ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 13,226 
 

ரோஸ்லினுக்கு இப்பவே ஈஸ்டர் துவங்கிவிட்டது போலத்தான் இருந்தது. இன்னும் இரண்டுநாள் தான் பாக்கி. ஆனால் அதற்குள்ளாக அவளது வாசலில் நட்சத்திரங்கள் ஊஞ்சல்கட்டிக்கொண்டது. பண்டிகைக்காலஙகளுக்கென்றே முளைக்கும் விசேஷ றெக்கை இப்போதே துளிர்விட்டது போல கண்ணாடியை எடுத்து ஜன்னலருகே கொண்டுவந்து வைத்து தன் முகத்தை பார்த்தாள். கன்னத்தில் மினுக்கம் கூடி சிமிட்டியது. கண்ணாடியில் தனக்கு தானே ஒழுங்கு காட்டிக்கொண்டாள். பின் காதல்ஜோடிகள் கைகோர்த்தபடி சினிமாக்களில் ஆடுவது போல கண்னாடியை இருகைகளாலும் பிடித்துக்கொண்டு ஆடியபடி கட்டிலில் வந்து விழுந்தாள். படுத்தவாக்கிலேயே கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவளுக்கு முன்பை விட இப்போது தன் அழகு கூடியிருப்பது போல பட்டது. வீட்டில் யாரும் இல்லாத அந்த பொழுது அவளுக்குள் ஒரு கிதாரை மீட்டியது. மனசில் காரணமே இல்லாமல் ஒரு குதூகலம். இதே போல வீட்டில் யாரும் இல்லாத போது சிறு வயதில் வழக்கமாக அவள் செய்யும் காரியங்களில் ஒன்று இப்போது ஞாபகத்துக்கு வந்தது. பீரோவில் ஒளித்து வைத்திருக்கும் அம்மாவின் லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டு ஜன்னல் வழியாக அம்மா வருகிறாளா என எட்டி பார்ப்பதும் பின் அவ்ள் வருவது தெரிந்ததும் ஓடிப்போய் உதட்டை துடைத்துக்கொள்வதுமான அந்த காட்சி அவள் மனதில் தோன்றி மறைந்தது. தனக்கு தானே சிரித்துக்கொண்டாள்.

முதன் முதலாக கிறிஸ்டியின் கல்யாணத்தின் போதுதான் அம்மாவே இவளது உதட்டுக்கு லிப்ஸ்டிக்கை போட்டுவிட்டாள். அன்று மனதில் விதவிதமான கற்பனைகள் தன் மனது முழுக்க திளைதத்ததுவும் இவளுக்கு ஞாபகத்தில் வந்தது. மனது முழுக்க அப்படி ஒரு ரம்மியம். சட்டென ஒரே நாளில் அழமு மிளிரும் தேவதைகளை தனக்கு கூடிவந்துவிட்டது போல அங்குமிங்குமாக காரணமின்றி திரிந்தாள். கொலுசு சத்தம் வேறு அவளது அத்தனை உற்சாகத்துகுக்கும் அந்த கொலுசுசத்தமும் ஒருகாரணம் என்பதை அறியாமல் அதனை ரசித்தபடியே அங்குமிங்குமாக கூட்டத்துனூடே திரிந்தாள். வீட்டில்… வாசல்பந்தலில் சர்ச்சில்… வரவேற்பு நடந்த கம்யூனிட்டி ஹாலில் என பலவிதமான காட்சிகள் பன்னீர்வாசத்துடன் அவளது நினைவுக்குள் தளும்பின. முதன்முதலாக நிறைய்ய ஆண்களை அவள் நெருக்கமாக பார்த்ததும் அப்போதுதான். அதற்குமுன் ஞாயிற்று கிழமை வகுப்புகளின் போது சர்ச்சில் ஆண்களை பார்ப்பதற்கும் இதற்கும் நிறைய்ய வித்தியாசம். அங்கு பெரும்பாலும் கண்ணியவான்களாக இருந்தார்கள். ஆனால் கல்யாணத்தின் போதோ அம்மாவின் எதிரேயே தன் கையை பிடிக்க பலர் முயன்றதும் அவர்களின் கைகளில் சிக்காமல் விலகி விலகி போனதும் ஞாபகத்துக்கு வந்தது. அப்படியும் சில வயதான முரட்டுகைகள் தன்மணிக்கட்டை திருகியதும் அம்மாவிடம் அடுத்து இவளுக்கும் இங்கயே மாப்புளை பாத்துடவேண்டியதுதானே என கேட்டதும் இவளை படபடக்கவைத்தன. அப்போது அவள் ஏழாம் வகுப்பில்லிருந்து எட்டாம் வகுப்புக்குதாவிக் கொண்டிருந்த கோடைக்காலம்.

இப்போது சரியாக இரண்டு வருடம் ஆகப்போகிறது. இதோ நாளை கிறிஸ்டி வரப்போகிறாள் அவள் வந்ததுமே இந்த அறையை ஆக்ரமித்துக் கொண்டுவிடுவாள். அதன் பிறகு அவள் ஊருக்கு திரும்புவது வரை இந்த அறைக்குள் ரோஸ்லின் நுழையவே முடியாது. கதவை சாத்திக்கொண்டு புருஷனுடன் அப்படி என்னதான் குழைவாளோ. நினைக்கும்போதே வேட்டியும் பனியனுமாக மார்பில் செயின் புரள மயிர் அடர்ந்த ஜோசப்பின் தோற்றம் வந்து போனது. ஜோசப் அறையை விட்டு வெளியே வரமாட்டன், அவளும் வெளியவே வரவிடமாட்டாள். அடிக்கடி வளையல் குலுங்க அவசர அவசரமாக அறைக்குள் நுழைவதும் பின் வெளியே வருவதுமாக ஏதோ ஹெட்மாஸ்டரின் அறைக்குள் டீச்சர்ஸ் ஓடுவது போல அவள் பரபரப்பாக காட்டிக்கொள்வாள். அடிக்கடி சிரிப்புசத்தம் வேறு. ஒவ்வொரு முறை கதவு திறக்கும் போதும் வெளியே வரும் ஜோசப்பின் செண்ட் வாசனை நாய்க்குட்டியாக வீட்டை சுற்றிவரும் .. அப்புறம் கிறிஸ்டி அவ்வளவு லேசில் பட்டுபுடவையை வேறு கழட்டமாட்டாள். சரக்சரக் சத்தம்தான். கல்யாணம் ஆகி இந்த இரண்டு வருடத்தில் புருஷனும் பொண்டாட்டியுமாக இதுவரை பத்துக்கும் மேற்பட்ட சமயங்களில் வந்து போயிருப்பார்கள்.

சட்டென ரோஸ்லின் கையிலிருந்த கண்ணாடியை சற்று கீழிறக்கி தன் மார்பை பார்த்தாள். இன்று சற்று கூடுதலாக மேடுதட்டியிருப்பது போல பட்டது. சிறியதுதான் ஆனாலும் வகுப்பில் தோழிகள் தன்னோடு நெருங்கி அமர்வதற்கும் வழியில் பலர் தன்னை உற்றுபார்ப்பதற்கும் அதுதான் காரணம் என்பதை நன்கு அறிந்திருந்தாள். தன் வலக்கையை அங்குகொண்டுபோய் இடப்பக்க மார்பை விரல்களால் மெதுவாக வருடினாள். உடல் முழுக்க அதன் அதிர்வுகளை மீட்டல்களை **** கிறீஸ்டிக்கு சுத்த மோசம் தட்டையாக இருக்கும் கல்யாணத்துக்கு முன் அம்மாவும் மாத்திரையாக கொடுத்துபார்த்தாள். எத்தனை முட்டைகள் சாப்பிட்டும் ஒரு மாற்றமும் இல்லை. மீண்டும் ஒருமுறை தன் மார்பை பார்த்துக்கொண்டாள் மனம் குதூகலித்தது.

இப்போது சுவற்றில் மாட்டிவிட்டு போன கண்ணாடியை எடுத்துக்கொண்டு மீண்டும் தோட்டத்து பக்கமாக போனாள்.. ஒருமுறை தன் உடலை முன்னும் பின்னுமாக கண்ணாடியை வைத்துபார்த்தாள். பீரோஅறைக்கு திரும்பி கண்ணாடியை ஆணியில் மாட்டி வைத்தவள் திரும்பி கட்டிலை பார்த்தாள். இப்போது அங்கு ஜோசப் பின் உருவம் தெரிந்தது. ஜோசப் பனியனுக்கு அப்பால் சிலிர்புக்கும் முடியுடன் அவளை பார்த்து புன்னகைத்தான் அவளை அருகில் வருமாறு இருகரம் நீட்டி தன் காந்த சிரிப்புடன் அழைத்தான். அவள் வரமாட்டேன் என்பவளாக அப்படியே சுவற்றில் சாய்கிறாள். பின் அவனாகவே எழுந்து அருகில்வந்து அவளது கையை பற்றி இழுக்கிறான்.சட்டென அக்காள் அங்கே வருகிறாள். தன் கற்பனையினூடாகக்கூட இப்படி பாதியில் கிறிஸ்டி வந்துவிட்டதை எண்ணி சிரித்தவளாக கட்டிலில் விழுந்தாள். கால்கள் இரண்டையும் ஆட்டியபடி கவிழ்ந்து படுத்தவள் பெட்ஷீட்டை கடித்தபடி விழித்து பார்த்தாள். ஜோசப் படுத்திருக்கும் காட்சி மீண்டும் மனதில் ….கைகளை அவன் மார்பின் மேல் படரவிட்டாள்.. விரல்களில் இரண்டுமட்டும் பானியனுக்கு மேலேயே நிற்க மற்ற விரல்கள் அவனது மார்பு சூட்டை ரோமங்களினூடே உணர்ந்தன.. மனதில் ஒருவித உற்சாகம் கொப்பளித்து வழிந்தது. சட்டென உடலில் வெம்மை பூக்க உள்மனம் ஒரு பயத்தில் நடுங்கியது. கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். வேறு யாராவது ஒரு ஆணை நினைத்துபார்க்காலாம் என தோன்றியது. எதிரே காலண்டரில் ஜீஸஸ் சிரித்துக்கொண்டிருந்தார். ஜீன்ஸும் டீஷர்ட்டும் அணிந்து கொண்டு ஜீஸஸ் தன் அருகில் வருவதைபோல யோசித்து பார்த்தாள். ஜீஸஸ் போல கண்கள் ஓளிரும் கண்களுடன் வசீகரமான முகத்துடனும் ஆண்கள் ஏன் இருப்பதில்லை என யோசித்தாள். ஜீஸஸ் கதநாயகனாக நடித்தால் யாரை ஹீரோயினாக போடலாம் ….யோசித்தவரை..யாருமே அவள் மனதுக்கு பொருந்திவரவில்லை. ஒருவேளை இப்போது அப்படி ஜீஸஸ் தன் எதிரில் வந்தால் என்ன கேட்கலாம் என யோசித்தாள். ஒரு நல்ல காதலனை ஜோசப் போல மார்பு முழுக்க முடிகள் அடர்ந்த காதலனை கேட்கலாம். மீண்டும் ஜோசப்பின் முகம் அவளது எண்ணத்தை கலைக்க சட்டென கண்களை மூடி வேண்டாம் என தலையசைத்தாள். வேறு யாராவது ஒரு ஆண் என மனப்புத்தகத்தில் ஒவ்வொரு பக்கங்காளாக புரட்டி வந்தவளுக்கு சட்டென வந்தது ஒரு உருவம். எப்போதும் போல டவுசர் அணிந்துகொண்டு… சூசை மனசு திக்கென்றது. உள்ளம் திடுமென குழியாகிப்பொனதுபோல ஒரு சோகம் அவளது இதயத்தை கவ்வத் துவங்கியது. சூசை முன்பு இரண்டு முறை லெட்டர் கொடுக்க வந்த போதும் அவள் அதனை வாங்காது வேகமாக வந்துவிட்டாள். ஒரு முறை அவளும் சரஸ்வதியும் ட்யூஷன் விட்டு சைக்கிளை தள்ளிக்கொண்டு வரும் போது. இரண்டாவது முறை சரஸ்வதி வீட்டு மாடியில் தனியாக இருக்கும் போது. முதல்முறை சரஸ்வதிகூட வாங்கச்சொல்லி வறுபுறுத்தினாள். படித்துவிட்டு கிழித்துவிடலாம். அல்லது திருப்பி கொடுத்துவிடலாம் என ஐடியா கொடுத்தாள். ஆனால் ரோஸ்லினுக்கு தைரியம் வரவில்லை. மட்டுமல்லாமல் எப்போதும் அரைடவுசர் அணிந்தபடி சதா கால்பந்து மைதானத்தில் திரியும் சூசையின் மேல் அவளுக்கு பிடித்தமே இல்லை. ஒருநாளாவது இந்த அரை டவுசர் இல்லாமல் ஒரு பேண்ட் ஷர்ட் அணிந்து அவன் வருவான் என பலமுறை எதிர்பார்த்தாள். சொல்லிவைத்தார் போல் எப்போதும் அந்த ஒரே நிற டவுசரையும் விளாயாட்டின் போது உடுத்தும் டீசர்ட்டையுமே அணிந்தபடி கோட்ரஸ் தெருக்களில் உலாத்தினான் சூசை. சூசைக்கு ரோஸ்லின் மேல் மையல்வரக் காரணம் பால்ய நட்பு.

சிறுவயதில் சூசையும் ரோஸ்லினும் சர்ச்சில் கோயர் பாடகர்கள் . சரஸ்வதியும் ஒரேவகுப்பானதால் சனிக்கிழமை மதிய நேரங்களில் அனைவரும் ஒன்று கூடி சரஸ்வதி வீட்டில் பாடல்களை பாடுவது வழக்கம். சரஸ்வதி வீட்டில் ஒருமுறை கொலுவைத்தபோதுதான் மூவரும் இதுபோல சினிமா பாடல்களை மாறிமாறி பாடதுவங்கினர். சரஸ்வதியின் அம்மா ஒரு பாட்டுபைத்தியமாக இருந்ததால் இது சாத்தியமானது. அப்போது அவர்கள் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தனர். அப்போது மூவரும் ஒன்றாக சரோஜா டீச்சரிடம் டியூஷன் படித்தனர். சரோஜா டீச்சர் வீட்டுக்கு கோட்ரஸ் பின்னால் சர்ச்சுக்கு போகும் வழியில் இருக்கும் ரயில்வேகிராஸிங் கடந்து அதன்பிறகு வரும் ஏரிக்கரை மேல் நடந்து செல்லவேண்டும். இடையில் இருக்கும் வயல்வெளியியில் அப்போதே வீடுகள் வந்துவிட்டதால் ஆள்நடமாட்டம் இருக்கும். மாலை போகும் போது பிரச்னையில்லை. திரும்பும் போது வழியில் ஏரிக்கரையிலிருந்து வயல்வெளியில் வீடுகள் இருக்கும் இடம் வரை கொஞ்ச தொலைவு இருட்டாக இருக்கும். அந்த இடம் வெறும் வரப்பும் புல்லாகத்தான் இருக்கும். மூவரும் ஒன்றாக சென்று வந்ததால் பிரச்னை இல்லை. ஒருநாள் சரஸ்வதிக்கு உடம்பு சரியில்லை. ரோஸ்லினும் சூசையும் மட்டும்தான். இரவு ட்யூஷன் முடிந்து ஏரிக்கரைவழியாக இருவரும் வந்துகொண்டிருந்தபோது ரோஸ்லீன் திடீரென அழ ஆர்ம்பித்தாள். சூசை என்ன ஏது என கேட்க இருட்டுல என்னை நீ கட்டிபிடிச்சி கெடுத்துட மாட்டயில்ல என அழுதுகொண்டே கேட்க சூசைக்கு அது அவ்வளவாக விளங்கவில்லை. ஆனால் அவள் தன்னை கண்டு பயப்படுகிறாள் என்பது மட்டும் தெரிந்தது. சரி அப்ப நீ முதல்ல போ நான் பின்னாடி வர்றேன் என கூறி சூசை நின்றுகொண்டான். ரோஸ்லினுக்கோ பயம். நீ வா..ஆனா பக்கத்துல வராத..கொஞ்சம் தள்ளி நடந்து வரணும் என கூறீனாள். சூசை தலையசைத்தவனாக ஒதுங்கி அவளுக்கு பின்னால் நடந்துவந்தான். வெளிச்சமான இடத்துக்கு வந்தபின் ரோஸ்லின் ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடிப்போனாள். அதன்பிறகு என்ன காரணத்தாலோ அவள் ட்யூஷன் வரவில்லை. அவர்களிடமிருந்த சிறுவயது நட்பு மெல்ல விரிசலடைந்து ஒரு கட்டத்தில் ரோஸ்லின் பெரிய பெண் ஆனதிலிருந்து முழுவதுமாய் காணாமல் போனது. சூசை அதன் பிறகு அடிக்கடி பேச வந்தபோது கூட ரோஸ்லின் விலகி விலகி போனாள். எட்டாம் வகுப்புக்கு பிறகு அவள் பெண்கள் பள்ளிக்கு போய் சேர்ந்துவிட அதன்பிறகு இருவருக்குமான நட்பு சுத்தமாய் அறுந்து போனது.

எப்போதாவது கோட்ரஸில் மைதானம் வழியாக அவள் அம்மாவோடு அல்லது தனியாக நடந்து வரும்போதெல்லாம் சூசை வழக்கமாக அணியும் டவுசர் உடையில் யாரூடைய சைக்கிள் மீதோ அமர்ந்திருப்பான். கைகளில் கால்பந்து உருண்டுகொண்டிருக்கும். இவளை பார்த்தும் சட்டென அமைதியாகி அவள் வீட்டுபடியெறுவதுவரை அவளையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தான்.

கடைசியாக ரோஸ்லின் அவனை பார்த்தது சரஸ்வதிவீட்டின் மாடியில். அன்று சரஸ்வதியின் கடைசி தம்பிக்கு பிறந்தநாள். மொட்டை மாடியில் லைட் எல்லாம் அலங்கரித்திருந்தனர். அங்கேயும் சூசை அரைடவுசர் போட்டபடி வந்திருந்தான். கிடார் வாசிக்கும் போது இவளை அடிக்கடிபார்த்தான் . குழந்தைகள் எல்லாம் கைதட்டி ரசித்தன. மெழுகுவர்த்தி அணைத்தபோது கூட பர்த்டே பாட்டை சூசைதான் பாடினான். உடன் அனைவரும் பாடினார்கள். ரோஸ்லின் மட்டும் அமைதியாகவே நின்றுகொண்டிருந்தாள் கேக் தட்டை எடுத்துக்கொண்டு வந்து சூசை நீட்டியபோது ரோஸ்லின் அதனை மறுத்து திரும்பிக்கொண்டாள்.

அவமானம் தாங்காமல் அப்போது உடனே கீழே அவசரமாக இறங்கி போனவன்தான். இன்றுவரை அவனை பார்க்கவில்லை. இறங்கிபோகும்போது கண்களில் வழிந்த நீரை சூசை பனியனால் துடைப்பதைக்கூட ரோஸ்லின் பார்த்தாள். அதன்பிறகு கூட அவள் அந்த கேக்கை தொடவில்லை. இன்னொரு கேக்கை சரஸ்வதி கொண்டுவந்தபோதும் வாங்க மறுத்துவிட்டாள். ஆனால் அன்று அங்கு கூடியிருந்த பலருக்கும் அங்கு நடந்த இந்த விவகாரமே தெரியாது. ஜேக்கப் மற்றும் பிலோமினா சுந்தர் ஆகியோர் மாறிமாறி பாட்டு பாடிக்கொண்டிருந்தனர். மொத்த கூட்டமும் அவர்களை சுற்றியே இருந்தன. இப்போது அவள் அவன் வைத்துவிட்டு போன கேக்கை பார்த்தாள் கறுப்பு எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்தன. மெல்ல விரல்களால் எறும்புகளை தட்டிவிட்டாள் அவை மீண்டும் கேக்கில் ஏறிக்கொண்டிருந்தன. இரவு முழுக்க அந்த கேக் ..மொட்டைமாடி விளிம்புசுவற்றில் அப்படியே கிடந்தது. மறுநாள் சூசை இறந்தசெய்தி கோட்ரசையே கதிகலக்கியது. ரோஸ்லினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அதிர்ச்சிதான் இருந்ததே தவிர துக்கமோ அழுகையோ ஏற்படவில்லை. உன்னை அவன் எப்படில்லாம் லவ் பண்ணினான் ஏண்டி அவன் செத்தது உனக்கு அதிர்ச்சியா இல்லை என இரண்டுநாள் கழித்து பள்ளி விட்டு வரும்போது சரஸ்வதி கேட்டாள். ரோஸ்லின் எதுவும் பேசவில்லை அமைதியாக நடந்துகொண்டிருந்தாள். அதன் பிறகு சிலநாட்கள் பேசாமல் இருந்த சரஸ்வதி கொஞ்ச நாள் கழித்து அவளாகவே வந்து மீண்டும் ஒட்டிக்கொண்டாள். இரண்டு மாதங்களில் சூசையை கோட்ரஸ் முழுவதுமாக மறந்தும் போனது. ரோஸ்லினும் அதைவிட வேகமாக மறந்தாள். எப்போதாவது சரஸ்வதிவீட்டைகடக்கும்போதுமட்டும் மாடியை பார்ப்பாள். நொடி நேரம்தான் அத்தோடுசரி.

இந்த சூழலில்தான் வீட்டில் யாரும் இல்லாத அன்று கட்டிலில்கிடந்த அவளுக்கு வெகுநாள்கழித்து சூசையின் முகம் ஞாபகம் வந்தது. அதுவும் அவள் மனசை அலைக்கழித்த அக்காள் கணவன் ஜோசப் இருந்த இடத்தில் வேறுயாரை நினைத்துபார்க்கலாம் என யோசிக்கும் போது சூசை ஞாபகம் வந்தது. இப்போதும் சூசை தன் டவுசர் அணிந்தபடிதான் இருந்தான். ஆனால் ரோஸ்லினுக்கு இப்போது அவன் அழகாக இருப்பது போல தோன்றியது. இரண்டு பக்கமும் கூட்ஸ் வேகன்கள் அடைந்திருக்க சூசையோடு ஒன்றாக ரயில்வே ட்ராக்கில் நடந்து செல்வது போல ரோஸ்லின் நினைத்து பார்த்தாள். ஓரிடத்தில் அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக நினைத்துக்கொண்டாள். தொடர்ந்து வெகுநேரம் குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். சூசையை கட்டியணைத்து முத்தமிடுவதாக நினைத்தும் பார்த்தாள். பின் அவனோடு முழுவதுமாக அவள் சங்கமித்துக்கொண்டிருந்த சமயத்தில் வாசலில் கதவுதட்டும் ஓசையும், தொடர்ந்து கதவை திறக்கசொல்லும் அம்மாவின் குரலும் கேட்டபடி இருந்தது.

Print Friendly, PDF & Email

கத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2023

மாலினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2023

அன்பின் அடையாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)