ஜனவரி பதினைந்து…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 5,971 
 
 

தனித்திருக்க விரும்பாத மாலைப்பொழுது.. வேறு வழியில்லை… தனிமைதான் இப்போதைக்கு வாய்த்தது..

கடற்கரைக்காவது போய்வரலாம் என கிளம்பினேன்..

முன்னிரவு.. பெளர்ணமி..தென்றல்… காதில் ஐபாட் ஹெட்செட்… ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு அலையில் கால்பட அமர்ந்தாயிற்று….

என்னை அறியாமல் அழத்தொடங்கியிருந்தேன்…

அம்மா எந்திரிங்க..என்றார் ஒருவர் ..

ஏன் சார்? யார் நீங்க? நான் ஏன் எழனும்?

தற்கொலை எல்லாம் தப்பும்மா… கொஞ்சம் பேசலாம் வாங்க…

சத்தமாய் சிரித்தபடி சொன்னேன்.. சும்மா வந்தேன் சார்.தற்கொலைல்லாம் கோழைங்க… அப்போதுதான் கவனித்தேன்.. அது அவன். கேலி செய்திருக்கிறான்… சற்று திகைத்துவிட்டு தொடர்ந்தேன்…

எப்படி இருக்கே ப்ர…. அதற்குமேல் பேசத் தெரியவில்லை…

தொடர்ந்தான்..

ம்ம் இருக்கேன் வனி, பெங்களூர்ல வேலை, நல்ல சேலரி, வீடு கார் எல்லாம் இருக்கு…பொண்ணு பாக்காவான்னு கேட்டுட்டே இருக்காங்க அம்மா.. நீ…கல்யாணம்…?
பதிலளிக்க தோன்றாமல்  நான். அதற்கும் அவனைத் திட்டிக்கொண்டிருந்தேன்..

(பேச்சைத் தொடங்கிட்டா சடசடனு பேசத் ஆரம்பிச்சிருவானுங்க… ச்சை இவனுக்கு இல்லாத தயக்கம் எனக்கெதுக்கு?!)

வனி…..என பதிலுக்கு ஊக்கினான்..

ம்ம்… மிஸ். வனிதா ராஜமாணிக்கம்..

ஹாஹா.. ஆமாம்மில்ல.. மிஸ்.வனிதா ராஜமாணிக்கம் மேடம், எப்படி இருக்கீங்க?

(எப்டிடா உன்னால மட்டும் சிரிக்க முடியிது….. ) மனது சபித்தது அவனை…

நல்லா இருக்கேன்.. சந்தோஷமா… ரொம்ப சந்தோஷமா…நல்ல ஜாப், நல்ல சேலரி,… சன்னா செய்யத்தெரியுமா, ஹம் ஆப்கி ஹைன் கெளன் பாக்கத் தெரியுமா, வியாதின்னு வருமான்னு கண்ட கண்றாவியும் யோசிக்கத் தேவையில்லை,…ஊரு, உறவு, கெளரவம், சாக்கடைன்னு ஆசையை கட்டுப்படுத்திக்கத் தேவையில்லை… சந்தோஷமா இருக்கேன்… ரொம்ப சந்தோஷமா இருக்கேன்….

இப்போது சபிப்பது அவன் முறையாயிற்று…

(சைக்கோ சைக்கோ… கொஞ்சம் பேசினா குத்திக்காட்ட தொடங்கிருவாளே… இவகிட்ட பேசிருக்கவே கூடாது.. பாக்காத மாதிரி போயிருக்கனும்)

ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற?! சந்தோஷமா இருக்கவங்கதான் இப்படி கடற்கரைல உக்காந்திருப்பாங்களா?

ஏன்? இயற்கைய ரசிக்க வரக்கூடாதா?

அதுக்கு ஏன் அழனும்?

இழந்தவங்கள நெனச்சு…

மனதுக்குள் சிரித்துக்கொண்டிருப்பான்..

(நெனச்சேண்டி…. நீ இன்னும் என்னை மறந்திருக்கமாட்டே..)

ஹ்ம்ம்…இன்னும்…மறக்கலியா…அதையெல்லாம்?

ஹலோ மிஸ்டர்.. இழந்தது அம்மா அப்பாவை…ஏமாற்றத்தோடு சொன்னேன்…

அதற்கு ஆச்சர்யமாய்க் கேட்டான். அப்பாவுமா?! எப்படி? என…

கேட்டாயல்லவா வாங்கிக்கொள்..

சில துரோகிகள் இருக்காங்க.. மார்பக புற்றுநோய்ன்னு அம்மாக்கு வந்துட்டா பொண்ணுக்கும் வரும்னு அம்மா பேசுறதுக்கெல்லாம் மண்டைய ஆட்டுவாங்க… பூம் பூம் மாடுங்க…. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் அது ஒரு அசிங்கமான வியாதி, தொத்து வியாதி…அவங்களால என் அம்மாவை இழந்தேன்…அம்மா இல்லாத ஏக்கம் அப்பாவைக் கொன்னுடுச்சு…

செல் கிணுகிணுத்தது…(ஆரோமலே…)

நல்லவேளையாக ஒரு மார்க்கெட்டிங் கால்…

“சொல்லுங்க டியர், பிசியெல்லாம் இல்ல. அம்மா பிறந்தநாள்…பீச் வந்தேன்… ம்ம் சரி… சரீ…. கெளம்பிட்டேன் ஹனி”

அவனிடம் திரும்பி..

அப்றம்…சொல்னுன்னு நெனச்சேன்… எப்பவும் அப்பா அம்மா பேச்சையே கேளு… அந்த லெட்டர்ஸ்.. அப்பறம் உனக்கு நான் எழுதின டைரி எல்லாத்தையும் நான் எரிச்சாப்ல நீயும் எரிச்சுரு…. ஓகே… இன்னும் ஹிந்தில குட்பை சொல்ல கத்துக்கலை… சோ… குட்பை…

அவன் பதிலுக்கு காத்திராமல் கிளம்பிவிட்டேன்..

காற்றைக்  கிழித்தபடி ஒரு பயணம்…

ஓடிவந்துட்டேனே…

பயந்துட்டேன்னு நெனச்சுப்பானோ…

நம்பிருப்பானா? இல்ல மாட்டான்…

அய்யோ நம்பிருக்கனும்…

நம்பிருப்பான் நம்பிருப்பான்..மறந்துதானே இருந்தான் இவ்ளோ நாளும்…

என்னை ஏன் அவன் தேடி வரணும்…

நாந்தான் அவன மறந்துட்டேனே…

வரும் வழியெல்லாம் மனதின் ஓரம் புலம்பியபடி இருந்தது..

எப்படி திறந்தேனென்று தெரியவில்லை… வீட்டுக்குள் நுழைந்து..பீரோவைத் திறந்து டைரியை எடுத்திருக்கிறேன்…

கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டேன்..கவனித்திருப்பானோ?!

மணி…9.45..அவன் என்னைத் துரத்திக் கொண்டிருந்தான்… ஜனவரி பதினைந்து……

Chennai,

15.1.2009

Vani…My Angel…Dunno how she entered into my heart…Watta Day…She accepted my proposal today…Dunno how this god’s golden art has fallen in love with…அதற்கு  மேல் வாசிக்க இயலவில்லை…..

…ப்ரதீக்…

– பெப்ரவரி 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *