வீணானப் பெண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 19,338 
 
 

(இதைப்புரிந்து கொள்ள பாகம்: 1 – ஒரு கோலமயிலின் குடியிருப்பு , பாகம்: 2 – சேற்றில் மலர்ந்த தாமரை, பாகம்:3 – பெண் வீணை, பாகம்: 4 – இலட்சியப் பயணம் என்ற கதைகளை வாசிக்கவும்)

பாகம் – 5

இரவு சீக்கிரம் தூங்க முயற்சித்தும் முடியவில்லை. இரயில்வே ஸ்டேஷனின் ஆரவாரமே என் காதுகளில் கானம் பாட, மல்லிகா பேசிய பேச்சுக்களும் அவருடைய குறும்புகளும், அவர் என்னை விமர்சித்த விதங்களும், திரும்பத் திரும்ப நினைவில் வந்த வண்ணமே இருந்தன. ஒரு நல்ல துணையை தொலைத்து விட்டோமே, இனி அதை எப்படி அடைவது? தற்சமயம் அதன் சாத்தியக்கூறுகளே தென்படவில்லையே என்று எண்ணும் பொழுது, என் இயலாமையும், அதற்குப் போதாத வயதும், அதனால் வெற்றியின் அறிகுறி இன்னமும் தென்படவில்லையே என்ற ஏக்கமும், வருத்தமும் இருந்தது. பன்மடங்கு அழகைக்கூட்டும் மல்லிகாவின் புன்னகையும், சிரிப்பும் மாறி மாறி என் நினைவுகளில், ஒளிர்ந்து மறைந்தன. சிறிது நேரத்தில் இரயிலில் பயணித்ததைப்போல நானும் அசைய அருகில் மல்லிகா வந்து “…சர், தூங்கி விட்டீர்களா…?” என்று கேட்ட மாதிரி இருந்தது. என்னை அறியாமலேயே “..இல்லை மல்லிகா…’ என்று கூறி சட்டென்று எழுந்து அமர்ந்தேன்! டெலிபதி என்ற நுண்ணுணர்வு அல்லது தொலைவில் உணர்தல் முறையில் தூரத்திலிருப்பவர் களுடன் பேச இயலும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது பல தடவை நம்முடன் நடந்திருக்கிறது. நான் நினைத்ததையே மல்லிகாவும் கூறுகிறாரே, அவருக்குத் தெரியாமலேயே அந்த சக்தி அவரிடம் இருக்குமோ?! யோசித்துப்பார்த்தால், நாம் யாரை அதிகமாக விரும்புகிறோமோ அவருடன் தொலையுணர்வை ஏற்படுத்திக்கொள்ளலாம் போல தோன்றுகிறது!

எப்பொழுது தூக்கம் வந்ததென்றே அறியாமல், காலை 6 மணிக்கு தூக்கம் கலையவே, எழுந்து அமர்ந்து, ஒரு மணி நேரம் ஷார்ட் ஹேண்ட் பழகினேன். ஃபேக்டரிக்குப் போக 7.45 மணிக்கு கிளம்பினேன். இரயில் பிரேக் போட்டு நிற்கும் கிரீச் சத்தம் கேட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்நேரம் மெட் ராஸ் எக்மோருக்கு இரயில் வண்டி போய் சேர்ந்திருக்கும் என யோசித்துக்கொண்டு நடக்கலானேன்.

ஃபேக்டரியில் நுழைந்தவுடன் சக ஊழியர் ஒருவர் எனக்கு நேரே வந்து நின்றார். “என்ன ஓய், மூன்று நாட்களாய் எங்கே போனீர்? அந்தக் குட்டி உம்மை தேடி அலைந்திட்டே இருக்கா.” என்றார். குட்டியா? எந்தக் குழந்தையும் எனக்குத் தெரியாதே? நீர் யாரைச்சொல்றீர்.” என்று கேட்டேன். “அது தான் ஓய், அந்த அம்மா பேரு…. அவ என்னலே சொன்னா?” என்று திரும்பி வேறு ஒரு பையனை கேட்டர். அதற்கு அவன் “ அந்த மெட்டல் ஃபாக்டரியிலே ஆபீஸ் ஒர்க் செய்றா இல்லே, அவதான் தினமோ இங்கிருந்து நடந்து போவாளே, அவ பெயரு…. சாந்தி என்று சொன்னா. “… ஓ ஹோ, சாந்தி அக்கா வா..” என்று கேட்டதற்கு, அனைவரும் சிரித்துக் கொண்டு, அது தான் உமக்கு அக்காவா” என்றனர். “… ஆமாம், ஏன் அப்படி கேக்றீங்க, நான் யாரையும் பட்டப் பெயர் இட்டு அழைப்பதில்லை, மரியாதையாகத்தான் பேசுவேன். “…சாரிய்யா, நமக்குத் தெரியும் உம்ம பாலிசி எல்லாம்..” நீர் வந்தால் சாந்தி வந்துட்டு போனா என்று சொல்லுங்கள் என்றாள்’. “வேறு எதுவும் சொன்னாரா?” அது தான் சொன்னா. வேறு எதுவும் பேசலே.” சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, சாந்தி நம் ஃபேக்டரிக்கு எதிரே வந்து கொண்டிருப்பதை அனைவரும் பார்த்து விட்டனர்.

“அதோ வந்துட்டா, கூப்பிடுமையா, நான் கூப்பிடட்டுமா?” அவர்களுக்கு என்ன அவசரமோ, நான் சரி என்று சொல்வதற்குள் ஒருத்தர் வெளியே சென்று நான் வந்துவிட்டதாக சாந்தியிடம் தகவல் கொடுக்க அவர் முகம் மலர்ந்தது. நம் ஃபேக்டரிக்குள்ளே சாந்தி பிரவேசித்தார். என்னைக்கண்டதும், புன்முறுவல் புரிந்த சாந்தி, மூன்று நாளாக நான் உங்களைப்பற்றிக் கேட்டுகொண்டிருக்கிறேன். எல்லாம் சௌக்கியம் தானே? என்று கேட்டார். “ஆமாம், ஃபிரண்ட் ஒருத்தர் வெளியூர் செல்வதாக இருந்தது, ஆகவே கொஞ்சம் பிஸியாக இருந்துவிட்டேன்.” அன்று நீங்கள் பஸ் டிக்கெட்டுக்கு சில்லறை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி, இந்தாங்க “ என்று கூறி 15 பைசா சில்லறை கொடுத்தார். நான் அதை வாங்க மறுத்துவிட்டேன். “…வேண்டாம் மேடம், அதைப்போய் திருப்பித்தருகிறீர்களே.” என்று கூறியும் அவர் அடம் பிடிக்க, “ என்றைக்காவது நீங்கள் டிக்கெட் எனக்காக எடுத்துவிடுங்கள்.” என்றேன். நான் ஷார்ட்ஹேண்ட் மற்றும் டைபிங் லோயர் பாஸ் செய்து விட்டதைப்பற்றி சொல்ல, அவர் “…ஆ.. எனக்குச் சொல்லவேயில்லையே, ஸ்வீட் இல்லையா…? என்று கேட்டார். “… இப்படி உரிமையுடன் கேட்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஸ்வீட் உண்டு, உங்கள் ஆபிஸுக்கு வந்து தருகிறேன்.” என்றேன். அவரும் சரி என்று சொல்லி விடைபெற்றார்.

ஒரு பையனை அனுப்பி, இரண்டு கிலோ சுவீட்ஸ் வாங்கி, ஒரு கிலோ நம்ம கம்பெனியினருக்கும், அரை கிலோ சாந்தி மேடத்திற்கும் இன்னும் அரை கிலோ வீட்டிற்கும் பங்கு வைத்தாகிவிட்டது. மணி 8.30க்கு டெலிபோன் மணி அடிப்பதைப்போல மீண்டும் மல்லிகாவின் அழகிய முகம் மனதில் ஒளிர்ந்து காணப்பட்டது. “….கவலையில்லாமல் தாதர் வண்டியில் ஏறுங்கள் நான் உங்களுடன் தான் இருக்கின்றேன்…” என்று என் மனம் கூறவது போல் இருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தாதர் இரயில் பாம்பே நோக்கி கிளம்பிவிடும்.
சுமார் பதினொன்று மணிக்கு ஸ்வீட் டப்பாவுடன் சாந்தியின் ஆபிசுக்கு சென்று, அவரிடம் புதிதாக என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஸ்வீட் கொடுத்தவுடன், “ஓஹ் அப்படியா…” என்று கூறி சிரித்த முகத்துடன் பெற்றுக்கொண்டார். “….டைபிஸ்டு வேலையில் எனக்கு 5 வருட அனுபவம், ஆங்கிலம் பேசவும் ஓரளவுக்குத் தெரியும்” என்றார். “பிஸ்னஸ் லெட்டர் கம்யூனிகேஷன் தெரியுமா மேடம்..?” என்று கேட்டேன். “சின்ன சின்ன லெட்டர்ஸ் நானே எழுதி விடுவேன், பெரிதாக இருந்தால், நமது மேனேஜர் தான் எழுதிக்கொடுப்பார். “ என்றார் சாந்தி. “…ஏதாவது ஒரு சில லெட்டர்ஸைப் பார்க்கலாமா…?” என்றேன். எதற்கு என்று கேட்டார். ஆபிஸ் கம்யூனிகேஷனுக்குத்தானே ஷார்ட்ஹேண்ட் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது, ஆகவே, லெட்டர் ரைடிங் எனக்கு மிக முக்கியம், அது ஸ்போகன் இங்கிலீஷ் மாதிரி இல்லை. “…ஓ தருகிறேனே, பழைய லெட்டர் இருந்தால் பரவயில்லையா” என்று கேட்டார். “..எவ்வளவு பழையதாக இருந்தாலும் பரவயில்லை” என்றேன். அவர் அப்பொழுதே ஒரு ஃபைல் எடுத்து, அதில் டூப்லிகேட்டாக இருந்த சில லெட்டர்களின் கார்பன் காபிகளை என்னிடம் கொடுத்தார். அவைகளை டைப் செய்து கொண்டு அவருக்குத் திருப்பிக்கொடுத்து விடுமாறு கேட்டுக்கொண்டார். நான் அங்கேயே, அவைகளை ஷார்ட்ஹேண்டில் எழுதிக்கொண்டு, அவருக்குத் திருப்பிக் கொடுத்து விட்டேன். “…என்ன இது, வேண்டாமா என்றார், மேடம் அனைத்தையும் ஷார்ட்ஹேண்டில் எழுதிக்கொண்டேன். நான் இன்ஸ்டிடியூட்டில் டைப் செய்து கொள்கிறேன்” என்றேன். அவருக்கு அது மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது. “எனக்கு ஷார்ட்ஹேண்ட் தெரியாமல் போய் விட்டதே. படித்திருந்தால், அதிக சம்பளத்திற்கு வேறு இடத்தில் வேலை தேடியிருக்கலாமே..!” என்று கூறி வருத்தப்பட்டார்.

அவரிடம் விடை பெற்று, அன்றைய வேலை முடிந்தவுடன், வழக்கம் போல் இன்ஸ்டிடியூட்டிற்கு கிளம்பினேன். அனைத்தும் வழக்கம் போல் நடந்துகொண்டிருந்தது. அனைவரும் வாருங்கள் சர், என்ன மல்லிகா உண்மையிலேயே பாம்பே சென்று விட்டாரா என்று சிலர் கேட்டு ஆச்சரியம் அடைந்தனர். டியூட்டர் அனைவருக்கும் கிலாஸ் எடுத்துக்கொண்டிருந்தார். சங்கருக்கு படிப்பு முடிந்து விட்டாலும் சீனியர் ஆனதால், அவருக்கு வேலை கிடைக்கும் வரையில் தொடர்ந்து வரச்சொல்லியிருந்தார் பெரிய சர். அவரும் வழக்கம் போல் என்னுடன் உரையாடி ஆங்கிலம் பழகி வந்தார். சங்கர் மெட் ராஸிலுள்ள பல நிறுவனங்களுக்கு அப்ளை செய்திருந்தார். இன்டர்வியூ கால் வரும் என்று எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் நான் சாந்தியுடைய ஆபிஸிலிருந்து எழுதிக்கொண்டு வந்த லெட்டர்களை பிழையின்றி டைப் செய்து வைத்துக்கொண்டேன். அவைகளை எழுதியும் பயின்று வந்தேன். இதைப் பார்த்த சங்கர், லெட்டர் ரைடிங்குக்காக ஒரு புத்தகம் கிடைப்பதாக கூறினார். அப்படியானால் இன்றே வாங்கி விடலாமே என்று இருவரும் புத்தகக் கடைகளில் விசாரித்தோம். அவர்களிடம் இல்லை. ஆனால் தருவித்துக் கொடுப்பதாக கூறினர். சங்கருடைய நண்பர் மெட்ராஸில் இருக்கிறார், அவருக்கு எழுதி, 1001 லெட்டெர்ஸ் என்ற புத்தகங்கள் இரண்டை வரவழைத்தார் சங்கர். அடேயப்பா…! அனைத்து விவரங்களுக்கும் அதில் கம்யூனிகேஷன் இருந்தது. மிக மிக பயனுள்ளதாக இருந்தது. அதைப் பழகினாலே, ஆஃபீஸ் இன்டர்வியூக்களில் தேறிவிடலாம்! இந்த மாதிரி ஒரு புத்தகம் மல்லிகாவிற்கு நிச்சயம் தேவை. இன்டர்வியூகளுக்கு மிக உபயோகமானதாக இருக்கிறதே..!” என்று யோசித்தேன். சிறிது நேரத்தில் என்னை யாரோ பின்புறத்திலிருந்து தொட்ட மாதிரியான ஒரு உணர்வு ஏற்பட்டது. மல்லிகா… என்று சொல்லிக்கொண்டு திரும்பிப்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்.

நாட்கள் வேகமாக ஓடின. மல்லிகாவிடமிருந்து லெட்டர் வருமா என்று தினமும் எதிர்பாத்துக்கொண்டேயிருந்தேன். என்னைப் பார்த்த மாத்திரத்தில் சங்கரோ உதட்டுகளை பிதுக்கி லெட்டர் வரவில்லை என்பதை ஜாடையாகவே அறிவித்துவிடுவார். சோர்ந்து போய் ஏமாற்றத்தில் என் முகம் தொங்கிவிடும்.

ஒருநாள் ஷார்ட் ஹேண்ட் டிக்டேஷன் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது என் கால்களை மிதித்தவாறு அமர்ந்திருந்த சந்திரிகாவை உற்று நோக்கினேன். மெதுவாக தன் கால்களை மடக்கிக்கொண்டவள், மீண்டும் அதே போல் தொடர்ந்து செய்யவே, இது வேண்டும் என்று செய்யும் வேலை என்று நினைத்துக்கொண்டு, என் கால்களை நானே மடக்கிக்கொண்டு அவளுடைய கால்கள் எட்டாத தூரத்தில் அமர்ந்துகொண்டேன். . அனைவருக்கும் முன்னிலையிலேயே அவள் என்னை சீண்டுவதும், தொட்டுப் பேசுவதுமாக இருந்தது எனக்கு எரிச்சலை உண்டாக்கியது. பிறர் எங்கள் இருவரையும் தொடர்ந்து கவனிக்கலாயினர். “…பட்டர் இல்லாத பிரெட் போல இப்படி உலர்ந்து போய்…” என்று சொன்னவர் திடீர் என்று “…என்ன மல்லிகாவின் கனவு கலையவில்லையா ஐயாவுக்கு….” என்று கேட்டாள். கோபமில்லாத என் சுபாவத்தை அறிந்திருந்தோர் எனது பதிலை எதிர்பார்த்தனர். தூங்கிக்கொண்டு காணும் கனவா, முழித்துக்கொண்டு காணும் கனவா என்று கேட்டேன். “முழித்துக்கொண்டு யாராவது கனவு காண முடியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் சந்திரிகா. “…அந்த கனவின் பெயர்தான் இலட்சியம், இலட்சியக் கனவு என்பது. இக்கனவைப் பற்றி உங்களுக்குப் புரியாது சந்திரிகா. மல்லிகா அந்தக்கனவை நனவாக்கிவிட்டார், அதைத் தொடர்ந்து நானும் செய்யப்போகிறேன்…” என்றேன். அதற்கு சந்திரிகா “…காலணாக் கோழிக்கு நாலணா மசாலாப்பதார்த்தங்களா….” ஐயாவுக்கு வேலை வேண்டுமென்றால் நானும் உதவ முடியும். பாம்பே சென்று சம்பாதிப்பதை இங்கேயே நீங்கள் சம்பாதிக்கலாம், எங்கள் கம்பெனியில் சேர்ந்து.” என்று ஆசைக்காட்டினார். “…உங்கள் ஆஃபர் ஒன்றும் லோ ஆஃபர் இல்லை சந்திரிகா, குட். பட் லெட் மி கன்சல்ட் வித் மல்லிகா. இஃப் ஷீ அக்ரீஸ் ஐ வில் கன்சிடர் ஜாய்னிங் யுவர் கம்பெனி…” இதைக்கேட்டதும் அவளை தீயில் போட்டு பொசுக்குவதைப்போல எண்ணினாளோ என்னவோ, சீறிப் பாய்ந்தாள். “…உங்களுக்கு வெட்கமாக இல்லை, கேவலம் ஒரு வேசியின் மகளுடன் கன்சல்ட் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறீர்களே. உங்களுக்கு பெற்றோர் இல்லையா, அண்ணன் தம்பி இல்லை? அட்லீஸ்ட் ஒரு நல்ல நண்பர் இல்லை?, உங்களுக்கு ஐடியா கொடுக்க….!” இந்த அவதூறான வார்த்தைகளை கேட்ட மாணவ மாணவியர், தமது வாய்களைப் பொத்திக்கொண்டு ஒரு மாதிரியாக என்னையே பார்த்தனர். “…வெட்கம், மானம், சூடு, சொரணை இந்த வார்த்தகளை சமாளித்து வைத்துக்கொள்ளுங்கள் சந்திரிகா. ஒரு நாள் வரும் அவைகளை உங்களுக்குள்ளேயே நீங்கள் தேடுவீர்கள்…” என்றேன். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சங்கர் இருவரையும் அமைதிப்படுத்தி, “..உங்கள் கம்பெனியின் அட்வெர்டைஸ்மென்ட் படி, 5 வருட அனுபவம் தேவை, அது சாரிடம் கிடையாது. ஆகவே அவர் மட்டுமல்ல இந்த இன்ஸ்டிடியூட்டிலிருந்து வேறு யாரும் சேர இயலாது” என்றார் சந்திரிகாவைப் பார்த்து. மேலும், “…ஒரு நற்குணம் கொண்ட நமது பழைய மாணவியை பச்சையாக பழிப்பது அநாகரீகம்…” என்பதை அறிவுறுத்தினார். அதற்கு அனைவரும் ஆமோதித்ததும், சந்திரிகாவிற்கு இன்னும் கோபம் முட்டிக்கொண்டு வந்தது. “…நான்கு ரத வீதிகளிலும் இவருடன் கைகோர்த்து அவ உலா வந்தாளே அது நாகரீகமா…?” என்று கேட்டாள் சந்திரிகா. சங்கரோ, “….அம்மா தாயே உன்னால் சாதிக்க முடியாததை மல்லிகா சாதித்து விட்டார். உன்னால் முடிந்தால் யாருடைய மனதை வேண்டுமானாலும் நீ ஜெயித்துக்கொள்”, என்றார். நடந்து முடிந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து அன்றைய கிலாஸ் படுவேகமாக முடியவே அனைவரும் விடை பெற்றோம்.

மறு நாள் இன்ஸ்டிடியூட்டிற்கு எதிரில் நான் சைக்கிளை விட்டு இறங்கியதும் அங்கே நின்றுகொண்டிருந்த சந்திரிகா, சிரித்த முகத்துடன் ஒரு லெட்டர் எடுத்து என்னிடம் நீட்டினாள். சில மாதங்கள் முன்னர் அவள் என்னிடம் கொடுக்க முயன்ற லெட்டர் போலும் என்று நினைத்துக்கொண்டு, வேண்டாம் சந்திரிகா, வீண் விளையாட்டு வேண்டாம், தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள், நான் உங்கள் அளவிற்கு உயர பல வருடங்கள் ஆகும். அது போக நான் நெல்லைக்காரன் இல்லை. நான் அடுத்த சில மாதங்களில் பாம்பே சென்று விடுவேன். என் குடும்பமும் எனக்கு வேலை கிடைத்த பின்னர், நெல்லையை விட்டு வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள எங்கள் ஊருக்கே சென்று விடும். நமது ஃப்ரண்ட்ஷிப் பாதியிலேயே முறிந்து விடும். ..” என்றதற்கு, “..ஐயா நீங்கள் இதை வாங்கி படித்துத்தான் பாருங்களேன். ஒன்றும் அவதூறு இல்லை, இது லவ் லெட்டர் இல்லை…” என்றாள். தர்ம சங்கடமான நிலையில் அவளுடைய கையிலிருந்து லெட்டரை வாங்கி திறந்து படித்தேன். ஒரு A4 வெள்ளைப் பேப்பரில் ஒரு பக்கம் முழுக்க, 30 வரிசைகளில் இந்தக்கடைசியிலிருந்து அந்தக்கடைசி வரை “SORRY SORRY SORRY” என்று ஆங்கிலத்தில் பேனாவினால் எழுதியிருந்தது. “..இது உங்கள் கையெழுத்தா வேறு யாரவது உங்களுக்காக எழுதித் தந்தார்களா?“ என்று கேட்டேன். “…நான் தான் எழுதினேன், பிராமிஸ்…” என்று கூறி வலதுகையின் இரண்டு விரல்களால் தனது தொண்டையை பிடித்துக்காட்டினாள். “…ரிட்டன் ரிப்ளை வேண்டும்” என்றாள். “ஓகே, இதோ பதில் என்று பேப்பரை நீட்டினேன், “அக்செப்டட்” என்று எழுதி. அதைப் படித்த சந்திரிகாவுக்கு திருப்தி ஏற்படவில்லை. மேலே கிலாஸுக்குச்சென்றோம். அங்கே சங்கர் மிக சந்தோஷமாக மாணவ மாணவியருடன் பேசிக்கொண்டிருந்தார். நாம் இருவரும் உள்ளே சென்றதும், எங்களை வரவேற்றி, தன்னை அவருடைய நண்பர் மெட்ராஸுக்கு வந்து விடும் படி அழைத்திருப்பதாகவும், வந்த பின்னர் பல இடத்தில் அப்ளை செய்து அங்கேயே வேலைத்தேடிக்கொள்ளலாம் என்று அழைத்திருக்கிறார், என்றும் ஒரு நற்செய்தியை சொன்னார். அழுது புரண்டு அம்மாவிடம் அனுமதி பெற்றாகிவிட்டது. என்றார். அனைவருக்கும் சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க சீனியர் ஒருவர் நம்மை விட்டு போகப்போகிறாரே என்ற கவலை இருந்தது. ரெகுலர் டியுட்டர் ஹரியும் நேரத்துடன் வந்துவிட்டதால், அவர்தான் கிலாஸ் நடத்திக்கொண்டிருந்தார். அரை மணி நேரம் கிலாஸ் அட்டெண்ட் செய்து, எழுதியதை டைப் செய்த பின்னர், சங்கர் என்னை வெளியே அழைத்தார். நாம் சீக்கிரம் கிளம்புவதைக்கண்ட சந்திரிகாவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது போல் முகத்தை வைத்துக்கொண்டு எங்களைப் பார்த்தபடியே கைவிரல்களை சொடுக்கிக் கொண்டிருந்தார். இருவரும் அதே ஹோட்டலுக்குப்போய் அமர்ந்தோம். சங்கர் அன்று வரை பேண்ட் அணிந்ததே கிடையாதாம். அணியாமல் இருந்ததினால், இப்பொழுது அவருக்கு பேண்ட் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேஷ்டி கட்டிக்கொண்டு இன்டர்வியூக்கு, அதுவும் மெட்ராஸில் எப்படி போவது ஆகவே எனக்கு ஒரு வாரத்தில் பேண்ட் தைத்தாகவேண்டு என்றார். “..சர் எனக்கு பேண்ட் எப்படியிருக்கும், நானும் உங்களைப்போன்று ஸ்மார்டாக தெரிவேனா..” என்று ஆச்சரியத்துடன் கேட்கவே, இப்பொழுதே பார்த்துக்கொள்ளலாம் வாருங்கள் என்று இருவரும் அவருடைய வீட்டிற்குச் சென்றோம். அங்கே அவருடைய சித்தி என்னைப் பார்த்து, தம்பி வெகு நாளாக வருவதில்லையே ஏன் என்று கேட்டு, நீங்கள் பேசிக்கொண்டிருங்கெள் நான் சுடச் சுட இட்லி போட்டு கொண்டு வருகிறேன் என்று கிட்சனுக்குப் போய்விட்டார். இங்கே ஏன் அழைத்துப் போகச் சொன்னீர்கள் என்று ஒன்றும் புரியாமல் சங்கர் கேட்டதும், எனக்கு உங்கள் வேஷ்டி கொடுங்கள் என்று ஒரு வேஷ்டியை வாங்கி நான் கட்டிக்கொண்டு, எனது பேண்ட் அவருக்கு உடுத்தக் கொடுத்தேன். அதை அணிந்ததும் அது அவருக்கும் கச்சிதமாக அமையவே, அதை அம்மாவிடம் காட்ட கிட்சனுக்கு ஒடினார். அம்மாவும் சிரித்த முகத்துடன் வந்து, தம்பி, இவனுக்கு இந்த மாதிரி நாலு இரட்டை குழாய் வேண்டுமாம். மெட்ராஸுக்கு போகிறேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறான். நீங்களாவது புத்தி சொல்லக்கூடாதா என்று கேட்டார். அதைக் கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது. உடனே சங்கர் “ஐயோ நான் மெட்ராஸுக்குத்தாம்மா போகிறேன் ஆனால் சர், பம்பாய்க்கு போகிறேன் என்கிறாறே” என்று சொன்னதும், படித்து விட்டு பசங்களுக்கு உள்ளூரில் வேலையில்லை என்றால் எதற்கு அந்த படிப்பு என்றார் சித்தி. அவருக்கு புரிய வைத்து சமாதானம் செய்யும் வரை நமக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. சித்தி கடைசியில் “சரி நான் பணம் தருகிறேன், நாலு சட்டை நாலு இரட்டை குழாய் தச்சிக்கோ” என்று கூறி எங்களுக்கு இட்லி பரிமாறினார்.

மறு நாள் காலையில் தூங்கி முழித்தவுடன், “…சர்…” என்று மல்லிகா அழைத்தது போல் தோன்றியது. சுற்று முற்றும் பார்த்த எனக்கு, மல்லிகாவின் குரல் கேட்டவுடன் உற்சாகமாக இருந்தது. அவர் பாம்பே சென்று இன்று சரியாக ஒரு மாதம் ஆகிறது. ஏதோ செய்தியிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு, ஷார்ட் ஹேண்ட் ப்ராக்டீஸ் ஒரு மணி நேரம் செய்து முடித்து, பின்னர் குளித்து முடித்து டிபன் உண்டபின் வழக்கம்போல் ஃபேக்டரிக்குக் கிளம்பிவிட்டேன். தொழிற்பேட்டையை அடைந்தவுடன் அங்கு வந்த டவுன் பஸ்ஸிலிருந்து சாந்தி மேடம் மற்றும் இன்னும் பலர் இறங்கினர். பஸ்ஸிலிருந்தே சாந்தி மேடம் என்னைப் பார்த்து விட்டார். ஆகவே சாலை கிராஸ் செய்து அவர் இப்பக்கம் வரும் வரை நான் நின்றிருந்தேன். வந்த பின்னர் இருவரும் நலம் விசாரித்துக்கொண்டே அவரவர் கம்பெனியை அடைந்தோம். 11.00 மணியளவில் ஃபேக்டரியில் வேலையிலிருக்கும்பொழுது வழக்கம் போல் டவுனில் உள்ள ஹெட் ஆபிஸிலிருந்து போன் கால் வந்தது. நானும் கால் வருகிறதே என்று அப்பக்கம் சென்றேன். எப்பொழுதும் சூப்பர்வைஸர் தான் கால் அட்டெண்ட் செய்வார். அவர் கால் எடுத்து ஹெட் ஆபிஸிலிருந்து வந்த பீஓ ஆர்டர் ஃபார்ம் பூர்த்தி செய்துக்கொண்டு ரிசீவரை வைத்தவுடன் இன்னொரு கால் வந்தது. பாய்ந்து சென்று அதை எடுத்த அவர், பாம்பேவா? யாரு பேசுவது என்று கேட்ட மறு கணமே அது என்னுடை கால் என்று அவரிடமிருந்து ரிசீவரை வாங்கிக்கொண்டேன். “ஹலோ” என்ற குரலை கேட்டதும், இந்த மென்மையான குரலை கேட்க நான் எத்தனை நாளாக தவமிருக்கின்றேனே என்று மனதில் நினைத்துக்கொண்டு, “….மல்லிகா….” என்று உரக்கக் கூவியதும், “….சர், என்னொரு முறை சொல்லுங்கள் உங்கள் வாயால் என் பெயரைக்கேட்க நான் எத்தனை நாளாக தவமிருக்கின்றேன் தெரியுமா…” என்றார் மல்லிகா. “என்னை அழையுங்கள் மல்லிகா, நான் பேசுகிறேன்.” நலம் விசாரித்து ஐந்து நிமிடம் பேசினோம். “…நான் பாம்பே வந்து ஒரு மாதம் ஆகிறது. இன்று காலையே உங்களுடன் பேசவேண்டும் என்று முடிவெடுத்தேன். சர், மூன்று இன்டர்வியூக்களுக்கு போய் இருக்கிறேன். எக்ஸ்பீரியன்ஸ் தான் கேட்கிறார்கள். எங்கே போவது. என்னொரு இடத்திற்கு ஃபிரஷ் கேண்டிடேட் தேவை என்றதால் அங்கே அப்ளை செய்துள்ளேன். கால் வரவில்லை….” என்றார். “….மல்லிகா, லெட்டர் கம்யூனிகேஷனுக்காக புத்தகங்கள் கிடைக்கின்றன. அதில் ஒன்றை நீங்கள் வாங்கினால் என்ன என்று சொன்னதும், சர், 15 நாட்களுக்கு முன் அதை நானும் யோசித்து புத்தகடைக்குப் போனேன். 1001 லெட்டர்ஸ் என்ற புத்தகம் தான் எனக்குப்பிடித்தது, ஒன்றை வாங்கிக் கொண்டேன், உங்களுக்கும் ஒன்று அனுப்பவா என்று கேட்டார். மல்லிகா, அதைத்தான் நான் உங்களிடம் சொல்ல வந்தேன். நானும், அதை இங்கே வாங்கி விட்டேன் அனுப்ப வேண்டாம்.” என்று கூறி பல விஷயங்களைப் பேசினோம். சித்தியின் வீட்டு விலாசம் அனுப்ப அவர் இன்னும் அனுமதிக்க வில்லை என்றும் ஆனால் அந்த ஏரியாவின் பெயர் சாந்தாகுரூஸுக்கும் அந்தேரிக்கும் மத்தியிலுள்ள வில்லே பார்லே என்றும் கூறினார். மீண்டும், வேலை கிடைத்தவுடன் பேசுவதாக கூறியதுடன் மல்லிகாவின் குரல் ஒலி அலைகளிலேயே எதிரொலித்து சிறிது சிறிதாக முற்றிலும் கரைந்துவிட்டது. ஆனந்தக்கண்ணீருடன் என் இடத்திற்குச் சென்று, இரு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்தேன். மல்லிகாவின் பேச்சுக்கள் எதிரொலித்துக்கொண்டேயிருந்தன. டெலிஃபோன் எடுத்த உடனே, “நான் தவமிருக்கிறேன்” என்று நான் நினைக்க, அதைத்தான் மல்லிகா வாய்விட்டு சொல்கிறார். நான் அவருக்கு பரிந்துரைக்க நினைத்த புத்தகத்தையே அவரும் வாங்கியிருக்கிறார். நான் செய்ய நினைக்கும் காரியத்தை அவர் சாதித்து விடுகிறார். நான் நினைப்பது போலவே அவருடைய நினைப்புகளும் அமைந்து விடுகின்றன. இது என்ன புதிர், யோசிக்கவே இனிமையாக இருந்தாலும், இது எப்படி நடக்கின்றது என்று சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டேன். அன்றைய நாள் மகிழ்சியாக கழிந்தது.

மாலை இன்ஸ்டிடியூட்டிற்கு போகும் பொழுது சங்கருக்கு பேண்ட் தைக்க தேவையான அளவுப்பேண்ட் ஒன்றை எடுத்துக்கொண்டு சங்கரைச் சந்தித்து அவருடன் சென்று தேவைப்படும் நான்கு பேண்ட் நான்கு ஷர்ட் துணிகள் வாங்கி டெய்லரிடம் கொடுத்ததும் அவர் அதை 4 நாட்களில் டெலிவரி தருவதாக ஒப்புக்கொண்டார். அன்றைய கிலாஸிலும், சந்திரிகாவின் பேச்சு வலைகளை தவிர்த்து, நானும் சங்கரும் உடனே வெளியே கிளம்பி விட்டோம். மல்லிகாவிடமிருந்து ஃபோன் வந்த செய்தியை சங்கருக்குத் தெரிவித்தேன். அவரும் சந்தோஷம் அடைந்தார். விலாசம் கொடுக்கவில்லை அனுப்பி வைக்கிறேன் என்றுதான் கூறினார் என்றேன்.

பேண்ட் ஷர்ட் தைத்து வரவதற்குள் சங்கர் மெட்ராஸுக்கு செல்ல டிக்கெட் புக் செய்து விட்டார். தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தைத்து வாங்கிய ஒரு புது டிரஸ்ஸை உடுத்திக்கொண்டு, தலை தூக்கி நடந்தார் சங்கர். நான் போய் உங்களுக்கு லெட்டர் போடுகிறேன். மல்லிகாவுடைய லெட்டர் இன்ஸ்டிடியூட் விலாசத்திற்குத்தான் வரும். வந்தால் யாராவது எங்கள் வீட்டில் கொடுத்துவிடுவார்கள். எனக்கு தகவல் கிடைத்ததும், உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன், எங்கள் வீட்டிற்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். ஒரு நாள் அவரும் நெல்லையை விட்டு மெட்ராஸுக்கு வேலைத் தேடி சென்று விட்டார்.

நான் தனி மரம் ஆனேன். மற்ற மாணவ மாணவிகள் இருந்தாலும் சங்கரும் மல்லிகாவும் என்னுடன் குளோஸாக இருந்தது போல் யாரும் இல்லை. அவரவர் பிரச்சினைகளில் அவர்களே மும்முரமாக இருந்தனர். இந்நிலையில் சந்திரிகாவின் சேட்டைகள் அதிகமாயின. நான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கிலாஸுக்கு போக ஆரம்பித்தேன். இவைகளை மிக உன்னிப்பாக கவனித்து வந்தார் டியூட்டர் ஹரி. அவர் சந்திரிகாவுடன் என்ன பேசினாரோ என்னவோ தெரியாது. திடீர் என சந்திரிகாவின் நடத்தையில் மாற்றம் காணப்பட்டு என்னைப் பின் தொடர்வது நின்று போய்விட்டது. ஒரு நாள் ஹரி சர் கிலாஸ் ஆரம்பிக்கும் முன்னர் என்னை டவுனிலிருந்த பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். பல ஐடங்களுக்கு ஆர்டர் கொடுத்து பலவந்தமாக உண்ணச் செய்தார். “…ஏன் சார் என்ன விஷயம்…” என்று கேட்டதற்கு, ஒன்றுமில்லை, இன்று எனக்கு சம்பளம் கிடைத்தது என்றார். உங்களுக்கு சம்பளம் மாதந்தோறும் கிடைக்கத்தானே செய்கிறது, அப்பொழுது எந்த மாதமும் நீங்கள் டிபன் ஆஃபர் செய்யவில்லையே என்றேன். இல்லை ஓய், தீபாவளி போனஸ்ஸும் கிடைத்தது என்றார். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது, மெதுவாக கிலாஸ் பிரச்சினைகளை கையாளுபவர் மாதிரி பேச்சை திருப்பி, ஒவ்வொருடைய பழக்க வழக்கங்களை விவரித்தவர், “….ஆமாம் உங்களுக்கும் சந்திரிகாவுக்கும் மத்தியில் என்ன, ஏதாவது தகறாரா என்று கேட்டார்….” அதற்கு நான், “….நதிங் சர், நான் சண்டைப் பிடிப்பவனல்ல, அவர் ஒரு அருமையான குணம் கொண்டவர், புரிந்து கொள்ள நாம் தான் தவறிவிடுகிறோம். என்றேன். “…உங்களுக்கு அவளைப்பிடித்திருக்கிறதா, உங்களுக்கு அவள் மீது ஏதாவது ஆசையா, சொல்லுங்கள் நான் பேசிப்பார்க்கிறேன் என்றார்…” சர், உங்கள் உதவிக்கு நன்றி, நான் என் குறிக்கோளுடன் தான் இருக்கிறேன், அதெல்லாம் எனக்கு ஆசை கிடையாது, இன்னும் சில மாதங்களில் நான் பாம்பே போகப்போகிறேன் என்றேன்.” உடனே அவர் பேச்சை மாற்றி வேறு ஏதோ பேச ஆரம்பித்தார். டிபன் முடித்து கிலாஸுக்குப்போனோம். உடனே எனக்கும் என் பேட்சில் இருப்போருக்கும் கிலாஸ் எடுத்து அனைவரும் வெளியே போகும் பொழுது, உள்ளே நுழைந்தார் சந்திரிகா. “ஹெலோ” என்று கூறிவிட்டு தலையை தூக்கிக்கொண்டு நேராக ஹரிக்கு எதிரில் அமர்ந்து கொண்டார். நாம் வெளியேறி, கடைசியில் வந்த மாணவர், சந்திரிகாவுக்கு மட்டும் தனியாக கிலாஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஹரி என்று அனைவரிடமும் கூறிவிட்டார். இதே போல் பல வாரங்கள் கழிந்தன. ஹரி சரியாக கிலாஸுக்கு வருவதில்லை, வெகு நேரம் கடந்து விடுவதால் அனைவரும் இன்ஸ்டிடியூட்டை விட்டு வீட்டுக்கு போய்விட்ட பிறகு தான் வருகிறார். அவர் வந்த பின்னர் தான் சந்திரிகாவும் வருகிறார் என்று பேச்சு அடிபட்டது. டைபிங் ஹையர் பரிட்ஷை நீங்கள் அக்டோபரில் எழுத வேண்டாம் என்று ஹரி என்னை தடுத்திவிட்டார். நான் பெரிய சாரிடம் சென்று, இந்த மாதத்துடன் நான் நின்று விடுகிறேன், அடுத்த ஏப்ரல் மாதம்தானே டைபிங் பரிட்சை, அப்பொழுது ஃபார்ம் பூர்த்தி செய்ய வருகிறேன் என்று கூறி வந்துவிட்டேன். மாதம் முடிய நான்கு நாட்கள் இருந்தும் இன்ஸ்டிடியூட்டிற்கு செல்ல மனம் வரவில்லை, நின்று விட்டேன். ஏப்ரல் மாத பரிட்சைக்கும் ஃபார்ம் பூர்த்தி செய்யப் போகவில்லை.

வீட்டிலேயே தங்கி ஷார்ட் ஹேண்ட் பிராக்டீஸ் செய்துகொண்டிருக்கும் பொழுது, பல இடங்களுக்கு அப்ளை செய்து வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. சன் பேப்பர் மில்லிலிருந்து அழைப்பு வந்தது, ஸ்டெனோ இன்டர்வியூ கொடுத்து பாஸ் ஆகியும் அங்கேயே தங்கி, இரவில் லாரி லோட் வந்தால், அதன் கணக்கெடுத்து வைக்க வேண்டும் என்றனர். நான் ஒப்புக்கொள்ளவில்லை. இன்னும் பல இடங்களுக்கு அப்ளை செய்தும் வேலை கிடைத்தபாடில்லை. ஆகவே மெதுவாக, பாம்பே செல்வதைப்பற்றி அம்மாவிடம் பேச ஆரம்பித்தேன். அவர் ஒரு போதும் ஒத்துக்கொள்வதாக தெரியவில்லை. அப்படி வெளியேதான் வேலை பார்க்கவேண்டும் என்றால், வா அனைவரும் நம்ம ஊருக்கே போய் விடலாம். அங்கே நம்ம குடும்பமே இருக்கிறது, எப்படியும் உனக்கு வேலை கிடைத்துவிடும் என்றார். அம்மா, பாம்பேயில் மேலும் வளர வாய்ப்புகள் அதிகம், நல்ல சம்பளம் கிடைக்கும், உங்களையும் என்னுடன் அழைத்துக்கொள்கிறேன் என்று பல வித ஆசைகள் காட்டியும் அவர் அசையவில்லை. கடைசியில் சோர்ந்து போய், சொல்லாமல் பாம்பேக்கு கிளம்ப ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டேன். முதலில், அடிக்கடி சர்டிஃபிகேட்ஸ் காப்பி எடுத்து வெவ்வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என கூறி அம்மாவிடமிருந்த என்னுடைய சர்டிபிகேட்ஸ் கையகப்படுத்திக்கொண்டேன். என் நடவடிக்கைகளை தந்தை கண்காணித்துக் கொண்டேயிருந்தார். நான் தேடிக்கொண்டிருக்கும் வேலையைப்பற்றி தெரிந்து கொண்ட அவர், பையனுக்கு இங்கே புரோகரஸ் கிடைக்காது என்பதை அறிந்து கொண்டார். நீ பாம்பே சென்றால் உனக்கு இருக்க இடம் கிடைக்காது. நீ வாங்கும் சம்பளம் வாடகைக்குப் பற்றாமல் போகும், ஆகவே அதை சரிகட்ட நீ லோ கிரேட் அக்கமொடேஷன் தேடுவாய். அந்நிலையில் நீ எங்கே இருக்கிறாய் என்பது கேள்வியல்ல, அங்கே நீ எப்படியிருக்கிறாய் என்பதுதான் கேள்விக்குரியது. ஆகவே, ரெட் லைட் ஏரியாவில் இருந்தாலும் உன் கோமணத்தை இருக்கமாக கட்டிக்கொள்..” என்று அறிவுறுத்தினார். அங்காங்கே கிடக்கும் என் துணிகளை ஒன்று கூட்டி, வாஷ் செய்து எனது ரெகெஸின் பெட்டியில் சேர்த்துக்கொண்டேன். ஒரு தோளில் மாட்டிக்கொள்ளும் ஒரு காட்டன் பையில் எனது புத்தகங்களை அடுக்கிக்கொண்டேன்.

கம்பெனி ஓனருடைய மகன்தான் நமக்கு மேனேஜர். அவரிடம் விஷயத்தை உண்மையாக எடுத்துரைத்து, நான் வேலையை ராஜினாமா செய்யப்போவதாகவும் நான் வேலை பார்த்த ஐந்து ஆண்டுகள் (‘69-‘74) வரை எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் சர்டிஃபிகேட் கொடுத்து ருபாய் 300 கடனாகவும் கேட்டேன். அப்படி நான் அப்பணத்தை திருப்பிக்கொடுக்க தவறினால், அதை என் சர்வீஸ் செட்டில்மென்டில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டு, எனது பிராவிடென்ட் ஃபண்ட் முடித்து வைத்து அதை நான் பாம்பே சென்று கொடுக்கும் விலாசத்தில் எனக்கு கிடைக்கச் செய்யும் படியும் கேட்டுக்கொண்டேன்.
அவரோ, யாரும் தன் கடனை இங்கே இருந்து வேலை பார்த்து திருப்பித்தருகிறேன் என்று உறுதிமொழி கொடுத்துத்தான் கடன் கேட்பர், ஆனால் நீயோ வேலைவிட்டு போகிறேன் எனக்கு கடன் கொடுங்கள் என்று கேட்கின்றாயே, எப்படி ? என்று கேட்டார். அதற்கு நானும் “…. சர் பொய் சொல்லி உங்களிடம் ஆயிரம் ரூபாயும் வாங்கியிருப்பேன். ஆனால் நான் போவதோ என் வருங்கால வாழ்விற்கு, நான் எடுத்த டிரைனிங்கிற்க்கு ஒப்ப இங்கே வேலை கிடைப்பதில்லை, என்னை வாழ்த்தி எனக்கு உதவுங்கள், என்றைக்கும் உங்கள் பெயரும் நீங்கள் செய்யும் உதவியும் என் மனதில் நிலைத்திருக்கும்…”, என்றேன். அவரும் என்னை பல விதத்தில் பாம்பேயைப்பற்றி எடுத்துரைத்து நான் பறப்பதைப்பார்த்து இருப்பதை விட்டுவிடுவதாக அறிவுறை வழங்கினார். ஆனால் என்னுடைய திடமான நம்பிக்கையும் எனது வைராக்கியமும், எனது நேர்மையான பேச்சும் என் திறமைகளின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையும் அவருக்கு நியாயமாக தென்பட்டது. நான் கேட்ட படி அனைத்தையும் செய்து கொடுக்க ஒப்புக்கொண்டார்.

அவருக்கு வேலை கிடைத்த பின்னர் அக்டோபர் மாதத்தில் பேசிய மல்லிகா, மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. எனக்கு கவலையாக இருந்தது. மல்லிகாவிடமிருந்து சங்கருக்கு ஏதாவது லெட்டர் வந்ததா என கேட்கலாம் என்று ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் மாலையில் இன்ஸ்டிடியூட்டிற்குப் போனேன். அங்கேயிருந்த இன்சார்ஜ் பையனிடம் கேட்டதற்கு, அப்படி யாரிடமிருந்தும் லெட்டர் வரவில்லை என்றும், ஷார்ட் ஹேண்ட் கிலாஸ் 4 மாதங்களாக நடைபெறவில்லை என்றும் அறிவித்தான். காரணம் தெரியாது என்றும் கூறினான். ஹரி சார் யார் என்று தெரியாது என்றான். லெட்டர் கிடைக்காத வருத்தத்துடன், சைக்கிளை கையாலேயே தள்ளிக்கொண்டு அடுத்த ரத வீதிக்கு சென்றதும் அங்கே நமது பழைய குரூப் மாணவன் ஒருவன் கிடைத்தான். அவன் ஓடி வந்து என் சைக்கிளை பின் புறத்திலிருந்து இழுத்துப் பிடித்துக்கொள்ளவே நான் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தேன். சிரித்த முகத்துடன் இருந்த அவன், என்னை விசாரித்து, இன்ஸ்டிடியூட்டின் நிலை அனைத்தையும் என்னிடம் கூறி விட்டான். “…ஹரி சார் சந்திரிகாவுக்கு ஸ்பெஷல் கிலாஸ் நடத்தி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாள் முழுக்க கிலாஸ் நடத்தியதால் சந்திரிகாவின் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டு பின் தொடர்ந்து இருவரையும் தகாத நிலையில் இருக்கும் பொழுது கையும் களவுமாக பிடித்து விட்டனர். செம்ம உதை. தர்ம அடிகள் விழுந்தன. இருவரையும் நைய புடைத்து எடுத்துவிட்டார்களாம். பெரிய சாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் விஷயத்தை பெரிதுபடுத்தாமல் இருந்துவிட்டனர். இருவரும் இன்ஸ்டிடியூட்டிலிருந்து துரத்தப்பட்டனர். ஆகவே சில மாதங்களாக ஷார்ட் ஹேண்ட் கிலாஸ் மூடப்பட்டிருக்கிறது. “..சர், அன்றைக்கு சந்திரிகாவுக்கு நீங்கள் தந்த பிரடிக்ஷன் சரியாகப் போய்விட்டது. மாணவிகளுடன் கூட அவளுக்கு காழ்ப்பு உணர்ச்சி…” என்றும் இன்னும் பல விவரங்களும் கூறினான். “ஹரி சார் இப்பொழுது எங்கே?” என்று கேட்டதற்கு அவர் வெளியே தலை காட்டுவதில்லை, அவருடைய ஆஃபீஸ் முடிந்து நேராக வீட்டிற்குப் போனால், காலையில் தான் முகத்தை மறைத்துக்கொண்டு நேராக பஸ் பிடித்து ஆஃபீஸுக்கு போய் விடுகிறார். சந்திரிகாவோ நீங்கள் சொன்ன வெட்கம், மானம், சூடு, சொரொணை ஆகியவைகளை அவளுக்குள்ளேயே தேடிக்கொண்டிருப்பாள்..” என்றான், எரிச்சலுடன். அதை எல்லாம் கேட்டு அதிர்ந்து போன நான், சம்பந்தப்பட்ட இருவரின் முட்டாள்தனத்தை எண்ணி நொந்துப்போய் பெரும் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

அடிக்கடி மல்லிகா அழைப்பது போன்றும், என்னை ஃபாலோ செய்வது போன்றும், திடீர் என்று தோன்றி மறைவதைப்போன்றும் உணர்வுகள் ஏற்பட்டன. மறுநாள் அவருடைய ஃபோன் டிரங்கால் வந்தது.
நூறு நிலாவை ஒரு நிலவாக்கிய பாவையே, ஆயிரம் மனதை ஒரு மனதாக்கிய ஆசையுடன் உங்களிடம் நான் கூடிய சீக்கிரம் வருகிறேன், மல்லிகா என்று நான் என் மனதில் எண்ணிக்கொண்டே கால் அட்டென்ட் செய்தேன், “….சர் நான் எட்டு மாதமாக நிலாவை நோக்கியதே கிடையாது, நீங்கள் வந்த பின்னர்தான் உங்களுடன் சேர்ந்து காணவேண்டும் என்ற ஆசை…”என்றார் மல்லிகா!

இதைக்கேட்ட நான் பிரமித்துப்போனேன்.

“…மும்மூன்று மாத டெம்பொரேரி அப்பாய்ன்ட்மென்ட் தான் இரண்டு கம்பெனிகளிலும் கிடைத்தது, இன்னும் ஒரு நல்ல கம்பெனி கிடைக்கவில்லை..” என்றார்.

“…எந்த கம்பெனியில் சென்ற மூன்று மாதமாக இருந்தீர்கள், மல்லிகா?”

“… முதலில் ஈஸ்ட் அண்ட் வெஸ்ட் எக்ஸ்போர்ட்ஸ், இரண்டாவதாக இங்கே சன் மேகெஸின் என்று ஒரு வாராந்திர மேகெஸின் வருகிறது. அங்கே மார்ச் முடிய பார்த்தேன், லீவ் வேகேன்சி….”

நிகழ்வுகளின் ஓற்றுமையைப் பற்றி யோசித்தேன்…. ஈஸ்ட் அண்ட் வெஸ்ட்…. நான் வேலை தேடி இங்கே ஓடிக்கொண்டிருக்கிறேன்…. இங்கே சன் பேப்பர் மில், அங்கே சன் மேகேஸின்…!! நான் வேண்டாம் என்று தள்ளிவிட்ட வேலையை மல்லிகா அங்கே பார்த்து முடித்து விட்டார்!!

பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நான் பாம்பே வரப்போகும் தேதியைக்கேட்டார். அடுத்த மாதம் கட்டாயம் வருவதாக அறிவித்து, என் நண்பருடன் எங்கே தங்கப்போகிறேன் என்பதையும் அறிவிக்கிறேன் என்று கூறினேன். 15 நாட்கள் கழித்து மீண்டும் ஃபோன் செய்வதாக அறிவித்தார்.

அப்படி மீண்டும் மல்லிகாவின் டிரங்கால் வந்தவுடன் என் நண்பனுடைய விலாசத்தை நான் அறிவிக்க அவர் எழுதிக்கொண்டார். பாம்பே வந்து சேரும் தேதியும் நேரமும் குறித்துக்கொண்டார். மல்லிகா டெலிபோனில் வெளிப்படுத்திய மகிழ்சிக்கு அளவே இல்லை. அவருக்கு ஒரு நல்ல கம்பெனியில் டெம்பொரேரியாக வேலை கிடைத்த நற்செய்தியை அறிவித்தார். அவர் அந்த கம்பெனியின் டெலிபோன் நம்பரும் கொடுத்து தானே தாதர் ஸ்டேஷனுக்கு வருவதாகவும் அறிவித்தார்.

சங்கருக்கு லெட்டெர் எழுதி 18ம் தேதி மெட்ராஸ் வருவதாகவும் அன்றே காலை 9.30 தாதர் எக்ஸ்பிரஸ் மூலம் பாம்பே செல்வதாகவும் அறிவித்தாகிவிட்டது.

கம்பெனியில் ராஜிநாமா கொடுத்து, மே மாத சம்பளமும், ருபாய் 300 கடனாகவும் பெற்றுக்கொண்டேன். நெல்லையிலிருந்து பாம்பே டிக்கெட் அப்பொழுது 31 ரூபாய் தான். 17-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று பாம்பே செல்ல டிக்கெட் புக் செய்திருந்தேன். 1974 மே மாதம் 8ம் தேதி இந்திய இரயில்வேவின் மிகப்பெரிய ஸ்ட்ரைக் தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற்றது. அதன் காரணமாக மாலை 5.30 மணிக்கு மெட்ராஸ் புறப்படும் இரயில் காலை 7.50க்கு புறப்படும் என்று நேரம் மாற்றப்பட்டது. அது மெட்ராஸ் செல்ல 24 மணி நேரம் அல்லது அதற்கு மேலும் பிடிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. கம்பெனி வேலையாக தூத்துக்குடி செல்ல வேண்டியிருக்கிறது என்று 8 நாட்களாக வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் 17ம் தேதி காலையில் அம்மா டிபன் பரிமாறியதும் என்னையறியாமலேயே கண்கள் கண்ணீர் சிந்த டிபன் உண்பதை அம்மா கவனித்து விட்டார். ஏன் அழுகிறாய், வேறெங்கும் போகிறாயா? என்று கேட்டார். இல்லை துத்துக்குடிக்குத்தான் போகிறேன், இரவு சரியாக தூங்கவில்லை ஆகவே கண்களில் தண்ணிர் வருகிறது என்று கூறி, சீக்கிரம் கிளம்பி விட்டேன். கம்பெனி நண்பர்கள் இரண்டு பேர் என்னை வழியனுப்ப வந்திருந்தனர். ஒரு நண்பருடைய வீட்டிற்குப் போய், அங்கேயும் இட்லி சாப்பிட்டு, ஜன்ஷன் ஸ்டேஷனுக்கு பஸ் மூலம் கிளம்பிவிட்டோம்.

எல்லொரையும் விட்டு பிரிந்து செல்கிறோமே என்ற எண்ணம் மனதில் தோன்றியது. இரயில் வண்டி கிளம்பும் பொழுது என்னையறியாமலேயே நண்பர்கள் முன்னரும் அழுகை வந்துவிட்டது. மனதிற்கு கஷ்டமாக இருந்ததால் இறங்கி விடும் படி அவர்கள் அறிவுறுத்தினர். இறங்க மறுத்து, மறு நாள் வீட்டில் தெரிவித்து விடும் படி கேட்டுக்கொண்டேன்.

இரயில் புறப்பட்டது, என் வாழ்க்கையின் நிஜப்பயணம் இப்பொழுதுதான் துவங்குகிறது என்பதை நான் மனதில் பதித்துக்கொண்டேன். இரயிலில் நின்றபடியே, நெல்லை போர்டுக்கு அருகில் இருந்த காலி நீள் இருக்கையை கடைசி முறையாக பார்த்ததும் பெரு மூச்சு விடவேண்டியிருந்தது. மறு நாள் காலை 7.30க்கு எக்மோரில் இறங்கி, சங்கருடன் மெட்ராஸ் சென்ட்ரல் சென்றேன். நான் கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு அரை கிலோ ஆர்யபவன் ஸ்வீட்ஸ் வாங்கி வந்திருந்தார் சங்கர். அவரும் ஒரு ஆஃபீஸில் ஸ்டெனோவாக வேலையில் சேர்ந்துவிட்டார். ஆகவே இரயில் வண்டி புறப்பட்டதும் அவர் நேராக ஆபீஸ் செல்ல நேரம் சரியாக இருக்கும். மல்லிகாவைப் பற்றி கேட்டு மகிழ்சியடைந்த அவர், எக்காரணத்தைக் கொண்டும் மல்லிகாவை கை விடவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். இருவருக்கும் தம்முடைய குறிக்கோள் தான் முக்கியம் என்றாலும், அதை அடைந்தவுடன், வருங்காலத்தைப் பற்றி பிளான் செய்வதாக அறிவித்தேன். என் குடும்பமும் தந்தை ரிடைர் ஆனபின்னர், நெல்லையை விட்டு தமது பூர்வீக ஊருக்கே சென்றுவிட இருப்பதால், இனி நெல்லைக்கு நான் வரும் சாத்தியக்கூறுகளே இல்லை என்றும் தெரிவித்தேன். எங்கிருந்தாலும் தன்னை மறக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் சங்கர். பிறந்து வளர்ந்து, படித்து பழகி வந்த இடங்களையும், தாய் தந்தை, உடன் பிறப்புக்கள், சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர், அக்கம்பக்கத்தார், மற்றும் நன்பர்கள் அனைவரையும் விட்டுத் தன்னந்தினாயாக வேலைத் தேடி தமிழ் நாட்டையே விட்டு செல்லும் எனக்கு வருங்காலம் ஒரு சோதனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நான் புறப்படும் முன்னர், என் நண்பர்களின் முன்னிலையில் இரண்டு சபதங்கள் செய்தேன் – எக்காரணத்தைக்கொண்டும் ஹோட்டலில் வேலை செய்ய மாட்டேன், ‘தாரவி’ என்ற இடத்தில் குடியேற மாட்டேன்.

மே மாதம் சனிக்கிழமையன்று 18ம் தேதி 1974 காலை 9.00 மணிக்கு தாதர் செல்லும் இரயிலில் அமர்ந்து அது 9.30 க்கு மெட்ராஸ் சென்ட்ரலை விட்டு கிளம்பிவிட்டது. அன்று தான் இந்தியா ராஜஸ்தானிலுள்ள பொக்ரான் என்ற இடத்தில் தனது முதல் அணுகுண்டு வெடித்து அணு ஆயுத சோதனை செய்தது.

வழி நெடுக சில சமயங்களில் எனக்கு பம்பாயில் ஒரு நல்ல வேலை கிடைக்குமா என்ற டென்ஷன் ஒரு புறமிருக்க, மல்லிகாவே அங்கே ஒன்பது மாதமாக ஒரு நிரந்தர வேலைக்கு பிரயாசையுடன் போரடிக்கொண்டிருப்பதை எண்ணி மனம் சங்கடப்பட்டாலும், ‘டூ ஆர் டை’ அதாவது ‘செய் அல்லது செத்து மடி’ என்ற என்னுடைய திடமான எண்ணம் எந்த வித நெகேடிவ் எண்ணத்தையும் என் மனதில் குடிகொள்ள இடம் அளிக்கவில்லை. சோர்ந்து போகும் அடுத்த கணமே, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை என்னை நிமிர்ந்து அமரச் செய்தது. அதற்கு ஒத்துழைப்பதைப்போன்று அடிக்கடி, மல்லிகாவின் முகம் மனதில் தோன்றி, “நான் பார்த்துக்கொள்கிறேன், வாருங்கள் சர்” என்று எனக்குப் பக்கத்துணையாக ஆறுதல் அளித்து வந்தது.

“மே மாத மானாலே மேலேயே போயேலே மேலேனா மாதமாமே” என்ற இரு வழியொக்கும் சொல்லான பாலின்ட்ராமிற்கு ஒப்ப மே மாதத்தில் பாம்பே நெருங்க நெருங்க உஷ்ணம் அதிகமாக தெரிந்தது. ஆகவே, கல்யாண் என்ற ஜங்ஷன் வருவதற்குள் டிரெய்னின் பாத்ரூமிலேயே குளித்து முடித்து, டிரஸ் சேன்ஜ் செய்து கொண்டு பம்பாயில் ஃபிரஷ்ஷாக காலவடி வைக்க தயாராகிவிட்டேன். சிறிது நேரத்தில் மல்லிகாவை சந்திக்கப்போகிறேன் என்ற உணர்வு என்னை குதூகலமாக இருக்கச் செய்தது.

“….எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட , எங்களால் தாங்க முடியாத, சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக!

மெட்ராஸ் டு பாம்பே பயணத்தை வெற்றிகரமாக முடித்த தாதர் எக்ஸ்பிரஸ், ஸ்டேஷனுக்குள் மெதுவாக நுழைந்தது….

அடுத்த தொடரான “சீரான அலங்கோலங்கள்” (பாகம் – 6) ல் தொடரும்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *