வீம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 6,432 
 

ஞாயிறு மாலை ஆறு மணி.

பாலவாக்கம் கடற்கரையில் பாஸ்கர் தன் வெள்ளைநிற பென்ஸ் காரின் ஏஸியை மெலிதாக இயங்கச் செய்துவிட்டு காயத்ரிக்காக காரினுள் காத்திருந்தான்.

பாஸ்கரும் காயத்ரியும் கடந்த இரண்டு வருடங்களாகக் காதலிக்கின்றனர். அடுத்த வருட ஆரம்பத்தில் திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கின்றனர். அவர்களின் காதல் திருமணத்தில் பிரச்சினை எதுவும் ஏற்படாது என திடமாக நம்புகின்றனர்.

காரணம் இருவரும் ஒரே ஜாதி, மதம்; கல்வித் தகுதிகள்; பணம். பாஸ்கர் சென்னையின் ஒரு புகழ் பெற்ற பெரிய ஹாஸ்பிடலில் கார்டியாலஜிஸ்ட். பெற்றோருக்கு ஒரே செல்ல மகன். சென்னையின் லஸ் கார்னரில் பெரிய வீடு; தவிர திருச்சியில் நில புலன்கள்.

காயத்ரியும் ஒரே மகள். அவளை வீட்டில் ‘ராணி’ என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவார்கள். எம்..ஆர்க் படித்துவிட்டு அடையாறில் சொந்தமாக ஆர்க்கிடெக்ட் நிறுவனம் வைத்துள்ளாள். அவளுக்கு கீழே ஆர்க்கிடெக்ட் படித்த பத்து பன்னிரண்டு இளம் வயதினர் வேலை செய்கின்றனர். சென்னையில்; பெங்களூரில்; கோயமுத்தூரில் என்று பேர் சொல்லும் படி சில அழகிய மால்கள், பங்களாக்களை வடிவமைத்து புகழும் பணமும் ஏராளமாக ஈட்டியுள்ளாள்.

இரண்டு வருடங்களுக்கு முன், கோயமுத்தூர் ஈஷா மையத்தில் ஜக்கி வாசுதேவ் வருடா வருடம் நடத்தும் யோகா வகுப்பில் இருவரும் சந்திக்க நேரிட்டது. . பின்பு அதுவே காதலாக மாறியது. எப்பவுமே அவர்கள் இருவரும் பிஸியாக இருப்பதால் ஞாயிறுகளில் மட்டும்தான் பாலவாக்கம் பீச்சில் சந்திப்பார்கள். எப்போதும் பாஸ்கர் ஐந்து நிமிடங்கள் முன்பாக வந்து காத்திருப்பான். காதலியை காத்திருக்க விடமாட்டான்.

அடுத்த மூன்று நிமிடங்களில் காயத்ரி தன்னுடைய சாக்லேட் நிற ஆடி காரை மெதுவாக ஓட்டி வந்து, அதை ஓரம்கட்டி பாஸ்கரின் பென்ஸ் பின்னால் சத்தம் இல்லாது கொண்டுவந்து நிறுத்தினாள். காத்திருந்தாள்.

பின்னால் காயத்ரி வந்துவிட்டதை ரியர்வியூ மிரரில் பார்த்துவிட்ட பாஸ்கர் ஏஸியை நிறுத்திவிட்டு நிதானமாக தன் காரைவிட்டு இறங்கினான். பின்பு மெதுவாக நடந்துசென்று காயத்திரியின் காரை முன்புறமாகத் திறந்து அவளருகில் அமர்ந்தான்.

இருவரும் முதலில் தங்கள் தொழில் நிமித்தம் நிறைய பேசிக் கொண்டார்கள். பிறகு சற்று நேரம் காதலுடன் கசிந்து உருகினார்கள். அவர்கள் ஒருவரையொருவர் இதுவரை உரசிக் கொண்டதில்லை; ஏன் தொட்டது கூட இல்லை. அவ்வளவு நாகரீகம், பண்பு அவர்களின் காதலில்.

பாஸ்கர் உற்சாகத்துடன், “காயத்ரி நான் இந்த வருடம் நவம்பர் மாதம் மயிலாப்பூரில் சொந்தமாக ஒரு ஹாஸ்பிடல் கட்டிமுடிக்க முடிவு செய்துள்ளேன். அதற்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்துவிட்டேன். அந்த ஹாஸ்பிடல் பெயர் என்ன வச்சிருக்கேன் தெரியுமா?” என்றான்.

காயத்ரி விடை தெரியாமல் அவனையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்தாள். “நீயே சொல்லு பாஸ்கர்.”

“காயத்ரி ஹாஸ்பிடல்.”

காயத்ரி மிகுந்த குதூகலத்துடன் “வாவ்… காதலிக்காக ஷாஜஹான் தாஜ்மஹாலைக் கட்டிய மாதிரி, காதலியின் பெயரில், அதுவும் திருமணத்துக்கு முன்னாலேயே, ஒரு ஹாஸ்பிடலா? இப்படி யாருமே பண்ணியிருக்க மாட்டாங்க பாஸ்கர்… ஐ லவ் யூ ஸோ மச்.” என்றாள்.

“காயத்ரி, உன்னை நான் என் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அடுத்த சண்டே என் வீட்டுக்கு வாயேன். அவர்களுக்கு நம் காதலைப்பற்றி ஒரு ஹின்ட் கொடுத்திடலாம்… புரிந்து கொள்வார்கள்…”

“ஓ ஷ்யூர் பாஸ்கர். முதல் தடவை உங்க வீட்டுக்கு வரேன். அதனால மாலை நான்கு மணிக்கே ராகுகாலம் முன்பாகவே வலது காலை எடுத்து வைத்து வருகிறேன்…” சிரித்தாள்.

பிறகு சற்று நேரம் பேசிவிட்டு இருவரும் பிரிந்து சென்றனர்.

அடுத்த ஞாயிறு.

சரியாக மாலை நான்கு மணிக்கு காயத்ரி வந்தாள். பாஸ்கரின் பெற்றோருடன் மிகச் சுலபமாக ஒட்டிக்கொண்டு விட்டாள். பாஸ்கரின் அம்மா அவளிடம் “உன் கோத்திரம் என்ன” என்று கேட்டாள் என்றால் பார்த்துக் கொள்ளலாம். பாஸ்கரின் அப்பா ரொம்பக் கலகல.

சுடச் சுட வெங்காய பஜ்ஜி; கற்பூரவல்லி இலை பஜ்ஜி வந்தது. இது என்ன ஆன்டி, மெடிசினல் பஜ்ஜியா என்றாள். சாப்பிட்டுப் பார்த்துவிட்டு “பிரமாதம்” என்றாள்.

பாஸ்கரின் அப்பா, சமயலறையில் இருந்த மனைவியிடம், “காயப் அப்படியே திக்கா காபியும் போட்டு எடுத்துண்டு வா…” என்றார்.

“அது என்ன காயப், அப்படின்னா என்ன அங்கிள்?”

“என் அருமைப் பொண்டாட்டியோட முழுப் பெயர், காயத்ரி. ஆனா அவளை நான் செல்லமா காயப் என்றுதான் கூப்பிடுவேன்.

“ஓ வெரி நைஸ்…”

பிறகு சூடான காபியை பருகியபடி மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஏழு மணிக்கு காயத்ரி கிளம்பிச் சென்றாள். அவள் போனபிறகு அம்மா அவளைப் பற்றி ரொம்பச் சிலாகித்துப் பேசினாள். பாஸ்கர் உள்ளூர மிகவும் சந்தோஷப் பட்டான்.

ஆனால் தன் வீட்டையடைந்த காயத்ரி கல கலப்பாக இல்லை. அவள் மனதை ஒரு பதில் தெரியாத கேள்வி அரித்துக் கொண்டிருந்தது. இரவு தூக்கம் வரவில்லை. போன ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய புதிய ஹாஸ்பிடலுக்கு ‘காயத்ரி ஹாஸ்பிடல்’ என்று பெயர் வைத்திருப்பதாக பாஸ்கர் சொன்னானே…. அந்தப் பெயர் அவன் அம்மாவின் பெயர். அதனாலேயே அவன் அந்தப் பெயரை வைத்துள்ளான். தன் மேல் இருக்கும் காதலினால் அந்தப் பெயர் வைக்கப்படவில்லை. தன்னை பொய் சொல்லி ஏமாற்றிவிட்டான்.

என் மீது உண்மையிலேயே அவனுக்கு காதல் இருக்குமாயின் இப்பவும் அதை அவன் ‘ராணி ஹாஸ்பிடல்’ என்று பெயர் மாற்றம் செய்யலாம். இன்விடேஷன்ஸ் இன்னமும் பிரிண்ட் செய்யப் படவில்லை. அதனால் அவனால் அது முடியும்.

ஏனென்று தெரியவில்லை. திருமணத்திற்கு முன்பே மாமியார் மீது அவளுக்கு ஒரு இனந்தெரியாத பொறாமைத் தீ மூண்டது. ஒரு முடிவோடு அவளை அறியாமல் அன்று தூங்கிப் போனாள்.

திங்கள் காலை அலுவலகத்தில் அவளுக்கு வேலையே ஓடவில்லை. திடீரென பாஸ்கர் மொபைலுக்கு போன் செய்தாள்.

“பாஸ்கர், இன்னிக்கி ஈவ்னிங் ஆறு மணிக்கு நாம மீட் பண்றோம்…”

“என்ன திடீர்ன்னு காயத்ரி… இன்னிக்கி மண்டே…”

“தெரியும்… நீ கண்டிப்பா வர்ற..” போனை டிஸ்கனெக்ட் செய்தாள்.

பாஸ்கர் பீச் சென்று காத்திருந்தான். காயத்ரி வந்தாள். அவள் காரில் அவன் அமர்ந்தான். முகத்தில் எப்போதும் காணப்படும் பொலிவு அன்று அவளிடம் இல்லை.

“லெட்ஸ் கம் டு த பாயின்ட் பாஸ்கர். நீ உன்னோட அம்மாவின் பெயரில்தானே ஹாஸ்பிடல் கட்டப் போகிறாய்… பின் எதற்கு என்னிடம் காதலி பெயரில் என்று பொய் சொல்ற பாஸ்கர்?”

“என்ன ஆச்சு உனக்கு காயத்ரி? திடீர்ன்னு ஒரு மாதிரியா பேசறே? அன்னிக்கு நான் வெறுமனே ‘காயத்ரி ஹாஸ்பிடல்’ என்று பெயர்தான் சொன்னேன். நீதான் உடனே தாஜ் மஹால்; காதல் அது இதுன்னு ஆரம்பிச்சே… உன்னோட மகிழ்ச்சிதான் எனக்கும் சந்தோஷம் என்று அப்போது நானும் சும்மா இருந்துவிட்டேன்…”

“ஓ அப்ப உண்மையில் அம்மா பெயரில்தான் அந்த ஹாஸ்பிடல், இல்லே?”

“ஆமாம் காயத்ரி. அது உண்மைதான். அம்மா பெயரே உனக்கும் இருப்பதில் எனக்கு இரட்டை சந்தோஷம் காயத்ரி…”

“இந்த ஹாஸ்பிடல் என் பெயரில்தான் இருக்க வேண்டும் பாஸ்கர்…”

“சரி அப்படியே ஆகட்டும் காயத்ரி. உன் பெயர் என்றே நீ அந்த ஹாஸ்பிடலை நெனச்சுக்கோயேன்.. இதுல என்ன தப்பு? கல்யாணத்துக்கு அப்புறம் நீ என் அருமை மனைவிதானே?”

“நீ அதை ‘ராணி ஹாஸ்பிடல்’ என்று மாற்ற வேண்டும் பாஸ்கர்.”

“………………………..”

“என்ன பதிலையே காணும்?”

“காயத்ரி… ப்ளீஸ் என்னோட அம்மா உன்னோட அம்மாவும்தானே? அம்மா என்றால் பாசமும், அன்பும், மரியாதையும்தானே காயத்ரி… அவள் பெயரிலேயே இருந்து விட்டுப் போகட்டுமே?”

“நோ பாஸ்கர், நீ பெயரை மாத்தப் போறியா இல்லையா?”

“ப்ளீஸ்… அதெப்படி காயத்ரி. அம்மா என்னை ஈன்றெடுத்தவள்; பாசம் காட்டி வளர்த்தவள்; கல்வி புகட்டியவள்; அவள் நான் வணங்கும் தெய்வம்.”

“நோ பாஸ்கர்… ஐ திங்க் லெட் அஸ் அக்ரி டு டிஸ்அக்ரி வித் ஈச் அதர்…”

“காயத்ரிம்மா ப்ளீஸ் வீம்பு பிடிக்காத. ஐ லவ் யூ ஸோ மச்..”

“நானா வீம்பு பிடிக்கிறேன்? நீதான் பேரை மாத்த மாட்டேன்னு அழிசாட்டியம் பண்ற பாஸ்கர்…”

பாஸ்கரின் முகம் சிவந்தது. முணுக்கென்று கோபம் வந்தது. உடனே காரை விட்டு கீழே இறங்கி கதவை அடித்துச் சாத்தினான். தன்னுடைய காரை நோக்கி நடந்தான்.

அடுத்த கணம்…

காயத்ரி தன்னுடைய காரைக் கிளப்பி சீறிப் பாய்ந்தாள். சற்று தூரத்தில் குறுக்கே மிக வேகமாக வந்து கொண்டிருந்த தண்ணி லாரியை கவனிக்கத் தவறிவிட்டாள்.

லாரி அவளுடைய காரின் மீது வலது பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆடியின் சேப்டி பலூன்கள் விரிந்தன. இருப்பினும் காயத்ரி தலையில் பயங்கர அடியோடு ல்டீரிங் வீலில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து கிடந்தாள்.

கார் விபத்துக்குள்ளானதைப் பார்த்துவிட்ட பாஸ்கர் ஓடிவந்தான். நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொண்டு துரிதமாகச் செயல்பட்டான். அவளைத் தன்னுடைய காரில் கிடத்தி தான் வேலை செய்யும் ஹாஸ்பிடல் எமர்ஜென்சியில் அட்மிட் செய்தான். அவளுடைய அம்மா அப்பாவிற்கு உடனே தெரியப் படுத்தினான்.

பாஸ்கரின் தனிப்பட்ட அக்கறையினால், அடுத்த இரண்டு வாரங்களில் காயத்ரி பூரண குணத்தோடு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.

அதைத் தொடர்ந்து ஒரு ஞாயிற்றுக்கிழமை அவளை நலம் விசாரிக்க அவளுடைய அடையாறு வீட்டிற்கு சென்றான்.

காயத்ரி அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு அழுதாள். “என்னோட அகம்பாவத்திற்கு கடவுள் உடனே தண்டனை கொடுத்துவிட்டார் பாஸ்கர்… என்னை மன்னித்துவிடுங்கள். உங்களின் உண்மையான காதலை நான் உணர்ந்துவிட்டேன் பாஸ்கர். ப்ளீஸ் என்னுடைய கசப்பான அமில வார்த்தைகளை மறந்து விடுங்கள்…”

“ஒரு டாக்டராக என் கடமையைச் செய்தேன். உடைந்த கண்ணாடிப் பாத்திரத்தை இனி ஓட்ட வைக்க முடியாது காயத்ரி. நம் காதல் என்றோ கருகிவிட்டது… உடம்பைப் பார்த்துக்கொள். நான் வருகிறேன்.”

கிளம்பிச் சென்றான்.

காயத்ரி விக்கித்துப் போனாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *