காதல் சுமையானது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 9,697 
 
 

“ஏன்பா ….. தவமணி . தினம் ரெண்டு மைல் சைக்கிள் மிதித்து பாலக்கரை போய் பஸ் பிடித்து காலேஜ் போக வேண்டியிருக்கே. மழை காலம்னா கஷ்டமா இருக்கு. பேசாம காலேஜ் ஹாஸ்டல் இல்லனா டவுன்ல ரூம் எடுத்து தங்கி படிக்கிறாயா. காசு பணத்தை யோசிக்காதே” என்றார் தவமணியின் அப்பா.

“வேணாம்பா. நான் தினமும் போய் வருகிறேன். உங்க எல்லோருடனும் சேர்ந்து இருக்கலாம். படிப்பு முடிந்து வேலை எங்கே கிடைக்குமோ , அப்போ உங்களை விட்டு பிரிந்துதானே இருக்க வேண்டும். அப்போ பார்க்கலாம்” என்ற படியே கல்லூரிக்கு கிளம்பினான் தவமணி..

காவேரிக்கரையில் அமைந்த அழகான பசுமையான சிறிய கிராமம் அது. ஒரு ஆரம்ப பள்ளி, மேல்நிலைப்பள்ளி, சுகாதார மையம், பொது நூலகம் என்று சில வசதிகளை மட்டுமே கொண்ட ஊர்தான். கிராமத்து மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு நகரத்து கல்லூரியில் சேர்ந்து தினமும் பேருந்தில் சென்று வந்தனர். தினமும் காலை 8 மணி பேருந்து மாணவ, மாணவிகளால் நிரம்பி வழியும்.

அந்த கிராமத்தில் சொந்த நிலத்திலும், குத்தகைக்கு நிலங்களிலும் விவசாயம் செய்து வரும் ஒரு விவசாயியின் மகன்தான் தவமணி. ஓரளவு வசதியான குடும்பம்தான் என்றாலும் பெரிய குடும்பம். குடும்பத்தின் முதல் பட்டதாரி, நம்பிக்கை நட்சத்திரம் தவமணிதான். அமைதியானவன். பண்புள்ளவன். புத்திசாலி குடும்ப பாசம் மிகுந்தவன். பெயருக்கேற்றார் போல் இவனை பெற அவன் பெற்றோர்கள் தவம்தான் செய்திருக்க வேண்டும். முதுகலை படிப்பில் உள்ளவன் வேலைக்காக பல்வேறு அரசு தேர்வுகளும் எழுதி வருகிறான்.

அதே ஊரில் வசதி மிகுந்த பெரிய பண்ணையாரின் கடைக்குட்டி செல்லப் பெண் பாரதி. கௌரவத்திற்காகவே அவள் தகப்பனார் அவளை கல்லூரிக்கு அனுப்பி வருகிறார். ஆனால் ஓரளவு மட்டுமே படித்துள்ள அண்ணன், அக்காக்களுக்கு மத்தியில் உண்மையிலே படிப்பில் நாட்டம் கொண்டு கல்லூரியில் இளங்கலை பயின்று வருபவள். அழகானவள். அன்பானவள்.

பேருந்தில் வரும் எல்லா மாணவர்களும் எல்லா வகையிலும் நட்பாகவே பழகி வந்தனர். தவமணி சக மாணவர்களிடம் நட்பு, அவ்வப்போது அறிவுரை என்று ஒரு தலைவனாகவே விளங்கினான். சில விடுமுறை நாட்களில் பாரதிக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் கூறி புரிய வைப்பான். தவமணியின் கண்ணியம், அவனது அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத நடவடிக்கைகள், புத்திசாலித்தனம், ஆளுமை இவற்றால் கவரப்பட்ட பாரதி ஒருநாள் அவனிடம் தனது காதலை கூறினாள்.

சிறிது நேரம் தவமணியிடம் இருந்து பதிலே இல்லை. மௌனம் மட்டுமே …….

“நானாக வந்து சொன்னதால் என்னை தப்பாக நினைக்கிறீர்களா ? பதிலே சொல்லாமல் யோசிக்கிறீங்க? காதலிப்பது குற்றமா? அல்லது காதலை உங்களிடம் சொன்னதும், எதிர்பார்த்ததும் குற்றமா?” ?” என்றாள் பாரதி.

“உன்னை குற்றம் சொல்ல எனக்கு உரிமை இல்லை ; அந்த உரிமைக்கு நான் ஆசைப்படவும் இல்லை . உன் காதலுக்கு என்னை தேர்ந்தெடுத்தது ஒத்து வராது. எனக்கு காதல் மீது நாட்டமோ, அதற்கு நேரமோ இல்லை. என் எண்ணமெல்லாம் என் குடும்பம் மட்டும்தான். இப்பவும் என்னுடைய நிலைப்பாட்டை உனக்கு புரிய வைக்கத்தான் முயற்சி செய்கிறேன்.”

“என்னை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து என்மேல் அன்பை சுமந்து இருக்கும் என் அன்னை, தன் உழைப்பையெல்லாம் என் வாழ்வுக்கு உரமாக்கி, என்மேல் நம்பிக்கையை சுமந்து இருக்கும்

என் தந்தை, பல கனவுகளை சுமந்து கொண்டு என்மேல் பாசம் வைத்து காத்திருக்கும் என் இளையவர்கள். அவர்கள்தான் எனக்கு முக்கியம். அதற்கு பிறகுதான் நான் என்னைப்பற்றி யோசிப்பேன்.”

“நான் கூட உங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுத்து காதலை சுமந்து காத்திருக்கிறேன். அது உங்களுக்கு புரியவில்லையா ?”

“ஆனால் உன் குடும்பத்தில் உள்ளவர்கள் ஜாதி, மதம், அந்தஸ்து, அதிகாரம், கெளரவம் இவற்றையெல்லாம் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். அதை நீ முதலில் புரிந்து கொள்”.

“ஏழைக் குடும்பத்தில் மூத்த பிள்ளைக்கு, தகப்பனுக்கு பொறுப்புகளில் கை கொடுக்கும் பெரிய கடமை இருக்கிறது. இளையவர்களின் வளமான வாழ்விற்காக இவன் நிறைய தியாகங்கள் செய்தாக வேண்டும். அவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும்”

“அதே போல பணக்கார குடும்பத்தில் கடைசி பிள்ளையாக பிறந்தால் முன்னே இருப்பவர்களின் கட்டுப்பாட்டிற்க்குள் அவனது வாழ்க்கை. அவர்கள் கட்டளைப்படியே வாழ்ந்தாக வேண்டும்.

விதி வசத்தால் நாம் அப்படிப்பட்ட குடும்பங்களில்தான் பிறந்துள்ளோம்.”

“உன் விருப்பத்தை உங்க வீட்டில சொல்லி சம்மதம் வாங்க உன்னால் முடியுமா ? அவர்கள் ஓத்துக்கொள்ள மாட்டார்கள். உன்னை பெற்றவர்கள், உன் மேல் அன்பை பொழியும் உன் சகோதர சகோதரிகள் இவர்கள் நம்பிக்கையை, எண்ணத்தை நீ பொய்யாக்க கூடாது. உன் விருப்பம் உன் வாழ்க்கை என்று சுய நலமாய் யோசிப்பதை விட்டு இரு வேறு குடும்பங்களின் வாழ்க்கை என்று யோசித்துப்பார். உனக்கு புரியும்.”

“நான் உங்களிடம் பேசி விட்டு என் வீட்டில் சொல்லி சம்மதம் வாங்க நினைத்திருக்கிறேன் . என் வீட்டில நிச்சயம் என் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். இதுவரை என் விருப்பங்கள் மறுக்கப்பட்டதில்லை “என்றாள் பாரதி.

“உணவு, உடை , படிப்பு என்று உன் விருப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால் இது வாழ்க்கையம்மா” என்று சிரித்தான் தவமணி.

என் வீட்டினரை சொல்கிறீர்களே ? உங்க வீட்டில் எப்படி ?

“என் விருப்பம் என்றால் என் வீட்டில் ஒத்துக்கொள்வார்கள். உன்னை நான் ஏற்றுக்கொண்டால் பல விதங்களிலும் பாதிப்படைவது என் குடும்பம்தான். என் பொருட்டு அவர்கள் கஷ்டப்படுவதை நான் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன். இது என் சுயநலம் என்று வேண்டுமானாலும் நீ நினைக்கலாம்.

இவர்களையெல்ல்லாம் மீறி நாம் திருமணம் செய்து கொண்டால் நம் இரு ஜாதியிடையே சண்டை, சச்சரவு, கொலை, வன்மம் என்று நீண்டு கொண்டே போகும். எனது வாழ்க்கை பல பேர்களுக்கிடையே பேசும் பொருளாகவோ, விமர்சனங்களுக்கோ, விவாதங்களுக்கோ, வழக்காகவோ ஆளாவதை நான் விரும்பவில்லை . வாழ்க்கை முழுவதும் தலைக்கு மேலே கத்தி இருக்கும் அச்சத்துடன் நாம் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும். நடைமுறை வாழ்க்கையை ஏற்று உன் வழியில் நீயும் என் வழியில் நானும் செல்வதுதான் எல்லோருக்குமே நல்லது. உன் காதலை ஏற்றுக்கொண்டு பிரதிபலிக்கும் நிலைமையில் நான் இல்லை. உன் எண்ணத்தை மாற்றிக்கொள். இன்றுடன் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடு.

என்னைக் காட்டிலும் எல்லா வகையிலும் சிறந்த ஒரு மாப்பிள்ளையை உங்க வீட்டில தேர்ந்தெடுப்பார்கள் . அவரை திருமணம் செய்து நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” .

“சரி. நான் கிளம்புகிறேன். நிதானமாக நான் சொன்னவற்றை யோசித்துப்பார். உனக்கே ஒரு தெளிவு கிடைக்கும். பரீட்சை வருகிறது. படிப்பில் உன் கவனத்தை திருப்பு. ஏதும் சந்தேகம் என்றால் கேள் ” என்று முடித்தான் தவமணி.

என்னப்பா …. ரொம்ப நேரம் இன்னைக்கு கிளாஸ் எடுத்தாய் போல என்ற படியே அங்கு வந்தார் பாரதியின் தந்தை.

ஆமாங்க. ஒரு கணக்கு ரொம்ப தப்பாக போட்டு விட்டாள். விடையை மட்டும் யோசித்தால் போதுமா? வழி முறைகள் சரியாக இருக்க வேண்டாமா? அதைத்தான் தெளிவாக சொல்லி கொடுத்தேன் ” என்று கூறி விட்டு கிளம்பினான் தவமணி.

* * * * *

சென்ற வாரம் பாரதியின் தந்தை தன்னுடன் பேசியது தவமணியின் நெஞ்சில் நிழலாடியது.

பாரதி படிப்பு பற்றி பொதுவாக பேசி விட்டு “படிப்பு முடித்தவுடன் கல்யாணம் செய்ய வேண்டியதுதான். இது வரை எங்க பேச்சுப்படிதான் நடக்கிறாள். ஆனாலும் காதல் என்று யாரையும் கை காட்டி விடுவாளோ என்று எனக்கு ஒரு அச்சம்தான். செல்லப் பெண்தான் என்றாலும் குடும்பம், கௌரவம், ஜாதி சொந்தங்கள் இவளை விட முக்கியம் . எதையும் விட்டு கொடுக்க மாட்டேன். அந்த மாதிரி ஒரு நிலைமை வராமல் இருக்க வேண்டுகிறேன்” என்று புலம்பியது நினைவில் வந்தது.

அதற்கேற்றாற்போல் பாரதி இன்னிக்கு நம்ம கிட்டயே விருப்பத்தை சொல்லி விட்டாளே. என்ன செய்வது. நம் மனதை மறைத்து, காதலை மறந்து, காதலியிடம் மறுத்து பேச வேண்டியதாயிற்றே? பரவாயில்லை. ஒரு மகனாக, ஒரு அண்ணனாக, ஒரு நல்ல நண்பனாக நம் கடமையை செய்வோம்….. விரக்தியுடன் நடந்தான் தவமணி.

தவமணியின் பெற்றோரோ பொறுப்பாக, பாசமாக இருக்கும் பிள்ளைக்கு நாம் ரொம்ப கஷ்டத்தை கொடுக்க கூடாது. ஒரு நல்ல வேலை கிடைத்தவுடன் அவன் மனதிற்கு பிடித்தமான பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டனர் .

தவமணி பாரதி உரையாடலை கேட்க நேர்ந்த பாரதியின் தந்தை மனதில் நல்ல பையன் ஆனால் நம்மால் மனதார ஏற்றுக்கொள்ளவும் முடியாது. நல்ல வேளை. இவனே மறுத்து பேசி விட்டான். அவனும் பதிலுக்கு காதலை சொல்லியிருந்தால் என்ன செய்வது……? என்று நினைத்துக்கொண்டார்.

பாரதியோ இப்படி ஒரு பதிலை தவமணியிடமிருந்து எதிர்பார்க்கவில்லையே. என்ன செய்வது ?

உண்மையைத்தான் சொன்னாரா அல்லது யாருக்கும் பயந்து சொன்னாரா. தவமணி சம்மதம்

சொல்ல்லியிருந்தால் அப்பாவிடம் போராடியிருக்கலாம். இப்போ எந்த நம்பிக்கையில்

அப்பாவிடம் பேசுவது ? மறந்து போவதா அல்லது மறைந்து போவதா ? கலங்கி நின்றாள்.

தவமணிக்கு….. கடமைகளாய் சில சுமைகள்,

தவமணியின் பெற்றோருக்கு….. எதிர்பார்ப்புகளாய், காத்திருப்புடன் சில சுமைகள்,

பாரதிக்கு ….. காதலுடன் கண்ணீருடன் சில சுமைகள், …

பாரதியின் தந்தைக்கு வீம்புடன் கட்டுப்பாடுகளாய் சில சுமைகள்,

இந்த சுமைகள் இடையே சிக்கிக்கொண்ட இவர்களது காதல் மறக்கப்பட வேண்டியதா ? மறுக்கப்பட வேண்டியதா ? ஆனால் இப்போதைக்கு தவமணி, பாரதியால் அவர்கள் மனதில் மற்றுமொரு சுமையாக மறைக்கப்பட்டது. ……..பாரதியின் காத்திருப்பிற்கு பலன் கிடைக்குமா ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *