கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 13,419 
 
 

சிந்துஜாசார்ஜரில் போட்ட கைபேசியை எடுத்துப் பார்த்ததும் அய்யோ என்றிருந்தது. 100க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் மெசேஜஸ் குவிந்துகிடந்தன. புது குரூப் ஒன்றில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.

எவன் சேர்த்தான் என்றும் தெரியவில்லை, என்ன குரூப் அது என்றும் தெரியவில்லை.

குரூப் பெயர் ‘தொலைந்த சிறகுக’ளாம். கண்றாவிகளை எழுதி கவிதைகளென்று சொல்லிக் கொள்வதே முக்கால்வாசிப் பேருக்கு இப்போது வழக்கமாகிப்போயிற்று.

2013ல் இளங்கலை முடித்தவர்களுக்கான ரீயூனியன் குரூப். முக்கால்வாசி பெயர்களும் முகங்களும் மறந்துபோனதால் ஆர்வமாக ஒவ்வொரு ஹாய் ஹலோவின் ப்ரொஃபைல் படத்தையும் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது சிக்கினாள் தொலைந்து போன சிந்துஜா. அவள் எண்ணின் ப்ரொஃபைல் போட்டோவில் ஒரு குழந்தை. அவள் ஜாடையில் இருக்கிறது. கல்யாணம் பண்ணிட்டா போல.
பாவி! கல்யாணத்துக்குக் கூட கூப்பிடல. இப்போது எப்படி இருப்பாளோ என்ற எண்ணம் அவளின் அந்நாள் தோற்றத்தை கண்முன் கொண்டுவந்தது. சுண்டெலி மாதிரி இருந்தாள். பொறியியல் இளங்கலை படிப்பின் முதல் நாளன்று அவளைப் பார்த்தபோது அப்படித்தான் தோன்றிற்று.

சுண்டெலிக்கு இருப்பதுபோலவே மெலிந்த தேகம். 160 சென்டிமீட்டர் மிகாத உயரம். நீளமுகம். ஆனால், அழகாகத் தெரிந்தாள். அதற்கு பெரிய காரணம் அவளது நான்கடி நீள அடர்கூந்தல். கிளாஸ் பெண்களெல்லாம் சேர்த்து வயிறெரியும் அளவுக்கு அத்தனை அடர் கூந்தல்.

முதல் பெஞ்ச்சில் யாரும் உட்காராத காரணத்தினால் எனக்கும், கிளாசில் சிந்துஜாவை விடவும் குள்ளமாக யாரும் இல்லாததால் அவளுக்கும் விரிவுரையாளரை 160 டிகிரியில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.மூன்றாவது பீரியடிற்கு மேல் கழுத்து வலிக்கும். அதனால் கீழே குனிந்து கதைக்க ஆரம்பித்து விடுவோம். சிந்துவுக்கு தன் ரசனை மேல் பெரிய கர்வம் உண்டு.

‘என்னை மாதிரி யாரும் இல்ல…’ என்பதை அடிக்கடி சொல்வாள். பாடல்களை, அதன் வரிகளை இப்படித்தான் ரசிக்கவேண்டுமென விதிகள் விதிப்பாள். மணிரத்னத்தின் திராபை படத்தைக்கூட ஆஸ்கருக்கு தகுதியான கலைப் படைப்பென்று சிலாகிப்பாள். சாதாரணர்களுக்கு அக்கலை நயங்கள் புரிவதில்லை என்பாள். ‘‘நீ ‘காதல் சடுகுடு…’ பாட்டு பார்த்திருக்கியா? சூஃபி நடன அசைவுகளை அழகா கொண்டு வந்திருப்பாங்க. அதுக்கு முன்னாடி அப்படி யாருமே எக்ஸ்பெரிமென்ட் பண்ணதில்ல…’’ அவள் சொல்லுவதெல்லாம் பிரம்மாண்டமாக நன்றாகத்தான் தெரியும். ஆனால் ஏனோ நம்பத் தோன்றாது.

முதலாமாண்டு முழுவதும் அவள் சுயபுராணத்தையும் ரசனைகளையும் வேண்டா வெறுப்பாகக் கேட்டும், இரண்டாம் ஆண்டும் அவளின் பக்கத்து இருக்கையை சொந்தம் கொண்டாட எனக்கு காரணங்கள் இருந்தன. உணவு இடைவேளைகளில் டிபன் பாக்ஸைத் திறந்தவுடன் எனக்கென்று எடுத்து வைத்துவிட்டுத்தான் அவள் உண்ணுவாள். லீவு நாட்கள் முடிந்து வரும்போது பிடித்த தின்பண்டங்கள் இருக்கும். உடம்பு முடியாத நாட்களில் வீடு வரை கொண்டு போய் விட அவள் வண்டி இருக்கும். அன்புக்காரி.

அவளின் அன்பின் உஷ்ணம் பழகியவர்கள் அவளை விட்டுப் போகத் துணியமாட்டார்கள். அதை அவளும் அறிந்தே வைத்திருந்தாள். ‘‘எனக்கு வாய்க்கிற மாப்ள கொடுத்து வெச்சவன்டி. ஆனா, எங்க ஊர்ல மாப்ள பார்க்கணும்னாலே முப்பதைத் தாண்டிய அரைக்கிழத்ததான் பார்ப்பாங்க…’’

‘‘நீ ஏன் சரின்னு சொல்ற?’’

‘‘எதிர்த்தெல்லாம் பேச முடியாதுடி. அதான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். பிருத்விராஜ் மாதிரி ஒருத்தர!’’

வந்தார்,மூன்றாவது செம், ‘சிக்னல்ஸ் அண்ட் சிஸ்டம்’ எடுக்க. பெயர் ஆன்டன் பிரகாஷ். புது துணை பேராசிரியர். அச்சில் ‘மொழி’ பிருத்விராஜ் போலவே இருப்பார். நல்லவேளை அவ்வளவு உயரம் கிடையாது. குள்ளமாக இருந்தார்.

‘‘சார் நீங்க நடிகர் பிருத்விராஜ் மாதிரியே இருக்கீங்க!’’ என்று நிறைய பெண்கள் சொல்லி இருப்பார்கள் போலும். அந்த நடிகரின் உடல்மொழிகளையும் பேச்சுநடையையும் கூட நகலெடுத்தது போல் எனக்குத் தெரிந்தது. சிந்துவுக்கு அப்படியெல்லாம் தெரியவில்லை. ‘‘அட ஒரே மாதிரி இருக்கிறவங்க செய்கைலாம் கூட ஒரே மாதிரிதான் இருக்கும். நான் பார்த்திருக்கேன்…’’ என்று சொன்னதிலிருந்து அவளுக்கு அவர் மேலுள்ள ஈர்ப்பு புரிந்து போனது.

கிளாசில் உள்ள முப்பத்தி நான்கு பெண்களுக்கும் பிரகாஷ் சாரை பிடிக்கும் என்பதே அவளுக்கு பெரிய எரிச்சலாக இருக்கிறதென்று கூறுவாள்.

பெரிய பெரிய ஃபார்முலாக்களும் கணக்கீடுகளும் கொண்ட பாடத்தை நடத்தியதால் பிரகாஷ் சார் கிளாஸ்களை அவ்வளவாக சிந்துவைத் தவிர நாங்கள் யாரும் விரும்பவில்லை.முதல் பெஞ்ச்சில் உட்கார்ந்திருப்பதால் அவரிடம் பேசுவதற்கும் அவருக்கு ஆதர்ச மாணவியாக மாறுவதற்கும் சிந்துவுக்கு இரண்டு மாதங்கள் போதுமானதாக இருந்தது.

அடிக்கடி டவுட் கேட்பது, கிளாஸ் நோட்ஸ் போதாதென்று புரியாத பாடத்துக்குப் போய் ஆங்கில எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிப்பதென்று ஒரு மார்க்கமாகத்தான் போனாள்.நான்காவது செம்மிற்கு பிரகாஷ் சார் வரவில்லை என்றாலும் அவரைப் பற்றிய பேச்சோ, அவரைப் பார்க்கவேண்டுமென்பதற்காகவே ஸ்டாஃப் ரூமிற்கு என்னை நித்தம் இழுத்துக்கொண்டு செல்வதோ நிற்கவில்லை.

அந்நாட்களில் சிந்து அழகாக இருந்தாள். உடைகளிலும் ஐ லைனர்களிலும் முன்பில்லாத மெனக்கெடலும் நேர்த்தியும் இருந்தது. பிறகு பிரகாஷ் சாரின் நம்பர் வாங்கிப் பேச ஆரம்பித்ததிலிருந்து அவர்களின் உரையாடல்களைப் பற்றிய பகிர்தல் இல்லை என்றாலும் அவரைப் பற்றிய பேச்சுகள் மட்டும் நிற்கவில்லை.காதலிக்கிறார்களா, இல்லை குறைந்தபட்சம் இவள் தன் காதலைச் சொல்லிவிட்டாளா என்று பல நாட்கள் கேள்வியெழுப்ப நினைத்தும் கேட்கவில்லை. காரணம், பிரகாஷ் சார்.

சிந்துஜாவுக்கென பெரிய முக்கியத்துவம் அவர் என்றும் தந்ததில்லை. அவளைக் கடந்து செல்கையில் ஒரு சிறிய புன்முறுவலைக் கூட சிந்தியதில்லை. அவர்களுக்குள் காதலெல்லாம் சாத்தியமில்லை என்ற தொனியில்தான் அவரின் போக்கு இருந்தது.

இறுதியாண்டில் எல்லாரும் வேலைகளுக்காக அலைந்து கொண்டிருக்க சிந்து பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருந்தாள். மேற்படிப்பு, வேலை என எது பற்றிய கவலையுமில்லாமல் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெளியிலிருந்து ஒரு ப்ராஜெக்ட்டை வாங்கி எச்ஓடி கையில் திணித்துவிட்டு சுதந்திரமாக அவளின் குரூப் உலா வந்தது.

நான் எடுத்த ப்ராஜெக்ட் பெங்களூருவில் உள்ள ஒரு ஆராய்ச்சியகத்தில் அதன் நிதியில் செய்ய வேண்டுமென்பதால் கல்லூரிக்குப் போவதோ அவளைப் பார்ப்பதோ அரிதாகிப் போனது.இறுதியாக பல்கலைக்கழக கடைசி தேர்வன்று சிந்துவைப் பார்த்தேன். பிரகாஷ் சாரிடம் பேசப்போவதாகச் சொல்லி சடசடவென்று நடந்து மரங்களின் ஊடே மறைந்தாள். அவள் போனபிறகும்கூட அவள் நடைக்கு அவள் ஜடைப்பின்னல் வளைந்து வளைந்து ஓடியதை பார்த்துக்கொண்டே இருந்தது மட்டும் ஞாபகம்.

ஐந்து வருடங்களில் பட்டமளிப்பு விழா, 3 ரீயூனியன், 8 கல்யாணங்களில் அவளைத் தேடிவிட்டேன். அகப்படவில்லை. இன்று அதிசயத் திருநாளாய் கண்டிப்பாக வருவேனென குரூப்பில் சொல்லி இருக்கிறாள். வரவில்லையெனில் இந்த நம்பரை அழைத்துப் பேசுவோம் என்று பிடிக்காத ரீ யூனியனுக்கு இவளுக்காக சம்மதித்தாயிற்று. காலேஜின் டிபார்ட்மென்ட் ஹால் மாறவே இல்லை. அதே மஞ்சள் வெள்ளை பெயிண்ட். அதே பலூன்கள்.

எங்கள் சீனியர்களுக்கு நாங்கள் செய்த செலவில் ஒரு பைசா கூட மேலே செய்து விடக் கூடாதென்று ஜூனியர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள் போலும்!புதியதாய் 2 – 3 பேராசிரியர்கள் மாறியிருந்தார்கள். பழைய பேராசிரியர்கள் எல்லாம் அடையாளம் தெரியாத அளவிற்கு பெருத்திருந்தார்கள். பிரகாஷ் சாருக்கு முன்முடி அடர்த்தி மட்டும் குறைந்திருந்தது. மற்றபடி அப்படியே இருந்தார். பெரிய மாற்றம் ஏதுமில்லை.

விழா ஆரம்பித்து ஒரு மணிநேரம் கடந்தும் சிந்துஜா இன்னும் கண்ணில் படவில்லை. ஏலக்காய் டீயும் சமோசாவும் முடியும் வரை தோழிகளின் குழந்தை வளர்ப்பு தற்பெருமைகளைக் கேட்டபடியே உட்கார்ந்திருந்தேன். சிந்துஜாவின் மீது ஏனோ பெருங்கோபம் பொங்கிக்கொண்டு வந்தது .

மெதுவாக தோழிகளிடமிருந்து கழன்று வகுப்பறைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது வழியில் வந்தாள்.

முன்பு போல் மூஞ்சூரு முகமில்லை. பெருத்திருந்தாள். செழிப்பாக இருப்பதை நெக்லசும் தாலிச் சரடும் காட்டிக் கொடுத்தன. புடவை அவளுக்கு கொஞ்சமும் எடுக்கவில்லை. பார்சல் செய்த துணி மூட்டை போல் சுற்றியிருந்தாள்.என்னை அடையாளம் காணாது கடந்துவிடுவாளோ எனத் தோன்றிய நிமிடமே நான் காலேஜில் இருந்ததற்கும் இன்றைக்கும் ஸ்ட்ரெயிட்டனிங் செய்த முடி தவிர வேறு ஏதும் மாறவில்லை என்று சுதாரித்துக்கொண்டேன்.

‘‘அடியே பார்த்த கண்ணுக்கு அலும்பாம அப்படியே இருக்க!’’ உடை, உருவம், குரலென எல்லாமும் மாறியிருந்தவளுக்கு என் மாற்றங்கள் சிறியதாகத்தான் தெரிந்திருக்கும்.‘‘என்ன பேசமாட்டியா?’’‘‘எதுக்கு பேசணும்? எவ்வளவு தேடியிருப்பேன்னு எனக்குத்தான் தெரியும்…’’ போன்ற எதிர்வாதங்கள் வராமலில்லை. அதை ஏனோ உரக்கச் சொல்லவும் மனதிற்குத் தோன்றவில்லை.

அதைப் புரிந்தவள் போல சட்டென்று அமைதியாகி, கூட நடக்கத் தொடங்கினாள்.டிபார்ட்மென்ட் வாயிலில் பிரகாஷ் சார் சிந்துவைப் பார்த்ததும் ஓடிவந்தார். ‘‘எப்படிமா இருக்க?’’பதில் இல்லை. ‘‘கல்யாணம் ஆகிடுச்சா? என் கல்யாணப் பத்திரிகை தர உன்னை ரொம்ப தேடினேன்மா. யார்கிட்டயும் உன் நம்பர் இல்லை. பழைய நம்பரையும் மாத்திட்ட. ஹஸ்பண்ட் வரலையா?’’ என்று ஒரே மூச்சாகக் கொட்டித் தீர்த்தார்.

சலனமே இல்லாமல், ‘‘நல்லாருக்கேன் சார். எல்லாம் நல்லபடியா இருக்கு. வரேன் சார்…’’ என்று சட்டென்று நகர்ந்துவிட்டாள்.

பிரகாஷ் சாரைப் பார்ப்பதற்காகவே மதிய உணவைக் கூட விட்டுவிட்டு சந்தேகம் கேட்க ஓடிய அதே டிபார்ட்மென்ட் வாசலை, அதே சிந்துஜாதான் கடக்கிறாள் என்பதை நினைவூட்ட அந்த நடையும் அதற்கேற்ப அசைந்துகொடுக்கும் அந்த நீள ஜடையுமே மிச்சம்.சில உறைந்த விநாடிகளுக்குப் பிறகு பிரகாஷ் சார் என் பக்கம் திரும்பினார். எனக்கேதும் தெரியாது என்பதைப் போல நின்ற என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
இவள் என்னதான் நினைத்து இங்கே வந்தாள்? என்னதான் வேண்டும் இவளுக்கு? என்ன ஆயிற்றென்று கேள்விகளை மனதில் அடுக்கியபடியே சிந்து போன திசையை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினேன்.

டிபார்ட்மென்டின் அறைகள் அத்தனையும் ஆள் அரவமற்றுக் கிடக்க ஓர் அறையில் மட்டும் விசும்பல் ஒலித்தது. சிந்து குரல்தான். போய் ஆறுதல் சொல்லவோ அழுகையை நிறுத்தவோ வேண்டாம் என்று தோன்றியது. அவள் அழட்டும். ஆறட்டும். ஒலி எதுவும் எழுப்பாமல் கடந்துவிடுவதே நான் சிந்துவுக்கு இப்போதைக்கு தரும் ஆகச்சிறந்த ஆறுதல்.

– பெப்ரவரி 2019

Print Friendly, PDF & Email

1 thought on “சிந்துஜா

  1. What a cheap manipulation mind… தான் குண்டான உடல் உருண்டையான முகம் வைத்திருப்பதால் அது அழகில்லை… தான் வைத்திருப்பது போன்ற நீளமான முடி தான் அழகு, குள்ளம் என்று சொல்வதெல்லாம் cheap body shaming

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *