மனதில் விழுந்த கீறல்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 21,343 
 
 

அவ்வை அப்படி ஒரு தீர்மானத்தை எடுப்பதற்காக தன் மனதுக்குள் பகீரதப் பிரயத்தனம் எடுத்து போராடிக் கொண்டிருந்தாள் . நாளைக்குள் அப்படி தான் எடுத்த அந்த தீர்மானத்தை ஜெகனுக்கு தெரிவித்துவிட வேண்டும் என்று அவள் மனதுக்குள் மிக உறுதியாக இருந்தாள் . அந்த தீர்மானம் தான் அவளது எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையப்போகின்றது என்பதை தீர்மானிக்கப்போகிறது . எனினும் அது சட்டென்று தீர்மானித்து விடக்கூடிய ஒரு விஷயம் அல்ல . அது ஆறு ஜீவன்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டுள்ள ஒரு விடயமாகும்.

அவளது தந்தை ஒரு தமிழ் வாத்தியார். அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென்று இறந்து போய்விட்டார். அவளுக்கு இப்போது இருபத்தி ஒரு வயதாகிறது . அவளுக்கு 14 வயது இருக்கும்போதே அவளது அம்மா இறந்து போய்விட்டார் . அதன் பிறகு அவளையும் அவளது இரண்டு தங்கைகள் இரண்டு தம்பிகள் எல்லோரையும் அவளது அப்பாவே எந்தவித குறையும் இல்லாமல் கவனித்துப் பார்த்து கொண்டார் . அப்பாவும்கூட அவர்கள் ஐந்து பேரையும் அனாதைகளாக விட்டுவிட்டு இறந்து போய் விட்ட பின்னர் முழு குடும்ப பொறுப்பையும் அவளே ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது . அவள் அம்மா ஸ்தானத்தில் இருந்து அவளது தம்பி தங்கைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.

அவளது தம்பிகளும் தங்கைகளும் இப்போதும் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தார்கள் . அவர்களுக்கு அப்பாவின் சிறிய ஓய்வு ஊதிய சம்பளம் கிடைத்த போதும் அது குடும்பத்தை நடத்த போதுமானதாக இருக்கவில்லை . எனவே அவளும் ஒரு வேலையில் சேர வேண்டிய கட்டாய நிலையில் காணப்பட்டாள்.

இதெல்லாம் எப்படி இருக்க அவ்வை ஜெகன் மோகனை மூன்று வருடத்துக்கு முன்னால் ஒரு வைபவத்தில் சந்தித்து ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். அவன் ஒருவிதத்தில் அவர்களுக்கு தூரத்துச் சொந்தக்காரன் . அவர்கள் இருவரும் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்கிடையே ஏதோ பல ஜென்மங்களாக உறவு காணப்பட்டது போல் மிக நெருங்கிப் பழகிக் கொண்டார்கள் . அவர்களது அந்த பழக்கம் விரைவிலேயே காதலாக மலர்ந்தது . இந்த விஷயம் அவருடைய அப்பாவுக்கு தெரிய வந்த போதும் அவன் ஒரு விதத்தில் அவர்களுக்கு தூரத்து சொந்தம் என்பதாலும் அவள் அம்மாவின் துணையின்றி வளர்ந்தவள் என்பதாலும் அவள் விரும்பியபடியே அந்த காதலை அவரகளது தந்தை ஆட்சேபிக்காமல் விட்டுவிட்டார். இப்போது அந்த காதல் நன்கு கனிந்து ஒருவருடன் ஒருவரை பிரிக்க முடியாத விதத்தில் பிண்ணிப் பிணைந்து போய் காணப்பட்டது.

அவளது அப்பா இறந்து போன போது கூட ஜெகனும் அவனது நண்பர்களுமே அப்பாவின் இறுதிக் கிரிகைகள் தொடர்பான எல்லா காரியங்களையும் தலை மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு செய்து முடித்தனர். தனக்கு உதவவென்று யாரும இல்லாதிருந்தத நிலையில் ஜெகன் உடனிருந்து எல்லா காரியங்களையும் கவனித்துக் கொண்டது அவளுக்கு மிக ஆறுதலாக இருந்தது . வர வர அவர்களுக்கிடையில் இருந்த நெருக்கம் அதிகரித்ததன்றி ஒரு போதும் இடைவெளி ஏற்படவில்லை . இருந்தாலும் தனது காதல் உறவை விட தொப்புள்கொடி உறவுகளே உயர்ந்தவை என அவள் மனம் தீவிரமாக யோசித்தது . ஜெகனை திருமணம் செய்து கொண்டால் தமக்கென்று ஒரு குடும்பம் ஏற்பட்டுவிடும். அதன் பின்னர் தனது தங்கைகளும் தம்பிகளும் என்ன செய்வார்கள் . அவர்களை யார் பார்த்துக் கொள்வது ? போன்ற கேள்விகள் அவள் மனதில் பூதம் போல் எழுந்தன . அந்த பூதம் ஜெகன் மீதான அவளது காதலை தனது ராட்சத நகங்களால் கீறி இரத்தம் சொரிய வைத்தது வேடிக்கை பார்த்தது . அவள் அவனை நினைத்து நினைத்து தன் மனதாலும் உடலாலும் கூனிக் குறுகிகொண் டிருந்தாள் . அவளுக்கு இந்த விஷயத்தில் ஆலோசனை கூறவும் ஆறுதல் அளிக்கவும் யாரும் அருகில் இருக்கவில்லை . எனவே அவள் தனக்குள்ளேயே சிந்தித்து ஒரு முடிவெடுக்க வேண்டிய நிலைக்குகை தள்ளப்பட்டிருந்தாள்.

இந்த நிலைமையில்தான் ஜெகன் இது தொடர்பில் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று கூறி அவளை நெருக்கடிக்கு உள்ளாக்கினான் . அவன் கூறுவதிலும் ஒரு உண்மை இருந்தது . ” நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் உனது தம்பி தங்கைகளுக்கு நாம் இருவருமே தாயும் தந்தையும் ஆக இருக்கலாம் ” என்று அவன் கூறினான் . ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று அவளுக்கு விளங்கவில்லை . சிலவேளை கதைகளிலும் சினிமாக்களிலும் அது சாத்தியமானதாக இருக்கலாம் . ஆனால் நிஜ வாழ்வில் அப்படியெல்லாம் செய்ய முடியுமா என்பது அவளுக்கு புதிராகவே இருந்தது . அப்படியே எண்ணி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் கூட அவர்கள் இருவரும் இணைந்து மாத்திரம் ஒரு குடும்பம் ஆகிவிட முடியாது என்பது அவளுக்குப் புரிந்து தான் இருந்தது . அவர்களுக்கென ஒரு குழந்தை பிறக்கும்போது இயல்பாகவே அவளது தம்பி தங்கைகள் ஒதுக்கப்பட்டு அனாதரவாக விடப்பட்டு விடுவார்கள் என அவளது மனது கூறியது . அந்த எண்ணமே அவள் மனதில் சிறிது சிறிதாக வலுத்து அவளுக்கு தீர்மானமொன்றை எடுக்க முடியாதபடி தடுத்துக் கொண்டிருந்தது . இருந்தாலும் இந்த நிலையை இப்படியே நீடித்து விடமுடியாது என்பதும் அவளுக்கு தெரிந்து தான் இருந்தது.

பொழுது இன்னும் முற்றாக விடிந்திருக்கவில்லை . அன்று ஒரு லீவு நாள் ஆதலால் பிள்ளைகள் இன்னும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க வில்லை. அவள் கட்டிலிலிருந்து எழுந்து இருந்து வெளியே வந்தாள் . இன்னும் முன்னறையில் தம்பி தங்கைகள் எல்லொரும் வரிசையாக உறங்கிக் கொண்டிருந்தனர் . அவர்கள் போர்த்தியிருந்த போர்வைகள் உடல்களில் இருந்து விலகி எங்கோ ஒதுங்கிப் போய் கிடந்தன . தலைகள் தல காணிகளில் இருக்கவில்லை . அவர்களின் இந்த அலங்கோலமான தோற்றத்தைப் பார்த்து அவர்கள் மீது மிகுந்த பச்சாதாப உணர்வு அவள் மனதில் ஏற்பட்டது . அவள் அவர்களின் போர்வையையும் தலகாணிகளையும் சரி செய்தாள் . அவளது சின்ன தங்கச்சிக்கு இப்போதுதான் ஏழு வயதுதான் ஆகிறது. அவர்கள் எல்லோருமே இன்னமும் உலகம் தெரியாத சின்னஞ்சிறுசுகளாகவே இருந்தார்கள் . அவர்களைத் தனியாக விட்டுவிட்டு அவளால் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ற கேள்வி அவளைப் பார்த்து எள்ளி நகையாடியது.

அவள் சற்றே நிமிர்ந்து பார்த்தாள் . சுவரில் தொங்கிய அவளது தந்தையின் படத்தில் அவர் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தார் . அவர் அந்த ஊரிலேயே சிறந்த தமிழ் வாத்தியார் என்று புகழ் பெற்றிருந்தார் . இப்போதும்கூட அவரிடம் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஊருக்கு வந்தால் பரிசுகளுடன் அவரை வந்து பார்த்து வெட்டு செல்ல தவறுவதில்லை. அவர் படிப்பித்த மாணவர்கள் இன்று சமூகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பெரிய மனிதர்களாக உருவாகி யிருந்தனர் . அதன் காரணமாக அவளுக்கும்கூட ‘ வாத்தியார் மகள் ‘ என்ற ரீதியில் அந்த ஊரில் தனியான மதிப்பும் மரியாதையும் இருந்தது . அவள கூட தன் தந்தையிடமிருந்து அவரது எல்லா நற்பண்புகளையும் வரித்துக்கொண்டே பிறந்திருந்தாள்.

அவள் எல்லா விடயங்களையும் சீர்தூக்கி பார்த்து மனக்கணக்கு போட்டு கூட்டி கழித்து பார்த்தாள் . அவளுக்கு ஒரு விடயம் தீர்மானமாக விளங்கியது . தனது தம்பி தங்கைகளின் படிப்பு முடிந்து அவர்களை ஆளாக்கி வாழ்க்கைக்குள் நுளைய இன்னும் ஒரு பத்து பன்னிரண்டு வருடங்கள் சரி ஆகலாம் . அதுவரை ஜெகனுக்கும் அவளுக்கும் இடையில் திருமணம் என்று ஒன்று ஏற்பட சாத்தியப்பாடுகள் இல்லை . அதன்பிறகும் அப்படி ஒன்று நடக்குமா என்பதைப் பற்றி அப்போது யோசித்துக் கொள்ளலாம். உண்மையில் அவள் மீது ஜெகனுக்கு உண்மையான காதல் இருந்தால் அவன் எத்தனை வருடங்கள் ஆனாலும் காத்திருப்பான் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது . இந்த முடிவை அவள் எட்டியபோது அவள் மனது மிக தெளிவாக இருந்தது . அவள் மனதுக்கு அது நிம்மதியாகவும் ஆறுதலாகவும் இருந்தது . அதிலுள்ள அர்ப்பணிப்பையும் சந்தோஷத்தையும் தனது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் பெற முடியும் என்று அவள் கருதவில்லை.

அவள் களைந்து போயிருந்த தன் நீண்ட தலைமுடியை கோதி சரி செய்து கொண்டையாக போட்டுக் கொண்டு கதவைத் திறந்து வெளியில் வந்தாள். தூரத்து வானத்தில் கதிரவனின் செம்பொற் கிரணங்கள் இப்போதுதான் வியாபிக்க ஆரம்பித்திருந்தன . தென்னை மரத்தில் இரண்டு மைனாக்கள் குலாவிக் கொண்டிருந்தன. வானம் நிர்மலமாகவும் நிச்சலனமாகவும் இருந்தது . அவள் மனதை போல.

Print Friendly, PDF & Email
இலங்கையின் மூத்த தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் கவிஞருமான இரா.சடகோபன் அவர்கள் நாவல் நகர் என்று சிறப்பாக அழைக்கப்படும் மலையகத்தின் மத்தியில் இருக்கும் சிறு நகரமான நாவலபிட்டியின் அருகில் அமைந்துள்ள மொஸ்வில்ல தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர். மொஸ்வில்ல தோட்ட பாடசாலை,நாவலப்பிட்டிய கதிரேஷன் கல்லூரி ஆகியவற்றில் கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப்பட்டத்தை பெற்றதோடு இலங்கை சட்டக்கல்லூரிக்கும் பிரவேசித்து சட்டத்தரணியாகி தன் உழைப்பால் உயர்ந்தவர். கவிஞராக,பத்திரிகை ஆசிரியராக,மொழி பெயர்ப்பாளராக,சமூக…மேலும் படிக்க...

1 thought on “மனதில் விழுந்த கீறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *