கண்டக்டர் கந்தப்பன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 10, 2021
பார்வையிட்டோர்: 4,215 
 
 

வளைந்து வளைந்து செல்லும் மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் நீலகிரிக்குச் செல்லும் பஸ் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் அடர்ந்த மரங்களும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைச் சிகரங்களும் பார்ப்பதற்கு மிக ரம்மியமாயிருந்தன.

வேகமாகச் செல்லும் பஸ்ஸின் ஓசையும், கண்டக்டர் கந்தப்பன் பஸ்ஸின் வாயிலருகில் நின்று கொண்டு சிறிது நேரத்திற்கொருதரம் ஏதாவது ஒரு பாட்டின் அடியை முணுமுணுக்கும் சத்தமும், மாறி மாறி ஒலித்துப் பஸ்ஸிலுள்ளவர்களை அமைதியிலாழ்த்தின.

“ஆற்றோரம் கொடிக் காலாம்
அரும்பு அரும்பாய் வெத்திலையாம்
போட்டா செவக்குதிலை
பெண்மயிலே உன் மயக்கம்”

என்ற பாட்டில் தான் கந்தப்பனுக்கு அலாதிப் பிரியம். அதுவும் சாலையிலே தண்ணீர் எடுத்து வரும் பெண்களைத் தாண்டிப் பஸ் செல்லும் பொழுது அவனுக்குக் குஷி தாங்காது. மேற்படி பாட்டின் அடிகளை உறக்கப் பாடுவதும் சீட்டி அடிப்பதுமாகச் செல்வான்.

வாழ்க்கையில் எவ்வளவோ பொருள்கள் மீது அவன் தன் உயிரையே வைத்திருந்தான். அவையெல்லாம் அவனை ஏமாற்றிவிட்டன. ஆனால் பஸ் கண்டக்டர் உத்தியோகமும் இந்தத் தெம்மாங்குப் பாடலும்

அவனை ஏமாற்றாது என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியும்.

அந்தக் கண்டக்டர் குல்லாவையும், தோல் பையையும் மாட்டிக் கொண்டவுடனே அவனுக்குக் குஷி பிறந்து விடும். ரைட்’ – ‘ஹோல்டான்’ என்று கூவி சீட்டியடிப்பதில் இருக்கும் சந்தோஷத்தைப் போல் அவனுக்கு வேறொன்றிலும் இருப்பதில்லை. அவன் என்ன பண்ணுவான், பாவம்! பழைய எண்ணங்களை – வாழ்க்கையின் தோல்விக் கோடுகளை – மறப்பதற்காகத் தான் இந்த வேஷம் போட நேரிட்டது.

நான்கு வருடங்களுக்கு முன்பு கந்தப்பன் கண்டக்டராக இல்லை. திருச்சி மாவட்டத்தில் காவேரியாற்றங்கரைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவன் அவன். வேகமாக ஓடும் காவேரியில், சுற்றி ஓங்கி வளர்ந்திருக்கும் ஆலமரக் கிளைகளிலிருந்துத் தொப் பென்று குதித்து நேரம் போவதே தெரியாமல் நீச்சல் அடித்துக் கொண்டு காலங்கழித்தவன் அவன்.

சிறு வயதிலேயே அவன் தந்தை இறந்துவிட்டார். பிறகு அவன் தாயார் கந்தப்பனுடன், தன் தம்பியின் வீட்டிற்கு வந்து விட்டாள். முகங் கோணாமல் சகோதரிக்குப் பணிவிடை புரிவதில் கந்தப்பனின் மாமன் மாணிக்கம் கெட்டிக்காரன். செங்குளம் கிராமத்திலே அவனுக்குக் கொஞ்சம் சொத்தும் இருந்தது. வழக்கம் போல் அவனுக்கு ஒரு பெண்ணும் இருந்தாள்.

தங்கம் என்ற பெயருக்கேற்ப அவள் குணத்திலும் அழகிலும் தங்கமாக விளங்கினாள். தங்கம், கந்தனுக்குத்தான் என்று எல்லோரும் முடிவு செய்து வைத்திருந்தனர்.

கந்தப்பன் சிறு வயதிலிருந்தே யாருக்கும் அடங்காதவன். தன்னுடைய இஷ்டம் போல் சுயேச்சையாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவன். காலையில் எழுந்து சென்றால் காவேரியில் கொட்டம் அடித்து விட்டு உச்சி வேளைக்குத்தான் திரும்பி வருவான்.

அவளைக் காவேரிக் கரையில் காண நேரும்போதெல்லாம், ‘கந்தப்பா ! தங்கத்தோடு நிலபுலன்களையும் எனக்குச் சேர்த்துக் கொடுத்துடுங்க!” என்பான் கந்தப்பன்.

“சரி, அப்படியே செய்கிறேன். ஆனால் நாளைக்கு நிலத்தை எப்படிக் காப்பாத்திக்கிறது என்கிறதை இப்பவே நீ கொஞ்சமாவது தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று மாணிக்கம் மேலே சொல்வதற்குள், கந்தப்பன் தொப் தொப் பென்று காவேரியில் குதித்துக் கொண்டே இருப்பான்.

கந்தப்பன் குளிக்கும் இடத்துக்குத் தண்ணீர் எடுக்க யாரும் வரமாட்டார்கள். ஆனால் தங்கம் மட்டும் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு தைரியமாக அந்த இடத்துக்குத் தண்ணீர் எடுக்க வருவாள். அவளைக் கண்டால் கந்தப்பனுக்குச் சிம்ம சொப்பனம் தான் ! சட்டென்று கரையேறி ஆலமரத்தின் மறைவில் நின்று கொண்டு அவள் தண்ணீர் எடுக்கும் எழிலைப் பருகிவிட்டுப் பிறகு தான் அவ்விடத்தை விட்டுச் செல்வான்.

சிலசமயம் தங்கம், ”ஏன் அத்தான், என்னைக் கண்டவுடன் கரையேறிப் போயிடறே?” என்று சிரித்துக் கொண்டே அவனைக் கேட்பாள்.

சுத்த வாயாடித்தனமாக மற்றவர்களுக்குப் பதில் சொல்லும் கந்தப்பனுக்கு இந்த இடத்தில் வாயடைத்துவிடும். “உம்…. உம்! என்று ஏதாவது பேச எத்தனிப்பான். ஆனால் ஒரு வார்த்தையாவது வெளியில் வராது.

“ஏண்டா, கந்தப்பா! இப்போவே அவள் அழகில் மயங்கிக் கட்டுண்ட சர்ப்பம் போல் ஆகி விடுகிறாயே, அவளைக் கல்யாணம் செய்து கொண்டு நீ எப்படி காலத்தைக் கழிக்கப் போகிறாய்!” என்று கேலியாகக் கேட்பவர்களுக்கெல்லாம் கந்தப்பனிடமிருந்து ஓர் அசட்டுச் சிரிப்புதான் பதிலாகக் கிடைக்கும்.

“கந்தப்பா! மாமாவோடே ஒத்துமையா போடா! நாளைக்கு நான் கண்ணை மூடிட்டா உனக்கு அவன் தாண்டா ஆதரவு! என்று கந்தப்பனை அருகே உட்கார வைத்துக் கொண்டு அவன் தாயார் கூறுவாள். ஆனால் கந்தப்பனோ , அம்மாதிரி சமயங்களில் எல்லாம் அவள் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் காவேரிக் கரையிலுள்ள தோட்டங்களிலிருந்து மாங்காயைத் தேட்டை’ போடலாமா, தேங்காயைத் தேட்டை போடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பான்!

காலம் மாற மாற உலகில் பல மாறுதல்கள் ஏற்படுவது போல் செங்குளத்திலும் சில மாறுதல்கள் தோன்றிக் கொண்டு வந்தன. தங்கம், மாலை வேளையிலே உருக்கிய தங்கமென மின்னும் பொன்னியாற்றைப் போல் பூரண எழிலுடன் விளங்க ஆரம்பித்தாள். அவளுக்கு வயது வந்தவுடன் கட்டுப்பாடும் பிறந்து விட்டது. கந்தப்பனின் போக்கு வரவர மாணிக்கத்துக்குப் பிடிக்கவில்லை.

ஒரு சமயம் அவன் ஏதோ அவசர வேலையாக வெளியூருக்குப் போக எண்ணிக் கந்தப்பனைக் கூப்பிட்டு, “இன்னிக்குக் கொஞ்சம் வயலுக்குப் போய் வேலைக்காரனுங்க சரியாய் உழறாங்களான்னு பார்த்துக்கோ!” என்றான்.

“போ, மாமா ! இதுதான் எனக்கு வேலையா? அதெல்லாம் உங்க தலைமுறையோடு இருக்கட்டும் !” என்று அலட்சியமாகக் கூறிவிட்டு வழக்கம் போல் காவேரிக் கரைக்குப் போய் விட்டான் கந்தப்பன்.

அதிலிருந்தே கந்தப்பனின் மேல் மாணிக்கத்துக்குக் கோபம் வளர ஆரம்பித்தது. தன் தமக்கையிடம் சொல்லி அவனைத் திருத்தும்படி சொன்னாள். ஆனால் கந்தப்பனின் போக்கைக் கட்டுப்படுத்த ஒருவராலும் முடியவில்லை . அவன் தீய வழிகளில் செல்லாவிடினும் யாருக்கும் பயப்படாத அவனுடைய குணத்தால் தத்தாரி’ என்ற பெயரை வெகு சீக்கிரமே வாங்கி விட்டான்.

ஒருநாள் தன் தமக்கையை நோக்கி, “ஏன் அக்கா! கந்தனுக்கச் சொந்த வேலை தான் பிடிக்கவில்லை; வேறே எங்கேயாவது வேலைக்கு அனுப்புகிறது தானே! என்றான் மாணிக்கம்.

“நீதான் அவனுக்குத் தங்கத்தைக் கட்டிக் கொடுத்து வீட்டோடு வைச்சுக்கப் போறியே, அவனுக்கு வேறே வேலை எதற்கு? எல்லாம் போகப் போகச் சரியாய்ப் போய்விடும். கால் கட்டுக் கட்டிப் போட்டு விட்டால் அவன் தானாகவே சொந்த வேலையைக் கவனித்துக் கொள்வான் !” என்றாள் கந்தனின் தாயார்.

‘அவன்தான் தத்தாரியா ஊரைச் சுத்திக்கிட்டு வரானே, அவனுக்கா தங்கத்தைக் கொடுப்பது?’ என்று அத்தனை நாளும் தன் உள்ளத்தில் அடக்கி வைத்துக் கொண்டிருந்த எண்ணத்தை அன்று வெளியிட்டு விட்டான் மாணிக்கம்.

இது அவன் தமக்கையின் உள்ளத்தைப் பெரிதும் வாட்டியது. ”தனக்குப் பிறகு தன் மகனின் கதி என்ன ஆகுமோ?” என்று எண்ணி அவள் ஏங்க ஆரம்பித்துவிட்டாள்.

தங்கத்தின் உள்ளத்தை யாராலும் அறிய முடியவில்லை. அநேகமாக அவள் கந்தப்பனைத் தான் காதலிக்கிறாள் என்பது, வாரம் ஒரு தரமாவது ஆற்றங்கரைக்கு மாலை வேளையிலே ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிவிட்டுப் போய் வருவதிலிருந்து தெரிந்தது.

கந்தப்பனின் நினைவெல்லாம் தங்கத்தின் மேல் தான். ஆனால் காலம் ஒரே மாதிரியிருக்கிறதா? திடுதிப்பென்று கந்தப்பனின் தாயார் கண்ணை மூடி விட்டாள். கந்தப்பன் தனிக்காட்டு ராஜாவாகி விட்டான். எங்கேயாவது சாப்பிடுவது, எங்கேயாவது தூங்குவது, காவேரியில் குதிப்பது என்று காலத்தைத் தள்ளி வந்தான்.

மாணிக்கம் தன் தமக்கை இறந்த பிறகு கந்தப்பனை லக்ஷயம் செய்வதேயில்லை . “அது கிடக்குது. தத்தாரி!” என்று தள்ளிவிட்டுத் தன் பெண்ணுக்கு வேறு வரன் பார்க்கத் தொடங்கினான்.

தங்கத்துக்குக் கல்யாண ஏற்பாடு நடக்கிறது என்பதை யறிந்தவுடன் கந்தப்பனுக்குக் கோபம் பொங்கியது. “ஏன் மாமா! அத்தான் முறை நான் இருக்கச்சே , தங்கத்துக்கு வேறே புருசன் தேடுறிங்களாமே!” என்று கேட்டதற்கு அவனுக்குக் கிடைத்த பதில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டது தான்!

“எப்படியானாலும் தங்கத்தைத் தவிர வேறு யாரையும் மணப்பதில்லை” என்று வீராப்பு பேசிச் சென்றான் கந்தப்பன். ஆனால் அவன் வீராப்பு அவனுடனேயே இருக்க வேண்டியதாயிற்று. கந்தப்பனைக் கூப்பிடாமலேயே தங்கத்துக்குக் கல்யாணம் நடந்தேறியது. மணமகளை அழைத்துக்கொண்டு செல்லும் தினத்தன்று கந்தப்பன் ஏதோ கொஞ்சம் கலாட்டா பண்ணினான். ஆனால் தங்கம் அவன் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டேயிருந்ததால் கந்தப்பன் தப்பாக எண்ணிக் கலாட்டா பண்ணுவதை நிறுத்திவிட்டு எங்கோ போய்விட்டான்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கந்தப்பன் காவேரிக்கரையில் ‘தொப் தொப்’ பென்று குதிப்பதில்லை. ஏதோ கிலி பிடித்தவன் போல் எங்காவது உட்கார்ந்திருப்பான். அப்பொழுது அவன் மனதில் பழைய எண்ணங்கள் தோன்றும். தன் தாயார். “மாமனுடன் சகஜமாயிருக்கச் சொன்னாளே , இளவேகத்தில் அந்தப் புத்தி நமக்குப் பைத்தியக்காரத்தனமாகப் பட்டதே !” என்று எண்ணும் போது. அதுவரை கண் கலங்கியறியாத அவன் கண்களிலும் கண்ணீர் ததும்பும்.

“நான் கண்ணை மூடி விட்டால் உனக்கு யார் ஆதரவு?” தாயார் அன்று சொன்னபடி இப்பொழுது ஆகிவிட்டது!” என்று எண்ணி எண்ணி அவன் மனம் புண்ணாயிற்று.

பணமின்றி வாழ்க்கையை நடத்துவது கடினம் என்று புத்தி வந்ததும் அவனுக்குச் செங்குளத்து வாழ்க்கையே பிடிக்கவில்லை. புரளப் புரள வேஷ்டிக் கட்டிக் கொண்டு தலை வணங்காத ஊர் சுற்றிக் கொண்டிருந்த கந்தப்பன் ஒரே மாதத்தில் மாறி விட்டதையறிந்த அந்த ஊரார் ஆச்சரியப்பட்டனர்.

இருந்தாற்போலிருந்து திடுதிப்பென்று கந்தப்பன் ஒருநாள் அந்த ஊரை விட்டே மறைந்து விட்டான். அவனுக்காக அந்த ஊரில் யாரும் வருந்தவில்லை . மாணிக்கம் கூட, “தத்தாரி ! எங்கேயாவது ஊர் சுத்தப் போயிருக்கும்!” என்று சும்மாயிருந்து விட்டான்.

செங்குளத்தில் மறைந்த கந்தப்பன் எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் கோயமுத்தூர் வந்து சேர்ந்தான். அங்குதான் அவனுக்குக் கண்டக்டர் வேலை கிடைத்தது. அவனைப் பார்த்தவுடனேயே அவர் மேல் அலாதிப் பிரியம் வைத்து விட்டார் டிரைவர் முத்துசாமி. அவன் தன் எஜமானனிடம் சொல்லித் தான் ஓட்டும் ‘நீலகிரி – மேட்டுப்பாளையம் பஸ்ஸிலேயே அவனுக்குக் கண்டக்டர் வேலை வாங்கிக் கொடுத்து விட்டான்.

கந்தப்பனின் களை சொட்டும் அழகு இளம் வயது முத்துச்சாமியைக் கவர்ந்தன. தன் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை என்று குருட்டுக் கனவு காண ஆரம்பித்து விட்டான். ஆகவே, கந்தப்பனை மரியாதையாகவும் சொந்தப் பிள்ளையைப் போலும் நடத்தி வந்தான். அதற்கேற்றாற் போல் கந்தப்பனும் மாமா!” என்று முத்துசாமியை அழைத்து வந்தான்.

சில சமயம் முத்துசாமி, கந்தப்பனைத் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்துச் செல்வதுண்டு. அம்மாதிரி சமயங்களில் தன் பெண்ணை வந்து பரிமாறச் சொல்வான் முத்துசாமி. நாணிக் கோணிக் கொண்டு வந்து பரிமாறும் அவனுடைய பெண் கோமதியைக் கந்தப்பன் தன் தங்கையாகப் பாவித்தான். ஆனால் கந்தப்பனின் அழகில் மயங்கிய கோமதியோ அவனைத் தன் காதலனாகப் பாவித்தாள் !

ஒருநாள் மாலை மணி ஐந்திருக்கும் நீலகிரி அடிவாரத்தில் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. வழியில் அது பல சிறு கிராமங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். கந்தப்பன் தினசரி அந்தக் கிராமங்களில் ஒன்றில் யாரையோ கவனித்துக் கொண்டு வந்தான். அந்த உருவம் கண்ணுக்கு மறையும் வரை கந்தப்பன் பஸ்ஸில் இருந்தபடி கண் கொட்டாது எட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பான். அவன் உதடுகள், “தங்கம் போல் தானிருக்கிறது. நாளைக்குப் பார்க்கலாம் !” என்று முணுமுணுக்கும்.

மேட்டிலிருந்து பள்ளத்திற்குப் போக வேண்டியிருப்பதால் பஸ் கனவேகத்தில் போகும். முத்துசாமி கந்தப்பனைச் சந்தோஷப்படுத்துவதற்காகப் பஸ்ஸை இன்னும் வேகமாக ஓட்டுவான்.

அன்று பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. தெம்மாங்கு மிகவும் உச்ச ஸ்தாயியில் ஒலித்தது. பஸ்ஸும் வேகமாகச் சென்றதனால் கந்தப்பனின் குஷி அதிகமாகியது. பயணிகளுக்கெல்லாம் அந்த இடத்தில் குடல் நடுக்கந்தான். அந்தக் கிராமம் வருமுன்பே மிகவும் ஓரத்தில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டு வர ஆரம்பித்தான் கந்தப்பன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் எதிர்பார்த்த அந்த உருவமும் கண்ணில் பட்டது. ‘ஆமாம். அவள் தங்கந்தான் ! இன்று பாதி வழியிலேயே அவளைச் சந்தித்து விட்டோமே ! கைதட்டி அவளை நிற்கச் சொல்லலாமா?’ என்று எண்ணினான் கந்தப்பன்.

தங்கம் முன்போலவே இடுப்பில் குடத்துடன் சாலை வழியாக வந்து கொண்டிருந்தாள்!

“ஹோல்டான்” என்று கூவினான் கந்தப்பன்.

பஸ் போகிற வேகத்தில் அவனுடைய குரல் டிரைவரின் காதில் விழவில்லை .

பஸ் தங்கத்தை நெருங்கியதும் கந்தப்பன், “ஆ ! தங்கம்…!” என்று கத்தினான். ஆச்சரியமும் உணர்ச்சியும் வேகமாக உந்த நாம் எங்கே இருக்கிறோம் என்ற நினைவேயில்லாமல் அவன் அவளை நோக்கி இரு கையையும் ஆட்டினான்.

அவ்வளவுதான்; கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த கை நழுவியது. அடுத்த நிமிஷம் வேகமாக ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து கர்ணம் அடித்து உருண்டு வீழ்ந்தான் கந்தப்பன். பிரயாணிகள் போட்ட கூச்சல் பஸ் நின்றது. பதறிக் கொண்டே முத்துசாமி கந்தப்பனை நோக்கி ஓடி வந்தான். ஓடி வந்து என்ன பயன்?

மண்டை உடைந்து ‘குபு குபு’ வென்று பெருகும் இரத்த வெள்ளத்திலே, பயங்கரமாக நசுக்கப்பட்டிருந்த முகத்துடனும் துடிக்கும் உயிருடனும் விழுந்து கிடந்தான் கந்தப்பன். அவன் பையிலிருந்த சில்லறைகள் சிதறிக் கிடந்தன. அவன் கையிலிருந்த டிக்கெட்டுகளின் பச்சை வெள்ளை நிறமெல்லாம் இரத்தத்தில் தோய்த்து செஞ்சிவப்பின் சாயையை அடைந்திருந்தன.

அங்கிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்குள் கந்தப்பனின் கடைசி மூச்சும் நின்று விட்டது!

“மயக்கம் வந்து விழுந்து விட்டான் போலிருக்கிறது!” என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள் !

ஆமாம், தங்கத்திற்காக அவன் உயிரை விட்டான் என்று உலகம் அறியுமா? இல்லை, அவன் காதலி தங்கத்தின் உள்ளமாவது அதை உணருமா?

– மாந்தோப்பு மரகதம், சிறுகதை தொகுதி -7, முதற் பாதிப்பு: 2013, யாழினி பதிப்பகம், சென்னை 600108.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *