நினைவலைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 989 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருமணம் முடிந்து ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தபோது, நண்பர்களுக்காகவும் வந்திருந்த உறவினர்களுக்காகவும் போலியாக சிரித்துக் கொண்டிருந்தான் சிவா. மனம் இன்னும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. புது மனைவி புதுப்புடவையுடன் அடிக் கடி ஓரக்கண்ணால் பார்த்தபோது எங்கோ நெருடியது.

நண்பர்கள் பரிசுப் பொருட்களை கொடுக்கும் போதும், கூட நின்று வீடியோ எடுத்துக் கொள்ளும் போதும் அவர்களோடு சில சில விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும் போதும் சிவாவின் கண்கள் அந்தக் கல்யாண கூட்டத்தில் கல்யாணியைத் தேடிக் கொண்டிருந்தது.

‘நான் இன்விடேஷன் கூட கொடுக்கவில்லை. எப்படி என் திருமணம் இவளுக்குத் தெரிந்தது? ஒருவேளை பெண் வீட்டாருக்கு உறவோ? என் மனைவி தேவியிடம் இவள் எல்லாவற்றையும் சொல்லியிருப்பாளோ? என் வாழ்க்கை…’

“இதெல்லாம் என் தோழிகள்” என்று தேவி அறிமுகப்படுத்தி வைக்க ‘ஆங்’ என்று திரும்பியவன் வலுவாகச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு ஹலோ -சொன்னாள். “இது கவிதா, மோனிஷா, கலா, புவனா” என்று வரிசையாக அறிமுகப்படுத்தியபோது, “என்ன சார், எங்ககூட பேசக்கூடாதென்று ஏதாவது சபதம் எடுத்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள் மோனிஷா.

“சே! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்று சொல்லும்போது வியர்த்துக் கொட்டியது சிவாவிற்கு.

“உங்களுக்கு ஏன் சார் வியர்த்து கொட்டுகிறது. இப்படி? ஏண்டி தேவி, உன் கணவருக்குக் கொஞ்சம் துடைத்து விடேண்டி” என்று புவனா சொல்ல எல்லோரும் சேர்ந்து சிரித்தனர்.

அந்தச் சிரிப்பிலும் கலந்துகொள்ள முடியாமல் தத்தளித்த சிவா, திரும்பவும் கூட்டத்தில் கல்யாணி யைத் தேடினான்.

அப்போது திடீரென்று கல்யாணி முன்னேறி வருவது தெரிந்து டென்ஷனாகிப் போனான் சிவா.

“என்னை விரட்டி விரட்டிக் காதலித்து விட்டு காரும் பணமும் கொண்டு வருகின்ற பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாயா? உன்னைச் சும்மாவிட மாட்டேன் சிவா! உன் திருமணத்தை நிறுத்திக் காட்டுவேன்.

முடியவில்லை என்றால் உன் மானத்தை வாங்கி நீ வாழ்நாள். முழுவதும் நிம்மதியில்லாமலிருக்கச் செய்து விடுவேன். என் மனதில் வளர்ந்திருந்த காதலின் வலிமை இனி வெறியாக மாறி உன்னைப் பழி வாங்கும்!

கல்யாணி என்னை மன்னித்து விடு என்று நீ கதறி அழுதாலும், காமுகனே! இனி உன் வாழ்க்கையில் நிம்மதி கிடையாது” என்று கல்யாணி அந்த இறுதி சந்திப்பில் அழுது அவன் சட்டையைப் பிடித்து இழுத்து கதறி விட்டுப் போனது நினைவிற்கு வந்தது.

கல்யாணி மேடைக்கு வந்து அவளை ஒரு கணம் பார்த்து விட்டு தேவி பார்க்க, அவனை பார்த்துச் சிரித்தாள். சிவாவிற்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. ‘இவள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இவளிடம் நான் சரியான காரணகர்த்தாக்களை விவரமாகச் சொல்லியும் இவள் என்னைப் புரிந்து கொள்ள வில்லை. இப்போது என்ன செய்ய போகிறாள். நான் எழுதிய கடிதங்கள் அனைத்தையும் எடுத்து வந்து எல்லோரிடமும் காட்டப் போகிறாளா. நாங்கள் எடுத்த போட்டோக்களை ஒவ்வொருவரிடமும் காட்டி என்னைச் சந்தி சிரிக்க வைக்கப் போகிறாளா?’. கல்யாணி நாம் இணைய முடியாமல் போனதற்கு நான் சரியான காரணங்கள் விளக்கிக் கூறிய பிறகும் நீ தான் புரிந்து கொள்ள மறுத்து விட்டாய் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே. அருகில் வந்த கல்யாணி, “ஹாய் சிவா. ஹேப்பி மாரிட் லைப்” என்று கையைப் பற்றிக் குலுக்கினாள். அவனுக்குள் உடலெங்கும் உதறலெடுத்தது.

“என்னை உன் மனைவியிடம் அறிமுகப்படுத்தி வைக்க மாட் டாயா?” என்று கேட்டாள்.

“ம்…ம்…ம்கூம்…ம்…’

“என்ன?”

“அதெல்லாம்… தேவி. இது கல்யாணி. என் தோழி” என்று அருகில் நின்ற தேவியிடம் வார்த்தை குழறலாகச் சொல்லி முடித்தான் சிவா.

“வணக்கம், எப்படியிருக்கீங்க. குடும்பத்தோடு வரக்கூடாதா?” என்று கேட்டாள் தேவி சிரித்தவாறு,

“குடும்பம்.. வர வேண்டியது தான். சூழ்நிலை சரியில்லை” என்ற -கல்யாணி “ஆங்.. மறந்து போய் விட்டது. உங்களுக்கு ஒரு கல்யாண பரிசு கொண்டு வந்தேன்” என்று கையிலிருந்த தாஜ்மஹால் பொம்மையை தேவியிடம் கொடுத்தவள் “எப்படி இருக்கிறது?” என்றாள்.

“ரொம்ப அழகாயிருக்கு. எனக்கு தாஜ்மஹால் மிகவும் பிடிக்கும்” என்றாள் தேவி.

கல்யாணி, சிவாவின் முகத்தைப் பார்க்க சிவா தலையைக் குனிந்து கொண்டான்.

வேறு நண்பர்கள் அருகில் வந்து பரிசுப் பொருட்கள் தர, கல்யாணி ஒதுங்கி இறங்கிச் சென்றாள். சிவாவிற்கு டென்ஷன் தெளிந்து மெதுவாக சுபாவ நிலைக்கு வர கொஞ்ச நேரம் ஆகி விட்டது.

நண்பர்களும், உறவினர்களும் வந்து போய்க் கொண்டிருக்க, சிவாவிற்கு தெரியும்படியாக ஒரு நாற்காலியில் அமர்ந்து கூல்டிரிங்ஸ் குடித்துக் கொண்டு கையை ஆட்டினாள் கல்யாணி.

‘திரும்பவும் கல்யாணியைப் பார்த்தவன் ஏன் இவள் இன்னும் போகவில்லை’ என்று வெறுத்துப் போனான் சிவா.

ரிசப்ஷன் முடிந்து எல்லோரும் கிளம்பி விட, உறவினர்கள் பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டினுள்ளே கொண்டு வைக்க, தேவி உள்ளே போய்விட, தனியாக நின்ற சிவாவிடம் திரும்பவும் வந்தாள் கல்யாணி.

“என்ன கல்யாணி.” பேச்சு வர மறுத்தது சிவாவிற்கு.

“பயப்படாதே சிவா. முதலில் உன்னை பழி வாங்கத்தான் நினைத்தேன். அப்புறம் தான் ஒருவர் வாழ்க்கையை ஏன் வீணாகக் கெடுக்க வேண்டும் என்று தோன்றியதால் தான் நீயாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி விட்டுப் போக வந்தேன்.

இவ்வளவு நேரம் என்னைப் பார்த்துப் பயந்தாயே… அதுவே நான் கொடுத்த தண்டனையாக இருக்கட்டும்.

இனிமேலாவது – ஸாரி அடுத்த ஜென்மத்திலாவது இப்படி யாரையும் காதலித்து விட்டு கைவிட்டு விடாதே. வருகிறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினாள் கல்யாணி.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சிவாவின் கண்ணில் நீர் முத்து திரண்டிருக்க, “என்னாச்சு” என்று கரிசனமாகக் கேட்டாள் அங்கு வந்த தேவி. “ஒன்றுமில்லை தூசி விழுந்து விட்டது” என்றான் சிவா கண்களைத் துடைத்துக் கொண்டு.

– 10-7-2004, தினபூமி – ஞாயிறுபூமி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *