கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் மறுமலர்ச்சி
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 3,043 
 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் அன்பு நிறைந்த காதலருக்கு:

‘காதலர்’ என்று தங்களை விளிப்பதா? வேறெந்தவிதமாகவாவது விளிப்பதா? ஒன்றும் எனக்குப் புலனாகவில்லை . காதலர் என்ற வார்த் தையைக் கண்டதும் உங்களுக்கு ஒருசமயம் சிரிப்பு வரவுங்கூடும். சிரித்தாலும் சிரியுங்கள். நான் அப்படித்தான் எழுதுவேன். அதை என் மனப்பூர்வமாகத்தான் எழுதுகிறேன்.

இராமநாதனுக்கு என்னிடத்திலே காதல் இருந்தது. உண்மையே ஆனால் நான் அவரைக் காதலிக்கவில்லை என்று உங்களுக்குக் கூறி யதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். அவ்விஷயத்தைப் பற்றி நாம் இருவரும் சம்பாஷித்து ஒரு வாரந்தானே ஆகிறது! அதற்கிடையில் மறந்து விடுவீர்களா!

அவரை நான் காதலிக்கவில்லை என்பதன் அர்த்தம் நான் அவரை விரும்பவில்லை என்பது அல்ல. நான் அவரை மிகச் சிறு பரு வத்திலே கண்டதற்குப் பின்பு சந்தித்தது கிடையாது. அவர் என்னைக் கண்டிருக்கலாம்; காதலித்திருக்கலாம். அவர் என்னைக் காதலிக்கிறார் என்பதும் எனக்குத் தெரியாது. ‘அவன்’ என்று கூறாமல் ‘அவர்’ என்று கூறுவதற்கு மன்னி யுங்கள். அப்படிக் கூறுவதுதான் இந்த இடத்தில் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன் அவர், தான் என்னைக் காதலிப்பதை முன்பே எனக்கு அறிவித்திருந்தார். நான் ஒரு சமயம் அவர் காதலை ஏற்று நானும் அவரைக் காதலித்திருப்பேன்; ஓர் சமயம் காதலியாமல் இருந்திருக்கவுங்கூடும். ஆனால், பின் நிகழ்ந்த விடியங்களைப் பார்க்கும்போது அவர் தன் காதலை எனக்கு வெளியிட்டு நான் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்திருப்பின், அவர் தற்கொலை செய்ததை அறிந்து அதேகணம் நானும் தற்கொலை செய்து இருந்திருப்பேன்.

நான் தங்களுக்கு எழுதும் முதற் கடிதத்தில் எனக்குத் தங்களிடம் இருக்கும் காதற் பெருக்கையும், கலியாண நாட்களில் நான் அனுபவித்த இன்பத்தையும், அதை நினைத்து நான்படும் அவஸ்தைகளையும் பற்றி எழுதாமல், இடையிலே நானும் அறியாது நீங்களும் அறியாது காட்டிலே பூத்த மலரைப்போல அவருடைய உள்ளத்திலே மலர்ந்து அங்கேயே வாடிக்கருகிப் பூண்டோடே அழிந்துவிட்ட ஒருவர் காதலைப் பற்றி எழுத நேர்ந்தமைக்காக வருந்தி இருக்கிறேன்.

