மாயாண்டி

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 19,930 
 
 

வித்யாவுக்கு சமீப காலங்களாக மாயாண்டியை நினைத்து வயிற்றில் புளியைக் கரைத்தது. அவனை கடந்த ஒரு வருடமாகப் பார்த்திருந்தாலும் அவன் எப்படிப் பட்டவன், அவனது சுயரூபம் என்ன என்பது அவளுக்கு சுத்தமாகத் தெரியாது.

ஒரு தடவை அவன் தன் பெற்றோர்களுடன் குல தெய்வமான மாரியாத்தா கோவிலுக்கு பொங்கல் படையல் செய்ய வந்திருந்தான். அப்போது வித்யாவும் தன் குடும்பத்தினருடன் அந்தக் கோவிலுக்கு சென்றிருந்தாள். அப்போது மாயாண்டி சாமி கும்பிடாமல் வித்யாவையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

வித்யா நாங்குநேரி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒரு மரியாதைக்குரிய டீச்சர். காதலிப்பதாக சொல்லிக்கொண்டு மாயாண்டி கடந்த ஒரு வருடமாக அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான். தினமும் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு அவள் பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளி முடிந்து திரும்பும் போதும் அவளைத் தொடர்ந்து வருவான்.

ஆறு மாதங்களுக்கு முன்னால், ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வித்யாவை வழிமறித்து கரகர குரலில் “ஏ புள்ள, என் பேரு மாயாண்டி…சொத்து பத்து நிறைய இருக்கு…உன்னிய மாதிரி அளகா ஒரு டீச்சர கட்டிக்கிட ஆசப்படுதேன்…ஐ லவ் யூ” என்றான்.

வித்யா பயந்துபோய் தலையைக் குனிந்தபடி அங்கிருந்து விருட்டென்று சென்று மறைந்தாள். அவள் தன் வீட்டில் இதைச் சொல்லவில்லை. சொன்னால் கத்தி, கம்பு, வீச்சரிவாள் என்று உறவினர்கள் பெரிய படையாக கிளம்பி விடுவார்கள். ரத்த ஆறு ஓடும். அதனால் அமைதி காத்தாள்.

மாயாண்டி அவளைத் தொடருவது மட்டும் நிற்கவில்லை. தூரத்தில் அவன் வருவைதைப் பார்த்தாலே வித்யாவுக்குப் பயம். கரிய நிறத்தில் வாட்டசாட்டமாக ஒரு முரட்டுத் தோற்றம். சட்டை பட்டன்களை திறந்து போட்டுக்கொண்டு, நாய்க்கு போடும் செயின் போன்று தடிமனாக தங்கத்தில் ஒரு செயின். வாயில் எப்போதும் புகையும் சிகரெட்.

அவளுக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. ‘தான் மணக்க விரும்பும் ஒரு பெண்ணிடம் தன் காதலை எப்படி அன்பாக, பண்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுகூட தெரியாமல்….ச்சே இவர்களுக்கு காதல், கல்யாணம் என்பதெல்லாம் எதற்கு? பெண்களை எப்படி மென்மையாக அணுகுவது என்கிற குறைந்தபட்ச நாகரீகம்கூட இவர்களுக்குத் தெரியவில்லை. காதல் என்பது முற்றிலும் மனசு சம்பந்தப்பட்டது என்று இவர்களுக்கு எப்படிப் புரியாது போயிற்று?’

அவளுக்கு மாயாண்டியைப் பற்றிய பயம் அதிகரிக்க, சமீபத்தில் தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த மூன்று கொலைகள் முக்கிய காரணம். ஒன்று நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில். அடுத்து தூத்துக்குடி தேவாலயத்தில் கொலை செய்யப்பட்ட ஸ்கூல் டீச்சர். கடைசியாக கரூர் பள்ளியின் உள்ளே வகுப்பறையில் இருந்த மாணவியை கட்டையால் அடித்துக்கொன்ற முன்னாள் மாணவன்.

இதே மாதிரி தன்னைத் தினமும் தொடர்ந்துவரும் மாயாண்டியும் தன்னை ஒருநாள் போட்டுத் தள்ளிவிட்டால்?

பாவம் அந்த தூத்துக்குடி டீச்சருக்கு அடுத்த சில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், தேவாலயத்தில் ஜீசஸ் முன்னால் மண்டியிட்டு வேண்டிக் கொண்டிருந்தவரை எப்படி வெட்டிக்கொலை செய்ய மனசு வந்தது? அதெப்படி தான் விரும்பிய ஒரு பெண்ணை, அவள் தன்னை விரும்பவில்லை என்கிற ஒரே காரணத்தால் கொலை செய்ய முடியும்?

வித்யாவுக்கு கடந்த சில தினங்களாக தூக்கம் வரவில்லை. மாயாண்டியை எப்படிச் சமாளிப்பது? அவனுக்கு தன்மீது கோபம், வெறுப்பு என்று எதுவும் ஏற்படாமல் சாமர்த்தியமாக அவனைத் தவிர்க்க வேண்டும். யோசி….தீவிரமாக மாத்தி யோசி. நிறைய யோசித்தாள். அன்று ஒரு முடிவுடன் தூங்கிப்போனாள்.

மறுநாளும் மாயாண்டி அவளைத் தொடர்ந்தான். இம்முறை வித்யாவுக்கு அவனிடம் பயம் வரவில்லை. மாறாக அவன் தன்னிடம் பேசமாட்டானா என்று ஆவலுடன் எதிர் பார்த்தாள்

அடுத்தவாரம் புதன்கிழமை மாலையில் மாயாண்டி அவளை வழி மறித்தான்.

“ஏ புள்ள, என்ன நான் கேட்டதுக்கு இன்னம் பதிலையே காங்கல….உன் மனசுல என்ன உனக்கு பெரிய ராணின்னு நெனப்போ?”

வித்யா சுற்றும் முற்றும் நோட்டமிட்டாள். பின்பு குரலில் அன்பு தொனிக்க, “இல்லீங்க நான் தினமும் உங்ககிட்ட பேசணும்னுதான் நெனக்கேன்…இங்கன இப்பம் பேச வேண்டாம், எல்லாரும் பாப்பாக. வர்ற சனிக்கிழமை சாயங்காலம் சரியா ஆறரை மணிக்கு நெல்லை ஜங்க்ஷன் ஜானகிராம் ஹோட்டல் ரூப்டாப் வரீங்களா? காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். உங்ககிட்ட நிறைய பேசணும்.”

மாயாண்டி சந்தோஷத்துடன், “அடிசக்கை…கண்டிப்பா வாரேன்…சனிக்கிழமை ஆறரை மணி” பைக்கைத் திருப்பிக்கொண்டு வாயில் புகையும் சிகரெட்டுடன் சென்று மறைந்தான்.

சனிக்கிழமை. மாலை ஆறு மணிக்கே மாயாண்டி காத்திருந்தான். தன் நண்பனிடம், “மாப்ள பட்சி சிக்கிடுச்சி…இப்பம் என்ன பாக்க பறந்து வருது” என்று சொல்லி பெரிதாகச் சிரித்தான்.

சரியாக ஆறரை மணிக்கு வித்யா வந்து அவனெதிரே அமர்ந்தாள்.

மாயாண்டி, “என்ன சாப்பிடுறீங்க?” என்றான்.

“காபி மட்டும் சொல்லுங்க”

சற்றும் முற்றும் பார்த்தாள். ஆறரை மணி என்பதால் கூட்டமில்லை.

“உங்களைத்தான் நான் திருமணம் செய்துகொள்வேன். நீங்க என்னை ஒரு வருடமாக காதலிக்கிறீர்கள். எனக்கு உங்களுடைய முரட்டுத்தனம் மிகவும் பிடிக்கும்.”

“எங்க பரம்பரையிலே ஆம்பளைங்க என்றாலே முரட்டுப் பசங்கதான்.”

“ஆனா நம் திருமணத்துக்கு முன்னால ஒரு மிகப்பெரிய உண்மையை உங்ககிட்ட நான் சொல்லணும். நான் சொன்னப்புறம் நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நான் கட்டுப்படறேன். நீங்க சரின்னா உங்களுக்கு வப்பாட்டியாவும் நான் இருக்கேன். ஆனா என்னப் பத்திய உண்மையை நீங்க யாருகிட்டயும் சொல்லக்கூடாது. உங்க குலதெய்வம் மாரியாத்தாவின் மீது சத்தியம் பண்ணுங்க.” தன் வலது உள்ளங்கையை நீட்டிக் காண்பித்தாள்.

மாயாண்டி “சத்தியமா புள்ள….என் உயிரே போனாலும் சத்தியத்தை மீற மாட்டேன்” அவளது உள்ளங் கையில் அடித்தான்.

குரலை தாழ்த்திக்கொண்டு, “எனக்கு இப்ப மூணு மாசமா எய்ட்ஸ்… இங்கன நெல்லையிலே அதுக்கு ரகசியமா டிரீட்மென்ட் எடுத்திட்டு இருக்கேன்.”

மாயாண்டி குரலில் கடுமையுடன், “ஏ புள்ள நீ எவன்கிட்ட படுத்து எந்திரிச்ச? நான் யாரு தெரியுமில்ல? உனக்கு கல்யாணம் வேற கேக்குதா? உங்கூட பேசவே எனக்கு பயம்மா இருக்கு..”

“…………………….”

“சட்டு புட்டுன்னு காபியை குடிச்சிட்டு கிளம்பு…ஏழு மணி நாகர்கோவில் பஸ்ஸ புடிச்சு நாங்குநேரிக்கு பத்திரமா போய்ச் சேரு.” படபடத்தான்.

“நீங்க செய்து கொடுத்த சத்தியம்…..”

“அது மாரியாத்தாவின் மேல நான் செஞ்சது. நான் சத்தியம் மீறாத பரம்பரை”

காபி வருவதற்குள் வித்யா அமைதியாக எழுந்து சென்றாள்.

அடுத்த நாளிலிருந்து மாயாண்டியைக் காணவில்லை.

அடுத்த சில மாதங்களில் மாயாண்டிக்கு வள்ளியூரில் திருமணம் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். வித்யா பெருமூச்சு விட்டாள்.

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

3 thoughts on “மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *