சீரான அலங்கோலங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 16,957 
 

(இதைப்புரிந்து கொள்ள பாகம்: 1 – ஒரு கோலமயிலின் குடியிருப்பு , பாகம்: 2 – சேற்றில் மலர்ந்த தாமரை, பாகம்:3 – பெண் வீணை, பாகம்: 4 – இலட்சியப் பயணம் , பாகம்: 5 – வீணான பெண் என்ற கதைகளை வாசிக்கவும்)

பாகம் – 6

சரியாக காலை 11.50 மணிக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து அது ஆடி அசைந்து பிளாட்பாரத்தில் நின்றுவிட்டது. எல்லோரும் இறங்க ஆரம்பித்தனர். என்னுடைய இரண்டு லக்கேஜ்களையும் எடுத்துக்கொண்டு எங்கே என் சினேகம், எங்கே என் அன்பு உயிர் என்று நாலாபுறமும் நோக்கியபடி நானும் இறங்கினேன். தட்டுத் தடுமாறி பிளாட்பாரத்தில் வேகமாக நடந்து வந்தவர்களை விலக்கிக்கொண்டு ஒரத்தில் சென்று என் லக்கேஜை கீழே வைத்து நிமிர்ந்து நின்றவுடன், ஏசுவின் பெயரில் நிறுவப்படும் சிலையைப்போல் இருகளைகளையும் விரித்துக்கொண்டு ஆனால் சாய்ந்த தலையுடன் தோளில் ஒரு லேடீஸ் பேக் தொங்க புன்முறுவலுடன் என்னை வாரியணைக்க மல்லிகா கண்ணீர்மல்க நின்றுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

“…இதோ, உங்கள் அன்பான சினேகிதி, உங்கள் உயிராகிய நான் உங்கள் உடலுடன் கலந்துவிட தயாராக இருக்கிறேன்…” என்றார்.

“…வந்துவிட்டேன் மல்லிகா…” என்று தழுவிக்கொண்ட பின்னர் கைகளைப் பின்னிக்கொண்டு தூண்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் திட்டின் மீது இருவரும் அமர்ந்தோம். சௌக்கியமா என் அழகே என்று கேட்டதும்,

“…சர், உங்களைப் பார்ப்பதற்குள் என் உயிரில் உயிர் இல்லை. நான் 10.30 மணிக்கே இங்கே வந்துவிட்டேன்…” என்றார்.

“…மல்லிகா, என் உயிர், என் சினேகம் என்று நான் நினைக்க அதே வார்த்தகளை உங்கள் மெல்லிய இதழ்களும் சிந்தின. மல்லிகா உங்களிடம் அப்படி என்னதான் சக்தி இருக்கிறது?!

“…ஆழ்ந்த அன்பின் அறிகுறியை ஆரம்பத்திலேயே கண்டுகொண்டீர்கள், கங்ராஜுலேஷன்ஸ்…” என்றார் மல்லிகா.

மல்லிகாவுடைய கேசத்தின் புதிய அலங்காரம் என்னை வெகுவாக கவர்ந்தது. U-வடிவத்தில் இருந்த கேசங்களை மெதுவாக நகர்த்தி காணும் பொழுது நெல்லை இரயில் நிலையத்தில் மல்லிகாவுக்கு கழுத்தில் இட்ட வடுக்களின் நினைவுகள் வந்தன போலும், அவர் உடனே…

“உதட்டினால் இட்ட வடு வெளியாறியதே ஆறவில்லை உள்ளத்தினால் தொட்ட வடு” என்று கூறி, …ஏன் சர், விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்போமா?” என்று கேட்டார் ஆர்வத்துடன். “…இல்லை மல்லிகா, இங்கு வேண்டாம்… உங்கள் அழகான கேசங்களின் அலங்காரத்தைப் பார்க்க எனக்கு அருமையாக இருக்கிறது…”

மல்லிகாவின் தோற்றத்திலும், மிடுக்குத்தனத்திலும் ஒரு மாற்றம் தெரிந்தது. சற்று ஒல்லியாகவும் மிகவும் ஸ்மார்டாகவும் தென்பட்டார். ஆங்கில உரையாடலும் சரளமாக இருந்தது. உச்சரிப்பிலும் மாற்றம் தென்பட்டது..

“…எங்கே சர் உங்கள் லக்கேஜ்… இந்த இரண்டு தானா, டிரெய்னில் விட்டீர்களா…?”

“…இது தான்… ஒன்றில் என்னுடைய ஆடைகள், தோள் பையில் எனது புத்தகங்கள்…”

“..சர், இரயிலில் உங்களுடன் பயணித்த அனைவரையும் பாருங்கள், அவர்கள் எப்படியிருக்கின்றனர். நாமும் சென்ற வருடம் இரண்டு நாள் பயணத்திற்குப் பிறகு இங்கு வந்திறங்கும் பொழுது எங்கள் மூஞ்சிகளும் மொகர கட்டைகளும் கருத்துப்போய் பார்க்க சகிக்கமுடியாமல் இருந்தோம். நீங்கள் மட்டும் இவ்வளவு நீட்டாகவும், சுத்தமாகவும் தோன்றுகிறீர்களே…. இது என்ன மாயம்?!

“…மல்லிகா மாயம் மந்திரம் ஆகியவற்றில் நமக்கு நம்பிக்கை இருக்கக்கூடாது. அது மன நிம்மதியை கெடுத்துவிடும்…. மல்லிகா உங்களை சந்திக்க எனக்கு இருந்த ஆர்வம், எனக்குள் ஒரு தெம்பை ஏற்படுத்தியிருக்கலாம்…. ஒரு வேளை நாம் விரும்பியவரும் அப்படி தோன்றலாம், உதாரணத்திற்கு நீங்கள் எனக்குத் தோன்றுவது போல…. மொத்தத்தில் கள்யாண் வருவதற்குள் நான் நன்றாக தேய்த்து குளித்து டிரஸ் மாற்றிக்கொண்டேன். அது தான் இரகசியம்..”

“…சர், சுத்தமாக இருப்பதைப்பற்றி நீங்கள் சொல்லிக்கொடுத்தீர்கள். அதைப் பின்பற்றிவருகிறேன். அதனால் மனமும் உடலும் சாந்தமாக இருக்கிறது…’

பேசிக்கொண்டே இருவரும் ஒருத்தர் கையால் மற்றொருவர், சிறிது ஸ்வீட் ருசி பார்த்து விட்டோம்.

“…சர் எங்களைத்தேடி நெல்லையிலிருந்து யாரும் வந்து விடக்கூடாது என்பதில் கண்டிப்புடன் சித்தி இருந்து விடவே, நான் விலாசம் அனுப்பவில்லை. எனக்கு வேலை கிடைத்த பின்னர், ஆஃபீஸ் அட்ரஸ் கொடுத்து விடலாம் என்று சித்தியிடம் அதைப்பற்றி விவாதிக்கவில்லை…”

“…திருமணப் பேச்சிலிருந்து நான் தப்பித்து விட்டேன்…”

“… எப்படி மல்லிகா, அம்மாவின் முதல் குறிக்கோள் அதுவாகத்தானே இருந்தது.?”

“…ஆமாம், இருந்தது, ஆனால், சித்தியின் மகனும் வேறு ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அவளைத்தான் மண முடித்துக்கொள்வேன் என்றும் திட்டவட்டமாக என் முன்னிலைலேயே சொல்லிவிட்டான். ஆகவே, நாம் இருவரும் நண்பர்களாகி விட்டோம். சித்தியின் மகளையும் அவள் விரும்புகின்றவரையே மணமுடித்து விடுவதாக இப்பொழுது சித்தி கூறி வருகிறார். அதற்கும் ஏதாவது காரணம் இருக்கும். அது போக, அம்மாவும் சித்தியும் பல பேர்களிடம் சொல்லி வைத்து எனக்கு வரம் தேடினர். அவர்களோ, குலம் கோத்திரம், ஜாதகம், பஞ்சாங்கம் என்று அடம் பிடித்தனர், மேலும், வரதட்சணை கேட்கும் பேய்க் கூட்டம் இங்கேயும் நிறைய நடமாடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு பணத்திற்கு நாம் எங்கே போவது. அதை சேகரிக்க இன்னும் பத்து வருடங்கள் காணாது. ஆகவே, அந்த மாதிரி செய்கைகளிலிருந்து விடுதலைப் பெற்றுக்கொள்ளும்படி, அம்மாவுக்கும் சித்திக்கும் அறிவுறை வழங்கிவிட்டேன். என் லைன் கிளியராகிவிட்டது. இருப்பினும், நம் இருவரின் குறிக்கோள் இப்பொழுது முதலில் நாம் நிதிநிலையில் நன்றாக காலூன்றி நிற்கவேண்டும் என்பதுதான். அதற்காக நான் உங்களுடன் முழுவதுமாக ஒத்துழைக்க என்னை தயார் செய்துகொண்டேன். எக்கட்டத்திலும் நம்முடைய கால்கள் வழுக்கும் பட்சத்தில், ஒருத்தருக்கொருத்தர் கை கொடுத்து எங்களையே சமாளித்துக்கொள்ள வேண்டும்… என்ன சொல்கிறீர்கள் சர்… நான் சொல்வது சரிதானா…?”

“..எஸ் மல்லிகா, யூ ஆர் வெரி கரெக்ட். நிதிநிலை மேம்பட நாம் முதலில் வேலையில் அமரவேண்டும். இல்லையேல், இருக்கும் சேமிப்பு காலியாகி கடனாளியாகிவிடுவோம். நான் இன்றைக்கே இண்டர்வியூ இருந்தாலும் போகத் தயாராக இருக்கிறேன்….”

“… சர், முதலில் நீங்கள் பாம்பேயின் இரயில்வே லைன் செட் அப் தெரிந்து கொள்ள வேண்டும். பஸ் நம்பர்கள் மராத்தியில் இருப்பதால், அதையும் தெரிந்து கொள்வது அவசியம். VT ஸ்டேஷனிலிருந்து ‘தானா’ என்ற ஸ்டேஷன் வரையில் இரயில் பாஸ் எடுத்துக்கொள்ளுங்கள், வெஸ்டர்ன் பக்கம் போகும் அவசியம் ஏற்பட்டால், அதற்கு தனி பாஸ் வேண்டும், ஹார்பார் லைனுக்கும் தனி பாஸ் வேண்டும். மொத்தத்தில் மாதத்திற்கு குறைந்தது 50 ரூபாயாவது ஆகும். வேலை கிடைத்தவுடன், சரியான இடத்திற்கு மட்டும் பாஸ் எடுத்துக்கொள்ளலாம். ஆமாம், நீங்கள் எங்கே தங்கப்போகிறீகள் சர்…”

“…சரியாக இங்கே உங்கள் பரந்த நெஞ்சின் பள்ளத்தாக்கில், இதயத்தில், அதன் அடிமட்டத்தில்… அடர்ந்து கருத்த பரவலான கேசத்தின் நிழலில் , மின்னலடிக்கும் உங்கள் விழிகளின் வெளிச்சத்தில்”

“… சர், அதுவெல்லாம் உங்கள் சொந்த பர்மனென்ட் குடியிருப்பு. சொல்லுங்கள், அல்லது என் சித்தி விட்டிற்கே போகலாமா…? யார் என்று கேட்டால் நான் சமாளித்துக்கொள்கிறேன். நீங்கள் இன்று வருவது அம்மாவுக்குத் தெரியும். நான் அவரிடம் சொல்லித்தான் வந்தேன்.“

“… இல்லை மல்லிகா, என் நண்பனுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளேன், ஆனால், இன்று வருவதாக அறிவிக்கவில்லை, ஏனெனில் நீங்கள் வருவதாக அறிவித்ததனால், அவரை அழைக்கவில்லை. நானே அவரைத் தேடி போகவேண்டும். அவர் கார்மென்ட்ஸ் எக்ஸ்போர்ட் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராக இருக்கிறார். நான் உங்களுக்கு தெரிவித்த அட்ரஸில் மெமன்வாடா என்ற இடத்தில், மஸ்ஜித் பந்தர் ஸ்டேஷனுக்கு வெளியே வந்து தேடிப் போக வேண்டும்.”

நாளையும் அவரைப்பார்க்கலாமே..! ஏன் என் இல்லத்திற்கு வரக்கூடாதா..? சித்தி மகன் 5 நாட்களுக்கு வெளியூர் சென்றுள்ளார். அம்மா அவனுடைய அறைக்கு போய் விடுவார்.”

“..டியர் மல்லிகா, நான் அங்கே வந்தால், நம் இருவருக்கும் சோதனையான இரவாகிவிடும். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனித்திருந்தால் இடையே சைத்தான் குடியேறுவது நிச்சயம் அதன் பின்னர் நடக்கப்போவது நமக்குத் தெரியவராது. ஆகவே தான்…”

“… ஆமாம், சோதனையாகத்தான் இருக்கும். சரி சர், உங்கள் இஷ்டப்படியே ஆகட்டும். உங்கள் நண்பரின் இடத்திற்கு இன்றொரு நாள் டேக்சியில் போய் விடுவோம், லக்கேஜ் எடுத்துக்கொண்டு நடக்க கஷ்டமாக இருக்கும், காலி கையுடன் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்க இயலும். இங்கே பஸ் ரூட் தெரியவில்லை என்றால், டேக்சிதான் உதவும்….”

“… சர், காலையில் எங்கே டிபன் சாப்பிட்டீர்கள்..”

“… பூனாவில்… இரண்டு இட்லி ஒரு வடை… ”

“… இருங்கள், நான் டீ வாங்கி வருகிறேன்…” மல்லிகா பிளாட்பாரத்தின் கேன்ட்டீனிலிருந்து ஒரு ரூபாய்க்கு இரண்டு கப் டீ கொண்டு வந்தார். குடித்துக்கொண்டே பேசினோம்.

“… இன்று ஞாயிறு விடுமுறை. ஆஃபீஸில் ஃபைனான்சியல் காம்யூனிகேஷன் ஈசியாக இருக்கிறது. சார்டர்ட் அக்கௌன்டென்ட்ஸ் உடைய ஆஃபீஸ். அது தாதர் வெஸ்ட்டில் இருக்கிறது. நாம் இப்பொழுது இருப்பது சென்ட்ரல் லைன், தாதர் ஈஸ்ட். எனக்கு அக்கௌன்ட்ஸ் தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. 5-டேஸ் அ வீக் ஒர்க். சனி, ஞாயிறு விடுமுறை. வேலை நிறைய இருக்கும். சில சமயம் ஒன்றும் இருக்காது. உங்களுக்குத் தேவையான சிவி நான் டைப் செய்து தருகிறேன். அப்ளை செய்யும் பொழுது கவரிங் லெட்டெர் கையாலேயே எழுதி அதை அட்டாச் செய்து விடுங்கள்..’

“… அப்படியே ஆகட்டும் மல்லிகா…”

“…என்னை தினமும் சந்தியுங்கள். சனி, ஞாயிறு பாம்பே சுற்றிக்காட்டுகிறேன். சித்தி மகள் அனைத்தையும் எனக்கு சுற்றிக்காட்டியிருக்கிறாள். காலை 9.00 முதல் மாலை 5.30 மணி வரை, மதியம் 30 நிமிடங்கள் லஞ்ச் டைம். எப்பொழுது வேண்டுமானாலும் காய்ன் டெலிஃபோன் மூலமாக என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். முதலில் பாம்பேயின் சென்ட்ரல் லைன், வெஸ்டர்ன் லைன் மற்றும் ஹார்பார் லைன் ஆகிய மூன்றையும் தெரிந்து கொள்ளுங்கள்…” என்று கூறி அவர் ஏற்கனவே டைப் செய்து வைத்திருந்த அட்டவணை ஒன்றை அவருடைய தோள் பேக்கிலிருந்து எடுத்து என்னிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு பத்திரப்படுத்திக்கொண்டேன்.

இருவரும் வெளியே வந்து தாதர் ஸ்டேஷனுக்கு எதிரே இருந்த சாலையில் நடந்து, சிறிது தூரம் சென்றதும், ஒரு பெரிய பில்டிங் “ஹிந்த் ராஜஸ்தான் பில்டிங்” என்ற கட்டிடத்தின் பக்கத்தில் ஓர் ஹோட்டலைக் கண்டவுடன் சாப்பிடுவோமா என்று கேட்டேன். சரி என்று இருவரும் உள்ளே சென்றோம். மலையாளிகள் நடத்தும் ஹோட்டல். பருத்த அரிசி சோறும் மீன் குழம்பும் கிடைத்தது.

“…சர், இங்கே சாப்பாட்டின் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. காலையில் இட்லி கிடைக்காது. பாவ்-பாஜி என்ற உலர்ந்த பன்னும் பச்சைப்பட்டாணி, கேரெட் ஆகியவை போட்டு நன்றாக செய்கிறார்கள், இரண்டு பாவ் நமக்கு டிபனுக்கு சரியாகிவிடும். பாவ் வாங்கிக்கொண்டு வீட்டிலும் ஆம்லெட் செய்து சாப்பிடலாம், ரைஸ் பிலேட் என்று ஹோட்டலில் கேட்டால், ஒரு கப் சோறு மட்டும் சப்பாத்தி இரண்டு, நான்கு வித வருவல், கொடுக்கிறார்கள். இதெல்லாம் சாப்பிட நாம் பழகிக்கொள்ள வேண்டும். ..”

“… எனது செரிமான சக்தி பலமாக உள்ளது, மல்லிகா, அதைப் பற்றி கவலையில்லை…”

உண்டுகளித்த பின்னர் இருவரும் வெளியே வந்து டேக்சி பிடித்து மெமன்வாடா சென்றோம், அங்கே ஒர் ஹாஸ்டல் இருக்கிறது, அதன் பெயரைச் சொல்லி, அது இரண்டாவது மாடியில் இருப்பதாக அறிந்து கொண்டு, அதன் முன் பக்கம் இருப்பது தான் என் நண்பன் வேலைசெய்யும் கார்மென்ட்ஸ் ஃபேக்டரி. மல்லிகா கீழே காத்துக்கொண்டிருக்க நான் மட்டும் மேலே சென்று, என் நண்பனை விசாரித்தேன். அவன் சாப்பிடப் போய் இருப்பதாக அறிவித்தனர். என்னைப்பற்றி தெரிந்து கொண்டு, நீங்கள் வருவீர்கள் என்று அவன் சொன்னான் ஆனால் எப்பொழுது என்று சொல்லவில்லை என்றனர் மற்ற ஸ்டாஃப். சரி, என் லக்கேஜ் இங்கே இருக்கட்டும் நான் கீழே போய் சுற்றிப்பார்த்து வருகிறேன் என்று கூறி கீழே இறங்கி வந்து, மல்லிகாவுடன், அக்கம் பக்கம் எல்லாம் சுற்றிப்பார்த்து, இரயில்வே ஸ்டேஷன் வழி, அவ்வழியாக வரும் பஸ் நம்பர்கள், பஸ் ஸ்டாப், ஹோட்டல்கள் ஆகியவைகளை பார்த்து அடையாளம் வைத்துக்கொண்டேன். அந்த இடம் மிக பிரபலமான பேண்டி பஜார் ஏரியா என்பதையும் அறிந்து கொண்டேன். 6 மணிக்கு மல்லிகாவை டேக்சி மூலம் அருகிலுள்ள VT ஸ்டேஷனுக்கு அனுப்பி அங்கிருந்து பாந்த்ரா செலும் இரயில் மூலம் அவர் தனது இடத்திற்கு சென்றுவிட்டார். நாளை நான் அவரை டெலிபோனில் அழைத்து எங்கே சந்திக்கவேண்டும் என்பதை அறிவித்தால் அவரே அங்கே வருவார் அல்லது அவரிடத்தில் என்னை அழைப்பார் என்று பேசி முடிவெடுத்துக்கொண்டோம்.

என் நண்பன் என்னைப்பார்த்து கோபப்பட்டான். ஏன் சொல்லாமல் கொள்ளாமல் வந்தாய். சொல்லியிருந்தால் நான் ஸ்டேஷனுக்கு வந்திருப்பேன் அல்ல. அது போக உனக்கு தங்குவதற்கு ஒரு ரூம் கூட பார்த்திருப்பேன். நாம் யாரையும் சந்திக்க வேண்டுமானால், அடுத்த ஞாயிற்றுக்கிழமைதான் முடியும். அது வரை உன்னை நான் எங்கே தங்க வைப்பது?!” என்று கூறி தலையை சொறிந்துகொண்டிருந்தான். அவனுடைய நண்பர் அந்த கார்மென்ட் ஃபேக்டரியின் மேனேஜர். அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி, ஒரு வாரத்திற்கு இரவில் மட்டும் ஃபேக்டரியிலியே என்னை தங்க வைக்க அனுமதி பெற்றுக்கொண்டான். என்னுடைய ஒரு சிறு கவனக்குறைவு அவனை ஒரு பிரச்சினைக்குள் ஆக்கிவிடும் என்று நான் நினைக்கவில்லை. தலையை தொங்க விட்டுக்கொண்டு, சுற்று முற்றும் பார்த்தேன். தையல் வேலையில் ஈடுபட்டிருந்த அவர்களின் பேச்சு மூலம் தமிழ் நாட்டினர் பலரும், உபி, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பலரும் ஓரிரு மலையாளிகளும் தமது வேலைகளில் மும்முரமாக இருப்பதாக தெரிந்தது. இரவில் அங்கேயே தங்கி தலைக்கு துணியின் ஒரு பேல், படுக்க நீண்ட கட்டிங் மேஜை மீது மற்றொரு பேல் விரித்து தூங்கிவிட்டேன். பல பேர் அவ்வாறே அங்கேயே தங்கி தூங்கிக் கொண்டிருந்தனர். விசாரித்ததில், அவர்கள் 6 மாதம் தொடர்ந்து வேலை பார்த்து ஒரு மாதத்திற்கு தனது மாநிலம் உபிக்கு சென்று விடுவார்களாம். கடினமாக ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்கின்றனராம். காலையில் 6 மணிக்கே எழுந்தவுடன், மற்றவர் எழுந்திருக்கும் முன்னரே நான் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, குளித்து வெளியே செல்ல தயாராகிவிட்டேன். கீழே இறங்கி வந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வாங்கி, அன்றைய ஹெட்லைன்ஸ், நியூஸ் ஐட்டங்கள் பார்த்த பின்னர், எடிடோரியலை ஷார்ட்ஹேண்ட்டில் எழுதி, அதை திருப்பி வாசித்து, வேலை விவரங்கள், சிடுவேஷன் வேகேன்ட் என்ற வேலை விளம்பர பத்தியையும் வாசித்து, அப்ளை செய்ய வேண்டிய இடங்களின் விலாசத்தைக் குறித்துக் கொண்டேன். அவை அனைத்தும் பிஓ பாக்ஸ் நம்பர் கேர் ஆஃப் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்று தான் இருந்தன. குறைந்தது 2 அல்லது 3 வருட அனுபவம் கேட்டனர். டெலிபோன் செய்யச் சொன்ன நம்பர்களையும் தனியாக எழுதிக்கொண்டேன். 8 மணிக்கு வெளியே வந்து நேராக மலையாளி ஹோட்டலை அடுத்தத் தெருவில் தேடி பிடித்து, கொத்து பரோட்டா இரண்டு டிபன் சாப்பிட்டு, என்னை 5 வருடங்கள் முன்னர் நெல்லையில் சந்தித்து தன்னிடம் வரச் சொல்லி விலாசம் கொடுத்தவரைத் தேடி போகலாமே என்று விலாசம் விசாரிக்கும் பொழுது அது மிக சமீபமக இருந்தது. இரயில்வே குவார்டர்ஸ், சேண்ட்ஹர்ஸ்ட் ரோட் இரயிவே ஸ்டேஷனுக்கு பின் புறம். அந்த ஸ்டேஷன் பேண்டி பஜாரிலிருந்து நேராக 10 நிமிட வாக்கிங் டிஸ்டேன்ஸில் இருந்தது. அங்கே போவதற்கு முன்னர் என்னிடம் இருந்த சீவி (பயோ டேடா) கவர்களில் இட்டு தயாராக இருந்த போஸ்டல் ஸ்டாம்ப் ஒட்டி, விலாசம் எழுதி, போஸ்ட் பாக்ஸ் தேடி போட்டுவிட்டேன். 10.50 மணிக்கு வேலைக்காக குறித்துக்கொண்ட ஒரு டெலிபோன் நம்பரை டயல் செய்து பேசும் பொழுது ஒன்றும் சரியாக புரியவில்லை. கொடுத்த விலாசம் புதிய மராத்திய பெயர்களாக இருந்ததால், சரியாக குறிக்க முடியவில்லை. உடனே மல்லிகாவிற்கு ஃபோன் செய்து அந்த நம்பரில் விசாரித்து, அட்ரஸ் சரியாக குறித்துக்கொடுக்கும்படி கேட்டவுடன், அவர் அந்த நம்பருக்கு போன் செய்து அனைத்து விவரங்களையும் குறித்துக்கொடுத்தார். உடனே அந்த விலாசத்தை தேடி கண்டுபிடித்து அங்கே அவர்கள் வைத்த டைபிங் ஸ்பீட் டெஸ்ட் பாஸ் செய்த பின்னர், ஆங்கிலத்தின் பொது டெஸ்ட் வைத்தனர். அதில் முதலில் நானே தேறியதும், 3 மாதத்திற்கு எம் எஸ் ஈ பி என்ற மஹாராஷ்டிர மின்சார வாரியத்தில், டெண்டர்களைத் தாயரிக்க ஸ்டென்ஸில் கட்டிங் செய்யும் கான்ட்ராக்ட் வேலை என்றும், 3 மாதம், உணவு இருப்பிடத்துடன் மாதம் ருபாய் 500 தருவதாகவும் கூறினர். ஆனால் வேலை பாம்பேவிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எக்லஹாரா என்ற இடத்தில் மின்சாரம் தயாரிக்கும் பவர் ஸ்டேஷனில்தான். அடுத்த வாரம் வேலையில் சேர வந்து விடும் படி அழைத்தனர்.

பாம்பே வந்த அன்றே முதல் இன்டெர்வியூவிலேயே செலக்ட் செய்யப்பட்ட செய்தி மல்லிகாவுக்கு இனிமையாக ஒலித்தாலும், அவரை விட்டு 3 மாதங்கள் தனியாக இருக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது. “…சர், நாம் சந்தித்து ஒரு கிஸ் கூட பண்ணவில்லை அதற்குள் வெளியூர் போகிறேன் என்கிறீர்களே..”

“..இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றனவே.. மல்லிகா! மனமாற கிஸ் பண்ணலாமே, அதப்பத்தி யூ டோன்ட் வொர்ரி மேஆம்.” என்றதும் சிரித்து மழுப்பிய மல்லிகாவின் கன்னங்களுடன் கண்களும் சிவந்ததைக் கவனித்த எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

அந்த வாரம் முழுவதும், நண்பனின் கார்மென்ட்ஸ் ஃபேக்டரியில் தங்கி, இரவு படுக்க படுக்கையில்லாத காரணத்தால், கட்டிங் மேஜை மீது டைம்ஸ் ஆஃப் இந்தியா நியூஸ் பேப்பரை விரித்து தலைக்கு என் புத்தகப்பையை வைத்துக்கொண்டே தூங்க வேண்டியதிருந்தது. 6 மணிக்கு மல்லிகாவை சந்தித்து இருவரும் சௌபாட்டி பீச், கேட் வே ஆஃப் இந்தியா, ஜுஹூ பீச், ஹேங்கிங் கார்டன் என்று 9 மணிவரை சுற்றி வந்தோம். எங்கும் கூட்டமாகவே இருந்தது, தனிமைக்கு இடமே இருந்ததில்லை. பீச்சிலும் 8 மணி ஆனவுடன் பாதுகாப்பு பணிகள் நடந்து வந்தன.

நான்கு நாட்கள் கழித்து வெள்ளிக்கிழமை 4 மணிக்கு கம்பெனி ஜீப் மூலம் பவர் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். கெஸ்ட் ஹௌஸில் ஒரு ரூம் கொடுத்து, அருகாமையில் இருந்த கேன்டீனில், அவ்வப்பொழுது சாப்பிட்டுக்கொள்ள வசதியிருந்தது. சாப்பாட்டில் சப்பாத்தி தான் அதிகம். அரிசி சோறு மிகவும் குறைவு. மறு நாள் சனிக்கிழமை முதல் வேலை ஆரம்பம். ஒவ்வொரு டெண்டர் ஸ்பெசிஃபிகேஷனும் 250 பக்கம், 300 பக்கம் இருந்தது. டைப் செய்யப்பட்ட பழைய டெண்டரை புதிதாக திருத்தி எழுதியிருந்தனர். ஆகவே, சரியான ஆங்கில அறிவில்லாமல் டைப் செய்வது ஒரு இயலாத காரியமாக இருந்திருக்கும். வாரம் ஒருமுறை மல்லிகாவுடன் பேச டெலிஃபோன் வசதியும் செய்து கொடுத்திருந்தனர்.

நான் இங்கு வந்த இரண்டு வாரத்திற்குள் பம்பாயில் மழை சீசன் ஆரம்பித்து விட்டது. மழை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். பம்பாயில் இருந்திருந்தால் மல்லிகாவுடன் சற்று நனைந்திருக்கலாமே என்று மனம் துடித்துக்கொண்டது. டெலிஃபோனில் பேசிய மல்லிகா வழக்கம் போல டெலிபதி கனெக்ஷனை வெளிப்படுத்தினார்.

“… சர் நீங்கள் இங்கே இருந்திருந்தால் நாம் இருவரும் சற்று மழையில் நனைந்து அனுபவித்திருக்கலாமோ இல்லையோ…? எனக்கு மழை என்றால் ரொம்ப பிடிக்கும்..” சென்ற வருடம் நான் பாம்பே வருவதற்குள் அநேகமாக மழை முடியும் தறுவாயிலிருந்தது. அனுபவிக்க முடியவில்லை, அத்துடன், நான் தனித்து விட்டேன். என்ன செய்ய..?” என்றார். நானோ இங்கே கைகளை பிசைந்துக் கொண்டு மழையை தன்னந்தனியாக அழுது கொண்டே அனுபவித்தேன். 80 நாட்கள் கழிந்த பின்னர், வேலை ஒரு முடிவுக்கு வந்தது. நற்செய்தியை அறிவிக்க மல்லிகாவை டெலிஃபோன் செய்து அழைத்தேன்.

“…மல்லிகா, நாளை சனிக்கிழமை நான் உங்களுடன் சங்கமிக்க வருகிறேன், வேலை முடிந்து விட்டது. மழையில் நனைவோம் இன்று ஓரிரவு பொறுத்துக்கொள்ளுங்கள்… இரயிலில் வருவேனா ஜீப்பில் வருவேனா என்று தெரியாது.”

“…ஓகே சர், நாளை மதியம் நான் ஆபீசுக்கு வந்து உங்களுக்காக வெய்ட் செய்துகொண்டிருப்பேன்…”

ஒரு நாளைக்கு 30 முதல் 40 பக்கங்கள் ஸ்டென்சில் கட்டிங் டைப் செய்து குவித்துவிட்டேன். உடனடியாக அது வாசிக்கப்பட்டு கரெக்ஷன் செய்யப்பட்டது. 3 மாத வேலை 10 நாள் முன் கூட்டியே முடித்துவிட்டேன். கான்டிராக்டருக்கு செம்ம குஷி. 80 நாட்களிலேயே, என்னிடம் பேசிய பணம் கொடுத்து இரயில் மூலம் அனுப்பி வைத்தார். மராத்தியினர் தமிழ் நாட்டின் திறமையை வெகுவாக பாராட்டினர். நானும் சிறிது மராத்தியை தெரிந்துகொண்டேன். பாம்பே சென்று மல்லிகாவுடன் தொடர்பு கொள்ளவேண்டும், அடுத்து வேலைக்கு அப்ளை செய்ய நான் தயாராக இருந்தேன். இரயிலில் பாம்பே வந்துகொண்டிருக்கும் பொழுது, எனக்கு எதிரே ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்திய படித்துக்கொண்டிருந்தார். கடைசி பக்கத்தில் ஒரு பாக்ஸ் விளம்பரம் ஸ்டெனோ தேவை இன்றே மாலை 5.00 மணிக்குள் வாக்-இன் இன்டர்வியூவுக்கு நேராக வரவும் என்று அழைப்பு இருந்தது. கீழே விலாசமும் இருந்தது. அவர் பேப்பர் படித்து முடிக்கும் வரையில் ஆர்வத்துடனும், அமைதியின்றியும் நான் இருந்தேன். படித்த உடனே பேப்பர் அவரிடம் வாங்கி இந்த விலாசம் எங்கேயிருக்கிறது என கேட்டேன். தாதர் ஸ்டேஷனில் இறங்கி, வெளியே வந்து நேராக சற்று நடந்து வலது கைப்பக்கம் இருக்கிறதே அது தான் “ஹிந்த் ராஜஸ்தான் பில்டிங்” என்றார். அப்பொழுது தான் நான் முதல் நாளன்று மல்லிகாவுடன் மதிய உணவிற்கு அந்த பில்டிங் தாண்டி போனது ஞாபகம் வந்தது. ஆனால் மணி 4.45 ஆகிவிட்டது. ஐந்தே நிமிடத்தில் வேகமாக நடந்து சென்று, ரூம் நம்பர் 302க்கு போவதற்குள் 4.55 ஆகிவிட்டது. என் பெட்டி புத்தகங்களுடன் நான் உள்ளே நுழைய கதவை திறக்கும் பொழுது, இன்டர்வியூக்கு அழைத்த மேனேஜர் அவசரமாக வெளியே கிளம்ப உள்ளிருந்து கதவை திறந்தார். நேருக்கு நேர் குறுக்கே நின்று கொண்டிருந்த என்னைக்கண்டதும் அவருக்கு கோபம் வந்து விட்டது. “திஸ் ஈஸ் த டைம் ஃபார் யூ டு கம்.? “.. சர், ஐ ஆம் இன் டைம். நௌ டைம் ஈஸ் 4.55 ஒன்லி என்றேன். “ஐ ஆம் கமிங் ஃப்ரம் அ டிஸ்டேன்ஸ் ஆஃப் 200 கிலோ மீட்டர்ஸ்…” என்றேன். நாள் முழுக்க 50க்கும் மேற்பட்டோரை இண்டர்வியூ எடுத்து டயர்டானவர் அர்ஜன்டாக போக வேண்டும் ஆகவே, டிக்டேஷன் செய்வதை நீ படித்து காட்டு, டைப் செய்து காட்ட நேரமில்லை என்றார். சரி என்றவுடன் அவருடைய கேபினுக்குச் சென்று 10 லைன் லெட்டரை டிக்டேட் செய்து திருப்பி வாசிக்கச் சொன்னர். வாசித்தும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. சரியில்லை என்று சொல்லிக்கொண்டே எழுந்தவரை, எனக்கு பின் புறத்திலிருந்து யாரோ ஒருவர், சர், நீங்கள் இரண்டு நபர்களை திங்கள் கிழமை அழைத்தீர்களே இவரையும் திங்கள் கிழமை வரச்சொன்னால் என்ன என்று கேட்க, ஓகே, யூ மே கம் ஆன் மண்டே என்று கூறிவிட்டு, நான் தேங்க்ஸ் சொல்வதற்குள் அவர் ஆஃபீஸை விட்டு வெளியேறி விட்டார். எனக்கு உதவியவர், மெட்ராஸ், தமிழ் நாட்டை சேர்ந்த சந்திரசேகர் என்பவராக இருந்தார். தூரல் ஆரம்பித்தது. சந்திர சேகரிடம் கேட்டு ஆபீசிலிருந்து என் மல்லிகாவை அழைத்தேன். அவரோ…

“…சர், உங்கள் குரல் மாறியிருக்கிறதே. எனக்கு அருகாமையில் இருப்பது போலத் தோன்றுகிறது..” என்றார். “… சர், விருந்துக்கு வாருங்கள்..”

“…வார்த்தைகள் சங்கமிக்கும் பொழுது அவைகளின் டெலிவரி பாய்ன்ட்ஸ் என்ன செய்தன டியர் மல்லிகா, அதற்கும் விருந்தளிப்போம்… எங்கிருந்தாலும் உடனே தாதர் ஈஸ்ட் ஸ்டேஷனுக்கு உங்கள் பூப்போன்ற புனித கால் எடுத்து வருகை தாருங்கள். நானும் அங்கே வருகிறேன்…” என்றேன்.

“…சர், காலெல்லாம் சேராக இருக்கிறது…. புனிதத்தைப்பாருங்கள்…” என்றார்.

“…ஓஹ் அவை தாமரைத்தண்டுகள், டோன்ட் வொர்ரி மேஅம். .. அவைகளை கழுவி விடலாம். எனக்குத்தேவை தாமரைதான். ”

“… சர், உங்களுக்கு தாமரை என்றால் ரொம்ப பிடிக்குமா ?”

“.. இல்லை, மல்லி தான் பிடிக்கும், அத்துடன் அதைப் போன்ற மல்லிகா தான் பிடிக்கும்…”

“… சர், உங்களுக்கு ஒர் வாக்-இன் இன்டர்வியு விலாசத்தை வைத்துக்கொண்டு, உங்கள் கால் வருமா என்று காலையிலிருந்து எதிர்பார்க்கின்றேன். ஆனால் 5.00 மணிக்கு டைம் முடிந்து விட்டது. நீங்கள் வந்த நாளன்று நாம் மதியம் லஞ்ச் சாப்பிட்டோமே ஹோட்டல் அதற்கு முந்தி தான் இருக்கிறது “ஹிந்த் ராஜஸ்தான் பில்டிங்.” அந்த பில்டிங்கில் தான் “பி டி பி எஸ் என்ற நிறுவனம் இருக்கிறது. செல்ஃப் காம்யுனிகேஷன் தெரிந்த ஸ்டெனோ கேட்டிருக்கின்றனர்.

“…மை டியர் மல்லிகா, அதை நான் அட்டெண்ட் செய்து அங்கிருந்து தான் பேசுகிறேன். திங்கள் கிழமை மீண்டும் அழைத்திருக்கிறார்கள்…”

“… தேன்க் யூ மாய் காட், யூ ஆர் வெரி நைஸ். யூ மேட் அவர் லைஃப் ஈசி….” என்றார் மல்லிகா, இறைவனுக்கு நன்றியுடன்.

வெளியில் வந்ததும் தூறல் நிண்ணு போச்சு… தாதர் ஈஸ்ட் சென்றதும் அங்கே மல்லிகா டிக்கெட் கௌண்டர் பக்கம் எனக்காக காத்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. கூட்டம் அலைமோதவே, உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு ஷேக் ஹேண்ட் மட்டும் செய்யமுடிந்தது. நடந்த நிகழ்சிகளை பேசிக்கொண்டே டீ அருந்தினோம். மதியம் ஒன்றும் சாப்பிடவில்லை என்றதும், மல்லிகாவின் மனது சங்கடப்பட்டது. உடனே பொடெடோ வடா வாங்கி பாவுடன் சாப்பிடச் செய்தார் மல்லிகா.

“… இப்பொழுது மழையில் அங்கே போகிறேன், இங்கே போகிறேன் என்று சொல்லக் கூடாது. நான் எதையும் கேட்கத் தயாரில்லை… நான் அம்மாவிடமும் சித்தியிடமும் சொல்லித்தான் வந்தேன். நீங்கள் வருகிறீர்கள் என்று, நாம் இப்பொழுது நேராக வில்லெ பார்லே போகிறோம்….”

தர்ம சங்கடமாக இருந்தது. மழைத்தூறல் வேறு. மீண்டும் திடீர் என்று நண்பனின் ஃபேக்டரிக்குத்தான் போக வேண்டும். ஆகவே, மல்லிகாவின் யோசனைப்படி அவருடைய இடத்தையும் பார்த்து விடலாமே என்று நினைத்துக்கொண்டு

“…எப்படி போவது, மழையில் நனைந்தா அல்லது சிறிது நேரம் வெய்ட் செய்யலாமா?” என்று கேட்டேன்.

என் நினைப்புகளுக்கு பதிலளித்த மல்லிகா “…சர், நீங்கள் மீண்டும் நண்பரிடத்தில் திடீர் வருகை தந்தால் அவருக்கு கோபம் வருமா வராதா? அது போக நான் இருக்கும் இடத்தைக் காண உங்களுக்கு விருப்பமில்லையா? “…பலத்த மழைக்கு அறிகுறிகள் இருக்கின்றனவாம் 3 நாளைக்கு.” என்று நீண்ட லெக்சர் கொடுத்துக்கொண்டே தன் சோல்டர் பேக்கிலிருந்து ஒரு சிறிய குடையை எடுத்தார் மல்லிகா. “..வில்லெ பார்லே போன உடன், ஆட்டோ அல்லது பஸ் மூலம் செல்ல வேண்டும் அல்லது 15 நிமிடங்கள் நடக்கவேண்டும். இதை பிடித்துக்கொள்வோம். நடந்தே போவோம், மழையில் நனைய வேண்டுமில்ல?

“…இது ஒரு ஆளுக்குத்தான் வரும்.”

“..வாங்க என்னுடன், பார்த்துக்கொள்வோம்…”

வில்லெ பார்லே டிக்கெட் எடுத்துக்கொண்டு லோகல் இரயில் பிடித்தோம். அங்கே இறங்கியவுடன் மழை வேகம் பிடித்ததது. “..சர், உங்களுக்கு மழையில் நனைய ஆசை தானே…?”

“.. ஆமாம், ஏன்? என் பெட்டி, புத்தகங்கள்? “…அது தான் என் குடை இருக்கிறதே..” ஒரு குடையை இருவரும் பிடித்துக்கொண்டு நடந்தோம். அப்பொழுது இருபுறமும் நனைந்தாலும், நமக்குள் நெருக்கம் அதிகரித்துக்கொண்டே போனது. மழையையும் நெருக்கத்தையும் அனுபவித்தவாறே நடந்தோம், வீட்டு வரை. முதல் மாடியில் அவருடைய அபார்ட்மென்ட். பால்கனியில் யாரோ நின்றுகொண்டு கவனித்தவாறு இருந்தார். “அம்மா நாம் வருவதை பார்த்துக்கொண்டிருக்கிறார். சித்தி பேமிலி ஊரில் இல்லை. 20 நாட்களுக்கு திருச்சி போய் இருக்கின்றனர். “… சித்தியிடம் நான் வருவதாக அறிவித்தேன் என்றீர்களே.” “..ஆமாம், அது போன மாசமே அறிவித்து விட்டேன்.”

வீட்டிற்குள் சென்றதும் அம்மா புன்னகைத்து வாருங்கள் என்றார். “உங்களை அழைத்துத்தான் வருவேன் என்று நேற்றிலிருந்து ஒற்றைக்காலில் நிக்கிறா. முதலில் நனைந்த டிரஸ் மாற்றிக்கொள்ளுங்கள், நான் காப்பி கொண்டு வருகிறேன்..” என்று அம்மா கிட்சனுக்கு போய்விட்டார். டிரஸ் சேன்ஜ் செய்ய அறைக்குள் அழைத்த மல்லிகா சில்லென இருந்த தனது இரண்டு கைகளால் என் கன்னங்களை அழுத்திப்பிடித்து,

“…டெலிஃபோனில் என்னிடம் என்ன சொன்னீர்கள்?”

“.. நான் என்ன சொன்னேன்? பிடிபிஎஸ் ஆஃபீசிலிருந்து பேசுகிறேன் என்று உண்மையைத்தானே சொன்னேன்.!

“…வார்த்தைகள் சங்கமிக்கும் பொழுது அவைகளின் டெலிவரி பாய்ன்ட்ஸ் என்ன செய்தன டியர் மல்லிகா, அதற்கும் விருந்தளிப்போம்… என்று சொல்லவில்லை..?”

“… ஆமாம் சொன்னேன்…”

“… இதோ விருந்துக்கு வந்து விட்டேன், எனக்கு அந்த விருந்து இப்பொழுதே வேண்டும்.”

“…நனைந்தபடியா …! விருந்து கேட்பதென்ன்ன்ன்ன… அதையும் விரைந்து கேட்பதென்ன..?! முதலில் விருந்துக்கு வாருங்கள் என்று யார் அழைத்தது..?”

“… அதெல்லாம் எனக்குத்தெரியாது…” இதோ வார்த்தைகளின் டெலிவரி பாய்ன்ட்ஸ் உங்கள் முன்னிலையில்…”

சிறிது நேரம் பேச்சு மூச்சின்றி விருந்துண்ட எங்களுக்கு அம்மாவின் குரல் “மல்லிகா” என்று ஒலிக்க விருந்தை பாதியிலேயே விட்டுவிட்டு மல்லிகா வாயைத் துடைத்துக்கொண்டு கிட்சனுக்கு ஓடினார். சூடான காப்பி வருவதற்குள் நான் நனைந்த ஆடைகளை மாற்றிக்கொள்ள, வந்த பின்னர் மல்லிகாவும் அவ்வாறே செய்தார். மூவரும் எதிரும் புதிருமாக சோபாவில் அமர்ந்து ஒரு வருடமாக விட்டுப் போன அனைத்து விஷயங்களையும் பேசிக்கொண்டோம். தலையின் அழகிய கேசத்தை துவட்டிக் கொண்டிருந்த மல்லிகாவைக்காண ஆயிரம் கண்கள் வேண்டும். கொள்ளை அழகு என்பார்களே அது இது தானோ?!! இந்த குளிர்ந்த நேரத்தில், சோ என்று மழை பொழிய சூடான பரோட்டாவும், பெப்பர் போட்ட மட்டன் குர்மாவும் இருந்தால் போர்வையை போர்த்திக்கொண்டு மல்லிகாவுடன் அமர்ந்து உண்டுகளிக்கலாமே என்று நினைத்தேன். பேச்சு முடிந்த பாடில்லை, பல நாட்கள் கழித்து தமிழ் பேச அம்மாவுக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது போல மட மட என்று நிறைய பேசி விட்டார். அப்படியே அவருடன் பேசி பழகி வந்த மல்லிகாவும் ஒரு டாக்கெடிவ் கேர்லாக வளர்ந்து இருக்கிறார் என்பது இப்பொழுது தான் எனக்குப் புரிந்தது. மணி 9 அடித்தது. மழையும் வேகமாக பொழிந்தது. சாப்பிடலாமா என்று அம்மா கேட்டார். யாருடைய சமையல் என்று கேட்டேன். காலையில் அவளே சமைத்து விட்டாள். மழைக்கு பரோட்டா செய்து சுடச்சுட சாப்பிடலாம் என்று சொல்லி மாவும் பிசைந்து ரெடியா இருக்கு. 10 நிமிடத்தில் எல்லாம் ரெடியாகிவிடும் என்றார் அம்மா. இருவரும் கிட்சனுக்குப்போய் டின்னர் தயார் செய்துக் கொண்டு வந்தனர். பெப்பருடன் கூடிய மட்டன் குர்மாவும் பரோட்டாவையும் பார்த்து எனக்குப் புரியாத புதிய புதிராக தோன்றியது. என் விருப்பம் இவர்கள் கேட்கவும் இல்லை, நான் சொல்லவும் இல்லை, பின்னர் எப்படி இதெல்லாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது “அடுத்த வீட்டில் உங்கள் மக்கள் தான் குடியிருக்கிறார்கள், அவருடை பையனிடம் சொன்னால் அவன் ஹலால் மட்டன் வாங்கி வந்துவிடுவான். ஆகவே யோசிக்காமல் சாப்பிடலாம்..” என்றார் அம்மா. யாருடைய ஐடியா என்று கேட்டதற்கு, காலரில்லாத மேக்ஸியின் காலர்களைத் தூக்கி காட்டுவது போல் பாவனை செய்து, இது இந்த மல்லிவுடைய ஐடியாதான் என்றார் மல்லிகா, பெருமையுடன். இந்த மாதிரியான நிகழ்வுகள் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அடுத்த தொடர் “ஓரு கோலமயிலின் துணையிருப்பு” (பாகம் 7ல் முடியும்)

____________________________ ________________ ___________________________

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *