சந்திரன்…. நினைவில் நிற்கும் தன்னுடன் படித்த, பழகிய அனைவருக்கும் திருமணப் பத்திரிக்கை நீட்டிவிட்டு கடைசியாக கண்ணகிக்காக திருவண்ணாமலைக்குப் பேருந்து ஏறினான்.
கண்ணகி இவனுடன் படித்த கல்லூரி தோழி மட்டுமல்ல…..காதலி.!
பிரிவு அவள் அப்பா மூலம் வந்தது.
அவர் பெண்ணைக் கண்டித்தாரோ இல்லையோ…தன் கௌவரம், அந்தஸ்து, சாதி, மதமெல்லாமம் காப்பாற்ற நான்கு கூலிகளை ஏவினார்.
அவர்கள் வாங்கிய பணத்திற்குப் பழுதில்லாமல் கச்சிதமாக வேலை செய்தார்கள்.
காத்திருந்து….. தனியாக வந்த சந்திரனை உயிரை மட்டும் வைத்து உடலை துவைத்துப் போட்டுவிட்டு இவன் விட்டிற்கு போன் வேறு. கைபேசியை எடுத்த ஒருவன் எண்களை அழுத்தி…
”பரமசிவம் வாத்தியாரே ! நான் சொல்றதைப் பதறாம சிதறாம போனை வைச்சுடாம கவனமா கேள். நீ என்ன செய்வீயோ ஏது செய்வீயோ எங்களுக்குத் தெரியாது. இன்னைக்கு ராத்திரியோ இல்லே இன்னும் ரெண்டு நாளிலோ இருக்கிற வீட்டைக் காலி பண்ணிட்டு ஊரை விட்டே ஓடினும். ஏன் ஏதுக்குன்னு கேட்காதே. நானே சொல்றேன்.! உன் செல்லப் பையன் சந்திரன், கல்லூரிக்குப் போய் எங்க ஐயா பொண்ணுக்குக் காதல் பாடம் கத்துக் கொடுத்துட்டான். அதுக்குப் பிராயச்சித்தமாத்தான் அவனைக் காவேரி ஆத்துப் பாலத்தாண்ட போட்டுத் தள்ளிட்டோம். பயப்படாதே ! வெட்டு, கத்திக் குத்துக்கிடையாது. வெறும் உருட்டுக்கட்டை அடி, உதை, கைகால் முறிவுதான். குப்பலாக் கிடக்கான் அள்ளிக்கோ. அவசரப்பட்டு வைச்சுடாதே. சேதி இன்னும் இருக்கு. ஐயா யாரின்றீயா ? தொழிலதிபர் தொண்டமான்தான். போலீசுக்குப் போக மனசு வைக்காதே. அவர் ஆளுங்கட்சி. பிரயோசனமில்லே. அதையும் மீறிப் போனா…. உன் குடும்பமே காலி. இதைச் செய்த நாங்க அதையும் செய்வோம். வைச்சிடுறேன் வாத்தியாரே. ஜாக்கிரதை !” வைத்தான்.
அரை நினைவில் அனைத்தும் அடிபட்டுக்கிடந்த சந்திரனுக்குத் தெளிவாகக் கேட்டது. அகன்றார்கள்.
அடுத்து….இவன் அப்பா அம்மா அடித்துப் பிடித்து அலறி அடித்து வந்து….இவனை ஆம்புலன்சில் அள்ளிப் போனார்கள். அவர்கள் சொன்னபடியே வீட்டைக் காலி செய்து கன்னியாக்குமாரி சென்றார்கள்.
இவன்…. கண்ணகி மறந்து உடல் தேறி ஐந்தாண்டுகளுக்குப் பின் இதோ திருமணம்.
சந்திரன் பேருந்தை விட்டு இறங்கி…. ஆட்டோப் பிடித்து தொழிலதிபர் தொண்டைமான் வீட்டு முன் இறங்கினான். பங்களா எந்தவித மாற்றமுமில்லாமல் அப்படியே இருந்தது.
அழைப்பு மணி அழுத்தினான். வேலைக்காரி அலமேலு திறந்தாள்.
”கண்ணகி…… ? ” இழுத்தான்.
”இருக்காங்க. நீங்க ? ”
”நான் அவுங்களோட படிச்ச சந்திரன் ! பார்க்கனும்.”
”உள்ளே வாங்க.” நன்றாக கதவு திறந்தாள்.
உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி.
”தொழிலதிபர் தொண்டைமான் மனைவியுடன் சுவரில் மாலை போட்டுத் தொங்கினார்.
”ஐயாவும் அம்மாவும் வெளிநாட்டுக்குப் போனபோது விமான விபத்துல இறந்து அஞ்சு வருசமாவுது. சின்ன ஐயாதான் கம்பெனியெல்லாம் கவனிச்சுக்கிறாரு.” அலமேலு சேதி சொன்னாள்.
”கண்ணகி ? ”
”இருக்காங்க வாங்க.” சொல்லி அருகிலிருந்த அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். தொடர்ந்தவனுக்கு அங்கும் அதிர்வு.
கட்டிலில் கண்ணகி நாறுந்தோலுமாய்க் கிடந்தாள்.
உறைந்தான்.
”உங்களை அடிச்சிப் போட்ட அன்னைக்கே… அம்மாவுக்கும் அடி. ஐயாதான் அடிச்சார். ஆனா படாத இடத்துல பட்டு உங்க பேர் பிதற்றலைத் தவிர்த்துக் கிட்டத்தட்ட கோமா நிலை. அன்னையிலேர்ந்து இன்னைவரைக்கும் நான்தான் துணை.” என்றாள்.
சந்திரன் அப்படியே செயலற்று நின்றான்.
”இருங்க… அம்மாவை எழுப்பறேன்.” என்ற அலமேலு கட்டிலிருந்தவள் காதருகில் குனிந்து…. ”கண்ணகி அம்மா! உங்க சந்திரன் ஐயா வந்திருக்கார் பாருங்க.” என்று இரு முறை சொன்னாள்.
முகம் பரவசப்பட்டு லேசாக கண் விழித்த கண்ணகி கண்களில் ஆளைப் பார்த்ததும் பளீர் ஒளி. அடுத்த விநாடி அது அப்படியே நிலை குத்தியது.
”ஐயோ அம்மா….ஆ !” அலமேலு அலறினாள்.
கையில் திருமணப் பத்திரிக்கை கனக்க…..சந்திரன் சிலையாக நின்றான்.
Arumai
சூப்பர்