ஆண்கள் மட்டுமே தங்கி இருக்கும் விடுதியின் முதல் மாடியிலிருந்து கீழே சாலையைப் பார்த்த கணபதிக்கு அதிர்ச்சி.
உடன்…. உடல் குப்பென்று வியர்க்க, நடுங்க….அடுத்த வினாடி அறைக்குள் புகுந்து கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டான்.
மனதில் படபடப்பு அதிகரிக்க கட்டிலில் படுத்து கண்களை மூடினான்.
ஐந்தாவது நிமிடம் யாரோ வந்து கதவை இடித்தார்கள்.
திடுக்கிட்டுக் கதவை திறந்த கணபதி…. முகம் வெளிறினான்.
வாசலில்…. அவளுடன் கீழே சாலையில் வந்த இவன் அறை நண்பன் சேகர்.
“ஏன்டா ! ஒரு மாதிரியா இருக்கே…? ” கேட்டு…. சேகர் கதவைச் சாத்தி கட்டிலில் அமர்ந்தான்.
“ஒ…. ஒண்ணுமில்லே. சும்மாதான். !”
“அது சரி. என் ஆளெப்படி..? ” சேகர் கணபதியைப் பார்த்துக் கண்ணடித்தான்.
“என்னடா சொல்றே..? !”
“ஒன்னும் தெரியாதது மாதிரி நடிக்காதே. நீ எங்களைக் கண்டதும் அறைக்குள் நுழைஞ்சதை நான் கவனிச்சேன்.”
“கவனிச்சியா..?”
“ஆமா..”
“யாராவள்..?”
“என் காதலி !”
“சேகர்..!”
“ஆமாம் கணபதி. சமீபத்துலதான் நாங்க ஒருத்தரை ஒருத்தர்ப் பார்த்தோம், பேசினோம், இப்போ…. காதலிக்கிறோம். ! ” எந்தவித அலட்டலும் இல்லாமல் சொன்னான் சேகர்.
கணபதிக்குள் அடி. உறைந்தான். பேச்சுகள் வரவில்லை.
ஒரு சில வினாடிகள் பொறுத்த சேகர்….
“ஏன்டா ஒன்னும் பேசமாட்டேங்கிறே..? ஏன் திடீர்ன்னு இப்படி ஆகிட்டே..” கேட்டான்.
“ஒ… ஒன்னும் ஆகலையே…”
“உன் தடுமாற்றத்திலேயே வெளியே பொய் சொல்றேன்னு தெரியுது. என்ன விசயம் சொல்லு..?”
“வந்து… வந்து…..”
“பயப்படாம சொல்லு..?”
“இப்போ உன்னோடு வந்தவள் பெயர் என்ன..?”
“அருந்ததி..!”
“நீ கோவிச்சுக்கலைன்னா ஒரு உண்மையைச் சொல்றேன்..”
“கோபம் வராது. கோபப்படமாட்டேன். சொல்லு..?”
“அந்த அருந்ததி என் முன்னாள் காதலி …!”
“அப்படியா…??…”
“சாதி, மதம், பணம், அந்தஸ்த்து என்கிற தடுப்பு வேலிகளினால் எங்க காதல் கை கூடலை. மனசு வெறுத்து மடத்துல சேர்ந்துட்டாள். நீயும் காதலிச்சு கை விட்டுட்டா இந்த முறையும் தோல்வின்னா.. மனசு வெறுத்து கன்னிகாஸ்திரி ஆகிடுவாள். தயவு செய்து கை விட்டுடாதே.! ” உருகினான்.
“அதைப் பத்தித்தான்டா கணபதி நாங்க பேசிகிட்டு வர்றோம். அருந்ததி என் காதலின்னு சொன்னது வடிகட்டின பொய்.
இங்கே உன்னையும் என்னையும் நிறைய தடவைகள் சேர்த்துப் பார்த்திருக்காள் . நாம தோழர்கள், அறை நண்பர்கள் என்கிற விசயம் புரிஞ்சிருக்கு.
ஒருநாள் என்னைச் சந்திச்சு….உங்கள் காதல் விபரம், முறிவை சொன்னாள்.
‘கவலைப்படாதே! நான் அவனை வழிக்கு கொண்டுவந்துடுறேன்..! ‘ னு உறுதி மொழி தந்தேன்.
கணபதி ! காதல் என்கிறது வெறும் சாதி, மதம், அந்தஸ்த்தில் இல்லேடா. மனசுல வர்றது, வளர்றது. மனசு நினைச்சா நினைச்சதுதான். உடைஞ்சா உடைஞ்சதுதான். அவள் உடையாமல் இருக்கிறாள். நீதான் அல்லாடிக்கிட்டு இருக்கே. நீ மனசு உடைஞ்சுட்டியோன்னு பயந்தேன். உடையலை. உடைஞ்சிருத்தால் நீ அவளைப் பத்திக் கவலைப் பட்டிருக்க மாட்டேன். கை விட்டுடாதேன்னு என்கிட்ட கெஞ்சி மாட்டே. அவள் நல்லதுல உனக்கு விருப்பமிருக்கு. உன் மனசுல இன்னும் அவள் அழியாமல் இருக்காள்.
“கணபதி ! இன்னைக்கு சாதி, மதம் பார்க்கிற அம்மா, அப்பா நாளைக்கு காணாமல் போயிடுவாங்க. அவர்களுக்காக உன் மனசை மாத்திக்கிறதோ, ஒரு பெண்ணை நிராகரிக்கிறது பாவம், துரோகம். வாழ வேண்டியவன், வாழப் போறவன் நீ தான் எடுத்து முடிவுல உறுதியா இருக்கனும். அவள் உறுதியா இருக்காள். இப்போ உனக்கு வேண்டியது… அப்பா, அம்மாகிட்ட உறுதியாய் எடுத்துச் சொல்லி சம்மதம் வாங்கும் துணிச்சல்தான்.
இப்பவும் அவுங்க சம்மதிக்கலைன்னா நீ தைரியம் அவளைத் திருமணம் செய்து நல்லா வாழ்ந்து அவுங்க முகத்துல கரியைப் பூசணும். இதுதான் காதலுக்கு நல்லது. நீ நல்ல ஆம்பளை என்கிறதுக்கும் எடுத்துக் காட்டு . என்ன சொல்றே… ? “பார்த்தான்.
கணபதி மனதில் எல்லா வார்த்தைகளும் சரியாக பதிய தெளிந்தான்.
“சேகர்…!! ” தழுதழுத்தான்.
“என்ன நான் சொன்னது சரியா..? “என்றான் சேகர்.
“ரொம்ப சரி. சாதி, மதம் , அந்தஸ்த்துன்னு என் அம்மா, அப்பா தூவி விட்ட தூசில் தொடை நடுங்கிக் கிடந்த துணிச்சல் இப்போ சரியாகிடுச்சு. நீ சொல்றபடி கேட்கிறேன், நடக்கிறேன். !” சொல்லி நண்பனின் கையை இறுக்கிப் பிடித்தான் கணபதி.