யார் குற்றவாளி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 21,996 
 
 

‘எதற்காய் அவள் இப்படிச் செய்தாள்?’ இன்று வரை அவனுக்குள் குடைந்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி. ‘அவளுக்குப் பிடித்தவனுடன் சேர்ந்து சந்தோசமாய் வாழவேண்டும் என்பதற்காகத் தானே அவன் விலகினான். பிறகேன் இப்படி ஒரு முடிவெடுத்தாள்?’

ஊருக்குப் போய்விடவேண்டும் என்று ஆசை எழும் ஒவ்வோர் சமயமும் இப்படித்தான், இந்த பாழாய்ப்போன அவளின் நினைவுகள் வந்து தடுத்து விடுகின்றது. கடைசியாய் அவளை சந்தித்த இரண்டு முறையும் அவனை நேருக்கு நேராய் பார்ப்பதை முழுதாய் தவிர்த்திருந்தாள். ஆயிரம் ஆசைகளை தனக்குள் அடக்கி அவனை பதட்டத்துடன் அண்ணார்ந்து பார்த்த அந்த கயல் விழிகள் தான், இன்று எதையோ தொலைத்துவிட்டதைப் போல் தொலைவில் தேடிக்கொண்டிருக்கின்றன. மூச்சுவிடும் தூரத்தில் அவனின் முத்ததிற்க்காய் துடித்திருந்த உதடுகள் இன்று வறண்ட பாலைவனமாய் புன்னகைக்குக் கூட பிரிய மறுக்கின்றன. அத்தனை ஆசைகளையும் ஒரே நொடியில் குழிதோண்டிப் புதைத்துவிட எப்படி அவளால் முடிந்தது?

அலுவலக முதல் நாளில், கருப்பு நிற உடையில் சோகமே உருவாக உட்கார்ந்திருந்த அவளை முதல் தடவை பார்த்ததிலிருந்தே, அவள்தான் தன் மனைவி என்று முடிவெடுத்திருந்தான். அவள் வேறு யாரையாவது காதலிக்கிறாளா? திருமணம் தான் ஆகிவிட்டதா என்றுகூட சிந்திக்கவில்லை. அன்றிலிருந்து அவனது கொள்கை நோக்கம் எல்லாமே அவளை அடைவது மட்டுமாகவிருந்தது. ஆனால் எவ்வளவு முயற்சி எடுத்தும், அவள் அவனை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இவ்வாறாக சிலகாலம் முயற்ச்சித்துவிட்டு, சரி இந்த பழம் புளிக்கும் என்று விலகலாம் என எண்ணியபோதுதான், அவள் அவனுடன் மட்டுமென்றில்லாமல் யாருடனுமே பழகாமல் தனிமையிலே இருந்துவருவது தெரிய வந்தது.

அங்கிருந்த யாருக்கும் அவளைப்பற்றி முழுதாய் எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவள் ஒரு முதிர்கன்னி என்றும் விதவை என்றும் கணவனைப் பிரிந்து வாழ்கிறாள் என்றும் பலவாறாக ஆளாளுக்கு ஒவ்வொரு கதை விட்டனர். இன்னும் சிலரோ கட்டாய மௌனம் சாதித்தனர். ஆனானப்பட்ட கூகிளே இந்த விசயத்தில் சொதப்பியது. கடைசியாய் அவளிடம் பேசியே அவளைப் பற்றிய முழுவிபரத்தினையும் எப்படியாவது அறிந்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த போது தான் அவளது பிறந்தநாள் வந்தது. பெண்கள் யாருமே கண்டுகொண்டதாய் தெரியவில்லை. ஆண்கள் தான் அனைவரும், கைகொடுப்பதற்கு வரிசைகட்டி நின்றனர். அவனது முதலாவது அறிமுகம் பத்தோடு பதினொன்றாய் போவதற்கு விரும்பாததால் வெளியே சென்று சிகரெட்டை பற்ற வைத்தான். ஒரு பக்கற்றை முழுதாய் காலி செய்துவிட்டு கடைசி சிகரெட்டை அணைப்பதற்கு திரும்பியபோது மூக்கினை ஒருகையினால் பொத்தியபடி அவள் நின்றிருந்தாள். அவன் சுதாகரித்துக்கொண்டு “ஹாப்பி பர்த்டே..” என்றவாறு கை கொடுக்க எத்தனிக்கையில் அவளோ அவனைத் தாண்டிச் செல்ல எத்தனித்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவனோ விடுவதாயில்லை. இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடும் முடிவிலிருந்தான்.

“பயப்பிடாம கைய தாங்க. நான் ஒண்டும் கடத்திட்டுப் போய்ட மாட்டன்.” வேண்டாவெறுப்பாக நீண்ட அந்த அழகிய கைகளைப் பற்றி முத்தம் கொடுத்துவிடலாமா என்று தோன்றிய யோசனையை உடனடியாகவே ரத்து செய்து முடிந்தவரை இயல்பாக பற்றினான். பற்றியதுதான் தாமதம் உள்ளே மின்சாரம் தாக்கிதுபோன்ற ஓர் உணர்வு. அது அவளுக்கும் இருந்திருக்கவேண்டும். இத்தனை நாட்களில் இன்றுதான் முதன் முதலாய் அந்த அழகிய விழிகள் அவனது விழிகளுக்குள் ஐக்கியமாகின. ஆயிரம் ஆசைகளை தனக்குள் அடக்கி அவனை பதட்டத்துடன் அண்ணார்ந்து பார்த்த அந்த கயல் விழிகள் அவனை முழுதாக மயக்கிவிட்டிருந்தன. மெதுவாக நெருங்கி அவளது தாடையை தனதிருவிரல்களால் தாங்கினான். அவளது கண்கள் கலங்கியிருந்தன. மேற்கொண்டு எதனையும் சிந்திக்கும் நிலையில் அவனில்லை. மூச்சுவிடும் தூரத்தில் துடித்துக்கொண்டிருந்த அவளது இதழ்களின் மேல் அழுந்தி முத்தமிட்டான். மெல்லிய நடுக்கத்துடன் துவண்டு விழ இருந்த அவளது மெல்லுடலை ஒரு கையினால் லாவகமாக தாங்கி பின்னாலிருந்த சுவர்மீது சாய்த்து மறு கரத்தினால் அவளது கழுத்தின் கீழ்ப்பகுதியை மெதுவாய் வருடினான். ஓர் பெண்ணின் சரணாகதி ஆணுக்குள் இவ்வளவு இன்பத்தினை வழங்க முடியுமா என்ன? இதையறியாத முட்டாள்கள் தான் ஒரு பெண்ணினை பலவந்தமாக இன்பம் தூய்க்க நினைக்கின்றனர். இவ்வாறு பலவாறாக கற்பனை குதிரைகள் ஓட முற்படுகையில், அவளது உடல் மெதுவாக வழமை நிலைக்கு திரும்புவதை அவதானித்து மெதுவாக விலகினான்.

“ஐ ஆம் சாரி..” அவனை சொல்லி முடிக்கவிடாமல் உதடுகளை மூடிய இருவிரல்கள் நளினத்துடன் மெதுவாக விலக இரு உதடுகள் பதிந்தன. இத்தனை காலமும் பேசாத அனைத்து வார்த்தைகளையும் அவை அந்த ஓரிரு நிமிடங்களில் பேசிமுடித்தன. அவளிடம் தோற்றுவிட்டோமோ என்று ஓர்கணம் தோன்றினாலும், அவன் மார்பின்மீது பதிந்து மூச்சுத் திணறவைத்த அவளது மென்மைக்கு இவ்வாறு எத்தனைமுறை வேண்டுமானாலும் தோற்கலாம் என்று தோன்றியது.

“மேடம் யூ ஹாவ் காட் சம்திங்..” அழகாகப் பொதி செய்யப்பட்ட ஒரு பார்சலை ஆபீஸ் பையன் அவள் மேசையில் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனான். அவள் பிரித்துக்கூடப் பார்க்காமல் குப்பைக்குள் போட்டுவிட்டு விரைவாக எழுந்து பாத்ரூம் பக்கம் செல்வதைக் கவனித்தவன், மெதுவாக வந்து பார்சலை குனிந்து எடுத்தான். ‘டு மை லவ், வித் தௌசண்ட் கிச்சேஸ், சந்துரு’ என்று எழுதப்பட்டிருந்தது. சிறிது யோசித்தவன் தயங்கியவாறே மெதுவாகப் பிரித்தான். உள்ளே ஓர் புத்தம் புதிய iPad பார்சல் செய்யப்படிருந்தது. கூடவே ஒரு படம். சற்று முன்புவரை அவனது கரச்சிறையில் சுயநினைவற்று இருந்தவள் அதில் வேறொருவனின் கரச்சிறையில் சிரித்துக்கொண்டிருந்தாள். எரிச்சலாய் வந்தது. பெண்களே இப்படித்தான் என்று கறுவியபடி தனது இருக்கைக்கு போக எத்தனித்தவனை ஒரு ஆணின் கரம் தடுத்து நிறுத்தியது. எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தவன் திடுக்கிட்டான். அது சட்சாத் அந்தப் படத்திலிருந்தவனே தான்.

“யூ மஸ்ட் பி அவர் நியூ கண்டிடேட். ஆம் ஐ ரைட்?” அவன் பதில் சொல்லுமுன் “உனக்கு ஒண்டு தெரியுமா? இண்டைக்குத் தான் எண்ட வாழ்க்கையிலையே மிகவும் மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான நாள். ஏனென்டா.. ஐயாம் கோயிங் டு கெட் மி வைப் பாக்.” அவனது அதிர்ச்சியினை பொருட்படுத்தாமல், “நீ என்ன நினைக்கிரே எண்டு எனக்குத் தெரியும். ஆனா உனக்கு ஒண்டு தெரியுமா? நானும் அவளும் கல்யாணம் செய்து ரெண்டு வருஷம் ஆச்சு. இந்த கம்பனியும் நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து தொடங்கினதுதான். ஆனா அவ இடையில என்னையும் கம்பனியையும் விட்டுப் போகபோறன் எண்டா. அதான் நான் ஒரு வருஷம் தவணை கேட்டனான். இண்டைக்குத்தான் கடைசிநாள்.. ஆனா அவா போகலை. சோ ஷி இஸ் கோயிங் டு பி மைன் எகைன்..” ஒவ்வோர் வார்த்தைகளும் அவனது தலையில் இடியாய் இறங்கியது. கடைசி வாக்கியத்தில் வேண்டுமென்றே சற்று அதிக அழுத்தம் தெரிந்தது. அன்றுதான் அவளை அந்த அலுவலகத்தில் கடைசியாய் பார்த்தது.

பின்னர் அவன் வேறு கம்பெனி மாறி வெளிநாட்டிற்கு போய்விட்டான். சிலவருடங்களின் முன்பு ஊருக்குப் போயிருந்த சமயம் தற்ச்செயலாய் அவளைப் பார்க்க நேர்ந்தது. அவனது நண்பனின் தந்தை இருந்த முதியோர் இல்லத்துக்குச் சென்றிருந்த வேளை அவள் அங்கு பொறுப்பதிகாரியாக இருந்தாள். அவள் எதையுமே காட்டிக்கொள்ளவில்லை. அவன்தான் மிகவும் சங்கடப்பட்டான். அவள் ஒரு தனிக்கட்டை என்றும் அங்கு இல்லத்தில் தான் ஒரு அறையில் தனியே தங்குவதாகவும் நண்பனின் தந்தை சொன்னார். அன்று, அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு அவனால் ஊகிக்க முடிந்தது. ஆனால் இனி எந்த முகத்தினை வைத்துக்கொண்டு அவளின் முன்பு போய் நிற்பான்?

“என்னை எங்காவது கடத்திட்டுப் போடா.. ப்ளீஸ்..” என்று கண்களில் நீர்மல்க அவள் அன்று அவனிடம் கடைசியாய் இறைஞ்சியது அவனது காதிற்குள் நின்று இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இதில் யார் குற்றவாளி?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *