ஷகீரா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 45,173 
 

ஷகீயை பார்த்த நொடியிலிருந்தே எனக்கு “அந்த” விபரீத ஆசை துளிர்விட ஆரம்பித்தது. இதுவரை நான் கண்ட அழகிகளிலேயே பேரழகி அவள். அவளது குரல் தரும் போதைக்கு நிகரில்லை. அவளது கண்கள் டூமா கோலி குண்டுகள். அளந்துவைத்த மூக்கு. மல்லிகை மொட்டுகளாய் உதடு. செக்கச் சிவந்த நாக்கு. சங்கு கழுத்து. அப்புறம்….

எப்படியாவது ஒரே ஒரு முறை அவளை…

ஆறு மாதத்துக்கு முன்பு சங்கரோடு கடைவீதியில் சைட் அடித்து கொண்டிருந்தபோது தான் அவளை பார்த்தேன். மேகத்திலிருந்து இறங்கும் வெள்ளை தேவதையாய், அலைபோன்ற கேசத்தை தலையாலேயே அசைத்து ஸ்டைலாக ஒதுக்கி ஒயில் நடையுடன் அசைந்தாடி வந்தாள். பார்த்தவுடனேயே என் உள்ளத்தில் பற்றிக் கொண்டது. பற்றிக் கொண்டதின் பெயர் காதல் அல்ல.

காதலுக்கும், எனக்கும் வெகுதூரம்! காதலா? ச்சீ.. கெட்டவார்த்தை!!

என்னடா இது காதலை கூட வெறுப்பானா ஒரு இளைஞன்? என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. என்ன செய்வது? என் கடந்தகால அனுபவங்கள் கசப்பானது. உண்மையான காதலுக்கு எங்கே மதிப்பிருக்கிறது? என்னை காதலித்து ஏமாற்றியவர்கள் பலபேர். காதலிப்பதாக கூறி அவர்கள் காரியத்தை முடித்துக் கொண்டவர்கள் சில பேர். அதிலும் என் கடைசி காதலி ரோஸி ஒரு முறை என் கண் முன்னாலேயே இன்னொருவனோடு.. சேச்சே..சே என்ன கருமம்டா இந்த காதல்?

காதல் என்ற வார்த்தையே ஒரு பம்மாத்து. காதல் போய் சங்கமிக்கப் போவது எப்படியும் காமத்தில் தானே? அப்புறம் எதற்கு இடையில் இந்த அபத்தமான “ஐ லவ் யூ” நடிப்பெல்லாம்? விருப்பமிருந்தாலோ அல்லது வலுக்கட்டாயமாகவோ நேரடியாகவே “அதை” அடைந்துவிட வேண்டியது தான் என்று எண்ணத் தொடங்கி விட்டேன். என் எண்ணங்களுக்கு பிள்ளையார் சுழி போட ஷகீரா தான் முதலாவதாக கிடைத்திருக்கிறாள். வாய்ப்பை நழுவவிட்டு விடக்கூடாது.

ஷகீராவை பற்றி நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தேன். பெரிய இடமாம். வீட்டுக்கு ரொம்ப செல்லமாம். கிட்டே நெருங்குவதைப் பற்றி நெனைச்சி கூட பாக்காதேடா என்றான் சங்கர். நானோ அன்றாடங்காய்ச்சி. அவளோ அரண்மனைவாசி. இது என் மூளைக்கு எட்டுகிறது. மனசுக்கு புரியமாட்டேன் என்கிறதே? என் உள்ளத்தில் அந்த “தீ” கொளுந்து விட்டெரிய ஆரம்பித்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவளைப் பார்க்கும் போதெல்லாம் மன்மதன் விட்ட அம்புகள் என் மலர்நெஞ்சை கொஞ்சம் கொஞ்சமாய் காயமாக்கி உயிரை உருக்கிக் கொண்டிருந்தது.

கார்த்திகை மாத நள்ளிரவு. மாலைபெய்த மழையில் தெருவெல்லாம் மசமசவென்றிருந்தது. லேசாக பனிபெய்து கொண்டிருந்தது. பனிமூட்டத்தால் மந்தமான சூழல் நிலவியது. என் உடல் தூங்கிக் கொண்டிருக்க உள்ளமென்னும் அரக்கன் எழுந்தான். இன்று எப்படியாவது ஷகீரா மேட்டரை முடிச்சாகணும் என்று முடிவுசெய்தேன்.

ஓசைப்படாமல் எழுந்து நடந்தேன். தெருவே நிசப்தமாக இருந்தது. என் இதயம அடித்துக் கொள்ளும் லப்-டப் சப்தம் எனக்கே கேட்டது. “இந்த” விஷயத்தில் எனக்கு முன்னனுபவமும் இருந்து தொலைக்கவில்லை. ஷகீராவின் இல்லத்தை நெருங்கிவிட்டேன். பெரிய இரும்புகேட். தொட்டாலே சத்தமிடும் என்று தோன்றியது. காம்பவுண்டை பார்த்தேன். அவ்வளவாக உயரமில்லை. எப்படியும் தாண்டி குதித்து விடலாம்.

நான்கு அடி பின்னால் சென்று ஓடிவந்து தாவி குதித்தேன். “தொப்”பென்ற சத்தம் கேட்டு தோட்டத்தில் சின்ன சலசலப்பு எழுந்தது. மூச்சை இழுத்துப் பிடித்து தரையோடு, தரையாக பதுங்கினேன். ஐந்து நிமிடம் கழிந்தவுடன் மெல்ல எழுந்தேன். பூனை போல் நடைவைத்து வீட்டை நெருங்கினேன்.

ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்துக் கொண்டே சென்றேன். எங்கேதான் இருக்கிறாளோ ஷகீரா? நேரம் வேறு ஆகிக்கொண்டே போகிறது. விடிந்துவிட்டால் காரியம் கெட்டுவிடும். வீட்டின் கடைசி அறை இதுதான். மெல்ல எட்டிப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ஷகீரா. வாடாமல்லி போன்ற வசீகரம் ஷகீராவுக்கு. ஒரு நிமிடம் அப்படியே அவளை இமைகொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தேன். அவள் மீது பாயும்போது அவள் சத்தம் போட்டுவிடக்கூடாதே என்ற பயமும் இருந்தது. வலுக்கட்டாயமாக நான் ஒரு பெண்ணை அடையப் போவது இதுவே முதல் முறை.

கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. இருந்தாலும் ஷகீயின் வனப்பை நினைத்துக் கொண்டே அவளை நெருங்கும்போது “டொம்” என்று என் மண்டையில் ஏதோ விழுந்தது. ஒரு நொடி மூளை இயங்குவதை மறந்துவிட, அடுத்த நொடி “வள்”ளென்று கத்திக் கொண்டே வாலை வேகமாக ஆட்டிக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். கையில் லத்தியோடு அந்த வீட்டு வாட்ச்மேன் என்னை துரத்த ஆரம்பித்தான். தூக்கம் கலைந்த ஷகீராவும் “லொள்.. லொள்” என்று கத்த ஆரம்பித்தாள். வாட்ச்மேன் துரத்த லாவகமாக ஓடி காம்பவுண்டை தாண்டிக் குதித்து ஓட ஆரம்பித்தேன். என் சத்தத்தைக் கேட்டு ஆங்காங்கே உறங்கிக் கொண்டிருந்த மற்ற தெருநாய்களும் நரிகளைப் போல ஊளையிட்டு இரவின் நிசப்தத்தை கலைக்கத் தொடங்கின. இன்னும் சில நாழிகைகளில் சூரியன் கிழக்கில் வெளுக்கப் போவதற்கான அறிகுறியும் தெரிய ஆரம்பித்தது.

– ஆகஸ்ட் 2009

Print Friendly, PDF & Email

கத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2023

மாலினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2023

அன்பின் அடையாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)