மோகினிப் பிசாசு

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 18,001 
 
 

சுற்றிலும் பரந்து கிடக்கும் காடு கரம்பைகள். நானூறு ஆண்டுகளைக் கடந்து, ரொட்டிக்கடையின் மாவுபிசையும் மேடைக்கான உயரத்தில், ஏறக்குறைய சரிபாதி உள்ளீடற்று, பட்டைகளும் முண்டுகளுமாய் நிற்கும் ஷேன் மரம். அம்மரத்தினைச் துறடுபோலச் சுற்றிக்கொண்டு செல்லும் சாலை. கோடையில், தொக்தர்* ஃபகேர், தமது பணி நிமித்தமாக சுற்றித் திரியும் நேரங்களில், அவ்விடத்தில் வாகனத்தை நிறுத்துவதுண்டு. அவரது பாதையில், வேறெங்கும் எளிதிற் கிடைக்காத நிழல். சுங்கானில் புகையிலையைத் திணித்து, நின்று- சுகமாகப் புகைப்பார். தோலினால் ஆன தமது காலணிகளைத் தளர்த்திக்கொண்டு கற்பனை உலகில் மிதப்பார். அத்தருணம், தொக்தர்* தனக்கு வாய்த்த தனிமைப் பேற்றினைச் சுகிப்பதற்கான நேரம். கண்ணெதிரே இவரைச் சூழ்ந்துகொண்டுள்ள கோடிக்கணக்கான கோதுமைக் கதிர்கள் கூட தனிமையில்தான் இருக்கின்றன. இவரும் ஒரு வகையில் கதிர்தான், ஆனால் தாங்கி நிற்க இயலாமல் தலைசாய்ந்துள்ள கதிர், கோதுமைக்கதிர். ‘அட! எங்கிருந்து இப்பறவை வெளிப்பட்டிருக்கிறது ? அச்சுறுத்தும் வானத்தில் பதற்றதுடன் பறக்க நேர்ந்த பறவை ‘! வீசுகின்ற காற்று, பூமியின் மூச்சுக்காற்று. அக்காற்றில் முத்தமிட நெருங்கும் மங்கையின் அதரங்களுக்குரிய மென்மையும், மிருதுத்தன்மையும். அதனைத் தன்னுள் உணரும் தருணத்திலே தனது உயிர் பிரியுமெனில் அவருக்குச் சம்மதமே. அனல் காற்றைத் தவிர நோயுற்ற உடல்களோ, வீங்கிய வயிறுகளோ, சீழோ, இரத்தமோ இவ்விடத்தில் இல்லை, அறிவின் மயக்கத்தின்போதே அழகியல் தெரியவரும்போலும்.

நோயாளிகளைப் பார்ப்பதற்கெனச் செல்லும்போதோ, அல்லது பார்த்துத் திரும்பும்போதோ, கண்ணயர நேர்ந்தால் தொக்தர்* ஃபகெர், தனது காரை சாலையோரம், புல்வெளிகளை ஒட்டித் தவறாமல் நிறுத்திக்கொள்வார். அநேகமாகக் கால் மணிநேரத்திற்குக் குறையாமலொரு குட்டித் தூக்கம், கைவசமிருக்கும் சுங்கானைத் தேடி எடுத்து மறுபடியும் புகைத்தல், மீண்டும் காரில் பயணம், நோயாளிகள் விசாரிப்பு, எனத் தொடரும் வாழ்க்கை. இச்சந்தோஷ தருணம் – தலையில் ஒளிவட்டமாக, பிரசவம் பார்ப்பதற்கென்று ஒரு பண்ணை வீட்டிற்கோ அல்லது அடிபட்ட ஒருவனுக்கு சிகிச்சை செய்யவேண்டி ஒரு குக்கிராமத்திற்குப் போகும்வரையிலோ அல்லது நோயாளிகளின் அழைப்பின்றி வீட்டில் அடைந்து கிடக்கும் நாட்கள் வரையிலோ நீடிக்கும். மறுபடியும் ஷேன் மரத்தின் நினைப்பு வந்துவிடும், அவ்வாறான சமயங்களில் நோயாளிகளைக்கூட- நிலைக்குத்திய பார்வையும், தொங்கிய கைகளுமாய் -அம்போவென்று, சோதனையின்போதே இடையில் விட்டுவிட்டு வந்த நாட்களும் உண்டு.

ஆனால் பிற்பகல் இன்றைக்கு என்னவோ வெக்கையாக இருக்கிறது. ஷேன் மரத்தில் தலை சாய்த்தவுடன் கண்ணயர்ந்தவர், அறைந்து சாத்தப்படும் கதவின் ஓசைகேட்டுக் கண்விழித்தார், ஒரு பெண்மணி. நளினமாகக் கைகளை உயர்த்தியவள், புன்னகைத்தவாறு தன் கூந்தலை ஒதுக்கியவண்ணம் இவரது காரிலிருந்து வெளிப்பட்டாள்.

‘வணக்கம்! ‘ என்ற குரலில் வருடும் குணம். ‘என்ன ஓய்வெடுத்தீர்களா ? உங்கள் வாகனத்தில் தலையணை ஒன்றை வைத்திருக்கலாம், குறைகிறது. அதனாலென்ன, எப்படியோ சமாளித்து சிறிது நேரம் உறங்கிப்போனேன், என்றவள்– ‘ஒருவேளை, டிக்கியில் தலையணை வைத்திருக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டா ? உண்டென்றால், அடுத்தமுறை சாவிகொண்டு காரை பூட்டும் வழக்கம் வேண்டாம் ‘, – என்கிறாள்.

— ‘வாகனத்தில் நச்சுப் பொருட்கள் இருப்பதால் வாகனத்தினைப் பூட்டத்தான் வேண்டும். தவிர மருத்துவ குறியீடுள்ள வாகனங்களில் திருடுவற்கென ஒரு கூட்டமுண்டு, என்பதை நீ மறுக்கமாட்டாய். போதை மருந்திற்காக என்றில்லை, இதுபோன்ற வாகனங்களில் மருந்துச் சீட்டுக்கைளைக் களவாடி, அதில் வேண்டியதை நிரப்பி மருந்துக் கடைகளிற் கொடுத்து தேவையான போதைமாத்திரைகளையும் வாங்கிவிடுகிறார்கள் ‘, ஃபகெர் பதில் கம்மி ஒலித்தது.

— ‘உங்களைச் சீண்டிப்பார்க்கணுங்கிறதுக்காகவோ அல்லது காரில் தலையணை வைத்தில்லாதது மகாப் பெரியக்குற்றமென்றோ இதைச் சொல்லலை, உங்க சகாவான ‘மர்த்ரெய் ‘ பகுதி தொக்தரை*ப்போல வாகனத்தின் டிக்கியில் திண்டோ, தலையணையோ, போர்வையோ வைத்திருக்கிறீர்களா ? என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்திலேயே வினவினேன் ‘

— ‘மர்த்ரெய் ‘ பகுதி தொக்தரென்றால், போஃபிலேவைக் சொல்றண்ணு நினைக்கிறேன். உனக்கு அவரிடம் பழக்கமுண்டா ? ‘

— ‘கடந்த வருடத்தில் மலைப்பாதைகளில் அவருடன் உலாத்தியதுண்டு. அப்படியான நேரங்களில் அவர் வெகுசீக்கிரம், களைத்து போவார் என்பது உங்களுக்குத் தெரியுமா ? ‘

— ‘சீக்கிரமாவது பொறுத்தாவது நாம் அனைவருமே ஒரு நாள் களைத்து போகிறோம். ‘

— ‘நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்கண்ணு எனக்குப் புரியுது.. ஆனால் நான் சொல்வது உண்மை. ‘

— ‘போஃபிலே ? ‘…கனவுலக பிதற்றல்போல தொக்தரிடமிருந்து வார்த்தைகள்: அவர் என்னைப்போல பிரம்மச்சாரி கிடையாது. அவருக்கு மனைவி, பிள்ளைகள்-ஏழுபிள்ளைகள்- எல்லாமுண்டு. எங்கள் தொழிலில் இதொன்றும் அதிசயமும் அல்ல. பரதேவதைகளைத் தேடி அலையவோ அல்லது கூத்தி வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவோ எங்களுக்குத் தைரியமும் காணாது, அதற்கான நேரமும்ில்லை. ஒருவேளை, அப்படி மறந்துபோன பெண்களுக்காகத்தான் தனது வாகனத்தில் போர்வைகள், தலையணைகள் எனத் திணித்துக்கொண்டு அவர் வலம் வருகிறாரோ என்னவோ. அம்மணி! என்னை எடுத்துக்கொண்டால் நான் தனிக்கட்டை. பிள்ளை குட்டிண்ணு பிரச்சினைகள் கிடையாதுங்கிற கர்வம் எனக்குண்டு. இத்தகுதியை வாழ்க்கையின் அபத்தத்தை கண்டுணரும் ஒரு மனிதனுக்குத் தரப்பட்ட மிகப்பெரிய பாராட்டுப்பத்திரமாகவே நான் பார்க்கிறேன். என்ன ?.. நான் சொல்வது உனக்கு வேடிக்கையாக இருக்கிறதா ? ‘

உண்மையில் அவள் சிரித்தாள். அவளது சிரிப்பின் செளந்தர்யம், மருத்துவரின் வார்த்தைகளை இதமாய் புறம்தள்ளி வானத்தின் வண்ணங்களையும், வயல்வெளிகளையும் மென்மையாய் சிவக்க வைத்தது.

— ‘என் தாயார்மாத்திரம் உன்னைப் பார்த்திருந்தா, இப்படியான அப்ஸரஸை வேறெங்கும் கண்டதில்லை என்றிருப்பாள். ‘

— ‘அப்படிச் சொன்னால் அதற்கு பொருள்வேறு. வேறொருத்தியைப்போல நான் இருக்க முடியாதென்பதே உன்மை. நான் நானாத்தான் இருக்கிறேன், இதில் பெருமைபட ஒன்றுமில்லை. ஏதோ என்னிடத்தில் இப்போதாவது அன்பாய் நடந்துகொள்ள உங்களுக்குத் தோன்றியதே, அதற்காக நன்றி ‘, அவள் வார்த்தைகள் இனிமையாக வெளிப்பட்டன.

— ‘அதென்ன, ‘இப்போதாவது ‘ ‘ ?

சொல்லவந்ததைப் பாதியில் நிறுத்தக்கூடாதென்பதுபோல இவரருகில் வந்தமர்ந்தாள்.

— ‘எனக்காக வெகு நாட்களாகக் காத்திருக்கிறீர்கள், அடிக்கடி இருட்டில் என்னிடத்தில் பேசவும் செய்கிறீர்கள். ஏன் உங்கள் மருத்துவகூடத்திற் தடுப்புப் பலகைக்குப் பின்புறத்தில் நின்று, கலங்கிய மனநிலையில் நீங்கள் பிதற்ற நான் கேட்டுக்கொண்டிருப்பேன், சட்டென்று நெருப்பினைத் தொட்டவர்போல பதற்றப்படுவீர்கள். அதென்னவோ, உங்கள் முன்னால் நான் தோன்றவேண்டும் என எண்ணும்போதுதானா, மிருகக் குணம் வரவேண்டும், எனவே விலகிக் கொள்கிறேன். அப்படி விலகி நிற்பதால், என்னைக் காப்பாற்றிக்கொள்கிறேன், உங்களையும் தண்டிக்கிறேன். ஆனால் சில தினங்களாக, நீங்கள் எதையோ பறிகொடுத்தவர்போல இருக்கிறீர்கள். ‘

— ‘ஆக என்மீது பரிதாபப்பட்டு வந்திருக்கிறாய் என்று சொல்லு. ‘

— ‘இல்லை, அப்படி இல்லை. அதற்கான காரணம் ரொம்பச் சுலபம். உங்கள் மீதுள்ள ஆர்வத்தால் வந்திருக்கிறேன் என வேண்டுமானால் சொல்லலாம், பரிதாபத்தினால் அல்ல. எனக்கு நீங்கள் வேண்டும், அதுதான் உண்மை. ‘

அவளது மூச்சுக்காற்றினால் மருத்துவரின் காது விரைத்து நின்றது. என்ன மாயமோ ? இவரிடம் இதுவரைக் அறியாத அசுரபலம்: ச்ஷணத்தில் கனமான இப்பெரிய ஷேன் மரத்தை தனது கரங்களால் கட்டி அணைக்க முடியும், வயல்வெளிகைளைச் சுருட்டி கூடையில் வைத்து சுமக்க முடியும், வானத்தை இழுத்துப் பட்டுப் போர்வையாக வரச்செய்யமுடியும். ‘அடி பரதேவதை! அப்படி உன்கிட்ட என்ன வாசம்! எனது விருப்பத்திற்குரிய எலுமிச்சை மணம் கொண்ட சோப்பினைப் போல! ‘, அழகியின் அதரங்களுக்கிடையில் தனது நாசி பட மெல்ல முகத்தைக் கொண்டுபோனார்.

— ‘ஆனால் நெருக்கத்தில் உனக்குள்ள வாடை, எனக்குப் பிடித்த திம், காரட் பிஞ்சு, கிரெஸ்ஸோன் கீரை, கூடுதலாக மணக்கமணக்க லிவேஷ்** கலந்த மரக்கறி சூப்பின் வாடை. அம்மணி! இந்த வாடைக்காகவே, உன்னை லிவேஷ் என்று அழைக்கவும் விருப்பம். ‘

– ‘அப்படியா ? எனது பெயரெல்லாங்கூட தெரிந்து வைத்திருக்கிறீர்களா ? உங்களை நான் எப்படி அறிந்திருக்கிறேன் தெரியுமா ? ரொம்ப சிக்கலான ஆள், மகா முரடன், கூச்ச சுபாவம் உள்ளவர், இப்படி. ஆனால் எனக்கென்னவோ நீங்களொரு ஒரு சரியான புலம்பல் ஆசாமியாகப் படுகிறது. ‘

அவர்மீது மெல்ல சரிந்தவள், தலையைத் மருத்துவரின் வலது தொடையில் கிடத்திக்கொண்டாள். விரிந்துக் கிடந்த கோதுமை வயல்களில் வெக்கையின் சீழ்க்கை. தியாபோலோவின்*** ஒலியைக்கூட மழுங்கச் செய்யும் சில்வண்டின் இரைச்சல். வந்திருந்த பெண்மணியின் குரல், விட்டுப்போன ராகத்தை முனுமுனுப்பதுபோல தொடர்கிறது.

— ‘கோடை எனக்கு விருப்பமான காலம். அது மிருககொம்பினால் ஆன நீண்ட சீப்போன்றை நினைவுபடுத்துகிறது இல்லையா ? பூமிக்குங்கூட எகிப்திய புனித மரியைப்(2)போலவே அதிகப்படியான நீண்ட தலைமயிர், அதிலொரு பொன்னிற இழை இன்றைக்கும் வானத்தில் மினுக்கிக்கொண்டு, அங்கே பார்த்தீர்களா! ‘

– ‘உண்மை ‘

— ‘தலைவாருதலை நிறுத்திக்கொள்ளாதபெண். இதைத்தானே முன்பும் செய்தாள், ஒருவேளை சம்போகிக்கும் வேளை நெருங்கிவிட்டதா ? ‘

— ‘அப்படித்தான் இருக்கவேண்டும் ‘, இளஞ்செருமலோடு தொக்தர்.

— ‘கைக்கெட்டும் தூரத்தில் எப்போதும் ஒரு பழமிருப்பதைக்கூட நீங்கள் கவனித்திருப்பீர்கள் ? சமைத்தச் சூட்டோடு பரிமார இருக்கிற தக்காளிகளில் ஒன்றிைனைப்போல இருக்கும் அப்பழம் யாருக்கென்று நினைக்கிறீர்கள் ? நமக்காக. நம்மை மறுபடியும் மகிழ்ச்சிக் களைப்பில் நிறுத்துவதற்காக. ‘

— ‘ஆம், மறுக்கவில்லை. ஆனால் அதன்பாட்டுக்கு சர்வ சாதாரணமாய் நமது பிரக்ஞைக்கு இடங்கொடாமல் நடத்துகிறது. அம்மணீ! என் வசம் நானில்லை. பொழுதெல்லாம் சுற்றி சுற்றி வருவது உன் நினைப்பு மாத்திரந்தான். இன்பத்திலும் துன்பத்திலும் உற்றத் துணையாக இருப்பேனென சத்தியம் செய்யட்டுமா ? ‘

கூறியவரிடத்தில், மறுபடியும் புன்னகை. அவளது தலையை மெல்ல விலக்கினார். எழுந்து நின்றவர், அம்மாயப் பெண்மணியிடம் தனது கரத்தைக் கொண்டுபோக, அதனைப் பற்றியவண்ணம் எழுந்து நின்றாள்.

‘தவிர ‘, ஃபகெர் தொடர்ந்தார், ‘ஆண் பெண் உறவினை, ஒருவரை ஒருவர் நலன் விசாரிக்கவும் தேவைப்படுகிறபோது கட்டிலைப் பகிர்ந்துகொள்வதுமான காதல் கண்ணாமூச்சிகள் கொண்ட பாசாங்குக் காதலாகப் பார்ப்பவனல்ல நான். என் வரையில் காதல் என்பது ஆயிரக்கணக்கான பக்கங்களுடன் எழுதபப்படுகிற காவியம், தந்திக்காக எழுதுகின்ற தகவல் சுருக்கமல்ல, அதன் இறுதிவார்த்தை கடவுளுக்கு மாத்திரமே சொந்தம். ‘

— ‘கடவுளா ? ‘

— ‘ஏன் ? உனக்கு நம்பிக்கை இல்லையா ? ‘

— ‘ஒரு சிலர், என்னையே அப்படித்தான் அழைக்கிறார்கள், வெடித்துக்கொண்டு சிரித்தாள். அதைப் பற்றி பெரிதாக நான் அபிப்ராயம் சொல்வதற்கில்லை. எனக்கு ஆப்பிள் வரையப்பட்டச் சித்திரமும் கடவுள்தான், அதிலுள்ள ஆப்பிளும் கடவுள்தான். ‘

— ‘சரி, பக்கத்து ஆசனத்தில் வந்து அமருகிறாயா ? ‘

— ஆர்வத்தோடு ‘சம்மதம் ‘ தெரிவித்தவள், காரின் பின் இருக்கையில் என்னை ஒளித்துக்கொண்டு அழைத்துச் செல்லப்படுவதை நான் விரும்பமாட்டேன். தவிர, இனி உங்களிடமிருந்து பிரிந்திருக்கவும் எனக்கு உத்தேசமுமில்லை, மிஸியே ஃபகெர்!-என்றாள்

— ‘உண்மையில் ஃபகெர் எனது இரண்டாவதுப்பெயர், லூயி என்பதே எனது ஞானஸ்நானப் பெயர். ‘

— அதற்கென்ன ? அப்படியே அழைக்கிறேன். அன்பிற்குரிய லூயி, சமீபக் காலங்களாக உங்களுக்குப் பணிகள் அதிகமோ ? ‘

— ‘ம்.. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு. நாளைக்கும் பார்க்க இன்றைக்குக் குறைவென்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு, ஓய்வின்றி, கூட்டமாய்ப் பறந்து, மொய்த்து, மீண்டும் பூமிக்குத் திரும்பும் தேனீக்களைபோல. பத்து மடிந்ததென்றால், நூறாக உயிர்க்கும் சாமர்த்தியம். ‘

— ‘என்ன பிதற்ற ஆரம்பித்துவிட்டார்களா ? ‘

— ‘என்னை மன்னித்துவிடு, லிவேஷ். ‘

மருத்துவரின் தோளில் தனது கரத்தினைப்போட்டாள், நுனிவிரல்களால் அவர் கழுத்தினை மெல்ல வருடினாள்.

— ‘இன்றைக்கு யாரைப் பார்க்கப் போகணும் ? ‘-அவள்

–ஒர் ஏழைப் மூதாட்டியைப் பார்க்கணும்னு புறப்பட்டுவந்தேன். அவளுக்கென்ன பிரச்சினைகள்ணு என்னால் தீர்மானிக்க முடியலை. நாளுக்கு நாள் மெலிந்துக்கொண்டுபோகிறாள். இனி அவள்படவேண்டியது ஒன்றுமில்லை. வலிகளினால் அவள் மிகவும் துன்பப்படுகிறாள்.

— ‘எதனால் ? எவ்விடத்தில ? ‘

— ‘எங்கேயென்று சொல்வது. அவளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில். காரணம் தெரியலை. எனினும் வேதனைகளையெல்லாம் மறைத்துக்கொண்டு சிரித்தபடிதான் என்னை வரவேற்கிறாள். ‘

இருவருமாக மூதாட்டி வீட்டுக்குவந்தார்கள். சுற்றிலும் முள் வேலி, தாழ்ந்த கூரை. உள்ளே இருட்டுக்குக் பழகிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம்.

நுழைந்த வேகத்திலேயே நோயாளியின் கைப் பிடித்துப் பார்த்தார். ‘இன்றைக்கு என்னிடம் சொல்வதற்கு ஏதேனும் புதினங்கள் இருக்கிறதா ? என்று ஆரம்பித்தவர், இவள் பேரு லிவேஷ், எனது உதவிக்கென்று அமர்த்திக்கொண்டிருக்கிறேன். தவிர விரைவில் ( தலையைத் தாழ்த்தி, சன்னமான குரலில்) என்னுடைய மனைவியாகப் போகிறவள் ‘, என்றார்.

மூடமறந்த கதவின்வழி வந்த வெளிச்சம் இருட்டை இரண்டாகப்பிரித்திருக்க இடையில் மருத்துவர் தனி ஆளாகக் கண்ணில் பட்டார். ‘இவர் யாரைப்பற்றி பேசினார் ? இவர் குறிப்பிட்டப் பெண்மணி எங்கே போயிருப்பாள் ? ‘-நோயாளிக் கிழவிக்குச் சந்தேகம்.

— ‘கிழவியின் கைகளைப் பிடித்து, கட்டிலில் மெல்ல நிமிர்த்தி உட்கார வைத்தவர், ‘லிவேஷ்!.. நீ ஏதாவது சொல்லணும்னு நினைக்கிறாயா ? ஏதாவது உனக்கு கேட்கின்றதா ? எனக்கெதுவும் இல்லை. இதயம் முறையாகத் துடிக்கிறது, சுவாசப்பையில் அசைவில்லை. நல்ல நிலையில் உள்ள எந்திரம்னு சொல்லலாம்.அப்புறம்…. ‘

-ம்மா! கிழவி செருமுகிறாள், தொக்தர் என்னை நீங்க ரொம்ப வதைக்கிறீங்க, விட்டுடுங்க எனக்கு முடியலை! ஆ! ‘

கிழவியின் குரல் தேய்ந்து, வேதனைக் துகள்களாகச் சிதறியது.

— ‘அவள் இறந்துகொண்டிருக்கிறாள் ‘, சொன்னவள் லிவேஷ். ‘நம்மால் ஆவதொன்றுமில்லை. ஒருவேளை உங்கள் ஆரம்பக் கணிப்பில் தவறு நேர்ந்திருக்கலாம். சொல்தைக்கேள் லூயி! நான் உங்களைக் காதலிக்கிறவள். ஆனால் என் காதலருக்கு உதவ முடியலை என்கிறபோது, இனியும் இங்கு எதற்காக இருக்கணும், கொஞ்ச நாட்களுக்கு உங்களை விட்டுப் பிரிந்திருக்கணும்னு தீர்மானித்திருக்கிறேன். இங்கே துர்நாற்றம் வேற, நிற்கப்பிடிக்கலை. ‘

— ‘நில்..நில்.. போகாதே!- மருத்துவர், கூச்சலிட்டார்.

இறக்கும் தருவாயிருந்த நோயாளி கிழவிக்கு ஏகத்துக்குக் குழப்பங்கள். திறந்திருந்த கதவின் செவ்வகப் பொன்னொளியில் ஏதனும் நிழல் ஆடுகிறதா எனத் தேடினாள்.

— ‘தொக்தர்! சித்தெ முன்ன நீங்கள் யாரிடம் பேசினீர்கள் ? ‘ ஈனஸ்வரக் குரலில் நோயாளிக் கிழவி.

— ‘நீயே சொல்லு கிழவி. வெறுப்புக்கு ஆளாகிறமாதிரி நான் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன். எதற்காக என்னைவிட்டு விலகிப்போகணும் ? ‘ ஃபகெர், கிழவியைப் படுக்கையில் கிடத்திவிட்டுக் கேட்டார். என்னால் முடிந்ததை நான் செய்வேனில்லையா ?

— ‘எங்கே போயிட்ட ? இருக்கிறாயா ? ‘ ‘ – அவர்.

— இருக்கேன்.. இருக்கேன். உங்கள் பக்கத்தில்தான் இருக்கிறேன் . இன்றைக்கு உலகில் தனித்த ஆளென்று எவருமில்லை, என்னத்தவிர. ‘ -அவள்.

அவ்வமயம், விவசாயி ஒருவன் தனது கோரைத் தொப்பியை தலையிலிருந்து எடுத்தவண்ணம் உள்ளே நுழைகிறான்.

— ‘உனது தாயார் சற்று முன்புதான் மரித்தாள் ‘, -ஃபகெர் அவனிடத்திற் துக்க செய்தியைத் தெரிவித்தார்.

— கைகுலுக்கலென்று சம்பிரதாயத்திற்கு விரல் நுனியைத் தொக்தரிடம் நீட்டி, ‘எதிர்பார்த்ததுதான் ‘, என்றான். ‘இனி எந்த உலகிலிருந்தாலும், வேதனைகளில்லாமல் இருப்பாள். எண்ணெயில்லாமல் அவள் விளக்கு எததனை காலந்தான் பிரகாசிப்பது. ‘

கைகளை கழுவிக்கொள்வதற்காக தொக்தர் எழுந்து போனார்.

முதன் முறைக் கண்டதைபோலவே உயர்த்திய கரங்கள், உள்ளே நுழையமுயலும் சூரிய ஒளியை பின்னுக்குத்தள்ளி, அச்சில் வார்தெடுத்ததைப்போல சரீரம், மெல்லிய ஆடையில், மீண்டும் அறைக்குள் வந்தவள்,

— ‘உங்களிடம் கடுமையாக நடந்துகொண்டுவிட்டேன்,- என்றாள்

— ‘நான் உன்னை எதிர்பார்த்துக்கொண்டு இல்லை, நீ போகலாம். ‘- ஃபகெர்.

தனது தயாரின் முகத்தை, எஞ்சியிருந்த கட்டில் விரிப்பைக்கொண்டு மூடிய விவசாயி, தொக்தர் பக்கம் குழம்பினாப்போலே திரும்பியவன்,

— ‘தெரிந்திருந்தால் முன்னதாக வந்திருப்பேன், இத்தனை தினங்களாக எனது தாய்க்கு அருகிலேயே பழியாகக் கிடந்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமில்லையா ? வரவேண்டியது வந்துதானே தீரும். உங்களுக்கு என்மீது ஏதோ ஒருவிதத்தில் வருத்தம். உங்களுக்கு எவ்வளவு கொடுக்கணும் ? ‘

— ‘எதுவும் கொடுக்கவேண்டாம். ‘லிவேஷ் ‘ஐத் தெரியுமா ? ‘, தொக்தர் விவசாயிடம் கேட்டார்.

— ‘தெரியாது ‘, அவனது பதில்.

— ‘நாம் புறப்படுவோம். அவள் எக்கேடாவது கெட்டுப்போகட்டும். ‘

விளங்கிக் கொள்ள இயலாமல், விவசாயி சுற்றிலும் பார்த்தான், இம்முறையும் குழப்பம். வாசல்வரை வந்தவன், தொக்தர் தனது கார்க் கதவினைத் திறந்ததையும், இன்னொருவர் ஏறட்டுமென காத்திருந்து அக்கதவினை சாத்துவதையும் பிறகு மற்றப்பக்க கதவினைக் திறந்துகொண்டு அமர்ந்தவர், இன்னொரு நபரிடம் உரையாடியபடி வாகனத்தைக் கிளப்புகிறார். அவரது சிரம், உரையாடுகின்ற அந்த உருவமற்ற அந்த இரண்டாவது நபரின் திசைக்காய் திரும்பியிருக்கிறது.

விவசாயியின் மனைவி தனது இரு மகன்களுடன் அவ்விடம் வந்தாள்.

— ‘பிறகு ‘ ?, என்றவள் தனது கணவன் கதவருகே நிற்பதைக் கண்டு. ‘என்ன தொக்தர் புறபட்டாச்சா ? ‘ எனக் கேட்டாள்.

— ‘இனி அவர் திரும்பி வரணுங்கிற அவசியமில்லை. நான் வீட்டிற்குத் திரும்பும்போதே அம்மா இறந்துட்டாங்க. ‘

— ‘நாம எதிர்பார்த்ததுதானே. உங்க தாயாரை கடைசியாய் ஒரு முறை முத்தமிடுவோம், உங்களிடத்தில் மிகவும் பிரியமா இருந்தவங்க அவங்க. ஏன் ? உள்ளே வரணும்னு தோணலையா ? அங்கே என்னத்தை அப்படிப் பார்க்கறீங்க ? ‘

— ‘தொக்தரைப் பார்க்க, எனக்கு ஏதோ விபரீதமா தோணுது. அம்மா சாகறதுக்கு இவர்தான் காரணமோ ? சித்த முன்னே தனக்குதானே பேசிக்கொண்டார். ‘

— ‘ம்..இதெல்லாம் ஒரு வாழ்க்கையா ? எப்போதும் பிறர் சாகும்போது பக்கத்திருந்து பார்க்க வேண்டிய வாழ்க்கை. ‘ – விவசாயியின் மனைவி.

ஷப்பெல் குடியிருப்புகளைக் கடந்து, வழக்கம்போல ஷேன் மரத்த்துச் சாலையைப் பிடித்துத் தொக்தர் தனது கிராமத்தை அடைந்தபோது தலைக்கு மேலே மிக உயரத்தில் பருந்து ஒன்று வட்டமிட்டுக்கொண்டிருந்தது. நாளையும் காலநிலை நன்றாக இருக்குமென்று தோன்றியது. அவர் வாகனத்தை நிறுத்தி இறங்கிக்கொண்டார். இரவு சாப்பாட்டிற்காக தொக்தரை எதிர்பார்த்துக் காத்திருந்த வேலைக்காரி ஆன்ழேல், சமயலறை சாளரம் வழியாகப் பார்த்துவிட்டாள். இவர் தோட்டக் கதவின் வழியாக சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தவர், உபகரணப் பை ஏதுமின்றி இருந்த கையை சுழற்றி தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். அவளும் தன் வசமிருந்த தோலினாலான கருப்பு துவாலையைப் பதிலுக்கு அசைத்தாள். வாசற்படிகளை சந்தோஷமாக தாவிஏறியவர் அடுத்தகணம் இவள் பார்வையிலிருந்து மறைந்துபோனார்.

சமயலறைக்குள் வந்தவரை, ‘என்றைக்குமில்லாத திருநாளாக இன்றைக்கு வெகு சந்தோஷத்தில் இருப்பதாகத் தெரிகிறது, என்ன சேதி ? ‘ என விசாரிக்க நினைத்தவளுக்கு ஏமாற்றம். கொஞ்ச நேரத்திற்கு முன்புவரை மிதமிஞ்சிய சந்தோஷத்தில் திளைத்திருந்த தொக்தரிடம் இப்போது, வழக்கம்போல பணிமுடித்து வருகின்றபோது காணமுடிகிற கவலையும் சோர்வும்.

— ‘என்ன பசிக்கிறதா ? மின்னடுப்பினைத் திறந்தவண்ணம் கேட்டாள். தூர்த்(3) வெந்துகொண்டிருக்கிறது, கொஞ்சம் பொறுக்கணும். ஆனாலும் சித்தெமுன்னே கூடத்துல ரொம்ப சந்தோஷமா நடந்து வந்தீங்க ? ‘

தலையை உயர்த்தியவள், எதையோ நினைத்து அவர் வருந்துவதைப் பார்த்தாள்.

— ‘எல்லாரிடத்தும் நாம பிரியமா இருக்கணும். நம்மைவிட்டு விலகப்போகிறேன் என்றுசொல்லுகிறவர்களிடம்கூட ‘, என்று கூறிய தொக்தர், ‘அந்தத் ராங்கிக்காரியை உனக்கும் அறிமுகப்படுத்தி, வியப்பில் ஆழ்த்தணும்னு நினைச்சேன், அவளுக்கு அதில் ஆர்வமில்லைங்கிறபோது நான் மாத்திரம் அவசரப்பட்டு என்ன செய்யட்டும். தவிர அப்படி அவசரப்படுவதும் நல்லதற்கல்ல. ‘

— ‘சரி சரி இப்போ யாரைப்பற்றி பேசுகிறீர்கள் ? ‘

— ‘அனேகமாக .. (அவரது முகத்தில் பழையபடி சந்தோஷ களை) எனதருமை ஆன்ழெல், கூடிய சீக்கிரம் என்னோடு சேர்த்து நீ இன்னொருவருக்கும் உணவு பரிமாற வேண்டியிருக்கும். ‘

ஆச்சரியத்தில் வேலைகாரியின் புருவம் உயர்ந்தது.

— ‘அதற்குள் வாயடைத்துப்போகாதே. இன்னொரு தகவலிருக்கிறது, நான் மணம்முடிக்க இருக்கிறேன்.

— ‘அருபது வயதிலா ? ‘

— ‘ஏன் கூடாதா ?அதென்ன எல்லோருக்கும் வாய்க்கக்கூடியதா ? ‘

— ‘அவளுக்கு என்ன வயது ? இதற்கு முன் இங்கே கண்டிருக்கிறேனா ? ‘

— ‘அவளுக்கு வயதெல்லாம் சொல்வது கடினம். வேண்டுமானால் முப்பதிலிருந்து நாற்பதுக்குள் சொல்லலாம். அறிவில் முதிர்ச்சியும், ஆரோக்கியமான சரீரமும் கூடுதல் தகுதிகள். நீ பார்த்திருக்க வாய்ப்பில்லை, நமது பிரதேசத்தைச் சேர்ந்தவள் அல்ல. ‘

— ‘என்னிடத்தில் இன்றைக்குத்தானா சொல்லவேண்டுமென்று தோன்றியது ? எவ்வளவு நாட்களாக அவளை உமக்குத் தெரியும். எங்கே சந்தித்தீர் ? ‘

— ‘எல்லாவற்றையும் இன்றைக்கே தெரிந்து கொள்ளவேண்டுமா ? பைத்தியக்காரி! தூர்த்(3) தீய்ந்துக்கொண்டிருக்கிறதென நினைக்கிறேன். முதலில் அதைக்கவனி. உடையை மாற்றிக்கொண்டு வருகிறேன். ‘

தளத்திற்குத் தாவி ஏறினார். மிகவும் துடிப்பாக இருப்பது தெரிந்தது, இதற்குமுன் ஒருபோதும் இப்படி அவரைக் அவள் கண்டதாக நினைவில்லை.

கண்ணாடிகளேதுமின்றி அளவிற் குறுகியிருந்த அறை. சுவர்களில் ஒட்டியிருந்த வால்-பேப்பர்களில் சுருள்சுருளாக வளைந்துசெல்லும் கற்பூரவல்லி ஓவியங்கள். வீட்டிற்கெனவிருந்த பழுப்பு வண்ண வெல்வெட் ஜாக்கெட்டையும், நீர்ப்பச்சையிலிருந்த ஆட்டுத் தோலிலானாலான சப்பாத்தையும் அணிந்துகொண்டார். இரவுமேசையாக அவரது உபயோகத்திலிருந்த நாற்காலியில் சில நொடிகள் அமர்ந்தார். தேர்வுக்குப் படிக்கும் மாணவனின் அறைக்கொப்பச் சிதறிகிடக்கும் பொத்தகங்கள். எதிர்பாராத சந்திப்பு உண்டாக்கிய பரவசம் உலர்ந்து உடலெங்கும் கந்தைக்கூளங்களின் அணிவகுப்பு. சந்தோஷம் கசந்து, கையறுநிலை. தனிமையைத் தேடி அலைவதிலும், வயிற்று இரைச்சலுடன் அபானவாயுவை அனுமதிப்பதிலும், மூக்கிற்குள் விரலிட்டு அழுக்கெடுப்பதிலும், நேசத்துக்குறியவர்கள் முன்னால் தவிர்ப்பவனவற்றை செய்வதிலும் மனதிற்குச் சுகம் கிடைக்க- கூச்சமின்றி செய்தார், அதாவது நாளைமுதல் அவரது இதயத்திற்கு அழகும், பரிசுத்தமும் தேவையென்று விலகிச் செல்ல சம்மதித்த அபத்த சங்கதிகள், இன்றைய தினம்ம தங்களைக் கொண்டாடவேண்டும் என வற்புறுத்தியதைப்போல.

— ‘மிஸியே! மேசையில் உணவு வைத்திருக்கிறேன்! ‘

இரண்டாவது முறையாக ஆன்ழெல் தன்னை கூப்பிடட்டுமெனக் காத்திருந்து இறங்கினார். இறங்கும்போது, படிகளுக்கிடையே இருந்த அகன்ற படியின்(4) பாதி இடத்தைப் பிடித்திருந்த அலமாரியின் கண்ணாடியில் தன்னைக் கண்டார், திரும்பினார், கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு நின்றவருக்குத் திடாரெனச் சந்தேகம்: இந்த ஆள் யார் ? முன் தள்ளிய வயிறு, நரைத்த மீசை, துக்கம் கொண்டாடும் கண்கள். இக்கோமாளியின் பின்னே பொன்னிறக் கூந்தலும், அழகிய மார்பகங்களுமாய் நடந்து வரும் பெண்மணியும் இவருக்குத் பரிச்சயமானவள்தான். ஃபகெர் பாதி மாடிப்படிகள் இறங்கியிருந்த நிலையில் திரும்பவும் மாடிக்குத் வந்தார்.

— ‘லிவேஷ், நீயா ? நீ மீண்டும் வந்திருக்கிறாயா ?

— ‘எனக்கு உங்கள் ஆன்ழெல் பற்றி தெரிஞ்சாாகணும் ‘, சன்னமாய் அவளது குரல்.

— ‘ஆன்ழேல்! ஆன்ழேல்! ஃபகெர் கூவி அழைத்தார், சீக்கிரம் வா! என் வாழ்க்கையின் சரிபாதியை உனக்கு காட்டியாகணும் ‘

— ‘மிஸியே! கூப்பிட்டார்களா ? ‘- என்ற வண்ணம் வேலைக்கார பெண்மணி மாடிப்படிகளின் கீழே வந்து நின்றாள்.

— ‘லிவேஷ்! ‘ மேடை நடிகனைப்போல கைகளை உயர்த்திக்கொண்டு உரத்தக் குரலில் தனக்குப் பின்புறம் திரும்பி அழைத்தார்.

சிரித்தவண்ணம் மாடிக்குத் திரும்பியவர் கண்டதென்னவோ முரட்டு வெண்துணியிட்ட சாளரம், இருட்டை முந்தும் அதன்கருநீலம், சாளரத்தின் கீழே நீண்டு, மேலேறி செல்கிற, மெருகிட்ட மரப்படிகள்.

— ‘ஜாலக்காரி! அதற்குள் எங்கே ஒளிந்து கொண்டாய் ? ‘

— ‘நான் இங்கே இருக்கேன் ‘. என்ற வேலைக்காரியின் பதிலில் கலவரமிருந்தது. ‘அங்கே யாரை கூப்பிடறீங்க ?, மாடியில் யார் இருக்கிறாங்க ? ‘

திரும்பவும் மாடி அறைக்குத் திரும்பிய எஜமானனைத் தேடி, வேலைக்காரி சிரமத்துடன் படியேறி வந்தாள்.

— ‘இதென்ன விளையாட்டு ? என்னை இப்படி சிரமப்படுத்துவது உங்களுக்கே சரியாகப்படுகிறதா ? தவிர நானும் உங்கள் பேச்சை உண்மையென்று நம்பப்போனேன். ஏது ? விட்டால் அந்தப் பெண்மணியாகவே என்னை தீர்மானிச்சுடுவீங்கண்ணு நினைக்கிறேன். ‘

வேலைக்காரப் பெண்மணியின் உத்தரவுக்கிணங்க சாப்பிடுவதற்கு இறங்கிவந்த தொக்தர் அவளிடம், ‘பொய்யில்லை என்ன நம்பு, ஆன்ழேல்! எனது வாழ்க்கையின் மற்றொரு ஆரம்பத்திற்கு வந்திருக்கிறேன். அதனால் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கப்போகும் கற்றுகுட்டிகளின் பயம், என்னிடத்தில். சந்தேகமின்றி அவளுக்கும் அதுதான் நிலைமை. இதுவரை அறிந்திராத இன்னொரு குடும்பத்திற்கு வாழ்க்கைப்படுகிற பெண்மணிக்குறிய கவலைகளையும், உணர்வுகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். தண்ணிரீலிருந்து குதித்து கிளைகளில் வாழவிருக்கும் மீன்களுக்குறிய கடுமையான சோதனை. கற்றுகுட்டி என்கிற சொல் என்வரையில் அப்லெத் மீனை(5) எடுத்து ஆப்பிள் மரத்தின் கிளைகளில் விடுவதுபோல. ‘

ஆன்ழேல், நாற்காலியை அவளது எஜமானரின் குண்டிக்கு ஏதுவாகத் தள்ளியவள், அவரிடம் ஒரு சிறிய துவாலையை நீட்டினாள். உறக்கத்தில் சாப்பிடுவதைப்போல, நுணிப்பற்களால் சாப்பிட்டு முடித்து, ராஸ்பெரி ரத்தாஃபியா(6) அவருக்குப் பிரியமான மது என்பதால், கண்ணாடித் தம்ளரில் பலமுறை நிரப்பிக் குடித்தார். அலைச்சலும், வேலையும், வெக்கையும் அவரது புத்தியை மழுங்கவைத்திருக்கிறது என்றெண்ணிய ஆன்ழேல் அவர் குடித்து முடிக்கட்டுமெனக் காத்திருந்தாள்.

— ‘என்ன, இன்றைக்கும் சுவாரசியமான சங்கதிகள் உண்டா ? ‘

— ‘இல்லாமலா ? ‘ வழக்கத்தைபோல அன்றையதின அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். ஹெர்த்துவார் கிழவி இறந்துட்டுது. மூலென் குக்கிராமத்துல ஒரு நகச்சுற்று. அப்புறம் உன்னால நம்ப முடியுதாப் பாரு, தியேல் கிராமத்துல பால்காரன் ஒருவனுக்கு குளிர்காலத்துல வருகிற கைகால் வீக்கம்!

–இராத்திரியிலகூட, 35டிகிரிண்ணு சொல்ற இந்த நாட்களிலா ?

— ‘ஆமாம். பிறகு எப்போதும்போல கைகால் வெடிப்பு நோயாளிகள். எல்லாம் தெரியும்ணு நினைக்கிறப்போ, ஒவ்வொரு நாளும் புதிதாக எதையாகிலும் கற்கவேண்டியிருக்கிறது. ஆச்சரியப்படுவதற்கென்றே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நரகத்திற்கான அட்டவணைக் கணக்கை பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆன்ழேல்! இன்னும் கொஞ்சம் ராஸ்ப்பெரி கிடைக்குமா ? ‘

— ‘சொன்ன தகவல்களுக்கு நன்றி! ‘ என்றவள், மது போத்தலை மூடியபடி ‘இன்றைக்கு இதுபோதும், ஏற்கனவே வேண்டிய அளவிற்குக் குடித்தாயிற்று, என்றாள்.

தொக்தர், தனது கையிலிருந்த துவாலையைக் கவனமாக மடித்து, அருகிலிருந்த வளையத்தில் நாசூக்காய்த் தொங்கவிட்டார். இரவு வணக்கம் தெரிவித்துவிட்டு படுக்கைக்குத் திரும்ப வாசல் மணி ஒலித்தது. ஆன்ழேல் சென்று கதவைத்திறந்தாள். தனது மூத்த சகோதரிக்கு மருத்துவரைத் தேடி கிராமத்தின் மற்றொரு பகுதியிலிருந்து சிறுவன் ஒருவன் வந்திருந்தான்.

— ‘அவளுக்கு நாற்பது வயது ‘

— ‘என்னபார்க்கிற ? தொக்தர் வருவார். நீ புறப்படு! வீடு திரும்பறதுக்குள்ள உன்னைப் பிடிச்சிடுவார் ‘, ஆன்ழேல்.

‘இரவின் குளிர்ச்சியில் இளந்தளிர்களின் இனிமை, வீதிச் சுவர்களின் கற்களிலோ வெப்பம் இன்னமும் குறையாமலிருக்கிறது.

‘இரு..இரு..எத்தனைமுறைதான் அவளுக்கு நாற்பது வயதென்று என்னிடத்திற் சொல்லப்போகிறாய் ‘, ஃபகெர் சிடுசிடுத்துக் கொண்டிருந்தார்.

விரிப்பில் படுத்திருந்த தனது எஜமானரை ஆன்ழேல் பார்த்தாள். கால்கள் மிகவும் மெலிந்திருப்பதாகத் தோன்றியது. அந்தக் கணத்தில் ஓட்டப்பந்தயத்தின் முடிவில் காணும் களைத்த மனிதனையொத்து அவரிருந்தார். மாதத்தில் இரண்டுநாட்கள் அமைதியாகத் உறங்கி இருப்பாரா என்றால் இல்லை. இப்படித்தான் கடந்த வாரத்தில் குறவர்கள் கூட்டமொன்று இவரைத் தேடி வந்தது. எதற்கென்று நினைக்கிறீர்கள் ? அய்யோ கடவுளே! அவர்களுடைய குரங்கொன்று, வயற்காட்டு ஓரத்தில் அவர்களது வாகனச் சக்கரத்திற் சிக்கி உயிருக்குப் போராடியிருக்கிறது, அதற்காக. ஆன்ழேல் எஜமானரான தொக்தருக்குக் சுருக்கென்று கோபம். மிருக வைத்தியர் ஒருவர் இருக்கும்பொழுது இவரை தொந்தரவுசெய்வதை எப்படிப் பொறுக்கமுடியும் ? குறக்கூட்டத்திற்குத் விளங்காதா என்ன ? இருந்தபோதிலும் அவர்களுக்கு மனிதர்களுக்கான வைத்தியர்தான் வேண்டுமென நிற்கிறார்கள். பெட்டைக் குரங்கை தனது கையில் பிடித்திருந்த கிழவியோ மிஸியே ஃபகெரைக் ஏகவசனத்தில் பேசப்போக, பாவம் அவர் மிகவும் நொந்து போய்விட்டார்.

— ‘உங்கள் காற் சராய்! ‘

ஆன்ழேல் அதனை அவரிடம் நீட்ட வாங்கி அணிந்து கொண்டார். அவரது ஷூவின் கயிறுகளை இறுக்கியவள் படிகளின் திசைக்காய் அவரைப் பிடித்து தள்ளாத குறை.

— ‘உபகரணங்கள் ஏதும் வேண்டாமா ? ‘ மருத்துவச் சாதனங்கள் அடங்கிய கைப்பை இன்றி அவர் புறப்படுவதைப்பார்க்க, இக்கேள்வி.

அவரது பார்வையில் கலக்கமிருந்தது.

— ‘அவளுக்குப் பேர் என்ன ? ‘, வினவினார்.

— ‘அவளா ? ஹாலுக்கு($)ப் பின்புறம் வசிக்கிற கிஸன் குடும்பத்தைச் சேர்ந்தவள் ‘.

— ‘அந்தப் பெண்மணியா ? நான் போகலை. இப்படித்தான் என்னை பலமுறை ஒன்றுமில்லாததற்கு வரச் சொல்லி நிர்ப்பந்திக்கிறாள். அவசரமென்றுபோனால், அங்கே தேவையில்லாமல் வெட்டிப்பேச்சு. ‘

— ‘நீங்க இதைப்பத்தி என்னிடத்தில் இதுவரைக்கும் ஒருவார்த்தை சொல்லலை! ‘

— ‘அவளைப் பற்றி முழுசா சொல்லணும்னா- ஒரு பைத்தியம், போதுமா ? என்னைப்பற்றிய கனவுகளில் மூழ்கினாற்போதும், உடனே ஆள் அனுப்பிவிடுகிறாள். ‘

–அவள் பைத்தியமில்லை, அவளை அப்படி பயமுறுத்துவது நீங்கதான். என்னைக்கூட அடிக்கடி பயமுறுத்த ஆரம்பிச்சுட்டாங்க. உங்களைக் கவனிச்சாகணும், முடியலை.

சட்டென்று திரும்பிய தொக்தர்,

— ‘என்ன சொல்ற ? நான் உன்னை பயமுறுத்தறேனா ? இப்பத்தான் முதன்முதலாக நீ சொல்ல நான் கேட்கிறேன். அந்த அச்சுறுத்தல் எப்படிப்பட்டதென்று சொல்லேன். ‘- என்றார்.

— ‘சில சமயங்களில், நீங்கள் தனிநபரா இருக்கிற மாதிரி தெரியலை. கண்ணுக்குத் தெரியாத இன்னொரு நபரோடு நீங்கள் உரையாடக் கேட்டிருக்கிறேன். அப்படி கதைக்கும்போது, உங்கள் முகத்தில் சந்தோஷமும் தெரிகிறது. ‘

— ‘பொறாமையால் பேசுகிறாய். உன்னைத் தெரியாதா எனக்கு, நீ எப்போதும் இப்படித்தான். ஆன்ழேல்! ஏய் ஆன்ழேல்! வேலைக்காரப் பெண்மணியின் கரத்தினை பிடித்து உலுக்கியவர், தொடர்ந்தார்.

–என் மனத்தில் இருப்பதைச் சொல்றேன். உங்களால் உபத்திரமென்றில்லை. நம் இருவரிடமும் நம்பிக்கைக்கான உத்தரவாதமும், பரஸ்பர மரியாதையும் வேண்டும். எங்கிட்ட உண்டு அதனை நிரூபிக்கவும் என்னால் முடியும். உங்களிடமும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் தனிமையில் பிதற்றும்போதும், வெற்றிடத்துடன் பேசிக்கொண்டிருக்கும்போதும், இல்லாத நபருக்கு போர்த்திவிடும்போதும், உணவின்போது வாழ்த்துச் சொல்லும்போதும் எத்தனை முறை கண்ண்டிருப்பேன். சரி புறப்படுங்கள். கதவினைப்பூட்டவேண்டாம்.. இன்றைக்கு நான் சாவி கொண்டுவர மறந்துட்டேன் ‘.

அவர் ஹாலை($) நோக்கி விரைந்தார். மண்டபத்துக் கூரைக்குமேலே சிவப்பு நட்சத்திரமொன்று மின்னிக்கொண்டிருந்தது.

கிசன் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு நிச்சயம் நாற்பது வயதிருக்கலாம். எழுந்திருக்கச் செய்து, ஒ-டி-கொலோன்* துளிகளைக்கொண்டு அவள் உடலில் அழுந்தத் தேய்த்தார். குளிர்ந்த இரவுக்காக சன்னலைத் திறந்தார்.

ஒரு கண்ணாடி தம்ளரின் நீரீல் முப்பது சொட்டு பிரேத்தான்(Pyrethane) விட்டு,

‘இதை இப்போது குடிக்கவேண்டும். நாளைக்காலையும் தவறாம இதே அளவுக்கு எடுத்துக்கணும். பிறகு நாளைக்கு மாலை மறுபடியும் வந்து பார்க்கிறேன். ‘-என்றார்.

— ‘தொக்தர், ஆலையிலிருந்து சைக்கிளில் திரும்பும்போது, நம்ம பெரிய ஷேன் மரத்துக்கருகே, நீங்கள் அயர்ந்து நித்திரைகொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் தலைச் சுற்றலால் அவஸ்தைப்பட்டதால், உங்களைக் கூப்பிட்டுப்பார்த்தேன், நீங்கள் எழுந்திருக்கவில்லை, எனவே புறப்பட்டுவிட்டேன். நான் சைக்கிள் இருக்கையில் உட்கார்ந்தேனோ இல்லையோ நீங்கள் எழுந்து உட்கார்ந்தீர்கள். உங்கள் இருகரங்களையும் நீட்டினீர்கள். இருபது மீட்டர்கள் தள்ளி, மரங்களின் பின்னே பதுங்கிக்கொண்டு எல்லாவற்றையும் பார்த்தேன்.

–அதெற்கென்ன இப்போது ?

–உங்களிடத்தில் சந்தோஷமில்லை. சந்தோஷத்தின் உன்னதங்களின்றி உம்மால் இம்மண்ணில் ஜீவிப்பது கடினம். அன்றைக்கு நீங்கள் பேசினீர்கள், பாடவும் செய்தீர்கள், ஆட்டம்போட்டவண்ணம் உங்கள் வாகனத்தருகே வந்தீர்கள், கதவுகளைத் திறந்தீர்கள். நான் அங்குதான் மறைந்திருக்கிறேன் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும், கேலிபேசினீர்கள், எனக்கோ வெளிக்காட்டிக்கொள்ள தைரியமில்லை. பிறகு மோட்டார் வாகனச் சக்கரங்களின் டயர்கள் மண்ணை நறநறவென்று அரைக்க, சுற்றிலும் புழுதி மண்டலம் எழுப்பிக்கொண்டு வேகமாய்ப் புறப்பட்டுப் போனீர்கள். ‘

— ‘இரு இரு, நீ பாட்டுக்கு எதையாவது அளந்துகொண்டுபோகாதே! தொக்தர் கடுகடுத்தார். உன் தந்திரம் புரிகிறது. கண்டதைச் சொல்லி, என் வாயிலிருந்து எதையாவதுப் பிடுங்கவேண்டுமென்று நினைக்கிறாய். ஏற்கனவே பலமுறை சொன்னதுத்தான். உனக்கு நான் பதிற் சொல்லப்போவதில்லை. அந்தப் பெண்மணியிடம் உனக்குப் பொறாமை. ‘

— ‘எந்தப் பெண்மணியிடம் ‘

— ‘நான் யாருக்காகக் காத்திருக்கிறேனோ அவள்-லிவேஷ். தண்டோராப்போட்டு ஊர்முழுக்க தெரிவிக்கப்போகிறேன். அவளை பலருக்கும் அறிமுகப்படுத்துவேன். பெரிய ஷேன் மரத்தடியில் நான் காத்திருப்பதெல்லாம் தப்பான ஆள் ஒருவனை சந்திக்கவென்கிற கற்பனையில் உளவுபார்க்கிற வேலைகள் வேண்டாம். தயவு செய்து, உருப்படியான வேறுகாரியங்கள் இருந்தால் அதை முதலிற் செய். ‘

நோயாளிபெண்மணியின் அறைக்கதவைக் திறந்துகொண்டு வெளியேவர, கிசன் குடும்பம் அவருக்காகக் காத்திருந்தது.

–அவளுக்கு பித்தியாட்டிக்(Pithiatque) ரகக் காய்ச்சல், கதவினைப் பின்புறம் சாத்தியபடி கூறினார். அவளுக்கு அமைதி தேவை. ஒரு கண்ணாடி குடுவையில் கொஞ்சம் நீர்கொண்டுபோய் வையுங்கள்.

வீட்டிற்குத் திரும்புகையில், தொக்தர் ஹால் வழியாகவே வந்தார். வேகமாய் நடக்க, எவரோ தன்னைப் பின் தொடர்வதுபோல எதிரொலி, திரும்பிப் பார்த்தார். நிலவின் ஒளி வெள்ளத்தில் தூண்களைத் தவிர வேறேதும் இல்லை. தொடர்ந்து நடந்தார். அடுத்தகணம் அவரது ஞானஸ்நானப்பெயர் சொல்லி அழைக்கும் குரல். நின்றார். வெகு தொலைவில் ஒலிக்கும் அக்குரலை, கிங்கிணி ஓசையை அவ்வப்போது எழுப்பிக்கொண்டிருக்கிற இரவு சுமந்து வந்திருந்தது.

— ‘லூயி! ‘

இவரை மெய்மறக்கச் செய்யும் குரல்-சந்தேகமில்லை, அவள்தான்.

ஹால் இருக்கும் திசைக்கு திரும்பவும் வந்தவர்,

— ‘எங்கே இருக்கிறாய் ? ‘ என்ற இவரது கேள்விக்காகவே காத்திருந்ததைப்போல.

— ‘லூயி ? ‘ என்று மறுபடியும் அழைத்துத் தனது இருப்பை அடையாளப்படுத்தும் குரல்.

லிவேஷைத் தேடி, ஒவ்வொரு தூணாகச் சென்றார், மரத்தூலங்களுக்குப் பின்னால் ஒருவேலை ஒளிந்திருப்பாளோ ? ஓடிப்பார்த்தார். குரல் ஒருவேளை வீதிகளுக்கு மேலே இருந்தோ அல்லது சமவெளிகளின் திசையிலிருந்து வந்திருக்கலாமோ ? தனது மோட்டார் வாகனம் நிறுத்தியிருந்த கொட்டகைக்காய் ஓடினார். வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு பெரிய ஷேன் மரத்தருகே கொண்டுபோய் நிறுத்தி இறங்கிக்கொண்டார். இவர் எதிர்பார்த்ததைபோலவே அவள் அங்கிருந்தாள், பிரகாசமான கோதுமை அரிதாள்களுக்கிடையே தெளிவாய்த் தெரிந்தாள். அவளது கூந்தலைப்பார்க்க, சூரியனை ஏறிட்டுப்பார்க்கிற கண்களுக்கு ஏற்படும் கிறுகிறுப்பு அனுபவம்.

— ‘என்னை ஏற்றுக்கொள், நான் உனக்கானவன் ‘, என்றவராய் அவள் பாதங்களில் வீழ்ந்தார்.

மறுநாள் அவர் உடலைத் கண்டெடுத்த காவற்துறையினர், ‘மாரடைப்பினால் இறந்திருக்கலாம் ‘ என முடிவுக்கு வந்திருந்தார்கள்.

– பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே
பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா (மார்ச் 2006)

தனியெல் புலான்ழே: (Daniel Boulanger):1922ம் ஆண்டு பிறந்த இவருக்கு இசைக்கலைஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, நடிகரென பலமுகங்கள் உண்டு. இதுவரை வெளிவந்துள்ள18 சிறுகதைத் தொகுப்புகளும், 20க்கும் மேற்பட்ட நாவல்களும், சில இலக்கிய சொல்லுகைகளும்(Litt. Narative) இவரது படைபாற்றலை வெளிப்படுத்துகின்றன. 1957ல் ‘Temps Moderne ‘க்காக எழுதிய இவரது சிறைவாழ்க்கையைப் பற்றிய சொல்லுகையை, சார்த்துரு (Jean-Paul Sartre)நிராகரித்திருக்கிறார். 1959ல் வெளிவந்த இவரது L ‘Ombre, நாவல், ழான் ரூஸ்லோவால் பின் நவீனத்துவ படைப்புகளில் மகோன்னதமானது எனப் பாராட்டப்பட்டிருக்கிறது. 1964ல் வெளிவந்த Les Noces du Merle சிறுகதைத் தொகுப்பு, சிறந்த சிறுகதைகளுக்கான பரிசினை வென்றிருக்கிறது. 1971ம் ஆண்டு பிரெஞ்சு மொழி அகாதமி பரிசினையும், 1979ல் மொனாக்கோ இளவரசர் பரிசினையும் வென்றிருக்கிறார். 1983ம் ஆண்டிலிருந்து பிரெஞ்சு இலக்கிய பீடங்களில் மிகவும் முக்கியம் வாய்ந்த கொன்கூர் அகாதமியில் தேர்வுக்குழு நீதிபதியாக இருந்துவருகிறார். தீவிர இலக்கிய விமர்சகர்களால் ஆராதிக்கப்படுபவர். இலக்கிய பீடங்களின் தேர்வுகளில் நீதிபதி பொறுப்பேற்க விரும்பி அழைக்கபடுபவர். சமகால பிரெஞ்சு படைப்பாளிகளில் சிறுகதை சாம்ராச்சியத்தில் இவரளவிற்கு கோலோச்சுகிறவர்கள் குறைவு. 1970ல் வெளிவந்த நகரத்து நினைவுகள்(Memoire de la Ville) சிறுகதைத் தொகுப்பு, மிகச் சிறந்த சிறுகதைகளைத் தன்னுள் அடக்கியது, அவற்றில் ஒன்றான மோகினிப் பிசாசு (L ‘Attaque). மொழியில், நடையில் மாப்பசான் தாக்கத்துடன் சொல்லபட்டச் சிறுகதை.

*. Docteur -மருத்துவர்

**Thyme, Cress, Liveche

*** இருக்குச்சிகளில் கட்டப்பட்ட கயிற்றின் ஆதாரத்துடன் சுழற்றிக் காற்றில் எறிந்தும், பின்னர் பிடித்தும் விளையாடப்படுகிற மரத்தால் ஆன உடுக்கை வடிவ விளையாட்டுப்பொருள்,

$. கடைகள் நிறைந்த மண்டபம்

1. Coffre arriere – டிக்கி

2. St. Mary of Egypt ( died in 520AD)- -கிறித்துவ மத அகரமுதலிகளின்படி, பரத்தையாக வாழ்ந்து புனிதமடைந்தவர், Abbe Zosimas என்பவரால் காட்டில் காண நேர்ந்த சந்நியாசினி.

3. Pie

4. Palier – Landing

5. ஐரோப்பிய நாடுகளில் நல்ல நீரில் வாழும் ஒருவகை கெண்டைமீன்

6. பழச்சாறு கலந்த ஒருவித மது.

7. Eau-de-Cologne

8. Pithiatic

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *