(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்தி மயங்கி வெகு நேரம் ஆகவில்லை. என்றாலும் அடி வானம் கடல் மட்டமும் ஒன்றோடொன்று முயங்கி, இனம் தெரியாமல் கலந்துவிட்டன. இளவேனிற் காலம். எனவே, வானத்தில் மேகக் கறை இல்லை. நிர்மலமான வான் மண்டனத்தில் நட்சத்திரங்கள் பொட்டுப் பொட்டாய்ப் பூத்திருந்தனர். கடற்காற்று பரபரத்துச் சவுக்குமரத்தோப்பில் சீட்டியடித்து வீசிற்று.
நிர்மலர வேண்டுமென்று தான் கடற்கரைக்கே வந்திருந்தாள். தன் சரீரத்தில் இனந்தெரியாது உறுத்தும் அந்த புரியாத நச்சரிப்புக்கு மாலை மயக்கமும், சீதம் புரையோடிய கடற்காற்றும் ஹிதம் தரக் கூடும் என்று நம்பித்தான் வந்தாள். ஆனால், கடற்காற்று அவளுக்கு எதிர்பார்த்த ஹிதசுகத்தைத் தரவில்லை. அவளது அங்க அவயவங்களில் தட்டு மறித்துப் புகுந்து விளையாடும் அந்தக் காற்று ஹிதம் தருவதற்குப் பதிலாக மயிர்க்காலெல்லாம் கூசிச் சிணுங்கும் புல்லரிப்பைத் தான் தந்தது. அவள் சேலையை இழுத்து மூடி உடம்பைப் போர்த்திக் கொண்டாள். காற்றின் பரபரப்பில் வரிசை குலைந்த மயிர்ச் சுருள்கள் கன்னத்திலும் காதிலும் தொட்ட.சைந்து புரள்வது இன்பக் கிளுகிளுப்பை உண்டாக்கின. உடம்பில் ஒவ்வொரு அணுவிலும், விஷ வேகம் கொண்ட ஜீவரசம் ஓடிப் பாய்வது போன்ற உணர்ச்சி சில்லிட்ட உணர்ச்சி.
இந்தச் சுக வேதனை அவளுக்குப் பிடிக்கவில்லை. என்றாலும், அவள் எழுந்திருக்கவில்லை. மனம் நிமிர்ந்தாலும் உடல் நிமிரவில்லை . மல்லாந்து படுத்து உடம்பைத் தளர்த்தி: உயர்ந்து கிடக்கவேண்டும் என்ற சிறு ஆசை இருந்தாலும், அந்தரங்கம் சிறிதுமில்லாத அந்த வெட்ட வெளியில் அப்படிப் படுக்க அவள் மனம் இசையவில்லை. எனவே மணலில் ஒருச்சாய்த்து படுத்துக் கையில் தலையைத் தாங்கி யோக நித்திரை புரிந்தாள். உடலின் கன அழுத்தத்துக்குத் தக்கவாறு நெளிந்து குழைத்து கொடுக்கும் அந்த மணற் படுக்கை அவளது உடம்பின் துடிதுடிப்பைச் சமனப்படுத்தும் . துணைபோல ஒட்டிப் படுத்திருந்தது.
படுத்தலாறே அவள் கடலின் பசைபிடித்த இருளை யும், அதில் வகிடு பாய்ந்து தாவும் அலைத்திரளையும் பார்த்தாள். அந்தப் பார்வையில் கண்கள் மட்டுமே பதிந்தன, அர்த்த மற்ற பார்வை; பிறந்த குழந்தையின் பேதைமை நிறைந்த பார்வை.
மணலைக் கையால் அள்ளிக் குவித்து அளைந்துகொண்டதுருந்த அவளது மனம் கோவையற்ற தெளிவற்ற பல நினைவுக் கண்ணிகளை அவிழ்க்க முடியாமல் சுற்றிச் சுற்றி அலைக்கழிந்தது. தன் வாழ்விலும் உடம்பிலும் சில மாத காலமாக ஏற்பட்டிருக்கும் சலனத்தை அவள் உணரலாம் லில்லை. என்றாலும், அதன் காரண காரியத்தைத் தெளிந்து விடை காணமுடியவில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளில் தேய்ந்து உருவற்றுப் போனதாக அவள் கருதிவந்த அந்தச் சரீர வாதை மீண்டும் தலை தூக்குகிறதோ, என்று ஒரு சந்தேகம்.
“இருந்தாலும் இந்த வயதிலா?” இதுதான் அவளுக்கு விளங்காத புதிர்.
நிர்மலா யுவதியல்ல. அந்தப் பருவம் எப்போதோ கழிந்துவிட்டது. இப்போது அவள் … அந்தப் பருவத்தை எப்படிச் சொல்வது? இலக்கண ரீதியாகச் சொன்னால், அவள் தெரிவைப் பருவத்திலிருந்து பேரிளம் பெண் பருவத்துக்கு மாறிவரும் பெண் ராசி.
பேதைப் பருவம் அழிந்து பெண்மையின் வரப்பிரசாத மான தாய்மைக்குப் பக்குவமாகும் அந்த வாலை வயதில் அவள் இதே மாதிரியான ஆத்ம நிராசைக்கும், உடற் பார. உணர்ச்சிக்கும் ஆளாகியிருக்கிறாள். ஆனால் இப்போது அவன் மனசிலுள்ள வேதனை புரிபூரண நிராசையல்ல. ஒரு வேலை அது ஆசையின் கறைதானா? ஆனால், இந்த வயதில் அந்த மாதிரியான வேதனை உண்டாவானேன்? மலரும் போதும் வேதனை. கூம்பும்போதும் வேதனையா? தாய்மைக் குணம் தன்னுடம்பை விட்டுச் சில காலமாகக் கரைந்தோடி இற்று வருந்துதான் காரணமா? அல்லது தான் அதுவரை கன்னிமை அழியாமல் தாய்மைக்கு அடிமையாகாமல் அந்தப் பருவத்துக்குத் துரோகமிழைத்த காரணமா?.
இதைத்தான் அவளால் புரிய. முடியவில்லை. அவளும் ஒரே ஒரு தடவையேனும் அனுராக சுகவேதனையை அனுபவித்திருந்தால், வயிற்றில் பாரமேற்று அறிந்திருந்தால் இந்தப் புதிர் அவளுக்கு லகுவில் விளங்கியிருக்கக் கூடும். ஆனால், அவளோ இந்த முப்பத்து ஏழாவது வயதிலும் ஒரு கன்னி! எனவே, அந்த நிலைமை உபாதையாக இருந்தது. இருந்தாலும், நமைச்சல் தரும் புண்ணிலிருந்து ரத்தம் கொட்டும் போது ஒரு சுக நிவர்த்தி இருக்குமே, அதுபோன்ற ஒரு உணர்ச்சி அவளுக்கு அவ்வப்போது ஏற்படும். முன்னெல்லாம் அந்த உணர்ச்சி ஏற்படும்போது, அவள் அதை எதிர்த்துப் போராடுவாள்; வெற்றியும் காண்பாள். இன்றே போராடவே சக்தியில்லை. அது மட்டுமல்ல; அந்த உணர்ச்சி ஓட்டத்தை எதிர்த்து நீந்த முடியாமல் அதன் போக்கிலேயே மிதந்து செல்வதில் சுகம் இருப்பதாக ஒரு திருப்தி. அவள் அந்தச் சுகத்தை உதறித் தள்ளவில்லை. இருந்தாலும் வைராக்கிய சித்தம் இருக்கிறதே, அது அவளைக் கரை யேறச் சொல்லிற்று.
எனவே புதிருக்கு அவள் விடை தேடினாள். இருந்தாலும், முடிவு காணவில்லை. அது அவளால் முடியாது. வேறு வழியின்றித் தன் சிநேகிதி கமலாவை நாடிச் சென்றாள்.
கமலா ஒரு லேடி டாக்டர், அவளுக்கு நிர்மலாவை ஆதிமுதல் தெரியும்; அதாவது, அவள் மனசின் பாவோட்டத் தின் அலைக்கழிப்பைத் தெரியும். நிர்மலாவின் வைராக்கிய சங்கடத்தால் ஏற்படும் தொல்லைகளுக்கு அவள் தான் வைத்தியம் செய்தாள்; ஆலோசனையும் கூறினாள். என்றாலும், நிர்மலா தன் வைராக்கிய சபதத்தில் வெற்றி கண்டு விட்டதாகக்கூட, அவள் கருதினாள். அதனால் நிர்மலா தன் உதவியை நாடி வந்தது அவளுக்கு ஆச்சரியத்தைத்தான் தந்தது.
கமலாவுக்கு நிர்மலாவின் ‘நோயை’ப் புரிந்துகொள்ளச் சிரமமேற்படவில்லை.
“நிர்மலா, இந்த வைராக்கியத்தை இப்போதாவது தளர்த்தக் கூடாதா?” என்றாள் கமலா.
“தளர்த்துகிறதா? இந்த வயதிலா?”
இந்தப் பதிலே புதிது. அந்தப் பேச்சை எடுத்தாலே வெட்டி முறித்துப் பேசும் நிர்மலாவா இப்படி? கமலாவுக்கு உண்மை லேசாகப் புலப்படுவது மாதிரித் தோன்றிற்று.
“நிர்மலா, நான் சொல்கிறேன் என்று கோபிக்காதே. உடம்பு நனையாமல் நீந்த முடியுமா? பின் ஏன் நீந்தும்போது உடம்பே நனையவில்லை என்று எண்ணி. உன்னையே ஏமாற்றிக் கொள்கிறாய்?” என்று கேட்டாள். கமலா.
“நீ என்ன சொல்கிறாய்?” என்று புரியாமல் கேட்டாள் நிர்மலா .
“புரியவில்லையா?: இரும்பு, வைராக்கியம் வளைந்து கொடுக்கும்; உருக்கேர் ஒடித்துவிடும். நிர்மலா! உன் வைராக்தியம் இரும்பல்ல; உருக்கு!” என்றாள் அந்த லேடி டாக்டர்.
நிர்மலா பதில் சொல்லவில்லை, அவளுக்கும் அதுதான் சந்தேகம். தன் வைராக்கியம் இரும்பா, உருக்கா?.
கமலா மீண்டும் பேசினாள்: “நிர்மலா, உன் நோய்க்கு, மருந்தே கிடையாது. சில நோய்களுக்கு அதன் விஷமே தான் மருந்து, நீ பேசாமல் கல்யாணம் பண்ணிக்கொள்!”.
“உனக்கு வேறு பேச்சில்லை” என்றாள் நிர்மலா. ஆனால் பேச்சில் பழைய வைரமில்லை. தளர்வு தலை காட்டிற்று. அந்தத் தளர்வு இதழ்க்கோணப் புன்சிரிப்பில் தன்னைத்தானே காட்டிக் கொடுத்தது…
கடற்காற்றின் லயத்தில் சொக்கிக் கிடந்த நிர்மலாவுக்குக் கமலாவின் பேச்சு நினைவில் உறுத்தியது. அவள் சொல்வது போல் செய்வதா அல்லது…? அவள் மனம் ஊசலாடியது. ஊசலாடும்போது தலை கிறுகிறுத்தாலும் இன்பம் இருக்கிறது. நிர்மலா அந்த இன்பத்தில் கிறுகிறுத்துக் கொண்டிருந்தாள்.
கடற் காற்று இருளின் அமைதியிலே நடுச்சாம நாய் போல் காரண காரியம் தெரியாமல் ஓயாது குரைத்துக் கொண்டிருந்தது.
2
நிர்மலா அந்தக் கல்லூரிக்கு ஆங்கில போதகாசிரியராக வேலை ஒப்புக்கொண்டு அதிக நாள் ஆகவில்லை. இதற்கு முன்பெல்லாம் அவள் பெண்கள் கல்லூரியில் தான் வேலை பார்த்திருக்கிறாள். இந்தக் கல்லூரியிலும் பெண்கள் இருந்தார்கள். கடலில் காயம் உரைத்த மாதிரி சொல்லுக்கு இருந்தார்கள். ஆரம்பக் காலத்தில் அவள் ஒரு ஆண்கள் கல்லூரியில் வேலை ஒப்புக்கொண்டாள். அந்த அனுபவம் அவள் நெஞ்சை விட்டு இன்னும் மறையவில்லை. அப்போது அவள் நல்ல யுவதி. மாணவர்களும் அவளுக்குச் சம் வயதானவர்கள். அவர்கள் மத்தியில் பழகுவதற்கே கூச்சம். அவள் எது நேர்ந்துவிடக் கூடாது என்று பயந்தாளோ, அதுவே நேர் இருந்தது. ஒரு வாலிப ஆசிரியரே அவளிடம் ஒருமாதிரியாக நடக்கத் தலைப்பட்டார். அவளும் கூடத் தடுமாறியிருக்கக் கூடும். ஆனால் தப்பித்துவிட்டாள். வேலையை ராஜிநாமாச் செய்தாள். அதன் பின்னர் ஆண்கள் கல்லூரியில் ‘சான்ஸ்’ கிடைத்தாலும், வேலை ஒப்புக்கொள்ள வில்லை .
ஆனால் இது ஒன்று மட்டும் சோதனையல்ல. அவள் வாழ்க்கையில் பல சோதனைகள். அவள் வாழ்க்கையே ஒரு சோதனை தான். அந்தச் சோதனையில், அவள் உள்ளம் வைரம் பாய்ந்தது. ஆனால், இப்போது அவள் இந்தக் கல்லூரியில் வேலை ஒப்புக்கொண்டது சோதனையில் வெற்றி பெற்று விட்டோம் என்ற தைரிய உணர்ச்சியாலல்ல; அந்த மாதிரிச் சோதனைக்கு இடம் தரும் பருவம் கடந்துவிட்டது என்ற தைரியம். வாஸ்தவம், இன்று வேறு யாரும் அவளைச் சோதிக்கவில்லை. ஆனால் அவளே அவளைச் சோதித்துக் கொண்டிருந்தாள்.
கல்லூரி மாணவர்களுக்கு அவளைப் பற்றி அத்தனை அக்கறையில்லை, அதாவது ஒரு ஆண் மகனின் கர்மசிரத்தை இல்லை. அவள் ஒரு ‘மிஸ்’ஸா , இல்லை, ‘மிஸிஸ்’ஸா என்பது கூடப் பலருக்குத் தெரியாது. இருந்தாலும் அவளைப் பற்றி அவர்கள் பேசுவார்கள். அது வெறும் பேச்சு. வேறு. பாதிரியான பேச்சு.
நிர்மலா கன்னி தான். புதுப் பாத்திரமானாலும், உபயோகிக்காவிட்டால் களிம்பேறி விடுகிறதல்லவா? அது மாதிரி அவள் சரீரம் மினுமினுப்பு இழந்து, மாலைச் சந்தைக்கு வரும் காய்கறிபோல் வாட்டம் கண்டிருந்தது. ஒடிசலான உடம்பு. எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் தேக்கட்டு கண்னை இழுக்காது. முகத்திலே களை இருக்கும். இருந்தாலும் சோகை பிடித்தது போன்ற பசப்புக் கவர்ச்சி. இந்தப் பசப்பை மறைக்க அவள் எந்த நவநாகரிக அலங்கார சாதனங்களையும் நாடவில்லை. அதற்குத் தேவையு மில்லை.
இதனால், மாணவர்கள் ‘புரொபஸர் நிர்மவரவுக்கு ஒரு வேளை டி.பி. யாயிருக்குமோ? ஆளைப் பார்த்தால்-‘ என்று பேசிக் கொண்டரர்கள். டி.பி, தன் குணத்தை வெளிக் காட்டாமல் வளர்வதில்லையே. அவளுக்கு டி.பி. அல்ல, அது கான்சர். ஆம், கான்சர் தானே வெளிக்குத் தெரியாமல் வளர்ந்து எரிமலைபோல வெடிக்கும் நோய்! அவள் மனசில் கிடந்து உறுத்தும் அந்தக் கவலை…அந்தக் கான்சர்!…
அது ஒரு தனிக் கதை.
3
அப்போது அவள் பருவ கால யுவதி. ஆண்மையுள்ள எவனும் ஒரு கணம் வெறித்துப் பார்க்கும் தளதளக்கும் தேகக் கட்டு. முகத்தில் சட்டை உரித்த பாம்பைப்போல் மோகனக் கவர்ச்சி; அந்தக் கண்களும் பாம்புக் கண்கள். யாரும் அதை எதிர்த்து ஐந்து நிமிஷம் பார்க்க முடியாது. பொதுவாகச் சொன்னால் அவள் அழகி; நல்ல அழகி.
அந்த இளமைக் காலத்தில், அவள் வாழ்வையே சோதனை பாக்கிவிட்ட அந்த நாடகம் –
சீதாராமன் – அவன் ஒரு இளங்கவி. வாலிபப் பருவத்தின் கனவுகளையும், சொர்க்க மண்டல சொப்பன அவஸ்தைகளையும் சொல்லில் வடித்திறக்கும் கவி. அவன் கவிகளெல்லாம் பாக்தாத் காலிபாவின் அந்தப்புரத்தின் கஜல்களைப்போல், அத்தர் மணத்தைப் போல் ஒரு போதை தரும்.
சந்தர்ப்பவசமாகச் சீதாராமனுக்கும், நிர்மலாவுக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. அவன் கவி ; அவள் கவிப் பைத்தியம், கேட்பானேன்? சீதாராமன் பாடிக் காட்டும் கவிகளில், நட்சத்திரங்கள் உதிர்ந்தன! புறாக் கூட்டம் சிறகடித்தன! அந்தி நேர மந்தாரை கட்டவிழ்ந்தன! – எல்லாம் அவள் ரசனை முறைகள். அவள் அந்தக் கவிகளை எப்படி யெல்லாமோ ரசித்தாள். சொல்லப் போனால்; கவிதையைக் கொண்டு சீதாராமன் நிர்மலாவை அடிமை கொண்டான். கவியைக் கண்டு நிர்மலாவும் சீதாராமனை விரும்பினாள். அவளுக்கு அவனே துஷ்யந்தன். அவனே சந்திரா பீடன். அவனே கசன்; அவனே ரோமியோ; அவனே அந்தொனி!…
ஆனால், சீதாராமன் அவளிடம் மனிதனாக நடந்து கொள்ளவில்லை. கவியாகத்தான் நடந்து கொண்டான். அது இளமையின் கோலம். அவன் கலி; தென்றலையும் தேனையும், குயிலையும் மயிலையும் அவளிடம் கண்டான். அவள் கன்னி மையை அவன் குலைக்க விரும்பவில்லை. அதனால், காதல், அதாவது எட்டி நின்று விளையாடும் லட்சியக் காதல் என்ற சொப்பன சொர்க்கத்தில் இருவரும் முயங்கிக் கிடந்தனர்.
காலம் வளர்ந்தது. சீதாராமன் மனிதனானான், சரீர உணர்ச்சி மேலோங்கியது. நிர்மலாவின் கன்னிமையைக் களவாட விரும்பினான். நிர்மலா தன் புனிதத்துவத்தைக் குலக்க விரும்பவில்லை. ஆனால், மந்திர கோஷங்களோடு தன் கன்னிமையை ஒப்படைத்து, மாங்கல்ய பலத்தில் அந்தப் புனிதத்துவத்தைக்கொண்டு செலுத்த நினைத்தாள். அதற்குச் சீதாராமன் தயாரில்லை.
எனவே இரு துருவங்களும் வெவ்வேறு திசையிலே திரும்பின. சீதாராமன் வேறொருத்தியை மணந்தான்.
நிர்மலா தன் சந்திராபீடனை, தன் துஷ்யந்தனை, தன் கசனை… இழந்து வேறொருவனை மணக்க விரும்பவில்லை. எனவே வைராக்கியம் சித்தத்தோடு கன்களித்துறவு பூண்டு காலம்கழிக்க எண்ணினாள்.
இது பழைய கதை. நடந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அவள் தன் வாழ்க்கையில் விளக்கம் தேட முயன்றதுண்டு. சீதாராமனும் நானும் ஒத்த மணமுடையவர்கள் தாமா? அல்லது இல்லை யென்றால் இறுதிக்காலத்தில் இருவரும் வேறுபடுவானேன்! நான் காதலித்தது சீதாராமனின் மோகன ரூபம் தானா? இல்லை. காவிய சொரூபமான காதலனை அவரிடம் தான் உருவகப்படுத்திக்கொண்டேனா? அப்படி யானால், சீதாராமன் என்னிடம் கண்டது வெறும் சதைப் பிடிப்பின் கவர்ச்சியைத்தானா? அப்படியானால் எங்கள் வளர்ச்சியில் நாங்கள் வெவ்வேறு திசை நோக்கிச் செல்லும் யாத்திரிகர்கள் தானா? ஏதோ அகஸ்மாத்தாக இருவரும் ஒரு ஸ்தலத்தில் சந்தித்தோமா? சந்தித்து விலகிவிட்டோமா? ஒரு வேளை அந்த ஸ்தலத்திலேயே நாங்கள் ஒன்றுபட்டிருந்தால் எங்கள் இருவர் பாதைகளும் ஒன்றா யிருக்குமா? யாராவது ஒருவர் மற்றொருவருக்காக விட்டுக் கொடுத்திருக்கமுடியுமா? அன்று நாங்கள் சந்தித்த திரிசங்கு ஸ்தலத்தையே எங்கள் சொர்க்கமாக்கி யிருக்க முடியாதா?…
இதற்கெல்லாம் விளக்கம் அகப்படவில்லை. கண்ணைக் கட்டிவிட்டால், எந்தத் திசையில் செல்கிறோம் என்று எப்படித் தெரியும்? அவள் சென்றுகொண்டிருந்தாள். ஆனால் திசைதான் தெரியவில்லை. இந்தப் பதினைந்து ஆண்டு களாகத் தெரியவில்லை.
4
ஆனால், இந்தப் பள்ளிக்கூடத்தில் வேலை ஒப்புக்கொண்ட தினத்தன்று மீண்டும் அவள் மனதில் ஆன்ம விசாரம், உணர்ச்சிப் போராட்டம் ஆரம்பித்தது. அது வாவிடப் பருவத்தின் கனவு நிலையில் ஏற்படும் இளம் போர் அல்ல. செத்து மடியப்போகும் தாய்மை உணர்ச்சியின் அந்திமப் போராட்டம். பெண்களின் வாழ்வில் இரண்டாவது முறையாக, இரண்டுங் கெட்டான் வயதில் எழும் காதல் போராட்டம்.
முதல் நாளன்று கல்லூரி வகுப்புக்குச் சென்றபோதே அந்தப் போராட்டம் துவஜம் கட்டினீட்டது. அது ஜூனியர் இண்டர் வகுப்பு. வகுப்பிலுள்ள மாணவர்களை அறிமுகப் படுத்திக்கொள்வதற்காக, அவள் ஒவ்வொருவர் பெயரையும் வாசித்து, அவர்களை எழுந்து நிற்கச் சொன்னாள். பையன்கள் ஒவ்வொருவராக எழுந்திருந்து அமர்ந்தனர்.
“ரங்கநாதன்!”
ரங்கநாதன் எழுந்து நின்றான்.
நிர்மலா நிமிர்ந்து பார்த்தாள். அவள் நெஞ்சில் சுளுக்குவது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. அதோ நிற்பது ரங்கநாதனா அல்லது சீதாராமனா? இது அவள் திகைப்பு. ‘இதோ நிற்கும் பையன் இளைஞன். ரங்கநாதன்! சீதாராமனாயிருந்தால், இந்த பதினைந்து ஆண்டுகளில் எவ்வளவோ மாறியிருக்கவேண்டுமே. ஆனால்–? ரங்கநாதன் சீதாராமனைப் போலவே இருக்கிறான். அதே. முகச்சாடை, அதே குரல். அந்தக் கூரிய மூக்குக்கூட என் கண்முன் நிற்கிறதே!…
நிர்மலா ரிஜிஸ்டரை மூடிவைத்தாள். அதற்குமேல் எந்தப் பெயரையும் வாசிக்கவில்லை. அவள் மனத்தில் மீண்டும் ஏதோ உறுத்தியது. ரிஜிஸ்டரைத் திறந்தாள். ரங்கநாதன் பெயருக்கு முன்னால் ‘எஸ்’ என்ற எழுத்து காணப்பட்டது. ‘அவன் தந்தையின் பெயர்? ரங்கநாதன் சீதாராமனின் பிள்ளையா?’
அவள் மனம் வேறு திசையிலும் திரிந்தது. ‘எஸ்’ என்ற எழுத்தைக்கொண்டு இத்தனை மனக்கோட்டை கட்டுவதா? சீதாராமனுக்குப் பதிலாக, அது செல்வராஜாக இருந்தால், அல்லது எஸ் என்ற எழுத்தில் ஆரம்பமாகும் வேறு பெயராயிருந்தால்?…..’ அவள் வெகுநேரம் யோசிக்க வில்லை.
“ரங்கநாதன்! உன் தந்தையின் பெயர் என்ன?” என்று. தோரணையோடு கேட்டாள்.
“சீதாராமன்!” என்றான் ரங்கநாதன்.
நிர்மலாவுக்கு ஒரு நிவர்த்தி; அதே சமயம் உடம்பில் மெல்லிய அதிர்ச்சியும் கண்டது. அந்த அதிர்ச்சியால், வாயடைத்துப்போய் பேசாமல் இருந்தாள்.
“என் தந்தை உங்களுக்குத் தெரிந்தவரா?” என்று கேட்டான் ரங்கநாதன்.
“இல்லை. கேட்டேன்” என்று மழுப்பினாள் நிர்மலா. அவளுக்குப் பாடம் சொல்லித்தரவே ஓட்டவில்லை. முதல் நாளே மாணவர்கள் தன் போதனா சக்தியைப்பற்றித் தவறாக எண்ணிவிடக் கூடாதே என்று பயந்தாள்.
நல்ல வேளையாக மணி அடித்தது. நிர்மலா எழுந்து சென்றான்.
5
விட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. எனவே காலார நடந்துவந்தால், அதனால் தோன்றும் களைப்பினாலாவது மனமும் உடலும் அயர்ந்துவிடாதா என்று நினைத்து வெளியில் கிளம்பினாள். செல்லும் வழியில், ஒரு சினிமா விளம்பரம் கண்ணை இழுத்தது. காதலர்கள் இருவர் ஒருடலாய் ஒன்றி நின்று அதரபானம் உறிஞ்சி நின்ற சித்திரம் அது. நிர்மலா அந்தச் சித்திரத்தை ஏனோ வெறித்துப் பார்த்தாள். முன்னெல்லாம் இந்த மாதிரிப் படத்தைக் கண்டால் கூட, பார்க்காதது, மாதிரி நடந்து விடுவாள். தன்னையுமறியாமல் அவள் கால் உக்கிங் ஆபீசில். கொண்டு நிறுத்தியது.
“எந்தப் படமானால் என்ன? பொழுது போக வேண்டுமே!” என்று தனக்குள்ளாகச் சொல்லிக்கொண்டாள். அதில் சமாதானம் கண்டுகொண்ட மாதிரி, தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டாள்.
அது ‘காரிருளில் ஒரு கன்னிகை’ என்ற ஆங்கிலப் படம். ஒரு பிரபல நாடகாசிரியரின் கதையைத் தழுவியது. அது ஒரு பெண்ணின் கதை. அவள் ஒரு பத்திரிகை ஆசிரியை. காதலற்ற வாழ்வு வாழ்வதில் பெருமை கொண்டு, கன்னி யாகவே வாழ்ந்து வந்தாள். ஆனால், வாழ்க்கையோ, அது மட்டும் இருந்தால் போதுமா? என்று கேட்டது. அவளுக்கு ஒரு கணவன், ஒரு காதலன் தேவைப்பட்டான். தொழில் முறையில் அவள் வெற்றி கண்டவள் தான்; என்றாலும் வாழ்க்கையில் காதலும் முக்கியமானது என்பதை அவள் மறந்துவிட்டாள். அதன் பலன் விபரீதமான மனப் போராட்டங்கள், போராட்டங்களுக்கு முடிவு திருமணம்…….
படம் முடிந்தது. எழுந்து வரும் வரையில், நிர்மலாவுக்கு அந்தப் படத்தின் மீது எந்த துவேஷமும் ஏற்பட வில்லை. வெளியில் வந்தவுடன் ஏதோ தன்னையறியாமல் ஒரு துவேஷம் அவள் மனசில் கிளைவிட்டது. காரணம், அவள் தனது பிரதிபிம்பத்தை அந்தக் கதாநாயகியிடம் கண்டாள். ஆனால், அவளைப்போல் தானும் தோல்வியை ஏற்கவா?…
வீட்டுக்கு வந்ததும் அவளுக்குத் தூக்கமும் பிடிக்கவில்லை. அந்தப் படத்துக்கு ஏன் போனோம் என்று இருந்தது அவளுக்கு. ஜன்னல் கதவுகளையெல்லாம் திறந்து போட்டு, காற்றுவரும் திசையில் உடம்பைக் கிடத்தினாள். சுகமான காற்றுத்தான். என்றாலும், புழுங்குவது மாதிரி இருந்தது.
ஜன்னலுக்கு வெளியே இருள் குளப்பாசிபோலக் கப்பிக் கவிந்து, கனத்துக்கிடந்தது. நிர்மலா இருளையே வெறித்துப் பார்த்தாள். அந்த இருளின் அந்தகாரத்திலும் அந்தச் சுவரொட்டி விளம்பரம் கண்முன் தோன்றியது. அந்த நிலையைக் கற்பனை பண்ணினாள். அப்போது ரங்கநாதனின் முகம் தன் முகத்தை நெருங்குவதுபோல ஒரு பிரமை தட்டியது. தன்னையும் அறியாமல், அவள் வாய் ‘ரங்கா’ ரங்கா’ என்று முனகியது.
தன் உள்ளத்தையும் உடலையும் வாட்டும் அந்தப் புது அனுபவத்தை அவள் அர்த்தப்படுத்திக் கொள்ளவில்லை. சீதாராமனிடம் பழகிய போது ஏற்பட்ட அனுபவம்போலத் தான் இதுவும் தோன்றிற்று. இருந்தாலும், அவன் வயதென்ன? அவள் வயதென்ன? ரங்கநாதன் அவளுக்குப் பிள்ளை வயது தானே இருப்பான்! ஆனால், அவள் ரங்கநாதனிடம் கண்டது அவனது இளமையா? இல்லையே! சீதாராமன் அவள் மனசில் தீட்டிவிட்ட காவியக் காதலன் – லட்சியக் காதலன்! – அந்த மூர்த்தத்தைத்தானே அவள் கண்டாள்!
இந்த உண்மையை அவள் உணர்ந்துகொண்டாள். அப்படியானால், நிர்மலா ரங்கநாதனைக் காதலிக்கிறாளா? பதினெட்டு வயது இளைஞனிடம் அவனைவிட இரண்டு மடங்கு மூப்பான ஒரு பெண், காதல் கொள்வதா? இது விந்தையாயில்லையா? அதற்கு அர்த்தம்?
அந்த அர்த்தம் தான் அவளுக்குப் புலப்படவில்லை.
6
தன் வாழ்வில் நேர்ந்துவரும் இந்த விபரீத உணார்ச்சியை நிர்மலா ஒதுக்கித் தள்ள முடியவில்லை. வகுப்பிலோ எங்கு ரங்கநாதனைக் கண்டாலும், அவள் கண்கள் அந்தப் பக்கம் திரும்ப நினைத்தன. அதை அவள் தடுக்க முடிய வில்லை.
இந்த வேதனையை, தன் வைராக்கியத்தை முறியடிக்கும் புது உணர்வை அவள் தனக்குத்தானே ஆராய்ந்து பரர்த்தாள்.
‘இதென்ன இது? ரங்கநாதன் எத்தனை பிள்ளை? . பதினெட்டு வயதுப் பிள்ளையை, முப்பத்தியேழு வயதுப் பெண் காதலித்ததாகக் கதைகளில்கூட, நான் படித்த தில்லையே! ஆல்பிரெட் எச். மைல்ஸ் என்பவர் எழுதிய ‘காதலும் பிராயமும்’, என்ற கதையைக்கூட்டப் படித்திருக்கிறேன். ஆனால், அதில் ஐம்பது வயதுக்கு மேலான கிழவன், பதினெட்டு வயதுக் குமரியை மணப்பதாகப் படித் தேன். ஆசிரியர் கூறும் காரணம் கூடப் பொருத்தமாய்த் தான் தோன்றிற்று. இந்த மாதிரி உதாரணத்துக்கு கதையைப் படிக்க வேண்டாம். நம் நாட்டில் முதியவர் களுக்கு இளங்குமரிகளை விவாகம் பண்ணுவது இன்றும் நடந்துவரும் காரியம். இருபாலரும் விரும்பியே மணந்து கொள்ளும் விதங்களும் இருக்கின்றன.
“ஆனால் வயதுக்கினிய பையனை மூத்த பெண்ணொருத்தி கல்யாணம் பண்ணியிருக்கிறாளா? காதல் கொண்டிருக்கிறாளா? ஷேக்ஸ்பியர் கூட வயதுக்கு மூத்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொண்டார். இருந்தாலும் எனக்கும் ரங்கநாதனுக்கும் உள்ள வயது வித்தியாசத்தைத் கவனித்தால், இது மாதிரியான காதல் கதையிலும் இல்லை, வாழ்க்கையிலும் இல்லையே.
“அப்படியானால், என் காதல் உணர்ச்சிக்கு என்ன விளக்கம் கூறுவது? எங்கே விளக்கம் காண்பது? விளக்கம் கிடையாவிட்டால், நான் இப்படியே வேகவேண்டியது தானா?”
நிர்மலா தன் மனசைப் போட்டு அலட்டிக்கொண்டிருந்தாள். இந்த வேதனை அவளை ஒரு நாள் அல்ல, தினம் தினம் வருத்தியது.
ஒரு நாள் –
மாலை நேரம்தான். கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அங்கு நின்றது ரங்கநாதன்.
அவன் ஏன் வந்தான்? இங்கு அவனுக்கு என்ன வேலை? அவளது உள்ளச் சலனத்தை அவன் உணர்ந்து கொண்டானா? அவ்வளவுக்கு அவன் அனுபவம் பெற்றவனா? பக்குவதசை அடைந்தவனா?…..:
அவள் ஒன்றும் பேசாமல், அவனையே. பார்த்தாள். அவன் நமஸ்கரித்தான், வாய் பேசாமல் இருவரும் உள்ளே வந்தனர்.
“எங்கே வந்தே?” என்று ஆங்கிலத்தில் கேட்டாள் நிர்மலா.
தமிழில் பேசினால் ‘நீ, தான்’ என்று. ஒருமையில் பேசி விடுவோமோ என்ற பயம். அந்தப் பயம் ஏற்படுவா னேன்? அவன். அவளது மாணவன். அவனை ‘வா’ என்று அழைத்தாலென்ன? வாருங்கள் என்று அழைக்கா விட்டால் என்ன குற்றம்? அது தான் அவளுக்குப் புரிய வில்லை.
“’எனக்கு இங்கிலீஷ் கொஞ்சம் வீக், எனவே உங்களிடம் ட்யூஷன் சொல்ல உத்தேசம்” என்று பேச்சை ஆரம்பித்தான் ரங்கநாதன். அதைப் பேசுவதற்குள் ளாகவே அவன் நடுநடுங்கிப் போனான். அந்த நடுக்கத்தை நிர்மலா காணாமற் போகவில்லை. அவன் நடுங்குவானேன்?. அவளது மனத்தை அறிந்து கொண்டும் அவளோடு உறவாட பொய்க் கதை கூறுவதால் உண்டாகும் நடுக்கமா? அதெப்படி அவனுக்கு அவள் மனத்தின் சஞ்சலம் தெரியும்! அப்படியானால், ஒரு வேளை ஒரு பெண்ணோடு தனியே இருந்து பேசுவதற்கே அவன் கூசுகிறானா? அப்படிக் கூசும் பருவம் தானா அது!
நிர்மலா எதையெதையோ யோசித்தாள். பிறகு அவன் கேள்விக்குப் பதில் சொன்னாள்: “நான் ட்யூஷன் சொல்லிக் கொடுப்பதில்லை!”
“இல்லை. நீங்கள் கட்டாயம்…” என்று ஆரம்பித்து மென்று விழுங்கினான் ரங்கநாதன்.
நிர்மலாவுக்கு ஏற்கனவே பெரிய சங்கடம். மீண்டும் யோசித்தாள். ட்யூஷன் சொல்லிக் கொடுத்தால், ரங்க நாதனோடு நேருக்கு நேராய்ப் பழக வேண்டியிருக்கும். அப்போது தன் போராட்டம் வலுப்பெற்று தன்னையே விழுங்கி விடக்கூடும். அல்லது அந்த நப்பாசை தேய்த்து மறையவும் கூடும். ஆனால் போராட்டத்தின் கை வலுப் பெற்றுவிட்டால் தன் வைராக்கியம் என்ன ஆவது? ஆனால், அவகாச் சந்திப்பதால், தன் லட்சியக் காதலனை – சந்திரா பீடனை – சீதாராமனைச் சந்திக்கலாம். அதில் ஒரு திருப்தி ஏற்படாதா?
தன்னையுமறியாமல் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப் படும் மனிதனைப்போல் அவள் நடந்து கொண்டாள்.
“சரி, நாளைமுதல் வரலாம்” என்றாள் நிர்மலா.
ரங்கநாதன் சந்தோஷத்துடன் எழுந்து சென்றான்.
வீணாக வேதனைப்பட்டு நைந்து. கூழாவனதவிட, அந்த வேதனைக்கு விட்டுக் கொடுத்து தப்பித்து வெளிவர முடியும் எனக் கருதினாள் நிர்மலா. ஆனால் காலம் வேறு வீதமாய்த் தான் அவளிடம் விளையாடிக் கொண்டிருந்தது. தான் எந்த ஆசையை உதறித் தள்ள முடியும் எனக் கருதினாளோ, அந்த ஆசையே கணத்துக்குக் கணம் அவளை அடிமை கொண்டு வந்தது.
அன்று மாலை அவள் வெளியில் செல்லும்போது நிலைக் கண்ணடி, முன்னால் அரைமணி நேரமாவது நின்றிருப்பாள். அலங்கரித்துக் கொள்வதில் அக்கறை காட்டினாள். நெற்றிக்குப் பொட்டுக்ககூட இட்டுக்கொண்டாள். வெளியில் சென்று விட்டுத் திரும்பும்போது ஒரு பவுடர் டின்னும் வாங்கி வந்தாள். அதை ஏன் வாங்கினோம் என்று அவள் நினைத்தாலும், வாங்கும்போது அந்த நினைவு எழவில்லை.
“நான் யாருக்காகப் பவுடர் பூசவேண்டும்? யாரைக் கவர்வதற்காக ?, இல்லை. நான் கிழடாகி வருகிறேன் என்ற உணர்ச்சி என்னில் முளைவிடுவதாலா? அப்படிக் கிழடானால் தான் என்ன? நான் இளமையைத் திரும்பப் பெற முடியுமா? பெற்றாலும் என்ன செய்வது? யாருக்காக இந்த இளமை வேஷம்? யாருக்காக இந்த அலங்காரம்? எனக்கா? எனக் கெதற்கு? பீன் யாருக்கு?”
அந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே ஒரு பதில் தான் இருந்தது: ரங்கநாதன்!
7
ரங்கநாதன் மனசிலும் கடந்த இரண்டு மாத காலமாக ஒரு போராட்டம். தன் ஆசிரியை நிர்மலா தன்னை ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறாள்? தன்னிடம் ஏன் இத்தனை அன்பு காட்டுகிறாள்? இது ஒரு குரு தன் சீடனிடம் கொள்ளும் அன்புதானா? அல்லது ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்புதானா? அல்லது…….
அவனுக்கு இப்படிக் கேள்வி மேல் கேள்வியாய் மனசில் எழுந்தாலும், அதன் காரணம் விளங்கவில்லை.
அவன் பதினெட்டு வயதை எட்டிவிட்ட இளைஞன். பால்யத்தின் சில்லுக்குரல் உடைந்து , தன் குரல் காத்துக் கரகரப்பு எய்தியிருப்பதையும் அவன் உணர்ந்தான். அது ஒரு குழந்தையின் குரல் அல்ல; ஒரு ஆண் மகனின், குரல், அது தான் அவனுக்குத் தெரியாது. கடந்த ஒரு வருஷ காலத்தில் அவன் பீர்க்கங் கொடிபோல மதமத வென்று வளர்ந்துவிட்டான். சில மாத காலமாகத்தான் அவன் முகச் சவரம்கூடப் பண்ணிக் கொள்கிறான். தன் உடம்பிலே ஏற்பட்டு வரும் பருவகால மாறுதலை அவனும் தான் உணர்ந்தான். இப்போது ஊருக்குச் சென்றால், தன் தாயைத் தொட்டுப் பழகக்கூடக் கூசினான். அவள் என்ன அவனுக்கு அன்னியமாய்ப் போய்விட்டாளா? இல்லையே? பின் இந்த மன மாறுதலுக்குக் காரணம்?
முன்னெல்லாம் ரங்கநாதன் ட்ராயரைப் போட்டுக் கொண்டு எங்கு வேண்டுமென்றாலும் சுற்றி வந்துவிடுவான். இப்போது அவன் தளரத் தளர வேட்டி கட்டாமல் வெளியில் செல்வதற்கே கூசினான். தினம் முகத்தை ஆறேழு தடவை சோப்பிட்டுக் கழுவிக் கொண்டான். கண்ணாடி முன் வெகு நேரம் செலவழித்தான். இதெல்லாம் எதற்காக? வேட்டி கட்டாவிட்டால் அவனைச் சின்னப் பிள்ளை என்று விடுவார்களா? அப்படியானால், அவன் பெரிய மனுஷன் ஆகிவிட்டானா?.
அவனுக்கும் இந்தச் சஞ்சலத்தின் புதிர் விளங்கவில்லை. நான் அலங்கோலமாய்ப் போனால் யாருக்கென்ன? அப்படி யானால், நான் அலங்கரிப்பது பாருக்காக?, இதை ஆராயும் போது, அவன் உள்ளத்தில் ஏதோ சூனியம் விழுந்துபோன மாதிரி ஒரு உணர்ச்சி தோன்றியது.
“நான் ஏன் இந்த உலகில் தனியாயிருக்கிறேன்? நான் ஏன் என் பெற்றோர்கள் மீது, உடன்பிறந்தார் மீது, பற்றற்றவனாய் மாறி வருகிறேன்? எனக்கென்ன குறை தேர்ந்தது?. அப்படியானால், நான் யாருடைய ஆசைக்காக, பாசத்துக்காகத் திரிகிறேன்?”. இது அவனறியாமல் அவன் உள்ளம் தேடித் திரியும் கேள்வி.
அவன் தேடித்திரியம் அந்த இனந்தெரியாத நபர் மோகினி மாயைபோல அவனுக்குப் பலதடவை சொப்பன அவஸ்தையைத் தந்திருக்கிறாள். இருந்தாலும் அவள் யார்? அவனை நான் ஏன் தேடவேண்டும்? அவள் எங்கே இருக்கிறாள் ? இதற்கு விடை காணாவிட்டாலும், இந்த அலைக்கழிப்புக்குக் காரணமான உண்மையை அவன் ஒருநாள் இரவு கண்டு பிடித்துட்டான். தான் ஒரு மனிதனாக ஒரு ஆண்மகனாக மாறிவிட்ட உண்மையை அவன் அறிந்து கொண்டான். உடனே மனசில் ஒரு தெம்பு; ஒரு உற்சாகம்… ‘நான் தனியே இருக்க முடியாது, அவளைத் தேடிக் காண்வேண்டும்” என்று ஒரு ஆணவ வைராக்கியம். அது அந்தப் பருவத்தின் கோளாறு அல்ல; வளர்ச்சி.
இந்த உண்மை அவனுக்குத் தெளிவானதும் அவன் மனசிலும் பற்பல சம்பவங்கள் நிழலாடின. மூன்று வருஷங்களுக்கு முன்னால் அம்மா சொன்ன வார்த்தைகளின் கருப் பொருள் விளங்கிற்று. அவனது மைத்துனி கோகிலா சமயம் பார்த்துத்தான் சடங்கானாளாம் ஆனால் இப்போது அவனுக்கு அம்மாவைப்பற்றியோ, கோகிலாவைப்பற்றியோ நினைவு இல்லை; ஆனால் நிர்மலா-
அவனுக்கு அந்த ஒருநாள் இரவுச் சம்பவம் நினைவுக்கு வந்தது.
அன்று ஏதோ கோளாறினால், மின்சார விளக்கு அணைந்து போய்விட்டது. அவனும் நிர்மலாவும் இருளில் ஒருவர் முகம் தெரியாமல் இருந்தனர். அப்போது நிர்மலாவின் கர ஸ்பரிசம் ரங்கநாதன் மீது பட்டது. அவன் சுரீரென்று கையை இழுத்துக் கொண்டான்.
“ரங்கா!” மெல்லிய சப்தம் கேட்டது.
ரங்கநாதன் பேசி வாயெடுத்தான். வெறும் கரகரப் புத்தான் எழுந்தது.
“உன் கையா? பரவாயில்லை. சரி, மேஜையிலே மெழுகுவத்தி இருக்கிறதா பார். எதையும் தட்டி விடாதே தடவிப்பார்” என்றாள் நிர்மலா.
அவன் தடவினான்.
அப்போது அவன் கை மேஷஜ விளிம்போரத்தில் சாய்த் திருந்த நிர்மாவின் மேல் பட்டுவிட்டது. அவன் கையை இழுத்தான்.
“நன்றாய்த் தேடுகிறாயே!” என்று கேலி பண்ணினாள் நிர்மலா.
அவனால் அதைத் தாங்க முடியவில்லை. ஏற்கெனவே அவன் உள்ளம் படபடத்தது, அந்தச் சமயம் மீண்டும் மின்சாரம் வராமலிந்திருந்தால் அவன் வெளியே ஓடியே போயிருப்பான்.
இது மாதிரி எத்தனையோ சம்பவங்கள், அவற்றைக் கொண்டு என்ன நினைப்பது? நிர்மலா தன்மீது ஆசை கொள்கிறாளா? அல்லது வெறும் பிரமையா? நானும்… ஆனால், அவள் குருவல்லவா? என்னைவிட எத்தனை வயது மூத்திருப்பாள்?..
அவன் மனம் சம்பிரதாய வரன்முறையில் அலைக் கழிந்தது. அதையும் மிஞ்சி, ‘நீ ஆண்மகன்’ என்று அடிக்கடி ஆணவத்தோடு உறுத்திக்கொண்டிருந்தது அவன் உள் மனம்.. “அப்படியானால், நான் நிர்மலாவைக் காதலிப்பதா? நான் தேடித் திரியும் பாசத்தை அவள் தான் எனக்கு வழங்குகிறாளா? நான் இதுவரை கண்டறியாத் பாசத்தை அவள் தான் வழங்குகிறாள். அந்தப் பாசம்தான் காதலா?…..
அன்று மாலை அவள் ட்யூஷனுக்குச் சிக்கிரமாகவே கிளம்பிச் சென்றான். அவனிடம் அன்று ஒரே பரபரப்புக் காணப்பட்டது. அதன் அர்த்தம் உடலுக்குத் தெரிந்தது.
நிர்மலா அன்று அவனுக்கு ஜெர்மன் கவிஞர் சுதேயின் வாழ்க்கையைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள். கதே தமது வயோதிக காலத்தில் உல்ரிக் என்ற இளம் பெண்னையக் காதலித்த கதையைச் சொன்னாள்.
பரபரப்புடன் கேட்டுக்கொண்டிருந்த ரங்கநாதன் “அந்தக் காதல் நிறைவேறிற்றா?” என்று கேட்டான்.
“இல்லை” என்றாள் நிர்மலா.
சிறிது நேரம் கழித்து, அவன் தொண்டையில் கூடி நின்ற எச்சிலே விழுங்கிவிட்டு, “இது மாதிரி, வயதுக்கு மூத்த பெண் இளைஞன் ஒருவனைக் காதலித்ததாக இருக்கிறதா?” என்றான்.
“தெரியவில்லை” என்றாள் நிர்மலr.
ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியை அவள் புரிந்து கொண்டாள். அப்படியானால், ரங்கநாதன்,….. அவள் முகம் சிவந்த கணவேறியது: கைகள் துறு துறுத்துப் பிசைந்தன.
மறுகணம், “இல்லை ரங்கா! நான் இருக்கிறேன். நான் இருக்கிறேன்!” என்று கூவிக்கொண்டே ரங்கநாதனைத் தாவி அணைத்தாள்.
ரங்கநாதன் திக்குமுக்காடினான்; ஆனால் மறுகணமே அவன் ஆண்மை வீழித்துக்கொண்டது.
8
தன் காதல் இவ்வளவு சீக்கிரம் பலிதமடையும் என்று நிர்மலா நினைக்கவில்லை, கமலாவின் தீர்க்கதரிசனம் சரியாய்ப் போகும் என்றும் அவள் கருதவில்லை, ஆனால் அந்தக் காதலுக்குக் காரணம்?….
“நான் ஏன் ரங்கநாதனைக் காதலித்தேன்? சீதாராமன் உருவில் அவனைக் கண்டதாலா? இல்லை. இவன் வேறு நபர் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும், ஏன் காதலித்தேன்? மாய்ந்துவரும் என் தாய்மையைக் காப்பாற்றுவதற்காகச் செய்த இறுதி முயற்சியா? நெருங்கி வரும் பேரிளம் பெண் பருவத்திலிருந்து தப்பிக்க எண்ணி, என் பெண்மை இளமையைத் தேடிப் பின்வாங்கியதா? அதனால் தாள் நான் என்னை அலங்கரித்தேனா? அதனால் தான் நான் ரங்கநாதன் போன்ற இளைஞனைக் காதலித்தேனா?…….”
அவளுக்குத் தன் அனுபவ ரேகையில் உண்மை ஒளி தோன்றுவதாகப்பட்டது.
தன் மனமாறுதலுக்குக் காரணம் இயற்கைதான் என்று உணர்ந்தாள். ஆனால் இயற்கை வஞ்சித்ததா? இல்லை. வாழ்வித்ததா? அது அவளுக்குத் தெரியாது. இருந்தாலும் அவள் அந்தச் சுகத்தில் ஆனந்தம் கண்டாள்.
“ஆனால் ரங்கநாதன் போன்ற இளைஞன் தன் வயது வந்த. பெண்ணைக் காதலிக்காமல், என் காதலை எப்படி ஒப்புக் கொண்டான்? அதன் காரணம் என்ன? அவன் ஆண்மை எய்திய இளைஞன். பசிகொண்டு. இரைதேடித் திரிந்த அவன் ஆண்மைக்கு நான் தான் அகப்பட்டேனா? இல்லை, அவன் இளைஞன். பேய் வேகத்தில் வளர்ந்து வரும் ஆண்மைக்கு உடனடியாக ஒரு பிடிப்பு வேண்டும்; அதற்கு நான் தான் கைகொடுத்து உதவினேன்.. அப்படித்தானா?…
“இல்லை, நான் ‘இளமையை நாடி’ அலைக்கழிந்தேன். அவன் ஆண்மைப் பாதையில் முன்னேறிக்கொண்டு வந்தான். நாங்கள் இருவரும் சந்தித்தித்துக் கொண்ட ஸ்தலம் நீரு திரிசங்கு மண்டலம், அதையே நாங்கள் சொர்க்கமாக்கிக் கொண்டோம்.
அப்படியானால், நாங்கள் மீண்டும் விலகிவிடுவோமா? பிரிந்து விடுவோமா? எதிரெதிராக வரும் இரு சக்திகள் ஒரு இடத்திலே சந்தித்தால், ஒன்று, அவற்றின் போக்கே நிற்க வேண்டும். அல்லது, மீண்டும் எதிரெதிராகச் செல்ல வேண்டும். நாங்கள் எங்கு செல்லப்போகிறோம்? ரங்கநாதன் என்னை கைவிட்டுவிடுவானா? இல்லை. நான் தான் அவனைக் கைவிடுவேனா?
“ஆனால், அதையெல்லாம் நினைத்து வாழ்க்கையில் கிடைக்கவிருக்கும் ஆனந்தத்தை இந்த அந்திம தசையிலாவது, அனுபவி யாமலிருப்பதா? பதினைந்து ஆண்டுகளாக நான றியாமல் சாகாது கிடந்த என் காதல் இன்றாவது இஷ்ட பூர்த்தி யடையக்கூடாதா?……..”
அன்றிரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் அந்தப் பொழுதின் ஆனந்தம் குமிழிட்டுக் கொப்புளித்துப் பெருகிற்று.
9
பதினைந்து நாட்களுக்குப் பிறகு, மிஸ்.நிர்மலா மிஸிஸ்.ரங்கநாதன் ஆகிவிட்டாள்!
– 1949 – க்ஷணப்பித்தம் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 50, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை