கண்ணாடி முன் நின்ற மாலதி ஒரு தடவைக்கு இரு தடவையாக முகத்துக்குப் பவுடரை ஒற்றிக் கொண்டாள். நெற்றியில் உள்ள ஸ்டிக்கர் பொட்டை சரி செய்து கொண்டாள். புடவை ப்ளீட்ஸை ஒழுங்குபடுத்தி, மேலே அடுக்கிப் பின் பண்ணிக் கொண்டாள்.
கண்ணாடியில் தன்னைப் பார்த்துத் திருப்திப் பட்டுக் கொண்டாள். இன்னும் கூட ஷாம்புபோட்ட தலையில் சைடில் ஒரு ரோஜாப் பூவைக் குத்தினாள் இளமையாக இருக்குமோ? தன்னை மறந்து நிற்கையில்…
“ஃபெண்டாஸ்டிக் ரொம்ப ப்யூட்டிபுல்லா இருக்கீங்க மேடம்” பின்னால் கேட்ட குரலால் திடுக்கிட்டுத் திரும்பினாள் மாலதி.
அவள் வகுப்பு மாணவி அனுராதா என்கிற அனுதான் அப்படிப் பாராட்டியது, மாலதிக்கு அவமானத்தால் முகம் சிவந்து போனது. யாரோ அவளுடைய அந்தரங்கத்தைத் தொட்டமாதிரிக் கூசிக் குறுகிப் போனாள்.
ஒரு ஆசிரியை அதாவது முப்பத்தைந்து வயது, தகுதியில்லாத செயலைச் செய்து விட்டோமோ என்ற மனக் குறுகுறுப்பில் காட்டமாகப் பேசினாள்” சரி, சரி காம்போஸிஷன் நோட்டை எடுத்துட்டுப்போ”
“மேடம், நீங்க வரலையா…?”
“சொன்னதைச் செய், அதிகப் பிரசங்கித்தனம் வேண்டாம்”
எதிர்பாராத அந்த அடியால் முகமும், அகமும் சுருங்கிப் போன அனு தலை குனிந்தபடியே வெளியேறினாள்.
மாலதிக்குப் பாவமாக இருந்தது. சின்னப் பெண்தானே! நான் ஏன் இப்படி என் உணர்ச்சிகளைக் காட்டணும். உண்மையிலேயே அவள் அழகாயிருக்கீங்கன்னு சொன்னது என் மனதுக்குச் சந்தோஷம் தராமலா இருந்தது? பின் ஏன் இப்படி எரிந்து விழுந்தேன்? ஏனிந்தப் போலிவேஷம்? பலவாறாக சிந்தித்துக் கொண்டிருக்கையில் அம்மா அவளைக் கலைத்தாள்.
“டிபன் ரெடியாயிட்டு, கிளம்பலையா?”
மீண்டும் ஒரு முறை அனிச்சையாகக் கண்ணாடியைப் பார்த்தவாறே புறப்பட்டாள்.
சே! நான் ஏன் கொஞ்சநாளா இப்படி மாறிப் போயிட்டேன்! புடவைக்குத் தகுந்தமாதிரி மாட்சா ஜாக்கெட் போட்டுக்கொள்ள விரும்பாத நானா இப்படி அலங்காரியாகி விட்டேன்! எல்லாம் அந்த பிரபாகருக்காகத்தானோ? அவரை நினைக்கையில் மனசுக்குள்ளேயே சாறலடித்தது.
அடுத்த கணமே அவளுக்கே இயல்பாய் உள்ள ஈகோ சிலிர்த்து எழும்பியது. நான் என்ன டீன் ஏஜ் பெண்ணா? கவிஞர்களின் வார்த்தையில் சொன்னாள்… நான் ஒரு பேரிளம் பெண். என்னுடைய அறிவுக்கும், புத்திசாலித்தனத்துக்கும் இப்படி ஒரு அசிங்கம் வரலாமா? அவள் ஈகோ அவளைக் கண்டித்தது. வலுக்கட்டாயமாக மனசை அதிலிருந்து பிரித்தெடுக்க முயற்சிக்கையில்…
எதிரே பிரபாகர். தூய வெள்ளைப்பேண்ட், மேலே சின்னக் கட்டம் போட்ட ஸ்லாக்கும், இதழ்களில் சின்ன சிரிப்புமாக, அப்பா! இந்த நாற்பது வயதிலும் எப்படி இருக்கிறார்!
மாலதியைப் பார்த்த மகிழ்ச்சியில் கண்களும், மனசும் விரிய பிரபாகர் “குட்மார்னிங்” சொன்னார்.
“மார்னிங்” எண்ண ஓட்டத்தை நிறுத்தி, தன் உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு சொல்லிவிட்டு சட்டென அந்த இடத்தை விட்டகன்றாள் மாலதி.
பிரபாகருக்கும் அதே எண்ணம் தான்! இந்த நாற்பது வயதுவரை கல்யாணமே வேண்டாம் என்றும், கல்யாணம் செய்து கொள்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும் நினைத்து எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடங்கொடாமல் வாழ்ந்துவிட்டார். பாங்க் ஆபீஸராகக் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு, பல பெண்கள் குறுக்கிட்டபோதும், பலர் எடுத்துச் சொன்ன பொழுதும் அசங்காத அவர் இதயம் மாலதியைப் பார்த்ததலிருந்து ஆடிப்போனது என்னவோ நிஜம்தான்.
விடுமுறைக்காகக், கொடைக்கானல் வந்தபோது ஒரு மாதம் தங்கலாம் என நினைத்துத்தான் வந்தார். ஆனால் மாலதியைப் பார்த்ததிலிருந்து தன் முடிவை மாற்றிக்கொண்டு, தன் விடுமுறையை இன்னும் பதினைந்து நாட்களுக்கு விரிவு படுத்தினார்.
கொடைக்கானல் அவர் மனதிற்கு நிம்மதி அளித்ததோ, என்னவோ, மாலதி அவருக்கு மகிழ்ச்சியே அளித்தாள். தன்னையறியாமலேயே தன் மனம் அவளைப் பற்றி நினைப்பதை அறிந்து அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. புத்தகங்களைப் பற்றிய கருத்துப் பரிமாறலில் தான் அவர்கள் நட்பு ஆரம்பமானது. இப்போது அதுவே கனிந்து அவரைத் தகித்துக்கொண்டிருந்தது.
இதை எப்படி மாலதியிடம் சொல்வது! அவளோ அவரை, அறிவும், பண்பும் நிறைந்த ஒரு மாமனிதராக நினைத்துக் கொண்டிருக்கிறாள். இந்தச் சமயத்தில் தன் அன்பை வெளியிட்டுச் சே! இவரும் சராசரிதானா! என்று மட்டமாக நினைத்துவிட்டால், நட்பும் அல்லவா பறிபோயிடும் நினைக்கவே அருவருப்பாக இருந்தது. யாராவது நண்பர்கள் இருந்தாலாவது சொல்லி யோசனை கேட்கலாம். அவருடைய அஞ்ஞான வாசத்திலே நண்பர்களுக்கும் பஞ்சம்.
பலவாறாக எண்ணிக் குழம்பித் தவித்தார் பிரபாகர்.
மாலதிக்கு மட்டும் என்ன? அவளுக்கும் பள்ளியிலே இருப்புக் கொள்ளவில்லை. அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தாள். எப்பொழுது பள்ளி முடியும், பிரபாகரைப் பார்ப்போம் என்ற தவிப்பில் அறிவுக்கும், உணர்ச்சிக்கும் ஒரு பெரிய போராட்டமே நடந்து அவளை அரித்துக் கொண்டிருந்தது.
மாலை, நுhலகத்தில் சந்திக்கும் பொழுது இரண்டு பேருடைய நிலைமையும் சரியில்லை. பிரபாகருக்கு யோசித்து, யோசித்துப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. இனி மேலும் இந்த நிலைநீடித்தால்… தன்னுடைய நிலைமை மிகவும் கீழிறங்கிவிடும் என்பதை உணர்ந்திருந்ததால் அந்தச் சூழ்நிலையைத் தவிர்க்க எண்ணி, “நான் நாளை ஊருக்குப் புறப்படுகிறேன்” தொண்டைக் கரகரப்புடன் சொன்னார்.
அந்த நிமிடத்தில்-
உள்ளுக்குள் உடைந்து போனாலும், வெளியில் வழக்கமான ஈகோ முன்னின்று “சரி, வாங்க” என்று எந்தவிதப் பாதிப்பும் இல்லாதவள் போல் சொன்னாள்.
சே! எப்பேர்ப்பட்ட தப்பு செய்ய இருந்தோம்! நான் மட்டும் என் நிலைமையைச் சொல்லியிருந்தால்…. எத்தனை கீழ்மைப்பட்டுப் போயிருப்போம். அவளே விரும்பாதபோது நான் மட்டும் ஏன் இப்படி தவித்துப் போகிறேன். பிரபாகர் தன் கடைசி அம்பை உபயோகித்தும் அவள் மனசைப் படிக்க முடியாமல் ஏமாற்றத்தால் சோர்ந்துபோனவராய் நடந்தார்.
இதே ரீதியில் மாலதியும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர முடியாமல், தவித்து, புலம்பி, குழம்பிப் போனாள்.
காலையில்-
என்ன முயன்றும் முடியாமல் அவள் கால்கள் போன பின்னாலேயே மனமும் நடந்தது அவளுக்கே வியப்பாக இருந்தது.
பிளாட்பாரத்தில் நின்று சுற்றும், முற்றும் பார்வையைச் சுழல விட்ட மாலதியின் கண்கள் குறிப்பிட்ட ஓர் இடத்தில் நிலை குத்தி நின்றன.
ரயில் புறப்பட இருக்கும் இந்த நேரத்திலாவது தன்னைப் போகவேண்டாம் எனச் சொல்ல வரமாட்டாளா என்ற ஏக்கத்தோடு காபியை உறிஞ்சிக் கொண்டிருந்த பிரபாகர், தன்னை யாரோ உற்றுப் பார்ப்பது போல உணர்ந்ததால், பார்வையை ஓடவிட்டபோது…. தூரத்தில் நின்ற மாலதி பட்டாள்.
மன உற்சாகத்தோடு அவள் இருந்த திசைக்கு ஓடிவந்த பிரபாகர் “ஹலோ, மாலதி எங்கே இப்படி?” என்றார்.
“உங்களைப் பார்க்கத்தான்” என்று வாய்வரை வந்த வார்த்தையை, அந்தரங்கத்தை அலட்சியப்படுத்திவிட்டு” என் சிநேகிதியை ரயிலேற்றிவிட வந்தேன் என்றாள்.
“அதுக்குத்தான் வந்தீங்களா? சரி மாலதி! நேரம் ஆயிட்டு, விசில் ஊதிட்டான், வரேன் பை, பை” என்று ஓடிப்போய் ரயிலில் தொற்றிக் கொண்டார் ஏமாற்றத்தோடு.
ரயில் மெல்ல நகர்ந்தது. போகாதீங்கள்னு மாலதி சொல்லமாட்டாளா என்று பிரபாகரும், நீயும் என்னுடன் வந்துவிடேன் என்று சொல்லமாட்டாரா என்று மாலதியும் கண்களில் நீர்வழிய நின்றபடியே ரயில் மறைந்த பின்னும் கையைக் காட்டிக்கொண்டிருந்தனர் தங்களை மறந்து.
இரண்டு பேருமே மனசுக்குள்ளேயே வேலிபோட்டுக் கொண்டு வெளியே வரமுடியாமல் ஈகோவினால், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வெந்து, மடிந்து, சாம்பலாகி ஜென்மம் பூராவும் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
– 09 / 08 / 1989