சிரஞ்சீவிக் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 3, 2023
பார்வையிட்டோர்: 5,024 
 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அன்றொரு நாள் எங்கள் ஊர் தாமரைக் குளக் கரையில் உட்கார்ந்திருந்தேன். இயற்கையின் எழிலில் தயத்தைப் பறி கொடுத்திருந்த எனக்குப் பின்னால் யாரோ ‘களுக்’கென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. சுற்று முற்றும் பார்த்தேன்; யாரையும் காணவில்லை.

“என்ன விழிக்கிறீர்? என்னைத் தெரியவில்லையா?” இப்படி ஒரு கேள்வி!-குரலில் மட்டும் பெண்மையின் மென்மை யிருந்தது-யாராயிருக்கும்?

“தெரியவில்லையே!” என்றேன்.

“என்ன! என்னைத் தெரியாதவர்கள்கூட இந்த உலகத்தில் உண்டா?”

“உன்னைத் தெரியாதவர்கள் இந்த உலகத்தில் உண்டோ? இல்லையோ, எனக்கு உ ன்னை நிச்சயமாகத் தெரியாது.”

“வேடிக்கைதான்! என் பெயரைச் சொன்னாலாவது தெரியுமோ?”

“‘தெரியும்’ என்று திட்டமாய்ச் சொல்லமுடியாது; சொல்லேன் பார்ப்போம், தெரிகிறதா என்று?”

“என் பெயர் கமலி! இப்பொழுதாவது தெரிகிறதா?”

“கமலியா! இந்த உலகத்தில் எத்தனையோ கமலிகள்; நீ ஒருத்திதானா..?”

“இருக்கலாம்; ஆனால் அந்தப் பெயர் கொண்டவர்கள் அனைவருமே அதற்கு அருகதையுள்ளவர்களாக இருக்க முடியுமா? நீதான் சொல்லேன்!-நான் தான் ஆதி கமலி! அந்தப் பெயருக்கு முற்றிலும் அருகதையுள்ளவளும் நான் தான். என்னைப்போல் அழகி இந்த ஈரேழு பதினாலு உலகங்களிலும் கிடையாது. நான், கனவிலும் காணமுடியாத அழகி. இத்தனைக்கும் நான் தலையைச் சீவிச் சிணுக்குவதில்லை; மாலை இளங்காற்றில் மணங்கமழும் மலர்களைச் சூடி மகிழ்வதுமில்லை; செந்தூரப் பொட்டிட்டுச் சிந்தை குளிர்வதுமில்லை; சித்திர விசித்திர வேலைப்பாடமைக்த செம்பொன் பரணங்கள் பூணுவதுமில்லை; பகட்டான பட்டாடை கட்டிப் பளபளக்கிறதுமில்லை – ஆனாலும் நான் தான் இந்த உலகத்திலேயே ஒப்பற்ற அழகி!”

***

இதென்ன வேடிக்கை! இவள் ஏன் தன் அழகைப் பற்றி என்னிடம் இப்படியெல்லாம் வர்ணிக்கிறாள்? அசரீரியாயிருக்கும் இவள், அழகியாயிருந்தால் என்ன, அழகியா யில்லாவிட்டால் தான் என்ன?

“உன் அழகுக்கு ஆயிரம் கோடி வணக்கம், அம்மா! எனக்குக் கல்யாணமாகிவிட்டது. நான் போய் வருகிறேன்!” என்று எழுந்தேன்.

கலகலவென்று நகைக்கும் சத்தம் கேட்டது. அந்த நகைப்பில் தான் என்ன குறும்பு! – நான் பொறுமையை. இழந்து,”உன் சிரிப்பில் நான் சொக்கிவிட மாட்டேன்!” என்றேன்.

“நீயா சொக்க மாட்டாய்? உனக்கு என்னைத் தெரியவில்லை; தெரிந்தால் கட்டாயம் சொக்கி விடுவாய்! நீ என்ன, இதுவரை என் அழகில் சொக்கிய கவிஞர்கள் எத்தனையோ பேர்! கதாசிரியர்கள்: எத்தனையோ பேர்! ஏன், உன்னையும் என்னையும் இந்த உலகத்தில் படைத்த அந்தக் கடவுளே என் அழகில் சொக்கியிருக்கிறார்! ஆனாலும் என் உள்ளம் ஒரே ஒருவரைத்தான் கொள்ளை கொண்டிருக்கிறது. எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும், எத்தனை யுகங்கள் கழிந்தாலும் நான் அவரைத் தவிர வேறு யரரையும் விரும்புவதில்லை. அவரைக் கண்டால் கண்ணைத் திறப்பேன்; காண விட்டால் கண்ணை மூடிக்கொள்வேன். இந்த உலகம் தோன்றிய நாளிலிருந்து தான் நாங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம். ஆனாலும் இதுவரை நான் அவரிடம் ஒரு வார்த்தை பேசியது கிடையாது; ஒருவரையொருவர் தீண்டியதும் கிடையாது. ஆனால் எங்கள் கண்கள் மட்டும் பேசிக்கொள்வதுண்டு; அந்தக் காதல் பேச்சிலே நாங்கள் கருத்தை இழப்பதுமுண்டு!” என்றாள் அவள்.

எனக்கு ஒரே வியப்பாயிருந்தது. “அப்படிப்பட்ட அதிசயக் காதலன் யாரோ?” என்று கேட்டேன்.

“இன்று மண்ணுலகில் வாழ்ந்து நாளை மண்ணோடு மண்ணாய் மடியப்போகும் மனிதனல்ல; கண்ணுக்குத் தெரியாமல் இருந்துகொண்டு, கதை காவியங்களிலே மட்டும் காட்சி தந்துகொண்டு, கள்ளர்களோடு நல்லவர்களையும், எளியவனோடு வலியவனையும், இல்லாதவனோடு இருப்பவனையும் – இன்னும் இதுபோன்ற எண்ணற்ற குற்றங் குறைகளோடு இந்த உலகத்தைப் படைத்து விட்டு, ‘எல்லாவற்றுக்கும் காரணம் நான் தான்!’ என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்ளும் இறைவனுமல்ல; இந்த உலகம் என்று தோன்றியதோ, அன்றே அவனும் தோன்றினான்; அவன் என்று அழிவானோ, அன்றே இந்த உலகமும் அழிந்துவிடும்! வண்டியின்றி, வாகனமின்றி அவன் ஒரே நாளில் இந்த அகண்டாகார உலகம் முழுவதையும் சுற்றி வந்துவிடுவான்; ஏழை, பணக காரன் என்ற எண்ணமின்றி, மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற பேதமின்றி, தாவரவர்க்கம், பிராணி வர்க்கம் என்ற வித்தியாசமின்றி எல்லோருக்கும் உயிர், உணவு, ஒளி எல்லாம் கொடுப்பது அவன் வேலை. இப்பேர்ப்பட்ட வேலைக்கு அவன் யாரிடமும் ஒரு காலணாக்கூடக் கூலி வாங்குவது கிடையாது!-இன்னொரு அதிசயத்தைத் தான் கேளேன் : இத்தனை வேலைத் தொந்தரவிலும் அவன் என்னுடன் ‘கண்ணாமூச்சி’ விளையாட மட்டும் மறப்பதே யில்லை!”

“அவன் பெயரோ?”

“ஆயிரம் நாமங்கள் உண்டு!”

“அதிசயத் தம்பதிகளாயிருக்கிறீர்களே?”

“ஆமாம், நாங்கள் அதிசயத் தம்பதிகள் தான்; எங்கள் காதலும் அதிசயக் காதலே! ‘ஒரே ஒரு முறை கூடினால் போதும்’ என்று விளக்கொளியின் வெந்தழலிலே விழுந்து வீணாய் மடியும் விட்டிலின் காதலைப் போன்றதல்ல எங்கள் காதல்; தேய்பிறை போல் தேய்ந்துபோகும் மனித வர்க்கத்தின் மிருகத்தனமான காதலுக்கும் எங்களுடைய காதலுக்கும் எவ்வளவோ வித்தியாசமுண்டு. காமாந்தகாரம் எங்கள் காதலின் ஜீவநாடி அல்ல; அன்பே எங்களுடைய காதலின் ஜீவநாடி. அதற்கு அழிவே கிடையாது. நாங்கள் அமரர்கள். உங்களைப்போல் அற்ப ஆசையைக் காதலென்று சொல்லிக் கொண்டு நாங்கள் அன்பைக் கொலை செய்வதில்லை; அமர வாழ்வை இழப்பதுமில்லை; எங்கள் காதல் சிரஞ்சீவிக் காதல்!”

***

சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தேன்; அகக்கண்ணில் அந்த அதிசயத் தம்பதிகள் தோன்றினர்.

“கமலமே! உன்னை யார் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன்; உன்னுடைய காதலன் யார் என்பதையும் கண்டு கொண்டேன். கலாவாணியின் பீடமல்லவா நீ; கலைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளல்லவா நீ; நத்தையின் வயிற்றில் உதிக்கும் முத்தைப் போன்று சேற்றில் பிறக்கும் செந்தாமரை யல்லவா நீ! வெண்ணிலவின் தண்ணொளியிலே குவிந்து, வெய்யவனின் வெப்பத்திலே விரியும் விந்தை உனது காதலின் சிந்தையல்லா? உன்மீது கொண்ட காதலால் தானே தன்னை நோக்கித் திரும்பித் திரும்பிப் பார்க்கும் சூரியகாந்தியைக்கூட உனது காதலன் லட்சியம் செயவதில்லை? உனக்காகத்தானே உனது காதலன் கமலபதி ஒரு நாள்கூட ஓய்வு எடுத்துக் கொள்ளமாட்டே னென்கிறான்? உன் கமலவதனத்தைக் காணாமல் அவனால் ஒரு நாளாவது இருக்க முடியுமா? அதனால் தான் விடிந்ததும் விடியாததுமாக அவன் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வருகிறான்!” என்று சொல்லி நான் சிரித்தேன். அதே சமயத்தில் அவளுடைய காதலனான ஆதவனும் சிரித்துக் கொண்டே அடிவானத்தில் மறைந்தான்.

கமலி நாணத்தோடு கண்களை மூடிக்கொண்டாள் அப்பொழுதும் அவள் அழகு குறையவில்லை!

– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *