பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி எடுத்து உதட்டின் மேல்பகுதியில் மீசையைத் தொட்டாற்போல் மெல்லமாகத் தடவி அதன் மணத்தில் ஆழ்ந்தான் சுமன். பற்றவைக்கத் தோன்றவில்லை.
தூரத்தில் புகைபரப்பினபடி போகிற பஸ்ஸையே வெறித்துப் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தான் அவன். எதிர்பாராத ஒரு விநாடியில் அந்த பஸ் எதிர்திசையில் திரும்பிவந்து அவனருகே நின்று அவளை இறக்கிவிடுவதுபோலவும், ‘சிகரெட்டா பிடிக்கிறே படவா?’ என்று அவள் சுமனுடைய மூக்கைப் பிடித்துத் திருகிவிட்டு கோபத்தோடு நடப்பதுபோலவும் கற்பனை தோன்றியது. ஐயோ!
அவளிடம் உண்மையைச் சொல்லியிருக்கலாம். ஆனால் ‘உங்களுக்குச் சிகரெட் பழக்கம் உண்டா?’ என்று கேட்கும்போதே அவள் முகத்தில் படர்ந்த அருவருப்பையும், இவன் ‘உண்டு’ என்று சொல்லிவிடக்கூடாதே என்கிற தவிப்பையும் துடிதுடிப்பையும் பார்த்தபோது அவள் மனவருத்தப்படாத பதிலைதான் சொல்ல முடிந்தது. ‘சேச்சே!’
‘தேங்க் காட்’ என்று அழகாக நெஞ்சைத் தொட்டுக்கொண்டு புன்னகை செய்தாள் அவள். ‘எனக்குச் சிகரெட் பிடிக்கிறவங்க-ன்னாலே அலர்ஜி, அவங்க பக்கத்திலகூட நிக்கமுடியாது, அந்தப் புகையில மூச்சுத்திணறி மயக்கம் போட்ருவேனோ-ன்னு தோணும்’ என்றாள் தொடர்ந்து, ‘நம்ம கல்யாணம் நிச்சயமானதும் என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் ஒரே கிண்டல், உன்னோட அவருக்குச் சிகரெட் பழக்கம் இருந்தா என்னடி பண்ணுவே-ன்னு துளைச்சு எடுத்துட்டாங்க, நல்லவேளை, கடவுள் என்னை ஏமாத்திடலை!’
ஒரே ஒரு சிறிய பொய்யினால் சுற்றி நடப்பது எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லாதபடி நழுவிக்கொண்டிருப்பதை திகைப்போடு பார்த்தபடி மௌனித்திருந்தான் அவன். அவளோ நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள், ‘நீங்க பொண்ணு பார்க்க வந்தப்பவே விசாரிக்கணும்ன்னு நினைச்சேன், ஆனா நீங்கதான் தனியா பேசறதுக்கே கேட்கலை.’
அன்றைக்கே தனியாகப் பேசியிருந்தால் இந்த பொய்யைச் சொல்லியிருக்கமாட்டோமோ என்று வேதனையுடன் நினைத்தான் சுமன். இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, ஒரே ஒரு லோக்கல் ஃபோன், ‘எனக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லை-ன்னு உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன், மன்னிச்சிடுங்க.’
மன்னிப்புக் கேட்கவேண்டியதுகூட அவ்வளவாக அவசியமில்லை. உண்மையைச் சொல்லிவிட்டாலே போதும். ‘காலேஜ் நாள்ல பழகினதுங்க, விடமுடியலை, ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட்டாவது புகையாக் கரையுது, அது இல்லாட்டி கடிகாரமே ஓடாதமாதிரி, திருவிளையாடல் சினிமாவில எல்லாம் ஸ்டாண்ட்-ஸ்டில்லா நிக்கறாப்பல என் உலகமே இயக்கமில்லாம உறைஞ்சுபோயிட்டமாதிரி ஆயிடும்!’
அவன் நினைப்பதுபோல் அவள் இந்த விஷயத்தை அத்தனை தீவீரமாக எடுத்துக்கொள்ளாதவளாக இருக்கலாம். செய்த தவறை மறைக்காமல் ஒப்புக்கொள்ளும் அவனது நேர்மை அவளுக்குள் ஈரமாக இறங்கி நெகிழச்செய்யலாம். ‘அவ்வளவுதானே? இதுக்குப்போய் ஏன் பொய் சொன்னீங்க?’ என்று அவனைச் செல்லமாகக் கோபித்துக்கொண்டு ‘இருங்க, கல்யாணத்துக்கப்புறம் எல்லாத்தையும் மாத்திடறேன்’ என்று சிணுங்கலாகச் சிரிக்கலாம். அல்லது, ‘எனக்காக இதை விட்டுட ட்ரை பண்ணுங்களேன், ப்ளீஸ்’ என்று கெஞ்சலாம். ‘டெய்லி ரெண்டு பாக்கெட்-ன்னா எத்தனை செலவாகும், யோசிச்சுப்பாருங்க, அப்படியாவது காசுகொடுத்து கேன்ஸரை வரவழைச்சுக்கணுமா?’ என்று அறிவுரை சொல்லலாம், இப்படி இன்னும் எத்தனையோ சுப-சாத்தியங்கள் கண்முன்னே நிழலாடி ஆசைகாட்டின.
ஆனால் இதற்கு நேரெதிரான சம்பவங்களும் நிகழச் சாத்தியமுண்டு என்பதுதான் சுமனைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. ‘முதல்முதலாச் சந்திக்கும்போதே இப்படி ஒரு பெரிய பொய்யைச் சொன்ன மனுஷன், நாளைக்கு இன்னும் என்னவெல்லாம் செய்யமாட்டார்?’ என்று அலறி அவள் கல்யாணத்தையே நிறுத்தலாம். ‘உங்க மகனுக்குச் சிகரெட் பழக்கம் உண்டு-ன்னு ஏன் எங்ககிட்ட முன்னாடியே சொல்லலை?’ என்று அவளது அப்பாவோ உறவினர்களோ வீட்டு வாசலில் கலாட்டா செய்து நாலுபேர் பார்க்கும்படி கேவலப்படுத்திவிட்டுச் செல்லலாம். கடந்த ஒரு வாரமாக உள்ளுக்குள் தீபோல் பரவியிருக்கிற இனம்பிரிக்கமாட்டாத சந்தோஷப் பரவசத்தின் சுவடு கொஞ்சமும் மீதமில்லாமல் இந்தச் சிறிய பொய் எல்லாவற்றையும் துடைத்துக்கொண்டு போய்விடலாம்.
அவன் தன் கையிலிருந்த சிகரெட்டை வெறுப்போடு பார்த்தான். சனியனே, உன்னால்தானே எல்லா அவஸ்தையும்?
ஆனால் சில விநாடிகளுக்குமேல் அவனால் தன் கோபத்தைத் தொடரமுடியவில்லை. பதற்றத்தில் நடுங்கும் விரல்களால் அவசரமாக அந்தச் சிகரெட்டை உதடுகளில் பொருத்திப் பற்றவைத்து நுரையீரல்களில் வெதுவெதுப்பாகப் பாய்கிற புகையை ஆழ்ந்து அனுபவித்தபிறகுதான் மீண்டும் உயிர்த்தெழுந்ததுபோல் இருந்தது. வாயிலும் மூக்கிலும் மெதுஇயக்கமாகப் புகை வடிய அவன் யோசனையோடு நின்றிருந்தான். அரை மணிநேரம்கூட சிகரெட் இல்லாமல் இருக்கமுடியவில்லை. இந்த லட்சணத்தில் அந்தப் பழக்கமே கிடையாது என்று அவள் தலையிலடிக்காத குறையாகச் சத்தியம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்ததோ என்று எரிச்சலாயிருந்தது.
எல்லா ஆண்களையும்போலத் தானும் அழகான பெண்களிடம் பழகும் விஷயத்தில் பலவீனன்தான் என்று நினைத்தபோது, அவனுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. கட்டிக்கொள்ளப்போகிற பெண்ணிடம் வழிவது தப்பில்லை, ஆனால் அதற்காக இப்படியொரு பொய்யையா சொல்லித்தொலைப்பது? மறைக்கக்கூடிய விஷயமா இது? திருமணத்துக்குப் பின்போ அல்லது அதற்கு முன்னாலேயோ அவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டால் எத்தனை அவமானம்! கடவுளே, இப்போது என்ன செய்வேன்?
***
‘இது சிம்பிள் மேட்டர் மாமு’ தக்காளி ஆம்லெட்டை முள்கரண்டியால் குத்திக் கிழித்தபடி சொன்னான் மோகன். ‘நேரா அவளுக்கு ஃபோன் பண்ணிக் கொஞ்சநேரம் கடலை போடு, ரொமான்டிக்கா சில டயலாக்ஸ் விடு, அப்புறம் நைஸா, பழத்தில ஊசி ஏத்தறமாதிரி மேட்டரை உடைச்சுடு, எப்பவாவது ஃப்ரெண்ட்ஸோட சிகரெட் பிடிக்கிறதுண்டு, மத்தபடி நான் உத்தமன்தான்-ன்னு சொல்லிடு, நீ பொய் சொல்லிட்டமாதிரியோ தப்புப் பண்ணிட்டதுபோலவோ காட்டிக்கவே கூடாது, கேஷுவலா பேசணும், அது முக்கியம்.’
வெந்நீர் வைப்பதற்கான சமையல் குறிப்புபோல் அவன் சர்வ அலட்சியமாகச் சொல்லிக்கொண்டுபோவதை எந்த அளவு நம்புவது என்று சுமனுக்குத் தெரியவில்லை, ‘அவ ஒத்துப்பாளாடா?’ என்றான் பரிதாபமான குரலில்.
‘யாருக்குத் தெரியும்?’ என்று கேட்டுவிட்டுக் கலகலவென்று சிரித்தான் மோகன். ‘நீ ஒண்ணும் கவலைப்படாதேடா சுமன், உண்மையிலேயே அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிச்சிருந்தா இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா நினைக்கவேமாட்டா’ என்றான்.
சுமன் மௌனமாகத் தலைகுனிந்துகொண்டான், இன்று மாலை சந்திப்புக்கு முன்வரையில் அவளுக்கு அவனைப் பிடித்துதான் இருந்தது, இப்போதும் பிடித்திருக்கும்தான், ஆனால் ஃபோன் செய்து இந்த உண்மையைச் சொன்னபிறகும் பிடிக்குமா என்று யாரால் சொல்லமுடியும்? கடந்த சில நாள்களாக அவன்மேல் உண்டாகியிருக்கிற பிரியத்தைக்காட்டிலும், சிகரெட் பிடிக்கிறவர்களின்மேல் ரொம்ப வருஷமாக ஏற்பட்டிருக்கிற வெறுப்பு பெரிதாக இருந்துவிட்டால் என்செய்வது?
‘அப்ப சிகரெட்டை விட்டுடு’ அலட்டிக்கொள்ளாமல் சொன்னான் மோகன்.
‘டேய்’ பதறிப்போய் அவனை இடைமறித்தான் சுமன் ‘அது கஷ்டம்டா மாமு, உனக்குத் தெரியாதா?’
‘தெரியும்டா, உன்னால சிகரெட்டை விடமுடியாது, அதனாலதான் சொல்றேன், வேற யாராச்சும் இந்த விஷயத்தை அவகிட்ட போட்டுக்கொடுக்கறதுக்குமுன்னாடி நீயே பேசிடறது பெட்டர்’ சுமனின் தோளில் தட்டி, ‘கவலைப்படாதேடா, இது ஸிம்பிள் மேட்டர்’ என்றான் மீண்டும்.
***
அன்றிரவு அவர்கள் ஒன்றரை மணிநேரம் தொலைபேசினார்கள். மொட்டை மாடியின் குளிர்பரப்பில் சட்டையில்லாத வெற்று மார்புடன் நடந்துகொண்டு இறந்த, நிகழ், எதிர்காலங்கள்பற்றி அவளோடு ஆத்மார்த்தமாக உரையாடுவது அவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. முழுச் சொந்தமாகவும் நெருங்காமல், யாரோ என்றும் விலகாமல், தொட்டும் தொடாமலும் உறவாடுகிற கவர்ச்சி, ஒருபக்கம் தயக்கமும் மறுபக்கம் தைரியமுமாகச் சின்னச் சின்னச் சீண்டல்கள், கேலி, கிண்டல், ஒருவரையொருவர் முழுக்க அறிந்துகொள்வதற்கான முன்முயற்சிகள், தானாக உரிமையெடுத்துக்கொள்வதில் உண்டாகிற பேரின்பம்,… ஆனந்தப் பரவசத்தில் மூழ்கி நீராடின மணித்துளிகள் அவை!
அந்த மயக்கத்தினூடேயும் மூன்றுமுறை அவளிடம் தன் புகைப் பழக்கத்தைப்பற்றிப் பேசமுயன்றான் அவன். ஆனால் ஒவ்வொருமுறையும் வேறொரு அன்பான வார்த்தையிலோ கோரிக்கையிலோ கொஞ்சலிலோ அவனை ஊமையடித்துக்கொண்டிருந்தாள் அவள், கடைசியாக அவன் தொலைஇணைப்பைத் துண்டித்துத் தன் தோல்வியை ஒப்புக்கொண்டபோது மணி பதினொன்றரை!
வானத்தில் மெல்லமாக ஊர்வலம் போய்க்கொண்டிருந்த அரை நிலவை இயலாமையோடு பார்த்தபடி நெடுநேரம் மொட்டை மாடியிலேயே நின்றிருந்தான் சுமன். தன்மேல் இத்தனை பிரியத்தோடும் பாசத்தோடும் நம்பிக்கையோடும் பழகுகிற அவளிடம் தன்னால் இந்த உண்மையைச் சொல்லவேமுடியாது என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது.
இனி மீதமிருப்பது ஒரே ஒரு வழிதான் – அவளிடம் சொன்னதுதான் உண்மை எனும்படி இந்தச் சிகரெட் பழக்கத்தை மொத்தமாகத் தொலைத்துத் தலைமுழுகுவது!
இந்த எண்ணம் தோன்றியதுமே அவனுடைய மனம் திடுக்கிட்டு எழுந்தது. கைப்பிடிச் சுவரின்மேலிருந்த சிகரெட் பெட்டியையும் லைட்டரையும் திகிலோடு பார்த்தான் சுமன். ‘என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா?’ என்று பழைய மெட்டில் பாடினபடி அவை இரண்டும் எழுந்து நடனமாடுவதுபோலொரு பிம்பம் உள்ளே தோன்றியது. ‘முடியாது, முடியவே முடியாது’ என்று அலறியபடி கருங்காலி மனம் அவற்றோடு இணைந்து ஆடப்போனது.
***
‘இத்தனை வருஷப் பழக்கத்தை நான் ஏண்டா அவளுக்காக மாத்திக்கணும்?’ ஆத்திரத்தோடு கேட்டான் சுமன். ‘நான் ஒண்ணும் முட்டாள் இல்லை, இதுல இருக்கிற ரிஸ்கெல்லாம் தெரிஞ்சுதான் சிகரெட்டைத் தொடர்ந்துகிட்டிருக்கேன், இல்லையா?’
’ஏண்டா படுத்தறே? இப்ப உனக்கு என்னதான் பிரச்னை?’ மோகனுக்கும் எரிச்சல் பொங்கிவந்தது.
‘நல்லதோ, கெட்டதோ, இப்ப அவளுக்கு ஒரு பழக்கம் இருக்கு-ன்னா அதை எனக்காக விட்டுடணும்-ன்னு நான் கட்டாயப்படுத்தவே மாட்டேன்’ என்றான் சுமன். ‘ஒருத்தரோட ப்ளஸ், மைனஸ் ரெண்டையும் தெரிஞ்சுகிட்டு அவங்களை அப்படியே ஏத்துக்கறதுதானே உண்மையான அன்பு?’ ஆவேசமாகக் கேட்டுவிட்டுத் தன் கருத்துக்குத் துணைதேடுவதுபோல் கையிலிருந்த சிகரெட்டை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டான்.
‘டேய் மச்சான், நீ சொல்றதெல்லாம் நியாயம்தாண்டா’, மோகன் ஆதரவாக அவனுடைய தோளில் தட்டினான், ‘ஆனா இதையெல்லாம் நீ அவகிட்ட பொய் சொல்றதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும்.’
சுமன் ஏதும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருக்க, மோகன் தொடர்ந்து சொன்னான், ‘நான்தான் அப்பவே சொன்னேனே, ஒண்ணு அவகிட்ட உண்மையைச் சொல்லிடு, இல்லை அவகிட்ட முன்னாடியே சொன்னபடி சிகரெட்டை மறந்துடு, இது ரெண்டில எது உனக்குச் சுலபம்-ன்னு நீயே யோசிச்சுக்கோ.’
கூட்டத்தில் தொலைந்துபோன சின்னப் பிள்ளையின் முகபாவத்தோடு சுமன் நிமிர்ந்துபார்த்தபோது மோகனுக்கே பரிதாபமாயிருந்தது, அவனுடைய கண்களின் ஓரத்தில் துளிர்க்கப்பார்த்த நீர்த்துளியை அவசரமாகத் துடைத்துவிட்டான், ‘அசடு, இதுக்குப்போய் யாராச்சும் அழுவாங்களா?’ என்றான். ‘அந்தப் பொண்ணுகிட்ட உன்னால பேசமுடியாது-ன்னு இப்ப தெளிவாத் தெரியுது, ஸோ, நீ சிகரெட்டை விட்டுதான் ஆகணும்.’
‘எப்படிடா?’ கதறாத குறையாகக் கேட்டான் சுமன், ‘அரை ஹவருக்கு ஒரு தம் ஊதலைன்னா எனக்கு ஆஃபீஸ்ல வேலையே ஓடாதே, நடக்கக்கூட முடியாம மயக்கம்போட்டு விழுந்துடுவேன்டா.’
‘அதெல்லாம் முடியும்டா மச்சான்’ சுமன் கையிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கி ஆஷ்ட்ரேயில் தீய்த்தான் மோகன். ‘இதுதான் உன்னோட கடைசி சிகரெட்.’
சுமன் திகைப்போடு நிமிர்ந்துபார்க்க, அவனுடைய அதிர்ச்சியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தான் மோகன். ‘இந்த விஷயத்திலமட்டும் பாதி குறைக்கிறது, கால்வாசி குறைக்கிறதெல்லாம் வேலைக்கே ஆகாது. உண்டு – இல்லை-ன்னு ரெண்டே ரெண்டு பைனரி ஸ்டேஜ்தான். போன நிமிஷம்வரைக்கும் அது உனக்கு உண்டு, இப்போ இல்லை, அவ்ளோதான்!’ சுமனின் சட்டைப்பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டையும் வலுக்கட்டாயமாகப் பறித்தபடி, ‘உனக்குச் சிகரெட் பிடிக்கணும்ன்னு தோணும்போதெல்லாம் உன் வருங்கால மனைவியை நினைச்சுக்கோ, அது போதும்’ என்று சிரித்தான் மோகன்.
***
இப்படியாக, நோய் கண்டவனின் பத்தியம்போல் சிகரெட் இல்லாத உலகத்தினுள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டான் சுமன். ‘முதல் ரெண்டு நாளைக்குதான்டா கஷ்டமா இருக்கும். அதுக்கப்புறம் தானாப் பழகிடும்’, மோகனின் தெம்பு வார்த்தைகள் எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை.
மோகனிடம் பேசிவிட்டுவந்த அன்றைய தினமே நெருப்பின்மேல் நிற்பதுபோல்தான் கழிந்தது. கை கால்களெல்லாம் வெடவெடவென்று உதறுவதுபோல் படுத்தினாலும் இரவுச் சாப்பாடுவரை ஒருமாதிரியாகச் சமாளித்துவிட்டான். ஆனால் தூக்கம் வரவில்லை. நள்ளிரவுக்குமேல் பிசாசுபோல் மொட்டைமாடிக்கு ஓடவேண்டியிருந்தது, பழக்கமான சிகரெட்டின் வாசத்தைப் பெருமூச்சோடு நுகர்ந்து தீப்புகையை உள்ளிழுத்தபிறகுதான் சுவாசமே சீரானதுபோல் ஒரு பிரமை.
ஆயாசத்தோடு அவன் நிமிர்ந்துபார்த்தபோது மேலேயிருந்த நிலவு செல்லமாகக் கண்ணடித்து ‘அவகிட்டே சொல்லிடுவேன்’ என்று சிரித்தது. கையிலிருந்த சிகரெட்டை அவசரமாகத் தரையில் தேய்த்து அணைத்தான் அவன்.
***
மறுநாள் இன்னும் சிரமப்படுத்தியது. போதாக்குறைக்கு, அவனுடைய சுயகட்டுப்பாட்டைச் சோதிப்பதுபோல் அன்றைக்கு நிறைய வேலைகள் குவிந்திருந்தன. அவன் எதிலும் கவனமில்லாமல் தப்பும் தவறுமாகச் சொதப்பிக்கொண்டிருப்பதைப்பார்த்து உதவி மேலாளர் அக்கறையோடு விசாரித்தார். ‘என்ன சுமன், உடம்பு சரியில்லையா?’
‘அ – அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்’ சட்டென்று தலையைக் குனிந்து உதட்டைக் கடித்துக்கொண்டான் அவன். இதற்குமேல் ஏதாவது பேசினால் அழுகை வந்துவிடும்போல் ஓர் உணர்ச்சி, விறுவிறுவென்று ஆண்கள் ஓய்வறைக்குச் சென்று ஒரு ரவுண்ட் இழுத்துவிட்டு வந்தால் என்ன என்று ஒரு மனமும், ‘ச்சீ, நீ இத்தனை பலமற்றவனா?’ என்று இன்னொரு மனமும் கபடியாட்டம் ஆடிக்கொண்டிருந்தது.
உணவு இடைவேளையின்போதுகூட ஏதும் சாப்பிடத் தோன்றவில்லை. நண்பர்கள் வழக்கமான பீடாக்கடை ஜமாவுக்கு அழைத்தபோதும் பிடிவாதமாக மறுத்துவிட்டான். அவர்களிடம் ஆதியில் ஆரம்பித்து ராமாயணம் சொல்லப் பொறுமையில்லை என்பது ஒரு காரணம், அவர்கள் புகைப்பதைப் பார்த்தால் எல்லாவற்றையும் மறந்து தானும் அவர்களோடு ஐக்கியமாகிவிடுவோமோ என்கிற பயம் இன்னொரு (முக்கியமான) காரணம்!
மதியமும் அவனால் வேலையில் ஒன்றமுடியவில்லை. தலை நன்கு கனத்துப் பாரமாகி அவனைத் தரைக்குள் அமிழ்த்திவிடப்பார்ப்பதுபோல் வலித்தது, மேனேஜரிடம் சொல்லிக்கொண்டு சீக்கிரமே கிளம்பிவிட்டான், தெருமுனை பெட்டிக்கடையில் நின்று விகடனும் கல்கியும் வாங்கினான். அங்கு ஓரமாகத் தொங்கிக்கொண்டிருந்த கயிறு முனை நெருப்பில் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டுதான் வழக்கமான பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றான் அவன்.
கூட்டமில்லாத பஸ்ஸில் வீட்டுக்கு வருவதற்குள் தலையில் பாரம் குறைந்து அத்தனையும் நெஞ்சில் ஏறியிருந்தது.
***
மெல்லமாக ஊரடங்கிக்கொண்டிருந்த இரவு. அவளுக்குத் தொலைபேச நினைத்தான் சுமன். ஆனால் அவளோடு இயல்பாகப் பேசமுடியும் என்று தோன்றவில்லை. மதியம் ஊதித் தள்ளிய ஒற்றை சிகரெட் மிகப் பெரிய உறுத்தலாக உள்ளுக்குள் நின்று வதைத்துக்கொண்டிருந்தது. ‘ஒரு நாள், ஒரே ஒரு நாள் இந்தச் சனியனைத் தவிர்த்து இருக்கமுடியவில்லை என்றால் என்ன மனிதன் நான்?’ என்று தன்னிரக்கத்தோடு நினைத்தான் அவன். நாலு விரற்கடைகூட நீளமில்லாத இந்த ராட்சஸனால் இப்படி ஆட்டுவிக்கப்படுகிறோமே என்றெண்ணியபோது மிகவும் வேதனையாக இருந்தது.
லேசான குளிர்காற்று தாலாட்ட சுமன் மெல்லமாக ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றபோது பக்கத்தில் எங்கிருந்தோ எச்சரிக்கை மணி ஒலிப்பதுபோல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து அருகிலிருந்த செல்ஃபோனைப் பதற்றத்தோடு அள்ளியெடுக்க, அவள்தான்.
‘எப்படி இருக்கீங்க?’ அந்த இரண்டு வார்த்தைகளுக்குள் உலகத்தின் நேசம் அனைத்தையும் அள்ளியெடுத்துத் திணித்ததுபோல் கேட்டாள் அவள். அவனால் சட்டென்று பதில் பேசக்கூட முடியவில்லை. குற்றமுள்ள நெஞ்சு!
அவள் இரண்டுமுறை ‘ஹலோ, ஹலோ’ என்று சோதித்துவிட்டு ‘கட் ஆயிடுச்சுபோல’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டதை அவன் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தான். இதமான காற்று வீசிக்கொண்டிருந்தபோதும் உடம்பெல்லாம் ஏனோ வியர்த்திருந்தது, இதயம் நகர்ந்து நகர்ந்து காதுகளுக்கு அருகிலேயே வந்துவிட்டதுபோல் திடும்திடுமென்று அதன் துடிப்பு பெரிதாகக் கேட்டது.
அவன் மொட்டைமாடியின் ஓரத்துக்கு நடந்து இன்னொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு சாலையை மௌனமாக வேடிக்கை பார்க்கலானான். ‘எப்படி இருக்கீங்க?’ அவளுடைய ஆதரவான குரல் இன்னும் உள்ளே கேட்டுக்கொண்டிருந்தது, இனி வாழ்நாள்முழுக்க என்னோடு, எனக்காக இருக்கப்போகிறவளுக்காக இதைக்கூட செய்யமுடியாதா? – இந்த உணர்ச்சிப்பூர்வமான கேள்வியை அவன் புத்தி நிதானமாக அணுகி ஒருமுறை தாடையைச் சொறிந்துவிட்டு ‘முடியாது போலிருக்கே’ என்று கேலியாகச் சொல்லி அவன் கன்னத்தில் அறைந்தது.
அந்த சிகரெட் முழுசாகத் தீரும்வரை நிதானமாகப் புகைத்தான் அவன். மீண்டும் கயிற்றுக் கட்டிலுக்கு வந்து செல்பேசியை எடுத்து அவளது எண்ணை ஒற்றினான். ‘ஹலோ, நான்தான் சுமன் பேசறேன், ஹவ் ஆர் யூ?’
‘ஹல்லோ, இப்பதான் உங்களுக்கு கால் பண்ணினேன்’ என்று அவள் உற்சாகத்தோடு பேசத் துவங்கினதை இடைமறித்து ‘உங்ககிட்ட ஒரு உண்மையைச் சொல்லணும்ங்க’ என்றான் சுமன். ‘கடந்த ஏழெட்டு வருஷமாவே எனக்குச் சிகரெட் பழக்கம் உண்டு, அன்னிக்கு உங்ககிட்ட பேசும்போது இதை மறைச்சுட்டேன், ஸாரி.’
எதிர்முனை திகைப்போடு மௌனிக்க, அவன் தொடர்ந்து சொன்னான். ‘ஆனா அது உங்களுக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சப்புறம் விட்டுட ட்ரை பண்றேங்க, ஸின்ஸியரா முயற்சி பண்றேன், என்னால முடியுமான்னு தெரியலை, ஆனா முடியணும், இந்த ரெண்டு, மூணு நாள் அனுபவத்தை வெச்சு எதுவும் நிச்சயமா சொல்லமுடியலை.’
அவள் இன்னும் பேசாதிருக்க ‘நாளைக்கோ, அடுத்த வாரமோ, அடுத்த மாசமோ நான் இந்தப் பழக்கத்தை விட்டுடலாம், ஆனா இதையும் உங்ககிட்ட மறைக்கிறது தப்பு-ன்னு தோணிச்சு, அதான் ஃபோன் பண்ணினேன்’ என்றான். ‘நான் உங்ககிட்ட பொய் சொன்னது தப்புதான். அதுக்கு மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கறேன். இனி என்னை மன்னிக்கிறதும் கோவிச்சுக்கறதும் உங்க இஷ்டம்’ என்று ஃபோனை வைத்துவிட்டான்.
மீண்டும் மொட்டைமாடியின் ஓரத்துக்குச் சென்றபோது உள்ளே இனம்புரியாத நிம்மதியுணர்வு நிரம்பியிருந்தது. இனிமேல் சிகரெட் இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம் என்று நிச்சயமாகத் தோன்றியது. ஆனால் அவள்?
சில நிமிடங்களுக்குள் மீண்டும் தொலைபேசி மணி ஒலித்தது.
(செப்டம்பர் 2012 ’ஃபெமினா தமிழ்’ மாத இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம்)