சிகரெட் தோழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 7, 2013
பார்வையிட்டோர்: 15,300 
 
 

நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு சேர்ந்தவள் தான் மம்தா. வந்த நாளிலேயே அனைவரையும் தனது குழந்தைத்தனமான கன்னக்குழி பேச்சில் கவர்ந்தவள். அவள் வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உடை அதற்கு தகுந்தாற்போன்று சிகை அலங்காரம் அவளை அனைத்து விதத்திலும் அழகாய் காட்டியது. சினிமா கதாநாயகிக்கான அத்தனை லட்சணங்களும் அவளுக்குள் இருந்தது. கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று கேட்கும் அனுராக் காஷ்யப் இவளை பாத்திருந்தால் அனைத்து லட்டும் ஒரு சேர இவளிடமே அவருக்கு கிடைத்திருக்கும் அப்படி ஒரு பேரழகி. ஆண்கள் அனைவரும் தன்னிடம் அவள் பேசமாட்டாளா என ஏங்க வைக்கும் கனவு தேவதை.

அனைவர் போல அவளிடம் நானும் பேசவேண்டும் என்றே விரும்பினேன். ஆனால் என் காரணம் வேறு. அவளை நினைத்து கனவு கண்டதில்லை காதலியாய் ஆக வேண்டும் என்று ஏக்கம் கொண்டதில்லை. என் தோழியாக என்னுடனே அவள் நேரத்தை செலவிட வேண்டும் என்ற எண்ணம் கொள்ளவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று என் பல நாள் கனவாய் என் மனசுக்குள் இருந்த சிறு ஆசை அவளால் நிறைவேறும் என்பது மட்டும் தெளிவாய் விளங்கியது அவளிடம் இருந்த அந்த பழக்கத்தினால்.

அப்படி ஒன்றும் பெரிய ஆசை இல்லை என்னுடையது. என் ஆசை பற்றி கூறும்போது சிலருக்கு நகைப்பு இதழ் அருகில் வந்துபோகும், சிலருக்கு கோவம் அவர்கள் முக்கின் மீது அமர்ந்து கொள்ளும், இன்னும் சிலருக்கு இதெல்லாம் ஒரு ஆசையா என்ற ஏளனம் எட்டிப்பார்க்கும். ஏனெனில் என் ஆசை அப்படிப்பட்டது. மும்பையில் ஐந்தாண்டுகளாய் பணிபுரிந்ததாலா பல இடங்களில் அந்த நிகழ்வை பார்த்ததாலா என தெரியவில்லை. அப்படி என்ன ஆசை என நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு பெண்ணுடன் ஒன்றாய் அமர்ந்து புகை பிடிக்க வேண்டும் அதுவும் அவள் என் தோழியாய் இருக்க வேண்டும்.

ஆனால் ஏனோ அப்படிப்பட்ட தோழி எனக்கு கிடைக்காமலே போனது. பல இடங்களில் பெண்கள் புகை பிடிப்பதை பார்த்த எனக்கு இவள் நம் தோழியாக இல்லையே என்ற ஏக்கம் என்னுள் அமர்ந்துகொள்ளும். என் நண்பர்கள் பெண்கள் புகை பிடிப்பதை பார்த்து திட்டும்போது ஏன் சிகரெட் ஆண்களுக்கு மட்டும் கண்டுபிடிக்க பட்டதா என அவர்களுடன் விவாதம் செய்வேன். ஆணாதிக்கம் மிகுந்த நம் நாட்டில் பெண்கள் புகை பிடித்தால் அவளை பற்றி தவறாய் பேசும் மனிதர்கள் இங்கு ஏராளம். ஏனோ அவர்கள் கண்ணில் கிராமங்களில் சுருட்டு பிடிக்கும் முதிர் பெண்கள் எல்லாம் தென்படாமல் போனார்களோ என்னமோ.
இப்படிப்பட்ட நண்பர்கள் வட்டத்திற்குள் இருந்துகொண்டு அவர்களுக்கு முரணாய் என் ஆசையை என்னுள் வளர்த்து கொண்டேன். அவர்களிடம் என் ஆசையை சொல்லும் வேலையில் அவர்களின் பதில்கள் என்னை காயப்படுத்தும். புகை பிடிக்கும் பெண்களை முடிந்த மட்டும் தறைகுறைவாய் கேவலமாய் அவர்கள் சித்தரித்து பேசுவதாகட்டும் சில பணம் படைத்த பெண்கள் புகை பிடிப்பதை கண்டு அவளெல்லாம் உன்னோடு நட்பு பாராட்டுவாள் என்று கனவிலும் எண்ணாதே என்பது போன்ற சொற்கள் ஆகட்டும் என் ஆசையை கொஞ்சம் அசைத்து தான் பார்க்கும். ஆனாலும் என்னுள் ஒரு நம்பிக்கை அப்படிப்பட்ட ஒரு பெண்ணை சந்திப்பேன் அவளுடன் சிகரெட் புகைப்பேன் என்பதை திடமாய் நம்பியது.

அப்படி பட்ட ஒரு சுழலில் தான் மம்தா விரலிடுக்கில் புகைந்து கொண்டிருந்த சிகரெட் என் ஆசை நிறைவேறும் ஆவலை ஏற்படுத்தியது. சில ஆண் நண்பர்களுடன் சகஜமாய் புகை பிடிக்கும் அவள் கண்டு பல நேரங்களில் நான் பெருமை பட்டதுண்டு. ஆண்கள் பலர்கூடும் இடங்களில் தன்னை மறைத்து கொள்ள அவள் ஆயத்தபடுத்தி கொண்டது இல்லை. அதே நேரம் மரியாதையை நிமித்தமான மனிதர்கள் முன்னிலையில் அவள் புகை பிடித்ததும் இல்லை.

ஆண்கள் போல அவளும் புகை பிடித்தாள் அவ்வளவே. கன்னடத்து பெண்ணான அவளுக்கு எப்படி இந்த பழக்கம் ஏற்பட்டது என்பதை யோசிக்கவில்லை முதன்முறையாக சிகரெட்டுடன் அவளை பார்க்கும் பொழுது. மாறாக என் ஆசை நிறைவேற்ற வந்த தேவதையாய் தான் அவளை பார்த்தேன்.

ஆனால் ஏனோ எனக்குள் ஒரு தயக்கம் அவளிடம் பேச. தூரத்தில் அவளை பார்த்து என் ஆசையை நிறைவேற்ற வந்தவள் என எண்ணினாலும் அவள் மேல் படர்ந்திருந்த மேற்கத்திய பாணி அவளிடம் என்னை நெருங்க தடுத்தது. தவிர என் நண்பர்களும் அவளை தவறாக பேச மனமில்லாமல் அதேநேரம் அவள் பணக்கார பாவை என்ற முத்திரை குத்தி என்னுள் தாழ்வு மனப்பான்மையை படரவிட்டனர்.

அவளை பார்த்தாலே ஏன் என்று அறியாத ஒரு தாழ்வுணர்ச்சி அவளிடம் இருந்து என்னை விலக்கியே வைத்தது அவளும் என் அருகில் இருக்கும் அனைவரிடமும் பேசினாலும் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாதது என்னுடைய தாழ்வுணர்ச்சியை அதிகப்படுத்தியது.
எல்லோரிடமும் பேசிய அவள் என்னிடம் ஏன் பேசாமல் இருந்தாள் என்பதற்கான விடையும் என்னிடம் இல்லை. அதற்கான காரணம் அறியவும் விரும்பவில்லை. என் நோக்கமெல்லாம் அவளை எப்படி என் தோழி ஆக்குவது அவளுடன் சேர்ந்து நான் எப்படி சிகரெட் புகைப்பது என்பதில் மட்டுமே இருந்தது. நோக்கம் இருந்தால் மட்டும் போதுமா செயல்படுத்த வேண்டுமே. ஏனோ ஆறு மாதங்கள் ஓடிவிட்டன பார்த்துகொண்டு தான் இருக்கிறேன் அவள் இதழ்களில் இருந்து வெளிப்படும் புகைமூட்டங்களை.

“அஹ்மத் நீங்கள் எழுதுவதை பற்றி சொன்னான்… உங்களுடைய நாவலின் முதல் இரண்டு பாகங்களை எனக்கு அனுப்பி வைத்தான்….
இனிமை அதேநேரம் வலிமை மிகுந்த வரிகள் நிறைந்தவை.
நான் அதை வாசித்ததில் உங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லை என நினைக்கிறேன்…
நானும் உங்களை போல் எழுத முயற்சிப்பவள்….
எனது கதையின் லிங்கை இந்த மின்னஞ்சலில் இணைத்துள்ளேன். படித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்…
உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது படியுங்கள் :)”
உங்கள் பதிலை எதிர்நோக்கும்
மம்தா

நான் எழுதும் ஒரு காதல் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவனாய் எனக்கு தோன்றியது அஹ்மத் தான். ஆனால் அவனுக்கு மம்தா ஞாபகம் வந்திருக்கிறாள். என்னுடைய கதையை ஆங்கிலத்தில் அழகுபடுத்த நான் அஹமதிடம் அனுப்ப அவன் மம்தாவிற்கு அனுப்ப அவள் என் வரிகளில் ஈர்க்கப்பட்டு மேலே உள்ள மின்னஞ்சலை எனக்கு அனுப்பினாள்.

எனது தோழியாய் அவளை அடைய முயற்சி செய்யும் வேளையில் அவளிடம் இருந்து இப்படி ஒரு மின்னஞ்சல் ஆங்கிலத்தில் வந்ததை பார்த்த சிறு நேரம் நிஜமா பொய்யா என்று தெரியாத மனநிலையில் இருந்தேன். எனக்குள் சந்தோஷம் அதை படிக்கும்போது எந்த வார்த்தையில் இருந்து ஒட்டி கொண்டது என்பது ஞாபகம் இல்லை ஆனால் இன்னும் என்னில் இருந்து அது விலக இல்லை.

அவளும் என்னை போன்றே எழுத்தில் ஆர்வம் உள்ளவள் என்பதை அறிந்தபோது இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்துகொண்டு இவ்வளவு நாள் பேசாமல் இருந்திருக்கிறோமே என்ற வருத்தமும் என்னுள் அந்நேரம் எழுந்தது.

அவள் அனுப்பிய கதைகள் படித்தேன். ஆங்கில புலமையின் வீச்சு அதிகம் இருந்தது. அனைத்து கதைகளும் ஒருபக்க கதைகள் தான். இருந்தாலும் கடைசி இரண்டு வரியில் அவள் அவிழ்க்கும் முடிச்சுக்கள் மனதில் கணநேரத்தில் பாரத்தை இறக்கின. அதுவரை மம்தாவை பார்த்த எனக்கு அவளுக்குள் இப்படி ஒரு எழுத்தாளினி இருப்பாள் என்பதை யூகித்தது கூட இல்லை. அவள் எழுத்துக்கள் மனசில் சந்தோஷத்தை துக்கத்தை பாரத்தை நான் அறியாமல் எனக்கு தந்தது.

அவளை என் தோழியாய் அடைய நினைக்கும் எனக்கு அவள் கதைகளை அதிகமாய் புகழ்கிறேனோ என்ற எண்ணம் கூட என்னுள் தோன்றியது அதன் விளைவாய் இரு கதைகளை தமிழில் மொழிபெயர்த்து என் நண்பர்களுக்கு யார் எழுதியது என்பதை கூட சொல்லாமல் பொதுவாய் அனுப்பினேன். எனக்குள் ஏற்பட்ட அனைத்தும் அவர்களுக்கும் ஏற்பட்டது. கணை வீசும் சொற்களும் காதல் வலை வீசும் எழுத்துக்களும் அவளுக்குள்ளும் நிரம்பி வழிவதை அவளது கதைகள் பறைசாற்றின.

அதிலும் என் கதையை ஆங்கிலத்தில் அவளை போலவே அழகுப்படுத்தியிருந்தாள். அதை படிக்கும்போதே தெரிந்துகொண்டேன் என் ஆங்கிலம் எவ்வளவு சுமாராய் இருக்கிறது என்பதை. சொல்ல வந்ததை ஓட்டை ஆங்கிலத்தில் இருந்தாலும் தெளிவாய் சொன்னதால் அவள் என் எழுத்துக்களில் ஈர்க்கபட்டிருப்பது அவளது ஆங்கில புலமையிலும் சில இடங்களில் ரசித்து அவளாய் சேர்த்த வார்த்தைகளிலும் புரிந்துகொள்ள முடிந்தது.

அவளிடம் இருந்து மின்னஞ்சல் வந்தாயிற்று அவள் கதைகளையும் படித்தாயிற்று அவளுக்கு பதில் எழுத வேண்டுமே… அதுவும் ஆங்கிலத்தில். அங்கு வந்தது எனக்கு பிரச்சனை. மற்றவர்களுக்கு இதுவரை ஆங்கிலத்தில் பதில் அளிக்கும்போது வராத பிரச்சினை இவளுக்கு அனுப்பும்போது ஏனோ இனம்புரியாத பயம் என்னுள் தொற்றிக்கொண்டது. அவளின் ஆங்கில புலமையை பார்த்த பின்பு என் ஆங்கிலத்தில் உள்ள பிழைகள் கண்டபிறகு அதை திருத்தி எழுதிய அவளுக்கே ஆங்கிலத்தில் பதில் தருவதென்றால் பயம் வராமல் என்ன செய்யும். சாதாரணமாய் அவளிடம் பேசவே தயக்கப்படும் நான் என்ன எழுதுவது என தெரியாமலேயே இரு நாட்கள் கடத்தினேன்.

பல ஆங்கில கடிதங்கள் நன்றி தெரிவிக்கும் மடல்கள் அழகிய தமிழ் வார்த்தைகளின் ஆங்கில சொற்கள் இப்படி பல ஆராய்சிகள் நிகழ்த்தி அவளுக்கு என் பதில் எழுதினேன் ஆங்கிலத்தில். அதன் தமிழாக்கம் பின் வருமாறு அமைந்தது.

“மிக தாமதமான பதிலுக்கு முதலில் என் மன்னிப்பு… உங்கள் கருத்துக்களுக்கு நன்றி…
என் கதையை நீங்கள் அழகுபடுத்திய விதத்தை பார்க்கும்போது என்னுள் ஏற்பட்ட சந்தேகம் உங்கள் லிங்கில் உள்ள கதைகள் படிக்கும்போது நிரூபணம் ஆனது.
ஆங்கிலம் சரியாக வராத நான் எனது கதையை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது என்னுள் இருந்த கவலை எல்லாம் இதை எப்படி முன்னெடுத்து போகபோகிறோம் என்பதே.
இப்பொழுது அந்த கவலை உங்களால் உங்கள் அழகிய எழுத்தால் துடைக்கப்படும் என்ற நம்பிக்கை என்னுள்”
நன்றியுடன்,
ஹரிசாரதி.

இதை எழுத நான் எடுத்துக்கொண்ட நேரம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரங்கள் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் எழுதுவது ஆங்கிலத்தில் ஆங்கில புலமை வாய்ந்த பெண்ணுக்கு ஆயிற்றே… ஆதலால் ஒரு விதமாய் அனுப்பி அவள் பதிலுக்காக காத்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் கூட அதிகம் இல்லை. அதற்குள் அவளது பதில் சுவற்றில் அடித்த பந்து போல் வந்தது.

“மிக்க நன்றி..
எனக்கு கூட ஆங்கிலம் சரியாக வராது… அதேநேரம் ஆங்கிலம் நம் தாய் மொழி இல்லையே ஆதலால் கவலை கொள்ள வேண்டாம்.
எழுத்தின் மீது அதிக ஆர்வம் உள்ள எனக்கு இப்போது கற்பனைகள் வறண்டு போயிற்று. என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்கு கண்டிப்பாய் செய்வேன்… அதேநேரம் உங்கள் உணர்ச்சிகளை எளிய வார்த்தைகளில் நீங்கள் கோர்த்திருந்த விதத்திற்கு நான் அடிமை.”
நன்றியுடன்
மம்தா

இதற்கு மேல் ஒரு எழுத்தாளனுக்கு என்ன வேண்டும் அதுவும் நான் தோழியாய் அடைய துடிக்கும் பெண்ணிடம் இருந்து, என்னுள் எழுந்த சந்தோஷத்திற்கு நிச்சயமாய் அளவில்லை. அதை எழுத்தில் எழுதும் மனநிலையிலும் இல்லை. இதழ்களில் புன்னகை தவள அவள் அனுப்பிய மின்னஞ்சலையே மறுபடி மறுபடி பார்த்த எனக்கு அவளுடன் புகைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

என் புன்னகை தவழும் உதடுகள் புகைக்க என்னை அழைத்தது. ஆதலால் வெளியே வந்த நான் எனது பான்ட் பாக்கெட்டில் எப்போதும் வசிக்கும் சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒன்றை விடுவித்து என் உதடுக்கிடையில் செருகி அதனை லைட்டர் மூலம் பற்றவைத்து உயிர் கொடுத்தேன்.

“ஹாய்…. லைட்டர் ப்ளீஸ்…” மம்தா என் பின்னால் அவள் உதட்டுக்குள் சிகரெட் ஒன்றை பிடித்தபடி நெருப்பு கேட்டாள் சிறு புன்னகையை என்னை போலே அவள் உதட்டில் சுமந்தபடி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *