காதலித்த கதை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 45,295 
 
 

டமாரு கொமாரை உங்களுக்கு தெரியுமா? டமாரு கொமாரு மயிலாப்பூர் பல்லாக்கு மாநகரில் வாழும் சாமானியத் தமிழன். சாயங்காலம் ஆறரை மணிக்கு மேல் பட்டினப்பாக்கம் டாஸ்மாக்குக்கு புனித யாத்திரை சென்று வந்தவுடன் ‘தமிளு’ அவன் நாவில் கொஞ்சி வெளையாடும். லஸ் கார்னர் கேசவன் பீடா ஸ்டாலின் பரமணெண்டு கஸ்டமர் நம்ம டமாரு. மாவா போட்டு வாயை குதக்கி குதக்கி அவன் வாயே மிக்கி மவுஸின் ரப்பர் வாய் போல ஆகிவிட்டது. பத்து மணிக்கு மயிலாப்பூர் ஸ்டேஷன் எஸ்.ஐ. ரவுண்ட்ஸ் வரும் வரை டமாரு கொமாருவின் லந்து லஸ் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் கொடிகட்டிப் பறக்கும்.

கொமாருக்கு பல்லு கொஞ்சம் நீளம். பார்க்க தேங்காய் துருவி மாதிரி இருக்கும். சினிமா நடிகன் மாதிரி நல்ல கலரு. வடிவேலுவும் சினிமா நடிகர் தானே? அந்த காலத்து வையாபுரி மாதிரி நல்ல உடல்வாகு. ஹிப்பு சைஸு 26. ஆனா சட்டை சைஸு 44. ஏழாவது படிக்கும்போது பெரியம்மை போட்டதால, மூஞ்சி, காதல் படத்தில் வரும் சந்தியாவின் அப்பா மாதிரி கொதறிவெச்சி இருக்கும். மொத்தத்துலே ஒருத்தன் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் டமாரு இருப்பான்.

அதிருக்கட்டும், அவனுக்கு டமாருன்னு ஏன் பேரு வந்துச்சி தெரியுமா? அது ஒரு சப்பை மேட்டரு. வூட்டாண்ட கையை உட்டு சைக்கிள் ஒட்டி பொண்ணுங்களுக்கு ஃபிலிம் காட்டிக்கினு இருந்தப்போ சைக்கிள் டயர் டமாருன்னு வெடிச்சிடிச்சி. ஏர்யால மூக்கு ஒழுவினு இருந்த சின்னப்பசங்கள்லாம் அப்போலேருந்து ‘டமாரு மாமா, டமாரு மாமா’னு கூப்பிட்டு அதுவே ‘டமாரு கொமாரு’ ஆயிப்போச்சி. போலிஸ் ஸ்டேசன்லே கூட கேசு ஃபைல் பண்றப்போ டமாரு குமாருன்னு தான் ஃபைல் பண்ணுவாங்க. டமாருங்கிறது ஒரு மாதிரியா டெர்ரரா இருந்ததாலே கொமாருக்கு டமாரு ரொம்ப பிடிச்சிருந்திச்சி!

டமாரு எப்பவாச்சும் படம் பார்ப்பான். சரக்கு அடிக்க கையிலே காசில்லைன்னா காமதேனு தியேட்டருக்கு போயிடுவான். பத்து ரூவாய்க்கு மாவா வாங்கிப்பான், அஞ்சு ரூவாய்க்கு பீடி வாங்கிப்பான். டிக்கெட் ரேட்டு பத்து ரூவாதான். ஒரு முறை அவன் பார்த்த படம் ‘பூவே உனக்காக’. படத்தோட லவ்வு அவனுக்கு ரொம்ப ஃபீலிங்க்ஸ் ஆயிப் போச்சு. படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் போட்ட ‘லால்ல.. லா.. லா..’ மியூசிக்கு அப்படியே அவனுக்கு ங்கொய்யின்னு ரீங்காரம் அடிச்சிக்கினு இருந்தது. க்ளைமேக்ஸுலே விஜய் பேசுற டயலாக்கு ‘வெற்றி தோல்வின்னு சொல்றதுக்கு காதல் ஒண்ணும் எக்ஸாம் இல்லே. ஃபீலிங்’ இன்ற டயலாக்கு அப்படியே அவன் மூளையிலே ஆணி அடிச்சி உட்காந்திடிச்சி…

அதே ஃபீலிங்கோடு எதுர்லே இருந்த கேசவன் கடைக்கு வந்தான்.

“இன்னா டமாரு இன்னிக்கு ஆபிஸ் போவலியா?” லுங்கியில் இருந்த டமாரை பார்த்து கேசவன் கேட்டான். டமாரு ஒரு ஆபிஸில் ஆபிஸ் பாயா வேலை பார்க்குறான். மாசத்துக்கு ரெண்டு நாள் லீவு போடுவான்.

“ஆமா சகா. நேத்து நைட்டு அடிச்ச சரக்கு ஒடம்புக்கு ஒத்துக்கலே. ரெண்டு தரம் காலீலேர்ந்து காவாக்கரைக்கு போயாந்துட்டேன். டயர்டா இருந்திச்சா. அப்டியே படத்துக்கு வந்துட்டேன்”. சிகப்பாக இருப்பவர்களை ‘அய்யிரே’ என்று கூப்பிடுவதும், மற்றவர்களை ‘சகா’ என்று கூப்பிடுவதும் டமாரின் வழக்கம்.

“மாவா போடறியா டமாரு”

“வேணாம் சகா. ஒரே பீலிங்ஸா இருக்கு”

“இன்னா பீலிங்ஸு டமாரு?”

“லவ்வு பண்ணனும் மாதிரி இருக்குது சகா. யாரை லவ்வு பண்ணுறதுன்னு தெரியலை!”

“டமாரு கேட்குறேன்னு தப்பா நெனைச்சிக்காதே. லவ்வு பண்ணனும்னா கொஞ்சமாவது பார்க்குறமாதிரி இருக்கணும். நாமெல்லாம் லவ்வு பண்ணுறவங்களுக்கு ஹெல்ப்பு தான் பண்ணமுடியும்”

டமாருக்கு கோவம் கன்னாபின்னாவென்று வந்தது. “சகா லவ்வுங்கிறது அழகை பார்த்து வர்றது கிடையாது. அப்புடி வந்துச்சின்னா கமலாசனும், அஜித்தும் மட்டும் தான் லவ்வு பண்ணமுடியும்! அவ்ளோயேன… நம்ம பல்லி பன்னீர் கூட லவ்வு மேரேஜி தானே பண்ணான். அவன் இன்னா என்னை விட அழகா?”

கேசவனுக்கு புரிந்துவிட்டது. பயல் காதல்வெறியில் இருக்கிறான். என்ன சொன்னாலும் அவன் காதில் விழப்போவதில்லை.

“எங்க வூட்டு எதிர்லே இருக்கே மஞ்சு. அத்த ஜூட்டு உட்டுக்கலாமா சகா?” ஏதோ ஒரே நாளில் காதலித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தவனை போல கேட்டான் டமாரு.

“ஒன் இஷ்டம் டமாரு. ஆனாக்க மஞ்சு நல்லாருக்குமான்னு தெர்ல. உனக்கு செட் ஆவும்னா லவ்வு பண்ணு. மஞ்சுவோட அண்ணனுங்க நம்ம கடைக்கு வருவானுங்கோ. பாடி கீடில்லாம் காட்டுத்தனமா இருக்கும். கவுன்சிலரு கிட்டே வேலை பார்க்குறானுங்களாம். ஏதாச்சிம் ஏடாகூடமா ஆச்சின்னா பிரச்னை பெருசாயிடும். பார்த்துக்கோ!” கேசவன் தீர்மானமாக சொன்னான். ‘இவன் என்ன எழவோ ஆயிட்டு போவட்டும், எனக்கென்ன’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டான்.

அதிலிருந்து தினமும் கேசவன் கடைக்கு வரும் டமாரு ‘மஞ்சு புராணம்’ பாட ஆரம்பித்துவிட்டான்.

“எக்ஸ்போர்ட்டு வேலைக்கு போவுது சகா. 45பிலே தான் கிண்டி வரைக்கும் போவுது. டெய்லி சைக்கிள்லே தேனாம்பேட்டை வரைக்கும் ஃபாலோ பண்ணுறேன்”

“மஞ்சத்தாவணிலே எப்டி இருந்திச்சி தெரீமா?”

“வெள்ளிக்கெளம வெள்ளிக்கெளம முண்டக்கன்னி அம்மன் கோயிலுக்கு போவுது”

“பயமாயிருக்கு சகா. அவனுங்க அண்ணனுங்க மேலே ஏற்கனவே கொல கேசுல்லாம் இருக்காம்”

டமாரு சொல்வதெல்லாம் காமெடியாகவே இருந்தது கேசவனுக்கு. மஞ்சு கொஞ்சம் செவப்பா இருந்திருப்பா போலிருக்கு. நம் கருமை நிற டமாருக்கு அதனாலேயே அவள் மீது ‘பீலிங்சு’ வந்திருக்கணும். ஆனாலும் வெட்டு ஒன்று, துண்டு ரெண்டுன்னு பேசுற டமாரு தன் பீலிங்ஸை மட்டும் அவளிடம் சொல்வதற்கு ரொம்பவும் ஷையா இருந்தான்.

மயிலாப்பூர் அறுவத்தி மூவர் திருவிழா வந்தது. டமாரு எப்படியாவது தன் மனசை படக்குன்னு தாப்பா தொறக்குறா மாதிரி தொறந்து மஞ்சுவிடம் காட்டிடலாம்னு முடிவு பண்ணிட்டான்.

“திருவிழாவுக்கு மஞ்சு ஃப்ரெண்ட்ஸோட வரும். நேரா போயி, ‘எனக்கு பீலிங், உனக்கு பீலிங்கா?’ன்னு கேட்டுடணும் சகா. நீயும் என் கூட தொணைக்கு வா. அவனுங்க அண்ணனுங்க பார்த்துட்டாங்கன்னா எஸ்கேப் ஆவ வாட்டமா இருக்கும்” என்றான். கேசவனும் தலையெழுத்தே என்று வந்தான். அறுவத்து மூவர் திருவிழா நடக்கும்போதெல்லாம் கேசவன் கடையை மூடிவிடுவது வழக்கம்.

தெற்கு மாடவீதியில் இருந்த ஒரு திண்ணையில் ஏறி நின்றுகொண்டான் டமாரு. டென்ஷனாக இருந்ததால் ஒரு மாவா பாக்கெட்டை அப்படியே வாயில் போட்டு துப்பிக்கிட்டிருந்தான். மஞ்சூ தூரத்தில் வருவது தெரிஞ்சது. குமார் பேஸ்கட்டுக்கு அது கிடைச்சா அவனுக்கு லாட்டரியில் பம்பர் விழுந்தது மாதிரிதான். அவளோடு ரெண்டு எக்ஸ்போர்ட் பிகருங்க. அதுங்க கொஞ்சம் சுமாரா இருந்ததாலே அதுங்கள்லே ஒண்ணை கரெக்ட் பண்ணிடலாமான்னு கேசவன் கூட யோசிக்க ஆரம்பிச்சிட்டான்.

மெதுவாக திண்ணைலேர்ந்து இறங்கி மஞ்சுவை நெருங்கினான் குமார். கேசவன் சுத்தும் முத்தும் மஞ்சுவோட அண்ணனுங்க வர்றானுங்களான்னு பாத்துகினே இருந்தான். திக்கு.. திக்கு..ன்னு இருந்திச்சி. இவன் மூஞ்சிய அது ஏத்துக்குமா என்ற சந்தேகம் கேசவனுக்கு இருந்தது. நாளாக நாளாக டமாரு மூஞ்சி மூஞ்சூறு மாதிரி ஷேப்பு மாறிக்கினே போவுதே?

“இன்னா மஞ்சு எப்டி கீறே?”

“நா நல்லா கீறேன். நீ எப்டி கீறே?”

“நான் சூப்பரா கீறேன். ரெண்டு பேரும் கண்ணாலம் கட்டிக்கலாமா?”

டீ சாப்பிட போலாமா என்பது மாதிரி டமாரு டமாருன்னு கேட்டிட கேசவனுக்கு தாவூ தீர்ந்துவிட்டது. சினிமாவில் பார்த்தமாதிரி எல்லாம் இல்லாம ரொம்ப கேஸ்வலா கேட்டுட்டான் டமாரு. ‘லால்லா.. லா.. லா…’ மியூசிக்கெல்லாம் எதுவும் கேட்கலை. ஏதோ பெரீய்ய மேட்டருன்னு நெனைச்சுக்கினு இருந்த கேசவனுக்கு சப்புன்னு போயிடிச்சி. மஞ்சுவும் ஒத்துக்கிட மஞ்சு பின்னாடியே டமாரு போயிட்டான்.

ஒருவாரம் கழிச்சி கேசவனுக்கு நியூஸ் வந்தது. டமாரு மஞ்சுவை இஸ்துக்கினு எங்கியோ ஒடிட்டானாம். மஞ்சுவோட அண்ண‌னுங்க டமாரை மட்டுமில்லாம டமாரோட ப்ரெண்ட்ஸுகளையும் தேடிக்கிட்டிருக்கானுங்களாம். கேசவன் ரெண்டு வாரத்துக்கு கடையை தொறக்கலை.

ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சி டமாரு, மஞ்சுவோட பல்லக்குமாநகருக்கு வந்திருக்கான். அதுக்குள்ளே மஞ்சுவோட அண்ணனுங்களும் சமாதானம் ஆயிட்டானுங்க. கல்யாணம் கட்டிக்கினு ரெண்டு மூணு மாசமா வேலைக்கு போவாததாலே டமாருக்கு வேலை போயிடிச்சி. டமாரு இப்போ பாண்டிபஜார் பிளாட்பார்முலே துணிக்கடை பிசினஸு பண்ணுறான். ரெண்டு கொழந்தைங்க ஆயிடிச்சி. இன்னா பணம் கையிலே பொரள்றதாலே டெய்லி ரெண்டு வேளை குடிக்கிறானாம்.

நம்மாளுங்க இப்படித்தான… டவுசர் கயட்டுற நேரத்துலே லவ்வு வந்துரும். அதே டவுசரை திருப்பி மாட்டுற நேரத்துலே கல்யாணத்தையே முடிச்சிட்டிருப்பானுங்க.

அன்னைக்கி பிஸினஸ் டல்லா இருந்திச்சி. கேசவனுக்கு ரொம்ப போர் அடிச்சிடுச்சு. கடையை இளுத்து மூடிட்டு சினிமாவுக்கு போவலாம்னு இருந்தான். அஞ்சு ரூவாய்க்கு பீடி கட்டு வாங்கிக்கினு எதிர்லேருந்த காமதேனு தியேட்டருக்கு போனான். விஜய் நடிச்ச காதலுக்கு மரியாதை. படம் பார்த்ததுமே கேசவனுக்கு ரொம்ப பீலிங்ஸா ஆயிடிச்சி.. இளையராஜா போட்ட ‘லால்ல.. லா.. லா..’ மியூசிக்கு, அப்படியே அவனுக்கு ங்கொய்யின்னு ரீங்காரம் அடிச்சிக்கினு இருந்தது. ஷாலினியும், விஜய்யும் பீச்சுலே பேசுற டயலாக்கு அப்படியே அவன் மனசுல‌ ஆணி அடிச்சாமாதிரி உட்கார்ந்திடுச்சி…

அப்புறம் என்னா ஆச்சா? ஸ்டோரியை பர்ஸ்ட்டுலே இருந்து மறுபடியும் படி மாமு…

– அக்டோபர் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *