தேவதைகள் காணாமல் போயின

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 13,585 
 

நான் வந்து சேர்ந்த அன்று தேவதைகள் நிரந்தரமாக காணாமல் போயிருந்தன.

தேனைப் போன்றதொரு அடர்த்தியான வெளிச்சம் ஜன்னல் வழியெ ஊடுருவியது. மதிய நேர சோம்பல் உள்புகுமுன் ஜன்னலை மூடினேன்.

சரியாக இரண்டு நாட்களாக எங்குமே செல்லாமல் அஜந்தா விடுதியில் கடலைப் பார்த்த அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன். சோம்பல் பல காரணங்களில் ஒன்றுதான். பல வருடங்களுக்கு முன்னர் மாரி மழை பெய்த மாதங்களில் இதே அறையில் தங்கியுள்ளேன். நூறில் பாதி, இருப்பதோ சோக மீதி எனப் பாடத்தோன்றும் வயது. மறுபடி முட்டைக் கரு நிறத்திலிருந்த திரைச் சீலையை விலக்கி கடலைப் பார்க்கிறேன். ஜெயந்திக்குப் பிடிக்காத அதே முட்டை கரு திரை. ஏனோ போன தடவைப் போல மாற்றச் சொல்லவில்லை.

ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது. அப்படி என்னதான் ஆழ,அகலமோகமோ;பல ஜன்மங்களாய் அதே காட்சியளிப்பு. இதில் மட்டும் நிலம்-ஆகாசத்திற்கு தப்பாமல் பிறந்தது இந்த குளுமை.

இதே, பாண்டிச்சேரியின் கரையில் தான் எத்தனை வருடங்கள் நடந்திருப்பேன். தாத்தாவுடன் தொடங்கி, நண்பர்கள், காதலி , மனைவி என ஒவ்வொரு முறையும் மாறாத நடை. இல்லை, இல்லை காதலியுடன் தடம் பதித்த மணற்குவியல்களைத் தான் தேடி வந்திருக்கின்றேனே. அதனால் காதலியுடன் நடை மட்டும் கிட்டத்தட்ட மேக நடை தான்.

பிற்காலத்தில் தேவையென சில/பலவற்றை தொகுப்பதைப் போல் என் ஞாப சாளரங்களை தூசி தட்டுவதற்காக இந்த பயணம். பிறையைப் போல் கொஞ்சம் கொஞ்சமாக மறையும் ஞாபகங்கள்.

இப்படியே நடந்து காலாபெட் கடற்கரையை அடைய முடியும். கடைசியாக அங்கு சென்றபோதுதான் பல தேவதைகள் தோன்றி மறைந்தனர். தங்க மீனை வாலாகக் கொண்ட கடல் கன்னியின் வருகை என்றான் மீனவ நண்பன். எனக்கென்னவோ அப்படித் தோன்றி மறைந்ததும் காணாமல் போவதாக சபதத்துடன் பிறந்த பாவனா மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறாள். இப்படி ஒரு கடல் கன்னிதான் தன்னுடைய தினப்படி வேலைக்கு பாவனாவை வைத்துக் கொண்டிருப்பதாக பல வருடங்கள் நம்பி வந்தேன்.

பாவனா என்னுடன் பள்ளி, கல்லூரியில் படித்தவள். ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும். உருளையாக இருந்தால் விலா மீனைப் போல் வழுக்கிக் கொண்டேயிருப்பேன் எனச் சொல்வாள். நாங்கள் ஒட்டுதலாய் இருக்கவே நங்கூரம் அவள் முகம். கல்லூரி கடலுக்கருகேயே இருக்கும் வசதி தெரியுமா? கல்லூரி முடிந்த அடுத்த நிமிடம் ஆங்காஙகே இரு தலைகள்-ஓர் உடல்களாய் கடற்கரையில் திட்டு தீவுகளாய் இருப்போம்.

பல ஜோடிகள் வந்தாலும், எங்கள் இடம் மரப்படுகைதான். மரக்காயர் இடுப்பு எனக் கூப்பிடுவோம். அகலமாயிருந்தாலும் வசதி குறைவு கிடையாது. இருவர் தாராளமாய் சாய்ந்து கொள்ளலாம்.தினமும் அங்கு ஜாகை அடித்தாலும் ஒழுக்க சீலர்கள் தாம் நாங்கள்.

அப்படி என்னதான் பேசுவோம். இப்போது பல ஞாபகத்தில் கழண்டு விட்டது. பிடித்தது/பிடிக்காதது போன்ற பால்ய காதல் கேள்விகள் பள்ளியிலேயெ நீர்த்துப் போனதால், பல சமயங்களில் கூடப் பிறந்தவர்கள் போல பேசிக்கொண்டிருப்போம். கை மட்டும் கோர்க்க விடுவாள். பல மணிநேரம் பிடித்த கைகளில், எது யாருடையது போன்ற சந்தேகங்கள் விலகும்போது வந்ததுண்டு. ஈருடள் ஓருயிர் சமாசாரம் போல்.

பாருங்கள், யோசிப்பதால் எவ்வளவு விவரங்கள் ஞாபகத்திற்கு வருகின்றது. முதல் தடவை தேவதைகளைத் தேடி வந்து ஏமாந்திருந்தேன். இப்போது அவற்றைத் தேடி போனால் வயது கூடிக்கொண்டே போகிறது.இந்த விவரங்களுக்காகவே பாண்டிச்சேரிக்கு மீண்டும் வந்தேன்.

காதலும் ஊடலும் மின்னல் இடி போல. ஒன்று மட்டும் இருந்தால் குறையேற்படும். கடல் கன்னி பாவனாவை கொண்டு சென்றதற்கு முன் பலமுறை சண்டையிட்டிருக்கிறோம். பொதுவாக எனக்கு அவளிடம் பிடிக்காது அவள் உடையின் சராசரித்தனம். கசக்கிய காகிதத்தை அழுத்திச் சரிசெய்ததுபோன்ற சல்வார். அதை சரிசெய்யவும் தோன்றாது கல்லூரிக்கு வருவாள். பல புதிய உடைகளை வாங்கிக் கொடுத்தும் அதே பாணி. மிகக் குறைந்த அளவிலேயே உடைகளுண்டு அவளிடம்.மீண்டும் மீண்டும் ஒரே உடுப்பில் பார்ப்பதுபோல் இருக்கும். இப்போது ஞாபகத்திலுள்ளதும் வண்டு நிறத்தில் அவள் காணாமல் போன அன்று உடுத்திய சல்வார் மட்டுமே.

உடையில் தவறிய அழகை அவள் நடை சரிசெய்தது. கல்லூரியில் ஒயில் நடைக்காரி எனப் பேர். சகஜமாகப் பழகிவந்ததால் கிண்டலுக்கு ஆளாகவில்லை. இல்லையெனில் பாண்டிச்சேரி போன்ற குறுகிய மனப்பாங்குள்ள இளைஞர்கள் கூட்டம் வேறெங்குமில்லாததால் சேதாரம் அதிகமாயிருக்கும்.

கடல் அலைகளில் நிற்க எனக்குப் பிடிக்காதபோதும், அவள் நின்ற இடத்தில் மேல் நின்று கை கோர்த்து சிப்பி சேர்த்து காதில் கேட்பது போன்ற எதையும் செய்ததில்லை. கடல் கன்னியின் வருகைக்காக முதல் முறை வந்த போது அலையில் சிறிது நேரம் நின்றிருந்தேன். அப்படி ஏன் இதற்கு அங்கலாய்க்கிரார்கள்? நுரையைத் துப்பிய அலை காலில் பட்டபோது அருவருப்பாக இருந்தது. இருந்தாலும் கடல் கன்னி வருவாள், என் பாவனாவை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகலாம் என்பதால் அலையைப் பொறுத்துக்கொண்டேன்.

இது என் நண்பர்களுக்கு எப்போதுமே ஆச்சர்யமாக இருக்கும். அலையில் நிற்கப் பிடிக்காதவனா? அதுவும் காதலி கையை பிடித்துக் கொண்டு நின்றால் சொர்க்கம் முத்தமிடுமே? காரணம் தெரியாதபோது சிரித்து மழுப்பலாம், அனுபவம் பிடிக்காத போது சும்மா இருக்கவே தோன்றுகிறது. யாருக்காக நான் அலைக்கெல்லாம் வக்காலத்து வாங்க வேண்டும். சும்மாகவே இருப்பேன்.

கடலில் அவளுக்குப் பிடித்தது மீன். அவற்றை தொட்டியில் பார்ப்பதை தின்பதுபோல் ரசிப்பாள். அன்றும் மீன் குழம்பு வாடையே அவளிடம் அடித்தது. சொல்லிக் கொள்ளத் தேவையில்லாதது போல் பரவும் அந்த வாடை எனக்கும் பிடித்துப்போனது. நான் பேசும்போது நனைந்த பிஸ்கட் வாசம் வருவதாகச் சொன்னாள். அது எப்படி இருக்குமென நான் கேட்கவில்லை.

பாவனா என்னை போலதான். காற்றடிக்கும்போது படபடக்கும் பாவனாவின் இமைகள், திரும்ப கனவு நிலைக்குள் வருவதற்குள் அடுத்த காற்று அடிக்கத்தொடங்கும். இமைகள் படபடத்துப் பார்த்துப் பழகிவிட்டது. இதைப் பார்த்து மயங்கிய நிலையில் தேவையென்ன அலை, நுரை, சுண்டல் போன்றவை.

அன்றும் அப்படித்தான் கடல் கன்னியுடன் பேசியபடி அமர்ந்திருந்தோம். மதியம் சாப்பிட்ட மீன் குழம்பு , சாயங்கால நட்சத்திரங்களின் மெளன சிமிஞ்சை பற்றி எனப் பேசினோம். காற்றில்லாமல் வறண்டிருந்தது கடற்கரை. வாக்கியங்கள் முடிவடையவில்லை. அதுவரை கைகளை இறுக்க பிடித்தபடி இருந்த அவள், மெதுவாக தோளில் சாய்ந்தாள். மற்றபடி பேசிக்கொண்டுதான் இருந்தாள். திடீரென அலையில் நிற்பது பற்றி தோன்றியதோ என்னமோ – இன்று நிற்போமா – சாதாரணமாக நெட்டி முறிக்கும் அவகாசத்தில் நிதானமாய் கேட்டாள். காற்றில்லை, கடல் கன்னியும் பேசுவதை நிறுத்தவில்லை. நிலவு அரைகுறையாக மெளனமாக இருந்த அந்த கடைசி வெள்ளிக் கிழமை அந்தி சாயும் நேரத்தில், காற்றி ஈரப்பசை குறைந்திருந்தாலும் – என் கன்னத்தில் கொடுத்த முத்தம் மட்டும் சத்தியமான உண்மை.

அதற்கு பிறகு விபரீத ஆட்டத்தை துவங்கினேன். அலையில் நிற்கலாம். கடல் கன்னியை நெருங்கலாம். வாரி அணைக்கலாம். இது அத்தனையும் செய்ய கடவுமாறு கால்களுக்குப் பணித்து நடக்கத் துவங்குமுன், திடீரென அடித்த காற்றினால் பறந்தது அவள் துப்பட்டா. அதைப் பிடிக்க அவள் சாலையோரம் சென்ற நேரம், புழுதி கிளம்பியதில் தெருவில் வந்த லாரி அவளை நோக்கி வந்துகொண்டிருந்தது…

ரத்ததிற்கு வாடை கிடையாது. முழுவதுமாய் மீன் குழம்பு வாடைதான். அன்று சாலை முழுவதும் கழுவியதுபோல் மீன் குழம்பு பரவியது.

அப்போதுதான் தேவதைகள் கடல் கன்னியுடன் போவதைப் பார்த்தேன்.

– டிசம்பர் 2009 (நன்றி திண்ணை)

Print Friendly, PDF & Email

கத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2023

மாலினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2023

அன்பின் அடையாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)