மழையில் நனையாத மேகங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 2, 2022
பார்வையிட்டோர்: 9,361 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மிருகத்தின் மூர்த்தண்ய வெறி இப்பொழுதுதான் அடங்கியதோ?

மூச்சு. மஞ்சி விரட்டுப் பாய்ச்சலாக மூட்டியது: மோதியது; சிதறியது.

கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டமாதிரி இருந்தது.

அவன் நின்றது காடுதான் ; தாராடிச்சாமிக்குக் குடிக் காணியாட்சிப் பாத்தியம்’ கொண்ட காடு ; பொட்டல் காடு ஆனால், அவனுடைய கண்களை யாரும் கட்டி விடவில்லையே? – இருட்டு, கண்ணை – கண்களை மறைத்தது ; மறைக்கிறது! – விதியும் மறைத்திருக்குமோ? இருட்டு என்றால், கண்மண் தெரியாத – புரியாத இருட்டு ; பேய் இருட்டு ; கொள்ளிவாய்ப் பிசாசுக்கு இருட்டு என்றால், கொள்ளை கொள்ளையான ஆசை யாமே? – கொள்ளை கொண்டு; கொள்ளை கொடுத்த ஆசையோ , என்னவோ? – எண்சாண் உடம்பு சூ, மந்திரக் காளி!’ போட்டு பாவனையில், ஒரு சாணாகவும் ஒற்றைச் சாணாகவும் கூனிக் குறுகி நடுநடுங்கித் தொலைக்கிறதே?

மயான அமைதி.

ஓர் ஈ காக்கை மூச்சுக் காட்ட வேண்டுமே! மூச்! நரிப் பண்ணைக்கு இப்போது தான் ஊளையிடத் தெம்பு வந்திருக்கலாம்.

அவனுக்குச் சுயப்பிரச்சினை சிலிர்த்தது.

“ஐயையோ !….”

கதறினான்.

அவன் : முத்துலிங்கம்.

வானத்து நட்சத்திரம் ஒன்று வழி தவறி, வழிமாறி மண்ணிலே விழுந்து விட்ட பாவனையில், வெளிச்சத்தின் சன்னக்கீற்று சிதறுகிறது.

பதற்றத்தோடும், தவிப்போடும், ஏக்கத்துடனும், உருக்கத்துடனும் சுற்று முற்றும் பார்த்தான் அவன்

இருட்டிலே எதுவும் அவனுக்குத் தெரியவில்லை தான்; ஆனால், இருட்டிற்குப் பழக்கப்பட்டவன் அல்லவா அவன்?

ஆந்தை ஒன்று ஒற்றையாக மட்டுமல்லாமல், தாக மாகவும் தாபமாகவும் அலறுகிறது? அதற்கும் நினைத்த படி ஜோடி கிடைக்கவில்லை போலும்!

முத்துலிங்கம் விம்மினான் ; அழுதான்.

நல்லகாலம், இப்போதும் அவனுக்கு இடுப்புக் கிழிசல் வேட்டி நழுவி விடவில்லை!

காற்றுக்கு சரச சல்லாபம் தெரிந்திருக்க வேண்டும்.

புழுவாகத் துடிக்க வைத்தவன் இப்போது புழுவாகத் துடிக்கிறான்.

அவன் : முத்துலிங்கம்.

“ஏலே …..!”

“…………”

“எலே, பொண்ணு !”

“…………”

“ஏலே புள்ளே!”

விதிக்குத்தான் பேசத் தெரியாது.

இருட்டுக்கும் அப்படித்தானோ?

அவள் எங்கே?

யார் அவள்?

பேர் என்ன?

எந்த ஊர்?

“ஐயையோ! – என்னோட மானம் பறி போனதுக்குப் பொறகாலே, நான் இனிமே என்னத்துக்குப் பாளாப் போன இந்த உசிரை வச்சுக்கோணும்?”

வாய் விட்டும் மனம் விட்டும் கதறிக் கொண்டே, கிறுக்குப் பிடித்தவனாக, விதிக்குப் பயந்தவனாக ஓடினான் இருட்டையும் காட்டையம் துளைத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கிறான்! பிடி கயிறும் தானுமாக ஓடிக் கொண்டேயிருக்கிறான்!

அவன் : முத்துலிங்கம்.

‘சடுகுடு வெளையாட்டிலே, விதியையே மண்ணைக் கவ்வ வச்சுப் பூட ரோசிச்சேன் ; அந்தப் பாவத்துக்கு – அந்தப் பழிக்கு இந்தாலே நானே மண்ணோட மண்ணா கிடப் போறேனே ! எம்மரங் காலமா எம்புட்டுக் கற்பை – என்னோட பரிசுத்தத்தைக் கட்டிக் காத்துக் காபந்து பண்ணிக்கிட்டு வந்தேன், பணத்தைப் பூதம் காத்த தாட்டம்? – ஆனா கடோசீலே, அல்லாமே, கண்ணை மூடிக் கண்ணைத் தொறக்கிறத்துக்குள்ளாற பொய்யாகிப் பூடுச்சு : கனாவாகிப் பூடுச்சு ; பழங்கதையாகவும் ஆகிப் பூடுச்சே ! நான். எம்புட்டு நேசக் கண்ணாட்டி கிட்டக்க வச்ச சவாலிலே நான் தோத்துப்புட்டேனே! – ஆத்தாளே மகமாயியோ ! எம்புத்தியான புத்தியை ஏண்டி ஆத்தா திசை மாத்தினே? அவதார மோகினி கணக்கிலே ஒரு சின்னக்குட்டியை – ஒரு புதுக் குட்டியை ஏதுக்கு இந்தக் காட்டு வெளியிலே குறுக்கு மறிக்க வச்சீயாம்? ஐயையோ, நான் வச்ச சவாலை நம்பியும் மதிச்சும் எனக்காகக் காத்துக்கிணு இருக்கிற என்னோட ஆசைக்கிளி அன்னக் கிளி, என்னோட சவாலிலே நான் கெலிச்சடியும் என்னைக் கொண்டுக்கிடத்தவம் கெடந்துக்கிணு இருக்கிற இந்த நேரத்திலே, நானு பாவி ஆகிப்புட்டேனே? – பழிகார னாகிப் பூட்டேனே! நானு இல்லாங்காட்டி, என்னோட நேசக்கிளி அன்னக்கிளி அப்பாலே இந்த மாங்குடி மண் ணிலே உசிர் தரிக்கவே மாட்டாதே? ஊருக்கு ஒசந்தவளே, இந்தத் துப்பு ஒம்புத்திக்கு எட்டவே இல்லையாடி…?

முத்துச் சிரிப்பென. கூன் பிறை கண் சிமிட்டத் தலைப்படுகிறது.

வேப்பமரம் பளிச்சிட்டது….. அவன் ஓலமிட்டான்; “அன்னக்கிளியோ!”

அன்னக்கிளி!…

அவள் பூவாக மலர்ந்து, பூவின் புனிதமாக நிமிர்ந்து பூ மணமாகத் தன் அழகை வாரி வாரி வழங்க ஆரம்பித்து விட்டால், அன்னம் அதிர்ச்சியால், அதிசயத்தால் அப்படியே மலைத்து சிலையாகி விடாதா? – அவளுக்கு முன்னே தான் எம்மாத்திரமென்று கிளி வெட்கமடைந்து வாய டைத்துப் போய் விடாதா?

அன்னக்கிளி!

பருவத்திற்குப் பதவுரை அவள்!

அன்னக்கிளி!

அவள் நாணயத்தின் செலாவணி!

அன்னக்கிளி !

நாணத்திற்கு விதி அவள் !

அன்னக்கிளி!

விதியின் நாயகியும் அவளே !

‘அன்னக்கிளிப்புள்ளயோ!’ அரிசி முறுக்கைப் பருந் திடம் பறி கொடுத்து விட்டுப் பச்சைப் பாலகன செருமு வானே, அப்படிச் செருமினான் முத்துலிங்கம், அன்னக் கிளிக்குட்டி, இனிமை எப்பொறப்பிலே ஒன்னை நான் காணப் போகுறேன் ? நானு பாவியிலேயும் கேடுகெட்ட பாவியாகிப் பூட்டேனே!’ பழிகாரனாவும் ஆகிப்பூட்டேனே நெஞ்சம் அழ நினைவுகள் அழுதன மனம் அழ, மனச்சாட்சி அழுதது. உள்ளம் அழ , உள்ளத்தின் உணர்வுகள் அழுதன.

கஞ்சிப் பொழுதிலே நடந்தது;

சாலையிலிருந்து கிளை பிரிந்து, பூவத்தக்குடிக்கு வழி காண்பிக்கும் ஒற்றையடிப்பாதையில், செல்லத்தேவன் ஊருணிக்குக் கீழ் வசத்தில் ‘அன்னம் வந்திடும்; வளமைப் படி வந்து குதிச்சுப்பிடும்’ என்று எண்ணி எண்ணி, மகிழ்ந்து மகிழ்ந்து காத்துக்கிடந்தான் அவன்.

அவள் வந்தாள். வந்தவள் அன்னக்கிளி.

சுட்டுப் பொசுக்கின உச்சி வெய்யிலில், சுடாமல் வந்தாள் புண்ணியவதி, தேடி வந்த சீதேவியும் அவளாகவே இருக்கலாம்.

அன்னத்தைக் கண்டதுதான் தாமதம் ; அவன் வாய் கொள்ளாமல் சிரித்தான் ; மனம் கொள்ளாமல் சிரித்தான். “வந்திட்டியா, புள்ளே?” என்று அன்பாக, ஆசையாகக் கேட்டான். ஐந்து வயதிலே, அறியாப் பவருத்திலே ‘ஒழுங்கையின் மணல் வெளியிலே புருசன் – பொஞ்சாதி; விளையாட்டுக்கு உயிர் தந்த, உயிர்ப்புத்தந்த அன்னக் குட்டியின் புனிதத் தரிசனம் பூவாக மணக்கிறது; பூநாகமாக நெளிகிறது.

“மச்சானே, மச்சானே ! நூறுக்கடுத்தம் கிளிக்குப் படிக்கனே புட்டுப் புட்டுச் செப்பியும் கூட, இந்தப் பாளத்த ‘புள்ளே’ பாடத்தை மறக்கவே மாட்டீங்க போலி ருக்கே?- ஊரறிய, ஆயி மகமாயி அறிய, ஒரு நல்ல பொளுதிலே நீங்க ஒங்க கையினாலே எங்களுத்திலே எண்ணி மூணு முடிச்சுப் போட்டதுக்குப் பொறகால தான் நீங்க என்னை ‘புள்ளே” அப்படீன்னு கூப்பிட வாய்க்கு மாக்கும்!”

“ஓ! அம்புட்டுத்தானாங்காட்டி”

“ஊம்!”

காணாத அதிசயத்தைக் கண்டு விட்ட பாங்கில், அவன் கை கொட்டிச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் அவனுடைய மனப்பலம் பக்குவமாக முகம் பார்த்துக் கொள்ளத் தவறி விடவில்லை. அவனுக்கு அவன் வைத்த சோதனைகள் ஒன்றல்ல; இரண்டல்ல!

“மச்சானே!”

“……..!”

“பேச மாட்டிங்களாங்காட்டி?”

“ஊக்கூம்!”

“ஏனாம்?”

“நீ மட்டுக்கும் என்னை ‘மச்சான்’ முறை கொண்டாடலாமாக்கும்? நீ என்னைக் கொண்டுக்கிட்டதுக்கப்பாலே தானே, ‘மச்சான்’ அப்படின்னு என்னை அழைக்கலாம்!”

“நான் தான் ஓங்களைக் கொண்டு கிடப் போறேனே? – கட்டிக்கிடப் போறேனே?- நான் மச்சான்னு தான் ஒங்களை அழைப்பேன். ஆனா; நீங்க என்னை ‘புள்ளே’ முறை கொண்டாடி விளிக்கோணுமின்னா – நீங்க என்னைத் தொட்டுத் தாலிகட்டி – திருப்பூட்டி, பொஞ்சாதி என்கிற சொந்தம் வச்சு புள்ளே’ அப்படீன்னு விளிக்கோணு மின்னா, இன்னம் ஒரேயொரு சங்கதியிலேயும் நீங்க கெலிப்புக் காட்ட வேணுமாக்கும்!”

“எனக்கு நீ என்னமோ சோதனை வச்சே! – குந்த நிழலைத் தேடிகிடச் சொன்னே ; தேடிக்கிட்டேன்; உழைக்க மண்ணைத் தேடத் சொன்னே; அதையும் கண்டு தண்டிக் கிட்டேன் ; ஊர் மெப்பனைக்காக, நாலு காசைச் சேர்த் துக்கிட வேணும்னு சட்டம் போட்டே ; சேர்த்துக் காட்டினேன் ; கள்ளுத் தண்ணியை நாடப்புடாதீன்னு விதி வச்சே ; அந்தச் சங்க நாத்தமே கெடையாதின்னு முச்சரிக்கை எழுதிக் குடுத்தேன்; ஊர் நாட்டிலே ரோக் கியமானப் புள்ளின்னு நல்ல பேர் எடுக்கோணும்னு புத்தி சொன்னே; நல்லவன்னு பேரெடுத்தேன் ! இன்னம் என்ன செய்யோணும், அன்னம்?”

“மச்சானே!”

“ஊம்! ”

“நீங்களும் நானும் நம்பளுக்கு உண்டான தடைங்களையெல்லாம் தாண்டிக் கடந்து, எதிர்த்து மல்லுக்கட்டி, நாம ரெண்டு பேரும் புருசன் – பொண்டாட்டி ஆக வேணும்னு ஒரு நல்ல முடிவுக்கு வந்தடியும், நான் ஒங்களை ஒரு கேள்வி கேட்டேனுங்களே, யாபகம் இருக்குங்களா, மச்சானே?”

“ஆமா; இது பரியந்தம் நான் மற்றெந்தக்குட்டியையும் தொட்டதும் இல்லை; தெரட்டு அனுபவிச்சதும் இல்லே அனுபவிச்சுச் சுகம் கண்டதும் இல்லே என்கிற சத்தியத்தை யும், தருமத்தையும் ஒன்னோட கேள்விக்கு விடையாகச் சொன்னேன்!”

“பலே – உங்களுக்கு நல்ல யாபகம் இருக்குதுங்க! ஒங்க பேச்சு எம்பூட்டு நெஞ்சிலவும் எழுதி கெடக்குது தான்!- ஆனாக்க, இது மட்டுக்கும் நீங்க ஒங்களோட பரிசுத்தத்தை – ஆண்மையைக் கட்டிக் காத்துக்கிட்டது ஒசத்தி இல்லே! – இன்னிக்கு ராவுப் பொழுது மூச்சூடும் நீங்க திரிகரண சுத்தியோட இருந்து, ஓங்க வீரியத்தையும் ஆண்மையையும் கட்டிக் காத்துக் காபந்து செஞ்சுக் கிட்டீங்கன்னா , பொழுது விடிஞ்சதும் ஆயி மகமாயி சந்நிதானத்திலே நான் ஓங்களுக்குத் தாலிகட்டின பொஞ் சாதியாக ஆகிப்புடுவேனுங்க ! ஓங்க தருமமும் சத்தியமும் பொய் இல்லே என்கிற நடப்பை நான் உண்மையின்னு நம்பிட்டேன்னா , அப்பாலே, நம்ப ரெண்டு பேருக்கும் ஊடாலே குறுக்குச்சாலோட்ட வேற எந்த முட்டுக் கட்டையுமே கெடையாதுங்க, மச்சானே!”

“ப்பூ! – இம்பூட்டுத்தானே? துல்லியமான என்னோட நெஞ்சிலேயும் நினைவிலேயும் பரிசுத்தமான நீ குடியிருந்து, என்னோட சீவனுக்கே சீவனாய் நீ உருக் கொண்டு இருக்கையிலே, நான் வேற ஒரு குட்டியை ஏறெடுத்துப் பார்க்கிறதுக்கு நான் ஒண்ணும் பாவி இல்லேயாக்கும் ! நல்ல விந்துக்கு பொறந்தவனாக்கும் நான்! இந்தச் சத்தியத்தையும் தருமத்தையும் கூட, நான் நிலை நாட்டி உங்கிட்டே மெய்ப்பிச்சும் காட்டிப்புடுறேன், அன்னக்குட்டி!”

“சபாசு, மச்சான், சபாசு! ஆத்தா மகமாயிதான் ஒங்களுக்குத் துணை இருக்க வேணுமுங்க!”

“நீயும் தான் துணை நிற்கோணும்!”

புனிதமான சிரிப்பையே புனிதமானதொரு விதியாக ஆக்கிப் படைத்து விட்டு, கன்னிப்பூ அன்னம் மறைந்து விட்டாள்!

அந்தக் கஞ்சிப் பொழுது, மெல்ல மெல்ல, மெள்ள மெள்ளக் கால்பாவி நடந்தது.

அந்திசந்தி வந்தது.

மன்மதனுக்கு ரதி ஒருத்திதான் !

ஆனால் முத்துலிங்கத்தைக் கைப்பிடியாகப் பிடித்துக் கன்னி வலையில் வீழ்த்தித் தள்ளிவிட கூத்துப் போட்டனர் ஆளான பெண் சிட்டுக்கள் அலமேலுவும் அஞ்சலையும்.

முத்துலிங்கத்துக்கு அன்னகிளி ஒருத்தியே தான் ஊர் உலகம் எல்லாம் !

அன்னம்தான் அவனுக்கு உயிர்.

அன்னக்கிளியிடம் வைத்த சவால் தான் அவனுக்கு எதிர்காலம்.

அவன் – முத்துலிங்கம் வெற்றிப் பெருமிதத்தோடு, மனிதனாக மனிதாபிமானம் பெற்ற மனிதனாகத் தலை நிமிர்ந்து நின்றான்.

இரவு வந்தது.

இனிமே, என்னை எவ மயக்கிச் சாய்ச்சி மண்ணைக் கவ்விப்புடச் செய்ய ஏலும்? மோகினி அவதாரமா ஒரு பூலோக ரம்பையே வந்து குதிச்சாலும், நான் என்னை இழந்துப்பூடவே மாட்டேன் ; என்னோட கற்பு நெறியை எம்பூட்டுப் பரிசுத்தத் தவத்தை எனக்கு உண்டான ஆண்மைச் சொத்தை ஒரு நாளும் களவு கொடுத்துப் புடவே மாட்டேன்! மனசு கொண்டது மாளிகைன்னு எங்க மேலத் தெரு நொண்டி அப்பத்தாக்காரி நொடிக்கு நூறு கடுத்தம் செப்பும், என்னோட மனசான மனசு என்னோட கனவுக்கிளியான அன்னக்கிளிக்கேதான் சொந் தம்! – ஊருக்கு ஒசந்த போத்தக் குடி மாணிக்கம், குள மங்கலம் குப்பன் அல்லாரையும் தூக்கியெறிஞ்சிப் புட்டு சர்வசாதாரணமான என்னைக் கட்டிக்கிடுறதுக்கு மனசு இரங்கிய புண்ணியவதியாச்சே அன்னக்கிளி! – அன்னக்கிளி கிட்டே என் பரிசுத்தத்தை ரூபிச்சுக் காட்டிப்புட, இனிமே அட்டியும் இல்லை ; துட்டியும் இல்லே! தாராடிக் காட்டுக் கம்மாயிலே விளுந்து எந்திருச்சு நேரா குடிசைக்குப் பறிஞ்சு துணியை உதறிக் கையைத் தலைக்கு அணை வச்சுக்கிணு படுத்திட்டேன்னா , அப்பாலே ; விடிபொழுது என்னைத் தட்டி எழுப்பிப்பிடும் … ஓட்டமா ஓடி, என்னோட கிளிகிட்டக்க நான் பரிசுத்தமான புள்ளி என்கிற சத்தியத்தையும் தர்மத்தையும் சொல்லிக் காட்டி அவளை – எம்பூட்டு புள்ளெ’ யைக் கும்மாளம் போட வச்சிட்டேன்னா. அப்பவே , ஆயி, மகமாயிக்கு முன்னரிக்கே அவ கழுத்திலே மூணு முடிச்சுச் போட்டுப் புடுவேனே !…. ஆகா! – நானு ரொம்ப ரொம்பக் கொடுத்துவச்சவன் தான்! – அதுதான் என்னோட ஆசைக்கிளியை எடுத்துக் கிடப் போகுறேனே!”

ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தான் முத்து லிங்கம். நடந்தான் ; குளித்தான் , திரும்பி நடந்தான்; திரும்பிப் பார்க்காமலே நடந்தான். அன்னக்கிளியின் துணை சேர்த்து நடந்தான். சுள்ளி கட்டிச் செல்லக் கையுடன் கொண்டு வந்த பிடிகயிறு குலுங்கிட நடந்தான்.

சோதனைக்கும் மோகினி அவதாரம்! எடுக்கத் தெரியுமோ?

“ஐயையோ!”

சுயப் பிரக்கினை மறுபடி சிலிர்த்தது.

அந்த வேப்பமரம் இப்போது பளிச்சென்று பூதாகார மாகத் தரிசனம் தந்தது! வேப்பமரந்தானா? – இல்லை, காவு கேட்கும் ராட்சத அவதாரமா.

‘ஐயையோ! … என்னோட ஆசைக்கண்ணாட்டியான அன்னக்கிளியைக் கண்ணாலம் கட்டிக் கொண்டுக்கிட்டு, அவளை என் பொஞ்சாதியாய் அனுபவிக்கிறதுக்கு உரித் தான ஒரு பொசிப்பும், லவிதமும், பாக்கியமும் இல்லாமப் பூட்ட பாவியான எனக்கு, என்னோட பாவத்துக்கு – நான் செஞ்ச பாவத்துக்கு உண்டான கூலியைச் செலுத் துறத்துக்கு உள்ள நேரம் நெருங்கிக்கிட்டிருக்குது! . பாவியிலேயும் பாவி, கேடு கெட்ட பாவியான என்னை இனியும் பூமித்தாய் தாங்கமாட்டா ; தாங்கவே மாட்டா!’

கூலியை – பாவத்தின் கூலியைச் செலுத்தக் கயிறு வேண்டாமா?

வேண்டும்! – வேண்டும்!

என்னவோ உறுத்திற்று.

மனச்சாட்சியாக இருக்குமோ?

பிறைச்சிதறலில் இடுப்பில் செருகப்பட்டிருந்த கயிறு தட்டுப்பட்டது.

அவன் சிரித்தான்.

அவன்: முத்துலிங்கம்.

இன்னும் யார் சிரிப்பது?

கயிறா சிரிக்கிறது?

கயிற்றுக்குச் சிரிக்கத் தெரியுமோ?

விதிக்குச் சிரிக்கத் தெரிவது இல்லையா?

முத்துலிங்கம் எப்படிச் சிரிப்பான், பாவம்?

பாவம்!…

பாவமாவது, புண்ணியமாவது!

ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை !

‘ஐயையோ! ஆத்தாடியோ!”

கைப்பிடிக்கயிறு பூநாகமாக நெளியவே. அவன் ‘ஓ’ வென்று ஓலமிட்டான். இத்துணை நாழிகைக்கு அக்கயிறு கை நழுவிப் போய்விடாமல், காலைச் சுற்றின பாம்பென எப்படித்தான் அவனிடம் பாசமாகவும் நேசமாகவும் தப்பி யதோ? உருவி எடுத்தான் ; கைக்குச் சுளுவிலே எட்டி விடாத கிளையொன்றைக் கணித்து, அந்தக் கயிற்றை வீசினான். கால்களைத் தூக்கி எம்பி எகிறி நின்றால் அழும்பு பண்ணாமல், வீம்பு புடிக்காமல், வம்பு பிடிக் காமல் கழுத்திற்கு லகுவாகவே எட்டி விடும்படியான அளவிற்கு அதைச் ‘சமட்டியாக இழுத்துச் சரி சேர்த்துச் சரி பார்த்துச் செம்மைப் படுத்தலானான். பலே ! –

அந்தப் பிடிகயிறு , பிடிக்குக் கட்டுப்பட்ட மோகினிப் பிசாசாகக் கனகச்சிதமாகவும் அமைந்து விட்டதே!

அந்தக் கயிறு இப்போதுதான் விதியொத்து நமட்டுச் சிரிப்பை நைச்சியமாக வெளிப்படுத்தத் தொடங்குகிறது.

சாமானியமான கயிறா அது?

பாசக்கயிறு!

நேசக்கயிறு!

என்னமோ, இருந்திருந்தால் போலே கனைப்புச் சத்தம் ஒன்று கேட்கின்றதே? நரிப்பண்ணைக்கும் பாழாய்ப் போன மனிதாபிமானம் இல்லாத இந்த மனித மந்தை மாதிரி கனைக்கத் தெரிந்துவிட்டது போலிருக்கிறது!

சுற்று முற்றும் பார்த்தான் அவன். சுற்றிச்சூழவும் பார்வையிட்டான் அவன். அவன் : முத்துலிங்கம் ஆயிற்றே!

யாரையும் காணோம்!

‘ஏ , புள்ளே! ஊர் பேர் தெரியாத எம்புள்ளே! விதி யாட்டமா வந்தவ , வினையை விதைச்சுப்பிட்டு, விதியாட் டமே கண்ணுக்குக் காணாமல் மறைச்சி பறிஞ்சிட்டீயே? நா வெதைச்ச வினையை நானே அறுவடை செஞ்சுப் புடப் போறனாக்கும்! – இதயம் வீரிட்டது

கயிறு ஊசலாடுகிறது.

அவன் உயிரைப் போலவா?

சுடுசரம் சுட்டது; ‘பொண்ணாப் பொறந்தவ ஒருத்தியோட விலை மதிக்க முடியாத மானத்துக்கு விலை பேச , உப்புப் புளிக்கு உதவாத கேவலம் இந்த முழக்க யித்தையே கருவியாக்கிக்கிடத் துணிஞ்சேனே பாவி நான், நானு போகுடிச் செம்மம் ; ஈனப் பொறப்பு ஆகிவிட்டேன்; நாதியத்த பாவி நான் ; கதி மோட்சம் கெடைக்க மாட்டாத கேடுகெட்ட பாவி ஆயிப்புட்டேன் ;- நான் செஞ்சிருக்கிற பாவம் மூணாம் பேருக்குத் தெரியாது ; நான் சுமந்திருக்கக் கூடிய பழி எனக்கு மட்டுந்தான் அத்துப்படி! துப்புத் தெரியாத எம் பாவத்துக்கும் பழிக்கும் பாவ புண்ணிய ஐந்தொகைப் படிக்கு உண்டான சம்பளக் காசைக் கட்டுறதுக்கு – கூலிப் பணத்தைச் செலுத்துறத் துக்கு இப்ப இதே கயித்தையே நானும் கருவியாக்கிக்கிட வேண்டிய அவலத்துக்கு என்னை ஆளாக்கிப்பிட்ட மகமாயியோட – ஊர் பேர் தெரியாத எம்புள்ளெயைப் போலவே ஊர் பேர் தெரியாத மகமாயியோட நயமான சகத்துக்கு ஈடேது, எடுப்பேது?’

விம்மல் வெடித்தது; இனி , அவன் நெஞ்சம் வெடித்து விட வேண்டியது தான். ஊஹும், வெடித்து விடும் பாவம்!…

பாவமாம், புண்ணியமாம்!

சோ!

நரியின் ஊளைச்சத்தம், சத்தம் கேட்காமலே கிடு கிடுக்கிறது.

முத்துலிங்கத்தின் ஈரல் குலை நடுநடுங்குகிறது. அவன் தன் காதலுக்குக் குறுக்கே நின்ற போட்டியாளர்களிட மெல்லாம் “நானு பனங்காட்டு நரியாக்கும்!’ என்பானே!

இருள் கனத்தது.

நிலவும் கனத்தது.

அவன் மறுபடி விம்மி வெடித்தான். ஆனால், இன்னமும் அவன் நெஞ்சம் வெடித்து விடவில்லை! மனம் பொங்குமாங்கடலாக ஆர்ப்பரித்தது ; ஆரவாரம் செய்தது; முழக்கம் போட்டது. எல்லாம் தன்னைத் தானே ‘தரிசனம் செய்து கொண்டதன் விளைவு; எதிர் விளைவும் கூட செருமல் உள்வட்டமாகச் சுழிக்கத் தொடங்குகிறது; “ஏலே, பொண்ணு! ஒன்னை யாருன்னும் எனக்குத் தெரியாது; இன்ன பேரின்னும் புரியாது; எந்த ஊர் அப்படின்னும் விளங்கல்லே. இம்மாங்கொத்த அருப்புருவ மான இடுசாமக் கூத்துக்கு ஊடாலே தான், நீ விதியாய் நின்னே, என்னோட விதியாவே நின்னே . மோகினி அவதாரமே எடுத்துக்கிட்டுத்தான் வந்தீயோ, என்னமோ? – என்னோட பாளத்த மோகம் ஒன்னை மட்டும் அழிச் சீடல்லே. இந்தாலே, என்னையும் அழிச்சிப்புடப் போவுது! நான் அழியறதைப் பத்தி இத்தியும் கிலேசப்படல்லே; கிலேசப்படவும் மாட்டேன். நான் அநியாயமா அழியறது தான் நாயம்! ஆனா , ஒரு பாவமும் அறியாத – புதுக் கருக்குக் குலையாத சமைஞ்ச குட்டியான நீ அநியாய மாய் அழிஞ்சிட்டியே , அந்தப் பொல்லாத விதியை — விதியோட பிசகைத்தான் இன்னமும் கூட என்னாலே நாயப்படுத்திப் பார்க்க ஏலவே மாட்டேங்குது!…. ஒன்னோட விதியின் எழுத்தையே சுக்கல் நூறாய்க் கிழிச்சுப் போட்டதாலே தானே , ஒங்கதையே திசைமாறிப் பூடுச்சு! ஐயையோ, தெய்வமே எந்தெய்வமே!”

குறி வைத்துப் பறந்து வந்து வட்டமடிக்கிறது சாக்குருவி ஒன்று.

சிணுங்கல். அழுகை மீண்டும் தூள் பறக்கிறது: ஏ, புள்ளே! ‘புள்ளே, அப்படின்னு உசிருக்கு சிரான என் அன்னக்கியை ஒண்டியுந்தான் சொந்தம் கொண்டாடி அழைக்கோணும்னு நான் ரோசத்தோடவும் மானத்தோ டவும், வைராக்கியத் தோடவும் நினைச்சேன்; கனாக் கண்டேன் ; தவம் செஞ்சேன். ஆனா ஊரு பேரு தெரியாத ஒன்னை — உருவம் கிருவம் தெரியாத ஒன்னை – உள்ளம் கின்ளம் தெரியாத ஒன்னைத் தான் புள்ளே’ அப்படின்னு கூப்பிடுறதுக்கு எந்தலையிலே எழுதிப்போட்டிருக்கு, அந்த எழுத்தைத் திரிகரணசுத்தியோட கையெடுத்துக் கும்பிட வேண்டியவன் நான். என் வரைக்கும் ஒசத்தியான புண்ணியவதியாக்கும்! ஒன் புண்ணியம் என் பாவத்துக்குப் பரிகாரம் செய்ய ஏலாது தான்.

நாணு மகாபாவி! – தேவலோகத்துப் பாரி பாதப் பூவு தான். பூவிலேயே ஒசத்தியானதின்னு நான் செல்லையா அண்ணாச்சி சாயாக்கடையிலே வாசிச்சிருக்கேன். அப்படிக் கொந்த ஒசத்தியான ஒன்னை எச்சல் துப்பிக் காயிற ரவை நேரத்துக்குள்ளாற சசக்கி மோந்து காலடியிலே போட்டு நசுக்கிப் பூட்டேனே பாவி நான்? – தேவதை கணக்கிலே நீ எனக்குத் தரிசனம் கொடுத்தே ! – வானத்துத் தேவதை அல்பத்தனமான வெறும் மனுசனான எனக்குக் கெடைக் கிறது லேசா? – அதாலதான் எம் புத்தியான புத்தி ஆண்மைத்தனமான எம்புத்தி சத்திமருள் கொண்டு பூடுச்சுப் போலே! – அதோட, நீ மோகினிப் பேயாய் நின்ன அந்தக் கோலம் எம்புட்டுப் பருவக்கிளர்ச்சியைத் தூண்டி விட்டுச்சு; அப்பத்தான் நீ இருட்டுக் கம்மாயிலே தலை முளுகிட்டு வந்திருக்க வேணும் : ரவிக்கை ஓம் மேனியிலே இல்லே; ரவிக்கை போடவேண்டிய லக்கிலே, ஈரச்சேலை ஊடாலே, சொக்கப் பச்சை நிறத்திலே தரிசனம் தந்த ஒம்புட்டு அழகான, புதுசான, வாளிப்பான நெஞ்சோட காம்பு ரெண்டும் என்னைக் கொத்திக் கொதறிப் போட் டிடுச்சு ; மனுசனா இருந்தவன் அசல் நாட்டான் தான் அதிலும், என்னோட நேசக்காதலிக் கன்னி அவனக்கிளிக்கு உடைமை கொண்ட முத்துலிங்கம் மச்சானாக இருந்த நல்ல ஆம்புளைச் சிங்கம் தான்!

ஆனா, நான் என் அன்னத்துக்கிட்டே விட்ட சவால் படி என்னோட ஆண்மையைக் களவு போகவொட்டாமல் காபந்து செஞ்சிக்கிட்டிருந்த சோதனைப் பொழுதைக்கூட மறந்திட்டு, என் சவாலிலே நான் கெலிச்சு, என் கிளியை என்னோட புள்ளே யாக ஆக்கிக்கிட பொழுது எப்ப விடியும்னு தவங்கிடந்த அந்த லட்சியத்தையும் மறந்திட்டு உன் அழகுக்குப் பலியானேன் ; நான் பலியானதாலே தான் ஒன்னையும் பலி வாங்கிட்டேன்; பலி கொடுத்தும் புட்டேன்!

ஒன்னை வலுக்கட்டாயப்படுத்தி மண்ணிலே தொபு கடீர்னு தள்ள வேண்டி, ஒன் முதுகுப்புறத்திலே ஒளிஞ் சிருந்தேனாக்கும்; நீ அடிசாஞ்சிட்ட மரமாக் கீழே மல்லாக்க விழுந்தே; ஒன் கவர்ச்சி கொப்பளிச்ச அழகை என் கண்கள் அனுபவிக்கல்லே; என் கைங்க அனுப விச்சது. பைலேபி ருந்த பிடி கயித்தைக் கொண்டு ஓம் புட்டுக் கை ரெண்டையும் இறுக்கி முறுக்கி முடிஞ்சு கட்டி, உன் வாயிலே என் வேட்டியைத் தாறக் கிழிச்சுத் திணிச்சு, தலை முடிங்களை ஒதுக்கி, மாராப்புத் துணியையும் விலக்கி, எனக்குத் தேவைப்பட்ட ஒன்னோட துல்லியமான – புத்தம் புதுசான அழகுகளையெல்லாம் என் கைகள் அனுபவிக்க, நான் ஒன்னைப் பலாத்காரம் செஞ்சு ஒன்னோடு; இன்பம் அனுபவிச்ச அந்தப் பொட்டுப் பொழுது என் மட்டிலும் விலை மதிக்க வாய்க்காத ஒரு சிரஞ்சீவிப் பொழுது தான். அந்த வரையிலும் நான் பாக்கியவான் தான்; என்னையும் ஒரு பாக்கியவானாக ஆக்கின புண்ணியவதி இல்லையாநீ -? அந்தப் பெரும் புண்ணியத்துக்குப் பாக்கியவான் நிலையி லேருந்து நான் ஒனக்கு ‘நன்றி’ சொல்லிப்பூடத்தான் ஒன்னைச் தேடித் தேடி அலைஞ்சேன் ! இருந்திருந்து இந்தக் கலிகாலத்திலே தெய்வமானது மனுசங்களுக்குத் தரும தரிசனம் கொடுக்கிறதாவது? நான்பாவி! ஐயையோ!

கூதல் அடித்தது.

சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டாம் !

அவனுக்கு முழங்கால் முட்டிகள் வலித்தன. அதனால் தான் அவன் திரும்பத் திரும்பப் புலம்புகிறானோ? ”ஏ, புள்ளே! விட்டகுறை – தொட்டக்குறை என்கிறது பொய் இல்லைன்னுதான் எனக்குப் படுது இல்லாட்டி நம்பளுக் குள்ளாற ஒரு சொந்த பந்தம், பந்தபாசம் எப்படி ஏற் பட்டிருக்க முடியுமாம்?

அது சரி; ஒன்னை ஒரேயொரு நொடிக்குக் கொத் தடிமை ஆக்கிக்கிட்டு, மறுநொடியிலே ஒனக்கு விடுதலை கொடுத்திட்டேனே? – அதுக்கப்பாலே, நீ ஏன் ஒடினாய்? எங்கே ஓடினே ஊம்; தெய்வாதீனமாய் ஒரு வேளை நீயே மனசு மாறி, மனசு இறங்கி, மனசு துணிஞ்சு என் முன்னாடி வந்து குதிச்சால், உன்னோட கூந்தல் வாசனை ஒண்டியுந் தான் ஒன்னை எனக்கு இனம் காட்ட உதவும்!

நீ யாராம்? எந்த ஊராம்! என்ன பேராம்? ஒன் கற்பைச் சூறையாடிப்பட்ட சமிக்க ஏலாத மாபாவத்துக்கு ஒங்கிட்டக்க மாப்புக் கேட்டுத் தப்பிச்சுக் கிடத்தான் நான் ஒன்னைத் தேடி அலைகிறேன்னு மட்டும் நீ தப்புக் கணக்குப் போட்டியோ. மறுகா எனக்குக் கெட்டாப்பிலே கோபம் பொத்துக்கினு வந்திடுமாக்கும்!

சத்தியமும் தருமமுமான ரெண்டொரு சங்கதிகளை தாக்கல் களை நீ மனசிலே வாங்கிக்கிட வேணும்னுதான் நான் ஒன்னைத் தேடி அலைஞ்சேன் ! நீ கெடைக்கலே மறுபடியும் எனக்குப் பாவமே தான் மிச்சம் காட்டுது!– ஐயையோ! ஒன்னோட கற்பு பறிபோன ஆறாத துயரத் திலே, இந்நேரம் எம்மாதிரியே நீயும் சாவோட சந்நி தானத்திலே நின்னுக்கிட்டு இருக்கியோ, என்ளமோ?

நான் எத்தனை பெரிய பாவத்தைச் செஞ்சுப்புட்டேன்! நான் சுமக்க வேண்டிய பாவத்தைச் சுமந்து என்னை ரட்சிக் கச் சிலுவையைச் சுமக்கக்கூடிய இன்னொரு சிலுவைச் சாமியா இனி பிறக்கப் போறார்? – ஊகூம்! – ஆனாலும் ஒனக்கு ஆயுசு கெட்டின்னுதான் என் உள் மனசுக்குத் தோணிக்கிட்டு இருக்குது. அதாலே, நான் சொல்ல வேண்டி யதைச் சொல்லிப்புடணும், எனக்கு நேரமாகுது இல்லையா? அதுக்காவத்தான் இப்படி அவசரப்படுறேன்.

கேட்டுக்க புள்ளே காலே வீசம் நாழிக்கு முன்னாலே கூடிக் கலந்து, பின்னிப் பிணைஞ்சு நான் இன்பம் அனுப விச்சது ஒன்னை இல்லே! – என்னோட அன்புக்கிளியான அன்னக்கிளியைத் தானாக்கும் நான் இன்பம் அனுபவிச் சேன். பிறந்த மேனியாய் என் அன்னத்தை அழகு பார்த்த அந்த மோகக்கிறக்கத்தோடதான் நான் இன்பத்தை அனு பவிச்சேனாக்கும்! – தாராடிச்சாமிக்குப் பொதுவாகச் செப்புற சத்தியப் பேச்சு இது. இந்த அதிசயப் பேச்சை நீ நம்பவும் வேணும்.

என்னோட சத்தியத் தருமத்தின் நாயம் எம்மனசுக்கு – என் நெஞ்சிலேயும் நினைவிலேயும் அல்லும் பகலும் குடி யிருந்துக்கிட்டு இருக்கிற எம்புட்டு மனசுக்கு மட்டுமே தான் புரிய முடியுமாக்கும் ! எம்மனசை நீயும் புரிஞ்சுக்கிட்டா , அதுவே எனக்கு ஒரு பாக்கியமாகவும் அமைஞ்சிடும்!

நடந்த விதிக் கூத்தை என் அன்னத்துக்கிட்டே விளக்கிச் சொன்னால், அவ எம்மனசைக் கட்டாயம் புரிஞ்சுக்கிடவே செய்வா, ஆனா அவகிட்டே விட்ட சாவலிலே தோத்துப் போனதுக்குப் பொறகு, அந்தத் தெய்வத்தை அற்பனான நான் எந்த முகத்தைக் கொண்டு காண வாய்க்குமாம்? பாவம். அன்னக்கிளி எங்கிட்டேயிருந்து நல்ல தகவலை எதிர்பார்த்து ஏங்கிக் கிட்டு இருக்கும் ! ஐயையோ, தெய் வமே! – என் தெய்வம் நான் இல்லாங்காட்டி, இந்த மண்ணிலே ஒரு இம்மிப் பொழுதுக்குக் கூட உயிர் தரிக்க மாட்டாதே!

ஆத்தாளே மூத்தவளே! எம்புட்டுப் பொஞ்சாதிப் பொண்ணு எங்கண்ணுக்குப் புலப்படாததாட்டமே, நீயும் எங்கிட்டோ ஏனோ கண் மறைவா இருக்கியே? இனிமே நான் எந்தக் கோயில் மண்ணிலே விழுந்து புரண்டு அழு வேன்? ஐயையோ , மகமாயித் தாயே! என்னாலே ஒனக் கும் பழி ஏற்பட்டுப் போயிடுச்சே? நான் பாவி! மகாபாவி!

இனியும் இந்தப் பாவியைப் பூமித்தாய் தாங்கவே மாட் டா, தாங்கவும் கூடாது! புள்ளே அன்னக்கிளியோ ! எம்புட்டு அன்னக்கிளிப்புள்ளே!”

ஆந்தைகள் இணை சேர்ந்து, பிணை சேர்த்துச் சரசம் ஆடின. நிலவின் களங்கத்திற்குப் பொறுப்பு அந்த மேகம் தான்!

மகமாயி!…

முத்துலிங்கத்திற்குக் கத்திக் கதறவோ , இல்லை, அழுது புலம்பவோ இனி நெஞ்சிலே வலுவே இல்லை, வல்லமையும் இல்ல.

சோதித்த இருட்டு இன்னமும் சோதிக்க வேண்டுமா ? ‘நல்ல பூமி’யின் அமைதி அழகுடன் ஆட்சி நடத்துகிறது.

சுயப் பிரச்சினையை மீட்டுக் கொண்டான் அவன்.

அவன் : முத்துலிங்கம்!

திடீரென்று என்னவோ சிரிப்புச் சத்தம் கேட்கிறதே?

விதிக்குச் சிரிக்கத்தான் தெரியும்.

அவனுக்கோ அழத்தான் தெரிகிறது.

திசைகள் மாறின; மறுகின.

சிரித்தது யார்?

விதியே தானா?

அந்த விதி எங்கே?

யாரையுமே காணோம்!

இப்போது அவனும் சிரிப்பைக் கக்கத் தலைப்படுகிறான்!

முட்ட நனைந்த பின் முக்காடு எதற்கென்றா?

சுருக்குக் கயிறு அதோ , அவன் கழுத்தை இறுக்கி முறுக்கத்தயாராகி விட்டது!

அவன் உந்திக் கமலத்திலிருந்து அழுதான். மனத்தின் அழுகையில், கண்களினின்றும் புதுவெள்ளம் பெருகியது; பெருக்கெடுத்தது. சுடுநீர் அல்லவா? சுடாதா , பின்னே? ஏலே. புள்ளே ! எம்புள்ளே அன்னக்கிளியோ!’ தூண்டில் புழு இப்படித்தான் துடிதுடிக்குமோ?

மகமாயி!

ஒன்று !……

இரண்டு !

மூன்று !…..

அவன் வீரிட்டான்.

அவன், முத்துலிங்கமேதான் !

தூக்குக் கயிறு அறுபட்டு மண்ணில் விழுந்தவன் ஏறிட்டுப் பார்த்தான்.

சிறையினின்றும் விடுதலை பெற்ற பிறைக்கன்னி வெகு சுதந்திரமாக ஒளியை உமிழத் தொடங்கி விட்டது.

“ஆ! நீயாங்காட்டி?” நாணயக் குறுக்கலாகப் பூஞ்சிரிப்புச் சிதறுகின்றது!

“அன்னக்கிளிப் பொண்ணே!”

“ஊம்!…” அவிழ்ந்து தொங்கி இடுப்பைத் தொட்ட கூந்தலுக்கு நடுவிலே. அவன் வதனம் முகிலிடைப் பிறைத் துண்டமென ஒளிர்ந்தது.

கூதல்!

விழுந்தவன் எழ வேண்டாமா?

எழுந்தான்.

ஆனால், அவனது மீசையிலே மண் ஒட்டவில்லை !

அவன் : முத்துலிங்கம்

பதட்டம் மூள எழுந்தவன், தட்டித் தடுமாறிய வனாகக் கால்களைத் தரையிலே ஊன்றிக் கொள்ள முயற்சி செய்தபோது, நிதானம் தப்பி . அன்னக்கிளியின் மார்பிலே சாய்ந்து விட்டான். ‘ஐயயோ!” என்று வீரிட்டு அலறினான் , ஆடிப் புனலாய்க் கண்ணீர் ஓடத் தலைப்பட்டது. சுடுநீர் அது? சுட்டுப் பொசுக்கியது. திரை விரித்த விழி வெள்ளத்திற்கு ஊடே, அவளது பூக்கரங்களில் சுழன்ற தாம்புக் கயிறு’ சுழல்கிறது. அவன் தவித்தான்; தடுமாறினான்; உருகினான்; உருக்குலைந் தான். ஆ! நீயா?….அன்னக்கிளிப் பொண்ணே; நீயா;” என்று கூப்பாடு போட்டான். வாசனை ஏறியிருந்த நாசித் துளைகள் புடைக்கின்றன.

அழுகை பாளை வெடிக்கிற பாவனையில் வெடித்துச் சிதறுகிறது.

அன்னக்கிளி விம்முகிறாள்.

நெற்றித் திட்டில், ரத்தத்தின் பிசிறு, நெற்றிப் பொட்டெனப் பளிச்சிட்டது.

முத்துலிங்கத்திற்குப் பித்து பிடித்து விட்டதா , என்ன? எட்டிப் பாய்ந்து, அன்னக்கிளியை ஒட்டி நெருங்கிய வனாக , அவளுடைய குழல் கற்றைகளை வாரி அள்ளி நுகர்ந்தான். ”ஐயையோ?” என்று விண்ணும், மண்ணும் அதிர்ந்து குலுங்கிடக் கூக்குரலிட்டான்.

தாராடிக் கோயிலும் அதிர்ந்திருக்குமோ?

“அன்னக்கிளிப் பொண்ணே!”

அவன் கதறினான். “அன்னக்கிளிப் புள்ளேன்னு கூப்பிடுங்க , மச்சானே!”

அவள் விம்மினாள்.

முடிச்சவிழ்ந்த கொட்டடி ரவிக்கையிலும் சுங்கடிச் ரத்தக்கறை மின்னுகிறது!

நரிகள் சிணுங்கின.

நெஞ்சோடு நெஞ்சம் தழுவி, முகத்தோடு முகத்தைச் சேர்த்துக் கெஞ்சியும் கொஞ்சியும் அவளை – அன்னக் கிளியை வாரி அணைத்துக் கொள்கிறான் அவன் – முத்துலிங்கம்! – ”கொஞ்ச முந்தி நான் பலவந்தப்படுத்தி இன்பம் அனுபவிச்சது ஒன்னைத்தானா? ஒன்னையே தானாங்காட்டியும்?” என்று விக்கல் மேலிட, விம்மல் மேலிட வினவினான்.

“ஊம்,” கொட்டினாள் அவள் , ம்..ம்…ஆமாங்க நேசமச்சானே! அதாலதான் ஓங்களைச் சாக வொட்டாமல், தடுத்துப் பூட்டேனுங்க. ஆசை மம்முத ராசாவே!” கற்பின் கனலாகச் சூடு தூள் பறக்கக் கதறுகிறாள்.

கூந்தலின் நெடியில் இன்னமும் அவன் கிறக்கம் தெளியவில்லை! “நானு பாவி! என்னைச் சமிச்சு எனக்கு மாப்புக் கொடுத்துப்புட மாட்டியாடி, புள்ளே இருந் திருந்து என்னோட இஷ்ட தெய்வத்தையே பயங்கர மானதொரு சோதிப்புக்கு ஆளாக்க நேர்ந்துப்பூட்ட என்னோட பாழும் விதியோட பாவத்தை என்னான்னு செப்பட்டும்?” ஓலம் கூடியது.

அவனுடைய கண்ணீரைத் துடைத்து விட்டாள் அன்னக்கிளி. தன் கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள். ஆசை மச்சானை அன்புடன் ஊடுருவினாள் “ஒங்களைச் சோதிக்சுப் பார்க்க எத்தனிச்சேன்! நானே சோதனைக்கு ஆளாகிப்புட்டேன்! ஆமாங்க, மச்சான் காரவகளே!….” அலறி அழுதாள்.

பிறைக்கும் கள்ள விழிப் பார்வை உண்டு!

அன்னப் பொண்ணே!

“புள்ளேன்னு விளியுங்க, மச்சானே!”

“புள்ளே! ஊரறிய, நாடறிய ஒனக்கு மூணு முடிச்சுப் போட்டு ஒரு நல்ல புண்ணியத்தைக் கெலிப்போடவும், மானத்தோடவும் ரோசத்தோடவும் கட்டிக்கிடக் கனாக் கண்ட நான், ஊரறியாமல், நாடறியாமல் ஒரு பாவத்தை ஒனக்குச் செஞ்சுப்புட்டேனே, அன்னக்கிளியோ! என்னோட பாவம் என்னோடவே அழியட்டும்! என்னைத் தடுக்காதே புள்ளே !”

“அப்படின்னா, என் திட்டப்படியே என்னையும் சாக விட்டுப் பூடுங்க!”

“அன்னப் பொண்ணே, இப்பைக்கு என்னை என்னா பண்ணச் சொல்லுறே?”

“ஓங்களை மூச்சுப் பறியாமல், என் பின்னே வரச் சொல்லுறேனுங்க, மச்சானே! ”

அன்னக்கிளி நடத்தாள்.

முத்துலிங்கம் தொடர்ந்தான்.

நிலவிலே, தாராடிக் கோயில் நீராடிக் கொண்டிருக்கிறது!..

“மச்சானே!”

“புள்ளே !”

“இந்தாங்க, மஞ்சள் தாலி; எனக்கு திருப்பூட்டுங்க?”

“ம்”

நரிப்பண்ணையின் மகிழ்ச்சி ஆரவாரம் மிஞ்சுகிறது.

“புள்ளே !”

“ஊம்!”

பூஞ்சிட்டுக் கன்னங்கள் ஜோடி சேர்ந்தும், ஜோடி சேர்த்தும் சிவந்து கொள்கின்றன.

நெற்றிப் பொட்டு, கண்ணுக்குப் புரிந்த விதியாகப் பளிச்சிட்டது!

இருட்டிலே – பேய்த்தனமான அந்தப் பயங்கர இருட்டிலே, ஒரு புனிதச் சொர்க்கம் உருவாகிறது! ‘உரு’ காட்டுகிறது.

மயான அமைதியிலே, ஒரு மயமான அமைதி அணைகிறது. அணைக்கிறது.

“மச்…சானே!”

“…. புள்…..ளே! ”

“நம்மளோட தமிழச்சாதிச் சமுதாயத்துக்கு நாம ரெண்டு பேருமே ஒரு நல்ல பாதையை நாயத்தோடவும், தருமத்தோடவும், சத்தியத்தோடவும், அன்போடவும் காண்பிக்கத் தவறிப்பூட்டோம்! – ஆனபடியாலே நாம செஞ்ச தப்புத் தவற்றுக்கு உண்டான தண்டனையை நாம ரெண்டு பேருமே விட்ட குறை – தொட்ட குறை இல்லாம அனுபவச்சுத் தீரவேண்டியது தான் நாயமாக்கும்! ஆசையுள்ள மச்சானே! அதான் தருமமும் கூட! – தருமம் கெலிச்சுப்பூட வேணாமுங்களா?”

“‘ஓ’ எம்புட்டுத் தெய்வத்தோட விதியேதான் எனக்கும் விதி ! … ஆமா; புள்ளே ! –”

பொழுது விடிகிறது!

அதோ பார்த்தீர்களா?

அழகான இரண்டு மரக்கிளைகளிலே, அழகான இரண்டு உடல்கள், அழகான சல்லாபத்துடன், அழகாகவே ஊசலாடிக் கொண்டிருக்கின்றனவே!

பாவம்!

பாவம்!

அழாதீர்கள்!

பாவம்!…

(முற்றும்)

– இங்கே, ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்!, முதற் பதிப்பு: டிசம்பர் 1991, துரை இராமு பதிப்பகம், சென்னை.

அமரர்.பூவை எஸ்.ஆறுமுகம் தமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் 200- க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். . கிராமியச் சூழலில் மண்வாசனை கமழ்ந்திட எழுதுவதில் தனிமுத்திரை பதித்தவர். பொன்னி, காதல், மனிதன், உமா ஆகிய இதழ்களில் பொறுப்பாசிரியராக பணியாற்றியுள்ளார். பக்தவச்சலம், கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய 4 முதல்வர்களிடமும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நூல்களுக்கு பரிசுகளைப் பெற்றுள்ளார். காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தின் சிறந்த எழுத்தாளருக்கான கௌரவப்பரிசு ,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *