காதல் டைரியின் சில பக்கங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,509 
 
 

ஜனவரி 1, 1990

புது வருட வாழ்த்துக்களை நண்பர்கள் நாங்கள் எங்களுக்குள் பரிமாறிக்கொண்டோம்.

தொழில் நிமித்தமாக ஊர் ஊராக அலைந்து திரிந்த எனக்கு, ‘நாய்போல நிற்க நேரம் இல்லாமல் அலைகிறானே’ என்று பெருந்துறையில் ஜெராக்ஸ் கடை வைத்துக்கொடுத்தார் அப்பா. அது ஒரு வருடமாக நட்டம் ஏதும் இல்லாமல், வாடகைக்கும் கரன்ட் பில்லுக்கும், இரண்டு வயிறு நான்கு வேளை நிரம்பும் அளவுக்கு மட்டும் சம்பாதித்துக்கொடுத்தது. கூடவே, இப்போது பள்ளிப் பாட நோட்டுக்கள், பேனாக்கள் என்று அயிட்டங்களைக் கடைக்குள் சேர்த்துக்கொண்ட பிறகு, தேவலை என்கிற நிலைக்கு அம்மன் ஜெராக்ஸ் வந்துவிட்டது. குறைந்த சம்பளத்துக்கு சீனாபுரத்தில் இருந்து சொந்தக்காரப் பெண் ஒருத்தி வந்து போகிறாள். புது வருட வாழ்த்துக்களை எனக்குத் தெரிவித்த நண்பர்கள், எங்கள் உள்ளூர் நண்பர்கள்தான். கூடவே, வயது 26 ஆகிவிட்டது. ஜெராக்ஸ் கடையின் எஜமான் வேறு. ஒரு காதலிகூட இல்லாமல் எப்படி உனக்கு வாழ்க்கை ஓடுகிறது? இதோ கந்தசாமி இருக்கானே… ஒரு வேலை வெட்டியும் இல்லை என்றாலும் காலையில், மாலையில் காதல் செய்கிறானே! என்று பேசி என்னை உசுப்பேற்றிவிட்டார்கள். பின்னர்தான் எனக்கும் மனதில் யோசனைகள் ஓடின. ஆம், காதலித்தால்தான் என்ன?!

ஜனவரி 15

நண்பர்கள் தூண்டிவிட்ட அந்தத் திரி விளக்கு ஓயாமல் எரிந்துகொண்டேதான் இருந்தது. காதலிக்க ஒரு பெண் வேண்டும் என்றதும், எனது டி.வி.எஸ்ஸை ஜெராக்ஸ் கடையினுள்ளே விட்டுவிட்டு பேருந்து ஏறிக்கொண்டேன். ஈங்கூருக்கும் பெருந்துறைக்கும் ஒன்பது கிலோ மீட்டர்தான். டி.வி.எஸ் இல்லாமல் வீடு வரும் என்னை அப்பாவும் அம்மாவும் ஏன் என்றுகூட கேட்டுக்கொள்ளவில்லை.

காதலி வேண்டும் என்று பேருந்து ஏறியதால், பேருந்தில் யாரைப் பார்த்தாலும் காதலிக்கத் தோன்றியது. பெண்கள் எல்லோருமே எல்லா விதத்திலும் அழகோ அழகு. இன்று பச்சை வண்ண தாவணிப் பெண் நான் உற்றுப் பார்ப்பது கண்டு புன்னகைத்தாள். எனக்கோ நடுக்கமாகிவிட்டது. அவள் தன் பார்வையை என்னைவிட்டுத் திருப்பவே இல்லை. குழப்பமாகி விட்டது. எச்சரிக்கையாக முகத்தை ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டேன்.

பிப்ரவரி 3

பிரமித்தேன். அதை என்னால் அப்படித்தான் சொல்ல முடிகிறது. என் காதல் தேவதையைப் பார்த்துவிட்டேன் என்பதை நண்பர்களிடம் சொல்வதற்குக் கூச்சமாக இருந்தது. இதை நான் அவர்களிடம் சொல்லப்போவது இல்லை. என் காதலை நானே பார்த்துக்கொள்கிறேன். இதன் வெற்றி- தோல்வி எல்லாமே நானே சமாளித்துக்கொள்கிறேன். அவர்கள் எங்கே உன் காதலியைக் காட்டு என்பார்கள். கண் போடுவார்கள். அவளுக்கு உடம்புக்கு முடியாமல் போய்விடும்.

இந்தப் பேருந்து நான் வழக்கமாக காலையில் ஏறிப் பெருந்துறை செல்லும் பேருந்து அல்ல. அதைக் காட்டிலும் ஒரு மணி நேரம் முன்பாக 7.30-க்கு சென்னிமலையில் இருந்து வருகிறது. அவசர வேலை என்று நான் நேரத்தில் புறப்பட்டது நல்லதாகிவிட்டது. பார்த்த முதல் பார்வையிலேயே என் மனதைக் கொள்ளையடித்துவிட்டாள். இன்று முழுதும் அவள் ஞாபகம்தான். இனிமேலும்தான்.

பிப்ரவரி 20

இன்று அவளுடன் காகத்தின் வண்ணத்தில் ஒரு கலகலப்பான பெண் இருந்தாள். ஒரு மாதம் நோயில் படுக்கையில்கிடந்து வந்தவள்போல தீக்குச்சி சைஸில் இருந்தாள். எப்போதும் பிரட் சாப்பிட்டது போன்றே வரும் என் தேவதை இன்று அவளுடன் கதைத்துக்கொண்டே வந்தாள். என் தேவதை இன்று வயலெட் வண்ண சேலை அணிந்திருந்தாள். தாங்க முடியாமல் முன் ஸீட்டுக்கு ஓடிப் போய் அவள் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளலாம்போல கொள்ளை அழகாக இருந்தாள். நிஜமாகவே சொல்லிச் செய்த பீஸ். பெருந்துறை நிறுத்தத்தில் இறங்கி அவர்கள் மேடு ஏறி மேற்கே சாலையைக் கடந்து கோயிலுக்குச் சென்றார்கள். சாமி இல்லை லொல்லை என்று பேசும் நண்பர்களைப் பெற்றிருந்த நான், கோயில் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டு நடையைக் கட்டினேன்.

இந்தப் பெண் என்னைத் திடீரென ஒரு வாட்டியாவது கவனிக்கிறதா என்றால் இல்லை. இவள் முகம் என் புறமாக எதேச்சையாகவாவது திரும்புமா என்று காத்திருப்பதே எனக்குத் தவமாகிவிட்டது. இந்தப் பேருந்து கண் மூடி விழிக்கும் முன்பாகப் பெருந்துறை வந்துவிடுகிறது. ஏதாவது முகூர்த்த நாள் என்றால் தாமதமாகிறது என்றாலும், கண்மணியைக் கூட்டத்தின் நெரிசலில் பார்க்கவே முடியாது.

பிப்ரவரி 25

என் தேவதையின் குரலைக் கேட்டுவிடலாம் என்றுதான் அந்த இருவரின் பின்னால் கோயிலுக்குச் சென்றேன். கோயிலுக்கு என்றால், எல்லோரையும் காப்பாற்று சாமி என்று வேண்டிக்கொண்டு கும்பிடுவதற்கு அல்ல. கோயில் காம்பவுண்டினுள் இருக்கும் பெரிய அரச மரத்துத் திண்டில் ஏறி அமர்ந்துவிட்டேன். என்னை நினைத்தால் எனக்கே வேடிக்கையாக இருக்கிறது. ஊரும் பேரும் தெரியாத ஒரு வடிவான பெண் சாமி கும்பிட்டுவிட்டு வருவதற்காகக் காத்திருக்கிறேன்.

காதல், மனதின் தூய்மையை அழித்து பைத்தியக் குழியில் தள்ளிவிடும் என்பது என் விஷயத்தில் சரிதான். அவர்கள் இருவரும் கோயிலைவிட்டுப் படிகளில் இறங்கி வந்து தங்கள் மிதியடிகளைப் போட்டுக்கொண்டார்கள். இதையும் சொல்ல வேண்டும். என் தேவதை புதிய மிதியடி அணிந்து வந்திருந்தாள். குதி அருகில் வார் வைத்த மிதியடி, அப்புறம் இன்று பச்சை வண்ணத்தில் சேலை. பச்சை வண்ணம் என் தேவதைக்குக் கணக்காக இல்லை. பின்னாளில் இந்த சேலையைக் கட்டாதே கண்மணி என்று கூற வேண்டும். அவர்கள் ஏதோ ஒரு சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கிப் பேசிக்கொண்டு வந்தார்கள். நான் திண்டில் இருந்து குதித்து இறங்கி “என்னங்க…” என்றேன்.

உலகத்தில் காதலிப்பவர்கள் ஆரம்பிக்கும் முதல் கேள்வியைக் கேட்டேன். “மணி என்னங்க?” காக்கா கலரில் இருந்தவள்தான் “எட்டே கால்” என்று பதில் சொன்னாள். அவளுக்கு ஏனோ நன்றி சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை.

மார்ச் 10

எனது நாட்குறிப்பேட்டின் பக்கங்கள் வெற்றுப் பக்கங்களாகவே கழிகின்றன. என் தேவதையும் காக்காவும் குன்னத்தூர் செல்லும் சாலையில் பெரிய மெடிக்கல் கடை ஒன்றில் பணியில் இருந்தார்கள். தலைவலி என்று போய் நின்றேன். காக்காதான் முன் வந்து, “டாக்டர் எழுதிக்கொடுத்த காகிதம் எங்கே?” என்றாள். டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து தர மாட்டார்களாம். “சரி, பெட்டிக் கடையில் போய் அனாசின் வாங்கிக்கொள்கிறேன். அங்கும் டாக்டரின் பரிந்துரைக் காகிதம் கேட்பார்களா?” என்றேன் காக்காவிடம். அவளோ, “எனக்குத் தெரியாது” என்றாள்.

இனி எப்போதும் என் தேவதை பணிபுரியும் கடைக்குள் டாக்டர் சீட்டு இல்லாமல் போக முடியாது. என் தேவதையின் குரல் இனிமையைக் கேட்க முடியாது. தொலைகிறது. ஏதோ என் தேவதையைக் கண்ணால் காண்பதற்காவது ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்களே! அவளும் என்னை மாதிரி நாட்குறிப்பு எழுதி, என்னைப்பற்றி அதில் தீட்டிக்கொண்டு இருந்தால்? ஹா… நினைக்கையிலேயே என்னமாய் இனிக்கிறது. கொடுப்பினை வேண்டும் சாமியோவ் அதற்கெல்லாம்!

மார்ச் 20

இன்று எனக்குத் துக்க நாளா? சந்தோஷ நாளா? என்று தெரியவில்லை. ஆனாலும் மிக முக்கியமான நாள்தான். வழக்கம்போல அவர்கள் கோயில் படிகளை விட்டு இறங்கி புதிதாகத் தென்பட்ட பிச்சைக்காரிக்கு ஆளுக்கு எட்டணா போட்டுவிட்டு வருகையில், நான் திண்டில் இருந்து குதித்து இறங்கினேன். என்னை அவர்கள் கடந்து போகும் சமயம் பார்த்து, “எப்படியோ கோயிலுக்கு வராதவனையே வரவெச்சுட்டீங்க” என்றேன். என் தேவதை ஷாக் அடித்ததுபோல அப்படியே நின்றுவிட்டாள். விடுவேனா? “என்ன வரம் கேட்கறீங்க தினமும் சாமிகிட்டே?” என்றேன்.

முந்திரிக்கொட்டை கணக்காக காக்காதான் “சொல்லியே ஆகணுமா?” என்றாள்.

“உங்ககிட்டே நான் கேட்கலைங்க மேடம். நீங்க விருப்பம் இருந்தா சொல்லுங்க தேவதை. நல்ல வீட்டுக்காரர் அமையணும்னு நீங்க வேண்டுதல் வெச்சிருந்தீங்கன்னா… அது நான்தான்!” என்று சொல்லிவிட்டு, மீண்டும் திண்டுக்கே திரும்பிவிட்டேன்.

தேவதை பதில் சொல்லாமல் நகர்ந்தாள். காக்கா ஏதோ தேவதையிடம் பேசிக்கொண்டு சென்றாள். இருடி உனக்கு வெச்சிருக்கேன். முதல்ல என் தேவதையை என் பக்கம் காந்தம் வெச்சு இழுத்துட்டு, முதல் வேலையா உன் தோழித்தனத்தை வெட்டிவிடச் சொல்றேன்!

மார்ச் 29

தோழிகளால், தோழர்களால் சிலர் வெற்றி பெறுவார்கள். சிலர் பாதாளம் வரை போய்விடுவார்கள். என் கோவை நண்பன் வெற்றிவேலுக்கு இப்படித்தான் தோழி வடிவில் ஒரு சாத்தானின் பெண் பால். நான் மெடிக்கல் ரெப்பாக ஊர் ஊராகச் சுற்றியவன். அந்த வழியில் வெற்றிவேலும் ஒரு ரெப். வெற்றிவேல் காதலித்த பெண்ணிடம் கடைசி வரை பேசவே முடியவில்லையாம். தோழியே பேசினாளாம். கடைசியில் தோழியே இவனிடம், அவள்தான் அழகா? ஏன் என்னைப் பிடிக்கலையா? என்று கேட்டு நண்பனைத் தன் முந்தானையில் முடிந்துகொண்டாளாம். இப்போது அவர்களுக்கு ஒரு குட்டிப் பாப்பா. சண்டை என்று இவர்களுக்குள் வந்துவிட்டால், “நீ அவளைத்தான் ஜொள்ளு ஊத்திட்டுப் பார்க்க வந்தே, என்னையாடா பார்க்க வந்தே!” என்கிறாளாம். இதே கதை பாரத் என்கிற எனக்கும் நடந்துவிடக் கூடாது அல்லவா!

இதற்காக காக்கா என் முழு நேர எதிரி என்றெல்லாம் நினைக்கவில்லை. பெண்களை என்றுமே மனதால் எதிரியாகப் பாவிக்க மாட்டேன். பெண்கள் வீட்டின், நாட்டின் கண்கள்.

இன்று கோயிலில் அமாவாசை என்பதால் கூட்டம் அதிகம். உள்ளே சென்ற பிரியத்துக்கு உரியவளை வெகு நேரமாகக் காணவில்லை. ஒரு வாரத்துக்கும் சேர்த்து இன்றே சாமியிடம் வேண்டுகிறாளோ என்னவோ?! அதைத்தான் அவர்கள் வருகையில் கேட்டேன் மிகத் தெளிவாக. “என்ன, ஒரு வாரத்துக்கும் சேர்த்து இன்னிக்கே வேண்டுதலா?”

தேவதை என்னைப் பார்த்து, “லேட் ஆனாலும் தேவைன்னா காத்திருந்துதான ஆகணும்” என்றாள். இதென்ன இப்படி சொல்லிப்போட்டா?

“தேவைங்கிறதாலதான் காத்திருந்தேன். ஆனா, அல்லக்கை சொல்லிக் கொடுத்து எதையும் பேசாதீங்க, நீங்களாப் பேசுங்க” என்றேன்.

“தெரியுதுல்ல… வாடி டைம் ஆச்சு. இங்க நின்னுட்டு வெட்டிப் பேச்சு எதுக்கு?” என்று காக்கா என் தேவதையை இழுத்துப் போய்விட்டாள். காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வான்னா, சூட்டுக் கோலைக் கொண்டுவருதே!

ஏப்ரல் 4

பேருந்தில் எனக்கு இப்போது எந்த இடைஞ்சலும் இல்லை. நடத்துநர்கள் இருவரும் நெருக்கமாகிவிட்டார்கள். இரவு நேரத்தில் என் ஜெராக்ஸ் கடையை இழுத்துப் பூட்ட இரவு 9 மணி ஆகும். தேவதையும் காக்காவும் டாண் என்று 8 மணிக்கு மெடிக்கல் கடை யைவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். 8 மணிக்கு நான் கடையைப் பூட்ட முடியாது. ஞாயிறு விடு முறை என்ற பலகையை என் கடையில் இருந்து எடுத்துவிட்டேன். தேவதைக்கு விடுமுறையே இல்லை என்பதால், எனக்கும் இல்லை. வீட்டுக் காரி பணி செய்துகிடக்கையில் வீட்டுக்காரன் சும்மா இருந்தால் உலகம் என்ன சொல்லும்!

அப்படியான இந்த நாளில் காக்காவைத் தேவதையுடன் காணவில்லை. 8 மணிக்கு நானும் டாண் என்று ஷட்டரைச் சாத்திவிட்டேன். பஸ் நிறுத்தம் இரைச்சலாக இருந்தது. என் தேவதை யின் வரவை எதிர்பார்த்து நின்றிருந்தேன். இன்று எப்படியாயினும் அவள் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும். தோழியின் துணை இன்றித் தேடும் விழிகளோடு வந்தவள் என்னைக் கண்டதும் அமைதியாகி, என் அருகிலேயே நின்றுகொண்டாள். நான் எச்சிலை விழுங்கிக்கொண்டேன்.

“உங்க பெயரைச் சொல்லுங்களேன்?” என்றேன். அவளுக்கு மட்டுமே கேட்கும்விதமாக, “யோசனை பண்ணித்தான் சொல்லணும்… ம்… மாலதி” என்றாள். அவள் குரலும் யாருக்கும் கேட்டிருக்காதுதான். என் வலது பக்கச் செவிக்குள் மட்டும் நுழைக்கப்பட்ட குரல்.

“நல்ல பேருன்னு சொல்வேன்னு நினைக்க£தீங்க. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்” என்றேன்.

“பேர்ல என்ன இருக்கு? சுப்பாத்தாள்னுகூட வெச்சுக்கோங்க…” என்றாள்.

“ஓ… அப்படி வர்றீங்களா? ரொம்ப நன்றிங்க” என்றவன் அமைதியாகிவிட்டேன். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளுமாம். ஏனோ தேவதை ஸாரி, சுப்பாத்தாள் ஏறிய பேருந்தில் ஏற மனமே வரவில்லை. இந்தப் பெண்ணை மடக்கி, என் இடுப்பில் தூக்கி இடுக்கிக்கொள்ளாவிட்டால் இந்தப் பிறப்பே வீண்!

ஏப்ரல் 20

மாலதி என்று பொய்யாகப் பெயர் சொன்னவள் மீது எனக்குக் கோபம் எதுவும் இல்லை. சுப்பாத்தாள் என்றுகூட வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டாள். ஆனால், ஏன் அப்படிச் சொன்னாள் என்றுதான் புரியவே இல்லை. ஒரு வார காலம் அவர்கள் பின்னால் கோயில் செல்வதை விட்டொழித்தேன். மீண்டும் சென்றபோது ‘ரொம்ப அலையுதே’ என்று தேவதை வாயடிக்க ஆரம்பித்தாள். அதுவும் காக்காவிடம் பேசுவதுபோலப் பேசிக் குத்தினாள். ஐயோடா!

“சுப்பாத்தா, ரொம்பப் பிடிச்சதெல்லாம் ரொம்ப அலையவைக் கத்தான் செய்யும். நெனைச்ச உடனே கிடைச்சுட்டா… எந்த அழகான பொருளுக்கும் மதிப்பே இல்லை” என்றேன்.

“ஓ! சுப்பாத்தாள்னு பேரு வெச்சுட்டீங்களா?” என்று காக்கா பேசினாள்.

“ஏன்டி, அடுத்தவங்களுக்குத் தானம் பண்ணினால் மனசுல நினைச்சது நடக்குமாம்ல… என்னை ஒரு பைத்தியம் சுத்திட்டு இருக்குது. அது இனி வரக் கூடாது” என்று ஒரு ரூபாய் காயின் ஒன்றை தேவதை அந்தப் பிச்சைக்காரியின் தட்டில் போட்டாள்.

“நீங்க நினைச்சது நடக்கும்ங்க” என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டேன். எனக்கு இதெல்லாம் தேவையா? முதலில் இதற்குக் காரணமான நண்பர்களைக் கும் மாங்குத்து போட வேண்டும். ஐயகோ!

மே 20

நான் பேருந்தை மாற்றிக்கொண்டேன். எனக்குக் காதல் சகவாசம் வேண்டாம். என்னதான் பேருந்து மாறிவிட்டாலும் மனம் மட்டும் அவள் வரும் பேருந்திலேயேதான் வந்தது. இரண்டு முறை நிறுத்தத்தில் அவளைப் பார்த்ததும் பாராததுபோல நழுவினேன். எப்படியாயினும் இந்தப் பாழும் மனது அவளையே நினைக்கிறது. பின்னால் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். நானும் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். புத்தகம் மூடப்பட்டுவிட்டது. இனி விரித்துப் படிக்க அதில் ஒன்றும் இல்லை.

ஜூன் 2

இனி முடியாது! என் இதயம் சுக்குநூறாக சிதறிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு முறை. ஆமாம் இன்னொரு முறை! அவள் என்னைப் பழித்தாலும் சரி. இந்த வேதனை தீர வேண்டும். நேராகவே அவளிடம் சொல்லிவிடலாம். என்னால் முடியலடி என்று. இதில் தவறேதும் இல்லை.

அப்படித்தான் முடிவில் ஞாயிறு இரவு 8 மணிக்கு நிறுத்தத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தேன். இருவரும்தான் வந்தார்கள். நான் ஒரு பைத்தியம் என்பதால், வேறு இடம் போய் நிற்பார்கள். அப்படிப் போனாலும் தேடிப்போய் பேசிவிட வேண்டியதுதான். ஆனால், அவர்கள் வேறு இடம் போகாமல் என் அருகிலேயே வந்து நெருக்கமாக நின்றார்கள்.

“ரொம்பக் கோபமா?” என்றாள் காக்கா.

“இல்லீங்க சந்தோஷம்தான்” என்றேன்.

“அவ வேணும்னே பிச்சைக்காரிகிட்டே அன்னிக்குப் பேசலைங்க… சும்மா விளையாட்டுக்குத்தான் பேசினா. நீங்களும் கோவமா இனிமேல் வரலைன்னுட்டுப் போயிட்டீங்க. ரொம்ப இதா ஆயிட்டா. பஸ்லயும் வர்றதில்லே… எங்க வேலைல இருக்கீங்கன்னும் தெரியலை. ஒரு ஸாரி கேட்கக்கூட முடியலையேடின்னு அழறா, ரொம்ப ஸாரிங்க” என்று காக்கா நிதானமாக பேசப் பேச, எனக்கே பிடித்துப்போனது. காக்கா நல்ல நல்ல அண்டங்காக்கா. அப்படியே என் இதயத்தை மயிலிறகால் தடவுகிறது.

“முதல் முறையா உங்க ஃப்ரெண்டைப் பார்த்தப்ப இருந்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் இப்படிஎல்லாம் யார் பின்னாடியும் போனதே இல்லே. எனக்குப் பிடிச்சதனால வந்தேன். ஆனா, உங்க தோழி தமாஷ் பண்ணினதா இப்போ சொல்றீங்க. நான் உங்க பின்னாடி வந்து உங்களைச் சிரமப்படுத்திட்டேன். அதுக்காக என்னை மன்னிச்சுடுங்க. என்னோட ஆசை, என்னோட காதல், என்னோட வேதனை, என்னோடவே போகட்டும்” என்றேன்.

“நான்தான் விளையாட்டுப் புத்தியில பண்ணிட்டேன். மன்னிச்சுடுங்கன்னு கேட்கிறேன். மறந்து டுங்களேன் அதை?”- இந்த முறை தேவதை விழிகளில் ஈரமாகப் பேசினாள்.

என்ன நடக்கிறது இந்த இடத்தில்? நான் சென்று மன்னிப்பு கேட்பது போய் அவள் கேட்கிறாள். சுக்கிரன் உச்சத்தில் நின்று எனக்காகப் பேசுகிறானோ?!

இத்தனை நாள் உள்ளுக்குள் துன்பத்தைவைத்திருந்த மனது நொடியில் அதைத் தூக்கி வீசிவிட்டது. தேவதை மீண்டும் ஸ்திரமாக மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டாள்.

“நான் உங்களை விரும்புறேன்” என்றாள்.

“உங்க அப்பா – அம்மா வெச்ச பேரு சொல்லுங்க?” என்றேன்.

“பிருந்தா” என்றாள்.

“என் பெயரை உங்க கற்பனைக்குத் தகுந்தாப்ல முனுசாமின்னு வெச்சுட்டுக் கிள்ளிக்கோங்க… கனவு காணுங்க” என்றேன்.

“பழிக்குப் பழியா… என்னால தாங்கிக்க முடியாதுங்க முனுசாமி, ப்ளீஸ்” என்றாள்.

“எனக்கும் இதே மாதிரிதானே இருந்திருக்கும்” என்று சொல்லி அமைதியானேன். பிருந்தாவும் அமைதியாகிவிட்டாள். அன்பை அனுபவித்தால் அழுகை வருமாம். வரும்போல் இருந்தது.

ஜூன் 12

கோயிலின் முன்பாக அமர்ந்திருந்த பிச்சைக்காரி முன் நின்றேன். இப்போதெல்லாம் பிருந்தாவின் பின்னால் நான் செல்வது இல்லை. அவள்தான் என் பின்னால். சக்கரம் கீழே இருந்து மேல் ஏறிவிட்டது. மேலே இருந்து கீழே வரட்டும். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

“என்னை ஒரு பைத்தியம் சுத்துது… அது என் பின்னாடி வரக் கூடாதுன்னு நீங்க சொன்ன மாதிரி சொல்லி ஒரு ரூபா போடுவேன்னு பார்க்கறீங்களா?” என்றேன்.

“எங்கே சொல்லிப்பாருங்க… என்ன நடக்கும்னு அப்புறம்தான தெரியும்” என்றாள் பிருந்தா.

நான் ரூபாயை பிச்சைக்காரியின் தட்டில் போட்டேன். “அம்மா… என்னை ஒரு பைத்தி…” பிருந்தா என் வாயைப் பொத்தினாள் அவள் கைகளால்! என் நெஞ்சில் இரண்டு மூன்று குத்துகள்விட்டாள். அவள் கண்கள் வேறு ஈரமாகிவிட்டதால் அவளைக் கட்டிக் கொள்ளலாம் என்றால் பொது இடமாகப் போய் விட்டது. “என் பெயர் பாரத்” என்றேன்.

“போடா முனுசாமி” என்றவள், இன்னும் இரண்டு குத்துவிட்டாள்.

“காக்காவக் காணோமே” என்றேன்.

“காக்காவா?” என்று கேட்டு விழித்தவளுக்கு விளக்கம் சொன்னதும் சிரித்தாள், வெண் பற்கள் பளீரிட!

‘எதுக்குடி அநியாயத்துக்கு இத்தனை அழகா சிரிக்கிற? என் கண்ணே பட்டுடும்போல இருக்கேடி’ என்று மனதில் நினைத்துச் சிரித்தேன்.’

“எதுக்குடா நீயா சிரிச்சுக்குறே… சொல்லிட்டுச் சிரிடா” என்றாள் பிருந்தா!

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *