சிம்மேந்திர மத்யமம், ஒரு குறியீடு

 

இது போல தான் எப்போதும் நேர்கிறது…ஒரு மிகப்பெரிய கவலையில் இருப்பவனுக்கு வரும் ஒரு விதமான சந்தோஷம் அந்த கவலையை தள்ளி வைக்கவும் முடியாது அல்லது சந்தோஷத்தை கொண்டாடவும் முடியாது போய் விடுகிறது… ஷெனாயில் வழிந்து உருக்கும் இசை, அப்படியே டோலக்குடன் சேர்ந்து தடக்கென்று மங்கல இசையாய் மாற ஏற்படும் சில ஸ்வர வரிசை மாற்றங்களுக்குள் சிக்கிக்கொள்ளும், அவஸ்தை படும் காற்று, மூச்சு திணறிப்போகும். அன்றும் அது போல தான் நேர்ந்தது, எனக்கு மறக்கமுடியாத ஒரு உயிர் சந்திப்பு என் அப்பா இறந்த அன்று நேர்ந்தது. நான் தொட இரண்டாய் பிளந்த மயிற்பீலி.

பெங்களூரில் காலையில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது ஷோபியிடம் இருந்து தகவல் வந்தது. அன்று அவளுக்கு கார் வேண்டியதிருந்ததால், ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன், முதலில் அவள் சொன்னது காதில் சரியாய் விழவில்லை. ஒல்ட் மெட்றாஸ் ரோடில் இருந்து இந்திரா நகர் என்பது அடி சாலையில் திரும்பியவுடன் இருக்கும் ரெடீமர் சர்ச் வாசலில் நிறுத்தி, என்னவென்று திரும்பவும் கேட்டபோது, அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்றும், வடமலையான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாகவும் சொன்னாள். ரவியின் நண்பன் ராம் போன் செய்ததையும், இன்னும் அரை மணியில் திரும்பவும் நிலை சொல்வதாகவும் சொல்லியிருக்கிறான். எனக்கு ஏதோ நெஞ்சு அடைக்குறமாதிரி இருந்தது… அதே ஆட்டோவை கட் பண்ணாமல் திரும்பி விட்டேன். நான் என்.ஜி.எப். வந்து சேர்வதற்குள்ளாகவே திரும்பவும் ஷோபி அழைத்தவுடன் மனசுக்குள் தெரிந்து விட்டது. அவளும் அதே மாதிரி அழுது கொண்டே சொன்னாள், அப்பா இறந்து விட்டதை… எனக்கு அழ வரலை… உடனே மதுரைக்கு எப்படி போவது என்று மட்டுமே மனசு கணக்கு போட்டது…

அலுவலகத்தில் தகவல் சொல்லிவிட்டு… உடனே தெரிந்த ஒரு டிராவல் ஏஜெண்ட் மூலமாக மதுரைக்கு விமான டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்தேன்… நான் வீடு செல்வதற்குள் டிக்கெட் இமெயிலில் வந்து விட்டது. பாரமவுண்ட் ஏர்வேஸ்… மதியம் பன்னிரெண்டு இருபதுக்கு போய் சேரும் என்றவுடன்… ஏதும் யோசிக்கவில்லை… இருவரின் துணிகளை அடுக்கிக் கொண்டே, ஷோபியின் அப்பா, அம்மாவிடம் தகவல் சொல்லிவிட்டு புறப்பட்டோம். நான் அழவில்லை அப்போதும், பெங்களூரு ஏர்போர்ட் அப்போ, பழைய ஏர்போர்ட்… தேவனஹல்லி இல்லை… அதனால் பத்து நிமிசத்திற்குள் ஆட்டோ பிடித்து ஏர்போர்ட்டில் இறங்கினோம்… செக் இன் பேக்கேஜ் குடுக்க கவுண்டரில் நின்ற போது என் பின்னால் வந்தவர், அவர் பெட்டியை தூக்கி டிராலியில் (டாக்ஸியில்) வைக்கச் சொன்னார், முழுதும் தும்பை வெள்ளையில் வேஷ்டி கட்டியிருந்தார், வெள்ளை சட்டை, கையில் மோதிரம், கோல்ட் வாச்சில், சற்றே ஏறிய முன் நெற்றி வியர்வையில் கொஞ்சம் கவலையுடனும் இருந்தார். அவர் சென்ற பிறகு நானும், ஷோபியும் செக் இன் கவுண்டருக்கு சென்றோம்… ஷோபிக்கு அந்த பெரியவர் என் அப்பா போல் இருப்பதாக பட்டிருக்க வேண்டும், என்னை பார்த்தாள், முன் கையை தோளோடு சாய்ந்து பிடித்துக் கொண்டு சட்டையை லேசாக நனைத்தாள், எனக்கு அழுகை வந்துவிட்டது… வழிய வழிய பெருகிக் கொண்டே இருந்தது கண்ணீர்.

