சிகண்டினி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 16,885 
 

நான் அவளுடன் உரையாடியதில்லை. நான் இந்த வீட்டிற்கு குடிவந்த இரண்டு வருடத்தில், என் ஹவுஸ் ஓனர் தவிர அக்கம்பக்கத்தில் இருக்கும் யாரிடமும் உரையாடியதில்லை. மாடியில்தான் என்னுடைய அறை. தினமும் காலையில் மொட்டை மாடியில் எட்டு நடைப்பயிற்சி செய்வேன். பின் சிறிதுநேரம் தெருவை வேடிக்கைப் பார்ப்பேன். அமைதியான குறுகலான தெரு.

தெருவின் ஒரு மூலையில் பெரிய சுப்ரமணிய சாமி கோவிலும், இன்னொரு மூலையில் சூலக்கரை மாரியம்மன் கோவிலும் இருக்கிறது. அங்கே மட்டும் அவ்வப்போது கூட்டத்தை காணலாம். மற்றப்படி சலனமற்ற தெருவில் என்னை அதிமாக எதுவும் கவர்ந்ததில்லை, பத்து மணிக்குத்தான் எனக்கு வங்கி. வீட்டிலிருந்து ஒன்பதரை மணிக்கு கிளம்பினால் போதும். நான் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன்.

காலை ஆறரை மணி வாக்கில் அவள் அழகாக கோலம் போடுவாள். தினமும் கலர் கோலம்தான். முதலில் அவள் என்னை சட்டை செய்யவில்லை. ஒருநாள் எதார்த்தமாக மேலே நிமிர்நது பார்த்தவள் விருட்டென்று தலையை குனிந்து கொண்டாள். மறுநாளிலிருந்து ஓரக் கண்ணில் என்னை தேடுவதை நான் கவனித்திருக்கிறேன். இருவரும் பார்த்துக் கொள்வதோடு சரி. எதுவும் பேசியதில்லை. கோலம் போடும் சில நிமிடங்கள் மட்டுமே அவளை வெளியில் காண முடியும். நான் விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது அவள் வெளியே வருவாளா என்று பார்த்திருக்கிறேன். அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு வர நேர்ந்தாலும் அவளை தேடி இருக்கிறேன். ஆனால் அவள் வெளியே வந்ததில்லை. சில நேரங்களில் அவள் வீட்டு வாசலை பார்த்தவாரே கடந்து சென்றிருக்கிறேன். எப்போதும் அவள் வீட்டில் பெரிய சலசலப்பு இருந்ததில்லை. வயதான பெரியவரொருவர் திண்ணையில் படுத்திருப்பார். அவள் அருகில் ஒரு பாட்டி அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பாள்.

அன்றும் இந்த காட்சியை கடந்து முதன்முதலில் அந்த மாரியம்மன் கோவிலுக்கு சென்றேன். அன்று எனக்கு பிறந்தநாள். பூசாரி கேட்டார், “தம்பி புதுசா?” நான் புன்னகை செய்தேன்.

“பூஜா வீட்டுக்கு எதிர் வீட்லதான இருக்கீங்க?” என்றார்.

அவள் பெயர் பூஜாவின் இருக்கலாம். நிச்சயம் அவள் பாட்டியின் பெயர் பூஜாவாக இருக்க வாய்ப்பில்லை. அந்த வீட்டில் அவளையும் அவர் பாட்டியையும் தவிர வேறு பெண்கள் யாருமில்லை.

நான் அவள் பெயர் எனக்கு தெரியாது என்பது போல் அமைதியாக நின்றேன்.

“அதான் நம்ம ஆல்பர்ட் வீடு”

நான் ‘ஆம்’ என்று தலையசைத்தேன். “நீங்க நாம்மாளுனு தெரியாம போச்ச்சே” என்றாவாறே அவர் அம்மனுக்கு அர்ச்சனை செய்ய தொடங்கினார். பூசாரி என்னுடைய அவுஸ் ஓனர் ஒரு கிருஸ்துவர் என்பதால் நானும் ஒரு கிருஸ்துவன் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார். எனக்கு மதங்களில் நம்பிக்கை இல்லை என்பதை நான் அவரிடம் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.

என்னிடம் தீபாராதனை தட்டை நீட்டினர். நான் தீபத்தை ஒத்திக் கொண்டு, பத்து ரூபாயை எடுத்து தட்டில் போட்டேன். அவர் அதை எடுத்து தன் இடுப்பில் முடிந்து கொண்டார்.

“எப்டி இருந்த கோவில் தெரியுமா தம்பி, ஆளுங்க வரதே குறைஞ்சு போச்சு….

“தெக்கால இருக்கே அது பேரே பாப்பாரத் தெரு. இப்பவும் பாருங்க. தெருவுக்கு நடுவல பெருமாள் கோவிலிருக்கு, ஆனா கும்புட தான் ஆள் இல்ல. யார் யாரோ எங்கிருந்தோ வந்து வீடுங்கள வாங்கி சிலுவையை நட்டுவச்சுட்டு போய்டாங்க. என்னத்த சொல்ல, அவங்க சாமி அவங்களுக்கு” என்றார்.

பூசாரியிடம் அவளைப் பற்றி கேட்கலாமா என்று யோசித்தேன். ஊர்விட்டு ஊர் வந்து வேலை செய்கிறோம். எதற்கு தேவை இல்லாத பிரச்சனை என்று விட்டுவிட்டேன். எப்போதாவது அந்த கோவிலுக்கு போனால், பூசாரி எதையாவது பேசுவார். ஆனால் நான் ஒருபோதும் பூஜாவைப் பற்றி கேட்டதில்லை. பல மாதங்கள் வேகமாக ஓடியது. நானும் பூஜாவும் பார்வையை பரிமாறிக் கொள்வதோடு சரி. எப்போவதாவது புன்னகை செய்யலாமென்று யோசிப்பேன். தைரியத்தை வரவழைத்துக் கொள்வதற்குள் அவள் உள்ளே சென்றுவிடுவாள்.

அன்று இரவு பத்துமணி இருக்கும். யாரோ கத்தும் சப்தம் கேட்டது. நான் ஜன்னல் வழியே பார்த்தேன். அவள் வீட்டின் வாசலில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. ஒருவர் திண்ணை அருகே நின்றுகொண்டு சப்தமாக கத்திக் கொண்டிருந்தார், “அசிங்கத்த விடலையா நீ. குடும்பத்துல யாருக்குமில்லாத பழக்கம் ஏண்டி உனக்கு?. பொம்பள பொம்பளையா தான் நடந்துக்கணும். திருந்துவனுதான இங்கே கொண்டாந்து விட்டேன்…”

பூஜா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். எனக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது. எதுவும் புரியாதது போலும் இருந்தது. என்னை அறியாமலேயே என் முகம் ஏதோவொரு அருவருப்பை வெளிப்படுத்தியது. நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.

என் அறை இருட்டாக இருந்தது. இருட்டிற்கு நடுவில் நின்று தான் அவள் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து தான் கவனித்தேன், அந்த இரண்டு கண்கள் என் ஜன்னலை நோக்கி இருந்ததை. அந்த மனிதன் சப்தமாக கத்திக் கொண்டிருந்தார். பூஜா அதை சட்டை செய்யாமல், என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருட்டில் நான் நிற்ப்பது யாருக்கும் தெரியாது என்று எண்ணினேன். அந்த கண்கள் என்னைவிட்டு அகலவே இல்லை. அவள் முகம் சாந்தமாக இருந்தது. அவள் என்னைப் பார்த்து புன்னகை செய்தது போல் இருந்தது. என் உடல் நடுங்கியது. நான் வேகமாக ஜன்னலை அடைத்துவிட்டேன்.

மறுநாள் காலை கோலம் போட அவள் வரவில்லை. நான் வழக்கம் போல் வேலைக்கு சென்றேன். அவள் வீட்டின் வாசலில் தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். மாரியம்மன் கோவில் பூசாரி புன்னகை செய்தார்.

வங்கியில் வேலை அதிகமாக இருந்தது. அரசாங்கம் ஐநூறு ருபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று சொல்லிவிட்டதால் வழக்கத்திற்கு அதிகமாக வேலை பளு இருந்தது. அதனால் சாயங்காலம் கிளம்ப தாமதமாகிவிட்டது. தெருமுனையில் மாரியம்மன் கோவில் அடைக்கப் பட்டிருந்தது. ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் என்னை கடந்து சென்றார். வீட்டின் அருகே வரும்போது தான் பார்த்தேன், பூஜாவின் வீட்டின் வாசலில் ஓரிருவர் நின்றுகொண்டிருந்தனர். வாசலில் பூஜாவின் கோலம் இருக்குமிடத்தில் நீர் கோலம் கண்ணில் பட்டது. சில பூக்கள் சிதறிக் கிடந்தன. ‘தத்தாவா பாட்டியா என்று தெரியவில்லை.’ வாசலில் இருந்தவாறே வீட்டை பார்த்தேன். தாத்தா அதே இடத்தில் படுத்து இருமிக் கொண்டிருந்தார். அவர் தலைமாட்டில் அமர்ந்தவரே பாட்டி அழுதுகொண்டிருந்தாள். வீடெல்லாம் கழுவிவிடப் பட்டிருந்தது.

நான் விருடென்று அங்கிருந்து நகர்ந்து மாடி ஏறினேன். என் வீட்டின் ஜன்னல் அடைக்கப்பட்டிருந்தது. அதை திறக்க தைரியம் வரவில்லை. இன்றுவரை அந்த ஜன்னல் திறக்கப்படவில்லை.

– செப்டம்பர் 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *