கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 7,840 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிணற்றுக் கட்டின் மேல் நான் உட்கார்ந்திருந்தேன். அது ஒரு விசித்திரமான கிணறு, இல்லை பல இடங்களில் இப்படி இருக்கக்கூடும். எங்கள் வீட்டுப் பக்கத்தில் பாதியும், அடுத்த வீட்டு நிலத்தில் பாதியுமாக அந்தக் கிணறு இருந்தது. கிணற்றுக்கு மேலாக, எல்லைக்கு நேராய் மதில் கட்டப்பட்டிருந்தது. கிணற்றுக்கு இந்தப்பக்கத்தில் இருந்தவர்கள் அந்தப்பக்கத்தில் இருப்பவர்களைப் பார்க்க முடியாது உயரமான மதில்தான்.

நான் கிணற்றுக்கட்டின் மேல் இருந்தேன். கிணற்று நீர் சுத்த மான கண்ணாடி போலிருந்தது. அங்கே என்னுடைய நிழல் தெளிவாக வும், அழகாகவும் தெரிந்தது. என்னுடைய விம்பத்தின் அழகிலேயே நான் மயங்கிப்போய் பெருமையுடன் இருந்தேன்.

மதிலுக்கு அந்தப்பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டது. அடுத்த நிமிடம் கிணற்றுக்குள்ளே அவளுடைய உருவம் தெரிந்தது.” அவளை எனக்கு நன்றாகத் தெரியும். “சுபத்திரையை தெரியாதவர்களும் இந்த ஊரில் இருக்கிறார்களா?

அவள் அழகி. நீருக்குள்ளேயே தோன்றிய அந்த நிழலில் அழகு இன்னும் சோபித்தது. அவளுடைய கையில் வாளி இருந்தது தண்ணீர் அள்ளுவதற்காக. ஆனால் அவள் கிணற் றுக்குள் விடவில்லை. என்னைப் பார்த்தாள் – என்நிழலை. நானும் அவள் உருவத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்ன வெக்கக்கேடு! அவள் சிரித்துவிட்டாள் என்னைப்பார்த்து! நான் கலங்கி விட்டேன். அங்கே இருக்க என்னால் முடியவில்லை, எழுந்து ஓடி வந்துவிட்டேன்.

பிறகுதான் யோசித்தேன். அன்று முழுக்க யோசினைதான். வேறு ஒன்றிலும் மனம் செல்லவில்லை. அதை ஒரு அற்ப விஷயமன்று தள்ளிவிடவும் முடியவில்லை . நான் ஏன் ஓடிவந்துவிட்டேன்? அதற்கு அவளுடைய சிரிப்புத்தான்… என்னைப்பற்றி அவள் என்ன நினைத்திருப்பாள்? உணர்ச்சியற்ற உருவம் என்று நினைத்திருப்பாளே? நினைக்கட்டுமே. அந்த விபச்சாரி எப்படியாவது நினைக்கட்டும்.

ஆம், அவள் விபச்சாரிதான். விவாகமானவள். அவளுடைய கணவன் அவளை விட்டுவிட்டு ஓடிவிட்டான் என்று சொல்கிறார்கள். வேறு சிலர் இவள்தான் அவனைத் துரத்தி விட்டாள் என்று சொல்கிறார்கள். எனக்கு ஒன்றும் நிச்சயமாகத் தெரியாது. அவளும் அவளு டைய தாயாரும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் அடுத்த வீட்டுக்கு வந்தார்கள். அவள் – சுபத்திரை அழகானவள். இருபது வயதுவரையில் இருக்கும் அவளுடைய தாய்க்கு நாற்பது நாற்பத்தைந்து …. அவள் கிழவியாகிவிட்டாள்!

சுபத்திரையின் வீட்டுக்கு பிரதானமாக மூன்றுபேர் வருவதாக நான் கவனித்திருக்கி றேன். ஒருவன் சாடையாக தலை நரைத்தவன். ஆனால் நல்ல தனவந்தன் போல காணப் பட்டான். இன்னொருவன் ஒரு பிராமணன். முப்பது வயதிருக்கும். கடைசிப் பேர்வழி ஒரு இளைஞன். பதினெட்டு வயதுதான் இருக்கும். இந்த மூவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ சுபத்திரையின் வீட்டுக்கு அடிக்கடி போகிறார்கள். அந்த மூன்றுபேர்களுக்கும் அவள் இடமளித்துக்கொண்டுதான் இருந்தாள்.

அன்று மாலை நடந்த விசயம் என் மனதை கலைத்துக் கொண்டே இருந்தது. அவள் எதற்காகச் சிரித்தாள்? என்னையும் தன் வலையில் இழுத்துவிடவா? விபச்சாரி…. ஒருவேளை பக்கத்து வீட்டுக்காரன் என்ற முறையினாலோ?…. எப்படியிருந்தாலும் நான் அப்படி அவளு டைய முகத்தை முறித்து ஓடிவந்திருக்க வேண்டியதில்லை. கவனியாததுபோல் இருந்திருக் கலாம். ஏன் நானும் சிரித்தால்தான் என்ன வந்தது?… அவள் அழகானவள்தான்!… அழகு! விசமுள்ள மலரைப்போல!

அடுத்த நாளும் கிணற்றுக்கட்டில் போயிருந்தேன், வேண்டுமென்றேதான் “அவள் வரமாட்டாளா?” என்று என் மனம் நினைத்தது. ஏன் நினைத்தது என்று எனக்கே தெரிய வில்லை. நான் இருக்கிறேன் என்று அவளுக்குத் தெரிவதற்காக மெல்ல – ஆனால் அவளுக்குக் கேட்கும்படியாக – ஒரு பாட்டை வாய்க்குள் முணுமுணுத்தேன் அது கேட்டுது தானோ என்னவோ அவள் வந்தாள்.

அவள் பார்த்தாள். நானும் பார்த்தேன் – நீருக்குள்தான்!

ஆனால் அவள் சிரிக்கவில்லை அவள் பார்வையிலே ஒரு கனிவு, இரக்கம், நாணம், மரியாதை – எல்லாம் தெரிந்தன.

நான் சிரித்துவிட்டேன்.

நான் ஓடவில்லை. என்னுடைய மானத்தைக் காப்பாற்றி விட்டாள் பதிலுக்குச் சிரித்தாள்.

“நேற்று ஏன் ஓடிவிட்டீர்கள்?” என்று கேட்டாள் துணிந்து.

என்னுடைய நெஞ்சில் ஈட்டியால் குத்தியதுபோல் இருந்தது. என்னுடைய கோழைத் தனத்தை நினைத்து வெட்கினேன். அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. நல்லவேளை! என்னுடைய நிலைமையை அறிந்துதான் போலும், சிரித்துக்கொண்டே, “தொம்மென்று வாளியைக் கிணற்றுக்குள் விட்டாள். நீர் கலங்கிற்று. நிழல்கள் மறைந்தன. என் மனம் ஆறுதல் அடைந்தது.

“ஏன் கலங்கிவிட்டாய்?” என்றேன். தண்ணீருடன் வாளியை மேலே இழுத்தாள் சுபத் திரை. சிறிது நேரத்திற்கெல்லாம் தண்ணீரின் அசைவு நின்றுவிட்டது. எங்கள் இருவரின் உருவமும் தெரிந்தது.

அவள் சிரித்துக் கொண்டே “இப்போது பாருங்கள்!” என்றாள்.

நான் குறும்பாகவே “எதை?” என்றேன். “நீங்கள் பார்க்க விரும்புவதை!” என்று அவள் சாமர்த்தியமாய் பதில் சொல்லி விட்டாள்.

நான் வெட்கிப்போனேன். “நான் போகட்டுமா?” என்றேன்.

“அவசரமோ ?

“இல்லை. இருந்தாலும், இங்கே ஏன் நிற்கவேண்டும்?”

நான் மறுபடியும் மௌனியானேன். “எங்கேயோ போகிறோமா? நினைத்த போதெல் லாம் சந்திக்கலாமே!” என்று சமாதானம் கூறிவிட்டு அவள் போய்விட்டாள்.

நான் பெருமூச்சு விட்டேன்.

என் உள்ளத்தில் பலபல எண்ணங்கள். கற்பனைகள் சஞ்சாரம் செய்தன அவற்றை அடக்கிக்கொள்ள என்னால் முடியவில்லை.

“எங்கேயோ போகிறோமா? நினைத்த போதெல்லாம் சந்திக்கலாமே!” என்ற வார்த் தைகள் என் மனதில் இடைவிடாது சுழன்று கொண்டே இருந்தன.

அவள் என்னை அடிக்கடி காணவும் பேசவும் விரும்புகிறாளென்று அந்த வார்த்தைகள் எனக்குத் தெரிவித்தன. இது கூடவா தெரியாமல் போகும் ? இதனால் என்மனம் ஏனோ பூரிப் படைந்தது. உண்மையைச் சொல்லுவதில் வெட்கம் என்ன? நான் அவளை அவளுடைய ஈனமான வாழ்வை வெறுத்தேன். ஆனால், என் மனதைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. அது சுபத்திரையின் மோகனத்திலே லயித்துவிட்டது. அவள் மேல் – அந்த விபச்சா ரியின் மேல் நான் காதல் கொண்டு விட்டேன். அவள் வெற்றிபெற்று விட்டாள்.

சுபத்திரையைக் காணவும் அவளோடு பேசவும் நான் ஆவல்கொண்டேன். அதுவே என் இன்பத்தின் லக்ஷியமாகவும், வாழ்வின் உன்னதமான நேரமாகவும் ஆகிவிட்டது. அடிக்கடி அவளோடு பேசுவதாலேயே என் வாழ்க்கை இன்பமுடையதாகின்றது. கிணற்று நீருக்குள்ளே அவளுடைய அழகிய உருவத்தை காணுவதனாலேயே என் உள்ளம் ஆறுதலடைகின்றது.

அவளாகக் கேட்டுக்கொண்டதன் பேரில் அவளுடைய வீட்டுக்கும் நான் போக லானேன். அவளுக்குப் பக்கத்தில் – நேர் நேராக – இருந்து சல்லாபிக்கலானேன். அவளுடைய பேச்சுக்கள் எனக்கு மிகவும் பிடித்தன. அவளுடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. தங்கம் போன்ற இருதயம் உடையவள். அவளுடைய அகத்தின் அழகுதான் முகத்தில் தெரிகிறது. லட்சுமிகரமாய் அவள் எப்படி விபச்சாரியானாள் என்பது எனக்கு ஆச்சரிய மாய் இருக்கிறது. ஆகா, எவ்வளவு நல்ல பெண்! அவளுக்கிருக்கும் கெட்டபெயரைப்பற்றி கேட்டுவிடலாம் என்றால் ….. எப்படிக் கேட்பது? மனத்திடம் வரவில்லை

அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த இளைஞன் வந்தான். அதற்குமேல் அங்கே இருக்க எனக்கு விருப்பமில்லை.

“நான் போகிறேன்” என்று எழுந்தேன். “ஏன்?” என்றாள் சுபத்திரை, திகிலுடன்.

நான் அந்த இளைஞனைப் பார்த்தேன் அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவள் ஒன்றும் பேசவில்லை. வாட்டமுற்ற அவள் முகத்திலே, சிறிது கோபமும் தெரிந்தது. நான் வெளியே வந்தேன்.

தெருவுக்கு வந்ததும், உள்ளே சுபத்திரை பேசுவது கேட்டது : “இனிமேல், இங்கே நீர் வரவேண்டாம். போய்விடும்!”

நான் எங்கள் வீட்டுக்குள்ளே போய் விட்டேன். யோசனை அதிகரித்துக்கொண்டே வந்தது. “இவள் எதற்காக அவனைத் துரத்துகிறாள் ?… என்னைத் திருப்திப்படுத்தவா?

சுபத்திரையின் மனப்போக்கை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. கடைசியில், அவளையே கேட்டுவிடுவது என்று தீர்மானித்தேன். அந்தத் தீர்மானத்தோடுதான் அன்று அவளுடைய வீட்டுக்குப் போனேன்.

சுபத்திரை ஆனந்தத்துடன் என்னை வரவேற்றாள். நான் எதிர்பார்த்த கேள்விதான் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தது :

“நாலுநாளாய் ஏன் இந்தப்பக்கம் வரவில்லை?”

“வரவில்லை…”

விஷயத்தைச் சொல்லிவிடலாமாவென்று பார்த்தேன். ஆனால் ஏனோ தயங்கினேன்.

“என்மீது ஏதாவது கோபமா?”

“உன் மீதா!”

“பின்?….”

“அந்த வாலிபர்…”

நான் துணிந்து கேட்டேன்.

“ஆமாம். அவன் ஏன் இங்கு வருகிறான்?”

அவள் முகம் சொல்லமுடியாத விகாரமடைந்தது. பரிதாபத்துடன் என்னைப் பார்த்தாள். “நீங்கள் அவசியம் அறியவேண்டுமோ?”

“அறியவேண்டியதுதான், நீ இஷ்டப்பட்டால்! என்னுடைய சிந்தனையை அது குழப்பிக் கொண்டிருக்கிறது.”

“அப்படியானால் சொல்கிறேன். உங்களிடம் நான் எதையுமே மறைக்கப்போவதில்லை.”

என்னுடைய உள்ளம் நடுங்கிற்று. அவள் என்மீது உண்மையான பாசம் வைத்து விட்டாளென்பதை அறிந்துகொண்டேன். அவள் தயக்கத்துடன் சொன்னாள்:

“அவர் மாத்திரம் அல்ல, வேறும் இரண்டுபேர் வருகிறார்கள்…”

“எனக்குத் தெரியும். அவர்கள் ஏன் வருகிறார்கள் என்பதுதான்…என்னைப்போல அவர்களும் உன்னுடைய நண்பர்களா?”

“உங்களோடு அவர்களை ஒப்பிடாதீர்கள்…அவர்கள் கெட்ட எண்ணத்துடன் வருகிறார்கள்…நான்…நான் அவர்களுக்கு இடமளித்துவிட்டேன்…”

சுபத்திரை கரங்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். பார்க் ப் பரிதாபமாயிருந்தது. “ஏன் இந்தக் குப்பையைக் கிளறினேன்?” என்று என்னையே நொந்து கொண்டேன்.

“சுபத்திரை..!”

அவள் நிமிர்ந்து பார்த்தாள். நான் மௌனமாக அவளுக்கு அனுதாபம் தெரிவித்தேன். சிறிதுநேரம் கழிந்தது.

“நான் தெரிந்திருந்தும் உன்னுடைய புண்பட்ட உள்ளத்தைக் குத்திவிட்டேன். என்னை மன்னித்துக் கொள்!”

“இல்லை. என்றோ ஒருநாள் சொல்லிவிட வேண்டியதுதான். உங்களிடம் சொன்ன பிறகு சிறிது ஆறுதலாயிருக்கிறது.”

“உன்னுடைய குற்றத்தை உணர்ந்து விட்டாயல்லவா?”

“உணர்ந்துவிட்டேன். இனி உணர்ந்தென்ன? இன்பத்தேன் நிறைந்து கிடக்க வேண்டிய இந்தப் புஷ்பம் கொடிய விஷப்பாண்டமாகிவிட்டது…”

அவள் தேம்பித்தேம்பி அழுதுகொண்டேயிருந்தாள். நான் எழுந்துபோய், அவன் கரங்களைப் பிடித்து என்னோடு அணைத்துக்கொண்டேன். அவள் தன்தலையை என் மார்பின் மீது பொருத்திக்கொண்டாள். அவளுடைய சுவாசத்திலே, பார்வையிலே முகபாவத்திலே சாந்தி பிறந்தது. ஆனால், விம்மிக்கொண்டேயிருந்தாள்.

“சுபத்திரை!… நான் உன்னைக் காதலிக்கிறேன்” அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் ஆனந்தத்தால் அகல விரிந்தன.

“எனக்குப்போதும்!” என்றாள். பெருமூச்சுடன்.

“உன் களங்கம் அழிந்துவிட்டது…”

“நீங்கள் அழித்துவிட்டீர்கள்!”

“உன்னை என் மனைவியாக்குகிறேன்.” அவள் என்னை இறுக அணைத்தாள். “இந்த உலகத்தில் எந்த இன்பத்தையடைய வேண்டுமென்று தவித்தேனோ அந்த இன்பத்தை அடைந்துவிட்டேன்” என்றாள்.

அடுத்தநாள். அடுத்தநாள்.

என் உள்ளம் ‘கிளுகிளு’த்துக கொண்டிருந்தது. அதிகாலையில் கிணற்றடிக்குப் போனேன். ஒரு விபச்சாரியின் உள்ளத்துக்கு ஆறுதல் கொடுப்பதற்காக என்னை – என் அந்தஸ்தை தியாகம் செய்தேனென்ற ஒரு நினைப்பு. அதில் கொஞ்சம் பெருமை. ஆனால், உண்மையை நான் ஒத்துக்கொள்கிறேன். நான் ஒரு தியாகமும் செய்யவில்லை. அவளுடைய சௌந்தர்யத்திலும் தங்கமான குணத்திலும் நான் மயங்கிவிட்டேன்.

கிணற்றடிக்குப் போனேன். அவள் வரவில்லை. என்னுடைய காரியங்களை மிகவும் ஆறுதலாகவே செய்தேன். ஆனால் அதுவரையும் அவள் வரவேயில்லை. ஒரு சின்ன ஏமாற்றந்தான். அதனால் அவளைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் மிகவும் அதிகரித்தது.

அவளுடைய வீட்டுக்குப் போனேன்.

படலை பூட்டியிருந்தது. நான் பிரமித்தேன். கொஞ்சநேரம் மௌனமாக நின்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.

சுபத்திரை எங்கே? அவளுடைய தாயார்..?

கேள்விகளும் சமாதானங்களும் உள்ளத்தை நிரப்பின. இந்தச் சமயத்தில் சுபத்திரையின் வீட்டு வேலைக்காரப்பையன் வந்தான். என்னுடைய உணர்ச்சி அதிகமாயிற்று.

“என்னடா?” என்றேன். அவனும் கொஞ்சம் படபடப்போடுதான் சொன்னான்.

”அம்மாவும் பெரியம்மாவும் ராத்திரியே போய்விட்டார்கள்.”

“போய்விட்டார்களா?”

“உம்”

“எங்கே ?

“எங்கேயோ!”

“உனக்குத் தெரியாதா?”

“அவர்கள் சொல்லவில்லை”

நான் மௌனமாக இருந்தேன். உள்ளம் வெடித்துவிடும் போலிருந்தது. “இங்கே ஏன் வந்தாய்?” அவன் மெதுவாக மடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து என்னிடம் கொடுத்தான்! “உங்களிடம் அம்மா கொடுக்கச் சொன்னார்.”

என் இருதயம் திக்திக்கென்று அடித்தது. கைகள் நடுங்கின. கடிதத்தை வாங்கிக் கொண்டு, அவனைப் போகும்படி – தலையசைத்தேன். அவன் போய்விட்டான். நடுங்கிய கைகளுடன் கடிதத்தை விரித்து வாசித்தேன்.

தேகமெல்லாம் பதறிற்று.

“பிரியமுள்ள என் காதலருக்கு :

வணக்கம், நான் ஏதாவது தவறுதலாகக் காரியங்கள் செய்துவிட்டால் என்னை மன்னியுங்கள்.

இன்றிரவே இந்த ஊரைவிட்டுப் போகிறேன். என்னுடைய வாழ்வில் எனக்குக் கிடைக்க முடியாததாக எந்த இன்பம் இருந்ததோ, அந்த இன்பத்தை அடைந்து விட்டேன். விஷமுள்ள இந்த மலருக்கு அமிர்தத்தின் இனிப்பை நீங்கள் காட்டிவிட்டீர்கள். இதுவே எனக்குப் போதும். என் உள்ளம் ஆறுதலடைந்துவிட்டது.

எந்த நட்சத்திரம் என் வாழ்வில் ஒருகண நேரமேனும் ஒளியைக் காட்டியதோ, அந்த நட்சத்திரம் மங்கிப்போவதை நான் விரும்பவில்லை.

உங்களுடைய மேன்மையான ஹிருதயத்தில் அமரத் தகுதியற்ற இந்தப் பாவியை மறந்துவிடுங்கள். கறைபட்ட என் வாழ்வு சாம்பலாகிப்போகட்டும்.

வருத்தத்துடன் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். என்னை மறந்துவிடுங்கள்.

எவ்வளவு கஷ்டத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்பது ஈஸ்வரனுக்கே தெரியும். என் ஆயுள் முழுவதும் அந்த ஒருகணநேர இன்பத்தை நினைத்துக்கொண்டு ஆறுதலடைகிறேன்.

ஸ்வாமி, என்னை மறந்துவிடுங்கள். உங்கள் உள்ளம் கறைபடக்கூடாது. என்னை மறந்துவிடுங்கள்.

– சுபத்திரை”

என் கையில் பிரித்தபடியே கடிதம் கிடந்தது.

என் உள்ளத்திற்கு எப்போதைக்கு ஆறுதல் வரும்? அவளை எப்படி மறப்பேன்?

– ஈழகேசரி 27.06.1943, 04.07.1943.

ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *