நீ எனக்கு யாராம் ?

0
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,848 
 
 

“டேய், தினமும் லேப்டாப்பில் அந்த பொண்ணு ஃபோட்டோ பார்த்து நீ எனக்கு யாராம்?ன்னு கேட்டுட்டு இருந்தா அந்த பொண்ணுக்கு எப்படி தெரியும்.ஃபோன் பண்ணி சொல்ல வேண்டியதுதானே, ஏண்டா இப்படி இருக்கீங்க”ன்னு வழக்கமான திருவாசகத்தை வாசித்துச் சென்றான் நண்பன். நல்ல கோடைக்காலம். வெளியே இருந்த புழுக்கம் மனதுக்குள்ளேயும் இருந்தது. சற்றே காற்று வாங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணி வீட்டிலிருந்து கூப்பிடு தொலைவில் இருந்த மிக்சிகன் ஏரியைப் பார்த்து நடந்தேன்.

நந்தினி என் தோழி, வனிதாவின் அறைத் தோழி. அவளை முதன் முதலில் பார்த்தது பெங்களூரில் அவர்களது வீட்டுக்கு வனிதா ட்ரீட் என அழைத்த பொழுது. ட்ரீட் என்றால் எனக்கு மட்டும்தான். வனிதா நந்தினியை அறிமுகப்படுத்தியபோது ஒரு ஹாய் சொல்லிவிட்டு நான் பாட்டுக்கு வனிதாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். நந்தினி இதில் எதும் கலந்து கொள்ளாமல் சமையல் கட்டில் நின்று கொண்டிருந்தாள். ஏன் எங்ககூட எல்லாம் பேச மாட்டீங்களா என அவளிடம் கேட்டதுக்கு இல்லை பேசுவேனே என வந்து கூட உக்கார்ந்து கொண்டாள்.

பேச்சு சுவாராசியத்தில் “வனிதா, உனக்கு நிறைய பசங்க ஃபிரெண்டா இருக்காங்க, இதெல்லாம் நல்லதுக்கு இல்லை, இந்த மாதிரி வீட்டுக்கு கூட்டி வருவதெல்லாம் நல்லா இல்லை” என சொன்னாள். “நந்தினி, உன்னோட நேருக்கு நேர் சொல்லும் இந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வனிதா, நீ என்னை கூப்பிடறதுக்கு முன்னாடி அவகிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம், சரி நான் கிளம்பறேன்” என்றேன். “அய்யோ, செஞ்ச சாப்பாடு எல்லாம் வீணா போயிடும், சாப்பிட்டு போங்க” என்றாள் நந்தினி. இப்படித்தான் ஆரம்பித்தது எங்கள் பழக்கம்.

அப்போது வீடு வாடகைக்கு தேடிக் கொண்டிருந்த நேரம். “வனிதா, நந்தினி கிட்ட சொல்லி அவங்க கம்பெனியில் யாராவது வீடு காலி பண்ணறாங்களான்னு கேட்டு சொல்லறியா” என கேட்டேன். “நாயே, இதுக்கெல்லாமா ஆள் வைப்ப, இதுதான் மெயில் ஐடி, நீயே மெயில் பண்ணி கேட்டுக்கோ” என்றாள் நந்தினி. “இல்ல, நேத்து அவ பேசினத கேட்டா அவ ஒரு பத்திரகாளி மாதிரி தெரியுது, வழியறதுக்கு நானா கிடைச்சேன்னு சொன்னா ஏற்கனவே பஞ்சரான மூஞ்சிய நான் எங்க கொண்டு போய் வைப்பேன்” என பரிதாபமாக கேட்டேன். “சரி சரி… நான் மெயில் பண்ணரேன். உனக்கும் ஒரு காப்பி அனுப்பறேன். அப்புறம் நீயே பார்த்துக்கனும், சரியா?” என்ற வனிதாவின் வார்த்தைகள் நந்தினியுடனான நட்பின் முதல் அடியை எடுத்து வைக்க உதவின.

வனிதா மெயில் அனுப்பியதும் நந்தினியிடமிருந்து உடனே பதில், எந்த ஏரியா, எந்த விலை என்று. என் கிளையண்டுக்கு மெயில் பண்ணும் போதுகூட அவ்வளவு முறை எழுத்துப்பிழை சரி பார்த்திருக்க மாட்டேன். சாமியை கும்பிட்டு விட்டு மெயில் அனுப்பினால் படபடவென நாலைந்து மெயிலகள் வந்தது. எதுவும் தேராததால் உங்க போன் நம்பர் குடுங்க என கேட்பதற்க்கு நடுங்கிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, இதுதான் என் நம்பர் போன் பண்ணுங்க, இன்னும் நல்லா தேடலாம் என மெயில் வந்தது. நந்தினியின் புண்ணியத்தில் அவர்கள் வீட்டுக்குப் பக்கதிதிலேயே ஒரு நல்ல வீடு கிடைத்தது.

அதற்க்கப்புறம் ஒரு 2 மாசத்துக்கு வனிதாவிடமோ நந்தினியிடமோ பேசவே இல்லை. திடீரென வனிதாவிடமிருந்து போன், எனக்கு புரமோஷன் கிடைச்சிருக்கு, ட்ரீட் குடுக்கிறேன் என்றதும் உடனே கிளம்பிவிட்டேன். வனிதாவுடன் நந்தினியை பார்த்ததும் என் கால்கள் பின்னால் நகர்ந்தது. “இல்லை, எனக்கு வயிறு சரியில்லை, இன்னொரு நாள் பார்க்கலாம்” என்றேன். “பராவாயில்லை, என் பக்கதில் உக்கார்ந்துக்குங்க, நான் சைவம் தான் சாப்பிடப் போறேன், நீங்களும் தயிர் சாதம் சாப்பிடலாம், உடம்புக்கு ஒன்னும் ஆகாது” என நந்தினி சொன்ன பொழுது என் காதுகளை என்னாலேயே நம்ப முடியவில்லை.

அப்போ அவளுடன் பேசியதுதான், அதற்கப்புறம் மீண்டும் 2 மாசமானது அவளுடன் பேச. இந்த முறை துணைக்கு வந்தது என் பிறந்தநாள். நைட் 12 மணிக்கு ஆரம்பித்த நண்பர்கள் கூட்டம் இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தது. உலகில் எங்கேயே இருந்தாலும் என் பிறந்த நாளை ஞாபகம் வைத்து அனைவரும் பேசியதால் ரொம்ப சந்தோஷமாக 4 மணிக்கு தூங்கப் போனேன். காலை 7 மணிக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி, செல் போனில் எனக்கு பிடித்த ரிங் டோன். மறு முனையிலிருந்து “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்ற வார்த்தைகள் மட்டும். “தேங்க்ஸ், யாரு?” என்று தூக்க கலக்கத்தில் கேட்டேன். அதானே, எங்களை எல்லாம் எப்படி ஞாபகம் வைச்சிருப்பீங்க, நான் நந்தினி. இன்னும் தூக்கம் தெளியலை?” என்றாள். “உன் வாய்ஸை மறக்க முடியுமா? எப்படி என் பிறந்தநாளை ஞாபகம் வைச்சிருக்கே, ரிமைண்டர் செட் பண்ணி வைச்சிருக்கியா?” என தூக்க கலக்கத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசினேன். “ஆமா, ரிமைண்டர் என் மண்டையில் இருக்கு.சரி, நான் அப்புறம் கால் பண்ணறேன், நீயும் ஆபீஸ் கிளம்பு” என போனை வைத்து விட்டாள்.

அன்றிலிருந்து ஏதாவது ஒரு காரணத்துக்காக நான் நந்தினிக்கு ஃபோன் செய்வதை ஒரு 2 வாரம் செய்திருப்பேன். வேலை அது இது என திரும்பவும் ஒரு மாதம் இடைவெளி. வீடு வாங்கலாம் என திட்டம் போட்ட போது திரும்பவும் நந்தினி ஞாபகம். ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னால், “காரியம்ன்னா மட்டும்தான் ஃபோன் பண்ணுவீங்க, இல்லைன்னா கண்டுக்கவே மாடேங்க, அப்படித்தானே?” என்ற நந்தினியின் குரலில் இருந்த நக்கல் செருப்பால் அடித்த மாதிரி இருந்தது.

அப்புறம்தான் தெரிந்தது நந்தினியின் உண்மையான குணம். மணிக்கணக்கில் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம். “நந்தினி, ரொம்ப போர் அடிக்குது, உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?” எனக் கேட்ட போது “ஆகாயம், பூமி, மரம், பாட்டு, மழை என அடுக்கிக் கொண்டே போய் உன்கூட பேசறதும்” ந்னு சொன்ன அவள் போது எனக்கு எங்கேயோ இடித்தது. அவளுக்கு பிடித்ததெல்லாம் எனக்கு பிடிக்காது என்றாலும் எக்ஸெப்ஷன் போட்டு பிடிக்கும் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டேன். அவள் பிடிக்கும் என்ற பாடல்களை தேடிப் பிடித்து டவுன்லோட் செய்து கேட்டு கேட்டு எனக்கும் பிடித்த மாதிரி மாற்றிக் கொண்டேன்.

திடீரென நந்தினியை காணவில்லை, மெயில், போன் ஒன்றுக்கும் பதில் இல்லை. வனிதாவை கேட்டால் “ஊருக்கு போனால் வரவே இல்லை, நிச்சயதார்த்தமோ என்னவோ” என சாதரணமாக சொல்ல எனக்குள் லேசான நடுக்கம். “என்னது?” என கத்த, “எனக்கென்ன தெரியும், உடம்பு சரியில்லைன்னு ஊருக்கு போனவ திரும்பி வந்தாதான் தெரியும்” என்று சொன்னபின் தான் மனம் லேசானது. நந்தினி திரும்பி வந்தவுடன் ஒவ்வொரு வேளைக்கும் ஃபோன் பண்ணி மருந்து சாப்பிட்டாச்சா, ரசம் சாதம் சாப்பிடு என அவளுக்கு நர்ஸ் வேலை பார்த்தேன்.

நந்தினி எப்போ ஃபோன் பண்ணினாலும் முதல் கேள்வி “வேலை இருக்கா?” என்பதுதான். “வேலையா? எனக்கா? இங்க சும்மாதான் உக்கார்ந்திருக்கேன், நீ பேசு” என மணிக்கணகில் பேசுவேன். என் மேனேஜர் அந்த பக்கம் சைகையில் வேலை முடிய எத்தனை நேரமாகும் எனக் கேட்டால் ஒற்றை விரலைக் காட்டுவேன். சரி, ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன் என்று சாடை செய்துவிட்டு அவர் திரும்ப வந்து பார்க்கும் போதும் அதே பொஷிசனில் சாய்ஞ்சாடம்மா சாய்ஞ்சாடு ந்னு பேசுவதை நான் நிறுத்தியதே இல்லை. “அதெப்படி உனக்கு மட்டும் வேலையே இல்லை?” என நந்தினி கேட்டால்,”ஏன்? உனக்கும்தான் இல்லை, என்கூட மணிக்கணக்கில் பேசவில்லை” என சமாளித்தேன்.

“நான் இன்னும் 4 நாளில் அமெரிக்கா போறேன் என்றதும், எனக்கும் வரனும்னு ஆசையா இருக்கு” என்றாள். “H4 விசா அப்ளை பண்ணலாம், அது ரொம்ப சுலபம்” என்றேன். அவளுக்கு புரிந்ததா புரியலையான்னு தெரியவில்லை. “ஊருக்குப் போறேன், என்னால ஏர்போர்ட் வரமுடியாது. சரி, நீ சாப்பிட்டியா?” என்றாள். “இல்லை, என்னனு தெரியலை. பசி, இருக்கு, ஆனா சாப்பிட முடியலை” என நான் சொல்லி முடிப்பதற்க்குள் “ஆமா,தூக்கம் வருது, ஆனா தூங்க முடியலை அதானே?” என சிரித்துக் கொண்டே சொன்னாள். “ஹேய், உனக்கெப்படி அது தெரியும்?” என ஆச்சர்யத்தை அடக்க முடியாமல் கேட்டால் “எனக்கும் அப்படித்தான் இருக்கு” என்றாள். நான் கொஞ்சமாக மேகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன். “காய்ச்சல் வந்தா இப்படித்தான் இருக்கும், அதான் நான் ஊருக்கு போறேன்” என்றாள். நான் அமைதியாக இருந்தேன். “நீ ரொம்ப யோசனை பண்ணி பண்ணி பேசற, மனசுல வேற எதோ நினைச்சுட்டு இருக்கியா?” என்றாள்.

நீ எனக்கு யாராம்? என்ற கேள்வி என் தொண்டைக்குழிக்குள் இருந்தும் அதை மட்டும் சொல்லாமல் ஊர்க்கதை எல்லாம் பேசினால் யோசனை பண்ணித்தான் பேசியாக வேண்டும். மனசெலாம் நீ இருக்கிறப்போ மத்ததை யோசனை பண்ணவே முடியலை. எதாவது பேசணுன்னா வார்த்தையை தேடித்தானே ஆகணும் என்று மனதுக்குள்ளும், ஒன்னுமில்லையே என்று வெளியில் சொல்லிவிட்டு அமெரிக்கா வந்து சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது. எத்தனையோ வாய்ப்புகள் உருவாக்கி சொல்லியிருக்கலாம். “நீ இப்படியெல்லாம் நினைப்பேன்னு நான் கற்பனையில் கூட நினைத்தில்லை, போடா நீயும் உன் புடலங்காய் நட்பும்” என தூக்கியெறிந்தால் அதைவிட மோசமான நிகழ்வு என் வாழ்க்கையில் திரும்பவும் நடக்காது. நீ எனக்கு யாராம்? என்ற கேள்வி நான் புதையும் வரை கூடவே இருக்கும்.

– உதய் [udhayakumar.d@gmail.com] (ஆகஸ்ட் 2006)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *