முற்றுத் தரிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 23,741 
 
 

காலம் என் நினைவின் தடங்களை இரண்டு தடவைகள் மீள மீளப் பதித்துச் சென்ற இடம் இதுதான். தேச வரைபடத்தில் அதனாலேயே இந்த இடம் பெரும் வரலாற்று முக்கியவத்துவம் கொள்கிறதெனச் சொல்லமாட்டேன். என்றாலும், இங்கே தகர்ந்திருப்பது என் வாழ்வின் இறுதி நம்பிக்கையாக இருக்கிறவகையில், இது என்னளவில் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.

இதே இடத்தில்தான் சமாதானம் நிலவிய அந்த 2003ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஒரு நீண்டகாலத்தின் பின்னால் அவளை நான் சந்தித்தேன். அப்போது அவளுடைய அகன்ற நெற்றியிலே குங்குமப் பொட்டு இருந்திருந்தது. சுரிதாரின் துப்பட்டா மறைத்திருந்த கழுத்தில் கொடியும் இருந்திருக்கலாம். அதற்கு மேல் அவளது இடது கை விரலின் மோதிரம் குறித்து என் கவனம் படரவில்லை.

வெள்ளவத்தை மார்க்கட்டுக்கு நேர் எதிர்ப்புறத்தில், திரும்பித் திரும்பிச் சென்று கடற்கரையை அடைந்த தெரு அது. அதன் மூலையிலிருந்த செருப்புக்கடையை நான் தாண்டிச் சென்ற வேளையில், ‘கேக்கேல்லப்போல’ என்றபடி விரைந்து பின்னால் வந்த தொனியில் அவசரமாய்த் திரும்பினேன். எதிரில் வந்து சிரித்தபடி நின்றாள் அவள்.

அவளை எனக்கு ஞாபகமிருந்தது. பள்ளியில் இரண்டு மூன்று வகுப்புகள் கீழே படித்தவள். அந்தக் காலத்தில் கவனத்தை ஈர்க்கும் எந்த அறிவார்த்த, உருவார்த்த அம்சங்களும் அவளிடத்தில் இருந்திருக்கவில்லை. ஆனால் அன்றைக்கு அவள் மிக அழகானவளாய்த் தோன்றினாள். அதுவரை என் மனம் உணர்ந்திராத ஓர் உணர்வு வலயத்தை காலம் கனக்கக் கடந்திருந்த அக் காலத்திலும் மெல்லிய மயிலிறகால் வருடுவதுபோன்ற சுகத்தைச் செய்தது. ஓர் இழப்பின் பெருந்துக்கமும் மனத்தில் படர்ந்தது. பள்ளி போய்வரும் வழியில் எதிர்ப்படும்போதெல்லாம் விருப்பமான பார்வைகளில் அவள் விட்டிருந்த தூதுகளை ஒழுகலாற்றுக் கரிசனத்தோடு எவ்வளவு உதாசீனம் செய்திருக்கிறேன் நான்!

‘கூப்பிட்டது காதில விழேல்ல.’ மன ஆழ்ச்சியின் முகவிறுக்கம் தளர்த்தி மெதுவாய்ச் சொன்னேன். மேலும் உரையாடலுக்கு ஊடு விடும்வகையில், ‘இப்ப எங்க… கொழும்பிலயோ இருக்கிறியள்?’ என்றேன்.

‘ஓம், இஞ்ச… வெள்ளவத்தையிலதான். ஹம்டன் லேனில.’

‘என்ன செய்யிறியள்?’

‘செய்யிறதென்னத்தை, சும்மாதான் இருக்கிறன்.’

‘அவர்…?’

‘றட்மலானயில. ரீச்சிங் பண்ணுறார். நீங்கள் இப்ப எங்க…?’

‘நோர்வேயில.’

‘குடும்பமாயோ?’

ஓர் வெறுமையின் அலைத் திரட்சி உள்ளத்தில் திகைந்தெழுந்தது. அடக்கிக்கொண்டு, ‘ஓ… எல்லாரும் அங்கதான்’ என்றேன்.

‘ஊர்ப்பக்கம் போகேல்லயோ?’

‘வந்தது அதுக்குத்தான? கொழும்பில கொஞ்ச வேலையிருக்கு. முடிச்சிட்டு போட்டுத்தான் வெளிக்கிடுவன்.’

‘இனி எப்ப பயணம்?’

‘கொஞ்சநாள் நிண்டுதான் போவன்.’

‘நேரமிருந்தா ஒருக்கா வீட்டுப் பக்கம் வாருங்கோவன். நம்பர் 16, ஹம்டன் லேன்.’

’16 ஹம்டன் லேன்தான? கட்டாயம் வாறன்.’

ஊர் போய்வந்து மறுபடி கொழும்பில் நின்றிருந்த பொழுதில் பயணத்துக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் அவளது வீட்டுக்குப் போனேன். ஆறேழு வயதில் ஒரு பையனும், அவனுக்கு ஏறக்குறைய இரண்டிரண்டு வயது குறைந்த இரண்டு பெண்பிள்ளைகளும், தாயாரும் கூடவிருந்தனர். ஒரே பள்ளியில் படித்ததாய்ச் சொல்லியபோதிலும் தாயின் பார்வையில் கொஞ்சமும் வரவேற்பிருக்கவில்லை. வீட்டுக்கு வரக்கூடியவளவான ஒரு பழக்கம், பள்ளிச் சிநேகிதத்திலிருந்து தொடர்வதாய்க் கூறுவதை ஏற்றுக்கொள்ள, அவற்றிற்கிடையிலான காலஇடைவெளி இருக்கவில்லையென்று அவள் எண்ணியிருக்கக் கூடும். அவள் கண்களிலும் எதனாலோ ஒரு பதற்றமும், அச்சமும் மெல்ல இறங்கத் துவங்கியிருந்தன. அது என்னை இடைஞ்சல் செய்தது.

ஒரு மேசை, அதன்மேல் ஒரு 18 இஞ்சி ரீவி, மூன்று கதிரைகள், ஒரு பழைய நீளமான சோபா, ஒரு அலுமாரி, அதிலொரு சின்ன அலார மணிக்கூடு மட்டுமாயிருந்த அந்தக் கூடத்தில் அவளது அச்சமும் பதற்றமும் எதன்மேலானதாய் இருக்கக்கூடுமென நான் அதிசயத்தோடு எண்ணினேன். ஒருவேளை உயிர்த் துடிப்புடனிருந்த மூன்று பிள்ளைகளின் தாயான அவளது மகள்தான் காரணமோ?

அது தெரிந்த பொழுதில் எனக்குச் சிரிப்பு வந்தது. ஆனாலும் அவளது எந்த அபிப்பிராயமும், மனநிலையும் அங்கே எதுவித செல்வாக்கும் பெற்றிருக்கவில்லையென்பதை சென்ற சிறிதுநேரத்திலேயே உணர்ந்துகொண்ட எனக்கு, அவளது அச்சம் பதற்றம் இரண்டையும் சற்று உசுப்பிப்பார்க்கிற ஒரு குரூர மனநிலை உருவாகியது. அவளுடனான எனது பேச்சு பார்வை நெருக்கங்கள் நெருக்கமடைந்தன. அது, அதைவிட அந்நியோன்யத்தில் முன்பேயும் இருந்திருந்ததுபோன்ற உணர்வினை தாயாருக்கு அளிப்பதிலிருந்து தவறியிருக்க முடியாது.

தன் தாயாரின் மனநிலையையும் அவதியையும் அவளும் தெரிந்துகொண்டாள்போலவே தென்பட்டாள். மட்டுமில்லை. அவளது அன்னியோன்யமும் அதன் ஆகக்கூடிய எல்லையை நெருங்கிற்று.

அவளது தாயின் மனநிலைக்கான எதிர்வினையாக அதை நான் எண்ணிக்கொண்டாலும், பள்ளிக்காலத்து இழப்பின் வலியை ஈடுசெய்யும் ஒரு கள்ளச் சுகத்தையும் அதில் உண்மையாகவே அடைந்துகொண்டதை உணர்ந்தேன். அது இன்னொரு திசையிலிருந்து அவளது கணவனின் நினைப்பை என்னுள் எதிர்பாராதவிதமாக இறக்கிவிட்டது.

சுவரில் அவர்களது திருமண அல்லது குடும்ப போட்டோ எதுவும் இல்லாதிருந்ததை ஏற்கனவே நான் கவனமாகியிருந்தேன். எனினும் தயக்கமாகவே கேட்டேன்: ‘அவர்…. வர நேரமாகுமோ?’

‘அவர் றட்மலானயில. அதுதான் அண்டைக்குச் சொன்னனே.’

அவர்பற்றி தான் மேலும் பேசத் தயாரில்லை, அவர் சார்ந்த எந்தக் கேள்வியும் தனக்கு விருப்பமில்லையென்ற அத்தனை அர்த்தங்களையும் அவளது பதில் கொண்டிருந்ததை நான் புரிந்தேன்.

எனது வசதிக்கேற்ப எவ்வாறும், அவர் தற்காலிகமானதோ அல்லது நிரந்தரமானதோ ஒரு பிரிவில் இருப்பதாக, நான் கற்பனை செய்துகொள்ள அவள் தந்திருக்கிற அனுமதி அது. எவ்வாறான ஊகம் எனக்கு வசதியானதென்பதை நானே தீர்மானித்துக்கொள்ளலாம். எது எனக்கு வசதியானது? எந்தத் தீர்மானத்திலும் ஒரு வசதியைக் கொள்வது எனக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது. அந்தளவு ஒரு தேவையிலும் நான் இருந்திருக்கவில்லை. என் அப்போதைய அவளுடனான ஊடாட்டம், ஓர் இழப்பின் வலிநிவாரணம் மட்டுமே.

தாய் வந்து கூடத்து லைற்றைப் போட்டதோடு நானும் நேரப் பிரக்ஞைகொண்டு புறப்படத் தயாரானேன்.

‘பேச்சுப் பிராக்கில மறந்திட்டன். கொழும்பில எங்க தங்கி நிக்கிறியள்?’

‘சிஸ்ரரின்ர வீட்டில. அவ இஞ்ச… கொட்டஹேனாவிலதான இருக்கிறா.’

‘ஓ..!’

இரண்டாவது தடவை என் நினைவின் தடத்தை அந்த இடத்தில் பதித்த சம்பவம் இறுதி யுத்தத்தின் மூன்று ஆண்டுகளின் பின் சம்பவித்தது.

அந்த இடத்திலேதான் அன்றும் எதிரெதிரே சந்தித்துக்கொண்டோம். ஆனால் என் அடிமனதின் ஆழத்தில் அவள் நினைப்பு ஒரு புகைமண்டலத்தின் படர்வுபோல நான் வரப் புறப்பட்ட கணத்திலிருந்தே என்னில் தொற்றிக்கொண்டு இருந்தது.

அப்போது நான் எதிர்கொண்ட அவளது கோலம் என்னை அதிரவைத்தது. அந்த அகன்ற நெற்றியில் குங்குமம் இருந்திருக்கவில்லை. கரும் சாந்துப் பொட்டு இட்டிருந்தாள். சேலை அணிந்திருந்ததால் மறைவின்றிக் கிடந்த கழுத்துப் புறத்தில் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலிமட்டும் படர்ந்திருப்பது தெரிந்தது. கைவிரலில் நீல பச்சை சிவப்பு நிறக் கற்கள் பதித்த ஒரு வெள்ளி அதிர்ஷ்ட மோதிரம் கண்டேன்.

அவள் கலகலப்பாகவே பேசினாள். முந்திய சந்தர்ப்பத்தில்போல் முன்னே பின்னே யாழ்ப்பாணப் பேச்சு எழுகிறபோது கொண்ட உஷார்த்தனத்தை அப்போது அவள் அடைந்துகொள்ளவில்லை. எதுவும் அவதானத்தின் அவசியமற்றதுபோல் கொஞ்சம் நெருங்கியே நின்று, தலையைச் சாய்த்தபடி கண்களை மேலெறிந்து என்னைப் பார்த்துப் பேசினாள். அது என்னை முப்பது வருஷங்களுக்கு முன்னே இழுத்துச்சென்றது. ஒருவேளை… ஒருவேளைதான்… இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் நோர்வேயிலிருந்த சுப்பிரமணியம் தன் மகள் இந்திராணிக்கு வரன் தேடிவந்து சென்னையில் என் மாமாவைக் கண்டு என்னை நிச்சயித்திருக்காவிட்டால், உள்ளம் கரிசனமற்ற ஒரு குடும்ப வாழ்க்கையை அத்தனை காலம் நான் வாழ்ந்து களைத்திருக்கத் தேவை இருந்திராதென்று தோன்றியது.

என் சிந்தனையைக் கலைத்து வீட்டுக்கு அழைத்தாள். நானும் வருவதாகச் சொல்லி ஒருநாள் சென்றேன். வீட்டில் தாயார் மட்டுமே இருந்தாள். பிள்ளைகள் எங்கேயென இயல்பாகக் கேட்டேன். அவளும் இயல்பாகவே, ‘தேப்பனோட’ என்றாள். நான் புதிர்கொள்வது தெரிந்து, ‘றட்மலானயிலதான்’ என்றாள் மேலே.

நான் கேட்க எதுவுமிருக்கவில்லை. அவர் அப்போது அங்கே இல்லை, அவர் அங்கே எப்போதும் இருக்கமாட்டார் என்பதைத்தானே அவள் சொல்லியிருக்கிறாள்!

அப்போது அவளிடத்தில் ஒரு செல்பேசி இருந்தது. எனது எண்ணைக் கேட்டு அதில் பதிந்துகொண்டாள். பிறகு, ‘நான் இந்த நம்பருக்கு உங்களுக்கு எடுக்கலாமோ?’ என்றாள்.

‘இது என்ர நம்பர்தான். எப்பவும் எடுக்கலாம்.’

ஒருநாள் மதிய உணவுக்கும், இன்னொரு நாள் இரவுணவுக்கும் அவள் அழைத்து போனேன். அதே மேசையும் அந்த 18 இஞ்சி ரீவியும், அதே மூன்று கதிரைகளும் நீண்ட சோபாவும், அதே அலுமாரியும் அதன்மேல் அதே அலார கடிகாரமுமாக கூடமிருந்து வாழ்நிலை மாற்றத்தின் எந்த அசைவையும் காட்டிராதபோதும், எனக்கான உணவை மிகச் திறமாகச் செய்திருந்தாள். சுவிஸிலுள்ள தனது தம்பி, அப்போது கரிசனை கொண்டுள்ளதை தன் சிரமமின்மையின் காரணமாகச் சொன்னாள். அவளது குழந்தைகள் தகப்பனோடு போய்ச் சேர்ந்த பின்னால் அந்த உதவி ஏன் கிடைக்கவேண்டுமென மனத்துள் சுழித்து ஒரு வினா எழுந்தது. அதற்குப் பின்னால் ஏதாவது சமூக நிலைமைகள் காரணமாக இருக்கக்கூடுமென நான் எண்ணினேன்.

அவளது தாயின் பார்வையிலிருந்த பதற்றமும் அச்சமும் தணிந்து போயிருந்தன. இரவுச் சாப்பாட்டிற்குச் சென்றவேளையில்கூட லேசாகச் சிரித்து என் வரவை அனுசரிக்கச் செய்திருந்தாள்.

எல்லாப் பேச்சுக்களுக்கும் இடையிடையிட்ட மௌன வெளிகளில் இன்னும் தனது தலை சாய்த்து கண் நிமிர்த்திப் பார்க்கும் அவளின் அந்த வசீகரம் இருந்துகொண்டே இருந்தது. அந்த இளக்கத்தில் நான் எவ்வளவற்றை எடுத்துக்கொள்ள முடியும்? ஆனால் அதை ரசிப்பது தவிர்ந்து வேறெதுவும் செய்வதற்குத் தோன்றவில்லை.

அவளோ சளைக்கவில்லை. ஒரு நம்பிக்கையோடுபோல் முப்பது வருஷங்களுக்கு முந்திய அதே பள்ளிக்கூடப் பார்வையை வீசிக்கொண்டே இருந்தாள்.

காலம் மீண்டும் என் குடும்ப ஸ்திரத்திற்கு எந்த ஊறுமில்லாமல் என்னை நோர்வேக்கு அனுப்பிவைத்தது.

ஆனால் நான் நோர்வே சென்றபோது வீடு தாங்கமுடியாத ஒரு கொதிநிலையில் இருந்துகொண்டு இருந்தது. நான் சொல்லிச்சென்ற லீவு காலத்துக்கு அதிகமாக ஒரு வாரம் தங்கிவிட்டதிலும், தந்திருந்த அனுமதிக்கு மேலாக கடனட்டையிலிருந்து பணம் எடுத்துக்கொண்டதிலும் ஒரு பூகம்பமாய் உருமாறியிருந்தாள் இந்திராணி. அந்தக் காலத்திலும் பணத்திலும் நான் என்ன செய்தேனென்பதல்ல, அவற்றைத் தன்னிடம் முன்கூட்டியே ஏன் நான் கேட்கவில்லை என்பதே அவளது கோபத்தின் காரணமாய் இருந்தது. அவளது மனநிலை அப்படி.

தான் என்னைத் திருமணம் செய்து, என்னை நோர்வேக்கு வரவைத்தவள்; அதன்மூலம் எனது தாய்தந்தையரை தம்பியை நான் இங்கே கூப்பிடக் காரணமானவள்; வேலை, வீடு, கார், இரண்டு பிள்ளைகளென இப்போதுள்ள எனது வாழ்வு அவள் எனக்குத் தந்த பேறுகள்.

அதை அவள் எப்போதும் வார்த்தைகளில் சொல்வதில்லை. கண்களால் சொல்வாள். ஒரு துச்சம் தொடர்ந்து அக் கண்களில் பளிச்சிட்டுக்கொண்டிருக்கும். அவை மிகுந்த சாமர்த்தியமுடைய கண்களும். துளி அர்த்தம் பிசகாமல் தம் கருத்தைப் புலப்படுத்திவிடக் கூடியவை.

அன்றைக்கு வழக்கத்தில் இல்லாமல் இரண்டு மூன்று வார்த்தைகளை சொற்களில் உச்சரித்தாள். அவை ஆணாகிய என்னை ஒன்றுமில்லையென ஆக்கிய கணங்கள்.

சேதமெதுவும் ஏற்பட்டுவிடக்கூடாதென இருபத்தைந்து வருஷங்களாக நான் மௌனத்தில் காத்து வந்த கோட்டை என் கண் முன்னால் சிதறியது.

தலையைச் சாய்த்து, கண் நிமிர்த்தி குறும்புடன் பார்க்கும் அந்தச் சொரூபம் அடிக்கடி நெஞ்சில் தோன்ற ஆரம்பித்தது. அந்த இரண்டாவது சந்தர்ப்பத்திலாவது அவளை நான் தவற விட்டிருக்கக்கூடாதென்று துக்கம் துக்கமாய் வந்தது. அப்போது, ஐயோவென்று ஓடிப்போய் என் இருபத்தைந்து வருஷ கால குடும்ப வாழ்க்கை சிதறிய சோகத்தை தலையைச் சாய்ந்துகொண்டு ஓலமிட எனக்கொரு மடி இருந்திருக்குமல்லவா?

அவசரமாகப் புறப்பட்டு நான் இலங்கை வந்தேன். அவளது வீட்டுக்கு ஓடினேன். அங்கே அவளில்லை. அக்கம் பக்கம், அவள் சென்ற திசை சொல்லுமளவுகூட தகவலேதும் கொண்டிருக்கவில்லை.

அடிக்கடி இலங்கை வருகிறேன். அந்த வெள்ளவத்தை மார்க்கெட் முன்னாலுள்ள சந்து முனையில் தேடிக்கொண்டு திரிகிறேன். கடந்த இரு தடவைகளின் நினைவுத் தடங்களே ஒவ்வொரு பொழுதிலும் என்னில் இடறிக்கொண்டு இருக்கின்றன.

ஞானம், செப். 2019

தேவகாந்தன் (பிறப்பு: 1947) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய-ஈழத்து எழுத்தாளர். இவர் ‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் கவனிப்பைப் பெற்றவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த இவர் டிறிபேக் கல்லூரியில் உயர்கல்வியை முடித்தவர். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது புலம்பெயர்ந்து கனடா, தொராண்டோவில் வதிகிறார். 1968-1974 வரை ஈழநாடு நாளிதழில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *