பேசாப்பொருள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 4,905 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வட்ட முகம், பெரிய கண்கள், கொஞ்சம் ஏறு நெற்றி, ஏதாவது பேச மாட்டாளா என ஏங்க வைக்கும் உதடுகள், ஊஞ்சலாடும் காதணிகள், சின்னப் பொட்டு, பொட்டிற்கு மேல் திருநீறு, அதற்கு மேல் இடம் இருந்தால் கொஞ்சம் சந்தனம், கொஞ்சம் பூசினார் போல உடலமைப்பு, திராவிடப் பெண்களுக்கான மாநிறம் … இவைதாம் தமிழ் பேசும் சராசரி ஆண்களுக்குப் பிடித்த யுனிவர்சல் அடையாளங்கள். நான் தமிழ் பேசுபவன், சராசரி ஆணும் கூட !!! அதனால் அம்முவைப் பிடித்து இருந்தது.

எந்த மொழியில் அழுதால் துக்கம் தீருமோ, அந்த மொழியில் காதலும் காமமும் செய்வதே ஆனந்தம். கடந்த மூன்று வருடங்களாக கரை கண்ட காமமும், காமத்தை ஒட்டியக் காதலும் கண்ட ஒரே குறை, அவை தமிழைத் தவிர்த்த பிறமொழிகளில் இருந்ததுதான்.

அழகுத்தமிழில் “நீங்க அழகா இருக்கீங்க” எனச் சொல்லுவதை மறந்து போய் இருந்த நிலையில் தான் அம்முவைச் சந்தித்தேன். . சந்தித்த மூன்றாம் நாள் வெகு இயல்பாக அதை அவளிடம் சொல்லியும் விட்டேன்.

நான் விரும்பும் பெண்களுக்கு, எனக்குப்பிடித்த எல்லாமே பிடிக்க வேண்டியக் கட்டாயம் இல்லை. பிடிக்காமல் கூட இருக்கலாம், ஆனால் அவை எல்லாம் எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதை குறைந்த பட்சம் புரிந்தாவது வைத்திருக்க வேண்டும்.

முதல் பத்தியில் சொல்லி இருந்த அடையாளங்களுடன் அம்முவிற்கு கிரிக்கெட் புரிந்திருக்கிறது, பிரபாகரன் பார்க்க வசீகரமான மனிதர் என்பதைக் கடந்து, அவரின் போராட்டங்களைக் கடந்து, போராட்டங்களுக்கான காரணங்களும் புரிந்திருக்கிறது. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன் என்பதோடு நிற்காமல், பயிருக்கு சொட்டு நீராவது ஊற்றும் சமுதாய உணர்வும் இருக்கின்றது. அவளுக்கு என்னையும் பிடித்து இருக்கின்றது. நான் போகும் ரயிலிலும் ஏறத் தயாராகவும் இருக்கின்றாள். பின்ன என்ன பிரச்சினை என்கிறீர்களா?

பெண்கள் தங்களது ஒவ்வொருக் காதலையும் புத்தம் புதிதாய், மறுமலர்ச்சியான நம்பிக்கையுடன் துவக்குவார்கள். ஆண்கள் அப்படி அல்ல, புதுக்காதலியில், பழையக் காதலைத் தேடுவது நேர்மையானது அல்ல என்பதைத் தெரிந்தும், தற்பொழுதையக் காதலை முதன் காதலுடன் ஒப்பிட்டு, இங்கேயும் இல்லாமல் அங்கேயும் அல்லாமல் திண்டாடுவார்கள். அம்மு அத்தகைய ரீவைண்ட் பட்டனை எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அன்றைய வெகுளித்தனங்களை தொலைத்துவிட்டாலும் கூட, நான்கு வருடங்களுக்கு முன்னதான கார்த்தியாக அவ்வப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

நேற்று வேலை முடித்துவிட்டு வந்தவள், என் முகத்திற்கு நேரே சிறிய இடைவெளியில் முகம் வைத்து, தனது நெற்றியில் பொட்டை வைத்துக் கொண்டாள்.

அந்த ஒருக்கணம், எல்லாவற்றையும் தன்னுள் அதீத சக்தியுடன் இழுத்துக்கொள்ளும் பேரண்டத்தின் கருந்துகளைப்போல் இருந்தது. பேசும் மொழி, சூழல், எண்ணம் எல்லாம் மறைந்து சில நொடிகளுக்கு எடையற்ற, நிறமற்ற, தடையற்ற உலகில் நானும் அம்முவும் மட்டும் இருந்ததில் இருந்து வெளி வர என் மனதை ஒளியின் வேகத்தைவிட வேகமாக நிகழ்விற்கு இழுக்க வேண்டியதாயிற்று.

“பயணிகள் விமானங்களை பின் தொடரமுடியும், சரக்கு விமானங்களை பின் தொடரமுடியும்… அவை எல்லாம் முன்னரே திட்டமிட்ட பாதையில் மட்டுமே பயணம் செய்யும், கார்த்தி, நீ போர் விமானம் போல, உன்னை நம்பி பின் வர முடியாது, தொடர்பவர்களைக் கூட தற்காப்பு எனத் தாக்கிவிடுவாய்”

இதுதான் என்னைப் பற்றி என் நண்பர்களது கருத்து. சரியானதும் கூட, எனக்கு ஜிப்சி மாதிரியான வாழ்க்கைப் பிடித்து இருக்கின்றது. மூன்று வருடங்கள் ஸ்வீடன், இப்பொழுது இத்தாலி, அடுத்து தென்னமெரிக்க நாடுகளில் ஏதேனும் ஒன்றிற்குப் போகலாமா என நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

வியன்னாவில் இருந்து மாஸ்கோவிற்கு ஒரு ரயில் போகும். அது போலாந்துத் தலைநகர் வார்சாவா வரை செல்லும் ரயிலுடன் இணைக்கப்படும். பின்னர் அங்கிருந்து வேறு ஒரு ரயிலில் இணைத்து விடப்படும். போலாந்தின் எல்லையில் ரஷ்யாவின் ரயில் தண்டவாளங்களுக்கு ஏற்றவகையில் ரயில் சக்கரங்களை மாற்றுவார்கள். வியன்னாவில் கிளம்பியதில் இருந்து வெவ்வேறு நிலப்பரப்புகள், வெவ்வேறு எஞ்சின்கள், வெவ்வேறு திசைகள், பயணத்தின் ஊடான காவல் துறையினரின் கேள்விகள், பரிசோதனைகள், ஓடும் பாதைகளே மாற்றம் என கடைசியில் மாஸ்கோவிற்கான ரயில் பெட்டி வந்தடையும். இந்த மாதிரியான தடைகளைத் தாண்டும் பயண வாழ்க்கை வாழவேண்டும்.

நாகர்கோவில் இருந்து சென்னை வரை ஒரே மாதிரியான பயணம் போன்ற வாழ்க்கை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவளுக்கு இருப்பதாக நானே புரிந்து கொண்டேன். என் புரிதல் தவறாகக் கூட இருக்கலாம். என் வாழ்க்கையில் இன்று இதைத்தான் செய்ய வெண்டும் என்ற கட்டாயங்கள் கிடையாது. எந்த விதமான நிபந்தனைகளும் கிடையாது. நான் மற்றவர்களுக்கு வைக்கும் ஒரே நிபந்தனை, எந்த நிபந்தனைகளும் இருக்கக் கூடாது என்பதுதான்.

எனக்கு நான் கட்டமைத்துக் கொண்ட கரடு முரடான உலகம், அவள் இதுவரை பேசாப்பொருளைப் பேசிவிட்டால் அழகாகிவிடுமோ என்ற பயம் தான் எனது மிகப்பெரும் பிரச்சினை.

உங்களுக்கு மேலே சொன்ன என் பயத்தை பிரச்சினையை கடிதமாக்கி, மானே தேனே பொன் மானே என்பதை எல்லாம் சேர்த்து, கிட்டத்தட்ட அலுவல் ரீதியிலான கடிதம் போல வடிவமைத்து அம்முவிற்கு அனுப்ப மின்னஞ்சலில் சேமித்து வைத்திருக்கின்றேன்.

ஒரு காலத்தில் என்னை நிராகரித்துவிடாதே என முந்தைய அம்முக்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் நினைவுக்கு வந்து சிரிப்பைத் தந்தது. காலம்தான் பயப்பட்டதற்கு பயப்படாமலும் பயப்படாததற்கு பயப்படவைக்கவும் எப்படி ஆளைப்புரட்டிப் போடுகின்றது. இன்று மாலையும் அவளைச் சந்திக்கப்போகின்றேன், சந்திப்பிற்குப்பின்னர் நான் கடிதத்தை அனுப்பாமலேயேப் போகலாம் ஒரு வேளைக் கடிதத்தை அனுப்பிவிட்டால்,

நிபந்தனையை ஏற்றுக்கொண்டாளா இல்லையா, என்ன சொல்லப்போகின்றாள் என்று நகத்தை கடித்தபடி மடிக்கணினியை வெறித்துப் பார்த்தபடி இருக்கலாம். ஆனால் அதைப் பிறகுப்பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது அம்முவைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருக்கின்றேன். பிறகு சந்திப்போம்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *