(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வினாடிகள் யுகங்களாக அசைகின்றன. வழக்கமாகவே மாலை மூன்று மணிக்கு என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பவள், நேரம் நான்காகியும் இன்னும் வந்து சேரவில்லை. தனிமை என்னைத் தவிக்க வைக்கின்றது.
நான் அமர்ந்திருந்த நூல்நிலைய பொதுஅறையில் ஜன்னலூடாக தென்றல் வந்து என்னைத் தழுவிச் சென்றது. எனக்குத் தெரிந்த ஏதோவொரு பாட்டை முணுமுணுத்தவாறு, ஜன்னலினூடாக அப்பால் பார்க்கிறேன். வசந்தக் குறுகுறுப்பில் மரங்களெல்லாம் பூத்துக் குலுங்குகின்றன. மஞ்சள், பச்சை, சிகப்பு நிறங்களிலான அவை ஒன்றையொன்று தழுவிச் சல்லாபிக்கின்றன. அடிவானில் மேகம் சிவக்கின்றது. ஒரு சோடிப் பறவைகள் ஒன்றன் அருகில் ஒன்றாகப் பறக்கின்றன.
அருகில் யாரோ பேசும் குரல் கேட்கின்றது. திரும்பிப் பார்க்கின்றேன். ஆணும் பெண்ணுமாக ஒரு சிங்களச் சோடி, தமக்குள் ஏதோ கதைத்துச் சிரிக்கின்றனர்.
எனக்குள் அவளின் நினைவு முகிழ்கின்றது. வாசலைப் பார்க்கின்றேன். ஒரு பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொள்கின்றேன். கனவுலகில் நிகழ்வதுபோல, அவளைச் சந்தித்துப் பழகிய அந்த நிகழ்ச்சிகள் மனதில் விரிகின்றன.
ஏதோவொரு பத்திரிகை நடாத்திய கட்டுரைப் போட்டியொன்றில் பங்கு பெறுவதற்காக, ‘ஒரே உலகம்’ என்ற கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தேன். மனித இனப் பாகுபாடுகளைப்பற்றி தீவிரமாகச் சிந்தித்து அதை எழுத்தில் பதித்துவிட்டு நிமிர்கின்றேன். அவள் என்னருகில் இருந்து சிரிக்கிறாள். அந்தச் சிங்களப் பெண்ணை எனக்கு இதற்கு முன்பு தெரியவே தெரியாது. எனவே, நான் மருள்கின்றேன்.
அவள் சிரிக்கிறாள்; நான் முறைக்கிறேன். நான் எழுதுவதைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தபடியால், அவள் என்னருகில் வந்திருந்ததை நான் கவனிக்கவில்லை. அப்பாலிருந்த கதிரைக்கு நான் நகர்கின்றேன்.
அவள் மீண்டும் பலத்துச் சிரிக்கின்றாள். ‘என்ன என்னுடன் கோபமா’ என்று, தனக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் வினாவுகிறாள்.
அவள் தமிழ் பேசுகின்றாளே என்ற வியப்பு ஒருபுறம்; அத்தோடு, இப்படி அடக்க ஒடுக்கமில்லாமல் இதற்குமுன் அறியாத ஆண்களுடன் நெருங்கிப் பழகுகின்றாளே என்ற வெறுப்பு ஒரு புறம். எனக்கு இதுவொன்றும் பிடிக்காது. நான் பெண்களுக்கு நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பவன்.
அவள் முகம் சுருங்குகிறது. என்னை ஒரு மாதிரி முறைத்துப் பார்த்துக்கொண்டே, ‘உங்களுக்குச் சிங்களப் பெண்களையே பிடியாதா’ என்கின்றாள்.
என் நெஞ்சம் அதிர்ந்தது. உலகில் வேண்டாத மத, இன பாகுபாடுகளை நோக்காது, ஒரே உலகமாகக் காணவேண்டுமென்ற இலட்சியம் கொண்டவன் நான், அந்த இலட்சியத்திற்காகவே என் வாழ்வை அர்ப்பணிப்பது என்று திட சங்கற்பம் பூண்டுள்ளேன். கொள்கைகள், கோட்பாடுகள் என்றெல்லாம் வாயளவில் பேசாது அவையை வாழ்க்கையிலும் காட்டுவேன் என்று நான் என் குருவாக நேசிக்கும் என் கிராமத்து வாத்தியாருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேன் அதற்கு இதுவொரு சோதனையா?
என் நெஞ்சில் அவளின் செய்கைகளினால் ஏற்பட்ட வெறுப்பை அடக்கிக்கொண்டு, ‘நான் அந்தப் பாகுபாடுகளைப் பார்ப்பதில்லை’ என்று திடமான குரலில் கூறுகின்றேன்.
அவள் முகம் மலர்கின்றது. “அப்போ ஏன் என்னுடன் கதைக்காதிருக்கின்றீர்கள்” என்கிறாள்.
அவளது அரைகுறைத் தமிழ் உச்சரிப்பைப் பார்க்க எனக்குச் சிரிப்பு வருகின்றது. நான் அதை அடக்கிக்கொண்டே ‘பெண்கள் ஆண்களுடன் நெருங்கிப் பழகுவதை நான் விரும்புவதில்லை’ என்கின்றேன்.
அவள் மீண்டும் சிரித்துக்கொண்டே சொல்கின்றாள், “பெண்களும் மனிதர்களாகப் பிறந்த சென்மங்கள்தான்; ஆண்களுக்கிருக்கின்ற உணர்ச்சிகள் பெண்களுக்கும் இருக்கும். ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் உலகம் இயங்கும். சமுதாயம் முன்னேறுகின்ற போது, காலத்திற்கொவ்வாத கொள்கைகளை நீக்கி, காலத்தோடு ஒட்டி முன்னேறவேண்டும்.”
அவள் சொன்ன கருத்துகள் என் மனதில் தெட்டத்தெளிவாகப் படிகின்றன. ‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்; ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்’ என்ற கவிதையடிகள் என் மனதில் தோன்றி மறைகின்றன.
நான் என்னை மறந்தவனாக, ‘நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்’ என்கிறேன். அவள் உரிமையோடு என்னருகில் வந்தமர்கின்றாள்.
தொடர்ந்து என்னைப் பற்றி விசாரிக்கின்றாள். என் பெயர், எனது கொள்கைகள், இலட்சியங்கள், எனது குருவான கிராமத்து வாத்தியார் இவற்றைப் பற்றியெல்லாம் நான் கதை கதையாக அவளுக்குச் சொல்கின்றேன்.
தன் பெயர் ‘பிரேமலதா’ என்று கூறி, எனக்குத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவள் “என் கொள்கை இலட்சியங்களும், உங்கள் கொள்கை இலட்சியங்களும் ஒன்றே; நீங்களும் நானும் இணைந்து செயலாற்றினால் அவற்றை அடையலாம்” என்று கூறி அர்த்த புஷ்டியுடன் சிரிக்கின்றாள்.
என் அருகில் செருப்புச் சத்தம் கேட்கின்றது. அவள் வந்துவிட்டாளோ என்ற ஆவலில், இன்பமயமான அந்த நினைவுகள் கலைய நிமிர்ந்து பார்க்கின்றேன். நண்பன் சுகுமாரன் நின்றுகொண்டிருந்தான். எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
என் பக்கத்திலிருந்த நாற்காலியில் அவன் இருந்தான். அவனின் முகம் கடுகடுப்பாக இருந்தது.
நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதானா என அவன் திடீரென என்னைப் பார்த்து வினாவுகின்றான்.
நான் எனக்குள் சிரிக்கின்றேன்.
“நீ என்ன கேள்விப்பட்டாய் என்று எனக்கு எப்படித் தெரியும்” என்கின்றேன்.
“நீ ஒரு சிங்களப் பெண்ணை விரும்புகிறாயாம்; அவளைத்தான் கலியாணம் செய்வாயாம், இதுவெல்லாம் உண்மைதானா” என்கிறான் அவன்.
“நீ சொல்வதெல்லாம் முழுக்க முழுக்க உண்மை; அவற்றைப் பற்றி நீ சந்தேகமே கொள்ளவேண்டாம்” என்கிறேன் நான்.
அவன் என்னை முறைத்துப் பார்க்கின்றான்.
“நீ உனது சமூகத்தைவிட்டு, வேறு சமூகத்திற்குப் போவதை நாங்கள் விரும்பவில்லை. அப்படி நீ போனால் உன் சமூகத்திற்கு தீங்கு செய்தவனாவாய்”.
“அப்படிச் செய்வதினால் ஒருவித தீங்கும் வரமாட்டாது. நமது நாட்டிற்கு மிகமிக இன்றியமையாத தேசிய ஒற்றுமைக்கு இதைப் போன்ற சம்பவங்கள் வழிவகுக்கும். அதுவுமன்றி என் மனம் அவளிலே படிந்துவிட்டது. இன, மத வேறுபாடுகள் உண்மையில் வேறுபாடுகளல்ல; எந்த இனத்தினனாக மதத்தினனாக இருந்தாலும், மனிதனது உணர்ச்சிகள் எல்லோருக்கும் ஒன்றாகத்தானிருக்கும்”.
“ஈழத்து வரலாற்றைப் புரட்டிப்பார்; இங்கு இருக்கும் சமூகங்கள் ஒற்றுமையாக வாழவில்லை என்பதற்கு சரித்திரமே சான்று தருகின்றது” என்கிறான் நண்பன்.
எனது உணர்ச்சி பொங்கிப் பிரவாகித்தது. தங்கள் தங்கள் சுயநலத்திற்காக, மனித இனத்தில் வேண்டாத பிளவுகளை ஏற்படுத்தி அட்டூழியம் செய்பவரை நினைத்து என் நெஞ்சு கொதித்தது. நான் என்னை மறந்தவனாகக் கத்துகின்றேன். “நண்பா! மனித இன வரலாற்றைப் பார்; நான், எனது குடும்பம், எனது கிராமம், எனது சமூகம் எனப் படிப்படியே விரிந்து செல்லும் மனித உணர்ச்சி ‘எனது நாடு’ என்ற இலட்சியத்தை அடையவேண்டும். காலப்போக்கில் ‘ஒரே உலகம்’ என்ற இலட்சியம்கூடக் கைகூடும்”.
“அப்போ, நீ நினைத்த மாதிரித்தான் செய்வாயா?”
நான் ஆமெனத் தலையசைத்தேன்.
“நீ அவளை அடைகின்ற விதத்தை நானுந்தான் இருந்து பார்க்கப் போகின்றேன். உன்னைப் போன்றவர்கள் எமது சமூகத்தில் இருப்பதினாற்றான், எம் சமூகம் முன்னேற முடிவதில்லை. நீ ஒரு சமூகத்துரோகி” என்று சூளுரைத்து அவ்விடத்தைவிட்டு அகல்கின்றான் அவன்.
மாலை மங்கி இருளும் நேரம் வந்தது. ‘அவளுக்கும் என்னென்ன இடைஞ்சல் ஏற்பட்டிருக்குமோ? இனி அவளை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் பயனில்லை’ என்றெண்ணி நானும் எழும்பி, என் இருப்பிடத்தை நோக்கி நடக்கலானேன்.
தம் இலட்சியப் பயணத்தில் எத்தனை எத்தனையோ எதிர்ப்புகளைப் பெற்று, அந்த இலட்சியங்களுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்த மகா புருஷர்கள், என் மனதில் தோன்றி எனக்கு ஆறுதல் அளித்துச் சென்றார்கள். எனது இலட்சியப்பாதை கரடுமுரடானதென்பதை நான் இன்றுதான் உணர்ந்துகொண்டேன்.
பிரதான பாதையால் இறங்கி, என் இருப்பிடத்திற்குச் செல்லும் சிறிய பாதையில் மரங்களடர்ந்த பகுதியில் சென்றுகொண்டிருந்தேன்.
‘டேய் நில்லடா’ என்றோர் குரல் கேட்டது. தொடர்ந்து பல குரல்கள் கேட்டன. தமது சமுதாய வளர்ச்சியில் தளரா ஊக்கம் கொண்ட என் அருமை நண்பர்கள், தமது சமூகத்தினனான என்னைக் கல்லாலும் பொல்லாலும் தாக்குகின்றார்கள்.
என் தலை சுற்றியது. நான் மயங்கி விழுகின்றேன். நான் கண்ணைத் திறந்தபோது வட்டவடிவமான அவளின் முகமே தெரிகின்றது. அவளின் கண்களில் கண்ணீர்த் துளிகள் பளிச்சிடுகின்றன. நான் அவளின் கால்களில் தலைவைத்துப் படுத்துக் கொண்டிருக்கின்றேன்.
நான் எழும்புகின்றேன்; அவளும் எழும்புகிறாள்; “பலமாகத் தாக்கிவிட்டார்களா” என்கிறாள் அவள்.
“இல்லை பிரேமலதா” என்கின்றேன்.
நாம் கைகோர்த்துக் கொண்டு நடக்கின்றோம்.
அருகிலிருந்த புத்தர் சிலை எம்மை ஆசீர்வதிப்பதுபோல் புன்னகை புரிந்து நிற்கின்றது.
வட்ட நிலா, மனித சாதி முழுவதற்குமே நிலவைப் பொழிகின்றது.
என் மனதில் என் குரு வந்து பேசுகின்றார். “மத இன வேறுபாடுகள் உண்மையான வேறுபாடுகளல்ல; மனிதன் எங்கே எப்படி வாழ்ந்தாலும் அவன் உணர்ச்சிகள் ஒன்றே; மனிதன் மத இன உணர்வுகளால் வெறிகொண்ட வெறியனாக வாழாது, மனிதனாக வாழ்ந்தால் அவன் உண்மையில் தெய்வமாகின்றான்.” நான் அவளின் கையை இறுகப் பற்றியவாறே நடக்கின்றேன்.
– 19-12-1966, சுதந்திரன்(1947-1983 ஈழத்திலிருந்து வெளியான ஒரு வார இதழ்)
– உதிரிகளும்…(சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: ஆவணி 2006, புதிய தரிசனம் வெளியீடு.