கதை ஆசிரியர்: சா.கந்தசாமி.
ரங்கராஜன் பேனாவை மூடிக் கொண்டு எழுந்தான். அவன் பார்வை ஆபீஸ் முழுவதும் சென்றது. ஆர்.கே.ராவ் தலை குனிந்தபடியே எழுதிக் கொண்டிருந்தான். எப்போதும் அவன் அப்படித்தான். பொடி போட மட்டும் தான் தலை நிமிருவான். அப்புறம் சுகுமாரி. அவள் கண்களை மூடித் திறந்து– தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள். இவன் ஒன்றையும் கவனிக்கவில்லை. கண்கள் ரங்கதுரையைத் தேடின. ஆனால் அவன் காலையிலிருந்து தென்படவேயில்லை. அவன் வரவில்லையோ என்று நினைத்தான். அந்த நினைப்பே பயத்தைத் தந்தது. துரை மூன்று மணிக்கு மேல் ‘சி ‘ செக்ஷனில் இருப்பான். அவன் கொடுக்கல்–வாங்கல் எல்லாம் பெரும்பாலும் அங்கேதான்.
ரங்கராஜன் ‘சி ‘ செக்ஷனில் நுழைந்ததும், வேலு, ‘துரையா, சார் ? ‘ என்று கேட்டான். அவன் துரையின் கூட்டாளி. வராத கடனை வாங்கத் துரை அவனைத்தான் கூட்டிக் கொண்டு செல்லுவான். இவன் தலையசைத்தான். ‘பத்து மணிக்கு வந்தான் சார். இரு இதோ வர்றேன்னு கீழேதான் இறங்கினான். உங்களப் பார்க்கத் தான் வர்ரான்னு நினைச்சேன் ‘ ‘ என்றான்.
இவன் பதிலொன்றும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சொல்வது உண்மையா என்பதை இவனால் தீர்மானிக்க முடியவில்லை.
‘–எப்படியும் இப்ப வந்துடுவான், சார். வந்ததும் உங்கள வந்து பார்கச் சொல்லுறேன். ‘
ரங்கராஜன் அவன் பக்கமாகச் சென்று ‘மறந்துடாதே, ‘ என்றான். அதைச் சொல்வதே கஷ்டமாகி, குரல் அன்னியக் குரல் போல ஒலித்தது. அப்புறம் தயங்கி வேலு சொல்ல மறந்துவிட்டால் என்ன செய்வது என்று நின்றான். ஆனால் நிற்பது இன்னும் கஷ்டமாகியது. மெதுவாகத் திரும்பித் தன்னிடத்திற்கு வந்தான். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சுற்று முற்றும் பார்த்தான். காபிக்கு ஆபீஸ் கலைந்து கொண்டிருந்தது. இவன் பையில் கை விட்டான். இரண்டு ரூபாய் நோட்டு வெளியே வந்தது. காபி சாப்பிடலாம்… துரை வராவிட்டால் அவனைக் கண்டுபிடிக்கும் வரையில் செலவுக்குக் கையில் காசு வேண்டும். காபி குடிக்கும் எண்ணத்தை இவன் கைவிட்டு விட்டான்.
துரை விஷயமே இப்படித்தான். அவசியம் ஏற்படும் போதெல்லாம் மறைந்து விடுகிறான். வேண்டுமென்றுதான் செய்கிறானா ? உம்…இருக்காது. ஆயிரம் வேலை…நூறு இடத்திற்கு அலைந்து திரிகிறான்… கொடுக்க வேண்டியவனுக்குக் கொடுத்து…வாங்க வேண்டியவனிடம் வாங்கி…போனமாதம் இந்தத் தேதியில் பின்னாலேயே சுற்றினான். ஆனால், இவன் பணம் கேட்கவில்லை.
துரை பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு, ‘துரை தேவைப் படலீயா சார் ? ‘ என்று கேட்டான்.
‘என்ன விடமாட்டியா, துரை ? ‘
‘அதுல்ல, சார். காசு இல்லாம நீங்க கஷ்டப்படக் கூடாதுல்ல. ‘
‘அட, தர்மப் புண்ணியவானே ‘ ‘
‘போங்க, சார். நானா வலிய வந்தா அப்பிடித்தான். உங்கள நாலு வாட்டி வீட்டுக்கு அலைய வைக்கணும். ‘
‘அப்படியெல்லாம் செய்யாதே, துரை. உனக்குப் புண்ணியம் உண்டாகட்டும். ஒரு பத்து ரூபா கொடு. ‘
‘பத்து என்ன சார் பத்து. நூரு ரூபாய் வாங்கிக் கொள்ளுங்க. ரெண்டு மாசமா உங்க பக்கம் சும்மாவே இருக்கு. ‘
‘அட, அவ்வளவு வேணாம். ஒரு ஐம்பது கொடு போதும்… ‘
துரை நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டு இவனுக்கு நாற்பதைந்து ரூபாய் கொடுத்தான். இவனுக்குக் கெட்ட பழக்கம் ஒன்றும் கிடையாது. புத்தகம் படிப்பான். கல்லூரியில் படித்தபோது கதை எழுதினான். இரண்டு கதைகள் வெளியாயின. தான் ஒரு எழுத்தாளனாகி விட்டதாக நினைத்துக் கொண்டான். அதே நினைப்போடு எழுதியனுப்பிய மூன்று கதைகள் திரும்பி வந்து விட்டன. ஆனால், தான் ஒரு எழுத்தாளன் என்பது மட்டும் மனத்தில் தங்கி விட்டது. எழுதுவதை விட்டு விட்டுப் படிப்பதில் ஆழ்ந்தான். அது எழுதுவதைவிடச் சுகமாக இருந்தது. துரையிடம் வாங்கிய பணத்தில் பதினோரு ரூபாய்க்கு இரண்டு பழைய நாவல் வாங்கிக் கொண்டு–ஒண்ணரை ரூபாய்க்குக் காபி சாப்பிட்டு விட்டுத் தாமதமாக வீட்டிற்குச்சென்றான்.
சாப்பிட்டு விட்டு, விட்ட இடத்திலிருந்து நாவலைப் படிக்க ஆரம்பித்தான்–நாவல் சுவாரசியமாக இருந்தது. மணி பத்து அடித்தது கூடத் தெரியவில்லை. பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
‘என்ன அப்படிப் படிப்பு ? ‘ மஞ்சுளா இவன் பக்கத்தில் வந்தமர்ந்தாள். அவள் பக்கம் திரும்பாமல் அடுத்த ஏட்டைப் புரட்டினான்.
மஞ்சுளா புத்தகத்தைக் கையால் மறைத்துக் ‘சீனுவுக்கு ஒரு தங்கை– ‘ என்றாள் தாள முடியாத உற்சாகத்தோடு.
‘அட, சனியனே ‘ ‘ ரங்கராஜன் படுக்கையிலிருந்து எழுந்தான்.
‘என்ன ? ‘
மஞ்சுளா பேசாமல் இருந்தாள்.
‘மூணு மாசம் ஆகிட்டதா ? ‘
அவள் தலையசைத்தாள்.
‘நாளைக்கு மாலதி டாக்டரைப் பாரு. ‘
அந்த வட்டாரத்தில் மாலதி கருச்சிதைப்பில் கைராசி மிக்கவள் எனப் பெயர் பெற்றவள்.
‘மாலதியவா ? ‘
‘ஆமாம். ‘
‘அப்ப நீங்களும் வாங்க. ‘
‘நான் எதுக்கு ? ‘
மஞ்சுளா இவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
‘பொம்பளைக்குத் துளியாவது அறிவு வேணாம் ‘ பெரிய பயலுக்கு நாலு வயசுதான் ஆகுது. அடுத்ததுக்கு ரெண்டு கூட முடியல–இன்னொரு பிள்ளைய தயார் பண்ணிட்டா. ‘
அவள் சந்தோஷமும் ஆர்வமும் கரைந்து விட்டன. இவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மறுநாள் ஆபீசுக்குப் புறப்படும்போது, ‘இந்தா, சாயந்திரம் மாலதியப் பார்த்துட்டு வா, ‘ என்று பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தான். அவள் ஒரு வார்த்தையும் பேசாமல் வாங்கிக் கொண்டாள்.
‘வேல இருந்திச்சு. டாக்டர் கிட்ட கூட்டம் அது இதுன்னு சும்மா இருந்திடாதே. அவசியம் பார்த்துட்டு வா– ‘ ஆபீசுக்குப் போகும்போது ஞாபகப் படுத்தினான். இவள் உதட்டைக் கடித்துக் கொண்டு தலையசைத்தாள்.
மாலையில் இவள் டாக்டரிடம் சென்றாள். அரை மணிநேரம் காத்திருந்து மாலதியின் அறைக்குள் சென்றாள். மாலதி ஒரு சுற்றுப் பருத்திருப்பது போல இவளுக்குத் தோன்றியது. அவள் இவளைப் பார்த்துச் சிரித்தாள். அப்புறம், ‘மூணு மாசந்தானே ஆகுது. பத்து நாள் கழித்து வா. எல்லாம் சரியாக்கிடலாம், ‘ என்றாள். அவள் நம்பிக்கை மஞ்சுவுக்கு எரிச்சல் தந்தது. தலையசைத்து விட்டுப் பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தாள். இவள் வருவதற்கு முன்பாகவே ரங்கராஜன் வந்திருந்தான். அது அவளுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.
அவன் கேட்பதற்கு முன்பாகவே, ‘அடுத்த வாரம் உங்களையும் கூட்டியாரச் சொன்னாங்க, ‘ என்றாள். இவனும் சரி என்றான். அவள் சொன்ன காரியத்தை உடனே செய்திருப்பது இவனுக்குத் திருப்தியளித்தது.
அடுத்த வாரம் இவன் மாலதியிடம் சென்றான். அவள் சிரித்துக் கொண்டே பேசினாள். மஞ்சுளா இருவருக்குமிடையில் உணர்ச்சியற்ற பதுமையைப் போல உட்கார்ந்திருந்தாள். இவன் பஞ்சப் பாட்டுபாடி–நூற்றிலிருந்து, எண்பது ரூபாய்க்குக் கொண்டு வந்தான். தான் வந்ததே நன்றாகப் போய்விட்டது என நினைத்தான். ஆனால் மஞ்சு வீட்டிற்கு வருவதற்குள் நூறு ரூபாய்க்கு மேலாகிவிட்டது. அதனால் மளிகைக் கடனும், மருந்துக் கடனும் நின்றுவிட்டன. அவற்றை இவன் ஏழாந்தேதியே கொடுப்பான். தேதி பத்தொன்பதாகி விட்டது. மளிகைக் கடைக்காரன் இரண்டு முறை வந்து போய்விட்டான்.
அப்புறம் மஞ்சுளாவிற்கு மருந்து வாங்க வேண்டும். கடைக்காரனிடம் பாக்கி நிற்கிறது. அதைத் தீர்க்காமல் மேலும் கடன் கொடுக்க மாட்டான். ரங்கராஜனால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. துரையை தேடிக் கொண்டு மறுபடியும் ‘ச் ‘ செக்ஷனுக்கே சென்றான். துரை இல்லை. அவன் கூட்டாளி வேலுவையும் காணோம்.
என்ன செய்வது என்று புரியாமல் திரும்பி வந்தான்; அஞ்சு பத்து என்றால் புரட்டி விடலாம். நூறு…நூற்றைம்பது உம்…துரையை விட்டால் வேறு கதியில்லை நானூற்றியம்பது ரூபாயில் குடும்பம் நடத்த முடியல, முந்நூறுக்கு கீழே வாங்கும் துரை வட்டிக்கு விடுகிறான்…. அவனுக்குச் சம்பளம் மட்டுந்தானா ? வேறு என்னென்னவோ காதில் விழுகின்றன. இரண்டு போலீஸ்டேஷனை கட்டிக் கொண்டு இருக்கிறானாம்…அப்புறம் என்ன வேணும்… இப்ப எனக்குப் பணம் வேணும். நூற்றியம்பது ரூபாய் வேணும்…
மணி ஐந்தடித்தது.
ஆபீஸ் கலைந்தது. இவன் இரண்டுஃபைல்களை எடுத்து முன்னே வைத்துக் கொண்டான். ஒரோர் சமயம் துரை ஐந்து மணிக்கு மேல் கூட வருவான். ஆபீஸ் அவனுக்கு வீடு போல. எப்போது வேண்டுமானாலும் வருவான் போவான். அவனை ஏனென்று கேட்க யாருக்கும் தைரியம் கிடையாது. மணி ஐந்தே முக்கால் ஆகியது. துரை வரவில்லை.
கூர்க்கா ஒவ்வொரு அறையாகப் பூட்டிக் கொண்டு வந்தான். ரங்கராஜனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஃபைல்களைத் தூக்கிப் போட்டுவிட்டு ஆபீஸை விட்டு வெளியே வந்தான்.
இனி துரையை வீட்டில்தான் பிடிக்க வேண்டும் போல இவனுக்குத் தோன்றியது. அவன் வீட்டிற்கு சென்றது கூட நினைவுக்கு வந்தது. இருண்ட ஒரு மாலைப் பொழுதில் தான் துரை இவனை அழைத்துக் கொண்டு சென்றான். அதனால் வீட்டு எண் நினைவில் இல்லை. இருந்தாலும் கண்டுபிடித்து விடலாம். பெரும்பாலும் அவன் மாலைப் பொழுதில் வெளியே செல்லுவதில்லை.
ரங்கராஜன் பஸ்பிடித்து துரை வீட்டிற்குச் செல்வதற்குள் மணி ஏழுக்கு மேலாகி விட்டது. ஆனாலும் இவன் நினைவு பிசகவில்லை. துரை வீட்டை சுலபமாகவே கண்டுபிடித்துவிட்டான். வாசலில் துரையின் மகன் ஆங்கிலப் பாடம் படித்துக் கொண்டு இருந்தான்.
இவன் துரையென்று வாசலில் நின்று கூப்பிட்டான். பையன் இவனைப் பார்த்துக் கொண்டே, ‘அம்மா ‘ என்றான்.
துரை மனைவி, ‘யார் ? ‘ என்று கேட்டுக் கொண்டு வெளியே வந்தாள். இவனை அவளுக்குத் தெரியவில்லை. ‘யார் வேணும் ‘ என்று மறுபடியும் இவனைப் பார்த்துக் கேட்டாள்.
‘ரங்க துரை. ‘
‘நீங்க யாரு ? ‘
‘அவர், ஆபீஸிலேயிருந்து வாரேன். ‘
‘இப்பதான் வெளியே போனார். ‘
‘–வந்துடுவாரா ? ‘
‘வரணும். ‘
‘எட்டு எட்டரை ஆகுமா ? ‘
இவனுக்கு பதில் சொல்வது அனாவசியம் என்று நினைத்தவள் போல உள்ளே சென்றாள். இவன் ஒரு நிமிஷம் அப்படியே நின்று கொண்டே இருந்தான். அப்புறம் திரும்பி சாலைக்கு வந்தான். அலைச்சலில் பசித்தது. மத்தியானம் குமார் வாங்கித் தந்த வடையும் காபியுந்தான்.
வீட்டிலிருந்து இவன் கொண்டு வந்த இரண்டு ரூபாய் அப்படியே பையில் இருந்தது. அதை இப்போது செலவழித்துத்தான் ஆக வேண்டும் போலப் பசித்தது. சிறிது நடந்து எதிர்ப்பட்ட ஓட்டலுக்குச் சென்று தோசையும் காபியும் சாப்பிட்டான். கையில் ஒருரூபாயும், சில்லரையும் மிஞ்சியது. வழக்கத்திற்கு மாறாக ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டான். நீளமாக நடந்து வெற்றிலைப்பாக்குக் கடையில் தொங்கிய தினசரி போஸ்டர்களை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு எட்டேகால் மணிக்கு துரை வீட்டிற்குச் சென்றான்.
இவன் திரும்பிச் சென்றபோது துரையின் வீடு சாத்தியிருந்தது. விளக்குக் கூட இல்லை. படுத்து விட்டார்கள் போலும் என நினைத்தான். இவன் முயற்சியும் காத்திருத்தலும் விரயமாகிவிட்டது. என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க இயலாதவனாகத் திரும்பினான்.
இவன் வீடு மாடி. இப்போது படியேறுவது இவனுக்கு கஷ்டமாக இருந்தது. மெதுவாகயேறிக் கதவைத் தட்டினான். வழக்கத்தைவிட வேகமாகத் தட்டினான். நிற்க முடியாதவன் போல் தட்டினான்.
‘யாரு ? ‘ என்றாள் மஞ்சுளா, உள்ளே இருந்து.
‘தெரியல ? ‘ இவன் கை படாரென்று கதவில் அறைந்தது.
‘இதோ வந்துட்டேன். ‘ விளக்கைப் போட்டுவிட்டு, அவள் கதவைத் திறந்தாள்.
‘எவ்வளவு நேரமா தட்டுறேன், எட்டு மணிக்கெல்லாம் தூக்கமா ? ‘
‘முதல் சத்தத்துக்கே வந்துட்டேனே. ‘
‘–திங்கறது; தூங்கறது ‘ ‘
‘நான் எங்கே தூங்கினேன் ? ‘
‘பேசாதே. கொன்னுடுவேன். ‘
மஞ்சுளா இவனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்தாள்.
‘லட்டர் வந்துச்சா ? ‘
‘இல்ல, துரை வந்தான். ‘
‘துரை வந்தானா ? ‘
‘நூறு ரூபாய் பணம் கொடுத்தான். அப்புறம் ரெண்டு நாளு லீவுன்னான். ‘
‘சரி, அந்த ஃபேனப் போடு. ‘
மஞ்சுளா தரையில் கையூன்றி எழுந்து ஃபேனைப் போட்டு விட்டுத் திரும்பி வந்து தரையில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.