அவ்விஷயத்தைப் பற்றி நீங்கள் அறியாமலிருப்பது நல்லது. அதை அறிவதால் என் னிடத்திலே தங்களுக்கு அன்பு குறையலாம் என்று எண்ணினேன். கொழும்புக்குச் செல் வதற்கு முதல்நாள் அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தீர்கள். நீங்கள் அவ்விஷயங்களை ஓரளவு அறிந்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நேருக்குநேர் கேட்பீர்கள் என நான் எண்ணவில்லை. அன்று அவ்விஷயத்தை நீங்கள் கேட்டபோது என் நெஞ்சில் ஈட்டி கொண்டு தாக்கியது போல இருந்தது. ஆனால் அதைக் கேட்டது ஓரளவிற்கு நல்லது என்றே எண்ணு கிறேன். நான் குற்றவாளியல்ல என்று கருதியே நீங்கள் என்னை மணந்ததாகக் கூறினீர் களல்லாவா? அது உண்மைதான். என்றாலும் சிறு சந்தேகங்கள் தங்கள் உள்ளத்திலிருந்தது என்பது தங்கள் சம்பாஷணையிலிருந்து புலனாகிறது. அச்சந்தேகங்களை முற்றாக நீக்கி, நான் நிரபராதி என்பதை நிலை நிறுத்துவதற்கு உங்கள் கேள்வி அரிய சந்தர்ப்பமளித்தது. அதனால் நான் பெரிதும் ஆறுதலைடைந்தேன்.

அவர் என்னை மணப்பதற்காகப் பலவித முயற்சிகள் செய்திருந்தாராம். பல நண்பர்கள் மூலமும் என் பெற்றாரிடம் எனக்கு மணம் பேசுவித்தாராம். இவையெல்லாம் நான் முன்பு உங்களுக்குத் கூறிய விஷயந்தான். ஆனால் இன்னும் என் மனச்சுமை நீங்கியபாடில்லை. ஆகையால் இரண்டாம் முறை இக்கடிதத்திலே ஆறுதலாகவும் விரிவாகவும் எழுதி, என சுமையைக் குறைத்துக் கொள்கிறேன். அன்று உங்கள் எதிரில் நான் அதிர்ச்சியடைந திருந்தமையால் பல விஷயங்களைக் கூறமுடியாமற் போய்விட்டது.

அவர் மணம் பேசுவித்தபோதிலும் அவர் பெற்றாரின் சம்மதத்தோடு மணம் பேசப் படவில்லை. என் பெற்றார் அப்பேச்சிற்கு முதலில் சம்மதம் அளித்தார்கள். ஆனால் அவரு டைய பெற்றார் சம்மதிக்காமையினாலேயே மணப்பேச்சுக் குழம்பியது. ஆனால், என்மது இத்துணைக் காதல் கொண்டிருந்தவர், பெற்றாரின் தடையை மீறிவந்து மணக்க முடியா திருந்திருக்கமாட்டார். அவருடைய பெற்றார். எங்கள் குடும்பத்தின் மீது சில இழிவுகளைச் சுமத்தியே அப்பேச்சைக் குழப்பினார்கள். அது என் பெற்றாருக்கு எட்டிவிட்டது. முதலில் சம்மதம் தெரிவித்தவர்கள். பின்பு இதை அறிந்ததும் அவர் தமது பெற்றாரின் தடையை மற வந்து என்னை மணந்து கொள்வதையும் விரும்பவில்லை.

அவன் தன் காதலை உன்னிடம் வெளியிட்டிருந்தால் அவனை நீ மணந்திருப்பாயா? என்ற கேள்வியை நீங்கள் மிகவும் அழுத்தமாகக் கேட்டது இன்னும் எனக்கு நினை விருக்கிறது. அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்த பின்புதான் அவருடைய காதல், மனி தத் தன்மைக்கு அப்பாற்பட்டது என்று எண்ணினேன். அதற்குமுன் அவர் என்னிடம் தன் காதலை வெளியிட்டிருந்தாலும் அது உண்மையான காதல்தானா, அல்லது ஏமாற்றும் வகை யில் சேர்ந்ததா என்று எப்படி என்னால் தீர்மானிக்க முடியும்? அதிகமாக நான் அவர் காதலுக் காக இரங்கினாலும், மணஞ்செய்ய உடன்பட்டிருக்கமாட் டேன் என்றுதான் எண்ணுகிறேன். ஆனால் அவர் நேரிற்கண்டு என்னிடம் தன் காதலை வெளியீடாதது நல்லது என்றும் எண்ணுகிறேன்.

இன்னுமொன்று அவர் தற்கொலை செய்து இறந்ததன் பின்புதான் அவரை எனக்கு மணம் பேசிய விஷயமும் அது முறிந்த வரலாறும் எனக்குத் தெரிய வந்தது. பெற்றார் விவாகப் பேச்சை ஒரு ஒழுங்கிற்குக் கொண்டுவந்து என் சம்மதம் கேட்பதற்கிடையிலேயே பேச்சு முறிந்துவிட்டது. அதனாலேதான் அதை அறிய எனக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

‘இதற்காக ஒருவன் தற்கொலை செய்வானா? என்ற கேள்வியையும் நீங்கள் கேட்டீர்கள். இது என்னையும் அவமானப்படுத்துவதாக இருந்தது. நீங்கள் இதில் ஏதாவது மர்மம் இருக்க வேண்டும். எனக்கும் அவருக்குமிடையில் ஏதாவது நேசம் இருந்திருக்க வேண்டும். அல்லாவிட்டால் அவர் விரைவிலே இப்படித் தற்கொலை செய்திருக்கமாட்டாார் என்ற பொருள் தொனிக்கத்தான் அப்படிக் கேட்டீர்களோ என்று நான் எண்ணினேன். ஆனால் நீங்கள் அப்படி நினைத்திருக்கமாட்டீர்கள். எதை நினைத்துத்தான் நீங்கள் கேட்டபோதிலும் அது என்னை அவமானப்படுத்தும் கேள்வியாகவே எனக்குப்பட்டது.

ஒரு சமயம் அவர் தற்கொலை செய்துகொண்டதைக் கேட்க உங்களுக்குப் பகிடியாக இருக்கலாம். இதில் ஏதோ முற்பிறவித் தொடர்பிருக்க வேண்டும். அல்லாவிட்டால் அவர் என்மீது இத்துணைக் காதல் கொண்டிருக்க நியாயமில்லை. அவர் என்மீது வைத்திருந்த காதலுக்காக நான் இரங்குகின்றேன். நீங்கள் அவரைப்பற்றி இப்படி ஏளனம் தோன்றப் பேசு வதை என்னால் சகிக்க முடியவில்லை. அன்று நீங்கள் இதைக் கேட்டபோது உங்கள் பேச்சில் எனக்குச் சிறிது வெறுப்புக்கூட உண்டாயிற்று. நீங்கள் என்மீது வைத்திருக்கும் காதல் மட்ட மானதோ என்று ஒரு சமயம் நான் எண்ண வேண்டியும் வந்தது. ஆனால் நான் அப்படி எண் ணியது தவறு. என்னை அதற்காக மன்னித்து விடுங்கள். இறுதியில் நீங்கள் காட்டிய கடிதத் தையும் அதில் எழுதப்பட்டிருந்த அபாண்டமான பழியினையும் நீங்கள் பொருட்படுத்தாமல் என்மீது இத்துணை அன்பு செலுத்தியதிலிருந்து நான் முதலில் அப்படி எண்ணியதற்காக என்னையே நொந்து கொண்டேன்.

என்னை மணந்தால் மணப்பது, அன்றேல் இந்த வாழ்க்கையை முடித்துக்கொள்வது. இரண்டில் ஒன்று என்று அவர் தீர்மானிதிருந்திருக்கிறார். இப்படியான காதல் அருமையாக வேதான் நிகழ்கிறது. இதைப் பற்றி நான் கூறிய போது அப்படியான ஒரு காதலை அனுபவிக்க உனக்குக் கொடுத்து வைக்கவில்லை! என்று நீங்கள் கூறினீர்கள். அதை நீங்கள் பகிடியாகக் கூறினீர்களோ, உணர்ச்சியுடன் கூறினீர்களோ, ஒன்றும் என்னால் தீர்மானிக்க முடிய வில்லை. ஆனால், காதல் என்பதையே உணரச் சக்தியற்ற உலக மனிதர்களுக்கு இது அதிசயமாகவே இருக்கும். அல்லாவிட்டால் இப்படிக் கேவலமான கதையைக் கட்டிவிட்டிருக்க மாட்டார்கள். அவருக்கிருந்த பரிசுத்தமான காதலையும், அதற்காக இந்த மனிதர் கட்டி கதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது என் தலை சுற்றுகிறது.

அவர்கள் கட்டிய கட்டுக் கதையிலே உங்களுக்கு நம்பிக்கை இல்லாதிருந்த போதிலம் நெருப்பின்றிப் புகை எழும்ப இடமில்லை என்று நீங்கள் எண்ணிவிட்டீர்கள். நெருப்பின்றிப் புகையாது என்பது உண்மைதான். ஆனால் ஆதாரமின்றி வதந்திகள் பரவும். ஆம், அது அளவுப்பிரமாணமின்றிப்பரவும். இதற்கென்றே உலகில் எத்தனையோ பிரகிருதிகள் உயிர்வாழ்கின்றன.

நெருப்பின்றிப் புகைய நியாயமில்லை என்ற முடிவுகொண்டு தான், “நீ எப்பொழுதாவது அவனைச் சந்தித்தாயா?” என்று கேட்டீர்கள். உங்களுடைய அந்தக் கேள்வி என்னை மிக வருத்தியது. மீண்டும் மீண்டும் வற்புறுத்தி மறுத்த போதிலும் அதை நம்பாது நீங்கள் அப்படிக் கேட்டது என் வேதனையை இன்னும் கூட்டியது. ஏதோ அதோடு வரும் இரகசிய வதந்தியை வெளியிடவே அங்ஙனம் பீடிகை போட்டுக் ஆரம்பித்தீர்கள் என நான் எண்ணவில்லை.

“நான் இதுவரையும் கூறியதைக் கேட்டபின்பும் இப்படிக் கேட்டீர்களே! சத்தியமாகக் கூறுகிறேன். வீட்டோடு தங்கிய பின் நான் அவரை ஒருநாளாவது கண்டதுகூட இல்லை” என்று நான் சிறிது உணர்ச்சியுடன் கூறிய போதுதான் நீங்கள், வருத்தப்படாதே. நான் உன் மீது சந்தேகப்படவில்லை. ஆனால் உலகத்தில் என்ன பேசிக் கொள்கிறார்கள், தெரியுமா?” என்று கேட்டீர்கள். யாரும் வித்தியாசமாக எதுவும் பேசிக் கொள்வதாக எனக்குத் தெரியாது. என்னைத் தவிர்த்து, என்னைச் சூழவுள்ள எல்லோருமே நீங்கள் கூறிய விஷயத்தை அப் பழியை அறிந்திருந்தார்கள். ஆனால் என் காதில் மட்டும் எட்டவிடாது காப்பாற்றிக் கொண்டார்கள் என்று நான் இப்பொழுது அறிகிறேன்.

“தெரியாது; சொல்லுங்கள்” என்று நான் கேட்டேன். அதற்கு ‘தெரியாவிட்டால் அதை நான் சொல்ல விரும்பவில்லை: தெரியாமல் இருப்பதுதான் நல்லது” என்றீர்கள். உடனே ஏதோ ஆபத்தான பழிதான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அதைக் கேட்டு விடுவதற்கு என் மனம் துடித்தது.

“இல்லை. சொல்லுங்கள்” என்று நான் வேண்டிக் கேட்டேன். “இல்லை. நான் சொல்ல விரும்பவில்லை ” என்றீர்கள் நீங்கள். இப்படியாக அருக்க அருக்க, அதை அறிந்துவிட வேண்டுமென்ற ஆவலும், அதில் பொதிந்து கிடக்கும் துன்பத்தின் வேகமும் பெருகத் தொடங்கின.

எப்படித்தான் கேட்டபோதிலும் நீங்கள் கூறமாட்டீர்கள் என்று கருதியே இறுதியில் என மீது ஆணையிட்டுக் கேட்டேன். அப்போதும் நீங்கள் கூறத் துணிவு கொள்ளவில்லை. “கேட டால் உன்மனம் வருந்தும்” என்றீர்கள். “இல்லை. வருந்தமாட்டேன்; கூறுங்கள்” என்று கேட்ட போது வேறு வழி யின்றிப் பெரும் பீடிகையுடனே ஆரம்பித்தீர்கள். நீங்கள் இப்படியாக என் மனம் வருந்தக்கூடாது என்ற எண்ணத்தால் அதை மறைக்க எண்ணினீர்கள். என் மனம் வருந்தச் சகியாத தங்கள் அன்பு என்றும் இங்கே தனிமையில் என்னை வருத்துகிறது.

“நீ வருந்தாதே. இவை ஒன்றையும் நான் நம்பவில்லை. நீ வற்புறுத்திக் கேட்பதாற கூறுகிறேன்…” என்று பீடிகை போட்டீர்கள். அப்பால் என்முன் அதைக் கூற உங்களுக்குத் தைரியம் வரவில்லை. உங்கள் வாயால், எனக்கு முன்நின்று கூறமுடியாத கொடிய பழிகாரி நான்! ஐயோ. கொடுவினையே! உங்கள் பெட்டியில் கடிதத்தை எடுத்து வந்து என் கையில் தந்துவிட்டு என்முன்னே நில்லாது அப்பாலே சென்று மறைந்து விட்டீர்களல்லவா?

அக்கடிதத்தில் விஜயலட்சுமி என்ற என் நாமத்தைக் கண்டதுமே என் தலை சுற்றியது. அப்பாலே இராமநாதனின் பெயரையும் கண்டேன் என் மூளை கலங்கியது. வாசிக்க முடிய வில்லை. சாதத்தைச் சிறிது நேரம் அப்படியே வைத்திருந்துவிட்டு என் கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் வாசித்தேன்.

“விஜயலட்சுமிக்கும் இராமனுக்கும் பல தினங்களாகவே காதல். இராமநாதனை மணப் பதாக அவள் உறுதி கூறியிருந்தாள். ஆனால் அவளுடைய விருப்பத்திற்கு மாறாக அவளுடைய பெற்றார் உனக்கு மணம் பேசினர்…”

இப்படியாகப் போய்க்கொண்டிருந்தது. நீங்கள் எத்தனையோ முறை இதை வாசித்திருப்பீர்கள். ஆனால், இக்கடிதத்தை வாசித்த பின் இதைப்பற்றி நான் உங்களுடன் விபரமாகப் பேசச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஏதோ அந்நேரம் சொல்ல முடிந்ததைச் சொன்னேன். மறுநாள் கொழும்புக்குப் போக நேர்ந்துவிட்டது.

இராமநாதனுக்கு ஏதோ என்மீது காதல் இருந்தது உண்மைதான். ஆனால். எனக்கும் தங்களுக்கும் மணம் முடிவாகி இருக்கும் சமயத்தில் தற்கொலை செய்து கொள்ள விரும்பியது அவருடைய காதலுக்குச் சிறிது இழுக்கை உண்டாக்கிவிட்டது. ஏனெனில் அதனால் என் னைப் பழிகாரியாக்கி விட்டார். பாவம்! இந்தப் பொல்லாத உலகம் இப்படிப் பழிகூறும் என்று அவர் கண்டாரா? அத்தருணத்தில் தங்களைப் போன்ற வீண்பழிக்குச் செவிசாய்க்காத ஒரு உத்தமனுக்கு மணம் பேசாது யாராவது ஒரு சந்தேகப் பிராணிக்கு மணம் பேசியிருந்தால், அன்றுடன் எனது வாழ்நாள் முடிவடைந்திருக்கும். எனக்கு அபயமளித்து என் வாழ்விற்கு மலர்ச்சி தந்த உங்கள் மனதை மாற்றிவிட முயன்றார்கள் அப்பாலே.

“….இராமநாதனுக்கு அவள் இரகசியமாகக் கடிதம் எழுதினாள். அவன் ஒருநாள் இரவு அங்கே வந்து அவளை அழைத்துச் செல்ல முயன்ற போது தற்செயலாக அவளுடைய பெற் றார் கண்டு அவனை அடித்தார்கள். அடி உயிர்நிலையத்திற பட்டிருக்க வேண்டும். அவன் இறந்துவிட்டான்..”

கடிதத்தில் இந்த வரிகளுக்கு அப்பால் நான் வாசிக்கவில்லை. இவ் வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது நான் மயங்கி விழுந்துவிட்டேன். பின்பு கண்ணீர் தெளித்து உணர்ச் சியுண்டாக்கியதாக நீங்கள் கூறினீர்களே!

இவைகளெல்லாம் முழுப்பொய். கட்டுக்கதை, நீங்கள் பின் எல்லாம் அறிவீர்கள்! உங்க ளுக்கு நான் கூறவேண்டியதில்லை. இதற்கெல்லாம் நான் இந்த உலகத்திற்கு என்ன குறைதான் செய்தேனோ? எப்படித்தான் இருந்த போதிலும் ஒரு பழிகாரியை மணந்த துன்பம் தங்களை வருத்தும் என்பதை எண்ண என்னுள்ளம் வேதனையடைகிறது. இந்த விஷயத்தை நீங்கள் அறியாதிருந்தால் எத்துணை இன்பமாக என்னை நேசிப்பீர்கள்! ஐயோ நான் கொடுத்து வையாத பாவி”

நான் ஒரு கொலைப் பழிகாரி என்று எண்ணும் போது கொடிய பயம் என்னை வருக சூழந்துகொள்ளுகிறது. தனிமையிலே அது என்னை அவஸ்தைப்படுத்துகிறது. நான் அதை மறந்துவிட முயல்வேன்; ஆனால் முடிவதில்லை.

மாலையும் மதியமும் தென்றலும் தினந்தினம் வந்து போகின்றன. அப்போதெல்லாம் தாங்கள் என் அயலில் இல்லாமையைப் பற்றி வருந்துகிறேன். இந்தத் தனிமையுணர்ச்சி யிலேதான் இராமநாதனின் மரண நினைவு தொடர்ந்து வந்துவிடுகிறது அதை எப்படி என்னால் நினையாமல் இருக்க முடியும்?

தங்கள் அன்புப் பெருக்கிலே, அரவணைப்பிலே ஆறுதல் வார்த்தைகளிலேதான் நான் இந்தத் துன்பத்தை ஆற்ற முடியும். தாங்கள் இப்பாவியின் அயலிலிருந்து. உலக வீண் பழியைப் பொருட்படுத்தாது அன்புடன் நோக்கும் போது, நான் இத்துன்பத்தை மறந்துவிடுவேன். இத்துன்பத்தை மாத்திரமல்ல. இந்த உலகத்தையே மறந்துவிடுவேன். நேற்று நீங்கள் எழுதிய கடிதத்தில் உனக்கு வேண்டியவற்றிற்கு எழுது’ என்று எழுதியிருந்தீர்கள். எனக்கு வேண்டியது இது ஒன்றேதான். என் தனிமையை நீக்க வேண்டுமென்று தான் வேண்டிக் கொள்கிறேன்.

இங்ஙனம் உங்களுக்கே உரிமையான
விஜயலட்சுமி.

– மறுமலர்ச்சி தை 1948.

– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை.

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *