அமர்க்களப்பட்டுக்கொண்டு இருந்தது மேடை. வருடா வருடம் நடக்கும் கலை விழா. நாலு வருட மாணவர்களும் சேர்ந்து அரங்கத்தை அதிரவைத்தார்கள்.
பாட்டுப் போட்டி முடிந்ததும், ‘‘நந்தகுமார், கலைவாணி,ஹரீஷ், ப்ரபா,மிருதுளா,ஒப்பிலியப்பன் எல்லோருமே இசைக்கு இனிப்பு தடவி காதுக்கு விருந்தளித்தனர். அனைத்துமே குறை சொல்ல முடியாத நட்சத்திரப் பாடல்கள். ஆனால்…’’ என்று சற்றே நிறுத்திய நடுவர், ‘‘இந்த நட்சத்திரங்களின் நடுவே ஜொலிக்கும் பௌர்ணமி, விஷ்வாவின் பாடல்தான்!’’ என்று முடிக்க…
கைத்தட்டலும், விசில் சத்தமும் அரங்கத்தின் கூரையைப் பிளந்தன. நண்பர்களின் தோளில் பயணித்து மேடை ஏறினான் விஷ்வா. முகத்தின் தசைகள் இறுக, கோபத்தில் கண்களை மூடிக்கொண்டாள் ஜெயலட்சுமி.
‘‘…ஜெயலட்சுமியின் இசை, இரண்டாவது பரிசு பெறுகிறது!’’
பல்லைக் கடித்தாள். கிறங்கடிக்கிற குரல் தான் விஷ்வாவுடையது. ஆனாலும், எப்பவும் எதிலும் அவனே முதல் இடத்தைத் தட்டிச் செல்வது என்றால்..?
முன்பொருமுறை, வேர்ட்ஸ்வொர்த் ரேஞ்சுக்கு இயற்கை அழகைப் புனைந்திருந்த அவளின்
ஆங்கிலக் கவிதையை ஒளவையார் ஸ்டைலில் ஒரு மரபுக் கவிதை புனைந்து வீழ்த்தி விட்டான் விஷ்வா. க்விஸ் போட்டி யிலும் அவன்தான் முதலிடம். அவ்வளவு ஏன்… ஆகஸ்டில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவிலும், வந்திருந்த பிரபல கம்பெனியின் ஒரே ஒரு ஆஃபரும் அவனுக்கே போய்ச் சேர்ந்தது.
‘‘என்னடி… இந்தத் தடவை ஸிங்கர் கப் உனக்குத்தான்னு உறுதியா இருந்தோமே…’’
‘‘டி.வி. கவரேஜ் வேற! முதல் இடத்தைப் பிடிச்சிருந்தா, வித்யாசாகர்பாட அழைச்சிருப்பார்…’’
‘‘சரி, விடுடி ஜெயா! இனி ஆகறதைப் பார்ப்போம். அப்ளாஸை எல்லாம் அள்ளிக்கிட்டு அதோ வரான் பார், கப்போடு! ஓடிப்போய் கங்கிராட்ஸ் சொல்லு. உடனே ‘ஐ லவ் யூ’ சொல்லிடுவான்!’’ – இது நூதனா.
‘‘என்னது?!’’
‘‘பின்னே… விஷ்வா என்ன இந்த ஜுஜுபி கப்பை வாங்கறதுக்கா பாடறான்? எல்லாம் உன்னை இம்ப்ரஸ் பண்ணத்தான்!’’
‘‘ரியலி..?’’
‘‘ஏய்… ஏய்… ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதே!’’
அவர்கள் சொல்வது சரிதான். விஷ்வா கொஞ்ச நாளாகவே அவள் மனசுக்குள் சம்மணம் போட்டு உட்கார்ந்து, அவளை அலைக்கழித்துக் கொண்டுதான் இருந்தான்.
சிரித்துக்கொண்டே அருகில் வந்தான் விஷ்வா.
‘‘கங்கிராட்ஸ் விஷ்வா!’’ என்றாள் ஜெயலட்சுமி.
‘‘இல்ல ஜெயா, உன் குரல் ரொம்ப ஸ்வீட்டா இருந்தது. எப்படி உன்னை விட்டுட்டு எனக்குக் கொடுத்தாங் கன்னு புரியலே…’’ என்றான். அவன் மனப்பூர்வமாகத்தான் இதைச் சொன்னான். ஆனால், அவள் மனசோ திமிர் திமிர் என்றது.
‘‘சரணத்தின் மூணாவது வரியிலே ஹெலிகாப்டரா இறங்கி வந்தியே, அப்படியே சரண்டர் ஆயிட்டேன்!’’ என்றான்.
ஆஹா… கிட்டே வந்துட்டான். இதோ, அந்த மூணு வார்த்தையைச் சொல்லப்போறான். அவள் மனசுபடபடத்தது. அவ-னோ, ‘‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!’’ என்று நாலு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அகன்றான்.
‘‘என்னடா, சொல்லிட்டியா?’’ – கேட்டான்முகேஷ்.
‘‘இல்லே!’’
‘‘ஏண்டா?’’
‘‘அவ சொல்லுவானுஎதிர் பார்த்தேன்!’’
‘‘சொல்லலைல்ல..? அப்ப நீயே சொல்லிட வேண்டியதுதானே?’’ – இது பரசு.
‘‘இல்லடா! நான் சொல்லி அவ மறுத்துட்டா, அதை என்னால தாங்க முடியாது!’’
‘‘அட லூஸ§! அவ உன்னை மறுக்கக் காரணமே இல்லை யேடா! உன்னைவிட அவளுக்குத் தகுதியான ஜோடி இந்த காலேஜ்லேயே… ஏன், இந்த உலகத்துலேயே கிடை யாது!’’
‘‘ஒருவேளை, அவளுக்குக் காதலே பிடிக்காட்டி..?’’
‘‘காதல் பிடிக்காதுன்னு சொல்வா! அதெப்படி உன்னைப் பிடிக்கலைன்னு ஆகும்?’’ – மோகன்.
எல்லாருமாகச் சேர்ந்து, ஜெயலட்சுமியிடம் ‘ஐ லவ் யூ’ சொல்ல அவனைஒரு வழியாகச் சம்மதிக்க வைத்தார்கள்.
மறுநாள் மாலை, கம்ப்யூட்டர் சென்டரிலிருந்து திரும்பும் போது…
‘‘ஏண்டி ஜெயா உன்னையே ஏமாத்திக்கிறே? மனசுக்குள்ளே உனக்கு அவன் மேல ஒரு இது இருக்குதானே?’’ என்றாள் தீப்தி.
‘‘இருக்கு. ஆனா, அதைவிட அதிகமாக எனக்கு அவன் மேல கோபம் இருக்கு. எப்பவும் அவன்கிட்டே தோத்துட்டே இருக்கேன். அவனை எப்படி நான் லவ் பண்றது?’’
‘‘நீ காதலிச்சுக் கட்டிக்கப்போறவன் உன்னைவிட ஒரு படி மேல இருக்கிறது உனக்குப் பெருமைதானே?’’
‘‘அதெல்லாம் அந்தக் காலத்துப்பெண் களின் நினைப்பு. நான் அப்படி கிடை யாது. என் ஆள் எப்படி சோதாவாஇருக்கக் கூடாதோ, அதே மாதிரி என்னைவிட மேலாகவும் இருக்கக் கூடாது. சமமா இருக்கணும். தவிர, ஒரு தடவையாவது அவனை நான் ஜெயிக்கணும். அப்புறம்தான் மற்ற விஷயம் எல் லாம்!’’
‘‘ஆச்சு, நாலு வருஷம் இதோ முடியப்போகுது. அவன் போற வேகத்தைப் பார்த்தா, மிச்சம் இருக்கிற ரெண்டு செமஸ்டரில் அதுக்கு வாய்ப்பே இல்லைன்னுதான் தோணுது!’’
‘‘இல்லை. நிச்சயம் அவனை நான் தோற்கடிப்பேன். தோல்வி எத்தனை வேதனை தரும்னு அவனுக்குப் புரியவைப்பேன்…’’
ஐஸ்க்ரீம் பார்ல ரில் விஷ்வா, ஜெயலட்சுமி இருவரும் உட்கார்ந்–திருந்தார்கள்.
‘‘சொல்லு விஷ்வா, என்னவோ சொல்லணும்னு கூட்டி வந்துட்டு இப்படி ஒண்ணுமே பேசாம உட்கார்ந்திருந்தா எப்படி?’’
அவள் மனம் படபடத்தது. இதோ சொல்லப் போகிறான். அவளுக்கு இது ஒரு லைஃப் டைம் சான்ஸ். ஒட்டுமொத்தமாக அவனைப் பழி தீர்த்துக்கொள்ள ஒரு அயனான சந்தர்ப்பம்!
‘‘ஜெயா, நான் உன்னை… ஐ லவ் யூ!’’ என்றான் விஷ்வா தயங்கித் தயங்கி.
‘‘ஸாரி விஷ்வா!’’ என்றாள் ஜெயலட்சுமி.‘‘உன் மேல எனக்கு அப்படியரு எண்ணம் இல்லை! வெரி ஸாரி!’’ என்று இறுக்கமான குரலில் சொல்லி விட்டு, சட்டென எழுந்துகொண்டாள்.
அவன் புன்னகை சட்டென உறைந்தது. தோல்வியின் அதிர்ச்சியை அவன் முகத்தில் அணுஅணுவாக ரசித்தவள், பின்பு திரும்பிப் பாராமல் நடந்து, தன் ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டு போனாள்.
ரொம்பக் குதூகலமாக இருந்தது. தோழிகள் எல்லாருக்கும் செல்போனில் இந்தத் தகவலைச் சொல்லித் தீர்த்தாள். ஆனால், யாரும் சந்தோஷப்பட்ட மாதிரி தெரியவில்லை. அனுதாபத்துடன் கேட்டு ‘உச்’ கொட்டினார்கள்.
கிடக்கிறார்கள். அவளுக்கு இது சந்தோஷம்தான்! ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஆளுயர கப்பை வென்ற சந்தோஷம்!
ஆனால், அன்றைக்கு ஏனோ அவளுக்குத் தூக்கம் வரவில்லை. எதையோ இழந்துவிட்டாற் போல் மனசு தவியாய்த் தவித்தது. ராத்திரி பூரா புரண்டு புரண்டு படுத்தாள்.
அதிகாலையில் செல்போன் ஒலிக்க, சட் டென எடுத்தாள் ஜெயலட்சுமி.
‘‘என்ன ஜெயா, ராத்திரி பூரா தூங்கலையா? நான் விஷ்வா பேசறேன்!’’
‘‘சொல்லு!’’
‘‘என்னை ஜெயிக்கணும்னுதானே அப்படிச் சொன்னே? உண்மையைச் சொல்லு!’’
‘‘அப்படியே வெச்சுக்கோ! எப் படியும் நீ தோத்தது தோத்தது தானே?’’
‘‘அதான் இல்லை. நெஞ்சைத் தொட்டுச் சொல்லு, நேத்து நீ சொன்ன பதில் பொய்தானே? அப்புறம் எப்படி நான் தோத்ததா ஆகும்?’’
‘‘விஷ்வா… நான்… வந்து, உண்மையிலேயே…’’
‘‘இல்லை. இப்பவும் நீதான் தோத்துட்டே! என்ன ஒண்ணு… இத்தனை நாள் என்கிட்டே தோத்தே. இந்த முறை உன்னை நீயே தோக்கடிச்சுக்கிட்டே. அவ்வ ளவுதான் வித்தியாசம்!’’
ஜெயலட்சுமி நெளிந்தாள். ‘‘சரி, அப்படியே இருக்கட்டும்!’’ என் றாள் வீம்பாக.
‘ப்ச்… எல்லாம் முடிஞ்சு போச்சு!’ – அவளின் கண்கள் நீர்ப் போர்வை போர்த்திக்கொண் டன.
‘‘இருக்க வேண்டாமே!’’ என் றான் விஷ்வா. ‘‘உன் தோல்வியை வெற்றியா மாத்தறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆமாம், மறு படியும் உன்கிட்ட அதே கேள்வி யைக் கேட்கப் போறேன். ஐ லவ் யூ ஜெயா! டோன்ட் யூ லவ் மி?’’
இந்த முறை சரியான பதிலைச் சொல்லி, அவள் ஜெயித்து விட்டாள்!
– 17th அக்டோபர் 2007