாவிடம் நான் பட்ட பாட்டை, என்னை மணந்துகொண்டுவிட்டுப் பொறாமையால், சந்தேகத்தால், மோகத்தால், என்னை அவர் படுத்திய பாட்டை!’
‘ரியல்லி மிஸஸ் ஷர்மா, இந்தப் பேச்சு அளவுக்கு மீறிய அந்தரங்களில் செல்கிறது என நினைக்கிறேன். ‘
‘என்னை அனிதா என்று கூப்பிடுங்கள். ஷர்மாவிடமிருந்து நான் விடுதலை அடைந்துவிட்டேன். என்னைத் தங்கக் கூண்டில் அடைத்து நாள் தவறாமல் ஆப்பிள் கொடுத்துப் படுக்கைக்குத் தயார்ப்படுத்திய கிராதகரிடமிருந்து விடுதலை பெற்றுவிட் டேன். எனக்கு அவர் சொத்தில் ஒற்றைப் பைசா தேவையில்லை. நான் படித்தவள். எங்கேயாவது வேலை கிடைக்கும். நான் என்னைக் கவனித்துக்கொள்வேன். கணேஷ், நீங்கள் ஒரு லாயர். எனக்காக இந்தக் காரியம் செய்யுங்கள். பத்திரங்களைத் வீட்டிலிருந்து விடுதலை தாருங்கள்.’
‘இரண்டு பேருமே சற்று கோபம் தணிந்ததும் ஓர் ஒப்பந்தத்துக்கு வர முடியும் என நினைக்கிறேன்.’
‘என் கோபம் இந்த ஜன்மத்தில் தணியாது’.
‘மிஸஸ் ஷர்மா, நான் ஒரு கேள்வி உங்கள் கணவர் ஏன் கொலை செய்யப்பட்டார்?’
‘அவர் துரத்தித் துரத்திச் சம்பாதித்த பணம் அவரைக் கொன்றது. கேவலம் பிச்சைக்காசு பதினான்காயிரத்துக்குப் பலியானார். வேலைக்காரன் கொன்றுவிட்டான்’.
‘வேறு ஒரு காரணமும் இல்லை?’
‘இல்லை, ஏன், வேறு காரணம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?’
‘இல்லை.’
‘பின் ஏன் கேட்டீர்கள்?’
‘தோன்றியது. கேட்டேன். மறந்துவிடுங்கள். உங்கள் நிலைமையின் தீவிரத்தை நான் முழுதும் உணர்கிறேன். இன்னும் உங்கள் வாழ்க்கை அஸ்தமித்துவிடவில்லை. தாற்காலிகமான கோபத்தில் உங்களை வந்தடைந்துள்ள சொத்தை உதறிவிடாதீர்கள். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு அதை ஒரு சிறிய நஷ்டஈடாக நினைத்துக்கொள்ளுங்கள். பதட்டத்தில் ஏதும் செய்யாதீர்கள்.’
அனிதா மௌனமாக இருந்தாள். வெளியே பார்த்தாள்.
கணேஷ் அவளைச் சற்று நேரம் கவனித்துப் பார்க்கச் சமயம் கிடைத்தது. அவளை விதவிதமான இயல்புகளில் நினைத்துப் பார்த்தான். ஒரு வீட்டின் ராணியாக, ஒரு வயதானவரின் படுக்கை அறையில், ஒரு கிராமத்தில் ஏழைப் பெண்ணாக, ஒரு ரெயில் நிலையத்தில் அனாதையாக, ஒரு ராஜகுமாரியாக, ஒரு சினிமா நட்சத்திரமாக, ஓர் இளம் விதவையாக…
இளம் விதவை! அல்ல, அல்ல. எதிரே நீல ஸாரியும் வாளிப்பான உடலுமாக நிற்கிறாளே, இவளா விதவை! நான் முப்பத்திரண்டு, இவள் இருபத்தொன்பது.
கணேஷ் இப்போது அவளைத் தன்னருகில் நிற்கிறமாதிரி நினைத்தான். மறுபடி பொட்டிட்டு ஜொலித்துக்கொண்டு என்னருகே புன்சிரிக்கிறாள். மிக அருகே வருகிறாள்…
‘என்ன யோசிக்கிறீர்கள்?’ என்றாள் அனிதா.
‘ஒன்றுமில்லை’.
‘டீ சாப்பிடுகிறீர்களா?’
‘வேண்டாம்.’ கதவு திறந்திருந்தது. கதவைப் பார்த்தான்.
கடைசியில் சொல்லிவிட்டாள். ‘உண்மையாகவே உங்களை வயதான ஒருவரின் மனைவியாக நினைத்துப்பார்க்க முடியவில்லை’.
‘நான் அவரை மணந்ததற்குக் காரணம் சொல்லட்டுமா?’
‘இஷ்டமிருந்தால்…’
‘நம்பமாட்டீர்கள்’.
‘முயலுகிறேன்.’
‘எனக்குப் பதினெட்டு வயதிருக்கும்போது நானும் கண்களில் கனவுடன்தான் மிதந்தேன். டாக்டருக்குப் படிக்க மிக விரும்பினேன். முடியவில்லை. என் அப்பா ஒரு சாதாரண கிளர்க். என்னைச் சிரமப்பட்டுப் படிக்கவைத்தார். ஹோம் சயன்ஸில் பி.ஏ. படித்தேன். என் அப்பாவுக்கு உதவியாக இருக்க வேண்டி வேலை தேடினேன். இங்கே டில்லியில்தான் வேலை கிடைத் தது. ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் சிவிலியன் கிளார்க்காக. என் வேலை கிடைத்ததற்குக் காரணம் என் தோற்றம்தான். தெரியும். நான் வேலை பார்க்கச் சென்ற இடம் எனக்குச் சரிப்பட்டு வரவில்லை. கார்ப்போரலில் இருந்து விங் கமாண்டர் வரை என்மேல் ஈடுபாடு காட்டினார்கள். நான் பொதுவாகவே அடக்கமானவள். அதிகம் பேசமாட்டேன். அந்த வேலையை விட்டுவிட்டேன். அதன் மூலம் எனக்கு ஒரே ஒரு நிலையான சினேகிதம் ஏற்பட்டது. அது ஃப்ளைட் லெஃப்டினண்ட் ராஜா. ராஜா நிஜமாகவே என் அரசன். அவனைப் போன்ற வாலிபனை இனி நான் சந்திக்க முடியாது. பணிவும், அன்பும், மிக முக்கியமாக மனிதத் தன்மையும் நிறைந்த இளைஞன். என்னுடன் பேசினான். சிரித்தான். என்னை ஆட்கொண்டான். கடிதம் எழுதினான். கதைகள் சொன்னான். அவனுக்கு ஆக்ராவுக்கு மாற்றலாகியது. என்னை உடனே மணம் புரிந்துகொள்ள ஆக்ராவுக்கு கூப்பிட்டான். என் அப்பாவுக்கு அப்போது உடம்பு சரியில்லாமல் இருந்தது. ஒரு வாரத்தில் திரும்பி வருகிறேன் என்று சொல்லிச் சென்றவன் வரவில்லை. அங்கே ஒரு விமான விபத்தில் இறந்து போனான்.’
கணேஷ் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
அவள் சற்று நேரம் கழித்து, ‘நீங்கள் உமர் கய்யாம் படித்திருக்கிறீர்களா?’ என்றாள்.
‘ஒரு சில பகுதிகள் படித்திருக்கிறேன்.’
‘இந்த வரிகளை என்னால் மறக்கமுடியாது. ராஜா இறந்துபோய் ரத்தம் சிந்தின இடத்தில் ரோஜா மிகச் சிவப்பாய்ப் பூக்குமென்று எண்ணுகிறேன். என் ராஜா எவ்வளவு சிவப்பாய்ப் பூத்தான். மனம் என்னும் யுத்தகளத்தில்!’
‘பிறகு?’
‘ராஜாவுக்குப்பின் நான் கல்யாணம் செய்துகொள்ள விரும்பவில்லை. டைப் அடித்தேன். ரிசப்ஷனில் வேலை செய்தேன். எல்லா இடத்திலும் என் அழகு என்னைத் தொந்தரவு செய்தது. வருபவர்களைப் பார்த்துச் சிரிப்பதற்காக ஓர் ஓட்டலில் எனக்கு முன்னூறு ரூபாய் தந்தார்கள். எப்போதும்போல் வந்த அவரைப் பார்த்துச் சிரித்தேன். வந்தவர் ஷர்மா. ஓட்டலின் முதலாளி. அந்தக் கிழட்டு ராஜகுமாரன் கண்டெடுத்த சிண்ட்ரெல்லா நான்! அவரது புயல்போன்ற தாக்குதலை என்னால் சமாளிக்க முடியவில்லை. மலர்கள் அனுப்பினார். சில்க் ஸாரிகள். சினிமா டிக்கெட்டுகள். என்னைத் தன் அறைக்கு வரவழைத்துக் கண்களில் நீர்மல்கக் கெஞ்சியிருக்கிறார்… அவருக்கு வேண்டியதெல்லாம் என் அன்பும் பராமரிப்பும்தானாம். இந்தக் கல்யாணம் என்னை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாதாம். ‘எழுதிக் கொடுக்கிறேன். என்னை ஒருமுறை பரிசோதித்துப் பார். உன் சுதந்திரம் எப்படியும் பறிபோகாது. என்னைப் பிடிக்கவில்லை என்றால் மறுநாளே நீ ஃப்ரீ!’ என்றார். வார்த்தைகள்! வார்த்தைகள்… தங்கம்… முத்து … சம்மதித்தேன், அவ்வளவுதான். அதற்கப்புறம் என் கதை திரும்பி விட்டது. ‘
சில நிமிடம் மௌனமாயிருந்தாள், பின்பு
‘நான் கூண்டில் அடைபட்டேன். இரவு, பகல், நடுப்பகல், மாலை, எப்போதும் நான் தேவைப்பட்டபோது அவருக்கு வேண்டும். என்னை மற்றொரு ஆண் ஏறிட்டுப் பார்க்கக்கூடாது. நான் நிமிரக்கூடாது. நிமிர்ந்தால் எத்தனை கேள்விகள்! சபதங்கள் செய்து ஏமாற்றி அடைத்துவிட்டார் மனிதர். வீட்டை விட்டுத் தனியாக நான் கிளம்பமுடியாது. கூட மீனாட்சி வரவேண்டும். வேளைக்குச் சாப்பிட வேண்டும். உறங்க வேண்டும். சினிமா அவருடன்தான் போகவேண்டும். என் வரிசையில் யாராவது உட்கார்ந்துவிடுவார்களே என்று அந்த வரிசையையே ரிசர்வ் செய்துவிடுவார். என்மேல் தூசு படக்கூடாது. நான் மூக்கைச் சிணுங்கினால் டாக்டர் வந்து விடுவார். லேடி டாக்டர். நான் குளிக்கச் சென்றால் வெளியே டவலுடன் காத்திருப்பார் போர்த்தி அழைத்துச் செல்வதற்கு. நான் அருகிலேயே 24 மணி நேரமும் இருக்கவேண்டும். வெளியூர் சென்றால் அவர் பிஸினஸ் முடிந்து வரும்வரைக்கும் நான் ஏர்கண்டிஷண்ட் அறையிலேயே காத்திருக்க வேண்டும். அது ஒரு வினோதமான சித்திரவதை. மிஸ்டர் கணேஷ்… எனக்கு அவர் சொத்தின்மேல் ஆசையா! இப்போது சொல்லுங்கள்’.
‘வினோதமான மனிதர்தான்’ என்றான் கணேஷ்.
‘அவர் மனிதரில்லை’.
கணேஷுக்கு மோனிக்கா சொன்ன வாக்கியங்கள் சட்டென்று ஞாபகம் வந்தன. ‘என் அப்பாவின் கழுத்தில் ஒரு சிறிய சங்கிலி போட்டுத் தன் படுக்கை அறையில் கட்டி வைத்திருந்தாள்…யார் யாரைக் கட்டியிருந்தார்கள்!
‘என் வாழ்க்கை எப்படிச் செல்லவேண்டியது. எங்கே வந்து முடிந்திருக்கிறது பாருங்கள்’ என்றாள் அனிதா.
‘இன்னும் முடியவில்லை மிஸஸ் ஷர்…அனிதா’
‘முடிந்துவிட்டது. முடிந்தது எப்போது? அந்த மாலை – என் ராஜா ஆக்ராவில் இறந்த மாலை, எனக்குத் தகவல் தெரிந்த அந்த மாலை. என் அப்பா உள்ளே படுத்திருக்கிறார். நான் கதவைத் திறக்கிறேன். யூனிஃபார்மில் ஒரு ஏர் ஃபோர்ஸ் இளைஞன் நிற்கிறான். ‘உங்கள் பெயர் அனிதாவா?’ என்கிறான். ஆம் என்கிறேன். ‘ஃப்ளைட் லெஃப்டினெண்ட் ராஜா இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார். அவர் ஒரு ட்ரான்ஸ்போர்ட் பிளேனில் விபத்துக்கு உள்ளாகி, மிக மோசமாக அடிபட்டுச் சில மணி நேரம் உயிருடன் இருந்தபோது உங்கள் பெயரைச் சொன்னார். ஒரு கடிதம் எழுதினார். உங்களிடம் இதைத் தரச் சொன்னார்’ என்கிறான். அவன் தந்தது ஒரு எவர்சில்வர் சங்கிலி. ராஜா அணிந்திருந்த சங்கிலி… எழுதி இருந்தது இரண்டே இரண்டு வார்த்தைகள்! ‘அனிதா, மறக்காதே!’ மறக்க முடியுமா? சொல்லுங்கள். மறக்க முடியுமா? மறக்க முடியுமா?’
அனிதா அப்படியே சரிந்தாள். கீழே உட்கார்ந்து விம்மி விம்மி அழுதாள்.
கணேஷுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஒரு பிரம்மச்சாரிக்குத் துளியும் பழக்கமில்லாத சூழ்நிலை. அழுகிற ஒரு பெண்ணை எப்படி ஆற்றுவது?
கணேஷ் அவள் அருகில் சென்று குனிந்தான். ‘அனிதா, என்ன இது! நீங்கள் குழந்தை இல்லை, இப்படி அழக்கூடாது…’
‘அவர் சொத்துக்கு ஆசைப்பட்டேன் என்கிறார்களே! நான் பட்ட அவச்சொல் போதாதா! போதாதா!’
‘உங்களை ஒருவரும் அப்படிச் சொல்லவில்லை. அது நீங்களாகக் கற்பித்துக் கொள்வது. எழுந்திருங்கள்’.
அவள் எழுந்திருக்கவில்லை. அப்படியே தரையில் சாய்ந்தாள். அவள் கழுத்தில் எவர்சில்வர் சங்கிலி ஒன்று தென்பட்டது. அவள் உடை சரியாக இல்லை.
மயக்கமுற்று விட்டாளா என்ன?
அவள் கண்களின் நீர் நேர்க்கோடாகக் காதுவரை வழிந்தது. அவளது மிக அழகான உதடுகள் திறந்து, அவள் பற்களின் வெண்மையும் ஈறுகளின் ரோஜா நிறமும் தெரிந்தன. அவள் பெரிதாக மூச்சுவிடவே, அவள் ரவிக்கைப் பிடிப்பு விட்டுவிடும் போலிருந்தது…
கணேஷ் அவளை அப்படியே ஏந்தித் தூக்கினான். தூக்கப் படுக்கையில் வைக்கப் போகும் சமயம் மோனிக்கா உள்ளே வந்தாள்.
‘வாட் ஹாப்பன்ட்? நான் குறுக்கிட்டுவிட்டேனா?’ என்றாள்.
‘ஷட் அப்! அனிதா மயக்கமாக இருக்கிறாள்.’
‘அப்படியா! பாஸ்கர், பாஸ்கர்…’
‘மோனிக்கா, ப்ளீஸ், அந்த ஜன்னலைத் திற. ரெஃப்ரிஜிரேட்டரிலிருந்து குளிர்ந்த நீர் எடுத்து வா!’
கீழேயிருந்து மீனாட்சி, ‘என்னம்மா?’ என்றாள்.
‘குளிர்ந்த நீர் எடுத்துவா. அம்மா மயக்கமாக இருக்கிறார்கள். சீக்கிரம்!’ என்றாள். மேலும், ‘கணேஷ், ஒய் நாட் யூ ட்ரை ஆர்ட்டி ஃபிஷியல் ரெஸ்பிரேஷன்?’ என்றான்.
கணேஷ் முதல் தடவையாக மோனிக்காவை வெறுத்தான்.
அவசர அவசரமாக பாஸ்கர் வந்தான். அனிதா படுத்திருப்பதைப் பார்த்தான். கணேஷை வெறுப்புடன் பார்த்தான். உடனே டாக்டருக்கு டெலிபோன் செய்தான். மீனாட்சி வந்து அனிதாவின் உடம்பைத் தடவிக் கொடுத்தாள்.
கணேஷ் அந்த அறையை விட்டு வெளியில் வந்தான். உடன் மோனிக்காவும் சென்றாள். கணேஷ் மௌனமாகப் படியிறங்கினான். எந்தப் பெண்ணை நம்புவது? எந்தப் பெண் பொய் சொல்கிறாள்? அரிது, மிக அரிது, எந்தப் பெண்ணும் சுத்தமாகப் பொய் சொல்வதில்லை. நிஜமும் சொல்வதில்லை. இரண்டையும் கலக்கிறார்கள். கலப்பு சதவிகிதத்தில் வித்தியாசம். எதையுமே முழுவதும் நம்பாதே!
– தொடரும்…
– அனிதா – இளம் மனைவி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1974, குமுதம்.