மேகலா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 13,865 
 

குட் மோர்னிங்… மேகலா … காணும் நித்திரை… எழும்பு .. இட்ஸ் coffee டைம் …

குட் மோர்னிங் கும..

கொட்டாவியால் “ரன்” சொல்லியவாறே என்னுடைய தலையணையையும் இழுத்து அணைத்துக்கொண்டே மற்றப்பக்கம் ஒருக்களித்துப்படுக்கும் மேகலாவுக்கு சென்றவாரத்தோடு இருப்பத்தேழு வயது முடிந்தது என்று நம்புவதற்கு அம்மாளாச்சிக்கு தலையில் வைத்து சத்தியம் செய்யவேண்டும். கொஞ்சம் குட்டை முடி. மிஞ்சிப்போனால் தோளின்கீழ் அரையடி நீண்டாலே அதிகம் தான். ஸ்லீக்காக சென்று, முடிவில் கேர்லியாக வளைந்து நிற்பது எப்படி என்று கேட்டு கேட்டு அலுத்துவிட்டது. சொல்லுகிறாள் இல்லை பாவி. அனிச்சையாக முடியை தவழவிட்டு மீண்டும் தலையணைக்குள் முகம் புதைக்கிறாள். பிரவுண் ப்ளெய்ன் கலரில் போர்வை. இழுத்துப்போர்த்துக்கொண்டு, மேகலா விண்டர் குளிர் தாங்கமாட்டாள். “என்ன நரகம்டா இது? திரும்பிப்போவோமா?” என்ற பல்லவி ஒவ்வொரு மே மாசமும் ஆரம்பிப்பாள். செப்டெம்பர் வசந்தகாலத்தில் ஒருமுறை கிப்ஸ்லாண்ட் ட்ரைவ் போனால் ஆகா மெல்பேர்ன் சொர்க்கம் என்பாள். குளிர் என்றால் படுக்கையில் கூட கணுக்கால் வரைக்கும் சொக்ஸ் தான். ஹீட்டர் போட்டால் தொண்டை கட்டும் குரல் போய்விடும் என்பாள். “இப்போது மட்டும் என்னவாம்” என்று திருப்பி கேட்கமாட்டேன். அவள் குத்து நிஜமாகவே வலிக்கும்!

பிங்க் கலரில் பிஜாமா. அவளானால் அது வெறும் பிஜாமா இல்லை, “An uptown stripe Flannel Pyjamas” என்று திருத்துவாள். ஒன்றுமில்லை. இப்போதெல்லாம் அதிகம் புத்தகங்கள் வாசிப்பதால் வரும் வினை இது! சென்றவருடம் என்று நினைக்கிறேன். Chadstone சொப்பிங் சென்டரில் வாங்கியது. இல்லையில்லை .. chadstone க்கு பக்கத்தில் இருக்கு DFO இல் வாங்கியது. தொழிற்சாலையில் இருந்து நேரடியாக கொண்டு வந்து விற்பார்கள். CK இல் சேல் போடுகிறார்கள், விலை அரைவாசி என்று செந்தூரன் போன் செய்ய இருவரும் போனோம். அப்போது மேகலா என்னோடு மேல்பெர்ன் வந்து இரண்டு வருடம். முதலில் வேண்டாம் என்று அடம் பிடித்தாள். “இதையெல்லாம் மனிசன் போடுவானா?”, “இதுக்கு போய் நூறு டொலரா?”, “நானே தைப்பேனே” என்பாள். “இல்லை, நீ சும்மா வாங்கு, comfortable ஆக இருக்கும்” என்று சொல்லி வாங்கி, இன்றைக்கு அதைப்போல் நான்கு பிஜாமா வைத்திருக்கிறாள்! இரண்டை வாங்கி யாழ்ப்பாணத்துக்கு கூட அனுப்பி அவள் அம்மாவிடம் வாங்கிக்கட்டினாள். ஹா .. மெல்பேர்ன்!

“யாரோ ஒருத்தர் வேலையில்லாம லேசா லுக்கு விட்டிக்கொண்டிருக்கிறார் போல!”

முகத்தை திருப்பாமலேயே சொன்னாள். கள்ளி, தூங்காமல் நோட்டம் விட்டிருக்கிறாள். தெரியும். இவளுக்கு நான் தான் எலார்ம்! இரண்டாவது ச்நூஸுக்காக காத்திருக்கிறாள்.

“வேற யாரடி உனக்கு விடிய வெள்ளன almond milk இல coffee போட்டுகொண்டு வந்து பேயன் மாதிரி பார்த்துக்கொண்டிருப்பான்?

கண்முழித்துவிட்டாள். மெதுவாக தலையை திருப்பி, நிமிர்ந்து உட்கார்ந்து, முடியை லாவகமாக சுருட்டி கொண்டை போட்டாள். வெறுங்கையாலேயே முகம் கழுவி வெறுங்கையாலேயே லிப்ஸ்டிக் அட்ஜஸ்ட் செய்து, கண் துடைத்து .. என் கண்ணை நேரே பார்த்து நான் தலையசைத்து ஓகே சொல்லும்வரை சரி செய்துகொண்டே இருப்பாள். Such a pain in the …

“தாங்க்ஸ் டா .. You don’t have to do this … எழுப்பியிருக்கலாம் இல்ல?”

“யோசிச்சன் .. ஆனா தலைவி நேற்று நல்லா களைச்சுப்போயிருப்பீங்க எண்டு தான் நானே”

சொல்லிக்கொண்டு கண்ணடிக்க,

“ஓ ஷட் அப் … முன் lounge க்கு போவமா? நடுங்குது .. முன்னுக்கு ஹீட்டர் போட்டு வோர்ம் பண்ணி வச்சிருக்கிறியா?”

“ஓம் மகாராணி .. எல்லாமே செய்து ரெடியா இருக்கு!”

சோபாவில் இருந்தவுடனேயே எங்கள் குட்டி லைப்ரரியில் இருந்து “A Beautiful Mind” புத்தகத்தை எடுத்து அவள் வாசிக்கத்தொடங்க எரிச்சலாக வந்தது. காலையிலேயே புத்தகமா? மொனாஷில் ஆங்கில இலக்கியம் மாஸ்டர்ஸ் படிக்கபோகிறேன் என்று சொன்னபோதே நான் அலெர்ட் ஆகியிருக்கவேண்டும். யுத்தத்தால் புலம்பெயந்த இனங்களின் இலக்கியங்களின் கருத்தியல் ஒற்றுமை தான் அவள் ரிசெர்ச் டாபிக். ஆனால் இப்போது எல்லா திசையிலும் அவள் வாசிப்பு போகிறது. திடீர் திடீர் என்று ஆயிஷாவாகவோ, லேடீஸ் கூப் ஆகிலாவாகவோ, காபுல் லைலாவாகவோ மாறி என்னென்னவோ பேசுவாள். ஒருநாள் இல்லை ஒருநாள் நீ சந்திரமுகியாகி நான் “என்ன கொடுமை சரவணன் இது” என்று சொல்லவேண்டிவரும் என்று வாய் உன்னினாலும் சொல்லமாட்டேன். அவள் குத்து நிஜமாகவே வலிக்கும்!

ஓரளவுக்கு பாடுவாள். சித்ரா என்றால் உயிர். குளிக்கும்போது இன்னும் நன்றாக பாடுவாள். ஹம்மிங் ஹால் வரை கேட்கும். “அலைபாயும் காதலே அணையாத தீயா? வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா? இசையோடு சேரும் தாளம்” என்னும் போது, அடடா இந்த பிட்ச்சில் எடுத்தால் எப்படி “சுதியோடு பாடும் ராகம்” பாடப்போகிறாள் என்று காதுவைத்து கேட்பேன். கள்ளி, ஷவரை கூட்டிவிடுவாள். ஒன்றுமே கேட்காது.

“என்ன மிஸ்டர் .. மைன்ட் எங்க போகுது … முன்னுக்கு ஒருத்தி இருக்கிறது தெரியேல்லையா?”

“அது அவளுக்கு தெரியுமா? விடியக்காலமையே புத்தகத்தோட குந்தினா?”

“சொறி டியர், நாளைக்கு ஒரு பப்ளிகேஷன் இருக்கு.. சிறுகதை .. அதில “The Beautiful Mind” இல இருக்கிற ஐடியாவை ஒரு இடத்திலா யூஸ் பண்ணலா..”

“ஆ கொப்பி அடிக்கிறீங்களா மெடம்? சொந்தமாக யோசிக்கமாட்டீங்களா நீங்க? எப்ப பார்த்தாலும் இன்ஸ்பிரேஷன் அது இது”

“ஹெலோ .. வாசிக்காம கதைக்க கூடாது … கதை அது இல்ல .. ஒரு இடத்தில சின்னதா இன்ஸ்பைர் பண்ணுறது பிழையில்ல”

“சரி விடு .. உன்னோட கதைச்சு வெல்ல ஏலாது, கதை எப்பிடி வந்திருக்கு?”

“ஸ்டார்ட் பண்ணீட்டன், எப்பிடி முடிக்கிறது என்று … நிறைய மெஸ்ஸியா இருக்கிற மாதிரி ஒரு .. நீ வேற கதைல இருக்கிறியா!”

“வாட்? நானா? பெர்சனல் விஷயம் எழுத்தில வர கூடாதென்று எங்களுக்க ஒரு ஒரு அக்ரீமன்ட்.. மறந்திட்டியா? யூ ..”

“பொறுங்கள் மை டியர் குமரன்! வேற வழியில்ல .. Its a story of a loser! உன்னை விட்டா வேற யாரு சொல்லு?”

“மைன்ட் யுவர் வோர்ட்ஸ் மேகலா .. I am not!”

“ஐயோடா … கோபம் வந்திட்டா? .. You are the biggest loser my boy!”

“இப்ப loser எண்டு சொல்லுறத நிப்பாட்ட போறியா இல்லையா?”

கத்திவிட்டேன். மேகலா என் முகத்தை நேரே பார்த்தாள். கண் வெட்டவில்லை. அந்த உதட்டோர சிரிப்பு. குறையவுமில்லை. கூடவுமில்லை. கிராதகி..

“பாட்டு போடேன் … அந்த சோங் என்னடா .. நம்மவர்ல.. ராஜாவா அது?”

அவளுக்கு தெரியும். எவ்வளவு கோபம் என்றாலும் பாட்டு என்றால் நான் மடங்கிவிடுவேன். பாட்டு பாடி சாப்பாடு ஊட்ட இந்த ஐந்து வருஷத்தில் நன்றாகவே பழகிவிட்டாள்.

“Fool .. அது ராஜா இல்ல .. மகேஷ் .. செத்துப்போனார்!”

போய் எங்கள் சோனி ட்ரீம் மெஷினில் dock பண்ணியிருந்த iPod இல் தேடி செலெக்ட் செய்தேன். பாட்டில் வரும் முன் பியானோ பீஸ் மெல்பேர்ன் பத்து டிக்ரீ குளிர் காலையை மென்மையாய் வருடியது.

“ஹேய் … பியானோ திறந்து எவ்வளவு காலமாயிற்று? ப்ளே பண்ணுறியா?”

“லூசாடா நீ? விடியக்காலம முகம் கூட கழுவயில்ல .. பியானோவா?”

“ப்ச்ச் .. சண்டே தானே, “No time like the present” வா ..”

எழுந்துபோய் மூலையில் இருந்த Upright piano வில் இருந்த போட்டோ ஸ்டாண்டையும் குட்டி பிள்ளையார் சிலையையும் எடுத்து ஸ்டூலில் வைத்துவிட்டு, அவளை பார்த்தேன்.

“சரியான அரியண்டம்டா நீ”

புத்தகத்தை புக் மார்க் வைத்து சோபாவில் போட்டுவிட்டு, வந்து கவனமாக பியானோவை தூசு தட்டி திறந்தாள், இருக்கையை சரி செய்துகொண்டு மிடில் “C” பிடித்தாள். இரண்டு கைகளும் அனாயசமாய் விளையாடியது.

“கிளாஸ்!”

“தொடங்கவே இல்லை … பொறு .. என்ன பாட்டு”

“இதையே பாடு … பூங்குயில் .. பாடினால்”

“ஓ … ஹார்மனி இருக்கே .. சேர்ந்து வாசிப்போமா? சும்மா ட்ரை பண்ணேன்? ”

“வேண்டாம் சாமி! நோட் பிசகினா கத்துவாய் .. நீயே ப்ளே பண்ணு ப்ளீஸ்”

புன்னகைத்துக்கொண்டே ஆரம்பித்தாள். எப்போது இப்படி கேட்டாளோ தெரியாதோ. சரளமான ஆரம்ப இசை, நோட்ஸ் இல்லை, ப்ராக்டீஸ் இல்லை. மனதில் இருக்கும் இசை பியானோவில் வந்து விழுகிறது. யோசித்துக்கொண்டு இருக்கும்போதே திரும்பி தலையே உயர்த்தி பாடு என்று ஜாடை காட்டினாள். 1..2..3..4..1..2..3..4..1..2..3..4..1..2..3..4

“பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்”

“குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்”

“ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்?”

“சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்”

“கண்கள் சங்கீதம்”

பாடும்போது “கீதம்” ஷார்ப்பாகி அவளே பல்லைக்கடித்துக்கொண்டு என்னைப்பார்க்காமாலேயே பியானோவில் தொடர்ந்தாள். கண் மூடி, ஏதோ எல்லாம் இம்ப்ரோவைஸ் பண்ணி, அவள் தன் உலகத்துக்குள் போய்விட்டாள். இனி நிறுத்தமுடியாது. கன்னங்கள் எல்லாம் வாசிப்புக்கு ஏற்ப ஏறி இறங்க, ஒரு மென்மையான் தாளத்தில் தலை ஆட, மெல்ல புடைத்து எழுந்துகொண்டிருந்த கழுத்து அவள் மனதுக்குள் சேர்ந்து பாடுகிறாள் என்றது. மெதுவாக நெருங்கி அந்த பாடும் கழுத்தில் பொறாமையாய் … ஒரு முத்தம் இட, கூச்சத்துடன் “ச்சீ” என்று திரும்பினாள்.

“ஐ லவ் யூ .. மேகலா”

..

..

“என்ன? .. குமரன் .. நீங்க .. என்னவோ இப்ப .. சொன்னனீங்க … come again?”

அதிர்ந்துபோய் மேகலா கேட்டபோது நெஞ்சில் திக்கென்றது. வெயில், கொழும்பு பல்கலைக்கழத்து மகோகனி நிழலையும் தாண்டி சுட்டது. தினமும் அலுவலகம் போகும் வழியில் அவளை கம்பசில் இறக்கிவிடுவதுண்டு. தூரத்து சொந்தம். இரண்டு வருஷத்துக்கு முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆங்கில இலக்கியம் படிக்கவென்று ஒருத்தி கம்பஸ் வந்திருக்கிறாள் என அம்மா சொன்னபோது முதலில் நம்பவில்லை. அப்புறம் அவள் சுண்டுக்குளி என்றவுடன் ஆகா இது ஆபத்தான கேஸ் ஆயிற்றே. சுண்டுக்குளிகாரிகளுடன் சும்மா பேசினாலே இங்கிலிஷ் வந்து விழுமே! இவள் வேறு ஆங்கில இலக்கியம். முதல் நாள் சந்தித்த போது கவனமாக வெறும் ஹாய் மட்டும் சொல்ல திருப்பி ஹவ் ஆர் யூ என்றாள். நாங்கள் வசிக்கும் வெள்ளவத்தை 44வது லேன் அப்பார்ட்மென்ட் ப்ளாக்கில் தான் அண்ணன்காரனுடன் வசிக்கிறாள். வந்து இரண்டாம் வாரமே ஒரு இங்க்லீஷ் புத்தகம் கொண்டுவந்து நீட்டினாள். “Interpreter of Maladies”. வாசிச்சு interpret பண்ண அடுத்த நாளே பூபாலசிங்கத்தில் லிப்கோ டிக்ஷனரிக்கு ஆயிரம் ரூபாய் அழவேண்டியிருந்தது. தெரியாது என்று சொன்னால் சென்ஜோன்ஸ் மானம் என்னாவது?

கணத்தில் வந்து போன நினைவுகளில் ஒரு சிரிப்பும் சேர்ந்துகொள்ள பீம் பீம் என்று பக்கத்தால் 138ம் நம்பர் பஸ் வேகமாக தாண்டிப்போனது. புட்போர்டில் பத்து பாடசாலை மாணவர்களாவது தொங்கிக்கொண்டு; தப்பான இடத்தில் சொல்லிவிட்டோமோ? வேலைக்கு போகும் அவசரம். அரை மணியில் அவளுக்கு லெக்சர்ஸ். இந்த ட்ராபிக் புகை. என் குட்டி மாருதிக்குள், ரோட்டுக்கரையில் ச்சே.. இப்பிடியா காதல் சொல்லுறது? பொறுத்திருந்து இன்று மாலை சைனீஸ் டிராகன் கூட்டிக்கொண்டு போய் .. வைன் எடுத்து .. வைன் குடிக்கமாட்டாளே! கேட்டுப்பார்த்திருக்கலாம். ஒரு நாள் தானே. ப்ச்ச்.. சொல்லியாச்சு .. இனி யோசிக்கக்கூடாது.

ஓம் மேகலா .. I meant it… I think I am in ..…..

ஓ .. stop it குமரன் .. வேண்டாம் ப்ளீஸ் சொல்லாதீங்க

லிசின் மேகலா … இது சரியான தருணம் இல்ல தான் .. ஆனா மனசில ஆசையை வைச்சுக்கொண்டு உன்னோட பழகிறது அவ்வளவு ..

Seriously .. where is it coming from குமரன்? .. ஏன் திடீரென்று .. இப்ப?

எங்களுக்குள்ள ஈஸியா பொருந்தும் மேகலா .. யோசிச்சுப்பார் .. ஒரே வீட்டிலே ..ரெண்டு பெரும் கதைக்கிற விஷயங்கள் .. We share a lot in common மேக..

Are you telling this… ஹா .. நீங்களா? … இத ஏன் எனக்கு முதலிலேயே சொல்லேல்ல குமரன்?

ஒரு வருஷம் மேகலா .. ஒரு வருஷமா யோசிச்சு யோசிச்சு .. உனக்கு நான் சரிவருவனா? என்னை நீ சமாளிப்பாயா? உன்னோட இன்டெலக்ஷுவலிட்டிக்கு ஈடு கொடுப்பேனா .. மண்டைய போட்டு உடைச்சன் மேகலா .. காந்தனோட கூட பேசிப்பார்த்தாச்சு .. கேட்டிட்டு கட்டிப்பிடிச்சான் மேகலா.. அவ்வளவு சந்தோசம் .. ..

கடவுளே .. என்ன நடக்குது இங்க? இது … ப்ச்ச் .. குமரன் .. நீங்க என்னோட க்ளோஸ் பிரெண்ட் .. ஏன் ஒரு மெண்டர் கூட .. எனக்கு கொழும்பு சொல்லிக்கொடுத்து … நாலு பேரோட பேச பழக்கி .. ஐ ரியலி லைக் யூ குமரன் .. You are a too good of a guy to say NO .. ஆனால் என்னால முடியாது .. இந்த மாதிரி நான் யோசிக்கவேயில்ல .. ப்ளீஸ் டோன்ட் ஆஸ்க் மி திஸ் .. ஒண்டுமே கேட்காதீங்க!

மேகலா .. ஆனா ..

ப்ளீஸ் குமரன் .. இட்ஸ் ஓவர்! இட்ஸ் ஜஸ்ட் ஓவர்!

காரின் ஓடியோ ப்ளேயரையே வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்தேன். “பூங்குயில் பாடினால்” பாட்டு. பேசுவதற்காக pause பண்ணியபோது செல்லமாக கோபப்பட்ட மேகலா. இனி இல்லை என்ற போது கிடு கிடுவென உடம்பு, காருக்குள் திடீரென்று பத்து டிகிரி ஏஸி போட்டது போல நடுங்க ஆரம்பித்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. சீட் பெல்டை சட்டென்று மாட்டினேன். கார் யன்னலை மீண்டும் ஏற்றிவிட்டு கண்ணாடியால் வெளியே பார்த்தேன். பல்கலைக்கழகம். கையில் நோட்ஸ் புக்ஸ், பேனாவுடன் ஐந்தாறு மாணவர்கள் மரத்தடியில். தமக்குள்ளேயே சிரித்து, கதைத்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தனர். அசைன்மன்ட் சப்மிஷன் இன்றாக இருக்கலாம். இரண்டு வாங்குகள் தள்ளி ஒரு ஜோடி. கூட்டாக சேர்ந்து ஒரே ஐபோடில் பாட்டுக்கேட்டுக்கொண்டு ஒரே நோட்ஸை ஷேர் பண்ணிக்கொண்டு ..

யாரு மேகலா?

அவள் பக்கம் திரும்பாமலேயே கேட்டேன். “அப்படி யாரும் இல்லை” என்று சொல்லேன் ப்ளீஸ். “இப்ப வேண்டாம் பிறகு பேசலாம்” என்றாவது சொல்லேன். கம்பஸ் முடியும் மட்டும் வெயிட் பண்ணி கேட்கவா? யாழ்ப்பாணம் திரும்பிப்போகலாம். அங்கேயே கம்பசில் நான் லெக்சர் பண்ணலாம். கொழும்பில் தான் இருக்கவேண்டும் என்று இல்லை. பிள்ளையாரப்பா .. அவளை மட்டும் நல்ல பதிலா சொல்ல வை ப்ளீஸ்.

கோகுல்!

கோகுலா?

ம்ம் .. நீங்க கூட மீட் பண்ணியிருக்கிறீங்க .. கம்பஸ் வாணி விழாவில இன்ரடியூஸ் பண்ணினேனே .. இத முறையா ரெண்டு பெரும் உங்களுக்கு சொல்லுவம் எண்டு .. …

..

..

அந்த மெடிக்கல் ஸ்டுடன்டா? சாவகச்சேரியா இல்ல .. முகமாலை .. Wherever the ..

மேகலா பேசவில்லை. இன்னொரு 138 பஸ் தாண்டிப்போனது. அதே புட்போர்ட், அதே போல மாணவர்கள். அதே மரங்கள். அதே அசைன்மன்ஸ்.. அதே ஐபோட் ஜோடி. பத்து நிமிஷத்துக்கு முன் இருந்த உலகம் மாறாமல் அப்படியே இருந்தது. என்னதை தவிர.

“We all came out of Gogol’s overcoat…”

திரும்பாமல் சொன்னேன். அவளை பார்க்கும் திராணி இல்லை. திரும்பினால் உடைந்துவிடுவேன். முட்டை மாதிரி அழுதுவிடும் குணம். வேண்டாம்.

“Overcoat, பியடோர் தாஸ்தாவேஸ்கி கதை …அப்படி எண்டா நான் குடுத்த புத்தகம் வாசிச்சிருக்கிறீங்க .. அதுவும் வசனம் ஞாபகம் வைக்கிற அளவுக்கு .. இல்லை எண்டு எனக்கு பொய் ..”

இதான். இந்த அறிவுஜீவித்தனம் தான் என்னை கொல்லுவது. ஒரு வசனம் சொல்லி முடிக்க முதல் மிச்ச வசனம் சொல்லுவாள். புத்தகம் கொடுப்பாள். வாசிக்கவில்லை என்றால் மூன்று நாளைக்கு மூக்கை நீட்டிக்கொண்டு.ப்ச்ச். எல்லாத்தையும் மிஸ் பண்ணிவிட்டேன். மடையன்.

“உனக்கு தோணவேயில்லையா மேகலா? ஒரு நாள் கூடவா? அட்லீஸ்ட் ஒரு மொமென்ட் கூட இல்லையா?”

Gogol is a nice guy குமரன் .. உங்களுக்கு அவன பிடிக்கும்!

“அவன” … அவன எப்ப மீட் பண்ணினனி? கனகாலம் இருக்காதே?”

ஆறு மாசம் இருக்கும் குமரன் .. ஒரு மாசத்துக்கு முன்னால தான் அவன் ..

..

..

ஒரு மாச ….அடச்சீ .. மடையன் .. மடையன் .. மடையன் .. இப்பிடி ஒரு மடையன உலகத்தில பார்க்கேலுமா? ஒரு வருஷமா பக்கத்திலேயே இருந்தும் .. பிடிச்சும் .. கேட்காம .. ச்சீ மடச்சாம்பிராணி..

குரல் உடையத்தொடங்கியது. காரின் அமைதி இன்னமும் மிரட்டியது. யன்னலை மீண்டும் இறக்கி விட்டுவிட்டு பாட்டை மீண்டும் ப்ளே பண்ணினேன். “கண்ணீர்த்துளிகள் தானே கலைகளின் வெகுமானம்”. எஸ்பிபி குரல் உடையாமல் பாடியது.

குமரன் .. ப்ளீஸ் . இப்பிடியெல்லாம் பேசாதீங்க. its all over .. உங்கள நான் .. பாதிச்சிருந்தா ரியலி சொறி. You are my best friend குமரன் .. gem of a friend .. வேற யார் கூட நான் இலக்கியம் கதைப்பன் சொல்லுங்க?

Exactly மேகலா! .. சரி .. விடு .. I will be ok .. கொஞ்ச நாளைக்கு கஷ்டமா .. ஆனால் I will get through this ..sorry if I ..

என்ன பேசுவது என்று புரியவில்லை. நான் ஏன் இதற்கு தயாராகவில்லை? அவள் ஓம் சொல்லுவாள் என்று எப்படி அவ்வளவு நம்பினேன்? அவள் ஏன் எனக்கு சம்மதிக்கவேண்டும்? என்னிடம் அப்படி என்ன இருக்கிறது? நத்திங். ஒரு வேலை. அது கூட இரவு எட்டு மணிக்கு திரும்பி வரும் வேலை. After all I am a bloody loser. இது முதலிலேயே தெரிந்திருக்கவேண்டுமே. ச்சே ..

எனக்கு கிளாஸுக்கு டைம் ஆயிட்டுது குமரன் .. போகோணும்..

Fine மேகலா .. Don’t take it hard .. நான் கேட்டேன் என்றதையே மறந்திடு ப்ளீஸ் .. பின்னேரம் பிக்அப் பண்ண வரவா?

இல்ல குமரன் .. எனக்கு ஏர்லியா முடிஞ்சிடும். பஸ்ல போயிடுவன் .. See you then .. Take care

மெதுவாக கார் கதவை திறந்துகொண்டு வெளியேறினாள். நாலைந்தடி போயிருப்பாள். நின்று திரும்பி நிதானமாக வந்து, எனக்கு பக் பக் என்றது. கள்ளி பொய் தானே?

உங்களுக்கு sure ஆ ஒரு நல்ல பொண்ணு .. என்ன விட கெட்டிக்காரியா .. அழகா .. நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே நீட்டா curly hair ஓட .. கிடைக்கும் …அந்த பிரிவோம் சந்திப்போம் “ரத்னா” போல!

சிரித்தேன். நீ தான் தமிழ் இலக்கியம் வாசிக்கிறதே இல்லையே மேகலா? எனக்கு தெரியாதா? நான் எப்பவோ சொன்னதை ஞாபகம் வைத்து. ச்சே இவளை போய் மிஸ் பண்ணினேனே? எப்பிடிப்பட்ட மனுஷன் நான்?

ரத்னாவுக்கு ஒரு ஹாய் சொல்லு மேகலா!

சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் பண்ணி மெயின் றோட்டுக்குள் ஏறும்போதுதான் ஞாபகம் வந்து,

அடடா கதவை சரியாக பூட்டினேனா?

பூட்டியிருக்கலாம். ம்கூம். என்னை நம்பமுடியாது. இப்படித்தான் சென்றவாரமும் ஒரு நாள் அலுவலகம் முடிந்து திரும்பி வந்து பார்த்தால் வீட்டுக்கதவு லாக் பண்ணாமல் அப்படியே திறந்து கிடந்தது. காரை யூ டேர்ன் அடித்து மீண்டும் வீட்டுக்கு வந்தேன். நினைத்தது போலவே கதவு திறந்தே இருந்தது. உள்ளே போய் பாடிக்கொண்டிருந்த சோனி ப்ளேயரை நிறுத்தினேன். திரும்பினால் lounge சோபாவில் “The Beautiful Mind“ புத்தகம் அப்படியே இருந்தது. பியானோ திறந்து, ஸ்டூலில் போட்டோ ஸ்டாண்டும் பிள்ளையார் சிலையும்; இரண்டு coffee cups. ஒன்றில் almond milk ஆடை படிந்து குடிக்காமல் அப்படியே; மற்றயது காலியாய்; புத்தகத்தை எடுத்து தட்டில் சரியான இடத்தில் வைத்துவிட்டு, பியானோவை மூடி, மேலே போட்டோவையும் பிள்ளையாரையும் வைத்தேன். இரண்டு கப்புகளையும் உள்ளே குசினிக்குள் போய் பேசினுக்குள் ஊற்றிவிட்டு டிஷ் வோஷரில் போட்டேன். எல்லா லைட்களும் ஒன் செய்யப்பட்டு ஒருந்தது. ஒவ்வொன்றாக நிறுத்திவிட்டு மீண்டும் வாசலுக்கு வந்து, தயக்கத்துடன் திரும்பிப்பார்த்தால்; ….. என் வீடு இது. காலை எட்டுமணிக்கும் இருட்டாய். இனம் புரியாத பயம் வீடு முழுக்க விரவி…… என்ன வீடடா இது?

மீண்டும் உள்ளே ஓடினேன். பெட்ரூம் லைட்டை போட்டேன். உள்ளே பாத்ரூம் லைட் போட்டேன். வார்ட்ரோப் லைட், லிவிங் ரூம், ஏனைய பெட்ரூம்கள், ஸ்டடி ரூம் என்று ஒவ்வொரு லைட்டாய் போட்டேன். சுற்றி சுற்றி பார்த்தால் இன்னமும் வீடு இருட்டினாப்போல. ஓடிப்போய் பாட்டை ப்ளே பண்ணினேன். புத்தகத்தை எடுத்து சும்மாவேனும் திறந்து வைத்தேன். ம்கூம் குளிர தொடங்கியது. ஜக்கட் சிப்பை இன்னமும் இழுத்துவிட்டாலும் நடுங்கியது. பியானோவை மீண்டும் திறந்து வைத்து தூசு தட்டி .. இருட்டு இப்போது வேகம் பிடித்தது. துரத்தியது. பக்கத்தில் இந்தா.. தொட்டுவிடும் தூரத்தில் இருட்டு என்னை நோக்கி நெருங்க நெருங்க …. .. விறுவிறுவென்று வீட்டை விட்டு திரும்பிப்பார்க்காமல் ஓடினேன். காரை ஸ்டார்ட் செய்து யன்னல் ஏத்தி, ஹீட்டர் போட்டு மெயின் ரோட்டில் ஏறும்போது தான்,

“கதவை சரியாக பூட்டினேனா?”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *