அந்த அகன்ற மரத்து நிழலில் உட்கார்ந்தவாறு மாலை வெயில் மறைகின்ற அழகிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்குக் கண்களில் நீர் இலேசாகத் துளிர்த்தது. எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம்; தன் குடும்பம் தன்னைக் கைவிட்ட கொடுமை; எங்கே போகப் போகிறோம் என்பது தெரியாத எதிர்கால இருள். பயம்; சோகம்!
கொஞ்ச தூரத்தில்தான் அவளுடைய இடைநிலைப் பள்ளி இருந்தது. அங்கே இன்றைக்கு அவள் வகுப்புக்கு தமிழாசிரியர் ட்யூஷன் வகுப்பு நடத்துகிறார். அந்த சாக்கில்தான் செல்வி வீட்டிலிருந்து இங்கு வந்திருந்தாள். அவளுடைய முக்கிய தோழிகளெல்லாம் அங்கிருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் செல்வி ஏன் ட்யூஷனுக்கு வரவில்லை என்பது தெரியாது. அது அவர்களுக்குச் சொல்லக் கூடிய விஷயமல்ல.
அவள் மட்டுமல்ல. சேதுவும் இன்றைக்கு அந்த ட்யூஷனுக்குப் போயிருக்க மாட்டான். அவன் அவள் காரியமாகத்தான் வெளியே போயிருக்கிறான். வந்துவிடுவான்; வருவான் என்று எதிர்பார்த்துத்தான் அவள் அவனுக்காக அந்த மரத்தடியில் தனியாகக் காத்துக்கொண்டிருக்கிறாள்.
இந்த மரம் பள்ளிக்கூடத்தின் வேலிக்கு வெளியே இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து ஒதுக்குப்புறமாக. பள்ளிக்கூட நேரத்தில் மாணவர்கள் இங்கு வர தலைமை ஆசிரியை தடை விதித்திருந்தார். ஆனால் பள்ளிக்கூட நேரத்துக்கு முன்னும் பின்னும் சில பேர் இங்கு கூடுவார்கள்.
அந்த மரம் மாணவர்களின் கெக்கலிப்புக்களுக்குச் சாட்சி. பொருளற்ற வெற்று உரையாடல்கள், அவர்கள் புதிதாகக் கற்றுக் கொண்ட கொச்சைப் பேச்சுக்கள், வதந்திப் பரிமாறல்கள், பொறாமைகள், பொய்கள் அனைத்தையும் அது செவிமடுக்கும். பிறருக்குச் சொல்லாது.
செல்வியும் சேதுவும் பேசிப் பழகிக் கொண்டது இங்குதான். அவனோடு உட்கார்ந்து பலமுறை அழுததும் இங்குதான். அவர்கள் இருவருக்கும் ஒரு தனி மூலை அந்த மரத்தடியில் உண்டு.
செல்விக்கு மனதில் இலேசாகப் பயம் படரத் தொடங்கிற்று. ஏன் சேது இன்னும் வரவில்லை? போன இடத்தில் ஏதாவது பிரச்சினையா? கைத்தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசியிருக்கலாம். அதுவும் காணோம். அவளுடைய அழைப்புக்களுக்கும் பதில் இல்லை.
தன்னுடைய வாழ்வுப் பிரச்சினைகளுக்குள் சேதுவை இழுப்பது அவளுக்கும் அவ்வளவு மகிழ்ச்சியில்லைதான். அவன் நல்ல குடும்பத்துப் பிள்ளை. அன்பான பெற்றோர்கள். அவன் கல்வியில் மிகவும்அக்கறையுள்ளவர்கள். அவர்கள் ஆதரவில்தான்அவன் ஐந்தாம் படிவத்தில் முதல் நிலைப்பையனாக இருந்தான்.
ஆனால் செல்வியின் கதையே வேறு. பிரச்சினைகள் நிறைந்த குடும்பம். அவள் அப்பா குடும்பத்தைக் கைவிட்டு ஓடிய ஒரு தறுதலைக் குடும்பத் தலைவன். அவனுக்குத் தெரிந்த ஒரே தொழில் திறன் படுக்கின்ற மனைவிக்குக் குழந்தைக்கான விந்தை அருளுவதுதான். அதன் பின் குடி. ஒரு கண்மூடிக் காதலினால் அவளை வீட்டை விட்டு ஓட்டிக்கொண்டு வந்து விட்டு, ஒரு பிள்ளை பிறந்ததும் அவள் சலித்து, இரவு முழுக்கக் குடிக்கும் தன் நண்பர்களுடன் அவன் வாழ்க்கை ஐக்கியமாகிவிட்டது.
மூன்று குழந்தைகளை அம்மா பெற்றெடுத்து ஏனோதானோவென்று வளர்த்தாள். செல்வி மூன்றாவது. அவளுக்கு மூத்தவர்கள் இருவரும் ஆண்கள்.
ஓரிரவில் குடிகாரக் கணவன் நடுநிசிக்குப் பிறகு வீட்டுக்கு வந்து அவளை சத்தமாகக் கூப்பிட்டுப் புணர்ச்சிக்கு வலியுறுத்தியபோது விளக்குமாற்றை எடுத்து விளாசித் துரத்தினாள். அந்த இரவில் ஓடியவன் பின்னர் திரும்பவே இல்லை. அம்மா ‘தனித்து வாழும் தாய்’ என்னும் வகுப்பில் சேர்ந்தாள்.
செல்வி வளர்ந்து விவரம் தெரிகின்ற பருவத்தில் அம்மாவின் வறுமையும் வெறுமையும் கொஞ்சம் விளங்கியது. ஆனால் அவளுக்குத் துணையாக இருக்க வேண்டிய அண்ணன்மார் இருவருக்கும் அது விளங்கியதாகத் தெரியவில்லை. தங்கள் தறுதலை தகப்பன் போலவே இளவயதிலேயே அவர்களுக்கு ஏராளமான நண்பர்கள் சேர்ந்து விட்டார்கள். படிப்பை விடவும் குடும்பத்தை விடவும் வேலையை விடவும் அந்த நண்பர்களே அவர்கள் வாழ்வில் முதன்மை பெற்றார்கள்.
அவர்களோடு சேர்ந்து கூத்தடிக்க அவர்களுக்குப் பணம் தேவைப்பட்டது. அம்மாவை நச்சரித்துப் பணம் பெற முடியாதபோது, என்னென்னவோ இருண்ட சந்துக்களில் சட்டத்துக்குப் புறம்பான வேலை செய்யத் தொடங்கினார்கள். திருட்டு சிடியில் ஆரம்பித்து “பிட்டுக்கள்” விற்கும் அளவுக்குப் போனபோது சில நாட்கள் போலீஸ் லாக்கப்பிலும் இருந்துவிட்டு வந்தார்கள். ஒருத்தனை அம்மா அடித்துத் துரத்தினாள். இன்னொருவன் தானாகவே தலைமறைவாகிவிட்டான்.
கணவனை இழந்து இரண்டு ஆண்மகன்களையும் இழந்து ஒண்டியாக நின்ற அம்மாவுக்கு குவிமையம் முழுவதும் செல்வியே ஆனாள். அவளை ஒழுக்கத்தின் சிகரமாக வளர்க்க வேண்டும்என அம்மா காட்டிய அக்கறையும் அவசரமும் அதீதமாக இருந்தன. ‘அப்படி நிற்காதே’, ‘அங்கே உட்காராதே’, ‘அவனோடு பேசாதே’, ‘பள்ளிக்கூடம் விட்டு வர ஏன் இவ்வளவு நேரம்?’ இப்படியாகச் செல்வியைத் தன் சிறகிலிருந்த அகலவிடாத அதிகார வெறி மிக்க தாய்ப் பறவையாக அவள் ஆகியிருந்தாள்.
அவளுடைய அந்த ராட்சச அரவணைப்பில் அவள் மூச்சுத் திணறியிருந்தபோது அம்மாவின் வாழ்க்கையில் சேகரன் என்ற ஒருவன் வந்தது செல்விக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.
அவன் அம்மாவிடம் நட்பாக இருந்தான். அடிக்கடி வீட்டுக்கு வந்தான். வரும்போது பீசாங் கோரெங், மீகோரேங், கோழிக்கறி இப்படி ஏதாவது வாங்கி வந்து அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டான்.
இரவுகளில் தங்க ஆரம்பித்தான். அவர்கள் சிறிய வீட்டின் ஹாலில் படுத்துக் கொண்டான். அவன் அங்கு தங்கியதன் பொருள் வயதுக்கு வந்திருந்த செல்விக்குத் தெரியாமல் இல்லை. ஆகவே அவன் இரவில் எழுந்த போதும் அம்மாவின் அறைக்குள் நுழைந்த போதும் தூங்குவது போல நடித்து அந்த குழப்ப மிக்க இரவுகளை அவள் ஒருவாறு கழித்தாள்.
அம்மா முகத்தில் புன்னகையைத் திரும்பப் பார்த்தபோது செல்விக்கு மகிழ்ச்சியாகக் கூட இருந்தது. அதோடு தன்னை ஒரு ராட்சசப் பாதுகாப்புக் கொடி போலப் படர்ந்திருந்தவள் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து, அவள் பள்ளிக்கூடம் விட்டுத் தாமதமாக வந்தபோதும் அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல் இருந்தது செல்விக்கு ஆறுதலாகவும் இருந்தது.
அதுவே சேதுவும் அவளும் நெருங்கிப் பேசிக்கொள்ள ஏதுவும் ஆயிற்று.
சேது மிக இணக்கமான இதமான நண்பன். அவன் தன் மேல் கொண்டிருக்கும் நேசம் காதலா என அவள் பலமுறை யோசித்திருக்கிறாள். ஆனால் அவன் எந்த நாளும் கண்ணே, பொன்னே என்று கொஞ்சியது இல்லை. தன்னைத் தொடவும் முயற்சி பண்ணியது இல்லை. அவளை ஒரு சினேகிதி என்பதைத் தவிர வேறு எதுவுமாக என்ணியதாக சிறு குறிப்பும் காட்டியதில்லை.
அவர்கள் சினிமா பற்றிப் பேசுவார்கள்; தொலைக்காட்சி பற்றிப் பேசுவார்கள்; அரசியலும் கூட அவ்வப்போது. குடும்பம் பற்றி நிறையவே பேசுவார்கள். அப்படிக் குடும்பம் பற்றி அவள் பேச அவன் அனுதாப மிக்க காதோடு கேட்கப்போய்தான் அவர்கள் இருவருக்கிடையே அந்தக் கனிவும் இதமும் நேசமும் உண்டாயிற்று.
ஆனால் அதெல்லாம் ஒரு முடிவுக்கு வரும் நாள்தான் இன்று. சேதுவைவிட்டுப் போகிறோமே என்ற வருத்தத்தைத் தவிர இங்கிருந்து கண்காணாத இடத்துக்குப் போய்விடுவதில் அவளுக்கு வேறு வருத்தங்கள் இல்லை. உண்மையில் இதுதான் அவள் தேடும் விடுதலை; புது வாழ்வு.
ஆனால் அந்தப் புது வாழ்வின் திறவுகோல் இப்போது சேதுவின் கையில் இருந்தது. அவன் அதைக் கொண்டு வந்ததும் இங்கிருந்து கிளம்ப வேண்டியதுதான்.
சேது தூரத்தில் மோட்டார் சைக்கிளில் வருவது தெரிந்தது. அவள் கையசைத்துத் தான் அங்கிருப்பதைக் காட்டினாள். அவன் அருகில் வந்து மோட்டாரை நிறுத்தினான்.
“என்ன சேது இவ்வளவு நேரமாச்சு? நான் தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா?” என்றாள்.
அவன் பேசாமல் அவளைப் பார்த்தவாறு இருந்தான்.
“சரி, வனிதாவோட போன் நம்பர் கிடைச்சதா?” என்று கேட்டாள்.
“அவன் குடுக்க மாட்டேன்னு ரொம்ப வம்பு பண்ணினான் செல்வி. அவங்கிட்டப் பேசி வாங்கிட்டு வர்ரதுக்குத்தான் இவ்வளவு நேரமாயிடிச்சி!”
“ஏன் குடுக்க மாட்டேன்னான்?”
“ஒன்னோட ஃப்ரண்ட் வனிதா இந்த நம்பர யாருக்கும் குடுக்கக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருக்கா!”
“எனக்குக் கூடவா? நான் வனிதாவோட பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு சொன்னியா?”
“சொன்னேன். குறிப்பா தன்னோட ஃபிரண்டுகளுக்குத்தான் குடுக்க வேணாம்னு சொல்லியிருக்கா!”
செல்விக்குக் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. வனிதா இங்கு இதே பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த போது எத்தனை நெருக்கமாக இருந்தார்கள்? நகமும் சதையும் போல என்று அவள் தோழிகளெல்லாம் பொறாமைப்படும் வண்ணம்?
தன்னுடைய குடும்பத்தின் அடக்குமுறை தாங்க மாட்டாமல் அவள் குவாலா லம்பூருக்கு ஓடிப்போன சில மாதங்கள் விடாமல் அழைத்துப் பேசுவாள். தான் ஒரு முகம் அழகுபடுத்தும் கடை வைத்திருப்பதாகவும் அதில் நல்ல வருமானம் என்றும் சொன்னாள். அப்புறம் அழைப்புக்கள் குறைந்தன. அப்புறம் ஒரு நாள் எண் பயனீட்டில் இல்லை என மொட்டையான பதில் வந்தது.
செல்வியின் வாழ்வில் புதிதாகப் புகுந்த முறைசாரா சிற்றப்பன் தாயை மயக்கிப் போட்டுவிட்ட நிலையில், தன் தோளிலும் மெதுவாகக் கைபோட ஆரம்பித்து விட்டான். அம்மாவிடம் அதனை ஜாடை மாடையாகச் சொல்லப் போய் “சும்மா கிட! ஒரு தகப்பன் மகள் தோள்ள கை போட்டா குத்தமா?” என்று அம்மா பதில் சொல்லிய போதே தன் வாழ்வு குலையத் தொடங்கிவிட்டதைச் செல்வி அறிந்து கொண்டாள்.
தோளில் கைபோடும் சிற்றப்பன் அம்மா வீட்டில் இல்லாத வேளைகளில் ரொம்ப நெருங்கி அவளை உரசவும் ஆரம்பித்தான். அப்போதுதான் அதிலிருந்துதப்பிக்க வனிதா காட்டிய வழி செல்விக்கு நினைவுக்கு வந்தது. ஆதனால்தான் அவள் நம்பர் முக்கியம்.
“சரி, பரவால்ல, குடு சேது. நான் அவகிட்ட பேசிட்டு போய் கே.எல்.போர பஸ்ஸப் பிடிக்கணும். போய்ச் சேர நடுராத்திரியாயிடும்.”
அவன் மேல் போக்கெட்டில் இருந்து அந்தத் துண்டுத் தாளை எடுத்து அதில் இருந்த நம்பரைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏன் தன்னிடம் கொடுக்கத் தயங்குகிறான் என்று புரியாமல் செல்வி தவித்தாள்.
“சீக்கிரம் குடு சேது. நான் அவ கிட்ட பேசிறேன். அவ ஒருத்திதான் இப்ப எனக்கு ஆதரவு. அவளும் என்னைக் கைவிட்டா எங்க போவேனோ தெரியாது!”
சேது தலை உயர்த்தி அவளைப் பார்த்தான். மெதுவாகச் சொன்னான். “இந்த நம்பர் உனக்கு வேணாம் செல்வி” என்றான்.
திகைத்தாள். “என்ன சொல்ற சேது? இந்த நம்பர வச்சிதான் என்னோட கே.எல். பயணமே இருக்கு. இன்னைக்கி ராத்திரி இவளோடதான் நான் தங்க வேண்டி இருக்கு.”
“செல்வி! வீட்ட விட்டு ஓடுறது நல்லதில்ல! நீ போக வேணாம் செல்வி!”
அவள் அவனை முறைத்தாள். “என்ன சேது, ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி பேசிற? என்னோட குடும்பத்தோட கேவலமான கதய எத்தனை தடவ சொல்லி அழுதிருப்பேன் ஒங்கிட்ட? இப்ப நான் வீட்ட விட்டு வெளியேறாம இருந்தா எங்க அம்மாவோட ரெண்டாவது புருஷன் என்னைக்கு என்ன ரூமுக்குள்ள தள்ளி….” சொல்லத் திணறினாள். கண்ணீர் வந்தது.
“எனக்குத் தெரியும் செல்வி. ஆனா நான் சொல்ல வந்தது வேற விஷயம்.”
“என்ன வேற விஷயம்?”
“இப்ப நீ நம்பிப் போறியே ஒன் சினேகிதி வனிதா, அவளப் பத்தினது.”
“ஏன் அவளப் பத்தி என்ன? அவளும் என்னப் போல கையாலாகாத குடும்பத்த விட்டு ஓடினவதான். இப்ப குவால லும்பூர்ல ஒரு பியூட்டி சலூன் வச்சிப் பிழைச்சிக்கிட்டிருக்கா. எப்படியும் என்னக் காப்பாத்துவா!”
அவன் முகம் உயர்த்தி அவளைப் பார்த்தான். “இல்ல செல்வி. அவ பியுட்டி சலூன் வச்சிருக்கேன்னு உங்கிட்ட சொன்னதெல்லாம் பொய்.”
திகைத்துப் பார்த்தாள். “அப்புறம்?”
“நீ போக வேணாம் செல்வி. அவகிட்ட போனா நீதான் கெட்டுப் போவ!”
“ஏன், ஏன் கெட்டுப் போகணும்?”
“ஏன்னா, அவ… அவ… ஒரு ப்ரோஸ்டிடூயூட் – விலைமாதா வாழ்க்கை நடத்திறா!”
அதிர்ந்து நின்றாள். “என்ன சொல்ற சேது? அபாண்டமா சொல்லாத!”
“இந்த ஃபோன் நம்பர் நம்ம கேசவனுக்குக் கிடெச்சதே அப்படித்தான். அவன் கே.எல்.போயிருக்கும் போது அவன் நண்பர்கள் அழச்சிக்கிட்டுப் போயிருக்காங்க. நேர்ல பாத்தவொடன நம் வனிதான்னு தெரிஞ்சி போச்சி. யாருக்கிட்டயும் சொல்ல வேணாம்னு கெஞ்சியிருக்கா!”
செல்வி மரத்தடியில் உட்கார்ந்தாள். எங்கேயோ வெறித்துப் பார்த்தாள். கண்களில் நீர் வழிந்தது. புறங்கையால் துடைத்தாள். அவளாக ஏதாவது பேசட்டுமென்று அவன் காத்திருந்தான். பேசினாள்.
“ரொம்ப நல்லா இருக்கு சேது. எண்ணெய்ச் சட்டியிலிருந்து தப்பிக்கலான்னு நெனைச்சேன். ஆனா விழப்போற இடம் கொள்ளிக் கட்டைன்னு நீ சொல்ற. இப்ப நான் என்னதான் செய்றது?”
“வீட்டுக்குப் போ செல்வி. எப்படியாவது சமாளிச்சிக்க!” என்றான்.
“முடியாது. முடியவே முடியாது. நரகத்தில இருந்து விடுதலை கிடைச்சதுன்னு நிம்மதியா வந்தேன். இனி அந்த நரகத்துக்கு நான் திரும்ப மாட்டேன். நான் போகத்தான் வேணும். வனிதாவோட போய் இருந்து என் விதி எப்படி இருக்கோ அப்படியே வாழ்ந்திட்டுப் போறேன்!” என்றாள். விம்மினாள்.
“எல்லாம் தெரிஞ்சுமா….?”
“ஆமா எல்லாம் தெரிஞ்சுதான். நான் போய் வனிதாவத் திருத்திறேன். நான் சொன்னா கேப்பா. என் பெஸ்ட் ப்ரண்ட்! நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது தொழில் செய்து பிழைச்சுக்குவோம்.”
“அது முடியாது செல்வி. அவ இந்த வாழ்க்கையில ஊறிப் போயிருக்கா! இனி திருந்துவாளா? உன்னத்தான் மாத்துவா?”
அவனைப் பார்த்து சீறினாள். “போ சேது. இங்கிருந்து போ! என் மனச மாத்தப் பாக்காத. நான் போறேன்!” என்று எழுந்தாள்.
“இரு செல்வி!” என்றான். என்ன என்பது போல் நின்று பார்த்தாள்.
“நான் ஒரு திட்டத்தோடதான் வந்தேன்!”
“என்ன திட்டம்?”
அவளை நிமிர்ந்து பார்த்தான். “நானும் உன்னோட வர்ரேன்!”
புரியாமல் பார்த்தாள். “எதுக்கு? பஸ் ஸ்டேஷன்ல வழியனுப்பவா?”
“இல்ல கே.எல்.லுக்கு.”
“வந்து?”
அவளைக் கெஞ்சுவது போலப் பார்த்தான். “உன்னோட வர்ரேன் செல்வி. வீட்ட விட்டு வந்திர்ரேன். எதிர்காலம் என்னவா இருந்தாலும் நாம் அதப் பகிர்ந்துக்குவோம்! புதுவாழ்க்கை ஆரம்பிப்போம்!”
“அப்புறம் படிப்பு?”
“அதெல்லாம் பின்னால பாத்துக்குவோம்!”
நடந்து அவன் அருகில் வந்தாள். அவன் முகவாயை ஒரு கையால் பற்றினாள். மறு கையால் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். அவன் திகைத்து வலியில் தன் கையால் கன்னத்தைத் தடவினான். பரிதாபமாக விழித்தான்.
“மடையா! அடிமுட்டாள்! முண்டம்! இப்படியா உன் புத்தி போகணும்? உனக்கு என்ன கேடு? அன்பான குடும்பம், பணம், படிக்கிறதுக்கு வேண்டிய சூழ்நிலை, மூளை எல்லாம் இருக்கு. நீ எதுக்கு வீட்ட விட்டு ஓடணும்? என்னோட உனக்குக் காதலா? சீ! அப்படியே அது காதலா இருந்தாலும் உன்னப்போல ஒரு முட்டாள் காதல ஏத்துக்க நான் தயாரா இல்ல! போ, போய்த் தொல இங்கிருந்து!”
“செல்வி.. நான் வந்து…” என்றான்.
“வந்துமில்ல போயுமில்ல. என்னப் போக விடு. விதி இருந்தா சந்திப்போம். சந்திக்காம இருந்தாலும் நல்லதுதான். நான் வர்ரேன். பை பை!” விறுவிறென்று நடந்தாள்.
நின்றாள். திரும்பி வந்தாள். அவன் கன்னத்தை இதமாகத் தடவிக்கொடுத்தாள். முகத்தை அருகில் கொண்டுவந்து அறைந்த இடத்தில் அழுந்த ஒரு முத்தம் பதித்தாள். அப்புறம் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் செல்வி.