‘‘சரவணன் சார்… லைப்ரரி புக் கொண்டுவந்திருக்கேன்!’’ & எதிரே அழகுச் சிலையாக ரமா. காலேஜில் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண். சரவணனிடம் அவளுக்கு அப்படி என்னதான் ஈர்ப்போ… லைப்ரரி புத்தகம் வாங்கிப் போகிற, பாடப் புத்தகத்தில் சந்தேகம் கேட்கிற சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வந்து ஒட்டிப் பழகுகிறாள்.
ஆருயிர் மனைவி சித்ரா இறந்து ஒரு வருஷம் ஆகப் போகிறது. இதுவரை அவன் மனதில் எந்தவித சஞ்சலமும் வந்ததில்லை. ஆனால், சமீபகாலமாக அவனுக்குள்ளும் சில மாற்றங்கள். அவனும் அதை உணராமல் இல்லை.
அன்று காலை… பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ரமா, கிளம்பிச் செல்கிற வேளையில் தயங்கி நின்றாள். ‘‘சார்… என் வாழ்க்கையை உங்களோடு இணைச்சுக்க விரும்பறேன். உங்களுக்குச் சம்மதமா?’’ என்று கேட்டவள், ‘‘அவசரமில்லை. நல்லா யோசிச்சு நாளைக்குச் சொன்னால் போதும், சார்!’’ என்று கிளம்பிப் போய் விட்டாள்.
அன்றைய தினம் முழுக்க, ஆபீஸ் வேலையில் சரவணனால் கவனம் செலுத்த முடியவில்லை. சின்ன கணக்குகூடத் தப்பாக வந்தது. சித்ரா இருந்த இடத்தில் இன்னொருத்தியா என்று யோசனையாக இருந்தது.
சாயந்திரம் டூ வீலரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது, டயர் பஞ்சராகிவிட்டது. போன் செய்து மெக்கானிக்கை வரச் சொல்லி விட்டுக் காத்திருந்தவனின் கண்களில், அந்த வண்ண மீன் விற்பனை நிலையம் பட்டது. உள்ளே நுழைந்து மீன்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித் தான் சரவணன்.
கோல்டு, ஏஞ்சல், பிளாக் மோலீஸ் என விதவிதமான மீன்கள் கண்ணாடித் தொட்டிகளில் நீந்திக் கொண்டு இருக்க, ஒரு மீன் மட்டும் எதனுடனும் சேராமல் தனியாக இருந்தது.
‘‘அதுவா… அது ஆஸ்கர் மீன், சார்! அதன் ஜோடி ஆறு மாசத்துக்கு முந்தி செத்துப் போச்சு. இந்த வகை மீன் மட்டும் ஆண் இறந்து போனா பெண்ணும், பெண் இறந்து போனா ஆணும் வேறு எதோடும் சேராம, கடைசி வரைக்கும் தனியாவே வாழ்ந்து செத்துப் போயிடும். மத்த பெண் மீன் இதோடு உரசுற மாதிரி வந்தாலும், இது ஒதுங்கிப் போயிடும். அவ்வளவு கற்புள்ள மீன் சார் இது!’’ என்றார் கடைக்காரர்.
அவனுக்குத் தெளிவு பிறந்த மாதிரி இருந்தது.
வீடு திரும்பியதும், ரமாவைக் கூப்பிட்டனுப்பினான் சரவணன். அவளிடம், அந்த ஆஸ்கர் மீன் பற்றிச் சொல்லி,
‘‘வாழ்க்கைத் துணை என்பது அந்த மீனுக்கே இவ்வளவு அழுத்தமான விஷயமா இருக்கும்போது, ஆறறிவுள்ள நமக்கு மட்டும் அது சாதாரண விஷயமா படலாமா? ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பண்பாட்டை மீறாம இருக்கிறதுதான் மனித இனத்துக்கு அழகுன்னு நான் நினைக்கிறேன்’’ என்றான்.
‘‘உங்க கண்ணியமும் பண்பாடும் உங்க மேலுள்ள என் மரியாதையை அதிகப்படுத்துது, சார்! ஆனா, நீங்க சொன்னதில் ஒரு சின்ன திருத்தம்… ஒருவனுக்கு ஒருத்தி என்பது வாழும்போது கடைப்பிடிக்க வேண்டிய அவசியமானதொரு கலாசாரம் தான். மத்தபடி, தம்பதியில் ஒருவரது மறைவுக்குப் பின் அடுத்தவர் இன்னொரு திருமணம் பண்ணிக்கிறது எந்தவிதத்திலும், மறைந்தவருக்குச் செய்யற துரோகமா நான் நினைக்கலை. மீனுக்குக் குடும்பம், குழந்தைகள் கிடையாது. ஆனா, மனைவி என்கிற ஒரு துணை உங்க வாழ்க்கைக்கும், தாய் என்கிற அரவணைப்பு உங்க மகள் சரண்யாவுக்கும் ரொம்ப முக்கியம் இல்லையா? எங்கோ விதிவிலக்கா இருக்கிறதை உதாரணமா எடுத்துக்காம, நம்ம அளவில் யோசிச்சு எடுக்கிற முடிவே சரியா இருக்கும்னு நான் நினைக்கிறேன். அதனால…’’
‘‘சரி, உன் இஷ்டப்படியே ஆகட்டும்’’ என்றான் சரவணன். முன்பைவிட இப்போது இன்னும் தெளிவாகி இருந்தான்.
– 31st ஜனவரி 2007