வில்லன் என்கிற கதாநாயகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 13,299 
 

எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த வேளையில்தான் அது ஆரம்பித்தது.

அதைத்தான் அறுபதுகளில் எழுதின கதாசிரியர்கள் விதி சிரித்தது என்று வர்ணிப்பார்கள்.

முகேஷ், ஸ்வேதாவை முதன்முதலில் எங்கே சந்தித்தான், அவர்களுக்குள் காதல் எப்படி ஏற்பட்டது என்பதையெல்லலாம் இது நாவல் இல்லை என்பதால், கடந்து வந்து விடலாம்.

இன்னும் பதினைந்து நாட்களில் அவர்களுக்குக் கல்யாணம்.

பட்டுப்புடவை எடுத்தாயிற்று. பந்தலக்குச் சொல்லியாயிற்று. பத்திரிகை புரூஃப் பார்த்துக் கொடுத்தாயிற்று. பாயசம் என்ன என்ற முடிவெடுத்தாயிற்று.

முகேஷுக்கு உள்ளே ஒரு கன்றுக் குட்டி உதைத்துக் கொண்டுதான் இருந்தது. தினம் ஒரு முறை கேசவனிடம் கேட்டுக் கொண்டுதானிருந்தான்.

“கேசவா, இது தப்பில்லையா?”

“என்ன தப்பு?”

“ஒரு முக்கியமான உண்மையை மறைச்சுட்டு ஒரு பொய் சொல்லி நம்ப வெச்சிருக்கேனே…”

“உனக்கொரு பொன்மொழி தெரியுமா முகேஷ்”

“ஆயிரம் பொய் சொல்லி… அதானே?”

“அதில்லை … யுத்தத்திலேயும் காதல்லயும் எதுவுமே தப்பில்லை …”

“எத்தனை நாளைக்குடா மறைக்க முடியும்? நாளைக்கு ஸ்வேதாவுக்கு உண்மை தெரியாமப் போயிடுமா?”

“தெரியட்டும். என்ன ஆகும்?”

“என்னை வெறுத்துட மாட்டாளா? ஆத்திரப்படமாட்டாளா? என்னோட சண்டை போட மாட்டாளா?”

“எல்லா யுத்தங்களும் முதல் முப்பது நாட்களுக்குத்தான் பிரபலம்னு இன்னொரு பொன்மொழி இருக்கு. என்னதான் சண்டை போட்டாலும் உன் மனைவியாதான் சண்டை போடுவா, ஒரு விளிம்புல சமாதானமும் ஆயிடுவா.”

“எனக்கே ஒரு குற்ற உணர்ச்சி இருக்கேடா.”

“சரி… அதுக்கு என்ன செய்யணும்னு சொல்றே?”

“ஸ்வேதாவைச் சந்திச்சு மனசு விட்டுப் பேசிட்டா என்ன?”

“அப்ப மட்டும் ஆத்திரப்படாம ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுப்பாளா? இப்படிக் கூசாமப் பொய் சொல்ற ஆசாமியை நான் கல்யாணம் செய்துக்கத் தயாரா இல்லை. குட்பை!”ன்னு சொல்லிட்டுப் போயிட்டா?”

இந்த மகா முக்கிய கேள்வியை கேசவன் எழுப்பியதும் முகேஷ் சைலண்ட்டாகி விட்டான்.

ஸ்வேதா செய்யக்கூடியவள்தான். கோபக்காரி. ரோஷக்காரி. அதுமட்டும் இல்லாமல் சினிமா என்பது அவளுக்கு ஒரு நான்சென்ஸ்!

“ஹாரிபிள் முகேஷ் ஏதோ நூத்துல ஒரு சினிமாதான் வாழ்க்கையைச் சொல்லுது. மத்ததெல்லாம் டராஷ் வடிகட்டின குப்பை! அதை அழகா ஸலஃபன் காகிதம் சுத்தி ரிப்பன் கட்டி பொக்கேயோ கொடுக்கறாங்க. அந்தக் குப்பைக்காக வெயில்ல க்யூவுல நிக்கிற நம்ம ஜனங்களை என்னால் புரிஞ்சுக்கவே முடியலை.”

“ஸ்வேதா, நீ ஏன் சினிமாவைப் பத்தி இவ்வளவு கடுமையான ஒபினியன் வெச்சுருக்கே? ஆஃப்டர் ஆல் அது ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் மீடியா. ஏன் லைட்டா எடுத்துக்க மாட்டேங்கறே?”

“என்னால முடியாது முகேஷ் மாஸ் மீடியால இருக்கிறவங்க பொறுப்போட இருக்கணும். சினிமா ஒரு பயங்கரமான பவர்ஃபுல் மீடியா. அதுல தப்பு செஞ்சா சமுதாயம் பாதிக்கப்படும். கலாசாரம் பாதிக்கப்படும். அதையெல்லாம் யாரும் யோசிக்கிறதில்லை. இன்னிக்கு சினிமால என்ன செய்யறாங்க? ஒரு பயில்வானைக் கூப்பிட்டுப் புல்லு வெட்டச் சொல்ற மாதிரி இந்த மாஸ் மீடியாவோட பலத்தை வேஸ்ட் பண்றாங்க.”

“ஒரு படம் எடுக்க எவ்வளவு செலவாகுதுன்னு தெரியுமா உனக்கு? ஹெவி இன்வெஸ்ட்மெண்ட் கமர்ஷியலா படமெடுத்தாதான் போட்ட பணத்தை எடுக்க முடியும். அதுக்கு நடுவுலயும் நல்ல படங்கள் வர்றப்போ சந்தோஷப்பட்டுக்கோயேன்.”

“இரு… நானும் பல தடவை பார்த்துட்டேன். சினிமா பத்தி குத்தம் சொன்னா உனக்கு ஏன் கோபம் வருது? உனக்கும் சினிமாவுக்கும் எந்த விதத்துலயும் சம்பந்தம் இல்லை . அப்புறம் ஏன்?”

‘சம்பந்தம் இருக்கு ஸ்வேதா. நான் ஒரு நடிகன். தெலுங்குல இருபது படம் முடிச்சட்டேன். துண்டு துக்கடா ரோல்ல ஆரம்பிச்சு இப்போ வில்லன் காரெக்டர்ஸ் பண்ணிட்டிருக்கேன். ஒரு பிரேக் எதிர் பார்த்துட்டிருக்கேன். சத்யராஜ் மாதிரி, ரஜினி மாதிரி என் கேரியர்ல ட்விஸ்ட் வந்து பெரிய ஹீரோ ஆகப்போறேன். என் கனவு, லட்சியம் எல்லாம் அதுதான். அதுக்காகத்தான் ஊரைவிட்டு ஓடி வந்தேன். சென்னையில் தங்கியிருந்தாலும் மாசத்துல பதினஞ்சு நாள் ஹைதராபாத் போயிட்டு வர்றது சினிமா ஷூட்டிங்குக்காகத்தான். நான் ஒரு சினிமா நடிகன்னு சொன்னா நீ என்னோட பழகமாட்டியோன்னு மெடிகல் ரெப்புன்னு பொய் சொன்னேன்’ என்று சொல்லிவிட ஒவ்வொரு தடவையும் நினைத்து, உடனடியாக விளைவுகளை யோசித்து கைவிட்டிருக்கிறான்.

இந்தச் சூழ்நிலையல்தானா ஸ்வேதாவின் தம்பி கிஷோர், கல்லூரி டூர் என்ற ஹைதராபாத் வர வேண்டும்? மியூஸியம் பார்க்க வந்தவன், பக்கத்து சாலையில் கும்பல் பார்த்து நாகார்ஜுனா ஷுட்டிங் என்ற அறிந்து ஏன் வரவேண்டும்? அந்தச் சமயத்தில், முக்கிய வில்லன் முகேஷ் பைக்கில் நாகார்ஜுனாவைத் துரத்தியபடி துப்பாக்கியால் சுடுகிற காட்சியை ஏன் எடுக்க வேண்டும்?

அந்த ஷாட் முடிந்ததும் லன்ச் பிரேக் அறிவிக்கப்பட, எதிரில் வந்து அமைதியாக நின்ற கிஷோரைப் பார்த்து அதிர்ந்தான் முகேஷ்.

“விசாரித்தேன். தெலுங்குல நீங்க ரொம்ப பாப்புலர் வில்லனாமே. அக்காவையும், என் குடும்பத்தையும் அழகா நம்பவெச்சு ஏமாத்தீட்டீங்க. நல்ல வேளை, இன்னும் கல்யாணம் நடக்கலை.”

“கிஷோர், இதோ பாரு… லெட்மி எக்ஸ்ப்ளைன். நான் பண்றதென்னவோ வில்லன் ரோல்தான். ஆனா…”

முகேஷ் வாக்கியம் முடிக்கும் முன்பாகவே கிஷோர் போய்விட்டான்.

அன்றிரவே ரயிலேறி மறுநாள் சென்னை வந்து ஸ்வேதா வேலை பார்க்கும் ஏற்றுமதி நிறுவனத்துக்கு போன் செய்து உயிரே இல்லாமல், “ஸ்வேதா, நான் முகேஷ் பேசறேன்” என்றான்.

“முகேஷ்னு சொல்லாதே….. மனோஜ்னு சொல்லு. தெலுங்குல உன் பேர் அதானே? கிஷோர் தெலுங்கு சினிமா பத்திரிகை பத்து வாங்கிட்டு வந்தான். பக்கத்து வீட்டுப் பையனைக் கூப்பிட்டு உன் படம் போட்டிருந்த எல்லா நியூஸும் படிச்சோம்.”

“ஸ்வேதா, எனக்குத் தெரியும் நீ கோபப்படுவேன்னு. என் நிலைமை என்னன்னா ?”

“நீ சொல்ல வேணாம். உன் நிலைமை என்னன்னு தான் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டனே. போன வருஷம் சிறந்த வில்லன் நடிகர் அவார்டு! பொருத்தமான அவார்டுதான்.”

“ஸ்வேதா, நான் உன்னை நேர்ல சந்திக்கணும்.”

“ஏன், இதுவரைக்கும் நடிச்சுக் காட்டின லவ் ஸீன்ல பத்தாதா? ஏதாச்சும் ஸீன் நடிச்சுக்காட்டணுமா?”

“என்னைக் கொல்லாதே ஸ்வேதா. நான் உன்னை ரொம்ப சின்ஸியரா லவ் பண்றேன். என் உண்மையான தொழிலை மறைச்சது தவிர, வேறு எந்தத் தப்பும் நான் பண்ணலை.”

“எவ்வளவு பெரிய பொய்!”

“தப்புதான். பெரிய தப்புதான். எப்படி மன்னிப்பு கேக்கணும்னு சொல்லு. கேக்கறேன். ஆனா, என்னை வெறுத்துடாதே. நான் உன் ஆபீஸுக்கு வர்றேன் நேர்ல்….”

“வரவேண்டியதில்லை .”

“ப்ளீஸ் ஸ்வேதா. என்னைப் புரிய வைக்கிறதுக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு. நீ ஆத்திரப்படு… நியாயம். ஆனா அவசரப்படாதே! நான் வர்றேன். இப்ப வர்றேன்”.

மேற்கொண்டு அவள் மறுத்து சொல்லுமுன் போனை வைத்துவிட்டு பைக்கில் புறப்பட்டான். அ

ந்தக் கட்டடத்தின் ஏழாவது மாடிக்கு லிஃப்டில் வந்தான். மொட்டை மாடியில் உனக்காகக் காத்திருக்கிறேன்’ என்று எழுதிய சீட்டை பியூன் மூலம் ஸ்வேதாவுக்கு அனுப்பிவிட்டு கட்டடத்தின் மொட்டை மாடிக்கு வந்தான்.

சில நிமிடங்களில் துப்பட்டாவை சரி செய்தபடி வந்த ஸ்வேதா, அவனைப் பார்க்காமல் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றாள்.

அருகில் வந்து கைகளைப் பிசைந்தாள்.

“ஸ்வேதா, சினிமாக்காரங்களை எட்டி நின்னு ரசிக்கிறதுக்குத் தயாரா இருக்கிற இந்த உலகம் , நெருங்கி வந்து வாழ்க்கையோட சம்பந்தம் வெச்சுக்கிறதுக்கு மட்டும் ரொம்பத் தயங்கும். அந்தப் பயத்துலதான் நான் நடிகன்றதை மறைச்சுட்டேன். ஒரு நடிகனோட காதல் மட்டும் பவித்ரமா இருக்காதா ஸ்வேதா? ஆர் யூ நாட் மெச்சூர்ட்? புரிஞ்சுக்கமாட்டியா?”

“முகேஷ், எனக்கு உன் காதல் மேல சந்தேகம் இல்லை. ஆனா உன் நேர்மை மேல சந்தேகம் வந்துடுச்சு. என்னை ஏமாத்திட்டியே.”

“காதலுக்காகத்தான் ஸ்வேதா, என் காதலுக்கு என் காதலியே எதிரியாயிடக் கூடாதுங்கறதுக்காகத்தான்.”

“நிஜமாவா? என்னை நீ அவ்வளவு லவ் பண்றியா?”

“எப்படி நிரூபிக்கணும்னு சொல்லு!”

“நான் என்ன சொன்னாலும் செய்வியா?”

“சொல்லு, செய்றேன்.”

“பயப்படாதே. இந்தக் கட்டடத்திலிருந்து குதின்னு அபத்தமா சொல்லமாட்டேன். உன்னால் முடியும். செய்வியா?”

“என்ன ?”

“எனக்குப் முகேஷைப் பிடிச்சிருக்கு. முகேஷோட காதல் பிடிச்சிருக்கு. அனா, முகேஷோட தொழில் பிடிக்கலை. யு நோ வெல், ஐ ஹேட் சினிமா? என் ஹஸ்பெண்ட் சினிமா நடிகனா! நோ… எனக்குப் பிடிக்கலை, அதுலயும் வில்லன் நடிகன்!”

“கூடிய சீக்கிரம் ஹீரோ ஆகப் போறேன் ஸ்வேதா.”

“ஓ.கே. அதான் உன் லட்சியம்னா என்னை விட்டுடு! நீ எனக்கு மட்டும் ஹீரோவர் இருக்கணும். நடிப்புக்காக இருந்தாலும் கண்டவளை நீ கட்டிப் பிடிக்கிறதை என்னால சகிச்சுக்க முடியாது. சினிமாவை நீ விட்டுடறேன்னா இந்தக் கல்யாணம் நடக்கும். என்ன சொல்றே?” அமைதியாக நின்றான் முகேஷ்.

“ஸ்வேதா, நான் சின்ன வயசிலேர்ந்து…”

“நோ… எனக்கு எந்த விளக்கமும் வேணாம். உனக்கு நான் வேணுமா, சினிமா வேணுமான்னு மட்டும் முடிவெடு. நாளைக்கு ஈவினிங் ஆறு மணிக்கு நான் என் ஆபீஸ்ல வெய்ட் பண்றேன்.”

“நாளைக்கு ஈவினிங் சென்னையிலயே ஷூட்டிங் இருக்கு ஸ்வேதா.”

“நான் ஏழு மணி வரைக்கும் வெய்ட் பண்றேன். நீ வரலைன்னா உன் முடிவைப் புரிஞ்சுக்கறேன். நான் வேணும்னு முடிவெடுத்தா வா!”

ஸ்வேதா வேகமாகச் சென்ற படிகள் இறங்கினாள்.

தன் பாக்கெட்டில் சிகரெட் தீர்ந்து போயிருக்க, கேசவனின் சிகரெட் பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பற்ற வைத்தான் முகேஷ்.

“போடா பைத்தியக்காரா…. அவ கண்டிஷன் போட்டாளாம். இவன் சினிமாவை விட்டுடறதுன்னு தீர்மானிச்சுட்டானாம். உன்னோட கனவுடா அது! எத்தனை வருஷமா நாய் மாதிரி அலைஞ்சே…
ஞாபகமிருக்கா? இப்பதான் நீ வளர்ந்துட்டு வர்றே பிரைட்ஃப்யூச்சர் இருக்கு. உன் கனவு நிறைவேறப் போற நேரம் நாளைக்கு நீ பெரிய நடிகனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க அழகான பொண்ணுங்க ஆயிரம் பேர் போட்டி போடுவாங்க” என்றான் கேசவன்.

“கரெக்ட்டுதான். அந்த ஆயிரம் பேர்லேர்ந்து எனக்கு ஒரு மனைவி கிடைப்பா! ஆனா, என் காதலி மனைவியா கிடைப்பாளா கேசவா?” என்றான் முகேஷ்.

“ஸோ ?”

“நாளைக்கு கார், பங்களா, பணம், புகழ் எல்லாம் அனுபவிக்க முடியும். ஆனா, சேர்ந்து அனுபவிக்க என் ஸ்வேதா இருக்கமாட்டா. காதல்ல தோத்துட்டு கனவை நனவாக்கிக்கறதுல ஒரு வெறுமை இருக்குடா. கனவைக் கலைச்சுட்டு காதல்ல ஜெயிக்கிறதுல ஒரு சுகம், நிம்மதி, சந்தோஷம் எல்லாம் இருக்குடா. புதுசா கனவுகளை உருவாக்கியிக்க முடியும். இன்னொரு தடவை புதுசா ஒரு காதலை உருவாக்க முடியாது. அது ஒரு தடவைதாண்டா அமையும்.”

“சந்தர்ப்பமும் ஒரு தடவைதான் கிடைக்கும். சினிமா ஆசையோட தினம் எத்தனை பேர் ரயிலேறி வர்றான் தெரியுமா? ஒரு சின்ன ரோல் கிடைக்காதான்னு எத்தனை ஆயிரம் பேர் சுத்திக்கிட்டிருக்கான் தெரியுமா? உனக்கு மட்டும் தாண்டா வாய்ப்பு கிடைச்சது. மனசுக்குப் பிடிச்ச மனைவி அமையறது சொர்க்கமா இருக்கலாம். ஆனால் மனசுக்குப் பிடிக்காத தொழில் அமையறது நரகம்டா!”

“நீ என்னதான் சொல்றே?”

“சினிமாவைக் காதலுக்காக விடறத சரியில்லை . சினிமாதான் என் முதல் காதலின்னு பல தடவை நீயே சொல்லி இருக்கே. உன் ரெண்டாவது காதலிக்காக முதல் காதலியை ஏன் விடணும்? உன் முடிவால் காதல்ல ஜெயிச்ச சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். காதல் மயக்கம் முடிஞ்சதும் மனசு பூரா ஏமாற்றம் இருக்கும். அவ வார்த்தையை நீ மதிக்கிறே. ஆனா, உன் லட்சியத்தை அவ மதிக்கலையே.”

“மதிக்கணும்னு என்னடா அவசியம்? எனக்கு சினிமா பிடிக்கும். அவளுக்கு பிடிக்காது. பிடிக்காததைத் திணிக்க முடியாது. ஆனா, பிடிச்சதை விட்டுக் கொடுக்க முடியும். விட்டுக் கொடுக்கறதுதானே வாழ்க்கை ! காதலுக்காக உயிரையே விடறாங்க. நான் என் கனவைத்தானே விடறேன்.”

“இது யதார்த்தமான முடிவு இல்லை . எமோஷனலான முடிவு. எனக்குப் பிடிக்கலை. ப்ராக்டிக்கலா யோசி, ராத்திரி பூரா யோசி. அப்புறம் முடிவு செய்!”

முகேஷ் மற்றொரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டு அறைக்குள் உலவியபடி யோசிக்கத் துவங்கினான்.

மறுநாள் மாலை ஆறு மணிக்கத் தன் அலுவலகத்தில் காத்திருந்த ஸ்வேதா, ஒலித்த போனை எடுத்தாள். “ஸ்வேதா, நான் முகேஷ் பேசறேன். நான் ஒரு அட்ரஸ் சொல்றேன். நீ உடனே புறப்பட்டு அங்கே வா.”

சொல்லப்பட் விலாசத்தைக் குறித்து கொண்ட ஸ்வேதா, “இது என்ன அட்ரஸ்?” என்றாள்.

“இங்கதான் ஷூட்டிங் நடந்துட்டிருக்கு ப்ளீஸ்… வா! பேசணும்.”

முகேஷ் வைத்துவிட, முகம் சிவந்தாள் ஸ்வேதா நான் அவ்வளவு தூரம் சொல்லியும் ஷூட்டிங்க் போயிருக்கிறான் என்றால் அவனுக்கு நான் முக்கியமில்லை என்றுதானே அர்த்தம்? இன்னும் பேச என்ன இருக்கிறது?

ஸ்வேதா ஆட்டோ பிடித்து வந்து சேர்ந்தாள்.

முகேஷ் கையில் கத்தி வைத்துக் கொண்டு, “ரேணு நின்னி சம்ப்பேஸ்த்தானு! நிஜம் செப்பு! செப்பே!” என்று ஆக்ரோஷமாக ஒரு பெண்ணை உலுக்கி வசனம் பேசிக்கொண்டிருந்தான்.

அடுத்த ஷாட்டுக்கான இடைவெளியில் அவளருகில் வந்தான் முகேஷ்.

“என்ன? என்ன மன்னிச்சுடு. என்னால சினிமாவை விட முடியாது! அதானே சொல்லப்போறே?” என்றாள் ஸ்வேதா.

“இல்லை”

“பின்னே?”

உதவி இயக்குநர் வந்து, “சார், ஷாட் ரெடி! வாங்க, வந்து கொலை செய்யுங்க” என்றான்.

ஸ்வேதா, முகேஷைப் பார்த்தாள். கண்ணெதிரே கத்தியைச் சுழற்றிக் காட்டியபடி, “இது என் கடைசிக் கொலை” என்ற சிரித்தான் அவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *