ஆனந்தவிகடனின் பரிசு பெற்ற கதை
ஆனந்தவிகடன் பவழவிழா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்று, மூன்று கோடிக்கு மேற்பட்ட வசகர்களைச் சென்றடைந்த கதை. இந்தக் கதைக்கு பிரபல ஓவியர்களான ஜெயராஜ், மாருதி, ராமு, அர்ஸ், பாண்டியன் ஆகியோர் ஓவியம் வரைந்திருந்தனர். விகடனில் ஐந்து ஓவியர்கள் படம் வரைந்த இக்கதை 3 மில்லியன் வாசகர்களுக்கு மேல் சென்றடைந்தது குரு அரவிந்தனுக்குத் தமிழ் இலக்கிய உலகில் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும்.
இந்தக் கதையை எழுதியது யார் என்ற விகடனின் போட்டியில் ‘குரு அரவிந்தன்’ என்று சரியாகப் பதிலளித்த 45,261 வாசகர்ளில் குலுக்கல் முறையில் தெரிவான ஏழு அதிஸ்டசாலிகளான வாசகர்களுக்கு விகடன் முத்திரை பதித்த தங்கப்பதக்கம் பரிசாகக் கிடைத்தது.
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2
நேரம்: 00:00:01 சனிக்கிழமை
நடுநிசி பன்னிரண்டு மணி இருக்கும், திடீரென உலகத்தின் பார்வை எல்லாம் அந்தச் சிறிய துறைமுகத்தை நோக்கித் திரும்பியிருந்தது. கடும் காற்றுமழையையும், குளிரையும் பொருட்படுத்தாமல் செய்தி ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பல தேசங்கங்களிலிருந்தும் அங்கே வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். சற்றும் எதிர்பாராத இவர்களின் நடவடிக்கையால் என்றுமே இல்லாதவாறு அந்தத் துறைமுகம் ஒரே பரபரப்பாக இருந்தது. என்ன நடக்குமோ என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு எல்லோர் முகத்திலும் கேள்விக் குறியாய் நின்றது!
‘கடற்கழுகு’ என்ற அந்தக் கப்பல் துறைமுகத்தில் பாதுகாப்பாக நங்கூர மிட்டிருந்தாலும் சூறாவளியின் வேகத்தைத் தாங்கமுடியாமல் மெல்ல ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. ஆழ்கடலில் அவசர நேரங்களில் உதவி செய்வதற்கு வேண்டிய அத்தனை வசதிகளோடும் அந்தக் கப்பல் அமைக்கப் பட்டிருந்தது. அந்தக் கப்பலுக்கருகே எல்.ஆர்-5 என்ற நவீன வசதிகளைக் கொண்ட ஆபத்தில் உதவி செய்யும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் தயார் நிலையில் நின்றது.
இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் கடல் அலைகள் பொங்கி எழுந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தன.
கண்களை மூடிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்த மைக்கேலுக்கு ‘கடற்கழுகின்’ ஆட்டம் தாலாட்டுவது போல இருந்தது. மிகப் பெரிய பொறுப்பு ஒன்று அவனிடம் மேலிடத்தால் ஒப்படைக்கப் பட்டிருந்ததால் அவன் ஒருவித பதட்ட நிலையில் இருந்தான். பிறந்த நாட்டிற்காக இதைச் செய்கிறோம் என்பதை விட அவனிடம் இயற்கையாய் இருந்த மனிதாபிமானமும் இரக்க குணமுமே அவனை எந்த மறுப்பும் சொல்லாமல் அந்தப் பொறுப்பை ஏற்க வைத்தன. எடுத்த பொறுப்பைச் சரிவரச் செய்து முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு அவன் இருந்தான். ஆனால் அவனது கடமையைச் சரிவரச் செய்ய முடியாமல் இரவு முழுவதும் இயற்கையின் சீற்றம் தடை செய்து கொண்டிருந்தது. என்றும் இல்லாதவாறு சூறாவளியும் கடல் கொந்தளிப்பும் அவர்களை ஆழ்கடலுக்குச் செல்ல முடியாமல் பயம் காட்டிக் கொண்டிருந்தன.
‘எப்படியும் காலையில் முதல் வேலையாக அவர்களைக் காப்பாற்றியாக வேண்டும். லாரிஸாவிற்குக் கொடுத்த வாக்கை நான் எப்படியும் காப்பாற்ற வேண்டும்!’ மைக்கேல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
மேலிடத்திற்குக் கொடுத்த வாக்கை விட லாரிஸாவிற்குக் கொடுத்த வாக்கே அவனுக்கு முதன்மையாகப் பட்டது. நீண்ட நாட்களின் பின் லாரிஸாவை எதிர்பாராமல் சந்தித்ததும், திடீரென அவனைத்தேடி லாரிஸா வருவாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்காததும், அவனது பதட்ட நிலைக்கு ஒரு காரணமாய் இருந்திருக்கலாம்.
‘வாக்குக் கொடுத்தால் அதைக் காப்பாற்றணும், அதுதான் மனிதனுக்கு அழகு’ கிராமத்தில் இருக்கும் அவனது தாயார் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் தான் அவனது தாரக மந்திரமாய் இப்போது இருந்தது.
‘வாக்குக் கொடுத்தால் உயிரே போனாலும் கொடுத்த வாக்கை நிறை வேற்றாமல் இந்த மைக்கேல் விடமாட்டான் என்பதை காலமெல்லாம் எண்ணி யெண்ணி லாரிஸா வெட்கப்படணும்.’
‘மைக்கேல் உன்னிடம் மன்னிப்புக் கேட்கும் தகுதி கூட இந்தப் பாவிக்கில்லை, ஆனால் இதை விட்டால் எனக்கு வேறு வழியே தெரியலை! உன்னால் தான் இந்த உதவியைச் செய்ய முடியும். நீ தான் என் கணவருக்கு உயிர்ப்பிச்சை தரணும், தயவு செய்து மாட்டேன் என்று மட்டும் சொல்லிடாதே ப்ளீஸ்…!’ அவள் அவனது கால்களைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினாள்.
‘அங்கிள் எனக்கு அப்பா வேணும்…!’ லாரிஸாவின் பெண் திரேஸா, ஏழு வயதிருக்கலாம் கண்களில் நீர் முட்ட அவனை பரிதாபமாய்ப் பார்த்தாள்.
‘அங்கிள்….!’ அவனால் ஜீரணிக்க முடிய வில்லை! ஸாரிஸாவின் பெண்ணுக்கு அவன் அங்கிள் ஆகிவிட்ட கதையை நினைக்க மனவேதனை கொழுந்து விட்டு எரிந்தது. அப்பா ஸ்தானத்தில் இருக்க வேண்டியவன் இன்று அங்கிள் ஆகிவிட்டான்.
கயிற்றிலே நடப்பது போல கொஞ்சம் தவறினாலும் உறவுமுறைகள் இப்படி எல்லாம் மாயாஜாலம் காட்டிவிடுமோ?
தாயும் மகளும் அவனிடம் கையேந்தி நிற்பதைப் பார்த்து அவன் உண்மையிலே உடைந்து போய்விட்டான்.
‘அழாதே லாரிஸா! நீ அழுதால் அதை என்னாலே தாங்கிக்க முடியாது!’
அவனது இளகிய மனதை அவள் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டாள்.
‘அப்போ நீ எனக்கு உதவி செய்வியா? என் கணவரைக் காப்பாற்றுவியா?’ ஏக்கத்தோடு கேட்டாள்.
‘உனக்காக எதையும் செய்வேன் லாரிஸா’ திறந்த மனதோடு எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் பதில் சொன்னான்.
‘ப்ராமிஸ்…?’ அவள் கையை நீட்டினாள்.
‘ப்ராமிஸ்….!’ அவன் அவள் கையைத் தொட்டுச் சத்தியம் செய்தான்.
பொட்டென்று கண்ணீர் துளி ஒன்று அவனது கைகளில் பட்டுத் தெறித்தது.
நினைவுகள் முள்ளாய் நெஞ்சில் ஆழமாய்ப் புதைந்து உறுத்திய வேதனை. எப்படி இவளால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் என்னிடம் உதவி கேட்டு வரமுடிந்தது? தன் குடும்பத்திற்கு ஒன்றென்றால் பெண்மை யாரிடமும் கையேந்துமோ?
இதே போலத் தான், இன்று இவள் கேட்டது போலவேதான் அன்றும் அவன் அவளது கைகளைப் பிடித்துக் கெஞ்சினான்.
‘நீ என்னைக் காதலிப்பது நிஜமானதென்றால், என்மேல் வைத்திருக்கும் அன்பு புனிதமானதென்றால், தயவு செய்து மாட்டேன் என்று மட்டும் செல்லி விடாதே லாரிஸா!’
அவளிடம் அன்று காதலை யாசித்த போது இரக்கமே இல்லாமல் இவனது கைகளை உதறிவிட்டு இதயத்தைச் சுக்குள் நூறாய் உடைத்து எறிந்து விட்டுப் போய்விட்டாள்.
அன்று போனவள் அப்படியே போயிருக்கலாம்! ஆனால் இத்தனை வருடத்தின் பின் இன்று மீண்டும் இவனைத் தேடி வந்திருக்கிறாள். தனிமையில் அல்ல தனது பெண்னோடு! அதுவும் கட்டிய கணவனுக்காக உயிர்ப் பிச்சை கேட்டு இவனிடம் யாசித்து நிற்கிறாள்.
நேரம்: 02:10:35 சனிக்கிழமை
‘மைக்கேல் கால் ஃபார் யூ!’
அவன் சிந்தனையில் இருந்து விடுபட்டு தொலைபேசி இருந்த கபினுக்குள் நுழைந்தான்.
இந்த நேரத்தில் அழைப்பது யாராய் இருக்கும்?
‘மைக்கேல் ஹியர்!’
ராணுவ அமைச்சகத்தில் இருந்து பாதுகாப்பு மந்திரி தான் மறுபக்கத்தில் குரல் கொடுத்தார்.
‘மைக்கேல் எப்படி இருக்கிறாய்? உன்னைத்தான் நம்பி இருக்கின்றோம்! எல்லாம் தயார் நிலையில் இருக்கின்றனவா?’
‘ஜெஸ் ஸார்! எல்லாம் ரெடி. நாங்க காலையில் கிளம்ப இருக்கின்றோம்!’
‘நாங்க என்றால்? எத்தனை பேர் போறீங்க?’
‘பன்னிரண்டு! ஆனால் நான்தான் ஆழ்கடலுக்குப் போய் சப்மரீன் கதவைத் திறக்கப் போறேன். என்னோட உதவியாளன் ஷேர்மனும் உதவிக்கு வர்றான். மற்றவங்க எல்லாம் ஸ்டான்ட்பை.’
‘ரொம்பப் பொறுப்பான வேலை. ஷேர்மன் எப்படி ஒத்துழைப்பானா? நம்பிக்கையானவனா?.
‘ஆமாம் ஸார்! நம்பிக்கையானவன். கடந்த ஐந்து வருடமாய் என்னோடு தான் தொழில் செய்யிறான்’
‘அப்படியா? காலநிலை எப்படி இருக்கிறது? காலையில் சரியாயிடுமா?’
‘சரியாயிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். சரியோ இல்லையோ நாங்க போவதாக முடிவெடுத்திட்டோம்!’
‘நாடே பதட்ட நிலையில் இருக்கிறது. அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டு மக்களிடம் இருந்து வருமுன் நாங்க ஏதாவது செய்தாகணும்!’
‘நிச்சயமாக! காலையில் எப்படியும் ஒரு முடிவு தெரியும்!’
‘அப்படியா? நல்லது அவசரமாக கபினெட் கூட்டம் நடக்கிறது, பல விடயங்களைப் பற்றி அவசரமாக முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது. கூட்டம் முடிந்ததும் தேவையானால் எதற்கும் காலையில் உன்னோடு தொடர்பு கொள்கிறேனே!””
‘யெஸ் ஸார்!’
‘குட்லக் மைக்கேல்!’
‘தாங்யூ ஸார்!’
அத்துடன் தொடர்பு துண்டிக்கப் பட்டது.
பாதுகாப்பு மந்திரி தன்னோடு தொலைபேசியில் நேரடியாகப் பேசியது அவனுக்குப் பெருமையாக இருந்தது. நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய மேலிடத்தின் கவலை அவனுக்குப் புரிந்தது. அவர்கள் பதற்றப் படுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. ஆனால் வெளியே சொல்ல முடியாத பல அரசியல் ரகசியங்களை அம்பலத்திற்குக் கொண்டு வர அரசு விரும்பவில்லை.
முதலில் இதை உள்நாட்டுப் பிரச்சனையாகத் தான் அரச அதிகாரிகள் நினைத்தார்கள். ஆழ்கடலில் ஆபத்தில் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கும் ஸப்மரீனுக்குள்ளே மாலுமிகள் உயிருக்குப் போராடுகிறார்கள் என்று தெரிந்ததும் அவர்களது குடும்பத்தின், உறவினரின் வேண்டுகோளை நிறைவேற்ற வேறு வழியில்லாமல் வெளிநாடுகளின் உதவியை எதிர் பார்க்க வேண்டி வந்தது. அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றுச் சில நாடுகள் உதவிக்கு வந்தன.
அந்த வகையில் தான் இந்தக் கடற்கழுகு என்ற கப்பலும், எல்ஆர்-5 என்ற ஆபத்திற்கு உதவி செய்யும் அந்த நீர்மூழ்கிக் கப்பலும் உதவிக்கு வந்தன. எந்த நிமிடமும் ஆழ்கடல் நோக்கிப் புறப்படுவதற்கு அவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
– தொடரும்…
– நீர்மூழ்கி…! நீரில் மூழ்கி…! (குறுநாவல்), முதற் பதிப்பு: 2020, ஆனந்தவிகடன் பவழவிழா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை.
குரு அரவிந்தனின் நீர் மூழ்கி நீரில் மூழ்கியை எப்படியாவது மீண்டும் ஒருதடவை வாசிக்க வேண்டும் என்று ஆவலோடு இருந்தேன். சந்தர்ப்பம் தந்ததற்கு நன்றி,