செக் இன் கவுண்டரில் இருந்த, மோனிகா…(பெயர் பட்டையில் இருந்து) என்னை ஒரு முறை ஏறிட்டு பார்த்து, குழப்பமாய், AISLE OR WINDOW SIR?? என்றாள் நான் AISLE என்றேன், அவள் அவசர வழிக்கு அருகே தான் இடம் இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்தாள், அது போயிங் விமானம் என்று ஞாபகம். இரண்டு இருக்கை ஒரு புறமும், மூன்று இருக்கை ஒரு புறமும் இருக்கும் மிகப்பெரிதும் இல்லாது ஏடிஆர் போல மிக சிறிதும் இல்லாத விமானம். பணிப்பெண்களில் ஒரு தமிழ்பெண் என்னை ஆச்சரியப்படுத்தினாள். வசு என்கிற வசுமதி சுப்ரமணியம், தேனியை சேர்ந்தவள்… மதுரையைச் சேர்ந்த தியாகராஜனின் விமான போக்குவரத்து, இந்த தேனிக்காரப் பெண்ணுக்கு விமான பணிப்பெண் உத்யோகம் கொடுத்திருப்பது சந்தோஷமாய் இருந்தது… மாநிறமாய் இருந்தவள், அத்தனை அழகாய் ஆங்கிலம் பேசினாள். ஷோபிக்கும் இந்த பெண் அழகாய்த் தெரிந்தாள். இந்த பெண்ணைப் பற்றிய விபரம் கூட அவள் ஷோபியிடம் சொன்னது தான்… கொஞ்சம் வரியோடிய சிவந்த கண்களில் புன்னகைக்கவும் முடிந்தது இப்போது.

விமானம் கிளம்பும் நேரம் வரை அடர்ந்த மவுனம் எங்களுடன் அமர்ந்திருந்தது… விமானம் கிளம்பும்போது ஷோபி திரும்பவும் கைகளை பிடித்துக் கொண்டாள். இம்முறை அவளுக்கு டேக் ஆப்பின் போதும், லேண்டிங் போதும் ஏற்படும் ஏர் சிக்னெஸ்ஸினால், அருகிலேயே சிக் பேக் வைத்துக் கொள்ள வேண்டும். கிளம்பிது… இறங்கியது… கொஞ்சம் ஷோபிக்கு உடல் அவஸ்தை இருந்தது… மதுரை இறங்கியவுடன் சரியாகி விட்டாள். பன்னிரெண்டு நாப்பதுக்கு தான் வெளியே வரமுடிந்தது… அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்துக் கொண்டு பதினைந்து நிமிஷத்தில் போய் சேர்ந்து விட்டோம் வீட்டிற்கு… சேகர் முன்னால் வந்து பெட்டியை வாங்கி கொண்டு மீனா வீட்டில் போய் வைத்து விட்டு வந்தான்… முன்னால் போட்டிருந்த பந்தலில் தெரிந்த முகங்கள் தெரியாத முகங்களிடம், பெரியவன் வந்துட்டான், இவன் தான் பெங்களூரில் இருப்பது என்று பேசிக் கொண்டது காதில் விழுந்தது. பிளாஸ்டிக் சேர் நிறைய அடுக்கியிருந்தது நடையில்… இன்னும் நிறைய பேர்கள் வர வேண்டும் போல… எதிரில் சேதுவும், ரவியும் வந்து எதிர் கொண்டார்கள் என்னை… என்னடா இப்பதான் வர்றியா என்று ஏதோ கேட்டு வைத்தார்கள்… இப்ப டிரைன் இருந்ததா… என்றவரிடம் யாரோ… பிளைட்ல வந்திருக்கான் என்றார்கள்.

மேலே ஷோபியுடன் படியேறி இரண்டாவது மாடியை அடைந்தேன்… நிறைய செருப்புகள் தாறுமாறாய் கிடந்தன ஒழுங்கில்லாமல்… முன் வாசலையும் அடைத்து பந்தல் போட்டிருந்தார்கள். நிறைய பேர் வாயில் துண்டை வைத்துக் கொண்டு நாங்கள் வருவதை கவனித்துக் கொண்டிருந்தார்கள்… நடையில் உக்காந்திருந்தவர்கள் விலகி இடம் கொடுக்க…. வழியெங்கும் பரவி கிடந்த அழுகையும், ஒப்பாரி பாடல்களும் என்னை ஏதோ செய்தது… ஷோபியை தனம் வந்து அழைத்துக் கொண்டு சென்றாள். நிறைய பேர் காலையில் இருந்து அழுது களைத்திருக்க வேண்டும். கண்களில் கொஞ்சம் தேங்கிய கண்ணீருடன், எங்களை பார்த்தவுடன் மேலும் அழ மெனக்கெட்டார்கள்… அம்மா, ரவி அம்மாவின் அருகே வேணி அக்கா, பாரதி சின்னம்மா, பெத்தம்மா என்று அப்பாவை சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். அப்பா இன்னும் சிரித்த மாதிரி தான் இருந்தார்… எனக்கு அழுகை வந்தது… அம்மா என்னை கட்டிக் கொண்டு அழுதாள்… ரவியும் அண்ணா என்று விசும்பினான்… அப்பாவ பாத்தியாடா, நம்மள விட்டுட்டு போயிட்டார் பாத்தியா என்றால் அம்மா. ஷோபி அம்மாவின் கைகள் இறுக்கமாக பிடித்துக் கொண்டு முதுகை தடவிக் கொடுத்தாள். சந்திரன் சித்தப்பாவும், வாசு சித்தப்பாவும் என்னை வெளியே அழைத்தனர்…

யார்யாருக்கு தகவல் சொல்ல வேண்டுமோ, எல்லாருக்கும் சொல்லியாச்சு, என் தாய் மாமனுங்க யாரும் வரலை எனவும்… இப்போ தாய் மாமன் உரிமைக்கு எவனக் கூப்பிடறது என்றும் என்னை கேட்டார்கள். நான் என் தம்பிகளுடன் பேசி விட்டு முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லி, சென்னையில் இருப்பவர்கள் எப்போ வர்றாங்க் என்று தெரிந்து கொண்டு, அப்பாவை இன்றைக்கே தகனம் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு நகர்ந்தேன். கொண்டு வந்திருந்த பணத்தை பாஸ்கரிடம் கொடுத்து உள்ளே வைக்கச் சொல்லி, வந்திருப்பவர்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கவும், காப்பித் தண்ணிக்கும் ஏற்பாடு செய்துவிட்டு, புழக்கடையை திறந்து பாத்ரூம் செல்வதற்குச் சென்ற போது தான் பாவ்னாவை பார்த்தேன். பார்த்தவுடன் அடையாளம் தெரிந்தது… அனேகமாய் பதினான்கு வருடம் கழித்துப் பார்க்கிறேன்… தர்ஷனாவும் உடன் இருந்தாள். சரோஜா அத்தையும் இருந்தது அங்கே. என்னைப் பார்த்தவள் ஒன்றும் பேசவில்லை, மிக மெல்லியதாய் சிரித்தாள். நான் அவள் அருகில் உட்கார்ந்து என்ன படிக்கிற? என்ற போது பிளஸ் ஒன் என்றால்…. நிர்மலா கான்வெண்டில்… என்ற போது மலைப்பாய் இருந்தது. அவளை, அர்ச்சனாவை ஷோபிக்கு எங்கள் வீட்டு மாடியில் இருந்தவர்களின் பேத்திகள் என்று அறிமுகப்படுத்தி வைத்தேன். பாவனாவின் கண்களில் தெரிந்த கேள்விகள் என்னை அங்கே நிற்கவொட்டாமல் நகர்த்தின.

அப்பாவிற்கு ஆகவேண்டிய காரியங்கள் கவனிக்க ஆரம்பித்தேன், சேகருடன் சேர்ந்து, ரவி இன்னும் அம்மாவுக்கு அருகிலேயே உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தான்… வந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் அப்பாவை பார்த்துக் கொண்டிருந்தபோதும் அப்பா கண்ணாடிப்பெட்டிக்குள் குளிரில் சிரித்துக் கொண்டு இருந்தார் மாற்றமே இல்லாமல். ஒற்றை ரோஜாமாலை மட்டும் அவர் அணிந்திருக்க மற்ற மாலைகள் பூக்கள் கண்ணாடிப்பெட்டிக்கு வெளியே இருந்தன… அப்போ என் அம்மாவின் தம்பி, சின்ன தாய்மாமன் உள்ளே வந்தார், அம்மாவுக்கு தம்பியைக் கண்டவுடன், ஞானம் பாத்தியாடா உங்க மாமா நம்மள எல்லாம் விட்டுட்டு போயிட்டாரு என்று தம்பியின் அரவணைப்பு அல்லது ஆறுதலுக்காக எதிர் நோக்கினாள், ஆனால் ஞானம் மாமா, அப்பா இறப்பதற்கு முந்தைய நாட்களின் சச்சரவுகளின் பொறிகளில் எரிந்து கொண்டிருந்தார் போலும், அம்மாவை கண்டுகொள்ளவில்லை… இது அம்மாவை மேலும் அழவைத்தது… வேணி அக்கா உடன் இருந்தாலும்… ஞானமாமாவின் வீம்பு அம்மாவ மேலும் அறுத்திருக்க வேண்டும். நானும், சேகரும் அம்மாவுக்கும் அதற்கும் தேறுதல் சொல்லி நகர்ந்தோம்…

எங்களுடன் ஏதேதோ காரணங்களுக்காக பேசாமல் இருந்தவர்களும், மற்றவர்களின் பொல்லாப்புக்கு பயந்து போய் வந்திருந்தார்கள், இறுகிய முகத்துடன்… அவர்கள் துக்கத்தினால் அப்படி இருக்கிறார்களா இல்லை சண்டைக்காரர்களின் வீட்டுக்கு வந்ததால் அப்படி இருக்கிறார்களா என்று வகைப்படுத்த முடியவில்லை. சென்னை இருந்து என் அப்பாவின் அக்கா மகன்களும் வந்து விட்டார்கள்… தாய்மாமன் உறவுக்கு ஞான மாமாவை விட்டுவிட்டு… என் அத்தை மகன்களை தாய் மாமன் என்று எங்களுக்குள் முடிவு செய்து நிறுத்தினோம்… அம்மாவுக்கும், சித்திகளுக்கும் இன்றைக்கும் இது ஒரு குறையாகத்தான் யுக்கிறது. ஆனால் வேறு வழியில்லை… ஞானமாமா எங்க போய்ட்டாருன்னே தெரிய்லை…ஒரு வழியா எல்லாம் முடிந்து, அப்பாவை வழி அனுப்பி வைக்கும்போது பொங்கியது… அப்பாவுடனான சந்தோஷமான நாட்களை எண்ணிக்கொண்டே மயானத்திற்கு போக வந்த அமரர் ஊர்தியில் அமர்ந்து எல்லோரும் சென்று கொண்டிருந்தோம்… அப்பா எனக்கு அருகில் ஒன்றும் சொல்லாமல் படுத்திருந்தார்… அப்பா இப்படித் தான் எல்லா நேரத்தையும் சிரித்துக் கொண்டே எதிர்கொள்வார், அவர் மரணத்தையும் அப்படித் தான் எதிர் கொண்டார் என்று நினைக்கிறேன்.

மயானத்தில் வீட்டிற்கு வந்த போது யாரும் இல்லை, ஒரு காமாச்சி விளக்கு ஏற்றப்பட்டிருந்தது, அப்பாவின் பழைய போட்டோவில் மாலை போடப்பட்டிருந்தது, பொட்டும் வைத்திருந்தார்கள்… இது அப்பா மதுரை வந்து திருமணமாவதற்கு முன் ஜுபிடர் ஸ்டூடியோவில் எடுத்தது… திருமணம் ஆன பின் அதே ஸ்டூடியோவில் அம்மாவுடன் நிலாவை பார்ப்பது போன்ற படம் எங்கள் வீட்டிற்கு வருவோர் எல்லாரும் குறிப்பிட்டு பேசும் படம்… அதில் அம்மாவின் கழுத்தில் இருக்கும் நெக்லஸ் வரைந்தது தான் என்பது பலருக்குத் தெரியாது. கருப்பு வெள்ளைப்படத்தின் மிகப்பெரிய பலம் அது. அம்மா இன்னும் அழுது கொண்டிருந்தாள், ஒன்றும் சாப்பிடலை என்றதும் எனக்கும் சேகருக்கும் கோபம் தான் வந்தது… வம்பா சாப்பிட வைத்தோம்… அம்மாவின் தலை முடி ஈரத்தில் இன்னும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. யாரோ குமாரி! தலைய ஈரமா விடாத தொடைச்சுக்கோ என்று அப்பாவின் குற்றாலத் துண்டை கொடுத்தார்கள். தலையை துவட்டும் போதும் அழுதாள் அம்மா.

மறுநாள் பாவ்னாவும், அவள் அம்மாவும் வந்திருந்தார்கள். பாவ்னா இப்போது ஆகாசநீலத்தில், உறுத்தாத பூக்களை ஸல்வாராய் அணிந்திருந்தாள். கழுத்தை சாய்த்து என்னைப் பார்த்தாள். அவள் அம்மா என்னை எப்போ வந்த… என்னால நேத்து நீ வர வரைக்கும் இருக்க முடியல என்றாள், அவள் என்னை பார்க்க விரும்பாததால் அல்லது பார்க்க வேண்டியிருக்குமே என்ற தவிப்பில் போயிருக்க வேண்டும். ஷோபி இரவு முழுக்க விழித்ததில் மீனா வீட்டில் இன்னும் தூங்கி கொண்டிருந்தாள். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள் பாவ்னாவின் அம்மா, பாவ்னா என் அருகில் வந்து அழுத்தமாய் கைகளை பிடித்துக் கொண்டாள்.

எங்கள் ரெண்டு பேரையும் மாறி, மாறி பார்த்த பாவ்னாவின் அம்மா கொஞ்சம் அழுதாள், அப்புறம் பாவ்னாவை என்னிடம் விட்டுவிட்டு கிளம்புறேன் என்றவளிடம் நான் ஒன்றும் சொல்லவில்லை. பாவ்னா ஒரு குளிர் தடாகத்தின் ஒற்றைத் தாமரையாய் தெரிந்தாள் எனக்கு. பாவ்னாவிற்கு என் அப்பாவின் குணங்களும், அவள் அம்மாவின் முகமுமாய் இருந்தது. என் கால் விரல்களையும், கூர் நாசியையும் பார்த்துக் கொண்டே இருந்தவள் தன் கால் விரல்களையும், நாசியையும் பார்க்கத் தொடங்கினாள்

எங்கோ ஏசுதாஸின் குரலில் கேட்ட “சிம்மேந்திர மத்யமம்” பாவ்னாவை பார்த்து ”நீ பவுர்ணமி” என்று சொல்லிக் கொண்டிருந்தது மாதிரி பட்டது எனக்கு. 

தொடர்புடைய சிறுகதைகள்
சாயங்காலம் வந்துடுவியா? இல்லை ரவைக்குத்தான் வருவியா, சொல்லிட்டு போ, சேர்த்து வடிக்கணுமா வேணாமா? என்று கேள்வியை எறிந்து விட்டு பதில் வராமல் போகவே, குடிச்சுட்டு வந்தா கஞ்சி கிடையாது சொல்லிப்புட்டேன்! ஆமா! என்று உலை அரிசியைக் களைந்து அடுப்பில் ஏற்றி பானையில் ...
மேலும் கதையை படிக்க...
தம்புராவின் சீரான சுருதி கதவின் இடுக்குகளின் வழி நுழைந்து குரலுடன் இயைந்து பயணித்து கொண்டு இருந்தது, அவள் வீட்டு வாசலை அடையும் போது. அழைப்பு மணியை அழுத்த தயக்கமாய் இருந்தது, வீட்டின் முகப்பு திண்ணையில் அமர்ந்து கொண்டேன், தண்ணீரில் செய்தது போல ...
மேலும் கதையை படிக்க...
செல்வியைப் பார்க்கச் சென்றபோது அவளில்லை. அவளுடைய மகளும், அவளுடைய கணவரும் தான் இருந்தார்கள். செல்வியின் கணவர் என்னை பார்த்திருக்கிறார், மாப்ள, மாப்ள என்று வாய் நிறைய அழைத்திருக்கிறார் நிறைய சமயங்களில். ஆனால் அவரிருக்கும் நிலையில் என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. செல்வியின் ...
மேலும் கதையை படிக்க...
பிரதான சாலையில் இருந்து அந்த தெருவுக்குள் நுழையும் போதே, பிரதான சாலையின் எந்த பாதிப்புமற்றிருந்தது அந்த தெரு. மார்கழி மாதத்தின் பிரத்யேக அடையாளங்களாய் தெருவை அடைத்த கோலங்களும், சானிப் பிள்ளையாரும் பூசனிப்பூக்களும் நிரம்பி இருந்தது, சாயங்காலம் ஆகியிருந்தும், கோலங்கள் அப்படியே இருந்தது ...
மேலும் கதையை படிக்க...
ஜெயந்தி வந்திருப்பதாய் அம்மா சொன்னதும் மனதுக்குள் அவளை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் வந்ததை வாசுவால் மறைக்க முடியவில்லை. ஜெயந்தியுடனான பால்யத்தின் நட்பில் கட்டிய திரைச்சீலைகள் இன்னும் தோரணமாய் ஆடிக் கொண்டிருக்கிறது மனசுக்குள். சில உறவுகளில் இருக்கும் இந்த பிசுக்கு எப்போதும் போவதில்லை... ...
மேலும் கதையை படிக்க...
பொழுது சரக்கென்று விளக்கணைத்தது போல இருட்டி விட்டது. ஆறுமணி கூட ஆகியிருக்காது என்று நினைத்ததும், கதவை அகலத்திறந்து எதிரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். ஆறு பத்தாகி இருந்தது, வாசலில் உட்கார்ந்து கஸ்தூரி அக்காவிடம் பேசிக்கொண்டு இருந்ததில், நேரம் போவதே தெரியவில்லை. எப்போதுமே ...
மேலும் கதையை படிக்க...
மளுக்கென்று ஒரு கொப்பு மட்டும் உடைந்து தொங்கியது, முன்னால் கட்டியிருந்த ஒரு வாழைமரத்தில்.. குலையின் கனம் தாங்காமலா அல்லது கட்டிய தோது சரியில்லையா என்று தெரியவில்லை... மறுபக்கம் நின்று கொண்டிருந்த மரமும் இழுத்துக் கொண்டிருந்தது இணைத்துக் கட்டிய கயிற்றால். சாவஞ்செத்த பயலுக... ...
மேலும் கதையை படிக்க...
சுந்தரி அம்மாவிற்கு இடுப்பெல்லாம் குடைந்தது. கெண்டைக்கால் சதையும் பிடித்துக் கொண்டது போல ஒரு வலி. நேற்று வேலை அதிகமாகி விட்டது, தையலுக்கு உடம்புக்கு முடியாமல் போனதால், நேற்று சுட்ட முறுக்கையும், அதிரசத்தையும், சுந்தரி அம்மாவே எடுத்துக் கொண்டு போய் விற்க வேண்டியிருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
என் ப்ரிய சிநேகிதி எழுதிய ’டெம்பிள் எகய்ன்’ என்ற அவளின் அனுபவத்தின் தமிழாக்கம் இது, அவள் எழுதிய ஆங்கில வடிவத்தின் வீச்சுக்கு இது ஈடுகொடுத்திருக்கிறதா என்று தெரியவில்லை... அவள் என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம்... படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்... ...
மேலும் கதையை படிக்க...
"ஏய் கூறுகெட்ட கழுத! ஆம்பளப்பிள்ளைக திரியற வீட்ல இப்படித் தூமத்துணியக் கொண்டாந்து இங்கன போட்டிருக்கறவ?” என்று குப்பை டின்னில் இருந்த துணியப்பாத்து கத்தினாள், தாயம்மாக்கிழவி. பதினோரு வீடுகள் இருக்கும் காம்பவுண்டில், தாயம்மாக்கிழவியின் அரசாங்கம் தான். தாயம்மாக்கிழவியின் இரண்டு மகன்களும் அதே காம்பவுண்டில் முறையே ...
மேலும் கதையை படிக்க...
கடிவாளம்
திணைமயக்கம்
புனல்பெருவழி
வால் நட்சத்திரம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம்
வாசனைத் தைலம்
திராவகத்தில் கரையும் பொன்
வாய்ப்பச் செயல்
இறைமை
உண்டார்கண் நோக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)