நெருப்பின் குளுமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 2,238 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“நான் நல்லவளுக்கு நல்லவள். கெட்டவனுக்குக் கெட்டவள். நான் ஒரு பெண் புலி . எல்லாப் பெண்ணையும் போல என்னை நினைச்சிருக்கான். நான் யாருன்னு காட்டறேன். என் முகத்தைச் சின்னா பின்னமா பண்ணிட்டான். அவனைப் பழிக்கு பழி வாங்காம விடமாட்டேன்.” என்று மனசுக்குள் கறுவிக்கொண்டாள்.

இரண்டு கைகளிலும் முழங்கையிலிருந்து கை மணிக் கட்டுவரை கையுறையை மாட்டிக் கொண்டாள். ஒரு துணியால் கூர்மையான இரு விழிகள் மட்டும் வெளியே தெரியும்படியாக முகத்தை மூடிக் கொண்டாள்,. தலையில் ஹெல்மெட்டை அணிந்து தீவிரவாதி தோற்றத்துடன் இரண்டு சக்ர வாகனத்தில் பறந்தாள் தமயந்தி

அவளைப் பற்றி சொன்னால்தான் அவள் எங்கு போகிறாள் என்பது உங்களுக்குப் புரியும்.

தமயந்தி பூங்கொடி போலிருப்பாள். அசத்தலான உயரம். தணல் நிறம். தனித்துவம் வாய்ந்த மயக்கும் குரல்.. முகம் வெண் பளிங்கு போல் பளிச்சென்று இருக்கும். முத்து போல் வெண்மையான பற்கள். தங்கச்சிலை மாதிரி மூக்கும் முழியுமா பார்க்க வசீகரமான தோற்றம். மல்லிகைப் பூ மென்மையும் இரும்பு ஆணியின் உறுதியும் உடையவள். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட புதுமைப்பெண்.

ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறாள். பெற்றோர்கள் இளமையிலே இறந்து விட்டார்கள். அண்ணன் அண்ணியுடன் கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறாள்.

வாசு என்ற இளைஞனும் தமயந்தி வேலை செய்யும் அலுவலகத்தில் வேலை செய்கிறான் அவனுக்குத் தமயந்தியை முதல் தடவை பார்த்தவுடனே மிகவும் பிடித்துப்போய் விட்டது. அவள் அவனுடைய மனதில் புகுந்து விட்டாள். ஒருதலைக் காதல் அவனுக்கு. அவள் விரும்புகிறாளா இல்லையா என்று தெரியாமலேயே தன் மனதில் ஆகாசக் கோட்டையை கட்டினான். அவன் வீட்டையும் அவள் இருக்கும் தெருவிலேயே மாற்றிக் கொண்டு வந்து விட்டான்.

அவனுடைய இதயத்தில் காதல் விருட்சம் நன்றாக வளர்ந்து விட்டது. ஒரு தடவை அவளிடம் “உன்னை எனக்கு மிகவும் பிடித்து விட்டது . நீ எனக்கு வேண்டும் “எனப் பிதற்றினான். அவள் சீறினாள். அவனைச் செருப்பால் அடித்தாள்.

அன்று ஒரு நாள் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரம். எப்போதும் போல் தமயந்தி கோடம்பாக்கம் பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தாள்.

இருட்டு இன்னும் வானிலிருந்து பிரியவில்லை. கதிரவன் வானிலிருந்து வெளியே வர யத்தனித்துக்கொண்டிருந்தான். செழிப்பான பூச்செடிகளிலிருந்து வீசும் மணம் மனதிற்கு ரம்யமாக இருந்தது.

ஆடவர், பெண்டிர், சிறுவர்கள் என பலதரப்பட்ட வயதினரும் அங்கே இருந்தனர். சிலர் நடந்து கொண்டிருந்தார்கள். சிலர் புல் தரையில் அமர்ந்து யோகா பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்த நாய்களும் மனிதர்களுடன் ஏட்டிக்குப் போட்டியாய் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தன.

தமயந்தி தினந்தோறும் பூங்காவை இருபது சுற்றுகள் வலம் வருவாள். பதினெட்டாவது சுற்று முடிந்து விட்டது. இன்னும் இரண்டு சுற்றுகள்தான் பாக்கி. தன் கைக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். அப்போது நேரம் 6.25.

அப்போது வாசு தன் நண்பன் ஒருவனுடன் அந்தப் பூங்காவில் நுழைவதைப் பார்த்தாள். வெறுப்பும் கோபமும் அவள் முகத்தில் தெரிந்தன.

இவனுக்கு வேறே வேலையே இல்லை போலிருக்கு. நாய் மாதிரி என் பின்னால் சுத்திக் கொண்டிருக்கிறானே என்று நினைத்தாள். தேகம் முழுவதும் திகுதிகுவென எரிகின்ற உணர்வு.

பூங்காவில் குறுக்குப் பாதை ஒன்று ஒதுக்குப் புறமாக இருக்கிறது. யாரும் இல்லாத அந்த வழியே புகுந்து வெளி நோக்கி நடந்தாள்.

வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் எப்படியெல்லாம் வருகின்றன!

வாசு தமயந்தியின் எதிரே வந்தான். அவன் நண்பனும் கூட வந்தான். அவள் அவனைச் சட்டை செய்யவில்லை ; நடப்பதையும் நிறுத்தவில்லை.

வாசு அவள் எதிரே நின்றான். இருக் கைகளால் அவளை மறித்தான். இதற்குள் வாசுவின் நண்பன் தமயந்தியின் பின்னே போய் நின்று கொண்டான்.

“கடைசியாய் கேட்கிறேன். நான் கேட்டதிற்கு என்ன பதில்?“ உறுமினான்.

“என்னுடைய முடிவை எப்போதோ சொல்லிவிட்டேன். ஒரு தடவை சொன்னால் உனக்குப் புத்தி வாராதா? வழியை விடு.” அவள் முகத்தில் கோபக்கனல் தெரிந்தது.

வாசு தன் நண்பனுக்குக் கண்ணால் சைகை காட்டினான்.

ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று அவள் உள்ளுணர்வு சொல்லியது. துரிதமாக அந்த இடத்தை விட்டு நகர முயன்றாள்.

அதற்குள் தமயந்தியின் பின் பக்கம் நின்றிருந்த நண்பன் அவளின் இருக்கைகளையும் மேலே உயர்த்தி கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

தமயந்தி திமிறினாள் ”என்னை விட்டு விடு“ அசுர பலத்துடன் போராடினாள். அவள் காலால் விட்ட உதை வாசுவை நிலை தடுமாறி கீழே விழச் செய்தது. அவன் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு எழுந்து தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பாட்டிலை வெளியே எடுத்தான். கண் இமைக்கும் தருணத்தில் அதிலுள்ள திரவத்தை தமயந்தியின் முகத்தின் மீது தெறித்துவிட்டு சிட்டாகப் பறந்துவிட்டான். நண்பனும் அவள் கையை விட்டு விட்டு அவன் பின்னால் ஓடினான்.

முகமெல்லாம் எரிந்தது தமயந்திக்கு. வாசு ஆசிடை வீசியிருக்கிறான்! அம்….மா, அ……ம்மா, அம்மா” என்று கதறினாள்.

கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவளின் கலவரமான கூக்குரல் அங்கிருந்தோரை மயிர்க் கூச்செரிய வைத்தது. எல்லோரும் அவளருகில் ஒடி வந்தார்கள்.

தமயந்தியின் முகத்தில் தடையின் கீழே கொப்பளங்கள் ஏராளமாகத் தோன்றி அந்த இடம் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்குக் கரி பூசியது போல் ஆகிவிட்டது. அவள் வலியால் அரற்றினாள்.

பொதுமக்கள் துரிதமாகத் தமயந்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து அங்கேயே சேர்த்தார்கள்..

காவலர்கள் வாசுவைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அடுத்த நாள் நாளிதழில் “இளம் பெண்ணின் மீது திராவக வீச்சு” என்ற அவளுடைய பேட்டி எல்லோராலும் பரபரப்பாக பேசப்பட்டது. முக நூலில் அவளுக்காகப் பலர் ஆதரவுக் குரல் கொடுத்தார்கள்.

தமயந்தி திராவக வீச்சால் மிகவும் பாதிக்கப்பட்டாள். அதனால் ஏற்பட்ட கருப்பு நிற வடு அவள் முகத்தின் அழகைக் குலைந்து விட்டது. பட்டாம் பூச்சி மாதிரி வசீகரமாய் இருந்த அவள் முகம் கம்பளி பூச்சி மாதிரி அறுவெருக்கதக்கதாய் ஆகி விட்டது.

தமயந்திக்கு மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை கொடுக்கப்பட்டது. பிரபல பிளாஸ்டிக் சர்ஜன் பலமுறை அறுவை சிகிச்சை செய்துவிட்டார். அவள் முகத்தில் மாற்றம் ஏற்படவில்லை. முகம் மீண்டும் பழைய நிலைக்கு வராது என்று மருத்துவ நிபுணர்கள் வருத்தத்தோடு சொல்லி விட்டார்கள். ரணம் ஆறி விட்டாலும் நெஞ்சில் ஏற்பட்ட வலி நிரந்தரமானது .

அவளது துரதிர்ஷ்டம் அவள் அழகு போனது போனதுதான்! அவளுக்கு வாசுவின் மீது மிகவும் கோபம். அவனை நினைத்தாலே அவள் மனம் கொதித்தது. அவன் மீது திராவகம் வீச வேண்டும் . தான் துடித்த மாதிரி அவனும் துடிக்க வேண்டும் என்று மனதிற்குள் வன்மத்தை வளர்த்து அதற்கான சந்தர்ப்பத்திற்காக வருவான் என்று காத்திருந்தாள். ஜாமினில் வெளி வந்த அவன் சித்தப்பா வீட்டில் இருந்தான். இன்று காலைதான் அவன் வீட்டின் அருகே அவனைப் பார்த்தாள், உடனே கடைக்குப் போய் திரவகம் வாங்கி அவன் முகத்தில் வீச வேண்டும் என்ற எண்ணத்துடன் திரவாகம் வாங்கத்தான் கடை தெருவிற்குப் போய்க் கொண்டிருக்கிறாள்.

கடையின் முன் வண்டியை நிறுத்திய தமயந்தி தன் முகத்தில் இருந்த துணியை முற்றிலும் அகற்றாமல் உதட்டுக்குக் கீழே ஒதுக்கினாள். பிறகு கடைக்குள் நுழைந்து “ஆசிட் இருக்கிறதா” என்று வினவினாள்.

“என்னம்மா கேட்கறீங்க?” திகைப்புடன் வினவினான் கடைக்காரன்.

“ஆசிட் இருக்குதான்னு கேட்கிறேன்“

“உங்களுக்கு விசயம் தெரியாதா? ஆறு மாசத்திற்கு முன்பு உங்களை மாதிரி ஒரு இளம்பெண் மீது யாரோ ஒரு போக்கிரி ஆசிடை வீசி விட்டு ஒடி விட்டான். அதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கொடுத்த பேட்டியில் ஆசிட் சுலபமாக கிடைப்பதால்தானே பெண்களின் மீது ஆண்கள் அதை வீசுகிறார்கள். அரசாங்கம் ஆசிட் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறேன் என்று கூறியதை ஏற்றுத் தமிழக அரசு சட்ட சபையில் விவாதித்து கடைகளில் ஆசிட் விற்க தடை கொண்டு வந்து விட்டது. அது மாத்திரம் அல்ல. நாடாளுமன்றத்திலும் அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவில் கடைகளில் ஆசிட் விற்கத் தடை செய்யும் சட்டம் வந்து விட்டதே தெரியாதா உங்களுக்கு? அந்தப் புண்ணியவதி நல்லா இருக்கட்டும்” என்றான்.

இதைக் கேட்ட தமயந்திக்கு மேனி சிலிர்த்தது; மலைப்பாக இருந்தது. தான்தான் அந்தச் சட்டம் உண்டாவதற்கு காரணம் என்று புரிந்தது. என் ஒருத்தி முகத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. அதனால் ஆயிரக்கணக்கான பெண்களுக்குக் குறிப்பாக பெண் குலத்திற்கு நன்மை ஏற்பட்டிருக்கிறது. சில சமயம் கெட்டது செய்தாலும் நம்மை அறியாமல் நல்லது நடந்து விடுகிறது. வாசு ஆசிட் வீசியதால்தானே இப்போது ஆசிட் விற்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. அவனைப் பழி வாங்க வேண்டுமென்று இவ்வளவு நாள் வன்மம் வைத்திருந்தேன். நெருப்பாக கொந்தளித்தேன். அது தவறு என்று உணர்கிறேன். அவனை மன்னித்து விடுகிறேன். அவனால் உண்டாக்கப்பட்ட கருப்பு வடு என் முக அழகைக் கெடுத்து விட்டது என்று இவ்வளவு நாட்கள் நினைத்திருந்தேன். சொல்லப்போனால் அந்தக் கரும்பொட்டு என் முகத்திற்குக் கவுரவத்தையும் கம்பீரத்தையும் கொடுக்கிறது. அந்த வடுவை நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் என்று எண்ணியவள் தன் முகத்திரையை முழுவதும் அகற்றினாள்.

கடைக்காரன் பார்த்துத் அவளைப் திகைத்துப் போய் “நீங்கள்தானே அந்தச் சாதனைப் பெண்? அமருங்கள். காப்பி சாப்பிடுகிறீர்களா?” என்று மரியாதையோடு வினவியவன் அவள் அமருவதற்கு இருக்கையைக் காண்பித்தான்.

”மிகவும் நன்றி. நான் வருகிறேன்.” என்று குளிர்ந்த மனத்துடன் நகர்ந்தாள் தமயந்தி.

இதுவரை வாசுவின் மீது வன்மம் கொண்டிருந்த அவள் நெஞ்சம் தனக்கு இன்னல் செய்தவனை மன்னித்து விட்டதால் மனதிலிருந்த குப்பை நீங்கி புத்தம் புதிய வெள்ளைக் காகிதம் போலாகிவிட்டது. மனம் தூயவளாகி புடம் போட்ட தங்கமாக நெருப்பில் குளித்த சீதையைப் போல் வீட்டுக்குள் நுழைந்தாள் அவள்.

அவள் வரவுக்காகக் காத்திருந்த அவள் அண்ணன், உனக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது என்று ஒரு உறையை அவளிடம் கொடுத்தான். அவள் கடிதத்தைப் படித்தாள்.

“ஆசிட் பாதிப்புக்காக அவள் புரிந்த தீர செயலைப் பாராட்டி தமிழக அரசு அவளுக்கு விருதும், அழகு இழந்ததிற்கு இழப்பீடாக பத்து இலட்சமும் அடுத்த மாதம் கொடுக்கப் போவதை” அறிந்து ஆனந்தக் கடலில் தத்தளித்தாள்.

வெளியீடு: FreeTamilEbooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *