கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 9,652 
 
 

வர்ஷினி என்ற இந்தப் பெண்ணை மையமாக வைத்து தான் சுந்தரின் மனப்பிரபஞ்சமே சுற்றிக் கொண்டிருந்தது.அழகு,கடவுள் அவளுக்கு அளித்த வரமென்றால், அவர்கள் குடும்பப் பின்னணி அவளுக்கு கம்பீரத்தைக் கொடுத்தது;அவளது நிமிர்ந்த நன்னடையில் தன்னம்பிக்கை தெரிந்தது.கல்லூரி வாழ்க்கையில் படிப்புச் சம்மந்தமான அன்றாடக் கடமைகளை சுந்தர் நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது,உள்ளம் அவ்வப்போது கழுகாய் சிறகு விரித்து அவளின் மனவெளியில் பறந்து கொண்டிருக்கும்.அத்திப்பூத்தாற் போல் ஏதாவதொரு சமயத்தில் அவளருகில் நெருங்கி நிற்கும் போது,அவளது முகம் பிரகாசிக்கும் ஒளியில் அவனுடைய மனம் தொட்டாற்சிணுங்கியாய் கூனிக் குறுகி மண்ணில் அற்பப் புழுவாய் நெளிவது போல் உணரும்.

அழகு என்பதற்கு அவனுடைய அகராதியில் வர்ஷினி என்று பொருள்.காதல் ஒருவனை உணர்ச்சிகளை கட்டுடைத்து எல்லை மீறி எழுச்சி கொண்ட பித்தனாக்கும்.ஆனால் இவன் காதல்,வக்கிரம் கொண்ட எந்த எண்ணங்களும் மனதில் நுழையா வண்ணம் அரணாகயிருந்து இலக்கு நோக்கி உந்தித் தள்ளிச் சென்றது.எந்தவொரு சிறு தவறும் தன் உண்மைக் காதலுக்கு தான் செய்யும் துரோகமாகிவிடும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது.

பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த சுந்தர்,பரீட்சைக்கு முந்தைய விடுமுறையில் விடுதியை விட்டு வீட்டுக்கு வந்திருந்தான்.

அன்றிரவு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அவனை தொலைபேசி அழைப்பு மணி அலறி எழுப்பியது.ரிசீவரை எடுத்த அவனது அம்மா ராணுவத்தில் பணியாற்றி வந்த சுந்தரின் தந்தை ஒரு விபத்தில் பலியான செய்தி கேட்டு மயங்கி விழுந்தாள்.

மனமொடிந்த நிலையிலிருந்த சுந்தரால் இறுதியாண்டு பருவத் தேர்வை எழுத இயலாமல் போனது.

அதன் பிறகு எல்லாக் காரியமும் முடிந்து வீடே வெறிச்சோடிப் போயிருந்தது.சில நாட்கள் கழித்து ஒரு காலை வேளையில் தொலைபேசி மணி ஒலிக்க சொரேறென்றது அவனுடைய அம்மாவுக்கு, கையிலிருந்த பாத்திரத்தைக் தன்னையறியாமல் தவறவிட்டாள்.மனதில் சில கணங்கள் கணவர் உயிருடன் இல்லை என்ற எண்ணம் முழுதாய் ஆக்ரமித்து செயலற்ற நிலையை ஏற்படுத்தியது.அன்று மாலையே தொலைபேசி இணைப்பை வீட்டிலிருந்து எடுக்கச் சொல்லிவிட்டாள்.சுந்தர் காரணம் கேட்டதற்கு “அது அடிச்சாலே பக்குன்னு இருக்குடா;உசுரு போய் உசுரு வருது, வேணான்டா இனி எப்பவுமே அந்த ஃபோன் வேண்டான்டா நமக்கு” என்று சொல்லியழுதாள்.

அவனுடைய தோழர்களெல்லாம் படிப்பை முடித்து மேற்படிப்புக்குச் சிலரும்,உத்யோகத்திற்குச் சிலரும் சென்றிருக்க,சுந்தரோ ஆறுமாத காலம் காத்திருந்து அக்டோபரில் தேர்வெழுதி தேர்ச்சியடைந்தான்.வர்ஷினி பட்டப்படிப்பை முடித்தவுடன் வேறு ஒரு கல்லூரியில் போஸ்ட் கிராஜுவேட் படித்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டான்.வாழ்க்கை, பந்தத்தின் பெரியதொரு இழப்பை அவனுக்குக் கொடுத்து,காதலினால் ஏற்பட்ட சிறு இழப்பை தாங்கிக்கொள்ள பக்குவப்படுத்தியது.

தன்னுடைய அம்மாவிற்கு இப்பொழுது தன் மீது பொசசிவ்னஸ் அதிகரித்திருப்பதை பார்த்தான்.அவளின் அன்புக் கூண்டுக்குள் இப்போது அடைபட்டுக் கொண்டிருப்பதை நன்குணர்ந்தான்.இப்போது நிலவும் சூழ்நிலையில் தன் காதலை அப்பெண்ணிடம் தெரியப்படுத்தி அதனால் வேறொரு ரூபத்தில் பிரச்சனை வந்தால் எப்படி எதிர்கொள்வது;அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி,தைரியப்படுத்த தான் அவளுடன் இருக்க வேண்டுமென்று எண்ணி தெளிவடைந்தான்.காதலை தன்னுடைய மனஆழத்தில் புதைத்து வைத்தான் எனினும் தன் இயலாமையை எண்ணி சுயபச்சாதாபம் கொண்டழுதான்.

ஒருசில மாதங்களில் துபாயில் வேலை கிடைத்துச் சென்ற போது,அங்குள்ள வெப்பத்தைவிடவும் இந்த காதல்வடு அவனை வேதனைப்படுத்தி வருத்தம் கொள்ளச் செய்தது.இயந்திரமாய் சுழன்ற வாழ்வில் இரண்டு வருடகாலம் விரைவாகக் கழிந்தது.அன்று அம்மாவிடமிருந்து வந்திருந்த கடிதத்தில் நீ திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதானால் கடிதம் எழுது,இல்லையெனில் உனக்கு ஒரு அம்மா தாய்நாட்டில் இருப்பதையே மறந்துவிடு என கண்டிப்புடன் எழுதப்பட்டிருந்தது.எங்கோ வாழும் வர்ஷினியை எண்ணி தன் மீது அக்கறை கொண்டுள்ள அம்மாவை இழக்க விரும்பாத சுந்தர், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து உடனடியாக தாயகம் திரும்பினான்.திருமண அரங்கில் அவனது அம்மா தனது கடமையை செவ்வனே நிறைவேற்றிய மகிழ்ச்சியில் உறவினர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தாள்.

சாந்தி முகூர்த்தத்தன்று கையில் பால் டம்ளருடன் முதலிரவு அறையில் நுழைந்த சுந்தரின் மனைவி பைரவியை ரொம்பப் படித்தவள் என்று சொல்லிவிட முடியாது;என்றாலும் எதையும் ஒரு சுமையாக தலையில் போட்டுக் கொண்டு சிரமப்படாமல் ப்பூவென தூசியாக ஊதித்தள்ளிவிடும் முகபாவம் அவளுக்கு.காலையிலிருந்து நடந்த சம்பிரதாய நிகழ்ச்சிகளால் அலைச்சல் மிகுந்து முகம் களைப்படைந்திருந்தாலும்,அவனது அருகாமை அவளுடைய கண்களில் மிரட்சி கலந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.

கணவன் இப்படியிருக்க வேண்டும்,அப்படியிருக்க வேண்மென்ற ஆசைக் கனவுகள்,கற்பனைகள் மூன்று வருடங்களாக அவளை உறங்கவிடாமல் சிரமப்படுத்தியது.இன்று தெரிந்துவிடும் தனக்குரியவன் எப்படிப்பட்டவனென்று.இக்கணத்துக்காகத்தான் பைரவி காத்திருந்தாள்.கணவனின் இயல்பை அறிந்து அதற்கேற்றவாறு.அனுசரித்துச் சென்றுவிடலாம் அதொன்றும் பெரியவிஷயமில்லை அவளுக்கு;அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் நிகழ்வினைப் போல,இப்படி அமைந்து விட்டால்.அப்படி அமைந்துவிட்டால் என்ற எதிர்மறை எண்ணங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி மனதை ஆக்ரமித்து நிலைகுலையச் செய்திருக்கின்றன பைரவியை.

கட்டிலில் அமர்ந்து அவன் பேசுவான் என எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.அவனோ வாய் திறக்காமல் மௌனமாக வாரப் பத்திரிகையைப் புரட்டி்க் கொண்டிருந்தான்.அவளே பேச்சைத் தொடங்கினாள் நீங்க ரெண்டு வாரத்துல திரும்ப துபாய் போகப் போறதா அத்தை சொன்னாங்க, இன்னும் கொஞ்சநாள் லீவை எக்ஸ்டன் பண்ணினீங்கன்னா,எனக்குன்னு சில வேண்டுதல்கள் இருக்கு நம்ப ரெண்டு பேருமா கோவிலுக்குப் போய் நிறைவேத்தினா எம் மனசுக்கு ரொம்பத் திருப்தியா இருக்கும்,என்ன சொல்றீங்க என அவன் முகத்தைப் பார்த்தாள்,உனக்கு களைப்பாயிருந்தா படுத்துக்க எதுவாயிருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் என்றான்.துபாய் போகும் வரை தாம்பத்யத்திற்கு அவன் பிள்ளையார் சுழி போடவில்லை.

துபாய் சென்றடைந்த பிறகு,வேலைப் பளுவிற்கும்,தனிமைக்கும் வடிகாலாக சுந்தர் அவ்வப்போது தன் மனைவிக்கு கடிதம் எழுதத் துவங்கினான்.எழுதுகோலை கையில் பிடித்து காகிதத்தில் அன்புள்ள என்று தொடங்கும் பொழுது பைரவியின் முகம் மறைந்து தனது மனப்பதிவுகளின் வெகு ஆழத்தில் புதைந்திருக்கும் வர்ஷினியின் முகத்தை இதயம் சிருஷ்டிக்கத் தொடங்க வார்த்தைகளை மணியாய் கோர்த்து தன் உள்ளக்கிடக்கையை மடலில் கொட்டித் தீர்க்க ஆரம்பித்தான்.

தபால் செய்த பிறகு அந்த வரிகள் ஞாபகம் வந்து இவன் மனதைக் குடையும்.தப்பான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டோமோ?இல்லாத காதலிக்காக ஏங்கி எழுதி மனைவிக்கு அஞ்சலில் அனுப்பிவிட்டோமோ?இல்லாத ஒன்றை இருப்பதாக பைரவி கற்பனை செய்ய தன் கடிதத்தினால் இடம் தந்து விட்டோமோ?எழுதுகோல் பிடித்த பின் எதுவோ என்னைப் பிடித்து உலுக்கி எழுத வைக்கிறதே,இந்தக் கடிதத்தையெல்லாம் படித்த பின் என்ன நினைப்பாள் என்னைப் பற்றி?உரிமை உள்ளவன்,தொட்டுத் தாலி கட்டியவன்,அவன் உத்யோகத்தின் பொருட்டு வெளிநாட்டில் இருந்து கொண்டு நான் என்னவோ தேவலோகத்தில் இந்திராணியாக சிம்மாசனத்தில் வீற்றிருப்பதைப் போல் உருகி உருகி கடிதம் எழுதுகிறானே என்றா?கடிதமென்பது எவ்வளவு மறைத்து வைத்திருந்த உள்ளுணர்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறதே.என் மன அழுத்தம் எழுத்துக்களாய் வெளிவந்தது என்னுடைய தேக ஆரோக்கியத்துக்கும்,உள்ளச் சமநிலைக்கும் நல்லது தான்;அதுவே பைரவி மனதில் வீணான, அதீத கற்பனைகளைத் தோற்றுவித்திருக்குமோ?என சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஒரு வருட காலமாக பேனா மையோடு உறவாடியதற்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மையோடு உறவாட எண்ணி ஊர் திரும்பினான்.

அம்மா எப்பவும் போல் என்னடா சுந்தர் இப்படி துரும்பா எழச்சி ரொம்ப கறுத்துப்போயிட்ட,ரொம்பக் கஷ்டமாடா வேலை என்று தொடங்கி நிறைய ஊர்க்கதைகளை ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டிருந்தாள்.இனிமே சாப்பிடாதவனுக்கு செய்வது போல சிக்கன்,மட்டன்,மீன் வறுவல் என்று இலையையே அவைகள் நிரப்பிக் கொண்டிருந்தது.பைரவியின் முகத்தில் என்றுமில்லாத பூரிப்பு,அவன் பக்கத்தில் நின்று கொண்டு பரிமாறிக் கொண்டிருந்தாள்.அவளின் கொலுசு சப்தமும்,வளையல் ஓசையும் நிசப்தத்தைக் கலைத்து வீடு முழுவதும் சதா ரீங்காரமிட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.

அன்றிரவு பல மாதங்களாய் பிரிந்திருந்த வேதனையில் பைரவி ஆசையாய் அவனைத் தழுவி, அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.எத்தனையோ நாட்களாய் மனதில் புதைத்து வைத்திருந்த உள்ளக் குமுறலை புலம்பலாய் வெளிப்படுத்தினாள்;கணவனின் ஆறுதல் வார்த்தைகளுக்கு ஏங்கினாள்.ஆனால் சுந்தரோ எவ்விதச் சலனமுமில்லாமல் அவளை விலக்கிவிட்டு தலையணையை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றான்.

ஏதோ ஒன்றை கற்பனை செய்து கொண்டு நிஜவாழ்க்கையில் அரிதாரம் பூசுகிறேனோ?அம்மாவிடம் நல்ல மகனாக,காரணம் எதுவுமின்றி மனைவியை ஒதுக்கும் கணவனாக எதற்காக இந்த இரட்டை வேடம்?எத்தனை நாள் இந்த முகமூடியைப் போட்டுக் கொண்டு வீதியில் அலைவது;எனது உண்மையான முகமே எனக்கு மறந்துவிடும் போல் தோன்றுகிறதே.கூலி வாங்கிக் கொண்டு நடிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்;எந்த நிர்பந்தமும் இல்லாமல் நானாகவே நடித்து என்னையே நான் ஏமாற்றிக் கொள்கிறேனோ?எனது எண்ணம் சுயநலமாக என்னைப் பற்றியே சுழலுகிறதே தவிர அவளை, அவளுடைய விருப்பத்தை எண்ணிப் பார்க்க மறுக்கிறதே ஏன்? -இப்படிப்பட்ட கோர்வையான சிந்தனைகளால் அவன் படபடப்பு மேலும் அதிகரித்து நா வறண்டது.

படுக்கையிலிருந்து எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வரலாம் என்றெண்ணி கீழே இறங்கிச் சென்றான்.படுக்கையறையில் இன்னும் மின்விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது;பைரவி அவன் அனுப்பிய கடிதங்களைத் தரையில் பரப்பி வைத்துக் கொண்டு அதை எடுத்துப் படித்து படித்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்தான்.அவளுடைய கண்ணீர்த் துளிகள்,அவனுடைய கடிதத்தை நனைத்தது.

குற்ற உணர்ச்சி அவனை சிலுவையில் அறைந்தது.முதுகில் சுமந்துள்ள பாவ மூட்டையின் பாரத்தால் வலி பொறுக்க முடியாமல் நாற்காலியில் சாய்ந்தான்.

– 26 ஆகஸ்ட், 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *