“குமார் நான் உன்கிட்ட பர்சனலா பேசணும், காண்டீனுக்குப் போய் பேசலாம் இப்பவே வாயேன்.”
காண்டீன் சென்று கூப்பன் கொடுத்து இரண்டு கப் டீ வாங்கியதும் ஒதுக்குப் புறமான மேஜைக்குச் சென்று அமர்ந்தோம்.
தாமஸ் தொடர்ந்தான், “குமார் நானும் நீயும் அடுத்தடுத்த சீட்டில் கடந்த மூன்று வருடங்களாக வேலை செய்றோம். உன்னைவிட நான் வயதானவன், குடும்பஸ்தன் என்றாலும் நீ என்னை ஒரு நல்ல நண்பனாக ஏற்று என்னிடம் வெளிப்படையாக பழகுகிறாய். இப்ப உன்னால எனக்கு ஒரு பெரிய உதவி செய்ய முடியும், செய்வியா குமார்?”
என் கைகளைப் பற்றிக் கொண்டான்.
தாமஸின் இந்தப் பீடிகை எனக்குப் புதுமையாக இருந்தது. அவனின் வேண்டுகோள் மிகவும் பார்மலாகப் பட்டது.
“என்ன தாமஸ் பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் பேசற, என்னன்னு சொல்லு கண்டிப்பா செய்றேன்.”
“குமார் நீ எமல்டாவை தீவிரமாகக் காதலித்ததும், பிறகு உங்களிடையே தோன்றிய சில மனஸ்தாபங்களினால் அந்தக் காதல் முறிந்ததும் எனக்குத் தெரியும். நீயும் எமல்டாவும் காதலித்த இரண்டு வருடங்களில் நீங்கள் சுற்றிய இடங்கள், சென்ற பிக்னிக்குகள், பரிமாறிக்கொண்ட கடிதங்கள் அனைத்தையும் என்னிடம் நீ சொல்லியிருக்கிறாய்.”
“………”
“ஆனா இப்ப நிலைமையே வேற, நம் அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்திருக்கும் என்னுடைய அக்கா மகன் பீட்டரை எமல்டா வளைத்துப் போட்டிருக்கிறாள். அவர்கள் இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்… இதை பீட்டரே என்னிடம் சொன்னபோது என்னால தாங்க முடியல, அவனை கண்டபடி திட்டினேன்.
“உனக்கும் எமல்டாவுக்கும் இருந்த காதலை அவனிடம் எடுத்துச் சொன்னேன். பீட்டர் தன முடிவை மாற்றிக் கொள்ளவில்லையானால், அவனை வீட்டை விட்டுத் துரத்திவிடுவதாகவும் எச்சரித்திருக்கிறேன்.”
“சரி தாமஸ் இதுல நான் உனக்கு எந்த விதத்துல உதவ முடியும்?”
“நீ பீட்டரைப் பார்த்து அவன கன்வின்ஸ் பண்ணனும், என்னைப் பொறுத்தவரை இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது. எமல்டா ஒரு நல்ல பெண் அல்ல என்பது என் திடமான முடிவு. ஒருத்தனை இரண்டு வருடங்கள் காதலித்து அவனுடன் ஊரெல்லாம் சுற்றிவிட்டு, பிறகு அவனைப் பிரிந்த மூன்று மாதங்களில் அவ இன்னொருத்தனை காதலிச்சு திருமணமும் செய்து கொள்ளப் போகிறாள்னா, அவ எப்பேர்ப்பட்டவளா இருக்கணும்? அதுவும் இந்தக் கண்றாவி என் குடும்பத்துலதானா நடக்கணும்? ப்ளீஸ் குமார், இவங்க கல்யாணம் நடக்காம இருப்பதில்தான் என்னுடைய கெளரவமே அடங்கியிருக்கு… யூ நோ பீட்டரை நான் இந்தத் தோள்ல தூக்கி வளர்த்தேன்…”
உணர்ச்சி வசப்பட்டு தன தோளைத் தட்டிக் காண்பித்தான்.
என் மனது மிகவும் சங்கடப்பட்டது.
எமல்டா என் முன்னாள் காதலி. நல்லவள், நேர்மையானவள். இருப்பினும் எங்கள் காதல் முறிவதற்கு நான்தான் முழுக் காரணம் என்பது எனக்கும் எமல்டாவுக்கும் மட்டுமே தெரியும்.
தாமஸ் என் அலுவலக நண்பன் என்றாலும் எனக்கு அவனின் இந்தக் கோரிக்கை முற்றிலும் அநாகரீகமாகப் பட்டது.
“இத பாரு தாமஸ், கல்யாணத்துக்கு முன்னால காதலிக்கிறது, பிரியறது, பிரிஞ்சவங்க மறுபடியும் இன்னொருத்தர காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது இதெல்லாம் இப்ப ரொம்ப சகஜமானவைகள். மேலும் இதெல்லாம் அவங்கவங்க தனிப்பட்ட விஷயங்கள்… உன்னுடைய வேண்டுகோள் மிகவும் அநாகரீகமானது, ஐயாம் சாரி என்னால இதுபற்றி பீட்டரிடம் பேச முடியாது.”
“சரி குமார், நீ பீட்டரிடம் பேசவேண்டாம் அட்லீஸ்ட் எமல்டா உனக்கு எழுதிய காதல் கடிதங்கள் சிலவற்றையாவது என்னிடம் கொடு, அதைக் காண்பித்து பீட்டரிடம் பேசி அவன் மனசை மாற்ற முடியும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ப்ளீஸ்” என் தோள்களைப் பற்றினான்.
அவனின் ஸ்பரிசம் எனக்கு அருவருப்பாக இருந்தது. மெல்ல அவன் கைகளைத் தட்டிவிட்டு சொன்னேன். “தாமஸ் ப்ளீஸ் அன்டர்ஸ்டான்ட். நீ எனக்கு பக்கத்து ஸீட் என்பதால் உன்னிடம் எங்கள் காதலைப் பற்றி சொன்னேன். அவள் எழுதிய காதல் கடிதங்களை உன்னிடம் காண்பித்து அப்போது பெருமைப் பட்டுக்கொண்டேன். ஆனால் அதற்காக இப்போது மிகவும் வெட்கப் படுகிறேன். இனிமே நீ எமல்டா-பீட்டர் பற்றி என்னிடம் எதுவும் பேசாதே.” உறுதியாகச் சொல்லிவிட்டு காண்டீனிலிருந்து வெளியேறினேன்.
மறுநாள்.
தாமஸ் அலுவலகம் வரவில்லை. அவனது காலியான இருக்கையைப் பார்த்து என் மனது சிறிது சங்கடப்பட்டலும், நான் செய்தது சரிதான் என்பதில் உறுதியாக இருந்தேன்.
மாலை அலுவலகம் முடிந்து கிளம்ப எத்தனிக்கையில், பீட்டர் என் எதிரே வந்து நின்றான். புன்னகையுடன் சொன்னான், “சார் நான் எமல்டாவை மணப்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னுடைய மாமா தங்களுக்கும் எமல்டாவுக்கும் இருந்த காதலை கொச்சைப்படுத்தி, என் மனதை மாற்ற எவ்வளவோ முயற்ச்சித்தார்…
“அவள் உங்களுக்கு எழுதிய காதல் கடிதங்களை என்னிடம் காண்பித்து என் உறுதியை கலைப்பதாக சபதமிட்டார். நேற்று இரவு எங்கள் வீட்டில் என்னைத் திட்டியதோடல்லாமல், உங்களையும் அவர் வாய்க்கு வந்தபடி பேசியதிலிருந்து, அவரின் அநாகரீகமான வீராப்பு உங்களிடம் பலிக்கவில்லை என்பதை நான் தெரிந்து கொண்டதும் – தங்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகியது.. இன்பாக்ட் என் காதலை எமல்டாவிடம் நான் முதலில் வெளிப்படுத்தியபோதே அவள் உங்களைப் பற்றிச் சொன்னாள். எதையும் என்னிடம் அவள் மறைக்கவில்லை. எங்களிடையே பரஸ்பர அன்பும், நம்பிக்கையும் அதிகரித்து தற்போது எந்த எதிர்ப்பு வந்தாலும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம்” என்றான்.
சந்தோஷத்துடன் அவன் கைகளைக் குலுக்கி வாழ்த்துச் சொல்லியதும், “தாமஸ் ஏன் இன்றைக்கு அபீஸ் வரவில்லை?” என்று கேட்டேன்.
“எனக்குத் தெரியாது சார், நான் நேற்று இரவே மாமா வீட்டிலிருந்து வெளியேறி விட்டேன்” என்றான் அதே புன்னகையுடன்.
என்னை மாதிரி அவன் எமல்டாவை பொழுது போக்கிற்காக காதலிக்கவில்லை. மன ஆரோக்கியமும் நேர்மையுள்ளவர்களும் காதலிப்பது திருமணத்தின் பொருட்டுதான் என்பதை நான் பீட்டர் மூலமாக உணர்ந்து கொண்டேன். .