குட்டையில் விழுந்த நாணயம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 12, 2023
பார்வையிட்டோர்: 18,807 
 
 

குறித்த நேரத்திற்குப் போகவேண்டும் என்பதால், நான் தங்கியிருந்த ஹோட்டலில் குளித்து வெளிக்கிட்டுத் தயாராக நின்றேன். எனது அறைக் கதவு தட்டிச் சத்தம் கேட்டது. திறந்து பார்த்தேன்.

‘மிஸ்டர் ஹரிஷ்..’ என்றாள் வாசலில் நின்றவள்.

‘யெஸ்’ என்றேன்.

‘பொஞ்சொர்னோ.. ஐ.. யாம் யூலியானா, இன்றைய நாள் நன்றாக அமையட்டும், உங்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துப் போக வந்திருக்கிறேன்’ மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.

‘ஓ.. ஹாய்..!’ என்று வாய் சொன்னாலும், நான் அதிர்ந்து போயிருக்கிறேன் என்பதை எனது வார்த்தைகளே உணர்த்தின. தவறுதலாக எனது அறைக்கதவைத் தட்டிவிட்டாளோ என நினைத்தேன்.

ரோம் நகரத்தில் இவ்வளவு அழகான ஒரு இளம் பெண்ணைச் சுற்றுலாத் துறையினர் எனக்கு வழிகாட்டியாக அனுப்பி வைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

 பொதுவாக நான் சென்ற நாடுகளில் எல்லாம் சுற்றுலாதுறையில் அனுபவப்பட்ட, கொஞ்சம் வயது கூடியவர்களைத்தான், அனேகமாக ஆண்களைத்தான் பல இடங்களில் இதுவரை காலமும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

‘போகலாமா?’ என்று கேட்டாள்.

‘நான் ரெடி, போகலாம்’ என்றேன்.

புறப்படத் தயாரானபோது, ஒருகணம் என்னை மேலும் கீழும் அவள் பார்த்தாள், அப்புறம் ‘வெளியோ கொஞ்சம் குளிராக இருக்கிறது, ‘சுவெட்டர் அல்லது ‘வின்ட்பிறேக்கர்’ அணிந்தால் உங்களுக்குச் சௌகரியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றாள்.

ஒரு வழிகாட்டிக்கான அக்கறை அவளிடம் இருந்தது. புதிய இடம் என்பதாலும், கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டதாலும் வெளியே அன்றைய காலநிலை எப்படி இருக்கிறது என்பதை நான் கவனிக்கத் தவறியிருந்தேன்.

‘நினைவூட்டியதற்கு நன்றி’ என்று சொல்லி நான் உள்ளே சென்று என்னிடம் இருந்த ‘வின்ட்பிறேக்கரை’ அணிந்து கொண்டு வந்தேன்.

‘நவ் யூ லுக் நைஸ் அன்ட் ஸ்மாட்’ என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

When in Rome, do as the Romans Do‘  எங்கெல்லாம் போகிறோமோ, அந்த இடங்களுக்கு ஏற்றபடி ஆடை அணிவது முக்கியம் என்பதைச் சொல்லாமல் சொன்னாள்.

‘உங்களுக்கு ரோமில் முக்கியமாக ஏதாவது இடங்கள் குறிப்பாகப் பார்க்க இருக்கிறதா?’ என்று கேட்டாள்.

‘எனக்கு இடம் புதிது, நீங்கதான் அழைத்துச் சென்று முக்கியமான இடங்களைக் காட்டவேண்டும்’ என்றேன்.

‘அதை நான் கட்டாயம் செய்வேன், ஆனால் உங்களுக்கென்று ஏதாவது இடங்களை இங்கே விசேடமாகப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் சொல்லுங்க’ என்றாள்.

‘பிஸா சாய்ந்த கோபுரத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருக்கிறது’ என்றேன். இந்தப் பிஸா கோபுரத்தைப் பைஸா சாய்ந்த கோபுரம் என்றும் சிலர் தமிழில் சொல்வதுண்டு.

‘அது சற்றுத் தூரத்தில் இருக்கிறது நாளைக்கு அங்கு போகலாமா?’ என்றாள்.

‘இல்லை, அது ஏற்கனவே சரிந்த கோபுரம், தற்செயலாகச் சரிந்து விழுந்திட்டால், என்னுடைய கனவு கனவாயே போயிடுமே’ என்றேன்.

 நான் சொன்னதைக் கேட்ட அவள் அதை நகைச்சுவையாக எடுத்துச் சிரித்துவிட்டு, ‘அதற்கு ஆயுசு நூறு, விழுந்திடாது’ என்றாள்.

ரோமில் உள்ள முக்கியமான சில இடங்களைக் குறிப்பிட்டு, அந்த இடங்களுக்கு இன்று என்னை அழைத்துச் செல்வதாகச் சொன்னாள்.

‘அப்டியே ஆகட்டும்’ என்றேன்.

ரோம் வீதிகள் எல்லாம் சுற்றுலாப் பயணிகளால் சனநெருக்கடியாக இருந்தன. உள்ளுர் வீதிகள் பழைய முறையில் சிறிய நீள்சதுரக் கறுப்புக் கற்களை அடுக்கிப் போடப்பட்டிருந்தன. எல்லாமே மிகப் பழையவீடுகளாக இருந்தன. அவற்றுக்கு வாகனத் தரிப்பிடங்கள் இல்லாததால், வீதி ஓரங்களிலேயே வண்டிகளை விட்டிருந்தார்கள். வீதிகளின் ஓருகரையில் கார்களும், மறுகரையில் மோட்டோசைக்கிள்களும் வரிசையாக விடப்பட்டிருந்தன.

இங்குள்ள அனேகமான கார்கள் எல்லாம் தரிப்பிட வசதியின்மை காரணமாக, பின்பக்கம் நீட்டிக் கொண்டிராமல்,  மொட்டையாக இருந்தன.

வில்லா போர்கீஸ், பொண்டே மில்வியோ, கொலோசியம், வத்திக்கான் அருங்காட்சியகம், பிளாசா டி எஸ்பானா போன்ற இடங்களைப் பார்வையிட்டோம்.

வில்லா போர்கீஸ் என்ற இடத்தைச் சென்று பார்த்த போது, ‘வூடி அலன் எழுதி, நெறிப்படுத்தி நடித்த ‘ரூ ரோம் வித் லவ்’ என்ற திரைப்படம் இங்கேதான் படமாக்கப்பட்டது’ என்று சொன்னாள்.

‘நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கின்றேன் ஆனால், எனக்கு இந்தப் படத்தைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, மிஸ்பண்ணீட்டேன்’ என்று சொல்லிச் சமாளித்தேன்.

அத்துடன் அவள் விட்டிருக்கலாம், அடுத்து என்னை பிளாஸா டி ஸ்பானா என்ற இடத்தில் உள்ள பிரபலமான இஸ்பானிய படிக்கட்டுகளைப் பார்க்க அழைத்துச் சென்றாள்.

‘ஞாபகம் இருக்கிறதா, வைக்கேஷன் ரோமன் படத்தில் கிரகரிபெக் அந்தப் படத்தின் கதாநாயகி ஆட்ரி ஹெப்பேனின் கையைப் பிடித்துக் கொண்டு படிக்கட்டில் நகைச்சுவையாகக் கதைத்துக் கொண்டு நடந்து வருவாரே, அந்தக் காட்சி இந்தப் படிக்கட்டுகளில் தான் படமாக்கப்பட்டது’ என்றாள்.

எனக்கோ என்ன சொல்வது என்று தெரியாமல் முகம் கறுத்துப் போச்சு, ‘கிரகரிபெக் நடித்தது என்றால் கட்டாயம் பழைய படமாகத்தான் இருக்கும்’ என்று சொல்லிச் சமாளித்தேன்.

இவள் என்னடா எனக்குத் தெரியாத படங்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறாள், தெரிந்த படமாக ஏதாவது சொல்ல மாட்டாளா என்று நினைத்தேன்.

அடுத்ததாக பிரபலமான, உலக அதிசயத்தில் ஒன்றான  கொலோசியத்ததைப் பார்க்கப் போனபோது என்னிடம் வசமாக மாட்டிக் கொண்டாள்.

‘ரோமப் பேரரசின் அடிமைகளைச் சண்டைபிடிக்க விட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லுவதை 50,000 மேற்பட்ட மேல்தட்டு மக்கள் தினமும் வேடிக்கை பார்த்து ரசித்த இடம் இதுதான்’ என்று விளக்கம் தந்தாள்.

‘தெரியும், கிளாடியேற்ரேஸ் பற்றித்தானே சொல்றீங்க, ரசெல் குறோ, கோணி நெல்சென் இரண்டு பேரும் அந்தமாதிரி நடிச்சிருந்தாங்களே, உங்களுக்கு யாருடைய நடிப்பு பிடிச்சிருந்தது’ என்றேன்.

அவளுடைய முகம் மாறிப் போனது.

‘உண்மையைச் சொன்னால், அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை’ என்று எதிரே நின்று எனது கண்களைப் பார்த்து அவள் சொன்ன போது, எனக்கு ஒருமாதிரியாக இருந்தது.

எந்தவொரு பந்தாவும் இல்லாமல், தனக்கு உண்மையிலே தெரியாது என்பதை அவள் ஏற்றுக் கொண்டதை நினைக்க எனக்கு அவள் மீது ஒருவித நம்பிக்கை ஏற்பட்டது.

இவள் ஒரு சினிமா பைத்தியமாக இருப்பாளோ என்று நான் நினைத்தேன், காரணம் காட்சிக்குக் காட்சி நினைவில் வைத்து வர்ணிக்கிறாளே என்பதுதான். மாணவப் பருவத்தில் எனது கூட்டாளிகளைவிட அதிகம் ஆங்கிலப்படங்களை வீட்டிற்குத் தெரிந்தும்இ தெரியாமலும் யாழ்ப்பாணம் றீகல் திரையரங்கில் பார்த்தது நான்தான் என்று இதுவரை காலமும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்ததை எல்லாம் ஒரு கணத்தில் பொய்யாக்கி விட்டிருந்தாள்.

அன்று கடைசி நிகழ்ச்சியாக ‘ட்ரெவி பவுண்டின்’ நீரூற்றைப் பார்க்கச் சென்றோம்.

அனேகமானவர்கள் தடாகத்தில் சில்லறைக் காசுகளை வீசிக் கொண்டிருந்தார்கள். சிலர் தடாகத்தின் எதிர்ப்பக்கம் பார்த்தபடி சில்லறைக் காசை எடுத்து வலது கையால் இடது பக்கத் தோளுக்கு மேலால் தடாகத்தில் விழும்படி எறிந்து கொண்டிருந்தனர்.

‘ஏன் அப்படி வீசுகிறார்கள்?’ என்று யூலியானாவிடம் கேட்டேன்.

‘அதுவா, விஷ்ஸிங் வெல் போல, தங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தித்து அப்படிச் செய்கிறார்கள்’ என்றாள்.

ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கலாம், நான் ஆர்வத்தோடு அவர்கள் எறிவதையும், நாணயத்தை எறியும் போது,  அவர்களின் முகபாவம் எப்படி இருக்கிறது என்பதையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

‘நீங்களும் எறியப் போறீங்களா?’ என்று கேட்டவள், தன்னுடைய கான்ட்பாக்கில் இருந்து ஒரு நாணயத்தை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

‘இல்லை! வேண்டாம்’ என்று சொன்னேன்.

‘இங்கே வந்ததற்கு அடையாளமாய் நினைவில் வைத்திருப்பதற்கு ஒரு படமாவது எடுக்க வேண்டாமா?’ என்றாள்.

‘இதை என்ன செய்ய?’ என்று கேட்டேன்

‘உங்கள் விருப்பம் ஏதாவது நிறைவேற வேண்டும் என்றால் அதை நினைத்துக் கொண்டு, வலது கையால் இடது பக்கத் தோளுக்கு மேலால் இந்த நாணயத்தை எறிய வேண்டும்.’ என்று அதற்கு விளக்கம் தந்தாள்.

அவள் என்னுடைய செல்போனை வாங்கித் தான் படம் எடுப்தாகச் சொன்னாள். அப்புறம் ‘அங்கே திரும்புங்க, இங்கே பாருங்க, சிரியுங்க’ என்றெல்லம் ஆணையிட்டுப் படங்களை எடுத்தாள். படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக மேலும் இரண்டு நாணயங்களைத் தந்து எறியச் சொன்னாள்.

நான் நாணயத்தை எறியும் போது எதையுமே நினைக்கவில்லை, படம் எடுப்பதற்காகப் போஸ் மட்டும் கொடுத்தேன், ஆனால் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக உண்மையாகவே அவள் தந்த சில்லறைக் காசுகளைப் படத்திற்காக எறிந்தேன்.

‘இப்படி அல்ல, வலது கையில் காசை எடுத்து இடது தோள்பட்டைக்கு மேலால் தண்ணீரில் விழக்கூடியதாக எறிய வேண்டும்’ என்றவள், தானே எப்படி காசை எறிய வேண்டும் என்று ஒரு நடன ஆசிரியைபோல, நளினத்தோடு செய்து காட்டினாள்.

அவள் சொன்ன படியே பொறுமையாகச் செய்தேன்.

‘பாருங்க இந்தப் படங்களை, லவ்லி’ என்றாள்.

அவள் எடுத்த படங்களை செல்போன் திரையில் காட்டினாள். உண்மையிலே ட்ரெவி பவுண்டன் பின்னணியில் படங்கள் நன்றாக வந்திருந்தன. இரட்டைச் சிறகுகளைக் கொண்ட இரண்டு குதிரைகள் நெப்ரூனின் தேரை இழுத்துச் செல்லும் காட்சி அற்புதமாகப் படத்தில் பதிவாகியிருந்தது. அவள் ஒரு சுற்றுலா வழிகாட்டி என்பதால் புகைப்படக் கலையையும் தெரிந்து வைத்திருக்கிறாள் என்று நினைத்தேன்.

அப்துல் கலாம் சொன்னது போல, கனவு கண்டவர்கள் சிறுவர், பெரியோர், ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி தங்கள் கனவுகள் நிஜமாக வேண்டும் என்ற நம்பிக்கையோடு, மறுபக்கம் திரும்பி நின்று காசை எறிந்து கொண்டிருந்தனர்.

‘என்ன நினைத்து காசை எறிந்தீர்கள்?’ என்று திரும்பி ஹோட்டலுக்கு வரும்போது சிரித்துக் கொண்டே என்னிடம் கேட்டாள்.

‘நான் ஒன்றுமே நினைக்கவில்லை’ என்றேன்.

‘உண்மையாவா? அப்படி எதுவுமே நினைக்காமல் எறிந்தால் முதலாவது காசு சரியாக எறியப்பட்டால் ரோமுக்குத் திரும்பவும் வரக்கூடிய அதிஸ்டம் உங்களுக்குக் கிடைக்குமாம்.’ என்றாள்.

‘யார் அப்படிச் சொன்னது?’ என்று கேட்டேன்.

‘இது இங்குள்ள ஒரு ஐதிகம்’ என்றாள்.

‘ஒரு முறை என்ன! எத்தனை தடவை வந்தாலும் பார்த்து ரசிக்க்கூடிய இடம்தானே ரோம் எனக்குப் பிடித்திருக்கு’ என்றேன்.

மக்களுடைய நம்பிக்கையை வைத்து இவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நினைத்ததும் எனக்குச் சிரிப்பு வந்தது.

‘ஏன் சிரிக்கிறீங்க?’ என்றாள்

‘இதெல்லாம் அவரவர் நம்பிக்கைஇ இதனாலே ஆகப்போவது ஒன்றுமில்லை’ என்றேன்.

‘இருக்கலாம், ஆனால் நம்பிக்கைதானே வாழ்க்கை’ என்றாள்.

அவள் தெளிவாகத்தான் இருக்கிறாள், நம்பிக்கையின் அத்திவாரத்தில்தானே எல்லாமே நகர்கின்றன என்பது அவள் சொன்ன போது புரிந்தது.

யூலியானாவும் நானும் ரோம் நகரின் சூறாவளி சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தபோது, ஒரு ஆச்சரியமான தருணம் வெளிப்பட்டது.

காதல் தீப்பொறிகள் தங்களுக்கென ஒரு மனதைக் கொண்டதாகத் தோன்றிய இடமான வில்லா போர்ஹேஸ் தோட்டத்தின் விசித்திரமான பின்னணிக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தோம்.

யூலியானா குறும்புத்தனமாக சிரித்தாள், எச்சரிக்கை இல்லாமல், என் கையைப் பிடித்தாள். ‘உங்களுக்குத் தெரியுமா இங்கே ஒரு உள்ளூர் பாரம்பரியம் இருக்கிறது என்று’ அவள் கண்கள் உற்சாகத்துடன் அங்குமிங்குமாய் நடனமாடின.

ஆர்வத்தைத் தூண்டவே, புருவத்தை உயர்த்தினேன். ‘ஓ, அப்படியா? சொல்லுங்க.’ என்றேன்.

கண்களில் தவிர்க்க முடியாத மின்னலுடன், யூலியானா தெரிந்தாள்.

‘இரண்டு பேர் கைகளைப் பிடித்துக்கொண்டு வில்லா போர்ஹீஸ் தோட்டங்களில் ஒன்றாக நடந்தால், அவர்கள் எப்போதும் ஒரு சிறப்பு தொடர்பைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எங்கள் புராணக்கதை கூறுகிறது.’ என்றாள்.

மாட்டிக்கொண்டேன்.  என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ‘சரி! உங்கள் உள்ளூர் மரபுகளை மீற நான் விரும்பவில்லை என்று நினைக்கிறேன், சரியா?’

அது போலவே, கைகோர்த்து, பசுமையான தோட்டங்களுக்குள் நுழைந்தோம். பசுமை, சிரிப்பு, மெல்லக் கிசுகிசுக்கப்பட்ட ரகசியங்களுக்கு மத்தியில், சொல்லப்படாத ஒரு தொடர்பு மலரத் தொடங்கியது.

ஹோட்டல் வரவேற்பு அறை வரையும் வந்து, ‘சாவோ’ என்று சொல்லி விடைபெற்றாள்.

‘நாளைக்கு என்னென்ன இடங்கள் பார்க்கலாம் என்று இதிலே பார்த்து குறித்து வையுங்கள். காலையிலே வந்து அழைத்துப் போகிறேன்’ என்று சொல்லி, பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிய விபரங்கள் அடங்கிய கைட் புத்தகத்தை தந்துவிட்டு அவள் சென்றாள்.

நான் எனது அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றிக்கொண்டு, அவள் தந்த கைட் புத்தகத்தை வாசித்துப் பார்த்தேன். எங்கெல்லாம் போகலாம் என்று தேடிக் கொண்டிருந்த போது, அந்தப் புத்தகத்தில் ஓரிடத்தில் ட்ரெவி பவுண்டன் குட்டையில் காசை எறிவதற்கான காரணத்தைப் பற்றி வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

யூலியானா  சொன்னது போலவே ‘முதலாவது காசு உங்களைத் திரும்பவும் ரோமுக்கு வரச்செய்வதற்கான அதிஸ்டத்தைத் தரும்’ என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஆர்வம் காரணமாக இரண்டாவது காசை எறிந்தால் என்ன நடக்கும் என்பதை வாசித்துப் பார்த்தேன்.

‘இரண்டாவது காசை சரியாக எறிந்தால் ரோமில் உண்மையான காதல் உங்களுக்குக் கிடைக்கும்’ என்றிருந்தது.

‘மூன்றாவது காசைச் சரியாக எறிந்தால் ரோமில் வசிக்கும் அழகிய பெண்ணை (அல்லது ஆணை) திருமணம் செய்யும் அதிஸ்டம் உங்களுக்குக் கிடைக்கும்.’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் நம்பிக்கை, அத்தனை பேரும் ஏதோ ஒரு நம்பிக்கையில்தானே காசை எறிகிறார்கள், ஒரு நாளைக்குச் சராசரியாக  அதிலிருந்து 3000 த்திற்கும் மேலான ஈரோகாசுகள் கிடைப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். அவரவர் நம்பிக்கை பலித்ததோ இல்லையோ அந்தப் பணம் நல்லதொரு சமூகத் தொண்டுக்குப் பயன்படுவதாக குறிப்பிட்டிருந்தது மனதுக்கு மகிழ்வைக் கொடுத்தது.

பகல் முழுவதும் இடங்களைப் பார்ப்பதற்காக அலைந்து திரிந்ததால் களைத்துப் போயிருந்தேன். நேரமாற்றமும் காரணமாக இருக்கலாம், தூக்கம் வருவது போல இருந்தது. விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கலாம் என்று நினைத்தபோது, ஏதோ சத்தம் கேட்டுக் காதைக் கொடுத்துக் கேட்டேன்.

அறைக் கதவை யாரோ மெல்லத் தட்டும் சத்தம் கேட்டது. யாராயிருக்கும் இந்த நேரத்தில்இ ஹோட்டல் பணியாளராய் இருக்கலாம், ஆனால் நான் எதுவும் கொண்டுவரும்படி சொல்லவில்லையே என்று எண்ணியபடி கதவைத் திறந்தேன்.

வாசலில் ஆச்சரியம் காத்திருந்தது. ஹோட்டல் பணியாள் அல்ல, யூலியானா!

‘காலையில் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்து சென்றால்தான் பிஸா கோபுரத்தில் இருந்து சூரிய உதயத்தைப் பார்க்கலாம், நான் எப்படியோ சமாளித்துக் கொள்வேன், இங்கேயே தங்கட்டுமா?’ என்றவள் என்னைத் தள்ளாத குறையாக, கதவின் இடைவெளிக்குள் நழுவிக் கொண்டு உள்ளே வந்தாள்.

 நான் வாயடைத்துப்போய் நின்றேன்.

‘நாணயத்தை வீசிக் குட்டையில் எறியும் போது என்னையறியாமலே முன்னால் நின்று என்னைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த இவளைப் பற்றி அப்போது ஏதாவது நினைத்திருப்பேனோ’ என்று எனக்கே சந்தேகமாக இருந்தது.

அவள் சொன்னது போல, ‘நம்பிக்கைதானே வாழ்க்கை’ என்பதற்கு ஏதாவது அர்த்தம் இருக்குமோ?

Print Friendly, PDF & Email

1 thought on “குட்டையில் விழுந்த நாணயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *